பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மதிய உணவுத் திட்டம்

மதிய உணவுத் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

அரசுப் பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறப்புப்பயிற்சி மையங்கள் மற்றும் சர்வ சிக்‌ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித்திட்டம்) கீழ் உதவிபெறும் மதராஸாக்கள் (Madarasas), மக்தாப்புகள் (Maktabs) ஆகியவற்றில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தவும், அம்மாணவர்களைத் தொடர்ந்து பள்ளிகளில் படிப்பதை ஊக்குவிக்கவும், பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வரலாறு

இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் வெகுகாலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. 1925 ஆம் ஆண்டில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில் மதிய உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1980 களின் மத்தியில் தமிழ்நாடு, கேரளம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அந்தந்த அரசுகள் தமது நிதியைக் கொண்டே செயல்படுத்தி வந்தன. 1990-91 ஆம் ஆண்டு வாக்கில்,  மாநிலங்களின் நிதி ஆதாரத்தைக் கொண்டே மதிய உணவு வழங்கும் திட்டம் 12 மாநிலங்களில் அமலில் இருந்தது.

தொடக்கக்கல்வி ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் தேசிய திட்டம் (NP-NSPE) 1995 ஆம் ஆண்டு 15 ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டமாகத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த 2408 ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1997-98 ஆம் ஆண்டிற்குள்,  நாட்டின் எல்லா ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அரசுப்பள்ளிகள் அரசின் நிதிஉதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி நிருவாகங்கள் நடத்தும் பள்ளிகள் ஆகியவற்றில் மட்டும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்ட இந்தத்  திட்டம் 2002 ஆம் ஆண்டில் கல்வி உறுதிப்பாடு திட்டம் (EGS) மாற்று மற்றும் புத்தாக்கக்கல்வி திட்டம் (AIE) ஆகியவற்றின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. மத்திய அரசின் இந்தத்திட்டப்படி,  ஒவ்வொரு மாணவருக்கும் தினந்தோறும் நூறுகிராம் தானியம் என்ற கணக்கில் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்லுவதற்கும் குவிண்டால் ஒன்றுக்கு ஐம்பது ருபாய் உதவிப் பணமும் வழங்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தானியமாக வழங்குவதற்கு பதிலாக 300 கலோரிகள் சத்துள்ள உணவாக வழங்கும் படி திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. மேலும் எட்டு முதல் பன்னிரண்டு கிராம் புரதச்சத்தும் கிடைக்க வகை செய்யப்பட்டது.

2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இத்திட்டம் நடுநிலைப் பள்ளி மாணவரக்ளுக்கும், அதாவது ஆறாம் வகுப்பு  முதல் எட்டாம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் கல்விரீதியாகப் பின்தங்கிய 3479 ஒன்றியங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் பயின்ற சுமார் ஒருகோடியே எழுபது லட்சம் நடுநிலைப்பள்ளி மாணவரகளுக்குப் பயன்கிட்டியது. பிறகு 2008 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து,  நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள்,  உள்ளாட்சி நிருவாகங்கள் நடத்தும் பள்ளிகள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஆதரவு பெறுகின்ற மதராஸாக்கள், மக்தாபுகள், கல்வி உறுதிப்பாடுத் திட்ட  மாணவர்கள் (EGS), மாற்று மற்றும் புத்தாக்கக் கல்வித் திட்ட மாணவர்கள் என அனைத்து பிரிவிலும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் 700 கலோரிகளும், 20 கிராம் புரதச் சத்தும் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு 150 கிராம் உணவு தானியம் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து  உறுதிப்பாட்டிற்கான இந்த மதிய உணவுத்திட்டம் 2009 ஆம் ஆண்டு முதல் கீழ்க்கண்ட மாற்றங்களுடன் மேலும் செம்மையாக்கப்பட்டது.

நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவுகள் பருப்பு வகை 30 கிராம், காய்கறிகள் 65-75 கிராம், எண்ணெய்/கொழுப்பு 7.5 கிராம் என்று நிர்ணயிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்கான செலவுத் தொகை, (பணியாளர் மற்றும் நிருவாகச் செலவு நீங்கலாக) தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2.50 என்றும், நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.3.75 என்றும் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்தச்செலவுத் தொகையும் பிறகு 2010 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து, முறையே ரூ.2.69 என்றும் ரூ.4.09 என்றும் அதிகரிக்கப்பட்டது. சமையலுக்கான இந்தச் செலவுத்தொகையை 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், ஆண்டுதோறும் 7.5 சதவீதம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் உயர்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சமையல் செய்பவர்களுக்கும், உதவியாளர்களுக்கு, பணியாளர் மற்றும் நிருவாகச் செலவுக்கென வழங்கப்படும் தொகையில், ஒரு மாணவருக்கு நாற்பது பைசா என்ற கணக்கில் ஊதியம் தரப்பட்டது. இந்தச் சொற்பத் தொகைக்குப் பணியாளர் எவரும் கிடைக்காத நிலையில், 2009 டிசம்பர் முதற்கொண்டு,  சமையலர்-உதவியாளர் என்ற நிலையில் ஒருவருக்கு மாதம் தோறும் ரூ.1௦௦௦ மதிப்பூதியமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சில மாநிலங்கள் தமது சொந்த நிதியில் இருந்து, ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும் சமையலர் - உதவியாளருக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்குகின்றன. சமையலர் உதவியாளர் நியமனத்திற்கு கீழ்க்கண்ட அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(i) 25 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில் ஒரு சமையலர்-உதவியாளர்

(ii) 26 முதல் 100 மாணவர்கள் இருந்தால்,  இரண்டு சமையலர்-உதவியாளர் 100 க்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அடுத்த 100  வரை ஒரு அதிகப்படியான சமயலர்-உதவியாளர்.

2013-14 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரித்து வழங்குவதற்காக 25 லட்சத்து 7௦ ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் சமையலர்-உதவியாளர் பணியமர்த்தப் பட்டிருந்தனர்.

மதிய உணவு சமையல் கூடங்களைக் கட்டுவதற்கான செலவும் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதற்கான செலவு ரூ.60000 என்று வரையுறுத்திருந்தனர். இது சாத்தியமானதாகவும்,  போதுமானதாகவும் இல்லை. எனவே எந்த அளவுக்கு (தரைத்தள அளவு) சமையற்கூடம் கட்டப்படுகிறது என்ற கணக்கில் செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மத்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை விடுத்த அறிவிப்பின்படி, 1௦௦ மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில் இருபது சதுரமீட்டர் பரப்புக்குச் சமையல் கூடம் கட்டலாம். கூடுதலாக ஒவ்வொரு 1௦௦ மாணவர்களுக்கும் நான்கு சதுரமீட்டர் பரப்பு அதிகரிக்கப்படும். இந்த அளவீட்டினை மாநிலஅரசுகள் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

புவியியல் ரீதியாக சிரமமான போக்குவரத்து உடைய மாநிலங்களில்,  உணவு தானியங்களைப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்வதற்கான அனுமதிச் செலவு போதுமானதாக இல்லை என்று வடகிழக்கு மாநில நிர்வாகங்கள் முறையிட்டன. எனவே வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்கள் மற்றும் இமாச்சலப்  பிரதேசம்,  ஜம்மு-காஷ்மீர், உத்த்ரகாண்ட் ஆகிய பதினோரு மாநிலங்களிலும், மதிய உணவிற்கான தானியங்களை இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் இருந்து எடுத்துச் செல்வதற்கான செலவு, பொது விநியோகத்திற்கு தானியங்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும் செலவிற்குச் சமமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2009 டிசம்பர் முதல் தேதியிலிருந்து இந்த ஏற்பாடு அமலில் உள்ளது.

உணவு வழங்கல்

இந்த மதிய உணவுத்திட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள கலோரி மற்றும் புரதச்சத்துக்களை வழங்குவதற்கு ஏதுவாகக் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 100 கிராம், நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு  150 கிராம் என்ற அளவில் இலவசமாக உண்டவுதானியங்கள் வழங்கப்படுகின்றன.

