பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / கற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்

கற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள் பற்றிய குறிப்புகள்

மதிப்பீடு என்பது கற்றல், கற்பித்தலின் இறுதியில் கற்பித்தல் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் இடம்பெறவேண்டிய உடன்நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. மொழி, இலக்கியம் என்பதையும் தாண்டி, இசை, நடனம், விளையாட்டு என எல்லா வகையான கற்றல், கற்பித்தல் எப்போது தோன்றியதோ அப்பொழுதிலிருந்தே மதிப்பீடும் தோன்றி விட்டது.

மதிப்பீடு என்பதை Value, Assessment, Judgement எனப் பல்வேறு கலைச் சொற்களுடன் இணைத்துப் பார்க்கும் நிலையில் அதன் பொருள் விரிந்து கிடக்கிறது. இன்றைய கல்வி முறையில் மதிப்பீடுகள் மிகவும் அவசியமாக அமைந்துள்ளன.

கல்வி இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், தரமான கல்வியை வழங்க மதிப்பீட்டின் தேவையை உணர்ந்த இந்திய நடுவண் மொழிகள் மைய அறிஞர் பொன் சுப்பையா தேர்வும், மதிப்பீடும் என்ற புதிய பிரிவைத் தொடங்கி, அது தொடர்பான விரிவான அறிக்கையை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் சமர்ப்பித்து, ஒரு பெரிய, புதிய திட்டத்தை முன்னின்று செயல்படுத்தும் வகையில் இந்தியத் தேசிய தேர்வு மையம் (National Testing Service-India) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த அமைப்பு பள்ளி முதல் கல்லூரிக் கல்வி வரை மதிப்பீட்டின் தேவையை உணர்ந்து பல்வேறு பணிகளைச் செயல்படுத்தி வருகிறது.

இந்திய தேசிய தேர்வுப்பணி மையத்தின் நோக்கமும், செயல்பாடுகளும்

உயர்கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வி என்பது அடித்தளம் போன்றது. அடித்தளம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே அதன் மேல் எழுப்பப்படும் கட்டடம் வளமையாக இருக்கும். இந்த உண்மையை அறிந்த இந்திய தேசிய தேர்வுப்பணி மையம் கற்றல்-கற்பித்தலில் பல புதிய மதிப்பீட்டுக் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

மதிப்பீடு தொடர்பான புதிய கொள்கைகளை இந்தியாவில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் மண்டல களப்பணி மையங்களை ஏற்படுத்தி, அவற்றின் செயல்பாடுகளில் உள்ள அமைப்பாளர்களுக்கு மதிப்பீடு பற்றிய புதிய சிந்தனைகளைப் போதித்து, அவர்களின் வாயிலாக அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எடுத்துக் கூறி கற்றல் - கற்பித்தல் முறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களையும், செயல்திட்டங்களையும் வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் பள்ளி அளவில், திருவள்ளூர், வேலூர், மூலக்குப்பம் - பாண்டிச்சேரி, உதகை, ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய பத்து இடங்களிலும், கல்லூரி, பல்கலைக்கழக அளவில், சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம், கோயமுத்தூர், திருச்செங்கோடு, மதுரை, காரைக்குடி, பாளையங்கோட்டை எனப் பத்து இடங்களிலும் நிறுவி, முதலில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், பிறகு அவர்களின் வாயிலாக மாணவர்களுக்கும் மதிப்பீடு பற்றிய சிந்தனைகளை வழங்கி வருகிறது.

பல்கலைக்கழக அளவில் முதுமுனைவர் பட்டம், முனைவர் பட்டம் என இரு நிலைகளில் தமிழ், கன்னடம், மலையாளம், உருது, ஹிந்தி போன்ற மொழிகளுக்கு, மொழிக்கு 15 ஆய்வு மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கும் மதிப்பீடு குறித்த கருத்துகளை வழங்கி, அவர்களை மதிப்பீடு பற்றிய சிறந்த வல்லுநர்களாக (Resource Person) மாற்றும் வகையில் அவர்களுடைய ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஊக்கத்தொகையினையும் வழங்கி வருகிறது.

இந்திய ஆட்சிப்பணி, தமிழ்நாடு அரசுப்பணி, வங்கிப்பணி, தேசிய கல்வித் தேர்வு (NET) போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மொழி சார்ந்த சிறப்புப் பாடங்கள் முதலியவற்றிற்குத் தரமான வினா வங்கிகளை (Question Bank answer Key) உருவாக்கி, அதனைக் குறியீடுகளுடன் நிரல், நிரைப்படுத்தி, கணினி வழி முறையாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்படும் வினாக்கள் புதிய முறையில் பயிற்சி அளித்து, பல்கலைக் கழக ஆய்வு மாணவர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

இப்பணிகளை குறுந்திட்ட பணிகளாக வழங்குவதால், ஆய்வு மாணவர்கள் நிதி உதவி பெற்று வினாக்களை உருவாக்குகின்றனர். இதனால் தரமான கல்வி மதிப்பீடு பின்பற்றப்படுகிறது.

சான்றாக, பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் விரிவுரையாளர் தகுதிகான தேர்வு (UGC.NET) கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மாணவர்களின் நினைவாற்றலை மட்டும் சோதிக்கும் அளவில் வினாக்கள் அமைந்திருந்தன.

