பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / அறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அறிவியல் கண்காட்சி செயல் திட்ட முறை

அறிவியல் கண்காட்சி (Science Exhibition) செயல் திட்ட முறை (Project Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அறிவியல் கற்றல் - கற்பித்தலில் பல முறைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குறிப்பிட்ட முறையும் ஒரு சில பாடப்பகுதிகளைக் கற்றிட பொருத்தமானதாக அமையும். ஒவ்வொரு முறையிலும் ஒரு குறிப்பிட்ட அறிவியல் பண்பினை கற்போரிடத்தில் வளர்த்திட முடியும். எனினும் ஒவ்வொரு முறையும் அறிவியல் ஆர்வத்தையும், அறிவியல் மனப்பான்மையினையும், அனுபவத்தையும் கற்போரிடத்தில் ஏற்படுத்த வேண்டியது அவசியம். அறிவியலில் செயல்திட்டமுறை என்பது கருவிகளையும் (Equipments) பொருள்களையும் (Materials) பயன்படுத்தி கற்போர், தனியாகவோ, குழுவாகவோ பிரச்சனைக்கு தீர்வு காண்பதேயாகும். இம்முறை கீழ்க்கண்ட தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.

 • உற்றுநோக்கிக் கற்றல்
 • செய்து கற்றல்
 • முயன்று தவறிக் கற்றல்
 • வாழ்ந்து கற்றல்

இதில் வாழ்ந்து கற்றல் என்ற தத்துவமானது, மனிதன் குழுவாகக் கற்கும்போதே சிறப்பாகக் கற்கிறான் என்பதை வலியுறுத்துகிறது. மனிதன் ஒற்றுமையுடன் வாழ்வில் எழும் பிரச்சினைகளைத் தீர்க்க, பள்ளிகளில் அறிவியல் சார்ந்த பிரச்சினைகளைக் கொடுத்து தீர்வுகாண வாய்ப்பளிக்க வேண்டும். செயல்திட்டமுறை ஜான்டூயி (John Dewey) என்பவரால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வரையறை

கில்பாட்ரிக் (Kilpatrick) என்பவர், "செயல்திட்டமுறை என்பது சமூகச் சூழ்நிலையில் கற்போர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், ஒரு செயலில் முழு மனதோடு ஈடுபட்டு உண்மையைக் கற்றுக் கொள்ளும் முறையே ஆகும்'' என்கிறார்.

ஸ்டீவன்சன் (Stevenson) என்பவர், ''சமூகச் சூழலில் பிரச்சனைக்கு தீர்வு காணும் முறையே” என்று கூறுகிறார்.

எனவே, கற்போரை, கற்றலில் முழுமனதுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு புதியன புனைந்திடச் செய்ய வேண்டியது ஆசிரியரின் செயலாகும்.

நோக்கங்கள் (Objectives)

மாணவன், இயற்கை சூழல் (Physical Environmnet) மற்றும் உயிர்ச்சூழலில் (Biological Environment) உள்ள அறிவியல் உண்மைகளைக் கண்டறிவான். அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்வான். கருவிகள், சாதனங்களைக் கையாளுதல், சோதனை மேற்கொள்ளுதல், குழுவினருடன் இணைந்து செயல்படுதல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்வான்.

 • படைப்பாற்றலை (Creativity) வளர்த்துக் கொள்வான்.
 • ஆர்வம் பெறுவான்.
 • அறிவியல் உணர்வினைப் பெறுவான்.
 • அறிக்கை தயாரிக்கும் திறன் பெறுவான்.

செயல் திட்டங்களின் வகைகள் (Project - Types)

பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

பிரச்சனை தீர்க்கும் வகை (Problem Solving Type) : கற்போர் ஏற்கனவே அறிந்துள்ள தத்துவங்களை (Principles) சரி பார்க்கச் செய்யும் செயல் திட்டங்களை பிரச்சனை தீர்க்கும் வகை எனலாம். உதாரணம் : பள்ளியில் அறிவியல் பொருட்காட்சி அமைத்தல்.

சிறப்பு அறிக்கை வகை (Special Report Type) : கற்போர் தனித்தனியாக அறிவியல் சார்ந்த ஒரு பிரச்சனை குறித்து ஆய்வகத்தைப் பயன்படுத்தியும், நூலகத்தைப் பயன்படுத்தியும், செய்திகளையும், விவரங்களையும் சேகரித்து அதிலிருந்து முடிவு காணுதல் ஆகும். உதாரணம் : வாழையைத் தாக்கும் நோய்களையும், கட்டுப்படுத்தும் முறைகளையும் அறிதல்.

