பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசு தாவரவியல் பூங்கா- நீலகிரி

ஜி.பி.ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் உதகை அரசு தாவரவியல் பூங்கா உலகப்புகழ் பெற்றது மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கவல்லது. 1847-ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுனராக இருந்த மார்குவிஸ் டுவீடேல் உதகையில் தாவரவியல் பூங்காவை உருவாக்க தோட்டக்கலை சங்கத்தை ஆரம்பித்தார். 1848-ம் ஆண்டு திரு.ஜெ.டபிள்யூ. மேக்ஐவர் பூங்காவினை வடிவமைப்பு செய்ய ஆரம்பித்து 1867-ல் முடித்தார். 22 எக்டர் பரப்பில் அமைந்துள்ள இப்பூங்கா கடல் மட்டத்திலிருந்து 2400-2500 மீ. உயரத்தில் உள்ளது. இப்பூங்காவில் புன்னைகைக்கும் பூமரங்கள், குறைவில்லா குத்துச் செடிகள், கண்கவர் கற்றாழைகள், வளப்பமான கள்ளி வகைகள், பசுமை மிகு பெரணிகள் கண்ணாடிக் குடில்களில் மிளிரும் தாரங்கள், ஆண்டு மலர்த் தாவரங்கள் என 2000க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. பசுமையான புல்வெளி, கோட்டை வீடு, பெரணி இல்லம், கண்ணாடி குடில், நூற்றாண்டு நினைவு தூண், இந்திய வரைபடம், 200 இலட்சம் வயதுடைய தொல்லியல் படிம மரம், அல்லி குளம், ரோஜா பூங்கா, தமிழ்நாடு சின்னம், இத்தாலிய பூங்கா, நீர்வீழ்ச்சி, தாழ்விடத் தோட்டம் மற்றும் அழகான பூம்படுக்கைகள்.

பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டினர் உள்ளிட்ட 20 இலட்சம் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவின் அமைதியான அழகை கண்டு மகிழ்கின்றனர். குறிப்பாக இப்பூங்கா கோடைக் காலங்களில் மேலான அழகுடன் திகழ்ந்து அதிக எண்ணிக்கையில் வரும் ஆங்கில தோட்ட ஆர்வலர்களின் தேர்வுக்குரிய இடமாக விளங்குகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தாவரவியல் மற்றும் வனவியல் மாணவர்கள் இங்கு வந்து அவர்கள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள். பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் மாணவர்களை ஈர்ப்பதற்கு ஒவ்வொரு வருடமும் மே மாதம் உலகப்புகழ் பெற்ற மலர் கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது. மலர் உற்பத்தியாளர்கள் மற்றும் பூங்கா ஆர்வலர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த மலைத் தோட்டப் பூங்காக்கள், பண்ணை வீட்டுப் பூங்கா, பொதுப் பூங்கா மற்றும் பிறவகைப் பூங்காக்களுக்கு இடையேயான போட்டியும் நடத்தப்படுகிறது.

அரசு ரோஜா பூங்கா- நீலகிரி

உதகை மலர்க் கண்காட்சியின் நூற்றாண்டினை ஒட்டி உதயமானதே உதகை ரோஜாத் தோட்டம். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இத்தோட்டம் 4 எக்டர் பரப்பிலானது. இப்பூங்காவானது எல்க் குன்றின் சரிவில் அமைந்துள்ள விஜயநகரம் பண்ணையின் வடமேற்குப் பகுதியில் உதகை நகரை நோக்கும் வகையில் அமைந்துள்ளது.

