பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / பொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி?

பொதுதேர்வின் போது ஏற்படக்கூடிய பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி போன்ற குறிப்புகளை இங்கே காணலாம்.

தேர்வு பயம்

தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவிகளைவிட மாணவர்களே அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் சொல்வதை ஊன்றிக் கவனிப்பதில் மாணவிகளைவிட மாணவர்கள் சற்றுப் பின்தங்கி இருக்கிறார்கள். வகுப்பறையில் கவனிப்பதில் தொடங்கும் மாணவர்களின் இந்தச் சரிவு, தேர்வை எதிர்கொள்வதிலும் தொடர்கிறது.

குடும்பச் சூழ்நிலை, பெற்றோரின் கவனிப்பு, நட்பு வட்டம், பொழுதுபோக்கு அம்சங்கள்… இப்படிப் பல காரணங்களும் மாணவர்களின் படிப்பில் ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன.

ஆண்டு முழுவதும் படிக்க வேண்டிய பாடங்களை, தேர்வுக்கு முன்னதாக விடும் விடுமுறை நாட்களிலேயே படித்துவிடலாம் என்னும் அதீத நம்பிக்கை நிறைய மாணவர்களிடையே இருக்கும். தேர்வு நாள் நெருங்க நெருங்க நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து பதற்றமும் மனச் சோர்வுமே அவர்களிடம் நிறைந்திருக்கும்.

ஆலோசனை

தேர்வுக்குத் திட்டமிடுதல் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம் என்கிறார் சென்னை, சஞ்ஜீவனம் மருத்துவ மையத்தின் மருத்துவர் பி. ராஜேஷ். தேர்வு நேரத்தில் ஆண் மாணவர்களிடம் வெளிப்படும் மன அழுத்தத்தையும் அதைத் தீர்க்கும் வழிகளையும் பற்றி அவருடைய ஆலோசனைகள்:

தேர்வு நெருங்கும்போது, மாணவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தால் பல்வேறு விளைவுகளை அவர்கள் சந்திக்கிறார்கள். படித்ததை மறந்துவிடுதல், மனச் சோர்வு, மலச்சிக்கல், கண்களில் கருவளையம் உண்டாதல், உறக்கத்தில் சக்தி வீணாதல் போன்ற உடல் உபாதைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

படிப்பதை மறந்துவிடுதல்

"எம்பிள்ளையும் ராவும் பகலுமா கண் முழிச்சு கஷ்டப்பட்டுத்தான் படிக்கிறான். ஆனா கொஞ்ச நேரத்துல படிச்சது பூராவும் மறந்துடுதும்மான்னு சொல்றான்"

- தன் மகனைப் பற்றி இப்படிக் குறைபட்டுக்கொள்ளும் நிறைய பெற்றோரைச் சந்தித்திருக்கிறோம். இப்படிப்பட்ட மாணவர்களுக்குச் சிந்தனையை ஒருமுகப்படுத்திப் படிப்பதில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். இப்படிப்பட்ட மாணவர்கள் சில வகை யோகாசனங்களைச் செய்வதன் மூலம் அவர்களுடைய சிந்தனை ஒருமுகப்படும். நொறுக்கு தீனி, குளிர்பானங்கள் போன்றவை கூர்மையான சிந்தனையை மழுங்கடிக்கும். பசு நெய், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மனச்சோர்வு

தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு உண்டாகும் மனச்சோர்வைப் போக்கச் சில வகை ஆசனப் பயிற்சிகளையும் மூச்சுப் பயிற்சிகளையும் அளிக்கலாம். காலையில் சூரிய நமஸ்காரத்துடன் செய்யப்படும் பிராணாயாமப் பயிற்சி களின் மூலம் ஒருவர் நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட முடியும்.

மலச்சிக்கல்

மனப் பதற்றத்தின் விளைவாகச் சில மாணவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இதனால் ஊன்றிப் படிக்க முடியாத நிலை ஏற்படும். இதைத் தவிர்க்க முறையான உணவுப் பழக்கம் அவசியம். காரம், புளிப்பு அதிகம் சேர்க்காத உணவு வகைகளை உண்ண வேண்டும். சில வகை லேகியங்களை உண்பதன் மூலமும் இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

கருவளையம்

இரவு நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பதால் சில மாணவர்களுக்குக் கண்களுக்கு வெளியே கருவளையம் விழும். இதற்கு ஆயுர்வேதச் சிகிச்சை உண்டு. அதேபோலச் சரியான தூக்கம் இல்லாமல் கண்ணின் உள்ளேயும் சிவந்து காணப்படும். இதற்குக் கண் பூச்சுகள் உள்ளன. தேர்வு நேரத்தில் இரவில் சரியாக உறக்கம் இல்லாவிட்டால், மறுநாள் தேர்வு எழுதுவது பெரும் சோதனையாக மாறிவிடும். அதனால் தேர்வு நேரத்தில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்கவேண்டியது அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவு

பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்ற உணவு வகைகளை அவசியம் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. இறைச்சி, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத்தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். காலையிலேயே அதிக அளவு உணவை உண்ணக்கூடாது. அதேநேரம் உணவைத் தவிர்க்கவும் கூடாது.

உணவு முறை

எளிதில் ஜீரணமாகக்கூடிய கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள தண்டு, பழ வகைகளை உண்ண வேண்டும். கேரட்டில் உள்ள வைட்டமின் கண்களுக்கு நல்லது. அதனால் தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம். பசு நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

எளிமையான பயிற்சிகள்

மூச்சுப் பயிற்சி, எண்ணெய் தேய்த்துக் குளியல், சில வகை எளிமையான ஆசனங்களின் மூலம் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கலாம். பத்மாசனம், மயூராசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களைச் செய்வதன்மூலம் மாணவர்களின் செயல்படும் திறன் அதிகரிக்கும்.

ஆயுர்வேதச் சிகிச்சைகள்

ஷீரபலா தைலம், பிரம்மி தைலம் போன்றவற்றைத் தலைக்குத் தேய்ப்பதன் மூலம் உடல் சூடு குறையும். உடலின் சக்தி மையங்கள் நன்றாக இயங்கும். சக்தி விரயமாகாது. முனைப்போடு படிப்பதற்கு உதவும்.

மனித உடலில் தேவையான நிறைகள் இல்லாதது ஒரு குறை என்றால், தேவையற்ற குறைகள் நிறைந்திருப்பதும் தவறானதுதான். மனமும் உடலும் ஒரே நேர்க்கோட்டில் இயங்கினால் தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் வெல்லலாம்.

ஆதாரம் : தி இந்து (வா. ரவிக்குமார்)

2.98795180723
karnan Mar 01, 2018 08:19 PM

super

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top