অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சென்னை

சென்னை

அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது.

கடற்கரை

எலியட்ஸ் கடற்கரை

அதிகாலையையும் அந்தி மாலையையும் எலியட்ஸ் கடற்கரையில் நடந்தபடி ரசித்தாலே ஆயுளுக்கும் போதும். நீண்ட மணற்பரப்பும் வானம் தொடும் நீர்ப்பரப்பும் மனத்தில் ஆழ்கடல் அமைதியை உருவாக்கும். அருகருகே வேளாங்கண்ணி தேவாலயமும் அஷ்டலட்சுமி கோயிலும் எனக் கடலருகே சமரச சன்மார்க்கம். அலையடிக்கும் எலியட்ஸ் கடற்கரையில் ஆன்மிக காற்றும் வீசுகிறது. கொஞ்சம் காற்றை வாங்கிக் கொண்டே கொஞ்சும் கடலை ரசித்து வரலாம். இளமைக்கு ஏற்ற கடற்கரை இது. அமைதி விரும்பிகளுக்குத் திறந்தவெளி தியான மண்டபம். சென்னையின் தெற்குப் பகுதியில் பெசன்ட் நகரில் அமைந்துள்ளது.

மெரினா கடற்கரை

தன்னைத் தேடி வந்தவர்களையெல்லாம் மடியில் வைத்துத் தாலாட்டும் வங்காள விரிகுடா கடல். நகர வாழ்வின் இறுக்கத்தைத் தளர்த்தி இளைப்பாற நினைப்பர்வர்களின் இலவசப் பூங்கா. மணற்பரப்பின் நீளம் 13 கி.மீ. உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை இதுதான். நடக்க நடக்க காற்றின் சுகம் மெய்மறக்க வைக்கும். அதிகாலை நேரத்தில் மெரினா நடை மனிதர்களால் கலகலக்கும். 1968-ல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வைக்கப்பட்ட தமிழறிஞர்கள், விடுதலை வீரர்கள் மற்றும் காவிய மாந்தர்களின் அழகிய வேலைப்பாடுமிக்க சிலைகள் கடற்கரையை அலங்கரிக்கின்றன. மெரினாவின் அடையாளம் உழைப்பாளர் சிலைத் தொகுப்பு. கூட்டுழைப்பு, ஊக்கம் உடலுழைப்பின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. சென்னை மாநகராட்சியின் தீவிர கவனத்தில் மெரினாவின் அழகு கூடிக்கொண்டேபோகிறது.

வி.ஜி.பி. கோல்டன் பீச்

சென்னைக்கு வருகிறவர்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் கோல்டன் பீச்சை கோபுரத்தில் வைத்திருப்பார்கள். உல்லாசப்பூங்கா கடற்கரைக்கு அருகில் ஒரு பசுமைக் கடல் சிரிக்காத மனிதர் இங்கு பிரபலம். நவீன பொழுதுபோக்கு விளையாட்டுகள் எக்கச்சக்கம். குழந்தைகள் ஆடிப்பாடி ஓடி விளையாட ஆசைப்படும் இடம்.

அமைவிடம் - கிழக்கு கடற்கரை சாலை, நேரம் காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை. கட்டணம் பெரியோர் - ரூ.100 மூன்று வயதிற்கு குறைவான குழந்தைகள் ரூ.50 தொலைபேசி - 24491445 - 24491446.

அண்ணாநகர் கோபுரம்

முருகக் கடவுளைப்போல உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியதில்லை. நகரைப் பார்க்க தெருவெங்கும் சுற்றத் தேவையில்லை. அண்ணாநகர் கோபுரம் பூங்காவிற்குப் போய் வந்தால் போதும். இங்குள்ள கோபுரம்தான் நகரிலேயே உயரமும், பெரியதும் ஆகும். சுருள் வடிவில் அமைந்த படிக்கட்டுகளில் நடந்து செல்வதே ஒரு சுகானுபவம். அதன் உச்சியில் நின்று முழு நகரத்தின் அழகையும் பார்க்கலாம். இதுவொரு நிற்கும் விமானமாக நகரைச் சுற்றிக்காட்டும் அதிசயம். ஒத்தை ரூபாயில் ஊரைப் பார்க்கும் ஆனந்த அனுபவம்.

அமைவிடம்

அண்ணாநகர் ரவுண்டானா அருகில், சென்னை 600 040. நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.1. நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை கிடையாது.

பிர்லா கோளரங்கம்

பெரிய நூலரங்கம் உருவாக்கும் அறிவுத் தேடலை இந்த பிர்லா கோளரங்கம் எளிதாகத் தொடங்கி வைத்துவிடும். அறிவியல் நுட்பத்தை அருகிருந்து பார்க்கும் வசதி கொண்டது. அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படும் விண்வெளியைத் தொலைநோக்கியின் வழியே பார்த்துத் தெளியலாம். வானவெளி ஆச்சரியங்கள் குழந்தைகளின் விழித்திரைக்கு அருகிலேயே மாதிரி வடிவங்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. கேள்விகளில் துளைக்கும் குழந்தைகள் பார்வையின் வழியே பதில்களைப் பருகிப் போகலாம். குழந்தைகளின் மனவுலகின் ரகசியங்களுக்கு பிர்லா கோளரங்கம் அறிவுலக ஞானம் தருகிறது. கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகிலுள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் இது செயல்படுகிறது.

நேரம்:- நிகழ்ச்சி நிரல் (ஆங்கிலத்தில்) காலை 10.45, மதியம் 1.15 மற்றும் 3.45. தமிழில் மதியம் 12 மணி மற்றும் 2.30 மணி.

நுழைவுக்கட்டணம் பெரியவர் ரூ.20. சிறுவர் ரூ.10. தொலைபேசி:- 24410025.

அமீர் மகால்

அரண்மனை என்ற சொல்லிற்கு சென்னைக்குள்ளேயே ஓர் அடையாளம் அமீர் மகால். ஆற்காடு நவாப்களின் கலைத் திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கம்பீரம் ஒளிர அமைக்கப்பட்டிருக்கிறது.

1789 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1870 இல் ஆற்காடு அரச குடும்பத்தாரின் மாளிகை ஆயிற்று. நவாப் அரசர்களின் கலை மனங்களை இந்த மகாலின் கலையெழில் கொஞ்சும் தூண்களே சொல்லும். இங்கு வந்து பார்த்தவர்கள் பரவசம் கொள்ளாமல் திரும்பவே முடியாது. முஸ்லிம் மன்னர்களின் மனத்திற்குரிய மகாராணிகள் தம் கனவுகளை அடைகாத்த அந்தப்புரங்கள் இந்த மகாலில் இருக்கின்றன. கொஞ்ச நேரம் நீங்களும் ஒரு மன்னராக உலா வந்து பார்க்க ஒரு வசதி.

அமைவிடம் மகாகவி பாரதிசாலை, (பைகிராப்ட்ஸ் ரோடு) திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. பார்வையிடும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை கிடையாது. அனுமதி பெற்றுப் பார்வையிட வேண்டும். தொலைபேசி:- 28485861

கன்னிமாரா பொது நூலகம்

மர நிழல்கள் அடர்ந்த சோலைக்குள் இருக்கிறது கன்னிமாரா நூலகம். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கட்டடங்களில் குட்டி நகராகத் தோன்றும் பகுதியில் அமைந்திருக்கும் தேசிய நூலகங்களில் ஒன்று. மிகப்பழமையான கட்டடத்தில் இயங்கும் நூலகம். நவீன வசதிகள் கொண்டது. தொடுதிரைக் கணினி நிறுவப்பட்டிருக்கிறது. இங்கு மிகப் பழமையான நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வாசிப்பை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றக்கூடிய சூழல் அமையப் பெற்ற மிகப்பெரும் நூலகம். சென்னையின் பெருமைமிகு இடங்களில் இதுவும் ஒன்று.

அமைவிடம் பாந்தியன் சாலை, எழும்பூர் சென்னை-8. அனுமதி இலவசம். தேசிய விடுமுறை நாட்கள் விடுமுறை. பார்வையாளர் நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை. தொலைபேசி 28193751.

புனித ஜார்ஜ் கோட்டை

ஆங்கிலேயர்கள் கப்பலேறிப் போய்விட்டார்கள். ஆனால் அகிலத்தையும் அரசாள நினைத்த அவர்கள் கட்டிய கோட்டைகள் இன்றும் நமக்கு அரசாண்ட நினைவுகளை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதிலொன்றுதான் புனித ஜார்ஜ் கோட்டை. கடற்கரையோரம் ஏதோ பெரிய மதிற்சுவர் போலத் தோன்றும் இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. அன்று ஆங்கிலேயர்கள் ஆண்ட புனித ஜார்ஜ் கோட்டையில்தான் இன்று நமது ஜனநாயகம் மலர்ந்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சியின் பழம்பெரும் நினைவுச் சின்னம். நாற்புறமும் அகழியுடன் அரைவட்ட வடிவில் இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் வடிவமைத்துள்ளார்கள். அகழிகளின் பாதைகளும் கோட்டைச் சுவர்களும் அழியாத காலத்தின் சுவடுகள். மாநில சட்டமன்றப் பேரவை தலைமைச் செயலகம் ராணுவம் மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும் உண்டு. இராபர்ட் கிளைவுக்குத் திருமணம் நடந்ததாகக் கருதப்படும் ஒரு தேவாலயமும் இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.

அமைவிடம்

புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. அனுமதி இலவசம். விடுமுறை:- சனி ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள். தொலைபேசி 25665566.

கோட்டை கொடிமரம்

கொடிகள் அசையும் காற்றசையும் மரங்களுக்கிடையில் கொடிமரங்களும் அழகுதான். புனித ஜார்ஜ் கோட்டையில் விண்ணைத் தொட முயற்சிக்கும் இந்தக் கொடிமரத்தை அண்ணாந்து பார்த்தால் கழுத்தைச் சுளுக்க வைக்கும். இதில் தினமும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறப்பது தனி அழகுதான். சுதந்திரத் தினத்தன்று மலர்கள் வானிலிருந்து தூவப்பட்டு, குண்டுகள் அதிர, தமிழக முதலமைச்சரால் கொடி ஏற்றப்படும் தருணம் பொன்னானது. அப்போது கொடி மேடை கம்பீரத்தில் மிளிரும். தொலைக்காட்சிகளில் பார்த்தது போதும். எல்லோரும் ஒருமுறை நேரில் சென்று கட்டாயம் பார்க்க வேண்டியது இந்தக் கொடிமரம்.

உயர் நீதிமன்றம்

நேப்பியர் பாலமும் உயர் நீதிமன்றக் கட்டடங்களும் திரைப்படம் தொலைக்காட்சிகளில் பார்த்து சலித்திருப்பீர்கள். நேரில் ஒருமுறை பார்க்கலாம் என்று மனத்தில் ஆசை முளை விட்டிருக்கும். சென்னை மாநகரின் மற்றொரு அடையாளமல்ல இது. மாபெரும் அடையாளம். உயர்நீதிகள் பிறக்கும் இடமான இது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம். 1892-ம் ஆண்டு இந்திய-இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டது. பாரிமுனைக்கு அருகிலுள்ள இந்த வளாகத்தில்தான் சட்டக் கல்லூரியும் அமைந்துள்ளது. நீதிமன்ற கட்டடத்தின் சின்னச் சின்ன படிக்கட்டுகளிலும் கூட மரபார்ந்த கட்டடக்கலையின் மகத்துவங்களைப் புரிந்து கொள்ளலாம். வழக்குகள் இல்லாமலும் இந்த வளாகத்திற்குள் போய் வரலாம்.