இதனால், அத்தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட கால எல்லைக்கு முன்னதாகவே தேர்வு எழுதிவிடும் சூழல் இருந்தது. ஆனால், தற்பொழுது நடைபெறும் தேர்வுகள், மாணவர்களின் பல்வேறு திறன்களைச் சோதிக்கும் வகையில், சிந்தித்து எழுதும் முறையில் அமைந்துள்ளன.

மதிப்பீடு பற்றிய புதிய கருத்தாக்கங்களையும், சிந்தனைகளையும், கலைச்சொற்களையும், அதற்கான அகராதிகளையும் பல புத்தகங்களையும் உருவாக்கி, பதிப்பித்தும் வருகின்றது இந்திய தேசிய தேர்வுப்பணி மையம்.

மாற்றத்திற்கான மாற்றம்

பல்கலைக்கழக அளவில் தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் அனைத்தையும் ஒன்றிûணைத்து புதிய பொதுப் பாடத்திட்டத்தை உருவாக்கி, அனைவருக்கும் பயிற்றுவிக்க வேண்டும்.

அதேபோல், அனைத்துப் பல்கலைக் கழகங்களையும், கல்லூரிகளையும் இணையத்தின் வாயிலாக ஒன்றிணைத்து, அந்தந்தப் பாடங்களில் சிறப்புப் பெற்ற பேராசிரியர்களை நேரடி கற்பித்தல் வழி (Online Teaching) பாடங்களை நடத்த வேண்டும்.

அதேபோல, தேர்வுகளும் நேரடியாக அனைவரும் பொதுவாக ஒரே நேரத்தில் எழுதி, ஒரே முறையிலான மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கித் தேர்வு செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளில் சமமான அளவில் கல்வி, அறிவு சார் திறன்களைப் பெற்று (ஏற்றத்தாழ்வுகள் இன்றி) உயர முடியும்.

தேர்வும், மதிப்பீடும்

இதுவரை ஏற்படுத்தப்பட்ட கல்விக் குழுக்கள் அனைத்துமே, தேர்வுகள் குறித்த நம்பகத்தன்மை குறித்தும், சீர்திருத்தம் குறித்தும் கருத்துகளைத் தெரிவித்துள்ளன.

இதுபற்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வியாளர்கள் கூடி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மொழிப்பாடங்களை கற்றல், கற்பித்தலின்போது புதிய கருவிகளையும் நடைமுறைகளையும், புகுத்த வேண்டும். தமிழ் மொழிக் கல்வியை கணினி வழி கற்பித்தலினால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் மிகுதியாகிறது.

கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக (Part-1) கற்கும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு ஓரிரு மணிகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இந்த நடைமுறையை மாற்றி வாரத்தில் அரைநாள் முழுவதும் ஒதுக்கி, தமிழ் மொழியைக் கற்பிக்கும் வகையில் கால அட்டவணைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

பள்ளி ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு பொருள் குறித்த திட்டப்பணிகளை வழங்கும் போது, அப்பொருள் தொடர்பான செய்திகளை இணையத்தில் சிலர் உதவியுடன் தேடி, அதனை ஒழுங்குபடுத்தாமல் அதனை அப்படியே சமர்ப்பித்து விடுகின்றனர். இதனை ஆசிரியர்களும் கண்டு கொள்வதில்லை. எனவே, முதலில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்க வேண்டும்.

இன்று கல்லூரி, பல்கலை. அளவில் நடைபெறும் கருத்தரங்கங்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் ஆசிரியர்கள் குருந்தகடு வடிவில் பல்வேறு ஒளிப்படங்களாக (Slide) மாற்றி அவற்றை கருத்தரங்கில் பயன்படுத்த முடியாத நிலையில் திணறி (Font Problem) பிறருடைய உதவியை நாடும் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்மொழியை கணினியில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய பயிற்சி அளிக்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்களைப் போலவே பள்ளி ஆசிரியர்களுக்கும் புத்தாக்க, புத்தொளிப் பயிற்சிகளை வழங்க வேண்டும். இதில் ஆசிரியர்கள் கற்பித்தலில் புகுத்த வேண்டிய புதிய நடைமுறைகளையும், வழிகளையும் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் அலகு, உள்மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கு வழங்கப்பெறும் கால அளவு சரியாகப் பின்பற்றப்பட வேண்டும்.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அதிநவீன வசதிகளுடன் கணினி மயமாக்கப்பட்ட ஆய்வகங்களை நிறுவி கற்பிக்க வேண்டும். பாடநூல்களைத் தயாரிக்க அரசின் மூலம் நியமிக்கப்படும் பாடநூல் வல்லுநர்களால் தயாரிக்கப்படும் பாடத்திட்டங்களை இணையத்தின் வாயிலாக வெளியிட்டு, பொது மக்கள், பிற கல்வியாளர்கள் கருத்துகளைப் பெற்ற பின்னரே இறுதி செய்ய வேண்டும். இதனால் தரமான, தகுதியான பாடங்கள் மட்டுமே பாடநூல்களில் இடம்பெற முடியும்.

பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதனால் மட்டுமே சிறந்த, உயர்ந்த கல்வியை தரத்துடன் போதிக்க முடியும். தமிழ்மொழி மற்றும் இலக்கியம் கற்றல் கற்பித்தலில் மேற்கண்ட புதிய நடைமுறைகளையும், செயல்திட்டங்களையும் புகுத்துவதன் மூலம் தரமான கல்வியை வழங்கவும், நாடு சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

2.97777777778
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top