பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம் தொடர்பான தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களின் பங்கு

ஆசிரியர்களாக இருக்கும் நீங்கள் குழந்தைகளின் பாலின கொடுமை பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவற்றை தெரிந்துகொள்ள வேண்டுமானால், குழந்தைகள் எதிர்கொள்ளும், உண்மையான பிரச்சினைகள் அபாயங்கள் போன்றவற்றைப் பற்றியும் அவற்றைத் தீர்ப்பதற்கான சட்டபூர்வமான வழிமுறைகள், சட்டங்கள், கொள்கைள் ஆகியவற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒரு குழந்தைக்கு சட்டத்தின் உதவியும் பாதுகாப்பும் தேவைப்படலாம். நாம் அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால் ஒரு குழந்தைக்குத் சட்டபூர்வமான நடவடிக்கை தேவைப்படும்போது அது நடக்கவிடாமல் தடுத்துவிடுகிறோம்.

சட்டபூர்வமான நடவடிக்கை


சம்பந்தப்பட்ட குடும்பம்/ அவர்களின் சமூகம்/ பொதுவான சமூகம்/ பலம் பொருந்திய குழுக்கள் போன்றவர்களின் அதிருப்திக்கு ஆளாவது, அச்சுறுத்தலுக்கு ஆளாவது போன்றவற்றைப் பற்றிய பயம், நிலைநிறுத்த வேண்டிய சமூக நீதியை விட பெரியதா, முக்கியமானதா?
2003ஆம் ஆண்டில் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சட்டபூர்வமான வயதை அடையாமல் இருந்த இரண்டு பேருக்குத் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்தன. அதே கிராமத்தில் இருந்த ஐந்து பெண்கள், இது நடைபெறாமல் தடுத்து நிறுத்தினர். திருமணம் என்ற பெயரால் நடக்கும் இந்த மறைமுக வியாபாரத்தைத் தடுக்க வேண்டும் என்ற உறுதி அவர்களுக்கு ஏற்பட்ட பிறகு அவர்களுடைய ஆசிரியர் இதற்கு முழுவதும் பக்கபலமாக இருந்து ஆதரவு தெரிவித்தார். இவர்களது முயற்சிக்கு மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கிராமத்திலுள்ள பெரியவர்கள் அவர்கள் சார்ந்த சமூகம் போன்றவர்கள் எதிர்த்தனர். ஐந்து பெண்களின் குடும்பங்களும் எதற்கு வம்பு என்று பயந்தனர். இவர்களையும், இதில் ஈடுபட வேண்டாம் என்று வற்புறுத்தினர். பள்ளி ஆசிரியர், சட்டத்தின் உதவியை நாடுமாறு ஆலோசனைகள் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளுக்கு உதவியாக இருந்தார்.
நடக்க இருந்தத் திருமணம் பால்ய விவாகம் என்று உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் புகாரைப் பதிவு செய்ய மறுத்தனர். அனைத்து நடவடிக்கைகளும் பலன் அளிக்காமல் போகவே மறுபடியும் ஆசிரியரின் யோசனைப்படி, உள்ளூரில் செயல்பட்டு வந்த ஊடகங்களின் உதவியை நாடினர். இதன் பிறகுதான் காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். பால்ய விவாகம் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஐந்து பெண்களும், அவர்களது அசாத்திய தைரியம், செயல்திறன் ஆகியவற்றிற்காக அசாத்திய துணிச்சலுடன் காரியமாற்றும் நபர்களுக்கான தேசிய விருதைப் பெற்றனர்.
நடந்த சம்பவத்தில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இவரது உதவி இல்லாமல் இந்த ஐந்து பெண்களும், தாங்கள் சார்ந்தச் சமூகத்தை எதிர்த்துப் போராடியிருக்க முடியாது. உண்மையில் சொல்லப்போனால், இந்த ஆசிரியத் தொழிலை இழக்கும் அபாயம் மட்டுமின்றி அவரது உயிருக்கே ஆபத்து நேரும் என்ற நிலை எழுந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆபத்து இருந்தாலும் நீதி கிடைக்க வேண்டும் என்ற பெரும் ஆவல். குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிப்பாடு ஆகியவைதான் அவரைச் செயல்பட வைத்தன.

சட்ட பூர்வ நடவடிக்கைகளில் இறங்கும் வழிகள்

 • முதலில் குழந்தைகளுக்கான உதவித் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது காவல் துறைக்குத் தகவல் தெரிவியுங்கள்.
 • குழந்தைகளுக்கான உதவித் தொலைபேசித் தொடர்பின் மூலம் அவர்களுக்கானஆலோசனை, சட்ட உதவி ஆகியவற்றைத் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
 • சமூகத்தின் ஆதரவைத் திரட்டுங்கள்.
 • தேவைப்பட்டால் மட்டும், கடைசித் தீர்வாகப் பத்திரிகைகளைத் தொடர்புகொள்ளுங்கள்.
 • சட்டங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடிப்படைச் சட்டங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். அவை மூலம் எந்த வகையிலான உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்பதையும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உரிமைகளைப் பற்றியும், அவற்றைப் பாதுகாக்கும் சட்டங்களைப் பற்றியும் தெரிந்து இருந்தால்தான், பிரச்சினையில் சிக்கியுள்ள குழந்தையையோ பெற்றோர்/பாதுகாவலர்/சமூகம் போன்றவர்களையோ சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் எடுத்துக் கூறி ஒப்புக்கொள்ள வைக்க முடியும். சில சமயங்களில் காவல்துறையினர் / அரசுநிர்வாக அதிகாரிகள் ஆகியோரும்கூடப் பிரச்சினைக்கு உதவ மறுக்கும் நிலை எழலாம். சட்டங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல், இவர்களையும் வலியுறுத்தவும், வாதாடி ஒப்புக்கொள்ள வைக்கவும் பெரும் உதவிகரமாக இருக்கும்.

