பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி (Science Exhibition) அமைத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அறிவியல் கண்காட்சி, காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து, கருத்துச் செறிவூட்டி சிந்திக்கவும் கனவு காணவும் செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். இது படைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் உடல், உள்ளம், ஆன்மா, சமூகம் சார்ந்த அனைத்துத் திறன்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் முக்கிய காரணி எனக் கூறலாம்.

அறிவியல் கண்காட்சியின் அவசியம்

அறிவியல் கருத்துகளையும் தத்துவங்களையும் கொள்கைகளையும், பொது விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பல்வேறு கருவிகளையும், சோதனைகளையும், அமைப்பு மாதிரிகளையும் நேரடியாகக் கண்டு பயன்பெறவும், ஒலி-ஒளிக் காட்சிகள் மற்றும் நேரடியான சிறப்பு சொற்பொழிவுகள் வாயிலாக புதிய கருத்துகளைப் பெறவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி அறிவியல் கற்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கான ஒரு தூண்டுகோலாகும்.

இது, அறிவு மற்றும் செயல் திறன்களை வெளிப்படுத்தி புதியன படைக்கவும் ஆழ்மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் வாய்ப்பளிக்கிறது. மேலும் மாணவர்களின் சிந்தனை வளம் பெறுக சிறுவித்தாக இது விளங்குவதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.

கண்காட்சிப் படைப்புகளை பெற்றோர்களும் சமுதாயமும் காண்பதால் மாணவர்களின் திறன்களை பாராட்ட நல்வாய்ப்புகள் அமைகின்றன. இதனால் மாணவர்களின் உயர் கல்விக்கான சூழ்நிலைகள் மேம்படுகின்றன.

அறிவியல் கண்காட்சியின் நோக்கங்கள்

 • வகுப்பறையில் கற்ற கருத்துகளைப் பயன்படுத்தி புதிய கருவிகள், சோதனைகள், அமைப்பு மாதிரிகள், அரிய உண்மைப் பொருள்கள் போன்றவைகளை படைக்க ஊக்கமளித்தல்.
 • உடன் பயிலும் மாணவர்களின் சாதனைகளைக் கண்டுணர்ந்து, புதிய செயல் திட்டத்தில் ஈடுபடும் எண்ணத்தைத் தூண்டுதல்.
 • செயல் திறன்களை மேம்பாடு அடையச் செய்தல்.
 • அறிவுத் திறன் மிக்க மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர ஊக்கப்படுத்துதல்.
 • இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிந்து பாராட்டுதல்.
 • ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்தல்.
 • பள்ளிகளுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல்.

அறிவியல் கண்காட்சி அமைக்கும் முறை

பொதுவாக அறிவியல் கண்காட்சியானது, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, மண்டலம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும் அமைப்புக் குழு கீழ்க்காணும் நான்கு நிலைகளைப் பின்பற்றலாம். அவையாவன,

 • திட்டமிடுதல்
 • பணிகளைப் பகிர்ந்தளித்தல்
 • செயல்படுத்துதல்
 • சீர்தூக்கிப் பார்த்தல்

திட்டமிடுதல்

திட்டமிடுதலின் போது கீழ்க்காணும் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 • அ) கண்காட்சி நடத்தப்படுவதன் நோக்கம்.
 • ஆ) வரம்புகள் - அனைத்துப் பள்ளிகளையும் இடம் பெறச் செய்வதா? அல்லது கண்காட்சி நடத்தும் பள்ளியின் படைப்புகள் மட்டும் போதுமா? என்னென்ன வகையான பொருள்களை இடம் பெறச் செய்ய வேண்டும்?
 • இ) மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
 • ஈ) கண்காட்சி நடைபெறும் இடம், காலம் மற்றும் நேரம்.
 • உ) தொடக்க மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டிய முறைகள்.
 • ஊ) கண்காட்சியில் இடம் பெறுபவைகளை சீர்தூக்கிப் பார்க்கும் குழு உறுப்பினர்கள், பரிசுகளின் எண்ணிக்கை மற்றும் பரிசுப் பொருள்கள்.