பாரிமுனைக்கு அருகில் உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு. வார நாட்களில் அனுமதி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. தொலைபேசி- 25210543.

சென்னைப் பல்கலைக் கழகம்

மெரினா கடற்கரைச் சாலையில் கல்விக்காக ஒரு கலங்கரை விளக்கம். எழில்மிகு கட்டடங்களின் மகுடமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம் 1857-இல் தொடங்கப்பட்டது. சிப்பாய்க் கலகம் என அழைக்கப்படும் முதல் சுதந்திரப் போராட்டத்தின் நெருக்கடியான ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியக் கல்வித்துறையில் முதன்மையான இடம் இதற்குண்டு. லண்டன் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு இந்திய சட்டவியல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சட்டம், மருத்துவம், அறிவியல், கலை என பல்துறைகளின் ஞானபீடமாக விளங்குகிறது. இதனுள்ளே உயர்கல்வியின் சல்லிவேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன. பலர் படித்த இடம். படிக்கும் இடம். நாம் பார்க்க வேண்டிய இடம்.

அமைவிடம்

- சேப்பாக்கம் அண்ணா நினைவகம் எதிரே, சென்னை - 600 005. அனுமதி இலவசம். நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு.

கலா சேத்ரா

கலைகளின் சேத்ரம். விழுதுகளிறங்கிய பழமையான கலை ஆலமரம். பசுமையின் நிழலில் நாத லயங்களின் இசையில், நதிகளின் அசைவில் உங்களையே மறந்துவிடுவீர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் நிற்கும் நகரில்தான் நாட்டியமும், இசையும் நர்த்தனம் புரியும் இடமுமாக கலா சேத்ரா இருக்கிறது. இங்கு மரபும் பாரம்பரியமும், நவீனமும் சேர்ந்து நாளும் பொழுதும் கலைகள் வளர்கின்றன. கலைக்காகவே வாழ்ந்து மறைந்த ருக்மணி தேவி அருண்டேல் அவர்களால் 1936-இல் தொடங்கப்பட்டது கலாசேத்ரா. பரதம் மற்றும் பிற நாட்டியங்களை தினம் கலைஞர்களுக்குக் கற்றுத் தருவதோடு அதை மீளுருவாக்கம் செய்யும் உயரிய நோக்குடன் திருமதி.ருக்மணி தேவி தொடங்கியிருக்கிறார். சுரங்க வகை கலைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மர நிழல்களின் கீழே திறந்த வெளியில் பழங்கால குருகுல முறையில் பல்கலைகளும் கற்பிக்கப்படுகிறது இதன் சிறப்பு. அதோ இசையின் அதிர்வுகள் காதில் விழுகின்றன.

அமைவிடம்:- திருவான்மியூர், சென்னை - 600 041. அனுமதி இலவசம். நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை இல்லை. தொலைபேசி - 24521169.

கலங்கரை விளக்கம்

மெரினாவின் உயரமான ஆரம்பப் புள்ளியாக நிற்பது கலங்கரை விளக்கம். மீனவர்களின் வழிகாட்டியான இந்த நீண்ட நெடிதுயர்ந்த கலங்கரை கோபுரம் கடற்கரையின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. தங்க மணற் பரப்புக்கு வாளிப்பான அழகை அள்ளி வழங்குகிறது. இந்த நிற்கும் நெடுமரம். இங்கிருந்து இரவில் சுழலும் ஒளிவிளக்கு வானத்து நிலவுக்குக்கூட வழி காட்டும். கடற்கரை வாசிகளுக்கு இது அழகின் அடையாளம். வழி தவறும் கட்டுமரங்களுக்கு இது ஒரு வழிகாட்டும் ஒளி மரம்.

அமைவிடம்:- காமராஜர் சாலை, மைலாப்பூர், சென்னை - 4. தொலைபேசி - 24985598

போர் வெற்றி நினைவுச் சின்னம்

கடற்கரை சாலையைக் கடந்து போகும்போது தீவுத்திடல் அருகில் உங்கள் கண்ணில் படும் இந்த நினைவுச் சின்னம். அதை ஏதோ கல்தூண் மண்டபம் என்று நினைத்து கடந்து விடாதீர்கள். நிதானம் காட்டி நின்று பாருங்கள். இங்கே நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் ஆன்மாக்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. முதல் உலகப் போரில் நேச நாடுகள் அடைந்த வெற்றியையும் பின்னர் இரண்டாம் உலகப் போரில் உயிர்த் துறந்த சென்னை ராஜதானியைச் சேர்ந்தவர்களின் நினைவாகவும் கட்டப்பட்டுள்ளது. வரும் தலைமுறைகளுக்காக காலத்தால் வரலாறு கரைந்து போகாமல் இருப்பதற்காகக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வருகையும் கூட ஒரு வரலாறுதான். சென்று பாருங்கள்.

அமைவிடம்:- காமராஜர் சாலை (கடற்கரைச் சாலை) தீவுத்திடல் அருகில், சென்னை - 600 009.

நேப்பியர் பாலம்

சென்னை என்றதும் மனத்தில் நிழலாடும் சித்திரங்களில் நேப்பியர் பாலமும் ஒன்று. அதன் வளைவுகள் விசித்திரமானவை. ஆங்கிலேயர்களின் கலைத் திறனில் பாலம் கூட ரசனை மிகுந்த படைப்பாக மாறியிருக்கிற அதிசயம் இது. மெரினா கடற்கரையிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் கூவம் ஆற்றைக் கடப்பதற்கான பாலம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1869 ஆம் ஆண்டு இப்பாலம் கட்டப்பட்டது. முதலில் இது இரும்பு கிராதிகளால் ஆன ஒடுக்கமான பாலமாகத்தான் இருந்தது. பின்னர் 1943 ஆம் ஆண்டு ஆர்தர் ஹோப் அவர்களால் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் பொறியியல் ஆற்றலுக்குக் காலத்தால் அழியாத சான்றாக இப்பாலம் இருக்கிறது. அதேபோன்று இன்னொரு பாலமும் அதன் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.

வட்டார இருப்புப்பாதை காட்சி சாலை

சிறுவயது ஞாபகங்களில் ரயில் பயணங்களும், யானை பார்த்து ஆச்சரியப்பட்ட பொழுதுகளும் மறக்க முடியாதவை. ரயிலில் பயணம் செய்த நாம் அதன் வளர்ச்சியின் காட்சிக் கூடத்தைப் பார்க்காமல் இருந்தால் எப்படி? சென்னை பெரம்பூர் அருகே உள்ள இரயில் பெட்டி தொழிற்சாலை மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. உட்புறக் காட்சிக் கூடத்தில் எண்ணற்ற சிறு காட்சி அமைப்புகள் வகை மாதிரிகள், புகைப்படங்கள், அட்டவணைகள் ஆகியன இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன. இளையவர் முதல் முதியவர் வரை இந்தக் காட்சிச் சாலை உற்சாகப்படுத்தி ஆர்வம் தரக்கூடியது. குழந்தைகள் பார்த்து ரசித்த ஒரு சில பொம்மை ரயில்கள் மட்டுமல்ல 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ரயில் பெட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

நியூ ஆவடி ரோடு, ஐ.சி.எஃப் பஸ் நிறுத்தம் அருகில், சென்னை - 600 038. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.5 சிறுவர் ரூ.3 விடுமுறை திங்கள் கிழமை. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 26146267.

ராஜாஜி மண்டபம்

நினைக்கும் போதெல்லாம் அதன் பிரமாண்டம் உங்களை சற்றே அசர வைத்துவிடும். நீண்ட அகலமான படிக்கட்டுகளும் பெருந்தூண்களும் ஆங்கிலேயர்களின் கட்டடக் கலை சாதனையை கண்கள் முன் விரிக்கின்றன. இம்மண்டபத்தின் விசாலமான பரப்பும் கலையழகும் பழங்காலத்திற்குப் பயணிக்க வைத்துவிடும். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் நினைவாக எழுப்பப்பட்டது இந்த மண்டபம். பல்வேறு சரித்திரச் சம்பவங்களின் மௌன சாட்சியாகக் கம்பீரம் காட்டும் இம்மண்டபம், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த இராஜாஜியின் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. இது பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும் இடங்களில் முக்கியமானதாக விளங்குகிறது. நீங்கள் கட்டாயம் பார்த்துப் பரவசப்பட வேண்டிய இடம் இது.

அமைவிடம்

ஓமந்தூரார் அரசினர் தோட்டம். ஹிந்து நாளிதழ் கட்டட எதிர்ப்புறம், அண்ணாசாலை, சென்னை - 600 002. தொலைபேசி - 25365635.

ரிப்பன் மாளிகை

தும்பை பூ நிற தூய்மை நிறத்தில் பளபளக்கும் கட்டடம் ரிப்பன் மாளிகை. வெள்ளை நிறப்பெட்டிகளை அடுக்கியது போன்ற பிரமாண்ட தோற்றம் கொண்டது. இந்திய தன்னாட்சியின் தந்தை என்று போற்றப்படுகிற ரிப்பன் பிரபுவின் பெயரால் அழைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மன்றமும் அதன் ஆட்சிக் குழுவும் இம்மாளிகையில் இயங்குகின்றன.

அமைவிடம்

பூங்கா மின் இரயில் நிலையம் எதிர்ப்புறம், சென்னை - 600 003. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு. தொலைபேசி - 25384510 - 25384670.

பிரம்மஞான சபை

தனிமையும் அமைதியும் தவழும் இடத்தில்தான் தத்துவம் பிறக்கும். விதையிலிருந்து உயிர்தெழுந்த பூமிப்பரப்பு முழுவதையும் விழுதுகளால் அரவணைத்து செழித்து நிற்கும் அடையாறு ஆலமரத்தைப் போலவே பழமையானது பிரம்மஞான சபை. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி சீமாட்டி மற்றும் கலோ ஆல்காட் ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மதம் மற்றும் தத்துவம் சார்ந்த ஆய்வுகளுக்கானது. 1892 இல் அடையாறில் மரங்களடர்ந்த இயற்கைச் சூழல் அமைந்த இடத்துக்கு இச்சபை மாற்றப்பட்டது. பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பசுமை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் இந்த ஆல விருட்சத்தின் கிளைகளும் விழுதுகளும் 40,000 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளன. இங்குள்ள நூலகம் பழம் பெருமைமிக்கது. பல அரிய நூல்கள் பாதுகாப்பில் உள்ளன. ஞானம் தேடும் மனிதர்களுக்கு இது ஓர் இயற்கையின் போதி மரம். இங்கு இளைப்பாறுவோர் எல்லாம் தத்துவ ஞானம் பெறுவார்கள்.

அமைவிடம்

அடையாறு, சென்னை - 600 020. அனுமதி இலவசம். நேரம் காலை 8.30 முதல் 10 மணி வரை. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை. ஞாயிறு விடுமுறை. தொலைபேசி - 24912474.