ஆராய்ச்சி வகை (Investigatory Type)

 • கற்போர் தம் நிலைக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் பிரச்சனைகளைத் தேர்வு செய்து, தனியாகவோ அல்லது குழுவாகவோ சோதனைகள் செய்து தகவல் சேகரித்து தொகுத்து, பகுத்து, ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடுவது இவ்வகை ஆகும்.
 • உதாரணம் : மின் சுற்றினைப் பயன்படுத்தி மின் கடத்தும் பொருள்கள் (Conductors), மின் கடத்தாப் பொருள்கள் (Non-conductors) ஆகியவற்றைப் பற்றிய தகவல் சேகரித்து அறிக்கையாகத் தயாரித்தல்.
 • இவ்வகையின் மூலம் ஆராய்வூக்கத்தினை வளரச் செய்திட முடியும். அறிக்கையில் நோக்கம், கருவிகள், பொருள்கள், செய்முறைகள், சேகரிக்கப்பட்ட தகவல்கள், சேகரித்த முறைகள் கண்டறிந்த முடிவுகள் அதிலிருந்து பெரும் உண்மைகள் ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட வேண்டும்.

செயல்திட்ட முறை

 • செயல்திட்டத்திற்கான சூழலை உருவாக்குதல்
 • செயல்திட்டத்தினை தேர்வு செய்தல்
 • செயல்திட்டத்தினை திட்டமிடல்
 • செயல்திட்டத்தினை செயல்படுத்துதல்
 • செயல்திட்டத்தினை மதிப்பிடல்
 • செயல்திட்டத்தினை பதிவு செய்தல்

செயல்திட்டத்திற்கானச் சூழலை உருவாக்குதல் (Providing Situation for a Project)

கற்போர், அறிவியல் நோக்கில் பல வினாக்களை எழுப்பி அதன்வழியே செயல்திட்டத்திற்கான தலைப்பை தேர்வு செய்திட வாய்ப்பளிக்கும் வண்ணம் சூழலை ஆசிரியர் ஏற்படுத்தித்தர வேண்டும். சில தலைப்புகளை ஆசிரியரும் கூறலாம். கற்போரின் வயது, வகுப்பு, பாடப்பொருள் திறமை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் கற்போரிடம் உரையாடி தலைப்பை தேர்வு செய்யலாம். செயல்திட்டத்தினை பள்ளியிலோ, வீட்டிலோ, வெளியிலோ எங்கு வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

இது போன்ற ஒரு செயல்திட்டத்தினை ஆசிரியரும், மாணவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் பல களங்களில் செயல்திட்டம் மேற்கொள்ள இயலும் என்பதை கற்போர் அறிய முடியும்.

செயல்திட்டத்தினைத் தேர்வு செய்தல் (Selecting a Project)

செயல்திட்டத்தினை தேர்வு செய்யும்போது கீழ்க்கண்ட கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும்

 • கற்போரின் கல்வி நோக்கம் நிறைவேறக் கூடியதாக தேர்வு செய்ய வேண்டும்.
 • கற்போரின் அறிவு நிலைக்கேற்ப தேர்வு செய்தல் வேண்டும்.
 • கற்போரே, தம் ஆர்வத்திற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.
 • செயல்திட்டம் மேற்கொள்ளத் தேவையான வசதிகளை அறிந்தபிறகு தேர்வு செய்ய வேண்டும்.
 • குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படியாக தேர்வு செய்ய வேண்டும்.
 • சூழலுக்கேற்பவும், பயனுள்ளதாகவும், கற்றல் அனுபவங்களை தரக்கூடியதாகவும் செயல்திட்டம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

செயல்திட்டத்தினைத் திட்டமிடுதல் (Planning a Project)

 • தேர்வு செய்யப்பட்ட செயல்திட்டத்தினை செயல்படுத்தத் தேவையான பொருள்கள், கருவிகள், செய்ய வேண்டிய முறை, தகவல் சேகரித்தல் அவற்றை பகுத்தாய்தல் பற்றியும் திட்டமிடல் வேண்டும்.
 • குழுச் செயல்திட்டமாக இருப்பின் யார் எச்செயலை மேற்கொள்ள வேண்டும்? என்பதை அவரவர் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வழங்க வேண்டும்.
 • கற்போர் வல்லுநரிடம், கலந்துரையாடியும் திட்டமிடல் வேண்டும்.
 • ஆசிரியர் திட்டமிடலில் கற்போருக்கு உதவிட வேண்டும்.