பணிகளைப் பகிர்ந்தளித்தல்

திட்டம் சார்ந்த பணிகளைத் திறம்பட மேற்கொள்ள கீழ்க்கண்ட குழுக்களை அமைக்க வேண்டும் : ஆலோசனைக் குழு, நிர்வாகக் குழு, நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் குழு, வரவேற்புக்குழு, பொருள்களை வைப்பதற்குரிய இட அமைப்புக் குழு, விளம்பரக் குழு, உதவிக் குழுக்கள்.

வேலைகளின் தன்மையைப் பொறுத்து குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை கண்காட்சி அமைப்புக் குழு தீர்மானிக்கலாம். ஆனால் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் போது ''இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”என்ற வள்ளுவனின் வாய்மொழியை மனதில் கொண்டு, மாணவர்களின் அறிவு மற்றும் செயலாற்றல்களுக்கு ஏற்ப, உரிய குழுவில் இடம் பெறச் செய்தல் வேண்டும்.

செயல்படுத்துதல்

 • ஒவ்வொரு குழுவும் உரிய காலங்களில் அதன் பணிகளை முழுமையாக, அனைவரும் பாராட்டும்படியாக, முடிப்பதற்கு பொறுப்பாசிரியர் குழு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தி, ஒருங்கிணைக்க வேண்டும்.
 • கண்காட்சி தொடங்குவதற்கு முதல் நாளன்று, கண்காட்சிப் பொருள்களை இடம் பெறச் செய்து, அனைத்தும் முறையாக குறியீடு செய்யப்பட்டு, சுயவிளக்கம் தரக்கூடிய வகையில் இருக்கும்படி உறுதி செய்ய வேண்டும்.
 • தேவையான இடங்களில் விளக்கம் அளிப்பதற்கு, பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களை இருக்கச் செய்து கண்காட்சி சிரமமின்றி நடைபெறுமாறு செய்தல் வேண்டும்.
 • பொதுமக்களுக்கும், பிற பள்ளி மாணவர்களுக்கும் அழைப்புக் கொடுத்து, பயன்பெறச் செய்தல் வேண்டும்.
 • தொடக்க நாளன்றும் இறுதி நாளன்றும் அறிவியல் ஆர்வமுள்ள முக்கியமான நபர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

சீர்தூக்கிப் பார்த்தல்

கண்காட்சியில் இடம் பெற்ற படைப்புகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தேவையான வழிகாட்டு கூறுகளும், அளவீட்டுக்கான உச்ச அளவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 • 30% மதிப்பெண்கள் - அறிவியல் அணுகுமுறை
 • 20% மதிப்பெண்கள் - சுயதன்மை
 • 20% மதிப்பெண்கள் - தொழில்நுட்ப வேலைத்திறன்
 • 10% மதிப்பெண்கள் - முழுமைத் தன்மை
 • 10% மதிப்பெண்கள் - தெளிவான விளக்கம், கவர்ச்சித் தன்மை
 • 10% மதிப்பெண்கள் - படைப்பாளருடன் நேர்முகத் தேர்வு

ஒவ்வொரு படைப்பையும் குழு சீர்தூக்கிப் பார்த்த பின்பு பொதுமக்களையும் மாணவர்களையும் காட்சிக்கு உள்ளே அனுமதிக்கலாம்.

மேலும் கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்த அமைப்புக் குழுவிலுள்ள உறுப்பினர்களும் மாணவர்களும் அமர்ந்து, நிகழ்ச்சிகளை நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களோடு ஒப்பிட்டு கலந்தாய்வு செய்து, அதன் மூலமாகக் பின்னூட்டத்தை (Feedback) வரும் காலங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அறிவியல் கண்காட்சிப் பதிவேட்டில் குறிப்பிட்டு வைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.23076923077
Priya Jun 20, 2020 04:13 PM

Useful

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top