பாரபட்சமான கருச்சிதைவு, பெண் குழந்தை என்றால் கருவைக் கலைப்பது மற்றும் பெண் சிசுக்கொலை

பாலினம் பற்றித் தெரிந்து கருக்கலைப்பு செய்யும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர உதவும் சட்டம் இருக்கிறது:

பிரசவத்திற்கு முன்பு கருவை அறியும் முறை குறித்த (தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1994.

கரு ஆணா பெண்ணா என அறிந்துகொள்ளும் முறைகள் பற்றி விளம்பரம் செய்வதையும், அந்த முறையைத் தவறாகப் பயன்படுத்துவதையும் இச்சட்டம் தடை செய்கிறது.

கர்ப்ப காலத்தில் கருவைப் பற்றி அறிவதற்குக் குறிப்பிட்ட சில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வளரும் கருவில் பரம்பரை வியாதி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும், சுத்தமான உடல் வளர்ச்சி, மூளைக் கோளாறுகள் ஏதாவது இருக்கிறதா, அதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் இச்சோதனையை மேற்கொள்ளலாம். ஆனால் முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஆய்வுக்கூடங்களில்தான் இந்தச் சோதனை நடத்தப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் உத்தரவுகளை மீறுபவர்களுக்கான தண்டனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி புகார் செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், முப்பது நாட்கள் கால அவகாசம் அளித்துப் புகார் செய்ய வேண்டும். அதன் பின் நீதிமன்றத்திற்குச் செல்ல இருக்கும் முடிவையும் அதில் குறிப்பிட வேண்டும்.

இந்தச் சட்டத்தைத் தவிர, 1860 ஆண்டின் இந்தியக் குற்றவியல் சட்டத்தில் இருக்கும் பிரிவுகளும் முக்கியமானவை.

 • ஒரு நபரால் மரணம் நிகழும்போது (பிரிவு 294 மற்றும் பிரிவு 300)
 • குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் பெண்ணின் கருவை வேண்டுமென்றே கலையும்படி செய்வது. (பிரிவு 312)
 • குழந்தை உயிருடன் பிறக்க முடியாத அளவில் வேண்டுமென்றே எடுக்கப்படும் எந்த நடிவடிக்கையும், பிறந்தவுடன் இறந்துபோகும்படிச் செய்வது (பிரிவு 315)
 • குழந்தையைக் கருவிலேயே இறக்கும்படி செய்வது (பிரிவு - 316)
 • 12 வயதுக்குக் கீழுள்ள குழந்தையை அபாயகரமான சூழ்நிலையில் இருக்கச் செய்வது, அக்குழந்தையைக் கைவிடுவது. (பிரிவு - 317)
 • குழந்தை பிறந்ததையே வெளியில் தெரியாமல் செய்ய, அக்குழந்தையின் உடலை மறைத்தல் (பிரிவு - 318) இத்தகைய குற்றங்களுக்குத் தண்டனை, 2 வருட சிறைத் தண்டனை முதல், ஆயுள் தண்டனைவரை அல்லது அபராதம்; அல்லது அபராதம், சிறைத் தண்டனை என இரண்டும் சேர்த்தே விதிக்கப்படலாம்.

குழந்தைத் திருமணம்


குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம். இதன்படி 23 வயதிற்குக் குறைவான ஆண் 21 வயதுக்கும் குறைவான பெண் (பிரிவு 2 (a)) ஆகியோருக்கு இடையில் நடக்கும் திருமணம் குழந்தைத் திருமணமாகும்.

இந்தச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பலர், கீழ்க்காணும் செயல்கள் நடக்க அனுமதித்தால் தண்டிக்கப்படுவார்கள். குழந்தைத் திருமணத்தை செய்து தருகிறேன் என்று ஒப்புக்கொண்டு நடத்தித்தரும் ஒப்பந்தக்காரர், இந்தத் திருமணத்தை நடத்தித் தருவது அல்லது இதில் சம்பந்தப்படுவது, போன்றவை குற்றமாகும். இதில் தொடர்புடையவர்கள்:

 • 18 வயதுக்கு மேலும், 21 வயதிற்குக் கீழும் உள்ள ஆண் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டு அதில் ஈடுபட்டால், அவருக்குச் சாதாரண சிறைத் தண்டனை 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீட்டிப்பு மற்றும் ரூ 1000/- வரை அபராதம் (அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் சேர்ந்தே விதிக்கப்படலாம்) (பிரிவு - 3)
 • குழந்தைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் ஆண் 21 வயதிற்கு மேற்பட்டிருந்தால், அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் (பிரிவு - 4).
 • இத்தகைய குழந்தைத் திருமணத்தைத் தனக்குத் தெரியாமலே நடத்தி வைத்ததாக நிரூபிக்க முடியாமல் போகும் நபருக்கு, 3 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் (பிரிவு - 4).
 • இந்தத் திருமணத்தை நடக்க அனுமதித்த, அல்லது நடப்பது குறித்து உதாசீனம் செய்து அலட்சியமாக இருந்த, அல்லது குழந்தைத் திருமணம் நடத்த எந்த வகையிலாவது உதவி புரிந்த பெற்றோர் மற்றும் பாதுகாவலர் சிறைத் தண்டனையும், அபராதமும் பெறுவார் (பிரிவு - 6)
 • குழந்தைத் திருமணம் நடைபெறுவதைத் தடுக்க முடியுமா?

  குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 1929-ன் படி, குழந்தைத் திருமணம் நடக்க இருக்கிறது என்று யாராவது காவல்துறைக்குப் புகார் தெரிவித்தால், இந்தத் திருமணம் நடைபெறாமல் தடுக்க முடியும். புகாரைப் பெற்றுக்கொண்டவுடன். காவல் துறையினர் விசாரித்து, அதன் பின் இந்த விஷயத்தை மாஜிஸ்டிரேட்டிடம் எடுத்துச் செல்வார்கள். நீதிபதி, இதைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்தத் தடை மூலம் இந்தத் திருமணத்தைத் தடுக்க முடியும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை, ரூ 1000 அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்க முடியும்.

  குழந்தைத் திருமணம் பின்னாளில் அதிகாரபூர்வமான திருமணமாக மாற்றப்படுவதற்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பை மீறி நடத்தப்படும் திருமணங்கள் தாமாகவே செல்லாதவையாகிவிடும் என்று சட்டம் சொல்லவில்லை. எனவே முயற்சி எடுத்து இந்தத் திருமணங்களை நிறுத்தி, அவை அங்கீகாரம் பெறுவதைத் தடுக்க வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் முறை

குழந்தையைத் தொழிலாளியாக அடமானம் வைக்கும் தொழிலாளர் சட்டம் 1993 :

பெற்றோர் அல்லது பாதுகாவலர் என யாராக இருந்தாலும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தையைத் தொழிலாளியாக வேலை செய்யவதற்காக அடமான ஒப்பந்தம் செய்வது, என்பது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் செல்லாதது இவ்வாறான ஒப்பந்தத்தில் ஈடுபடும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அக்குழந்தையை வேலைக்கு வைத்துக்கொள்பவர்கள் பொறுப்பாளர் ஆகியோர் தண்டனை பெறுவார்கள்.

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 :

கொடுத்த கடன் தொகைக்கு ஈடாகக் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. கொத்தடிமையாவதற்குக் காரணமாக இருந்த எல்லா விதமான கடன் ஒப்பந்தங்கள் மற்றும் பிற ஒப்புதல் விவரங்கள் போன்றவை இந்தச் சட்டத்தின்படி செல்லாததாகக் கருதப்படும். கொத்தடிமை முறையில் வேலை செய்யும்படி யாரையும் வற்புறுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இம்மாதிரியாகத் தங்களது குழந்தைகளை பிற குடும்ப உறுப்பினர்களைக் கொத்தடிமை முறைக்கு உட்படுத்தும் பெற்றோர்களும் தண்டனைக்கு உரியவர்கள்தாம்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டம் 1986 :

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சூழல்களில் 14 வயதுக்கு உட்பட்டவர்களை வேலைக்கு வைப்பது சட்டப்படி தண்டனைக்கு உரியது. தீங்கு விளைவிக்காத இடங்களில் வேலை செய்வது முறைப்படுத்தவும் சட்டம் இருக்கிறது.

இளம் சிறுவருக்கான நீதி முறை (குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த) சட்டம் -2000 :

இந்தச் சட்டத்தின் 24-வது பிரிவில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இடங்களில் குழந்தைகளை வேலை செய்ய வைப்பது, கொத்தடிமை முறையில் வேலை வாங்குவது, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தைப் பிடித்து வைத்துக்கொள்வது போன்றவை தண்டனைக்கு உரியவை.

கீழே குறிப்பிட்டுள்ள சட்டங்கள், குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடைசெய்வது, மற்றும்/அல்லது அவர்கள் பணி புரியும் சூழலை ஒழுங்குபடுத்துவது, முதலாளிகளைத் தண்டிப்பது ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகள்:

தொழிற்சாலைகள் சட்டம் 1948
தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951
சுரங்கங்களுக்கான சட்டம் 1952
வாணிகக் கப்பல் போக்குவரத்துச் சட்டம்
பயிற்சிப் பணியாளர் சட்டம் 1961
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961
பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (வேலை இடங்களின் நிலவரம் குறித்த) சட்டம் 1966
டபுள்யு.பி. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1963

கற்பழிப்புக்கான அதிகபட்சத் தண்டனை ஏழு வருடங்கள். ஆனால், கற்பழிக்கப்பட்ட பெண் 12 வயதிற்குள் இருந்தாலோ, கற்பழித்தவர் அதிகாரப் பதவிகளில் இருப்பவராக இருந்தாலோ (மருத்துவமனைகளில், குழந்தைகள் காப்பகத்தில், காவல் நிலையம்) இந்தத் தண்டனை மேலும் அதிகமாக இருக்கும்.