பெங்களூரு, சண்டிகர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஊட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட 3800 இரகங்களைச் சார்ந்த 25,000 ரோஜாச் செடிகள் இத்தோட்டத்தில் தழைத்துள்ளன. புளோரிபன்டா, பாலியான்த்தா, குறு ரோஜாக்கள், கலப்பின ரோஜாக்கள் மற்றும் கொடி ரோஜா போன்றவை இதில் அடங்கும். இந்தியா மற்றும் அயல்நாடுகளிலுள்ள பல்வேறு மையங்களிலிருந்து புதிய இரகங்களை இங்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த எண்ணிக்கையை படிப்படியாக 50000 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவுகள், கொடிப்பந்தல், கொடிக்குகைகள், நிழற்குடைகள், பசுமைக்குடில்கள், நீருற்றுகள், நிலா மாடம், கற்கூண்டு விளக்குகள் மற்றும் பாறைத் தோட்டம் ஆகிய சிறப்பான அம்சங்களையும் இப்பூங்கா தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த ரோஜாத் தோட்டத்தின் உண்மை அழகு அதன் வனப்புமிகு ரோஜாக்களால் மட்டும் உண்டானதல்ல. அடுக்குத் தளங்கள் அமைத்ததன் மூலம் இப்பகுதியின் நிலவடிவமைப்பு குலையாவண்ணம் பாதுகாத்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும். இத்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 அடுக்குத் தளங்களும் ஐந்து விதமான அனுபவங்களை பார்வையாளர்களுக்கு அளித்து அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கின்றன. மும்பை மாளிகைக்கு இட்டுச் செல்லும் சாலையின் கீழ் அமையப் பெற்றுள்ள முதல் அடுக்குத் தளத்தில் குறுவகை ரோஜாக்களின் காட்சியகம் அமைந்துள்ளது. ரோஜாத் தோட்டத்தின் முதன்மையும் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய அடுக்கு இரண்டாவது அடுக்குத் தளமாகும். தோட்டத்தின் வாயில் இத்தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இத்தளத்தில் பல்வகை ரோஜாக்கள் அவற்றின் நிறத்தின் அடிப்படையில்  தொகுக்கப்பட்டு தளத்தின் இருபுறங்களிலும் பராமரிக்கப்படுகின்றன. இத்தளத்தின் மையப் பகுதியில் புல்வெளி பராமரிக்கப்படுகிறது. கிக்கியு புல் மற்றும் நீலப்புல் வேயப்பட்ட இந்தப் புல்வெளி காண்போர் கண்களுக்கு விருந்தாக உள்ளது. பார்வையாளர்கள் பார்வையிட ஏதுவாக, நிலா மாடமானது இத்தளத்தின் தகுந்த இடத்தில் அமைக்கப்பட்டு பூங்காவின் அனைத்து இடங்களையும் இங்கிருந்தே முழுமையாகப் பார்க்க வழிவகுக்கிறது. கொடிப் பந்தல்கள், வளைவுகள், அமர்விடங்கள், கோடைக் குடில்கள், ரோஜாக் குடைகள், ரோஜாக் குகைகள் ஆகியவையும் இத்தளத்தில் அமையப் பெற்று இந்நிலவடிவமைப்போடு குறைவற ஒன்றிணைந்து மிளிர்கின்றன.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிறிய தளமான மூன்றாம் தளத்தில் புளோரிபன்டா வகை ரோஜாக்கள் பராமரிக்கப்படுகின்றன. அகன்ற நான்காம் தளமானது சேவைச் சாலைக்குக் கீழ்ப்புறம் அமைந்துள்ளது. இதில் நடுவே நடைபாதையும் இருபுறங்களிலும் அழகான வகை ரோஜாச் செடிகளும் அமைந்துள்ளன. இத்தளத்தின் வடகோடியில் கிக்கியு புல்லினால் வேயப்பட்ட புல்வெளி அருகே உள்ள கோள நீருற்றுடன் இணைந்து பார்வையாளர்களைத் தம்பால் இழுக்கிறது. நான்காம் மற்றும் ஐந்தாம் அடுக்குகளுக்கிடையேயுள்ள சரிவு மிகப் பெரியதும் மிக ஆழமானதும் ஆகும். இது ஒரு கம்பீரமான பசும் சுவர் போல் திகழ்கிறது. இதன் சரிவுகளில் அமைந்துள்ள, தாவர வகைகள் மற்றும் அமர்விடங்கள் ஒரு சிலிர்ப்பினை ஏற்படுத்தி பார்வையாளர்களின் சாகச உணர்வினைத் தூண்டுகின்றன. ஐந்தாம் அடுக்குத்தளம் வரையில் கண்ணுற்ற பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து ரோஜா வகைகளையும் ஒரே இடத்தில் கண்ட நிறைவு ஒருவருக்கு நிச்சயம் ஏற்படும்.