சுற்றுலாத் துறை வளாகம்

ஊர் சுற்றிப் பார்க்க விருப்பம் கொண்டவர்கள் ஒரே இடத்தில் எல்லாத் தகவல்களையும் பெறும் வகையில் அமைக்கப்பட்டது இந்த வளாகம். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைமை அலுவலகமும் பல்வேறு மாநில அரசுகளின் சுற்றுலாத் துறை அலுவலகங்களும் இங்குள்ளன. சுற்றுலாத் தலங்கள் பற்றிய தேவையான தகவல்கள் மட்டுமல்ல பயண ஏற்பாடுகள் பற்றிய விவரங்களையும் கூட எளிதில் பெற்றுச் செல்லலாம்.

அமைவிடம்:- வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. தொலைபேசி - 25388785.

டைடல் பூங்கா

தகவல் தொழில்நுட்பத்தின் திசையில் தமிழகம் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி டைடல் பூங்கா. இதுவொரு தமிழ்நாட்டு சிலிகான் பள்ளத்தாக்கு. இந்தச் சாலையே இப்போது புதுமணப்பெண் போல புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. உலகப் புகழ்பெற்ற கணினி நிறுவனங்களின் அலுவலகங்கள் இங்கு மையம் கொண்டுள்ளன. மிக விரிந்த பரப்பில் உருவாகியுள்ள டைடல் பூங்கா நவீன கட்டடக் கலை அழகின் அடையாளம். குட்டி நகரம் போல டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், டென்னிஸ் என பல விளையாட்டு வசதிகளும் உள்ளன. கனரா வங்கி, ஹிக்கின்பாதம்ஸ், புத்தக நிலையம், உணவகம் என உள்ளுக்குள்ளேயே ஓர் உலகம். இந்தப் பூங்காவில் மலர்கள் மலர்வதில்லை. இங்கு மென் பொருட்களே விளைபொருட்கள்.

அமைவிடம்

தரமணி, சென்னை - 600 113. அனுமதி பெற்று பார்வையிட வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22540500 - 501 - 502.

நினைவிடங்கள்

விவேகானந்தர் இல்லம்

மெரினா கடற்கரைக்கே அழகு தரும் அமைதியின் இல்லம் இது. இளைத்துக் கிடந்த இளைஞர்களைத் தீரமுடன் எழுந்து நிற்க கற்றுத்தந்தவர் விவேகானந்தர். ஆரோக்கியமான ஆன்மிகத்தை அனைவருக்கும் வழங்கிய காவியுடையில் வந்த தன்னம்பிக்கை இந்த ஞானியின் பெயரில் அமைந்தது, இந்த நினைவு இல்லம். ஆனால் ஆரம்பத்தில் இந்த மாளிகை இறக்குமதி செய்யப்பட்ட பனிக்கட்டிப் பாளங்களை பாதுகாப்பதற்காக 1842 ம் ஆண்டு டுபுடர் ஐஸ் கம்பெனியால் கட்டப்பட்டது. 1874 ஆம் ஆண்டு வரை வர்த்தகம் நடந்த இந்த மாளிகையை பிலிகிரி அய்யங்கார் விலைக்கு வாங்கி கேஸ்டில் கெர்னான் என்று பெயரிட்டார். தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை நிகழ்த்திவிட்டு கொல்கத்தா திரும்புவதற்கு முன் சென்னையில் பிப்ரவரி 6 முதல் 15 வரை இங்கு தங்கிச் சென்றார். இந்த மாளிகை 1930 ஆம் ஆண்டு அரசின் பொறுப்புக்கு வந்தது. 1963 ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரை மாளிகைக்குச் சூட்டி மகிழ்ந்தது தமிழக அரசு. பிறகு டிசம்பர் 20, 1999 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் விவேகானந்தர் சிலை இங்கு நிறுவப்பட்டது. இந்த நினைவாலயத்தில் 3 ஆவது தளத்தில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட அமைதி குடியிருக்கும் ஒரு தியான மண்டபம் உள்ளது. நினைவு இல்லத்தைப் பார்க்க வருபவர்கள் தியானம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அமைவிடம்

ஐஸ் ஹவுஸ். திருவல்லிக்கேணி (மெரினா கடற்கரையை எதிர்கொண்ட முகமாக) சென்னை - 600 005. அனுமதிக் கட்டணம் பெரியோர் ரூ.2. சிறுவர் ரூ.1. நேரம்:- காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அடுத்து மாலை 3 மணி முதல் மாலை 7 மணி வரை. புதன் கிழமை விடுமுறை. தொலைபேசி - 28446188.

வள்ளுவர் கோட்டம்

சுற்றிலும் மரங்கள் அடர்ந்த பின்னணியில் வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து ரசிப்பது பேரழகு. திருவாரூர் தேரே திரும்பி வந்து நிற்பது போலத் தோற்றம். தேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்ட தேர்க்கால்களும் அலங்கார குதிரைகளும் யானைகளும் கண்கள் கொள்ளா காட்சி. நவீன கட்டடக் கலையின் அற்புதம் வள்ளுவர் கோட்டம். கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள தேர், திராவிட கட்டுமானக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே 4000 பேர் அமரும் அரங்கு உள்ளது. 1330 குறட்பாக்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 133 ஓவியர்கள் வள்ளுவம் குறித்து தீட்டிய ஓவியங்களும் இங்கு பார்வைக்காக அரங்கின் மேல் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

வள்ளுவர் கோட்டம் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.3 சிறுவர் ரூ.2. நேரம்:- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை இல்லை. தொலைபேசி - 28172177.

அண்ணா சதுக்கம்

சென்னைக்கு வருகிறவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்களில் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது இதுவாகத்தான் இருக்கும். அண்ணா உறங்கும் சதுக்கம். வெண் பளிங்குக் கற்களில் கடற்கரையின் அழகையே மெருகேற்றிக் கொண்டிருக்கிறது. அண்ணா நினைவிடம் அறிஞர் அண்ணா மறைந்தபோது அலறித் துடித்த இதயங்களின் எண்ணிக்கை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் அண்ணா என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தலைவர். அவருடைய முழுப்பெயர் சி.என்.அண்ணாதுரை. இவரது ஆட்சிக் காலத்தில்தான் சட்டபூர்வமாக தமிழ்நாடு எனப்பெயரிடப்பட்டது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றுரைத்த அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 இல் மறைந்தார். எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் தீபமும், அவரது உரைவீச்சும் மறக்க முடியாதவை.

அண்ணா சதுக்கம் மெரினா கடற்கரையின் வடக்குப் பக்கம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.

அம்பேத்கார் மணிமண்டபம்

கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடிய மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவாலயம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியாக போற்றப்பட்டவரின் இம்மணிமண்டபம் மந்தைவெளிப்பாக்கத்தில் கலையழகு மிளிர அமைந்துள்ளது. ஏப்ரல் 14, 1891 அன்று தோன்றி தன் ஆயுட்காலம் முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி டிசம்பர் 5, 1956 இல் மறைந்த அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இங்கு சித்திகரிக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மந்தைவெளி பாக்கம், சென்னை - 600 028. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.

பாரதியார் நினைவு இல்லம்

'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்ட பாரதி, இன்று தமிழுலகில் மகாகவிஞனாக போற்றப்பட்டு வருகிறார். பாரதி எதிர்கால தலைமுறைகளும் ஆராதிக்கக் கூடியவர். தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் உரைநடையில் தமிழ்க் கவிதையில் பாரதி செய்த புதுமைகள் இன்றும் அவரை நினைவில் வைத்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் பிறந்த பாரதி மிகக் குறைந்த வயதிற்குள் கவிதைகள் காவியங்கள் என எழுதிக் குவித்தவர். துயர்மிகு வாழ்விலும் இவரால் எழுதப்பட்ட கவிதைகளில் கவித்துவம் நுங்கும் நுரையுமாகப் பொங்கி வழிகிறது. 'வேடிக்கை மனிதரைப் போல் எனை நினைத்தாயோ! என்று கோபக்குரலில் கேட்ட பாரதியார், திருவல்லிக்கேணியில் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாகப் போற்றப்படுகிறது. இங்கு பாரதியார் காலத்தின் புகைப்படங்கள் கையெழுத்துப் பிரதிகள் நண்பர்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நினைவு இல்லத்தில் உள்ள அரங்கு பொது நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.

அமைவிடம்

83 டி.பி. கோயில் தெரு பார்த்தசாரதி கோயில் பின்புறம் திருவல்லிக்கேணி சென்னை - 600 005.

பக்தவத்சலம் நினைவகம்

தமிழக முதல்வர்களில் மறக்க முடியாதவராகக் கருதப்படுகிறவர் பக்தவத்சலம். எளிமையானவர். சிறந்த நிர்வாகியாக ஆட்சி புரிந்தவர். 2.10.1963 முதல் 6.3.1967 வரை முதல்வராக இருந்தார். இவரது நினைவிடம் கிண்டியில் இருக்கிறது. இவர் மறைந்தது. 13.2.1987.

காந்தி நினைவு மண்டபம்

காந்தி மண்டபம் அமைதியின் உறைவிடம். தமிழ்நாட்டிற்கு வந்தபோதுதான் அவர் தம் உடையை மாற்றிக்கொண்டார். அந்த மகாத்மாவின் நினைவை போற்றும் வகையில்அமைக்கப்பட்டிருக்கிறது இந்த மண்டபம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றை நடத்திய காந்தியடிகளின் 'தமிழ்க் கையெழுத்து'ப் பிரதி இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 'வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டியெல்லாம்' என்று காந்தியைப் பாடினார் மகாகவி பாரதி. அகிம்சைக்கு முதலும் கடைசியுமாக காந்திதான் ஞாபகத்திற்கு வருகிறார்.

அமைவிடம்

கிண்டி, அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22351941.

எம்.ஜி.ஆர். இல்லம்

ஒரு திரைப்படக் கதாநாயகனாக வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி தனிக் கட்சி கண்டவர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை பத்தாண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தவர். மத்திய அரசின் உயரிய கௌரவமான பாரத ரத்னா விருதால் எம்.ஜி.ஆர். கௌரவிக்கப்பட்டார். இவர் வாழ்ந்த இல்லம் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகப் போற்றப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

அமைவிடம்

27, ஆற்காடு தெரு, தியாகராய நகர், சென்னை - 17. அனுமதி இலவசம். செவ்வாய் விடுமுறை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

காமராஜர் நினைவகம்

பொதுவாழ்வில் எளிமை என்ற சொல்லிற்கு வாழ்ந்து காட்டி பொருள் கண்டவர் காமராஜர். அவர் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப்பயன்படுத்தாத கர்மவீரர். இவர் முதலமைச்சராகப் பணியாற்றிய 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. படிக்காத மேதை எனப் பலராலும் பாராட்டப்பட்ட காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். இலவசக் கல்வி, மதிய உணவு, கிராமங்களுக்கு மின்வசதி என இவர் காலத்தில் தமிழகம் தலைநிமிரத் தொடங்கியிருந்தது. தமிழகக் குழந்தைகளின் கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவு மண்டபம் கிண்டியில் அமைந்துள்ளது. இனிவரும் எல்லா தலைமுறைக்கும் அவரது எளிமை நினைவில் இருக்கும்.

அமைவிடம்

கிண்டி. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 24349040.