சிறுவனுடன் பலவந்தமாகப் பாலியல் உறவு, கற்பழிப்புக்கு இணையான செயல் என்றாலும், கற்பழிப்புச் சட்டத்தில் இது சேர்க்கப்படவில்லை. சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆட்படுத்துவது போன்றவற்றைக் கவனிக்கும் அல்லது தண்டிக்கும் சிறப்பான சட்டங்கள் ஏதும் இல்லை என்றாலும், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 377ஆம் பிரிவு, இயற்கைக்குப் புறம்பான குற்றச் செயல்கள் என்ற விதத்தில் இவற்றைக் கையாள்கிறது.

குழந்தைகளைக் கடத்தி விற்பது

குழந்தைகள் கடத்தல், திருட்டு, விற்பனை போன்ற குற்றங்களைத் தண்டிக்கத் தேவையான சட்டங்கள் பின்வருமாறு:

இந்தியக் குற்றவியல் சட்டம் 1860
இந்தச் சட்டத்தின்படி, குழந்தைகளை ஏமாற்றுவது, மோசடி செய்வது, ஆள் கடத்தல், தவறாக அடைத்துவைத்தல் குற்றத்திற்கு நிகரான அச்சுறுத்தல், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திருடுவது, இம்மாதிரியான வயதுள்ளவர்களை விற்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான நீதிமுறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000

இந்தச் சட்டம் கடத்தப்பட்ட அல்லது வணிகப்பொருளாகப் பயன்படுத்தப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்களை மீட்டவுடன் அவர்களுடைய குடும்பங்கள் அல்லது சமூகத்தவருடன் மறுபடியும் ஒன்று சேர்க்க உதவுகிறது.

கடத்தி விற்பது போன்ற குற்றங்களைத் தண்டிப்பதற்கு உபயோகப்படும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள்.

ஆந்திரப் பிரதேச தேவதாசி (பெண்களை நேர்ந்து கொடுக்கும் முறை ஒழிப்பு) சட்டம் 1988 அல்லது கர்நாடகா தேவதாசி (நேர்ந்து கொடுக்கும் முறை ஒழிப்பு) சட்டம் - 1982

பம்பாய் பிச்சையெடுப்பைத் தடுக்கும் சட்டம் 1959
கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் -1976
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தச் சட்டம் 1986
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் -1929
குழந்தைப் பராமரிப்பாளர் மற்றும் குழந்தைகள் சட்டம்-1890
இந்துக்கள் தத்து எடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம்-1956
குழந்தைகளை விற்பனை செய்தல் (தடுப்பு) சட்டம்-1986
தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சட்டம்-2000
சட்டத்திற்குப் புறம்பான போதை மருந்துகள் கடத்தல், விற்பனை மற்றும் உளவியல் சார்ந்த போதைப் பொருட்கள் உபயோகம் பற்றிய சட்டம்-1988

எச்ஐவி /எய்ட்ஸ்

எச்ஐவி பாஸிடிவ் நிலையில் உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க என்று தனியான சட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைத்துக் குடிமக்களுக்கும் சில அடிப்படை உரிமைகலைத் தர உத்தரவாதமளிக்கிறது. இதில் எச்ஐவி பாஸிடிவ் உள்ளவர்களும் அடங்குவார்கள். இந்த உரிமைகள்:

- விவரம் அறிந்து ஒப்புதல் தரும் உரிமை
- ரகசியம் காப்பதற்கான உரிமை
- பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிம

விவரம் அறிந்து ஒப்புதல் தரும் உரிமை

எந்த ஒப்புதலும் சுதந்திரமான நிலையில் அளிக்க/ பெறப்பட வேண்டும். நெருக்குதல் தருவதன் மூலமோ தவறுதலாகவோ மோசடி செய்தோ நியாயமற்ற தாக்கம் மூலமாகவோ ஆள்மாறாட்டம் செய்தோ எதற்காகவும் ஒப்புதலைப் பெறக் கூடாது.

இந்த ஒப்புதல் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த நிலை, மருத்துவர், நோயாளி ஆகியோரிடையில் இருப்பது மிகவும் முக்கியம். மருத்துவருக்கு நோயாளியைப் பற்றி அவரை விடவும் அதிகமான விவரங்கள் தெரியும். ஆகவே, எந்த விதமான மருத்துவச் சிகிச்சைக்கு முன்னரும் அதில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் பற்றியும், அந்த மருத்துவ முறைக்கு, மாற்று இருந்தால், அதைப் பற்றியும் மருத்துவர் நோயாளிக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம், நோயாளி, தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அறிவுபூர்வமாக யோசித்து முடிவு செய்யும் வாய்ப்பினைப் பெறுகிறார்.

எச்ஐவி நோயின் விளைவுகள், அதனால், ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்ற நோய்களைக் காட்டிலும் வேறுபட்டவை. அதனால்தான் எச்ஐவி பரிசோதனை செய்யும் முன்னர், சம்பந்தப்பட்டவருக்குத் தகவலைக் கூறி, அவரது அனுமதி பெற்ற பின்தான் பரிசோதனை செய்யப்பட வேண்டும். பிற சோதனைகளுக்காக நோயாளியிடமிருந்து பெறும் அனுமதியை எச்ஐவி பரிசோதனைக்கும் சேர்த்துத்தான் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. முறையான தகவல்களைத் தெரிவித்து அவற்றின் அடிப்படையில் ஒப்புதல் பெறாமல் ஒருவருக்கு எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டால் பரிசோதனை செய்தவர்கள் மீது வழக்குத் தொடர அவருக்கு உரிமை இருக்கிறது.