சிம்ஸ் பூங்கா, குன்னூர்

குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு துவக்கப்பெற்று செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. 12.14 எக்டர் பரப்பில் மேடு பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும் பல்வேறு விரும்பத்தக்க அம்சங்களுடனும் இப்பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் ஈர்ப்புமிக்க மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பார்வையாளர் எவரும் இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்காவினைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை நழுவ விடுவதில்லை. இப்பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களை சார்ந்த 1200 வகையான தாவரங்கள் உள்ளன. மிக அரிதான மரங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன. அவையாவன, உருத்திராக்கம் (ஈலியாகார்பஸ் கானிட்ரஸ்), பேப்பர் மரம் (மிலாலியுகா ஸ்டைபிலோடஸ்), கற்பூர மரம் (சின்னாமோமம் விட்டி), டர்பன்டைன் மரம் (சைகார்பியா லானிபோலியா) பூக்கும், யூகலிப்டஸ்  (யூகலிப்டஸ் பிலிபோலியா) யானைக்கால் மரம்  (அரோகாரியா பிட்வில்லி) மற்றும் ஸ்ட்ராபெர்ரி (அர்பியுடஸ் யுனிடோ).

இப்பூங்காவின் மேற்பகுதியில் இரண்டு சீரான  தளைகளில் வண்ண ஆண்டு மலர் சாகுபடி செய்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பசுமையாகக் காணப்படும் வகையில் புல்தரையும் நன்கு பராமரிக்கப்படுகிறது. தளங்களில் வளர்க்கப்பட்டு வரும் மலர் படுக்கைகளும் அவற்றின் அழகு மிக்க மலர்களும் பசும்புல் வெளிக்கு மேலும் மெருகூட்டுகின்றன. ஆசாலியாஸ், அபிலியா மற்றும் கியுப்ரசஸ் போன்ற தாவரங்கள் உயிர் வேலியாக அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில் 200 வகையான ரோஜா மலர்ச் செடிகள் அமைந்துள்ளன. மேலும் ஆண்டு தோறும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. பொருத்தமான இடங்களில் பாறை அலங்காரத் தோட்டங்கள் அமைக்கப் பெற்று பூங்காவிற்கு ஒரு மாறுபட்ட முரட்டு அழகினை அளித்து இப்பூங்காவினை மெருகூட்டுகின்றன. கீழ் மட்டத்திலுள்ள இரண்டு தீவுகளுடன் கூடிய ஏரி அண்மையில் தூர் வாரப்பட்டு அருகிலுள்ள இடங்கள் நில எழில் ஊட்டுதல் செய்து தொடரலை தோற்றமுடைய மலர்ப்படுக்கைக்களுடன் கூடிய புல்வெளி கொண்ட நிலக் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டி உள்ள கோடை வீடு மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புல்வெளி, ரோஜா மற்றும் பிற தாவரங்கள் அனைவரின் கவனத்தைக் கவரும் அழகிற்கு அழகூட்டும் அம்சங்களாகும்.

