பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் – ஓர் பார்வை

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் (Mannar biosphere reserve) இந்தியாவின் தென்கிழக்கு முனைப்பகுதியில் இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.

தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார்வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக 1989ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அரிய வளங்கள்

மன்னார் வளைகுடாப் பகுதியில் காணப்படும் அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன.

குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong) ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன. முத்துக்கள், சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது.

மேலும்

 • 280 வகை கடற்பஞ்சுகள்,
 • 92 வகை பவளங்கள்,
 • 22 வகை கடல் விசிறிகள்,
 • 160 வகை பலசுனைப்புழுக்கள்,
 • 35 வகை இறால்கள்,
 • 17 வகை நண்டுகள்,
 • 7 வகை கடற்பெருநண்டுகள்,
 • 17 வகை தலைக்காலிகள்
 • 103 வகை முட்தோலிகள்

காணப்படுகின்றன.

21 தீவுகள்

மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் சிறப்பு அம்சமாக 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் அளவிலான 21 தீவுகள் அமைந்துள்ளன.

 • வான்தீவு,
 • காசுவார் தீவு,
 • காரைச்சல்லி தீவு,
 • விலங்குசல்லி தீவு,
 • உப்புத்தண்ணி தீவு,
 • புலுவினிசல்லி தீவு,
 • நல்ல தண்ணி தீவு,
 • ஆனையப்பர் தீவு,
 • வாலிமுனை தீவு,
 • அப்பா தீவு,
 • பூவரசன்பட்டி தீவு,
 • தலையாரி தீவு,
 • வாழை தீவு,
 • முள்ளி தீவு,
 • முசல் தீவு,
 • மனோலி தீவு,
 • மனோலிபுட்டி தீவு,
 • பூமரிச்சான் தீவு,
 • புள்ளிவாசல் தீவு,
 • குருசடை தீவு,
 • சிங்கில் தீவு

ஆகியவையே அவை. இந்த தீவுகளை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.

உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை

இதுபோன்ற அரிய பகுதியை பாதுகாக்க தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியது.

இந்த அறக்கட்டளை தமிழ்நாடு அரசின் உத்தரவு எண்.263 தேதி (18.12.2000) மூலம் ஏற்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு அறக்கட்டளைப் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இக்குழுவின் தலைவராகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் இதன் உபதலைவராகவும், மேலும் நிதித்துறை, கால்நடை மற்றும் சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் செயலாளர்கள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர், மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர்கள், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் திட்ட செயலாக்கப் பகுதியைச் சார்ந்த ஒரு சட்டசபை உறுப்பினர் மற்றும் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் இப்பொறுப்பான்மைக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அறக்கட்டளையின் பணி கடல் வாழ் அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களின் சமுக மேம்பாட்டை உயர்த்துவது என்பதுதான். இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவி பெற்று இயங்கி வந்த, தமிழக அரசின் அறக்கட்டளையாகும்.

நிறுத்தப்பட்ட நிதி

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவி 2012 ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கண்ட அறக்கட்டளையை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து மேலும் நான்கு ஆண்டுக்கு திட்டத்தை நீடித்தது. ஆண்டுக்கு ரூ.2.5 கோடி வீதம், 2013-14 முதல் 2016-17 வரை , ரூபாய் பத்து கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால் பத்து கோடி முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யாமல் இதுவரை 5.96 கோடி செலவிடபட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 0.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேலும் திட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.

கைவிடப்படும் அறக்கட்டளை

ஆனால், திடீரென்று தற்போது, மன்னார் வளைகுடா உயிர்க் கோளக் காப்பகத்தை இதுவரை பராமரித்து வந்த அறக்கட்டளையின் காலம் முடிந்ததாக கூறி பணிகளை நிறுத்திவிட்டு, உயிர்க் கோள காப்பகத்தை முழுமையாக தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மன்னார் வ‌ளைகுடா உயிர்க் கோளக் காப்பக அறக்கட்டளை உருவாக்கப்பட்டது ஒரு சிறந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில் ஏற்கெனவே, வனத்துறையின் கட்டுப்பாட்டில் மன்னார் வளைகுடா கடல் பகுதி இருந்த போது அப்பாவி பாரம்பரிய மீனவர்களிடம் கெடுபிடியான அணுகுமுறையை வன அதிகாரிகள் கையாண்டனர். மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட பாரம்பரிய மீனவர்களிடமே அக்கடமையை ஒப்படைப்பதுதான் அறக்கட்டளையின் நோக்கம்.

ஆனால், அறக்கட்டளை உருவாக்கப்பட்ட 2000 ம் ஆண்டு துவங்கி இன்று வரை பதினேழு ஆண்டுகளில் அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், கண்துடைப்பிற்காக சில கூட்டங்களை மீனவர்களை வைத்து நடத்தி அரசின் பணத்திற்கு கணக்கு எழுதிய வேலைதான் நடந்தது.

எனவே, அறக்கட்டளையின் செயல்பாடு முடியவில்லை. இன்னும் ஒழுங்குபடுத்தி சிறப்பாக கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது.

அழிவின் பிடியில் பவளப்பாறைகள்

ஏனென்றால், தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி உள்ளிட்ட வலைகளையும், ஜெலட்டின் வெடி குண்டுகளையும் பயன்படுத்தி இன்று வரை மீன்பிடிப்பு தொடர்கிறது. இதனால் பவளப்பாறைகள் சேதம் அடைந்து கரை ஒதுங்குகின்றன. பவளப்பாறைகள் அழிவதுடன், அதை நம்பி வாழும் கடல் வாழ் உயிரினங்களும், அழியும் சூழல் உருவாகியுள்ளது. சமீபகாலமாக உயர் ரக ஆபரணங்கள் தயாரிப்பிற்கும் வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மீன் தொட்டிகளை அலங்கரிக்கவும் மீன்களை வளர்க்கவும் பவளப்பாறைகள் கடத்தி அழிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் இராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. பரப்பளவில் பவளப்பாறைகள் உள்ளன. இவை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மண்டலத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன. பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப்பாறைகளுக்கு மனிதர்களால் அழிவு ஏற்படத் துவங்கி உள்ளது.

பவளப்பாறைகள் கடத்தலால் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலை கழிவுகளால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் ஆகியவற்றாலும் அழிந்து வருகின்றன.

பல்லுயிர்களின் உறைவிடம்

கடல் என்பது கழிவுகளைக் கொட்டும் இடம் அல்ல. அது காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாலூட்டிகள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில் கடல் வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவளப்பாறைகள். இவை கடலின் தட்பவெப்பத்தை பேணிக் காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன.

ஆதாரம்  : தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை

2.64285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top