தகவல்களை ரகசியமாக வைத்திருக்கும் உரிமை

தான் நம்பும் ஒருவரிடம், குறிப்பிட்ட விஷயத்தை நம்பிக்கையின் அடிப்படையில் கூறினால் அந்த விஷயம் ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டியதாகும். இந்த விஷயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால், அந்தச் செயல் நம்பிக்கையை மீறிய செயலாகும்.

தனது நோயாளிகளின் உடல்நலம் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருப்பது ஒரு மருத்துவரின் முக்கியமான கடமை. ஒரு நபரின் மருத்துவ ரகசியங்கள் வெளியிடப்படக்கூடும் என்ற நிலை எழுந்தாலோ அல்லது வெளியிடப்பட்டாலோ அந்த நபருக்கு அதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்லும் உரிமை உண்டு.

எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய்களின் பாதிப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், தங்களது நிலை அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் நீதிமன்றத்திற்குச் செல்ல அஞ்சுகிறார்கள். ஆனால் அடையாளத்தை மறைத்து புனைபெயரில் வழக்கைப் பதிவு செய்யலாம் என்ற சட்டபூர்வமான உரிமை இருக்கிறது. இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதால், மேற்குறிப்பிட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்படுவோமோ பாரபட்சமாக நடத்தப்படுவோமோ போன்ற அச்சங்கள் இன்றி நீதியைப் பெற முடியும்.

பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான உரிமை

சமமாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அடிப்படை உரிமை. சட்டத்தின்படி, யாரும் அவர்களது பாலினம், மதம், சாதி, இனம், பரம்பரை அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சமாக நடத்தப்படக் கூடாது. அரசுத் துறையின் நடத்தும் அல்லது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள் யாரிடமும் சமூக ரீதியிலோ தொழில்முறையிலோ பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது.

பொதுமக்களின் சுகாதாரமும் ஓர் அடிப்படை உரிமைதான். அரசு இதை அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காகவோ மருத்துவமனையில் சேரவோ அணுகினால் எந்த மருந்துவமைனயும் அவரை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று நிராகரிக்க முடியாது.

அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டால் சட்டத்தின் மூலம் அவர்கள் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.

அதேபோல எச்ஐவி உள்ளவரை எந்தப் பணியிலும் பாரபட்சத்துடன் நடத்தக் கூடாது. இந்த நிலைக்காக அவரை வேலையை விட்டு நீக்கினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல அவருக்கு உரிமை உண்டு.

எச்ஐவி பாஸிடிவ் நிலையில் இருந்தாலும் அவரால் தான் செய்துகொண்டிருந்த பணியை எவ்விதப் பிரச்சினையில்லாமல் செய்ய முடியும்; அதனால் யாருக்கும் எந்த வித அபாயமும் ஏற்படாது என்ற நிலை இருக்கும் பட்சத்தில் அவரை வேலையிலிருந்து நீக்க முடியாது. இது, 1997மே மாதத்தில் நடந்த வழக்கில் பம்பாய் நீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதிசெய்யப்பட்டது.

1992ஆம் ஆண்டு, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் எல்லா மாநில அரசுகளுக்கும் ஒரு நிர்வாக சுற்றறிக்கை அனுப்பியது. அதில் எச்ஐவி/எய்ட்ஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களைச் சேர்ந்த சுகாதார மையங்களில் சிகிச்சை மற்றும் கவனிப்பைப் பாரபட்சமின்றிப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.

ஆதாரம் : எச்ஐவி / எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினைகள் http://www.indianngos.com

உடல் ரீதியிலான தண்டனை

இந்தியாவில் மந்திய அரசு சார்பில் பள்ளிகளில் உடல் ரீதியிலான தண்டனைகளைத் தடைசெய்யச் சட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. ஆனால், பல்வேறு மாநிலங்கள், இவ்வகையான தண்டனைகளைச் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலமாகத் தடை செய்திருக்கின்றன.

மத்திய அரசாங்கம் இப்போது குழந்தைகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உடல் ரீதியாகத் தண்டனை கொடுப்பது குழந்தைக்கு எதிராக இழைக்கப்படும் குற்றமாகக் கருதப்படும். இந்தச் சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்வரை இம்மாதிரியான செயல்களைத் தடுக்க எந்தச் சட்டங்கள் இருக்கின்றனவோ அவை பயன்படுத்தப்படும்.