கீழ்ப்பகுதியில் அமையப் பெற்றுள்ள ஏரியில் படகு சவாரி செய்வது நமக்கு ஒரு இனிய அனுபவத்தைத் தருகிறது. குழந்தைகள் விளையாடும் இடம் நம் குறும்புக்காரக் குழந்தைகளை மகிழ்வூட்டுகிறது. ஏரியை சுற்றி இப்பூங்கா மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதில் பலவகையான செடிகளும், நிழலில் வளரும் தாவரங்களும் நடப்பட்டு கூடுதல் அழகு சேர்க்கும் வண்ணம் பார்வையாளர்களுக்கு மனமகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து பல பணிகள் இப்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும் இதன் பூர்வீக வரைவமைப்பு மாறுபடாமலும் நீலகிரி மாவட்டத்தின் தாவரவியல் உண்மைத்தன்மை மாறாமலும் பாதுகாக்கப்படுவது மன நிறைவினைத் தருகிறது. தோட்ட ஆர்வலர்களின் வளர்ந்து வரும் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் பூங்காவின் வடகிழக்கு பகுதியில் சிறு நாற்றங்கால் அமைக்கப்பெற்று அலங்கார மரக்கன்றுகள், செடிகள், ரோஜா வகைகள் போன்றவைகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டு தோறும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சிம்ஸ் பூங்காவில் பழக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இது சுமார் 4 இலட்சம் பார்வையாளர்களை கவர்ந்திடும் நிகழ்ச்சியாக திகழ்கிறது. பரபரப்புமிகுந்த குன்னூர் நகரில் அமைந்திருந்தாலும் சிம்ஸ் பூங்காவில் கிடைக்கும் அமைதியான அனுபவம் மெய்யாகவே ஒவ்வொருவரையும் வியக்க வைக்கிறது.

பிரையண்ட் பூங்கா - கொடைக்கானல்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா  20.50 ஏக்கரில் 1908 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1960 வரை பல்வேறு துறைகள் இப்பூங்காவைப் பராமரித்து வந்தன. பின்பு தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் வந்த  இப்பூங்கா தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் செழுமையான புல் வெளி தரும் பசுமை இதற்கு மிகுந்த அழகான காட்சி அமைப்பினைத் தருகிறது. கோடைகாலம் துவங்கும் முன்பே நடவு செய்யப்பட வேண்டிய ஆண்டு மலர்களின் வகைகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் வடிவமைப்பு மற்றும் கருத்து ஆகியவை இறுதி செய்யப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் இப்பூங்கா ஒரு வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. இசை நீருற்றும், குழந்தைகள் விளையாடும் இடமும் சிறுவர்களை ஈர்க்கும் வண்ணமாக உள்ளது.

மலர்க்காட்சி நிலையம், கண்ணாடிக் கூடம், பனித்துளிக் கூடம், ஆண்டு தோறும் நடத்தப்படும் மலர்க்காட்சிக்கான நிரந்தரமான மேடை போன்றவைகள் பார்வையாளர்களை கவருபவையாக உள்ளது.  வருடந்தோறும் 5 முதல்  7 இலட்சம் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவிற்கு வருகை புரிகிறார்கள். இத்துடன் பூங்காவிற்கும் பார்வையாளர்களுக்கும் தேவையான அலங்கார மரக்கன்றுகள் மற்றும் செடிகள் போன்றவைகள் வளர்க்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

செட்டியார் பூங்கா, கொடைக்கானல்

இந்தப் பூங்கா கொடைக்கானல் நகராட்சியில் 1924 ஆம் ஆண்டு 4.15 ஏக்கர் பரப்பில் நிறுவப்பட்டது. பிரையண்ட் பூங்காவில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு அருகாமையிலும், நகரின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இப்பூங்கா 1961 முதல் 1980 வரை வேளாண்துறையால் பராமரிக்கப்பட்டு, 1980 ஆம் ஆண்டு முதல் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நீளவாக்கில் செய்யப்பட்டுள்ள விரிவாக்கமும், குறுகிய சரிவோடு கூடிய பாதையுமே இப்பூங்காவின் மிகத் தனித்தன்மை வாய்ந்த அம்சங்களாகும். செடி கத்தரிப்புக் கலையின் மூலம் உருவாக்கப்பட்ட வடிவங்கள் (நிலையான செடிகளால் உருவாக்கப்பட்ட வடிவங்கள்) மற்றும் ஆண்டு மலர்த் தாவரப்படுக்கைகள் ஆகியவையே இப்பூங்காவின் மனதைக் கவரும் அடிப்படை அம்சங்களாகும். நிலச்சரிவில் அமைக்கப்பட்ட ஆண்டு மலர்ச் செடிகளால் சூழப்பட்ட புல்வெளி சுற்றுலாப் பயணிகளின் கண்களைக் கவர்வது உறுதி. குழந்தைகள் விளையாடும் இடமும், பூங்காவின் கடைக் கோடியில் காணப்படும் நீருற்றும் பூங்காவினைச் சுற்றி வரும் பார்வையாளர்களின் சலிப்பினைப் போக்கவல்ல அம்சங்களாகும். மனதிற்கு இதம் தரும் தட்ப வெப்பம் உடைய கொடைக்கானலில் அமைந்துள்ளமையாலும் இதன் எளிமையாலும் இப்பூங்காவினை ஒரு ‘சிறு அற்புதம்’ என்றழைப்பது மிகவும் பொருந்தும்.