கற்போர், இயற்பியல் பேராசிரியரை அணுகி சூரிய சக்தியில் இயங்கும் கருவிகள் / சாதனங்கள் என்ற தலைப்பினைக் கூறி கலந்துரையாடுகின்றனர். பிறகு என்னென்ன கருவிகள் / சாதனங்கள் உள்ளன என்பதை பட்டியலிடுகின்றனர்.

 • சூரிய நீர் சூடேற்றும் கருவி (Solar Water Heater)
 • சூரிய உணவு சமைப்பான் (Solar Cooker)
 • சூரிய கால்குலேட்டர் (Solar Calculator)
 • சூரிய கடிகாரம் (Solar Watch)
 • சூரிய விளக்கு (Solar Lamp)
 • சூரிய சமிக்ஞை (Solar Signal)

பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு சூரிய சாதனம் பற்றி அறிந்து வர பணி ஒதுக்கப்படுகிறது. அதன் பின் குழுவினர் குழுவாகச் செய்ய வேண்டியது பற்றியும் தனியாக செய்ய வேண்டியது பற்றியும், எங்கு மேற்கொள்ளலாம், எந்த முறையில் செய்யலாம், என்ன பொருள்கள் தேவை என்பதையும் திட்டமிடுகின்றனர்.

உதாரணமாக, சூரிய நீர் சூடேற்றும் கருவி இருக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, கலந்துரையாடி, தகவல் சேகரித்து மேலும் நூலகத்தில் இருந்து விவரங்களை சேகரிப்பது உட்பட திட்டமிடுகின்றனர். இதன்மூலம் திட்டமிடும் பண்பினைக் கற்போரிடம் வளர்க்க முடியும்.

செயல்திட்டத்தினைச் செயல்படுத்துதல் (Execution of a Project)

 • ஆசிரியர், கற்போருக்குத் தேவையான கருவிகள் / சாதனங்கள், அவற்றிலுள்ள நுட்பங்கள் பற்றி அறிய வழிகாட்டி, செயல்திட்டத்தை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.
 • செயல்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு கற்போருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.
 • செயல்திட்டம் மேற்கொள்ளும் போது ஏற்படும் சிக்கல்களை கற்போரே சமாளிக்கவும், செயல்படுத்திடவும் ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.
 • ஒவ்வொரு உறுப்பினரும் தன் பணியினை சரியாக செய்கின்றாரா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
 • சோதனை செய்தல், உற்றுநோக்கல், தகவல் சேகரித்தல் போன்றவற்றைச் செயல்படுத்திட வழிகாட்ட வேண்டும்.
 • இச்செயல் மூலம் கற்போர், புள்ளி விவரங்கள், சேகரித்தல், உற்றுநோக்கல், பகுத்தாய்தல், வகைப்படுத்துதல், குழுவாகவும், தனியாகவும் செயல்படுதல், புதியன புனைதல் போன்ற திறன்களைப் பெறுகின்றனர்.

செயல்திட்டத்தை மதிப்பிடல் (Evaluation of a Project)

 • கற்றல் நோக்கம் நிறைவேறியதா என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்திட்டத்தை மதிப்பிடல் வேண்டும்.
 • அதன் தரத்தினைப் பார்த்து மதிப்பிட வேண்டும்.
 • செயல்திட்டம் பயனுள்ள வகையில் அமைந்ததா? புதிய கருத்துக்களைக் கற்றுக் கொண்டனரா? புதிய திறன் பெற்றுள்ளனரா? என்பதை வைத்து மதிப்பிடல் வேண்டும்.
 • செயல்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களை அடிப்படையாக வைத்தும் மதிப்பிடலாம்.
 • சூரிய சக்தியால் இயங்கும் கருவிகளைப் பட்டியலிடவும். சூரிய தெருவிளக்கின் அமைப்பை வரைபடத்துடன் விவரிக்கவும். சூரிய சிக்னல் செயல்படும் விதம் பற்றி விளக்கவும். சூரிய சமைப்பான் எவ்வகையில் சிறந்தது எனக் கூறவும் போன்ற வினாக்கள் மூலம் இச்செயல்திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேறி உள்ளனவா? என்பதை மதிப்பிடல் வேண்டும். மேலும் குழுவினர் பெற்ற அனுபவங்களைக் கூட மதிப்பிடலாம்.
 • செயல்திட்டத்தை ஆசிரியரோ அல்லது புறத் தேர்வாளரோ மதிப்பிடலாம். இதன் மூலம் கற்போரிடம், உழைப்பின் அருமை, செயலில் உண்மைத்தன்மை போன்ற பண்புகளை வளர்க்க முடியும்.