உடல்ரீதியான தண்டனைக்கான சட்டம் இயற்றிய மாநிலங்கள்

மாநிலங்கள் உடல் ரீதியிலான தண்டனைகள் (தடை அல்லது ஆதரவு) சட்டம்/கொள்கை
தமிழ்நாடு தடை செய்யப்பட்டது 2003 ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் கல்விச் சட்டங்களில் 51வது பிரிவைத் திருத்தி, உடல் ரீதியிலான தண்டனை தடை செய்யப்பட்டது. 'திருத்துவதற்காக' என்று மனதளவில் அல்லது உடலளவில் வலி ஏற்படும அளவுக்குத் தண்டனைகளைத் தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
கோவா தடை செய்யப்பட்டது கோவாவின் குழந்தைகள் சட்டம் 2003ன்படி உடல் ரீதியான தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்காளம் தடை செய்யப்பட்டது பள்ளிகளில் குழந்தைகளைக் குச்சியால் அடிப்பது சட்டத்திற்கு விரோதமானது என்று 2004 பிப்ரவரியில் கல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது குறித்து பொதுநல வழக்கு ஒன்றும் தபஸ் பாஞ்சா என்பவரால் (வழக்கறிஞர்) கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம் தடை செய்யப்பட்டது ஆந்திராவில் 1966 ஆண்டின் அரசு ஆணை எண் 1188 ன்படி, உடல்ரீதியிலான தண்டனை பற்றிய பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், தடை செய்யப்படவில்லை. 2002 பிப்ரவரி 18ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் ஜ. சுப்பாராவ் மேற்படி ஆணையைத் திருத்தி புது ஆணையை (எண் 16) வெளியிட்டார். இதன்படி ஆந்திரப் பிரதேச அரசு எல்லாக் கல்வி நிலையங்களிலும் உடல் ரீதியிலான தண்டனையைத் தடை செய்தது. இதை மீறுபவர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி தடை செய்யப்பட்டது தில்லி பள்ளிக் கல்விச் சட்டம் (1973) உடல் ரீதியிலான தண்டனைகளைத் தருவதற்கு வழிவகை செய்தது. இதை எதிர்த்து "அர்த்தமுள்ள கல்விக்கான பெற்றோர்கள் அமைப்பு" நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம் மேற்படி சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. அந்தச் சட்டத்தில் மாணவர்களுக்கு எப்போது தண்டனை தரலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிற ஷரத்துக்கள், மனிதத்தன்மை அற்றவை, குழந்தைகளின் தன்மான உணர்வை மழுங்கடிக்கக் கூடியவை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. இந்தத் தீர்ப்பு டிசம்பர் 2000ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
சண்டிகர் தடை செய்யப்பட்டது 1990களில் சண்டிகர் மாநிலத்தில், உடல் ரீதியிலான தண்டனைகள் தடை செய்யப்பட்டன.
இமாச்சலப் பிரதேசம் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது உடல் ரீதியிலான தண்டனை பெற்றதால் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏற்பட்டது என்ற செய்தி வெளிவந்ததை அடுத்து இம்மாநில அரசு பள்ளிகளில் உடல் ரீதியிலான தண்டனையைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளது.

வீடுகளில் நிகழும் வன்முறை

வீடுகளில் நிகழும் வன்முறை குறித்து எந்தச் சட்டமும் இந்நாட்டில் இல்லை. ஆனால் 2000ஆம் ஆண்டில் இளம் குற்றவாளிகள் நீதிமுறைச் சட்டம் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) இயற்றப்பட்டது. இதன்படி குழந்தைகளுக்கு எதிராகக் குரூரமான முறையில் நடந்துகொள்வது, அதுவும் இந்தக் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர்கள் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் இவ்வாறு செய்தால் அது மோசமான குற்றம் என்று கருதப்படும். இந்தச் சட்டத்தில் உள்ள பிரிவு 23 -ன்படி குழந்தையைக் குரூரமாக நடத்தினால் தண்டனை உண்டு. இந்தக் கொடுமைகளில், குழந்தையைத் தாக்குவது, அடிப்பது அநாதரவாக விட்டு விடுவது, ஆபத்தான இடங்களில், சூழ்நிலைகளில் விடுவது, குழந்தைக்கு மனோ ரீதியாக அல்லது உடல் ரீதியாகத் துன்பம் ஏற்படும் வகையில் அலட்சியம் செய்வது ஆகியன அடங்கும்.

சாதி அடிப்படையில் பாரபட்சம்

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உறுதிப்பாடு:

சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம், நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தின் பாதுகாப்பு (சட்டப்பிரிவு 14)

இனம், சாதி, பாலினம், பரம்பரை, பிறந்த இடம் மற்றும் வீடு இருக்கும் இடம் ஆகியவற்றை வைத்துப் பாகுபாடு காட்டப்படுதல் தடை செய்யப்படுகிறது (சட்டப் பிரிவு -15)

இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுத்துறைகளில் பணி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாரபட்சம் காட்டக் கூடாது (சட்டப் பிரிவு-16)

தீண்டாமை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. எந்த வகையில் 'தீண்டாமை'யைக் கடைபிடித்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் (சட்டப் பரிவு -17)

தீண்டாமையை எந்த வகையிலாவது தொடர்ந்தால், அதற்குத் தண்டனை உண்டு என்ற சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955இல் பிறப்பிக்கப்பட்டது. ஷெட்யூல்ட் வகுப்பைச் சேர்ந்தவர்களை அவர்கள் சாதியின் பேரைச் சொல்லி அழைப்பதுகூடச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

1989இல் இந்திய அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை இயற்றியது. ஷெட்யூல்ட் சாதியினர் மற்றும் ஷெட்யூல்ட் பழங்குடியினர் ஆகியோரை ஷெட்யூல்ட் அல்லாத சாதியினர், பாரபட்சம் காட்டுவது, வன்முறை ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டன.

இம்மாதிரியான குற்றங்களை விசாரிப்பதற்காகவென்றே சிறப்பு நீதிமன்றங்களை மாவட்ட வாரியாகச் சம்பந்தப்பட்ட அரசுகள் ஏற்படுத்தவும், இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு நீதிமன்றங்களில் இவ்வகையான வழக்குகளை அரசு சார்பில் எடுத்து நடத்த சிறப்புப் பொது அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இவை சம்பபந்தப்பட்ட குற்றங்களுக்குப் பொது அபராதம் விதிக்கவும் முடியும்.