காமராஜர் நினைவு இல்லம்

காமராஜர் என்ற எளிய தலைவரின் வாழ்க்கையை அவர் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். தனது கடைசிக் காலம் வரை இந்த இல்லத்தில்தான் வாழ்ந்தார் அவர். பெருந்தலைவர் என பேரன்புடன் அழைக்கப்பட்ட காமராஜர் குமாரசாமி-சிவகாமி அம்மை தம்பதியின் மகனாக 15.7.1903 இல் விருதுநகரில் பிறந்தார். அந்த உயர்ந்த மனிதரின் எளிமைக்கு எல்லோருமே தலைவணங்க வேண்டியிருக்கும். ஒருமுறை அந்த இல்லத்தின் பக்கம் போய்த்தான் பாருங்களேன்.

அமைவிடம்

திருமலைப் பிள்ளை சாலை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம் எதிர்புறம், சென்னை - 600 017. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. தொலைபேசி - 24349040.

எம்.ஜி.ஆர். நினைவிடம்

கரங்கள் குவித்திருப்பது போலவும், தாமரை இதழ் விரிந்திருப்பது போலவும் காணப்படும் எம்.ஜி.ஆர். நினைவிடம் மேற்கத்திய பாணியிலான கட்டடக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் நவீன தோற்றம் பார்வையாளர்களை தினம் வசீகரித்துக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணா துயிலும் நினைவிடத்திற்கு அருகிலேயே இது அமைந்துள்ளது. அவர் 24 டிசம்பர் 1987 அன்று மறைந்தார்.

அமைவிடம்

சென்னை பல்கலைக்கழகம் எதிர்ப்புறம், சென்னை - 600 005. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.

பெரியார் நினைவிடம்

'தொண்டு செய்து பழுத்த பழம்'; தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும்'; மனக்குகையில் சிறுத்தை எழும் - பாரதிதாசனின் இந்த வரிகள் தந்தை பெரியாரைப் படம் பிடித்துக்காட்டுகிறது. தனது இறுதி மூச்சுவரை தமிழினம் விழித்தெழ பிரச்சாரம் செய்த பகுத்தறிவுப் பகலவன். இவரது கால்பட்ட இடத்தில் எல்லாம் மூடநம்பிக்கை மூச்சிழந்தது. எதற்கும், யாருக்கும் அஞ்சாத சிங்கமென முழங்கிய பெரியார், 17.9.1879 இல் வெங்கடப்ப நாயக்கர் - சின்னத்தாயி அம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழன உணர்வை தமிழர்களுக்கு அளித்த பெரியாரின் வாழ்க்கையே ஒரு பாடமாக விளங்குகிறது. வர்ணாசிரமத்தை வெட்டிச் சீவிய அறிவென்னும் வாள். சுயமரியாதை இயக்கம் கண்ட சுய சிந்தனையாளர். பதவியையும் அதிகாரத்தையும் புறக்கணித்து, தமிழன் தன்மானம் பெறுவதற்காகக் கடைசிவரை சமூகப் போராளியாகவே வாழ்ந்த பெரியார் 24.12.1973 அன்று இயற்கை எய்தினார். இவரது நினைவிடம் பெரியார் திடலில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இங்குள்ள எம்.ஆர்.ராதா மன்றம் பொது நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படுகிறது.

அமைவிடம்:- பெரியார் திடல், ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007. அனுமதி இலவசம். ஞாயிறு விடுமுறை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 26618163

ராஜாஜி நினைவகம்

ஒரே சாலையில் அருகருகே பல நினைவிடங்களைப் பார்த்து விடலாம். கிண்டி - அடையாறு பிரதான சாலையில்தான் ராஜாஜி நினைவகமும் இருக்கிறது. விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தார். அடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சிறந்த ராஜதந்திரி, மூதறிஞர் என்று புகழப்பட்டவர்.

அமைவிடம்:- கிண்டி, சென்னை - 600 032. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி - 22351941.

மொழிப்போர் தியாகிகள் மண்டபம்

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மொழிப்போருக்கு முக்கியமான பங்கு உண்டு. கட்டாய இந்தி எதிர்ப்பை எதிர்த்து பலரும் களத்தில் குதித்தனர். தமிழ் மொழிக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை நினைவுகூர்வதற்காக இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மொழியின் மீட்சிக்காக உயிர் தந்த தமிழ்ப் போராளிகளின் தியாகத்தை இங்கு வருபவர்கள் அறிவர். மொழிப்போர் தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள், திருச்சி சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிதம்பரம் ராஜேந்திரன், விராலிமலை சண்முகம், தாளமுத்து நடராசன்.

அமைவிடம்

காந்தி மண்டப வளாகம், கிண்டி, சென்னை - 32. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22351941.

இந்திய குடியரசின் 50 ஆண்டு நினைவுத் தூண்

கடற்கரைச் சாலையில் காலாற நடந்தபடியே வரலாற்றின் வழித் தடங்களைப் பார்த்து மனம் நிறைவு கொள்ளலாம். இந்தியா குடியரசாக மலர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டது இந்தப் பொன்விழா நினைவுத்தூண். இது 2001 ஜனவரி 25-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

அமைவிடம்:- மெரினா கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கம் அருகில், மயிலாப்பூர் சென்னை - 600 004.

காந்தி கண்ட கனவின் நினைவுச் சின்னம்

காந்தி கனவுகண்ட மாளிகை இப்போதில்லை. அதற்குப் பதிலாக ஒரு நினைவுச் சின்னம். அது என்ன கனவு? அது 1919 மார்ச் 18. அன்றுதான் ரவுலட் சட்டம் என்ற கொடுஞ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்றிரவு திலகர்பவன் இருந்த இந்த இடத்தில் தங்கியிருந்த மகாத்மா காந்தி விஷயத்தை அறிந்ததும் தூக்கமின்றி தவித்தார். இச்சம்பவம் பற்றி காந்தியே சொல்லியுள்ளார். "அன்றிரவு நான் தூக்கமும் விழிப்புமாகத் தவித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு யோசனை வெடித்தது. அதுவும் ஒரு கனவில் முழு நாட்டையும் ஒத்துழையாமையில் ஈடுபடும்படி அறைகூவல் விட வேண்டும். ஒட்டுமொத்த தேசமும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் அனைத்தும், இது ஒர் அற்புதமான அனுபவம்." காந்தியே பகிர்ந்து கொண்ட அந்தக் கனவு ஓர் ஏகாதிபத்தியத்தையே புரட்டிப் போட்ட கனவல்லவா?

அமைவிடம்:- சோழா ஹோட்டல் முன்பு, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, சென்னை - 600 004.

வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவுச் சின்னம்

'வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம்' ஆங்கிலேயர்களை கப்பலேற வைத்தது. இந்த இயக்கம் கண்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நினைவுச் சின்னம். இது 02.10.1993 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அமைவிடம்: காந்தி மண்டபம் அருகில், கிண்டி, சென்னை - 600 032.

கிண்டி சிறுவர் பூங்கா

நவீன தலைமுறையின் குழந்தைகள் சிட்டுக்குருவிகளைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பையும்கூட இழந்துவிட்டார்கள். பள்ளிப் பாடங்களில் நேரில் பார்த்து அறிவதைப் படம் பார்த்து அறிந்து கொள்கிறார்கள். மரங்களில், புல்வெளிகளில், நீர் நிலையில் வாழும் கழுகுகள், புறா, வாத்து, பலவண்ணக் கிளிகள், வான் கோழிகள் என பறவையினங்களை இங்கு பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காட்டுச் சூழலில் இன அழிவின் விளிம்பில் உள்ள புள்ளிமான், வெண்மான், புனுகுப் பூனை மற்றும் மீன் கொத்தி, குயில் போன்ற பறவையினங்கள் இங்கு பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன.

அமைவிடம்:- கிண்டி, சென்னை - 32. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.2. சிறுவர் ரூ.1. செவ்வாய் விடுமுறை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி - 22353623.

பாம்புப் பண்ணை

ஒற்றைப் பாம்பைக் கண்டால் ஊரே நடுங்கும் என்பார்கள். பாம்புப் படையைக் கண்டால் எப்படி? ரோம்லஸ் ஜிட்டேகர் என்ற வெளிநாட்டவரின் கனவுப் பண்ணையாக உருவானது இந்த பாம்புப் பண்ணை. மலைப்பாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என பஞ்சமில்லாமல் பல்வேறு இன பாம்புகள் கண்ணாடிக் கூண்டுகளில் நம்மை வரவேற்கும். இங்கு பார்வையாளர்கள் முன்னால் நல்ல பாம்பின் கொடிய நஞ்சை எடுப்பார்கள். பாம்புகளின் பண்புகளை விளக்குவார்கள். ஆமை, கடலாமை, முதலை போன்ற ஊர்வன வகைகளும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

அமைவிடம்:- கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அடுத்துள்ளது. செவ்வாய் விடுமுறை. கட்டணம் பொpயோர் ரூ.5 சிறுவர் ரூ.1. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30. தொலைபேசி - 22353623.

அரசு கவின் கலைக்கல்லூரி

கலைக்காக ஒரு கல்லூரி, ஆங்கிலேயர்களின் கலை மனம் தந்த கலைப்பள்ளி இது. ஆரம்பக் காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களுக்குத் தேவையான நாற்காலி, மேஜை போன்ற அலுவலகப் பயன்பாட்டிற்கான பொருட்களை கலையழகுடன் தயாரித்துக் கொண்டிருந்தது. இந்தப் பள்ளி, பிற்காலத்தில் தனி ஓவிய சிற்ப பாணியைத் தனக்கென உருவாக்கிக்கொண்டது. பசுமையான சூழலில் பழமை மாறாத கட்டடங்களுடன் கவின் கலையை மாணவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது. இந்தக் கல்லூரி வளாகமே ஒரு கலைப்படைப்பாக உருமாறி புதிய கலைஞர்களை செதுக்கித் தருகிறது. இது 1850 ஆம் ஆண்டு டாக்டர் அலெக்ஸாண்டர் ஹண்டர் என்பவரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றவர் சிற்பி ராய் சௌத்ரி. இந்தப் பொறுப்புக்கு வந்த முதல் இந்தியர் இவரே. அவரது காலத்தில் இந்தக் கல்லூரி தேசிய அளவில் புகழ்பெற்றது. சென்னையின் அடையாளமாக மாறிப் போய்விட்ட உழைப்பாளர் சிலையும் காந்தி சிலையும் ராய்சௌத்ரியின் கலை வண்ணத்தில் உருவானவை. சந்தானாராஜ், முனுசாமி, தனபால், அல்போன்சா, ஆதிமுலம், ஆர்.பி.பாஸ்கரன், தெட்சிணாமுர்த்தி, சந்ரு போன்ற தமிழகத்தின் பிரபல கலைஞர்கள் இக்கல்லூரியில் பயின்றவர்களே. இங்குதான் இந்தியாவிலேயே முதன் முதலாக புகைப்படக் கலை வகுப்பு தொடங்கப்பட்டது.

அமைவிடம்:- 31 தந்தை ஈ.வே.ரா. சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.