அண்ணா பூங்கா, ஏற்காடு

‘தெற்கின் அணிகலன்‘ என்று போற்றப்படும் கண்கவர் ஏற்காட்டில் இப்பூங்கா 1999 ஆம் ஆண்டு 4.00 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டது. இந்தப் பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 1450 மீ உயரத்தில் அமைந்துள்ளதால் இங்கு நல்ல இதமான தட்ப வெப்பநிலை நிலவுகிறது. இந்தப் பூங்காவில் 1.0 ஏக்கர் பரப்பளவில் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் புல்வெளி சுற்றுலாப் பயணிகள் வெறுங்கால்களோடு நடப்பதற்கு ஆசையூட்டும் விதத்தில் மிருதுவாக அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானியச் சூழ்நிலையை முன்னிறுத்தும் விதமான நீருற்றுகள், ஜப்பானிய விளக்குகள், மற்றும் சிற்பங்களுடன் கூடிய ஜப்பானியத் தோட்டம் அமைந்துள்ளது. பருவத்திற்கேற்று ஆண்டு மலர்த் தாவரங்களான மலர்ப் படுக்கைகள் அழகாக வடிவமைக்கப்பட்டு இயற்கை விரும்பிகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் எவ்விடம் சென்றாலும் விளையாட விரும்புவர். எனவே குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 0.25 ஏக்கர் பரப்பளவில் ‘ஒரு குழந்தைகள் விளையாடுமிடம்’ பராமரிக்கப்பட்டு வருகிறது.  500 சதுர அடி பரப்பளவிலான கண்ணாடி குடிலும், 0.5 ஏக்கர் பரப்பளவில் நிழல் வலையோடு கூடிய நாற்றாங்காலும் அமைக்கப்பட்டுள்ளன. ரோஜா, செம்பருத்தி, மற்றும் பிற அழகுச் செடிகள் நாற்றாங்காலில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

வருடாந்திர மலர்கண்காட்சியானது மே மாதத்தில் தவறாமல் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகையான ரோஜாக்கள் மற்றும் பிற அலங்கார மலர்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்பூங்காவிற்கு 1.5 இலட்சம் முதல் 2.0 இலட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகிறார்கள். அண்ணா பூங்காவினை ஒட்டி 3.25 ஏக்கர் பரப்பிலான ஏரிப் பார்வை பூங்காவும் 3.0 ஏக்கர் பரப்பிலான கோடை விழா திடலும் அமைந்துள்ளன.

செம்மொழி பூங்கா

செம்மொழி பூங்கா சென்னையில், கதீட்ரல் ரோடில் 7.92 ஏக்கர் பரப்பளவில் ரூ.7.96/- கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 24.11.2010 அன்று பொது மக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பூங்கா, குற்றாலம்