2. மதிய உணவைச் சமைப்பதிற்குத் தேவையான காய்கறி,  எண்ணெய், பருப்பு போன்ற சாமான்கள் வாங்குவதற்காகவும் பணம் தரப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் இந்தத்தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வழங்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து வழங்கப்படும் செலவுத் தொகை விவரம்:

மத்திய-மாநில  பங்களிப்பு

மொத்தச்செலவு (ஒரு மாணவருக்கு)

வடகிழக்கு தவிர்த்த ஏனைய மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

மத்திய அரசின் பங்கு

மாநில அரசின் பங்கு

மத்திய அரசின் பங்கு

மாநில அரசின் பங்கு

தொடக்கப்பள்ளிகளில்

ரூ.4.13

ரூ.2.48

ரூ.1.65

ரூ.3.72

ரூ.0.41

நடுநிலைப்பள்ளிகளில்

ரூ.6.18

ரூ.3.71

ரூ.2.47

ரூ.5.56

ரூ.0.62

3) வறட்சியால் பாதிக்கபட்டப் பகுதிகளில்

பள்ளிக்கூடம் நடைபெறும் நாள்கள் தவிர விடுமுறை நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது.

4) சமையல் கூடங்களைக் கட்டுவதற்கான செலவிலும் மத்திய அரசு தனது பங்கைத் தருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் 90 சதவீதம் அளவிற்கும் மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 75 சதவீத அளவிற்கும் கட்டுமானச் செலவை மத்திய அரசு ஏற்கிறது.

5) சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலறை உபகரணங்களை வாங்குவதற்குப் படிப்படியாக எல்லாப் பள்ளிகளுக்கும் சராசரியாக ரூ.5000 வரை அனுமதிக்கப் படுகிறது. மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப இந்த இனங்களில் கூடுதலாகச் செலவிடலாம். அடுப்பு அல்லது ஸ்டவ்,  உணவு தானியங்களைச் சேமிக்கும் கலங்கள், சமைப்பதற்கான பாத்திரங்கள் சாப்பிடுவதற்கான தட்டுகள், தம்ளர்கள் போன்றவற்றை வாங்குவதற்கு மத்திய அரசின் உதவித்தொகைக்கு உச்சவரம்பு ஐந்தாயிரம் ருபாய் ஆகும்.

மக்களின் பங்கேற்பு

மதிய உணவு தயாரிக்கப்பட்டுப் பள்ளி மாணவர்களுக்கு பரிமாறப்படுவதைக் கண்காணிக்கும் ஏற்பாட்டினை, அந்தப்பிள்ளைகளின் தாய்மார்களே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்மார்கள் சுழற்சிமுறையில் தமக்குள்ளே ஓர் ஏற்பாட்டை உருவாக்கிக்கொண்டு, மதிய உணவு வழங்குவதைக் கண்காணிக்கும் போது, தரமான உணவு பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைப்பது உறுதிசெய்யப்படும். மாதத்தின் ஒரு சிலநாள்கள் ஒன்றிரண்டு மணிநேரம் மட்டுமே அவர்கள் இதற்கென ஒதுக்கிடவேண்டியருக்கும். 'தாய்மார்களின் கண்காணிப்பு' என்ற சிறிய தலையிடு, இந்தத்திட்டத்திற்குப் பெரிதும் அவர்கள் உரிமையுடையவர்கள் என்ற கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

  • சமையலர் - உதவியாளர்களாகப் பெண்களை மட்டுமே நியமிக்கலாம்.
  • மதிய உணவு தயாரித்துப் பரிமாறப்படுவது பற்றி பள்ளிக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு முதல்கட்ட விளக்கங்களை அளிக்கலாம்.
  • தாய்மார்களின் கண்காணிப்பு இருந்தால் மதிய உணவு வழங்கப்படுவதில் சீரான தன்மையும், தரமும் இருக்கும் என்று அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
  • மதிய உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுவதில் எந்தெந்த விஷயங்களை உற்றுக் கவனிக்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.
  • குறிப்பிட்ட தினங்களில் சுழற்சி முறையில் யார்யாரெல்லாம் மதிய உணவுக் கூடத்திற்கு வரவேண்டுமென்று பட்டியல் தயாரிக்கவேண்டும்.
  • மதிய உணவு வழங்கும் திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தாய்மார்களிடம் இருந்து கேட்கப்பெற்று, சாத்தியமான யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆதாரம் : http://mdm.nic.in/

Filed under:
3.0350877193
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top