லலித்கலா அகாடெமி

ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற கவின் கலைகளை வளர்த்தெடுக்கும் மத்திய அரசு நிறுவனம். இதுவொரு தன்னாட்சி அமைப்பு. தொடங்கப்பட்ட ஆண்டு 1978. சமகாலக் கலையை வளர்ப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தருவதே இதன் உயரிய நோக்கம். காட்சிக் கூடம், கலைப்பட்டறை போன்ற பிரத்யேக வசதிகள் வளரும் கலைஞர்களுக்கு லலித்கலா அகாதெமி செய்து தரும். இங்கு கல், உலோகம், மரம், செப்புச் சிலைகள், ஓவியம் வரைகலை, கலப்பு ஊடகப் படைப்புகள் போன்றவையும் சேமிக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு வளரும் கலை அருங்காட்சியகம். இங்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுடைய படைப்புகளின் கண்காட்சி அவ்வப்போது நிகழும். இந்தக் கலைக் கோயிலுக்குள் நாம் சென்று வருவதே ஒரு தனி அனுபவமாக மாறும்.

அமைவிடம்:- ரீஜனல் சென்டர், 4 கிரிம்ஸ் சாலை, சென்னை - 600 006. நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள். தொலைபேசி - 28291692 - 28290804.

அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்

'பாந்தியன் காம்ப்ளக்ஸ்' என்றதும் உங்களுக்குப் புரியாது. பல்பொருள் அங்காடி என்றும் நினைத்து விடாதீர்கள். இதுவொரு பழம்பொருள் காட்சியகம். அருங்காட்சியகம் கி.பி. 1789 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆங்கில ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு எங்குமே பார்க்கக் கிடைக்காத கலைப்பொருட்களின் சங்கமம் இது. சமகாலப் பொருட்கள் முதல் வரலாற்றுக்கு முந்தைய கண்டு பிடிப்புகள் - கற்சிலைகள், வெண்கலச் சிலைகள், உயிரியில், இனவியல், புவியியல் சார்ந்த சான்றுகள் இங்கு இடம்பெற்றுள்ளன. ஆயிரம் நூல்களின் அறிவை இந்த அருங்காட்சியகம் ஒருமுறையில் உங்களுக்கு கற்றுத்தந்து விடும். உலகப் புகழ்ப்பெற்ற அமராவதி மென்கல் புடைப்புச் சிற்பங்கள் இங்குதான் உள்ளன. இந்தச் சிற்பத் தொகுப்பில் புத்த ஜாதகக் கதைகளின் முக்கியக் கட்டங்கள் சித்திரக் கதை பாணியில் செதுக்கப்பட்டுள்ளன. லண்டன் அருங்காட்சியகத்தில் இதன் மற்றொரு பகுதி உள்ளது.

அமைவிடம்:- 486, பாந்தியன் சாலை, சென்னை - 600 008. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள் நாட்டினர் - பெரியோர் ரூ.15, சிறுவர் ரூ.10. விடுமுறை வெள்ளிக்கிழமை தொலைபேசி - 28193238 - 28193778. தொலைநகல் - 28193035.

கோட்டை அருங்காட்சியகம்

புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் இருப்பது தெரியும். இங்குதான் அருங்காட்சியகமும் இருக்கிறது. வடக்குப் புறத்தில் அமையப்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை புதைந்திருக்கிறது. ஒரு காலத்தில் கோட்டையில் பணியாற்றும் அதிகாரிகளின் அலுவலகமாக இருந்தது. பிறகு அது ஒரு வங்கியாக மாறியது. இதுவே மெட்ராஸ் பேங்கின் முன்னோடி வங்கி. பின்னர் பம்பாய் மற்றும் பெங்கால் வங்கியுடன் இணைந்து இம்பீரியல் பேங்க் என்ற பெயர் சூடிக் கொண்டது. இப்போது அதன் பெயர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இதன் மாடியில் உள்ள நீண்ட அறை பொது மக்களுக்கான பட்டுவாடா அறையாக இருந்திருக்கிறது. பிறகு கி.பி. 1799 இல் மேற்கூரையில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். இவ்வாறான வளர்சிதை மாற்றங்களின் இறுதியாக, 1948 இல் அருங்காட்சியமாக அது தன்னை மாற்றிக் கொண்டது.

அப்படியென்ன அற்புதங்கள் இங்கு இருக்கின்றன? சென்னையை உருவாக்கிய மாபெரும் மனிதர்களின் அசல் கையெழுத்து ஆவணங்கள், பழங்கால நாணயங்கள், வெள்ளிச் சாமான்கள், சீருடைகள், மூலப்படிகள், செதுக்கு வேலைப்பாடுகள் மற்றும் ஆரம்பகாலச் சென்னையின் கச்சாத்துப் பொருட்கள் இப்படி இந்தக் காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் பொருட்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனைக்குப் பிறகும் இன்னும் புறப்படாமல் இருந்தால் எப்படி?

அமைவிடம்: புனித ஜார்ஜ் கோட்டை, காமராஜர் சாலை, சென்னை - 600 009. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை. வெள்ளிக்கிழமை விடுமுறை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள்நாட்டினர் ரூ.5.

தேசிய கலைக் கூடம்

ஒரு குட்டி நாடாளுமன்றக் கட்டடம் போலத் தோன்றும் இது இந்தோ - இஸ்லாமிய கட்டடக் கலையின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டடம் முழுவதும் மணற்கல்லால் கட்டப்பட்டது. தங்கக் கலசத்தினுள்ளே வெள்ளிப் புதையல்களா? இக்கட்டடமே ஒரு கலைப் புதையல்தான். 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுக் கால மொகலாய ஓவியங்கள், வெண்கலக் கலைப்பொருட்கள் மற்றும் 10 - 13 ஆம் நூற்றாண்டுகளின் கைவினைப் பொருட்களும் இங்குள்ளன. இக்கலைக் கூடத்தில் உள்ள பிரம்மா சிலை எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.

அமைவிடம்: 486, பாந்தியன் சாலை, சென்னை - 600 008. நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள்நாட்டினர் - பெரியோர் ரூ.15. சிறுவர் ரூ.10. கல்விச்சலுகை கட்டணம் ரூ.3 வெள்ளிக்கிழமை விடுமுறை. தொலைபேசி - 28193238 - 28193778. தொலைநகல் - 28193035.

கோவில்கள்

அஷ்டலட்சுமி கோயில்

அஷ்டலட்சுமிகளையும் தரிசனம் செய்ய சிறு சிறு வளைவு நெளிவுகளில் நுழைந்து வருவதே தெய்வீக அனுபவம். இக்கோயிலில் லட்சுமிதேவி எட்டு முகங்களாலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வரும் நவராத்திரி 9 நாள் விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பானது. இந்தக் கோயிலுக்குத் எல்லாத் திசைகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

அமைவிடம்: எலியட்ஸ் கடற்கரை. சென்னை - 600 090. நேரம் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி - 24911763.

ஐயப்பன் கோயில் (மகாலிங்கபுரம்)

ஐயப்பனை தரிசிக்க கேரளத்திற்குச் செல்லாமல் சென்னையிலும் தரிசித்துக் கொள்ளலாம். அதற்கொரு வாய்ப்பு இக்கோயில் சென்னையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஐயப்பன் கோயில்.

அமைவிடம்: 18, மாதவன் நாயர் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. நேரம்: காலை 4 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி - 28171197.

காளி - பாரிகோயில்

காளி வீடு இது. காளி பாரி என்ற வங்காளச் சொல்லின் பொருள் காளி வீடு என்பதுதான். கொல்கத்தாவில் உள்ள தக் ஷனேஸ்வரர் காளி கோயிலின் சாயலில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைதியான தியான மண்டபம் உள்ளது. அவ்வப்போது பஜனைகளும் ஆன்மிக சொற்பொழிவுகளும் நிகழும். நவராத்திரி துர்க்கை பூசை மற்றும் காளி பூசை தினங்கள் வெகு சிறப்பானவை.

அமைவிடம்: 32, உமாபதி தெரு, சென்னை - 600 033. நேரம்: காலை 6-12 மணி மாலை 4-9 மணி வரை தொலைபேசி - 24837170.

ஐயப்பன் கோயில் (இராஜா அண்ணாமலைபுரம்)

இது இரண்டாவது ஐயப்பன் கோயில். சபரி மலையில் கோயில் கொண்ட கடவுள் இங்கும் எழுந்தருளியுள்ளார். மூலக் கோயில் போலவே இங்கும் 18 படிகள் உள்ளன. சிறப்புப் பூஜைகள் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும்.

அமைவிடம்: இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28. நேரம்: காலை 6-11 மணி வரை மாலை 5.30-9 மணி வரை. தொலைபேசி - 26490013.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க மையம்

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் உலகம் முழுதும் பலரை ஹரே ராமா சொல்ல வைத்திருக்கிறது. சுவாமி பக்தி வேதாந்த பிரபு பாதா என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம். இங்கு வழிபாடு முடிந்த கையோடு வயிற்றுக்கும் ஈயப்படும்.

அமைவிடம்: 32 பர்கிட் சாலை, தி.நகர், சென்னை - 600 017. நேரம்: காலை 4.30-1.00 மணி வரை மாலை 4-8 மணி வரை.

கபாலீஸ்வரர் கோயில்

அகண்ட திருக்குளம், எதிரே ஆதிசிவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில். நான்கு மாட வீதிகள். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருத்தலம். அன்னை பார்வதி மயில் உருவில் வந்து எம்பெருமானை வழிபட்டதால் இந்தப் புனிதத் தலம் திருமயிலை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பத்து நாட்கள் நடக்கும் திருவிழா. மிகவும் முக்கியமானது. பத்தாம் நாள் நடக்கும் அறுபத்து மூவர் திருவிழா இக்கோயிலின் தனிச் சிறப்பு.

அமைவிடம் - மயிலாப்பூர், சென்னை - 600 004. நேரம் காலை 6-1 மணி வரை மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 24641670.

காளிகாம்பாள் கோயில்

வர்த்தக நெரிசல் மிகுந்த பாரிமுனையில் தெய்வீக வெளிச்சம் தரும் ஆலயம். இங்கு நிகழும் வழிபாடு புதுமையின் வடிவம் பக்தர்களை அமைதியாக அமரவைத்து அபிஷேகம் செய்து முடிந்ததும் தேங்காய் பழங்களை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இங்கு கோயில் கொண்டுள்ளாள் பராசக்தியின் மற்றொரு திருவுருவான உக்கிர சொரூப காளி. இன்னொரு சுவாரஸ்யமான செய்தி மராட்டிய வீரன் சத்ரபதி சிவாஜி 3.10.1677 அன்று இக்கோயிலில் வழிபட்டதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

அமைவிடம்: 212, தம்பு செட்டி தெரு, சென்னை - 600 001. நேரம்: காலை 6.30-12 மணி வரை மாலை 5-9 மணி வரை. தொலைபேசி - 25229624.

பாம்பன் சுவாமிகள் கோயில்

சித்தர்களைத் தேடி மலைக்காடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. இங்கேயும் ஒரு சித்தர் முக்தியடைந்துள்ளார். இராமேஸ்வரம் அருகே பாம்பனில் 1850 ஆம் ஆண்டு அவதரித்த பாம்பன் சுவாமிகள் 1922இல் முக்தியடைந்தார். மயூரபுரத்தில் அவரது சமாதி மற்றும் கோயிலாக இது விளங்குகிறது.