சுற்றுச்சூழல் பூங்கா என்ற கோட்பாடு மிகவும் அண்மைக் காலத்தினது. பொழுது போக்கிற்கான ஒரு இடமாக மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட இடத்திற்கான இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை காட்சிப்படுத்துவதும் ஒரு சூழலியல் பூங்காவின் நோக்கமாகும். சுற்றுச்சூழல் பூங்காக்களில் விடுமுறையினைக் கொண்டாடுவதில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நாட்டத்தினை முறையாகப் பயன்படுத்தவும், திருநெல்வேலி மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களின் பூங்கா ஆர்வலர்களின் தேவையைத் தணிக்கும் வகையிலும் தோட்டக்கலைத் துறை மூலம் குற்றாலத்தில் 37.23 ஏக்கர் பரப்பிலான ஒரு சுற்றுச்சூழல் பூங்கா ரூ.573.00 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. குற்றாலமானது அதன் நோய் தீர்க்கும் மூலிகை குணம் கொண்ட இயற்கையான அருவிகளுக்காக பெரிதும் விரும்பப்படும் ஒரு சுற்றுலாத்தலமாக இருப்பினும் அவர்களுக்கு இனிய உணர்வினை அளித்து முழுமையான ஒரு அனுபவத்தினை அளிக்கும் வகையில் குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பூங்கா திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டத்தில் அமைந்துள்ளது. இது திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இச்சுற்றுச்சூழல் பூங்கா, அருவித் தோட்டம் என்றும் பழத்தோட்டம் என்றும் பொது மக்களால் அழைக்கப்படும் குற்றாலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் அமைந்துள்ளது. குற்றாலத்தில் அமைந்துள்ள பல்வேறு அருவிகளில் மிக முக்கிய அருவி ஐந்தருவி ஆகும். இச்சுற்றுச்சூழல் பூங்கா, ஐந்தருவியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவானது அதன் சுற்றுச்சூழல் அடிப்படையிலான கோட்பாட்டினாலும், இயற்கை அன்னைக்கு மிக அருகாமையில் இருப்பதாலும் தனித் தன்மை வாய்ந்ததாக உள்ளது. சுற்றுச்சூழல் சார்ந்த நில அமைப்பையும் அதன் அபரிமிதமான தாவர, விலங்கின வளங்களையும்  பாதுகாப்பது என்ற அடிப்படை தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களிடையே மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதோடு அல்லாமல் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுச்சூழல் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இச்சுற்றுச்சூழல் பூங்கா.

சிறுவர்கள் விளையாடும் இடம், செயற்கை நீருற்றுகள், சிமெண்ட் மற்றும் கற்களால் உருவாக்கப்பட்ட சிலைகள், நீண்ட நடைபாதைகள், உணவுக் கூடம், ஓடை நடைபாதை சாகச விளையாட்டுக் கூடம் ஆகியவை இச்சுற்றுச்சூழல் பூங்காவின் சிறப்பியல்புகளாகும். மேலும், சிறந்த வடிவமைப்புடன் கூடிய மூங்கில் நிழற்சாலை, பெரணித் தோட்டம், ரோஜா தோட்டம், வண்ணத்துப்பூச்சி தோட்டம், தாமரை மற்றும் அல்லிக் குளம் மற்றும் இயற்கைத் தோட்டம் ஆகியவையும் இப்பூங்காவிற்கு அழகு சேர்க்கின்றன. இச்சுற்றுச்சூழல் பூங்கா வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த விசாலமான இட வசதியுடனும் உள்ளது.

அரசு தாவரவியல் பூங்கா, ஏற்காடு, சேலம் மாவட்டம்

தமிழ்நாட்டில் தென்பகுதியின் அணிகலன் என அழைக்கப்படும் குட்டி ஊட்டியான ஏற்காடு,  கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் பசுமை நிறை சேர்வராயன் மலையில் 1515 மீட்டர் உயரத்தில், சேலம் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இப்பூங்கா அதன் மலை சூழ்ந்த நில அமைப்பினால் நகரத்தின் வெப்பம் மற்றும் மாசு படர்ந்த சூழலில் இருந்து தப்பிக்க மக்கள் விரும்பும் உகந்த இடமாக பிரபலமடைந்து வருகிறது. ஏற்காடு, சேலத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு நகரத்திலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் 36 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்ட அரசு தாவரவியல் பூங்காவும் ஒன்றாகும். ஏற்காடு நகரில் ஏரிக்கு அருகில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தாவரவியல் பூங்காவே ஏற்காடு நகரில் மக்களை அதிகம் கவரும் இடமாகும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் மையம், காட்சி கோபுரம்,  நிலா முற்றம்,  மிகப் பெரிய கண்ணாடிக் கூடம், பெரணிக் கூடம், குறுமரத் தோட்டம், உணவுக் கூடம் மற்றும் நிழற்குடைகள் போன்றவை சிறந்த முறையில் அமைக்கப்பட்டு நடைபாதைகளால் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்து விதமான பார்வையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாய் அமைந்துள்ளன. இப்பூங்காவின் அனைத்து சிறப்பியல்புகளையும் வாகனத்தில் சென்று பார்வையிடும் வண்ணம் நடைபாதைகள் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் அனைத்து நிலத் தோற்ற அமைப்புகளும் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்பாசன அமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளன. வண்ணமயமான ஒளி உமிழ் இரு முனைய விளக்குகள், அலங்கார சாலை விளக்குகள் மற்றும் குவிய விளக்குகளாலும் இப்பூங்கா ஒளியூட்டப்பட்டு உள்ளது.