செயல் திட்டத்தினை பதிவு செய்தல் (Recording a Project)

 • செயல்திட்டம் மேற்கொண்டதிலிருந்து ஒவ்வொரு படியிலும் நிகழ்வுகளையும், செய்திகளையும், விவரங்களையும் பதிவு செய்து கொண்டே வர வேண்டும்.
 • மேற்கோள் நூல்கள், இணையதளங்கள், குறுந்தகடுகள், சஞ்சிகைகள், அறிவியல் களஞ்சியங்கள் ஆகியவை பற்றியும் பதிவு செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.
 • அவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்ட தலைப்புகளோடு அறிக்கை தயாரித்திட வேண்டும்.

செயல்திட்ட முறையில் ஆசிரியரின் பங்கு (Role of the Teacher)

 • கற்போரின் நிலைக்கேற்பவும், பாடத்திட்டத்திற்கேற்பவும் பல்வேறு செயல்திட்டங்களை ஆசிரியர் சேகரித்து வைக்கலாம்.
 • செயல்திட்டத்தினை கற்போரே தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
 • குழுக்கள் அமைப்பதிலும், பணி ஒதுக்கீடு செய்வதிலும், ஒருங்கிணைத்தலிலும் ஆசிரியர் உதவிட வேண்டும்.
 • ஆய்வகத்தைப் பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளவும், நூலகத்தைப் பயன்படுத்திடவும், வல்லுநரை சந்தித்திடவும் ஆசிரியர் கற்போருக்கு உதவிட வேண்டும்.
 • செயல்திட்டத்தினை திட்டமிடவும், திட்டமிட்டபடி செயல்கள் மேற்கொள்ளவும் ஆசிரியர் உதவிட வேண்டும்.
 • செயல்திட்டத்தினை வல்லுநரும், ஆசிரியரும் மதிப்பிட வேண்டும்.
 • செயல்திட்ட அறிக்கையினை சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

செயல்திட்ட முறையின் நன்மைகள் (Merits)

 • கற்போருக்கு சமூகச் சூழலில் செயல்திட்டம் மேற்கொள்ள சுதந்திரம் கிடைக்கிறது.
 • செயல்திட்டத்தை, கற்போர் தாங்களாகவே தேர்ந்தெடுத்து செய்வதால் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடிகிறது.
 • கற்போரின் திறமைக்கும், ஆர்வத்திற்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆய்வு செய்யும் சிந்தனையை வளர்க்கிறது.
 • செயல்திட்டத்தில் உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் அவற்றின் சமமான வளர்ச்சி சாத்தியமாகிறது.
 • தேர்ந்தெடுக்கப்படும் செயல்திட்டம் வாழ்க்கைச் சூழலில் உள்ள ஒரு பிரச்சனை சார்ந்து இருப்பதால் அப்பிரச்சனையைத் தீர்க்க செயல் திட்டத்தின் மூலம் கிடைத்த முடிவுகளைப் பயன்படுத்தலாம்.
 • சமூக இடைவினை புரிதல் (Social Interaction), ஒத்துழைப்பு நல்குதல் (Co-operation) போன்ற பண்புகளை வளர்க்கிறது. குழுவாகச் செயல்படும் பண்பை வளர்க்கிறது.
 • குழுவில் ஒவ்வொருவரும் தன் பங்கினை ஆற்றுவர். அனுபவம் வாயிலாக கற்பதால் கற்றல் நிலைத்திருக்கும். அவரவர் வேகத்திற்கேற்ப திட்டமிட்டு செயல்படுவர். கற்றதை வாழ்வில் பயன்படுத்த முடியும்.
 • தன்னம்பிக்கை, விடாமுயற்சி, குழுமனப்பான்மை வளர வாய்ப்பிருக்கிறது.
 • கற்போர் மனநிறைவும், மகிழ்ச்சியும் பெறுவர்.

செயல்திட்ட முறையின் வரம்புகள் (Limitations)

அதிக நேரம் செலவாகும் என்பதால் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடத்திட்டத்தை முடிக்க இயலாது. சில செயல்திட்டங்களில் செலவு அதிகரிக்கும். ஆசிரியரின் முழு ஈடுபாடு இல்லாவிடில் எதிர்பார்த்த பலனைத் தராது. தேவையான புத்தகங்கள், பொருள்கள் கிடைக்காவிடில் செயல்படுத்துவது கடினம். ஆசிரியர் - மாணவர் விகிதம் அதிகமெனின் செயல்படுத்துவது கடினம். ஆசிரியர் இம்முறையில் பயிற்சி பெறாதவராயின் செயல்படுத்துவது கடினம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.6
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top