அமைவிடம் - மயூரபுரம், திருவான்மியூர், சென்னை - 41. நேரம் காலை 6-1 மாலை 3-8 மணி வரை. தொலைபேசி - 24521866.

மத்திய கைலாஷ்

அடையாறில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் சாலை முகத்துவாரத்தில் அமைந்திருக்கிறது மத்திய கைலாஷ். வெண்பளிங்குக் கற்களில் உருவாக்கப்பட்ட அமைதி தவழும் ஆன்மிக அடையாளம் இது. வலப்புறத்தின் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். தந்தை பரமேஸ்வரன், அம்மை உமையவள், ஆதித்யன் மற்றும் திருமால் ஆகியோர் எழுந்தருளியுள்ளார்கள். இங்கு அனுமனுக்கும் பைரவனுக்கும் சன்னதிகள் தனியே உள்ளன. மரங்களின் பசுமையில் பக்தி தழைக்கிறது.

அமைவிடம்: சர்தார் பட்டேல் சாலை, அடையாறு, சென்னை - 600 020. நேரம்: காலை 5.30-12 மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 22350859.

மருந்தீஸ்வரர் திருக்கோயில்

மருந்தே சிவம்; சிவமே மருந்து. இத்திருத்தலத்தில் உள்ள முக்கண்ணனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு மூலிகைத் தோட்டம் ஒன்றும் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் நமது கலாச்சாரம் கட்டடக்கலை ஆகியவற்றின் சாட்சியாக நிற்கிறது. இத்திருத்தலத்திற்குக் இராம காவியம் படைத்த வால்மீகி வந்ததாக கர்ண பரம்பரை செய்தி உண்டு. அதன் காரணமாக இப்பகுதி திருவான்மியூர் என்றழைக்கப்படுகிறது.

அமைவிடம்: திருவான்மியூர், சென்னை - 600 041. நேரம்: காலை 6-1 மாலை 4-8.30 மணி வரை. தொலைபேசி 24410477.

பார்த்தசாரதி சுவாமி கோயில்

மெரினா கடற்கரைக்கு மிக அருகில் ஒரு வைணவ திருத்தலம். புராதனம் படிந்த கோயில் வளாகம். எழில் நிறை சிற்பங்களின் காட்சிக்கூடமாக அருள்தரும். உயர்ந்த கோபுரங்களும் பரந்து விரிந்த பிரகாரங்களும் பக்த மனங்களுக்கு ஆறுதல் தரும் அம்சங்கள். இக்கோயில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுவதால் இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து தினசரி தரிசிக்கிறார்கள். குருசேத்திரப் போரில் பார்த்தனுக்குத் தேரோட்டினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இந்தக் கோலத்தில் அவர் பகன்ற போர்க்கள வேதமான கீதை. இந்தியாவின் உலகப் பங்களிப்பு. பகவானின் இத்திருக்கோலத்தில் இக்கோயிலின் மூர்த்தி எழுந்தருளியுள்ளார். திருவருள் பெற திருவல்லிக்கேணிக்குச் செல்லுங்கள்.

அமைவிடம்: திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. நேரம்: காலை 6.30-1 மாலை 3-8 மணி வரை. தொலைபேசி - 28442462.

வடபழனி ஆண்டவர் கோயில்

ஒரு நூற்றாண்டைக் கடந்த முருகன் கோயில். அழகில், அதன் பரிமாணத்தில் பெரும் புகழ்பெற்ற தெய்வீக ஆலயம். தூய்மையும், பக்தியும் தவழும் திருக்கோயிலான இது. பழனி மலை முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு திருக்குளமும் உண்டு. வருடந்தோறும் நிகழும் தெப்பத் திருவிழா பிரபலம். வாரம் தவறாமல் சென்னை வாசிகள் சென்றுவரும் தலங்களில் வடபழனி ஆண்டவர் கோயிலும் ஒன்று.

அமைவிடம்: வடபழனி, சென்னை - 600 026. நேரம்: காலை 6-1 மாலை 3-8.30 மணி வரை. தொலைபேசி - 24836903.

சாய்பாபா கோயில்

ஸ்ரீ சாய்பாபா, சமத்துவம் பெற்றெடுத்த குழந்தை. அவர் ஓர் இந்துவாகப் பிறந்து, இஸ்லாமிய அன்பர் ஒருவரால் வளர்க்கப்பட்டவர். இறுதியில் சூஃபி மார்க்கத்தில் தனித்துவம் மிக்கவராக மலர்ந்தார். சித்து விளையாட்டுகளில் சிகரம் தொட்டவராகக் கருதப்படுகிறார். அனைத்திந்திய சாய்பாபா சமாஜம் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில் ஸ்ரீ சாய்பாபா நினைவாகக் கட்டப்பட்டது. ஞாயிறன்று நடைபெறும் அக்னி பூசை வழிபடத்தக்கது. இந்த ஆன்மிக குருவின் நினைவிடத்திற்குச் சென்று வழிபடுவதும் இறையருளின் அருட்கொடையே.

அமைவிடம்: அனைத்து இந்தியா சாய் சமாஜம், 15, வெங்கடேச அக்ரஹார சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. நேரம்: காலை 5-12 மாலை 4-9 மணி வரை. தொலைபேசி - 24640784.

திருமலை - திருப்பதி தேவஸ்தானம், சென்னை

திருப்பதி ஏழுமலை வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கான தகவல் மையம். இங்கு திருப்பதி குறித்த அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். ஏழுமலையானின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு தினசரி வழிபாடும் நடந்து வருகிறது. திருப்பதி கூட்டத்தை இங்கும் தினம் பார்க்கலாம். இங்குள்ள தகவல் மையம் சனி ஞாயிறு நாட்களிலும் இயங்கும். செவ்வாய் தேசிய விடுமுறை நாட்கள் மற்றும் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமைகள் விடுமுறை.

அமைவிடம்: 50, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017. நேரம்: காலை 9-1 மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 24343535.

ராமகிருஷ்ணா கோயில்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் சமரச சன்மார்க்கத்தின் குறியீடு. அவரது நினைவைப் போற்றும் இந்த சர்வமதக் கோயில் தென்னிந்திய கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேரமைதி ததும்பும் இத்திருக்கோயிலில் தியானம் தவறாமல் நிகழ்கிறது. இங்கே பகவான் ராமகிருஷ்ணர் 7 அடி உயரச் சிலையாக தாமரை மலரின் நடுவில் வீற்றிருக்கிறார். அனைத்து மதத்தினரும் இக்கோயிலுக்குச் சென்று வரலாம்.

அமைவிடம்: மயிலாப்பூர், சென்னை - 600 004. நேரம்: காலை 5-1.30 மாலை 3.30-8.30 மணி வரை. தொலைபேசி - 24941959.

ஸ்ரீநாராயண குரு

கேரள மண்ணில் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காகப் போராடிய பெரியார் நாராயண குரு. சமூக சீர்திருத்தவாதி. பொதுநலன் குறித்த அக்கறையில் வாழ்ந்த மகான். இந்தப் பெருந்தலைவரை சிறப்பிக்கும் நினைவாலயம் வேப்பேரி நாராயண குரு சாலையில் அமைந்துள்ளது.

திருவள்ளுவர் கோயில்

வான்புகழ் கொண்ட வள்ளுவரை இங்கு இறையருளின் வடிவமாகப் பார்க்கலாம். எக்காலத்திற்கும் பொருந்தும் உலகப் பொதுமறை திருக்குறள். திருவள்ளுவர் ஒரு புலவர் என்ற போதிலும் மக்களில் அவர் கடவுளாக வழிபடப்படுகிறார். நானூறு வருடங்களுக்கு முன்பு வள்ளுவப் பெருந்தகையின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவாலயம். அறிவுலகை வியக்க வைத்த மாமுனிவனின் ஞானத்திருக்கோயில். வள்ளுவம் படியுங்கள் வள்ளுவரை வணங்குங்கள்.

அமைவிடம்: திருவள்ளுவர் கோயில், மயிலாப்பூர், சென்னை - 4.

தேவாலயங்கள்

ஆண்டர்சன் தேவாலயம்

ஐரோப்பிய பாணியிலான கூரிய தேவாலய கோபுரம் மேற்கத்திய கலை அழகியலின் வடிவம். ஆங்கிலேயர்கள் ஆண்ட சுவடுகள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மிச்சம் இருக்கின்றன. சென்னைக்கு வந்த ஸ்காட்லாந்து இறைப் பணியாளர்களில் ஒருவர் ஆண்டர்சன். கி.பி. 1835 இல் ஜான் ஆண்டர்சன் பொதுப்பள்ளியைத் தொடங்கினார். பிறகு இது மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் பள்ளி என்று பெயர் மாற்றம் பெற்று சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மாற்றப்பட்டது. கல்வித் துறைக்கு அரும்பெரும் பணிகள் செய்த ஆண்டர்சனின் பெயரை இந்தத் தேவாலயம் நினைவூட்டி வருகிறது. இந்தத் தேவாலத்தின் அழகுமிகு கட்டடத்தில்தான் சென்னை கிறிஸ்தவ கல்லூரி முன்பு இருந்தது. இந்த கல்லிமானின் ஆன்மாவில் கொழுந்துவிட்ட கல்விச்சுடர் இன்னும் அணையாமல் எரிந்து வருகிறது.

ஆன்ட்ரூ தேவாலயம்

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திலிருந்து பார்த்தால் விண்ணை முட்டும் தேவாலயத்தின் கூம்பு வடிவ கோபுரம் தெரியும். பழமையின் வேர்களில் இறுகப் பற்றி நிற்கும். இது ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த தேவாலயமாகக் கருதப்பட்டது. "ஜார்ஜிய கட்டடக் கலையின் மிகச் சிறந்த ஒன்றாக இந்தத் தேவாலயம் விளங்குகிறது" என்று எழுதியுள்ளார் பிரபல வரலாற்றாசிரியர் எஸ்.முத்தையா. சென்னையின் அதி உன்னத ஆலயம் என்று குறிப்பிடுகிறார். டபிள்யூ டி.மன்ரோ. இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமான இதன் அசல் பெயரே (ஆண்ட்ரூஸ் கிரிக்) ஸ்காட்லாந்துடன் இருந்த தொடர்பை வெளிப்படுத்துகிறது. சென்னை ராஜதானிக்கு 1815 ஆம் ஆண்டு ஓரு ஸ்காட்லாந்துக்காரர் அமைச்சராகவே நியமிக்கப்பட்டுள்ளார். அப்போதைய கால கட்டத்தில் நிறைய ஸ்காட்லாந்துக்காரார்கள் சென்னையில் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்காக பிரத்யேகமாக இந்தத் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.

அமைவிடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர் ரயில் நிலையம் பின்புறம், சென்னை - 600 008. தொலைபேசி - 28611236 - 25612608.

செவன்த்டே அட்வென்டிஸ்ட் தேவாலயம்

பலமுறை நம் கண்ணில் தட்டுப்படுகிற பெயர் இது. அதென்ன செவன்த்டே அட்வென்டிஸ்ட்? ஒர் அனைத்துலக கிறிஸ்தவ அமைப்பு. இதனுடைய இறைப்பணி என்பது சி.எஸ்.ஐ. மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளின் பணிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இத்தேவாலயத்தில் சனிக்கிழமை தோறும் பிரார்த்தனை நடப்பதால் இது 7 ஆம் நாள் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது.