தெருவோரச் சிறுவர்கள் மற்றும் வீட்டை விட்டு ஓடிவரும் குழந்தைகள்

இளம் வயதினருக்கான நீதிமுறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000

இளம் வயதினருக்கான நீதிமுறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000 என்பது இளம் வயதினர் அல்லது குழந்தைகளுக்கானது (18 வயது பூர்த்தியடையாத நபர்கள்).

இச்சட்டம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைப்படும் குழந்தைகளுக்கும் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களுக்குமானது.

பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள்

பிரிவு 2 (டி) யின்படி, பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தை என்பது:

- தனக்கென்று ஒரு வீடு அல்லது வாழ வழி இல்லாத குழந்தை
- குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையைக் காப்பாற்ற முடியாத நிலையில் இருப்பது.
- அனாதையான குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் காணாமல் போன குழந்தைகள், வீட்டை விட்டு ஓடி வந்த குழந்தைகள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தேடியும் கிடைக்காத பெற்றோர்களின் குழந்தை.
- கொடுமைக்கு அல்லது பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தை, அல்லது சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தை, அல்லது இதுபோன்று பயன்படுத்தப்படும் பலவீனமான நிலையில் இருக்கும் குழந்தைகள்.
- போதைப் பொருள் கடத்தல், அல்லது பழக்கப்படுத்தல் போன்றவற்றிற்கு ஆட்படக்கூடிய நிலையில் இருப்பவர்கள்.
- ஆயுதம் ஏந்திய சண்டைகளின்போது பாதிக்கப்பட்டக் குழந்தைகள், உள்நாட்டுச் சண்டைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்கள்

குழந்தைகள் நலம் கவனிக்கும் குழு

சட்டப்படி ஒவ்வொரு மாநில அரசாங்கமும் மாவட்ட வாரியாக குழந்தைகள் நலத்தைக் கவனிக்கும் கமிட்டிகளை ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழுவினர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட புகார்கள், வழக்குகள், ஆகியவற்றை விசாரித்துத் தீர்க்கவும் குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு அவர்களுக்கான சிகிச்சைகள், மறுவாழ்வு தேவைப்படுபவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது, அவர்களது அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா என்று கண்காணித்தல், குழந்தைகளுக்கான மனித உரிமைகள் மதிக்கப்படுகிறதா என்பதைக் கவனித்து அறிதல் போன்றவற்றை இந்தக் குழுவினர் செய்ய வேண்டும்.

குழுவினரிடம் குழந்தைகளை அழைத்து வருதல்

பாதிக்கப்பட்ட எந்தக் குழந்தையாக இருந்தாலும் அக்குழந்தையின் பாதுகாப்பிற்கும் பராமரிப்பிற்கும் தேவை இருந்தால் அக்குழந்தையை இந்தக் கமிட்டியைச் சேர்ந்த குழுவினரிடம் அழைத்து வரலாம். சிறுவர்களுக்கான காவல்துறைப் பிரிவு, அல்லது இதைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் காவல் அதிகாரி, பொது நல ஊழியர், குழந்தைகள் உதவி மையம் (தொலைபேசி மூலம் உதவும் அமைப்பு), மாநில அரசாங்கத்தால் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற சமூக நல இயக்கம் அல்லது சமூக் நல ஊழியர் ஆகியோருக்கு இந்த உரிமை உண்டு. சம்பந்தப்பட்ட குழந்தையும் நேரடியாக வரலாம்.

குழந்தையின் பிரச்சினைகள் அல்லது விவரங்களை விசாரித்து அறிந்த பின்னர் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்ப உத்தரவிடலாம். அதன் பிறகு நம்பிக்கைக்கு உரிய, சமூக நல ஊழியர் அல்லது இயக்கம் போன்றவர்கள் மூலம் குறிப்பிட்ட குழந்தையின் பிரச்சினைகள் பற்றிய விவரங்களை விரைவில் முழுவதும் விசாரிக்குமாறு கோரலாம்.

இந்த விசாரணையின் முடிவில், குழந்தைக்குக் குடும்பமோ அல்லது வலுவான வேறு ஆதரவோ இல்லை என்பது தெரியவந்தால், அந்தக் காப்பகத்திலேயே குழந்தை தொடர்ந்து இருக்கும்படி கமிட்டி பரிந்துரை செய்யலாம். குழந்தைக்கு உரிய ஆதரவு கிடைக்கும் வரை அல்லது 18 வயது வரை அங்கிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை இந்தக் கமிட்டிக்கு உள்ளது.

சட்டங்களை மீறும் குழந்தைகள்

சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயலைச் செய்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான குழந்தைகள் தொடர்பான பிரச்சினை இது.

சிறுவர்களுக்கான நீதிமன்ற வாரியம்

மாநில அரசு, சிறுவர்களுக்கான நீதிமன்ற வாரியத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும், நிறுவ வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரியங்கள் அமைக்கப்படலாம். குற்றச்சாட்டுக்கு ஆளான குழந்தைகளுக்கு ஜாமீன் வழங்குவது, குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு, வழக்குகளை விரைவில் முடிப்பது ஆகியவை இந்த வாரியங்களின் பணியாகும்.