ஐந்திணை மரபணுப் பூங்கா, ஏற்காடு

சங்க கால இலக்கியத்தின் சிறப்பினை தற்கால சந்ததியினருக்கு எடுத்துக் காட்டுவதே ஐந்திணை மரபணுப் பூங்காவின் கோட்பாடாகும். சங்க கால இலக்கியத்தில் அறியப்பட்ட குறிஞ்சி இன மக்களின் தாவர வளம், விலங்கின சூழல், வாழ்க்கை முறை, கட்டிடக் கலை, மற்றும் நாட்டுப்புறவியலை மறு உருவாக்கம் செய்வதே இப்பூங்காவின் முக்கியக் குறிக்கோளாகும்.

இந்த மாதிரிப் பூங்கா, குறிஞ்சித் திணையின் "மலையும் மலை சார்ந்த பகுதி" யின் பண்டைய பண்பாட்டினை நமக்குக் கற்பிக்கிறது. இப்பூங்கா சங்க காலத்தில் பயிரிடப்பட்ட தாவர வகைகள், அரிய தாவர இனங்கள், அருகி வரும் மற்றும் அந்நிலப் பகுதிக்கேற்ற தாவர இனங்களை உள்ளடக்கியுள்ளது. இப்பூங்காவின் குகை வழி நடைபாதை நம்மை பண்டைய காலத்திற்கு அழைத்துச் செல்வதுடன் நமக்குள் இருக்கும் துணிச்சல் மிகு சாகச குணத்தை தூண்டுகிறது. சங்க கால நிகழ்வுகள் குறித்த சிலைகள் சங்க காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை காட்சிப் புலனாக்குகின்றன. ஒரு மனிதன் தேன் சேகரிப்பதைக் குறிக்கும் சிலையானது அதைக் காணும் பார்வையாளர்களின் கற்பனையைப் பற்றிக் கொண்டு பண்டைய கால மனிதர்கள் தொழில் குறித்துத் தெளிவூட்டுவதாய் அமைந்துள்ளது. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மர வீடானது பழங்கால நினைவுகளைத் தருவதுடன் அனைத்து வயதினரையும் கவரக் கூடியதாய் அமைந்துள்ளது. மண்டபம் மற்றும் மழைக் குடில்கள் நம்மை பழங்காலத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் பழங்காலக் கட்டிடக் கலை முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

கருத்துக் காட்சி மையம், பார்வையாளர் வழிகாட்டு மையம், உணவுக் கூடம், குகைக் கடைகள், அலங்கார வளைவுகள், நவீன விளையாட்டு சாதனங்கள் கூடிய சிறுவர்கள் விளையாட்டுத் தளம், அல்லி குளம், வட்டரங்கம், நீர்த் தேக்கங்கள், ஓடைகள், பசுமைக் குடில்கள் போன்றவை இப்பூங்காவினை தனித் தன்மையுடன் வேறுபடுத்திக் காட்டக் கூடிய சிறப்பு அம்சங்களாகும். பூங்கா முழுவதும் வண்ணமயமான விளக்குகளால் ஒளியூட்டப்பட்டும், சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன வசதிகள் செய்யப்பட்டும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த விசாலாமான இட வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஆதாரம் : தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top