அமைவிடம்: ரித்தர்டன் சாலை, வேப்பேரி, சென்னை - 7. தொலைபேசி - 26412618.

கிறிஸ்து தேவாலயம்

பழம்பெரும் வரலாற்றின் காலடித் தடங்களை அறிந்து மகிழ செல்ல வேண்டிய இடம் கிறிஸ்து தேவாலயம். ஏழை எளிய மக்கள் பிரார்த்தனை செய்வதற்காக 1842 இல் ரெவரண்ட் ஹென்றி டெய்லர் என்பவரால் தொடங்கப்பட்ட ஆலயம் இது. இறையருள் என்பதோடு நின்றுவிடாமல கல்வியையும் அள்ளித் தந்தது. 1843 ஆம் ஆண்டு ஆர்ச் டெகான் ஹெர்பர் இந்த ஆலய வளாகத்திற்குள் இரண்டு கல்வி ஆலயங்களையும் திறந்தார். இந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற்று கிரைஸ்ட் சர்ச் பள்ளிகள் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டன.

அமைவிடம்: அண்ணா சாலை, காஸ்மோபாலிடன் கிளப் அருகில், சென்னை -600 002. தொலைபேசி - 28549780.

சாந்தோம் கதீட்ரல் தேவாலயம்

மணல் மேவிய சாந்தோம் கடற்கரைக்கு அருகில் வெண்புறா கூட்டத்தைப்போல பார்வையின் திசையெங்கும் அமைதியின் அழகை வீசிக்கொண்டிருக்கிறது கதீட்ரல் சர்ச் தேவாலயம் இறைப்பணிக்காகப் புனிதர் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களில் புனித தாமஸ் என்ற தோமையரும் ஒருவர். இயேசுவின் அருளுரைகளை ஏந்திக் கொண்டு தோமையர் இந்தியா வந்தபோது இயேசு பெருமான் மறைந்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது. அவர் முதலில் காலடி எடுத்து வைத்தது கோவாவின் திரேங்கனூர் துறைமுகத்தில், அந்தப் பகுதியில் ஏழு இடங்களில் தேவாலயங்களை ஏற்படுத்தி மக்களை கிறிஸ்தவ மயப்படுத்தினார்.

தோமையார் கேரளத்தைவிட்டு தமிழகத்துக்கு வந்தது எங்கே? மயிலாப்பூர். இங்கு தனது தன்னலமற்ற இறைப்பணிகளைத் தொடர்ந்தார். அவரது பேச்சால், பணியால் வசீகரிக்கப்பட்டு பொதுமக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறினார்கள். இதைப்பார்த்து வெகுண்டெழுந்த மன்னன் ராஜாமகாதேவன் அவரைப் படுகொலை செய்ய ஆட்களை ஏவினான். சின்னமலை குகையில் தலைமறைவாக இருந்து வந்த தோமையர் இறுதியில் செயிண்ட் தாமஸ் மலையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். இந்தப் புனிதரின் உடல் மயிலாப்பூர் கடற்கரையில் கி.பி. 72 ஆம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. காலமாற்றங்களில் இந்தத் தேவாலயம் பெருகி வளர்ந்து தியாகத்தின் சின்னமாக பெரும் புகழுடன் உயர்ந்து நிற்கிறது. உலகளவில் இயேசுவின் சீடர்கள் இருவருக்கு மட்டும்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒன்று ரோம் நகரில் உள்ள புனித பேதுரு தேவாலயம். இரண்டாவது புனித தோமையருக்கான சாந்தோம் தேவாலயம். நீங்கள் வணங்கப்போகும் ஆலயத்தின் வரலாறையும் தெரிந்து கொள்வது நல்லதுதானே! இந்த கதீட்ரல் தேவாலயம் தேசிய புனிதத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்: 24,சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி - 24985455

சின்னமலை தேவாலயம்

இமயமலைக்குப் பிறகு போகலாம். முதலில் இந்தச் சின்னமலைக்கு போக வேண்டும். இங்குதான் இயேசுவின் நேரடி சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் இறைப்பணி ஆற்றினார். இவரை கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்தக் குகையின் பின்புற வழியாக செயின்ட் தாமஸ் தப்பித்துவிட்டார். இவருடைய காலடித்தடம் குகையின் பின்புறத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இங்கு புனித நீரூற்றும் ஒன்றுள்ளது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் வட்ட வடிவிலான தேவாலயம் சின்னமலையில் கட்டப்பட்டது.

அமைவிடம்:- சின்னமலை, சைதை பாலம் அருகில், சைதாப்பேட்டை, சென்னை - 600 018.

புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம்

மரங்களடர்ந்த சோலைக்குள் பெரும் சிலுவை நிற்பதுபோலக் காட்சிதரும் இந்தத் தேவாலயம் பழம் பெருமைமிக்கது. 1815 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தேவாலயத்திற்கு இறையியல் வகையில் மற்றொரு பெயரும் உண்டு. வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தன்மைமிக்க மனிதர்களை இது நினைவூட்டுகிறது. திராவிட மொழி ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் இறையியலாளர்கள் ஹெபர் டாக்டர் கோரி சென்னைக்கு பட்டுத் தயாரிப்பை அறிமுகப்படுத்திய ஆண்டர்சன், வில்லியம் பாரி, ஜான் பின்னி போன்ற பெருமகன்களை நினைவுபடுத்துகிறது. இந்தத் தேவாலயத்தை ஒட்டியுள்ள கல்லறை வளாகத்தில் பழங்கால கிட்டிங் துப்பாக்கிகள், கூர்முனைக் கத்திகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. கி.பி. 1799 இல் ஆங்கிலேயர்கள் ஸ்ரீரங்கத்தை வெற்றிகொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இவை.

அமைவிடம்: 224, கதீட்ரல் சாலை, சென்னை - 600 086. தொலைபேசி - 28112740 - 28112741.

புனித மேரி தேவாலயம்

இந்தத் தேவாலயத்திற்கும் வரலாறு இருக்கிறது. இந்தியாவின் முதல் ஆங்கிலிகன் தேவாலயம் இது. சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநராக இருந்தவர் எலிகு ஏலின். அவருக்கு இந்த தேவாலயத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. இவர்தான் யேல் பல்கலைக்கழகத்தை நிறுவியவர். புகழ்பெற்ற ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் திருமண முறைமையும் இங்குதான் நடந்துள்ளது. கி.பி. 1680 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் இந்தியாவின் மிகப் பழமையான கல்லறைக் கல் இருக்கிறது. புனிதம் படர்ந்த இந்தத் தேவாலயத்தின் கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கிறதல்லவா! இது புனித ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கிறது.

அமைவிடம்: புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், இராஜாஜி சாலை, சென்னை - 600 009.

வேளாங்கன்னி தேவாலயம்

அலைகள் தாலாட்டும் எலியட்ஸ் கடற்கரையில் தெய்வீகக் காற்றை வீசுகிறது, அன்னை வேளாங்கன்னி தேவாலயம் நாகை மாவட்டத்தின் வேளாங்கன்னி ஆலயத்துடன் ஒப்பிட்டால் இது மிகச் சிறியதுதான். தன் அளவில்லா அருட் சக்தியால் மக்களை ஈர்க்கிறது. மெழுகுத் திரிகளில் ஒளிவீசும் சுடர்கள் அருள் வேண்டுவோரின் வாழ்வில் மகிழ்வை அள்ளித் தருகின்றன.

அமைவிடம்: பெசன்ட் நகர், சென்னை - 600 090. தொலைபேசி - 24911246.

மசூதிகள்

மக்கா மசூதி

மெக்காவை ஞாபகப்படுத்தும் இரண்டு பக்கங்களிலும் நெடிதுயர்ந்த ஸ்தூபிகள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தொழுகை செய்யக்கூடிய மக்கா மசூதி இஸ்லாமியர்களின் வணக்கத்துக்குரிய இடம் சென்னை மாநகரிலுள்ள முக்கியமான மசூதி இது.

அமைவிடம்: பாபா அசரத் சையத் மூசா ஹத்தரி தர்கா, 822, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மாமூர் மசூதி

பழமையின் வேர்களில் எழுந்து நிற்கிற மசூதி. கடந்த 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கல் கட்டடமாக மாற்றப்பட்டது. சென்னை மண்ணடியில் வாழும் முஸ்லிம்களின் தொழுகை மசூதி. சுற்றுச்சுவரும் இரட்டைத் தூண் ஆதாரமும் சமீபத்திய கட்டடச் சிறப்பு. ஒரே சமயத்தில் 5000 பேர் தொழுகை செய்யக் கூடிய பரப்பளவை பெற்றது.

அமைவிடம்: அங்கப்ப நாயக்கன் தெரு, முத்தியால்பேட்டை, சென்னை - 600 001.

பெரிய மசூதி

டெல்லியில் ஜும்மா மசூதியைப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் இம்மசூதி ஆச்சரியம் தரும். அதைவிட இது பெரியதாகக் கருதப்படுகிறது. தற்போதைய ஆற்காடு இளவரசரின் பாட்டனார் நவாப் வாலாஜா முகமது அலி சிவப்புக் கல்லில் இந்த அற்புதமான மசூதியைக் கட்டினார். இது பார்க்க வேண்டிய இடம்.

அமைவிடம்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

ஆயிரம் விளக்கு மசூதி

பல் குவி மாடங்கள், இளம் தந்த றிறத்தில் சமீபத்தில் வரையப்பட்ட புனித திருக்குர்ஆன் வாசகங்களுடன் வெகுநேர்த்தியாக கட்டப்பட்ட மசூதி இது. இஸ்லாமியர்கள் வணங்குதற்குரிய புனித தலம். இதற்கு மூலமான மசூதியை கி.பி. 1800 இல் நவாப் உம்டட்-உல்-உம்ரா அவர்கள் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்காக உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்: ஆயிரம் விளக்கு, சர்ச்பார்க் கான்வென்ட் எதிரில், சென்னை - 600 006. தொலைபேசி - 28518195.

புத்த விஹார்

புத்தம் சரணம் கச்சாமி, உருவ வழிபாட்டை எதிர்த்தவரையே இறை வடிவமாக்கிவிட்டார்கள். இந்திய ஆன்மிகச் செல்வங்களில் புத்தருக்கு முதன்மை இடம் உண்டு. புத்த மதம் உலகமெல்லாம் பரவிக் கிடக்கிறது. சென்னையில் உள்ள ஒரே ஒரு புத்த விஹார் இதுதான்.

அமைவிடம்: கென்னத் சந்து, எழும்பூர் இரயில் நிலையம் எதிரில், சென்னை - 600 008. தொலைபேசி - 28192458.

குருத்வாரா

சென்னைவாழ் சீக்கியர்களின் புனிதக் கோயில். சீக்கிய குருக்களின் தலைமைக் குரு குருகோவிந்த் சிங். இவர் கடவுளை அடைய இயற்கையான அமைதியான வழிகளை வழங்கினார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புனிதத்தலம். தமிழகம் வந்துவிட்ட சீக்கியர்கள் பொற்கோவிலை இங்கே தரிசித்துக் கொள்கிறார்கள்.