போதைப் பொருட்கள் உட்கொள்ளல்

போதை மருந்துகள் மற்றும் மனநிலை பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொள்வது பற்றிய சட்டம் 1985

போதை தரக்கூடிய மருந்தை அல்லது மனநிலை பாதிப்பு பொருட்களைத் தயாரிப்பது, வைத்திருப்பது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது, வாங்குவது, விற்பது போன்றவை சட்ட விரோதமானவை. போதை மருத்துக்கு அடிமையாக ஆக்குவது, போதை மருந்தைக் கடத்துவது போன்றவையும் தண்டனைக்கு உரிய குற்றங்கள்.

போதைப்பொருள் குற்றவாளிகள் வன்முறையில் ஈடுபடுவது அல்லது வன்முறையில் ஈடுபடுவதாக மிரட்டுவது, 18 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளை இதற்காகப் பயன்படுத்தல் ஆகியவையும் தண்டனைக்குரிய குற்றங்கள்.

கல்வி நிறுவனங்களில் அல்லது சமூக சேவை அமைப்புகளில் இக்குற்றத்தைச் செய்வது மிக அதிகமான தண்டனையைப் பெற்றுத்தரும்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் போதை மருந்துகள் மற்றும் மனநிலை பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை கடத்தல் தடுப்பு சட்டம் 1988.

போதைப் பொருள் கடத்துவதற்குக் குழந்தைகளை பயன்படுத்துபவர்கள் குற்றங்கள் செய்ந்த் துணை செய்கிறவர்கள், இந்தச் சட்டத்தின்படி சதிச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

சிறுவர்களுக்கான நீதிமன்ற நடைமுறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000

இந்தச் சட்டத்தின் பிரிவு 2 (டி) யின்படி, போதை மருந்து பழக்கத்துக்கு உட்படும் சூழ்நிலையில் இருந்தாலோ போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில் இருந்தாலோ அந்தக் குழந்தை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு உரியதாகக் கருதப்படும்.

குழந்தைகள் பிச்சையெடுப்பு

குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பலவந்தப்படுத்துவது, அல்லது பழக்கப்படுத்துவது ஆகியவை கீழ்க்காணும் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படும்

சிறுவர்களுக்கான சட்டம் 2000

குழந்தையைப் பிச்சையெடுக்கவைப்பது அல்லது அதற்காகப் பயன்படுத்துவது ஆகியவை தண்டனைக்கு உரிய கடுமையான குற்றங்களாகக கருதப்படும் (பிரிவு-24). வன்கொடுமைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாகி, அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பிச்சை எடுப்பது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் உரியவர்கள் என்று சிறுவர்களுக்கான சட்டம் கூறுகிறது.

இந்தியக் குற்றவியல் சட்டம்

மைனர் வயதுடைய குழந்தைகளைக் கடத்துவது, அங்கங்களை ஊனப்படுத்திப் பிச்சை எடுக்க வைப்பது ஆகியவை ஐபிசி பிரிவு 363 ணீ யின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகள் சட்டங்களை மீறும் குழந்தைகள்

குற்றங்களைப் புரியும் குழந்தைகளுக்குப் பெரியவர்களுக்குக் கொடுப்பது போன்ற கடுமையான தண்டனைகள் கொடுப்பதில்லை அவர்கள் 'சட்ட முறைகளுடன் ஒத்துப்போகாதவர்கள்' என்றுதான் கருதப்படுவார்களே தவிர சிறுவர்களுக்கான (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000-ன்படி குற்றவாளிகள் என்று கருதப்பட மாட்டார்கள்.

இந்தச் சட்டத்தின்படி, குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஜாமீன் பெற உரிமை உண்டு. இவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது சட்டப்படி கட்டாயமும் ஆகும். ஜாமீன் கொடுக்கப்பட்டால், அந்தக் குழந்தையின் நலன் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிந்தால், ஜாமீன் கொடுக்கப்படாது. இந்நிலையிலும்கூட, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இதற்குப் பதிலாக, அவர்களைச் சீர்திருத்தும் நோக்குடன்தான் நீதிமன்றத்தின் அணுகுமுறை இருக்கும். சில கட்டுப்பாடுகளுடன் விடுவிப்பது, புத்திமதிகள், ஆலோசனை அல்லது கடிந்துரைத்தல், அல்லது அவர்களுக்காக என்று இருக்கும் சிறப்புச் சீர்த்திருத்த இல்லங்களுக்கு அனுப்பப்படுதல் ஆகிய நடவடிக்கைகளே எடுக்கப்படும்.

2.99159663866
நவின் Oct 02, 2017 10:38 PM

18 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தல் மட்டுமல்லாமல் அரசு ஆவணங்கள் ஏதுமின்றி பத்திரம் மூலம் முன்பணம் கொடுத்து அவசர உதவிகளுக்கு பணம் கொடுக்காமல் கொத்தடிமைகளாக வைத்திருந்தால் என்ன தண்டணை???????

Raja Feb 19, 2017 08:37 AM

ஒரு பெண் தன் பொருப்பில் இருந்த 6 வயது அடுத்தவரின் பெண் குழந்தையை தவறு செய்ததால் அடித்துவிட்டார் (கண்ணிபோன காயம்) என்ன தண்டனை அவர் தொடர் சிகிச்சை பெறும் நோயாளி மனதலவில் பாதிக்கபட்டவர்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top