பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பொறியியல் கல்லூரிகளில் சேரவிருக்கும் மாணவர்கள் தமக்கேற்ற பாடப்பிரிவுகளை (branches) ஓரளவுக்கு முடிவு செய்த பிறகு, அவற்றிற்கு ஏற்பக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதுடன், அவற்றிற்கு ஏற்ப வரிசைப் படுத்தவும் (ranking) வேண்டும். (கல்வியாளர்கள் பல காரணங்களுக்காக மாணவர்களைத் தரவரிசைப்படுத்தும்பொழுது, இம்முறை மாணவர்கள் கல்லூரிகள் சிலவற்றைத் தர வரிசைப் படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்!)

இப்படி உத்தேசமாகத் தேர்ந்தெடுத்த கல்லூரிகளின் தகுதிகளை முடிந்தவரை நேரில் சென்று அளவிடுவது நல்லது. அடிப்படை வசதிகளான உள்கட்டமைப்பு, நூலகம், ஆய்வகம், விடுதி, போக்குவரத்து, இணையம் முதலியவற்றின் தன்மையை மதிப்பிட்டுக் கொள்ளலாம். கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்களிடமும், பயிலும் உயர்வகுப்பு மாணவர்களிடமும் கருத்துக் கேட்கலாம். துறைப் பேராசிரியர்களிடமும் விளக்கம்  பெறலாம். அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் விதித்துள்ள ஆசிரியர்-மாணவர் விகிதம் (இப்பொழுது, 1:20) மீறப்பட்டுள்ளதா, பாடங்களுக்கான NBA தரச்சான்று, கல்லூரிகளுக்கான NAAC தரச்சான்று ஆகியவற்றின் நிலை என்ற பலவற்றையும் கண்டறியலாம். அறிந்து, கீழே விளக்கியள்ளபடி இவை ஒவ்வொன்றுக்குமான மதிப்பெண்ணையும் அளிக்கவேண்டும். தவிர, அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் கிடைக்கும் கல்லூரிகளின் கடந்த சில ஆண்டுகளின் தேர்ச்சி வீதங்களிலிருந்து உங்கள் தேர்ந்தெடுப்பிலிருக்கும் கல்லூரிகளின் 'தேர்வுத்திறனை' அளவிட்டு அதற்கான மதிப்பெண்களைத் தரலாம். இதேபோல் கீழே விளக்கியுள்ள மொத்தம் 10 தகுதிகளுக்கும், தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் ஒவ்வொன்றிற்கும் மதிப்பெண் அளித்துக்கூட்டி, மொத்த மதிப்பெண் பெறவேண்டும். இந்த மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அக்கல்லூரிகளைத் தரவரிசைப் படுத்தி, அந்த வரிசையில் நீங்கள் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

10 தகுதிகளும் அவற்றிற்கான அதிகபட்ச மதிப்பெண்களும்

 1. அடிப்படை வசதிகள்:  வசதியான வகுப்பறை, நூலகம், ஆய்வகம், விடுதி, விளையாட்டு/ஜிம் வசதி, காண்டீன், ஓய்வறை, வங்கி, சாலை, பஸ் வசதி, மருத்துவ வசதி முதலியவை இதில் அடங்கும். (அதிகபட்ச மதிப்பெண்:16 )
 2. கற்பித்தலின் தரம்:  20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்திலாவது இருக்க வேண்டும். அனுபவம் மிக்க, முனைவர் பட்டம் பெற்ற, திறமையான ஆசிரியர்கள் இருத்தல், பட்டமேற்படிப்பு வகுப்புகள் இருத்தல், நவீன கல்விமுறைகள் மற்றும் மின்னணுக்கருவிகளின் பயன்பாடு முதலியவை.  (16)
 3. தரச்சான்று ( Accreditation):  NAAC, NBA ஆகியவற்றால் கல்லூரியும் அதன் பாடப்பிரிவுகள் பலவும் தர உறுதி செய்யப்பட்டிருத்தல். (12)
 4. ஒப்பீடு:  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த மாணவர் தேர்ச்சி விகித விவரங்கள், பிற நிறுவனங்கள் வெளியிட்ட ஒப்பீட்டுத் தர விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பிற கல்லூரிகளுடன் ஒப்பிட்ட தர வரிசை (12)
 5. தனித்திறன் பயிற்சி வாய்ப்புகள்:  கிரகிப்புத்திறன், சொல்வன்மை, குழுவில் பழகுதல், தலைமைத்திறம் முதலிய மென்திறமைகளில் (soft skills) பயிற்சி பெற வாய்ப்பு; GRE, TOEFL, GATE முதலிய தேர்வுகளுக்குத் தனிப் பயிற்சி வகுப்புகள்; தனி விரிவுரைகள், ஆய்வுரைகளில் பங்குபெற வசதிகள் இருத்தல் (8)
 6. வேலை வாய்ப்பு:  கேம்பஸ் இன்டர்வியூ, பிளேஸ்மென்ட் அலுவலகங்கள் திறமையாகச் செயல்படுகின்றனவா? (8)
 7. கருத்து: முன்னாள் மாணவர் குழுவும் அவர்களது கருத்தும் (8)
 8. பணிப்பயிற்சி வாய்ப்புகளும் இணைப்பு வகுப்புகளும்:  கல்லூரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் பணிப்பயிற்சி ஒப்பந்தங்கள் உண்டா?  லேட்டரல் என்ட்ரியில் இரண்டாம் ஆண்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலாண்டில் அவர்கள் தவறவிட்ட கணிதம் போன்ற பாடங்களில் இணைப்பு வகுப்புகள் (Bridge courses) நடத்தப்படுமா?  (8)
 9. ஈடுபாடும் பிறமொழி வாய்ப்பும்:  கல்லூரியை நடத்துபவர்களின் கல்வி ஈடுபாடு, மாணவர் நலனில் அக்கறை, தொண்டு மனப்பான்மை; பிரஞ்சு, ஜாப்பனீஸ், ஜெர்மன் உள்படப் பிற நாட்டு மொழிகளில் ஒன்றையேனும் கற்க வாய்ப்பு உண்டா? (6)
 10. தனி ஏற்பாடுகளும் ராகிங் தடுப்பும்:  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உரிய தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? ராகிங், டீஸிங் ஆகியவற்றை அறவே தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளனவா?  (6)

மொத்த  மதிப்பெண்கள்:   (100)

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஒவ்வொரு கல்லூரிக்கும் இந்த அட்டவணைப்படி மதிப்பெண் அளித்து மொத்த மதிப்பெண்ணைக் கணக்கிடுங்கள். அப்படிக் கிடைத்த மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அக்கல்லூரிகளைத் தர வரிசைப் படுத்திக் கலந்தாய்வுக்குப் பயன்படுத்துவது ஓர் அறிவியல்பூர்வமான முறை.

ஆதாரம் : பேராசிரியர் முனைவர்  ப. வே.  நவநீதகிருஷ்ணன்

3.17647058824
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top