அமைவிடம்: ஜி.என். செட்டி சாலை, தி.நகர், சென்னை - 600 017. தொலைபேசி - 28268509.

தர்கா

அண்ணாசாலை தர்கா

இஸ்லாமியப் பெரியவர்கள் மறைந்த இடம் தர்காவாக வணங்கப்படுகிறது. அண்ணா சாலையில் இந்தத் தர்கா ஆராதனைக்குரிய அடையாளம். சுமார் 450 வருடங்களுக்கு முன்னால் போய் வாருங்கள். அப்போது வாழ்ந்த இஸ்லாமியத் துறவி பாபா ஹஸ்ரத் சையத்மூசா. அவர் உலகச் சகோதரத்துவத்தைப் போதித்தார். இறுதியில் அவர் சமாதி அடைந்த இடத்தில்தான் இந்தத் தர்கா அனைத்து மதத்தினருக்கும் அருள் வழங்கி வருகிறது.

அமைவிடம்: அண்ணாசாலை, தலைமை தபால் நிலையம் அருகில், சென்னை - 600 002.

ஹசரத் பாபா தர்கா

முந்நூறு ஆண்டுகள் பழமையானது இந்தத் தர்கா. இஸ்லாமிய ஞானியான ஹஸ்ரத் தஸ்தகீர் சாகிப் பாபா தனக்கு ஏற்படப் போகும் மரணத்தை முன்கூட்டியே அறிந்தவர். தனக்கு எந்த இமாமின் கீழும் ஜனாசா என்ற ஈமச்சடங்குப் பிரார்த்தனைகள் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டாராம். இப்படி அருளிய அவர் தன்னுடைய ஈமச்சடங்கு நடந்த பிறகு தானே தோன்றி பின் மறைந்தாராம்.

அமைவிடம் - 83 டாக்டர் நடேசன் சாலை,சென்னை - 600 005. தொலைபேசி - 28521077.

கத்ரி பாபா தர்கா

ஒரு பழமையான மரத்தின்கீழ் நிழலடியில் அமைந்துள்ள இந்தத் தர்கா அனைத்து மதத்தினராலும் வணங்கப்படுகிறது. இதை மக்கள் கத்ரி பாபா தர்கா என்று அழைக்கிறார்கள். சையத் பாபா கத்ரி சா கி.பி. 1793 ஹசரஸ்ப்பானி பாபா சா கத்ரி கி.பி. 1793 கல்வெட்டில் இப்படித் தான் எழுதப்பட்டுள்ளது.

அமைவிடம்: தமிழ்நாடு பாரத ஸ்கவுட்ஸ் வளாகம், வின்கோக் பார்க், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. தொலைபேசி - 28512947

முகமது இஸ்மாயில் சாகிப் தர்கா

கண்ணியமிக்க காயிதெ மில்லத் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர் முகம்மது இஸ்மாயில் சாகிப். இவர் திருநெல்வேலி பேட்டையில் ஜுன் 5, 1896 ஆம் ஆண்டு பிறந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். சிறந்த பாராளுமன்றவாதி என்று பெயரெடுத்தவர். 1972 ஏப்ரல் 5 அன்று வானுலகை அடைந்தார். இந்த மக்கள் தலைவர்.

அமைவிடம்: திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை - 600 005.

தமீம் அன்சாரி பாபா தர்கா

இதுவொரு சுவாரசியமான பின்னணி. உங்களை காலத்தின் பின்னுக்குத் தள்ளும் ஒரு புனிதரின் கதை. தமீம் அன்சாரி பாபா புனித மதினாவில் பிறந்தார். இறைவனடி சேர்ந்ததும் இவரது திருவுடல் ஒரு புனிதப் பேழையில் வைத்து கடலில் விடப்பட்டதாம். இந்தப்பேழை சென்னை கோவளம் கடற்கரையில் தங்கியிருக்கிறது. அந்தப் புனிதர் உடல் தங்கிய இடத்தில் தர்கா எழுந்தது. இங்கு மாதத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் வியாழக்கிழமை, வழிபாட்டிற்கான புனித நாள். இந்த நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அமைவிடம்: கோவளம் கடற்கரை, நேரம்: காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை.

மோதி பாபா தர்கா

இந்த பாபாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவரது முழுப்பெயர் ஞானி காஜா குதுப் சையத் குலாம் தஸ்தகீர் மோதி பாபா. மோதிபாபா ஒமனில் இருந்து நாகப்பட்டினம் வந்ததாகவும் பிறகு சென்னையில் வாழ்ந்து மறைந்ததாகவும் ஒரு பாடல் சொல்கிறது. இறைவனடி சேர்ந்த ஆண்டு 1959. இந்த மாமனிதர் மனித குல மேம்பாட்டுக்காக தன்னாலான அனைத்தையும் செய்த புனிதர்.

அமைவிடம்: 422, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8.

மகான் சாந்திநாத் சமணக் கோயில்

மகாவீர் புத்தருக்கு இணையாகக் கருதப்படும் அகிம்சாவாதி சமணத்தைத் தோற்றுவித்த மகான் சமணர்கள் அல்லது ஜைனர்களின் தீர்க்கதரிசிகளை தீர்த்தங்கரர்கள் என்று சொல்வது மரபு. இந்த மரபில் வந்த 18 ஆவது தீர்த்தங்கரர்தான் மகான் சாந்திநாத். 24-வது தீர்த்தங்கரன் புனித மகாவீரர் ஆவார். சமண மதத்திற்கான புனிதக் கொள்கைகளையும் வகுத்து அருளினார். சமண மதத்தின் இலச்சினை ஸ்வஸ்திக்.

அமைவிடம்: ஜி.என். செட்டி சாலை, தி.நகர், சென்னை - 600 017. தொலைபேசி - 28151779.

ஜெயின் மந்திர்

ஜெயின் குரு மந்திர்

பளிங்குக் கற்களில் பளபளக்கும் கோயில்கள் ஜைனர்களுக்குச் சொந்தமானவை. சென்னையில் உள்ள ஜைனர்களின் கோயில்கள் பெரும்பாலும் பளிங்குக் கற்களால் கட்டப்படுபவை. இக்கோயிலின் கட்டடக் கலை பலரை ஈர்க்கும் உன்னதம்.

அமைவிடம்: லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. தொலைபேசி - 24925574.

ஸ்ரீவிஜயசாந்தி ஸ்ரீசுவாமிஜி குரு மந்திர்

சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள ஜைனர்களின் வழிபாட்டுத்தலம் மகாவீரரின் புனிதக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும் இத்திருக்கோயிலை கட்டியுள்ளார்கள். வெண்மை நிறத்தில் உள்ளங்கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அமைவிடம்: 68, அருணாசலம் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, கூவம் பாலம் அருகில், சென்னை - 600 002. தொலைபேசி - 28551032.

ஸ்ரீஜெயின் பிரார்த்தனா மந்திர்

சென்னையில் ஒரு மவுண்ட் அபு. ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள ஜைனக் கோயிலைப் போலவே கட்டடக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட கலைக்கோயில் தென்னிந்தியாவின் தலைசிறந்த பளிங்குக் கலைக் கோயில் என்ற புகழுக்குரியது. இதற்கு கதேம்பரர் கோயில் என்ற மற்றொரு பெயம் உண்டு. அற்புத வேலைப்பாடுகளுடன் இரண்டு அடுக்குகள் கொண்டது இது. இக்கோயில் 1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு 23 ஆம் தீர்த்தங்கரர் மகான் பாஸ்கி நாதரின் குவார்ட்ஸ் வகை கல்லில் செதுக்கப்பட்ட சிலை அற்புதம். வைரங்களை வெட்டும் சிறப்புக் கருவிகளைக் கொண்டு இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலை உள்ள பிரார்த்தனை மண்டபம் கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது. இது தென்னிந்தியாவில் அரிதான கலை நுட்பம்.

அமைவிடம் - 96 வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 7. நேரம்: சாதாரண நாட்கள் காலை 10-12.30 மணி முதல் மாலை 5-9 மணி வரை. விடுமுறை நாட்களில் காலை 8.30-12.30 மணி முதல் மாலை 5-10. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

கோ கார்டிங்

மின்னலென சீறிப்பாயும் கார்ப் பந்தயங்களைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். பரபரப்பின் உச்சத்தில் தள்ளும் இந்த கார்களில் சக்கரங்கள் எஞ்சின் ஸ்டியரிங் மட்டுமே இருக்கும். இதற்கும் கார் என்றே பெயர். இவற்றில் பந்தய வீரர்கள் கவச உடைகளுடன் செல்வதைப் பார்த்து நீங்களும் அவர்களைப்போல பறக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அந்த ஆவலை இந்த கோ காட்டிங் களம் குறையின்றி நிறைவேற்றும்.

அமைவிடம் - 38 ஆற்காடு சாலை, சென்னை - 600 026. தொலைபேசி - 24836600. தொலைநகல் - 24831770. தொலைபேசியில் தொடர்புகொண்டு கட்டணம் மற்றும் பிற விவரங்களை கேட்டுக் கொள்வது நல்லது. இதைப்போலவே கிழக்கு கடற்கரை சாலையில் 1.7 நிலப்பரப்பில் திறந்தவெளி கார் பந்தய தளம் அமைந்துள்ளது.

திறந்தவெளி திரையரங்கம்

கதவுகள் மூடி மின் விளக்குகள் அணையும் அரையிருளில் படம் பார்த்தே பழக்கப்பட்டவர்கள். திறந்தவெளியில் திரையரங்கமா? உலகின் முதல் கடலோர திறந்தவெளி திரையரங்கம் பிரார்த்தனா (டிரைவ் இன்) இங்கு ஆராதனா என்ற மற்றொரு திரையரங்கும் ஓய்வு உணவகமும் உள்ளன. சொகுசாக காரில் அமர்ந்தபடி படம் பார்த்து மகிழலாம். அனுபவம் புதிது.

அமைவிடம் - திருவான்மியூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, சென்னை - 600 041. கட்டணம் கார் ரூ.40 பார்வையாளர் மாடம் ரூ.20 தொலைபேசி - 24491402 - 24491692.

கோயம்பேடு பிளானட்யும்

கோயம்பேட்டில் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் இருக்கிறது. காய் கனி மலர் சந்தை இருக்கிறது. அங்குதான் மக்களுக்கு அறிமுகமில்லாத பிளானட்யும் இருக்கிறது. இங்கு மனமகிழ்வகங்கள் ஐந்து ஓய்வு உணவகங்கள் சிறுவர் மற்றும் முதியோருக்கான பூங்கா, டைட்டானிக் கப்பலை நினைவூட்டும் ராட்சத பலூன் போன்ற சுவாரசியங்கள் நிறைய இங்குண்டு.

அமைவிடம் - 100 அடி சாலை, கோயம்பேடு, சென்னை - 600 107. நேரம் காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை.

குதிரை சவாரி

வேகத்தின் அடிப்படை குதிரையிலிருந்து தொடங்குகிறது. குதிரையேற்றம் கற்றுக்கொள்ளவும் ஒரு பள்ளி இருக்கிறது. சென்னை குதிரைப் பந்தய கிளப்புடன் இணைந்து செயல்படுகிறது. இங்கு குதிரை ஓட்டுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் இதன் பெயர் மெட்ராஸ் போலோ அண்ட் ரைடர்ஸ் கிளப்.

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate