பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அறிவியல் மன்றம்

அறிவியல் மன்றம் (Science Club) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மாணவரின் முழுமையான வளர்ச்சிக்குப் பயன்படும், அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பே அறிவியல் மன்றமாகும். இது, வகுப்பறையில் வாய்ப்பு தரமுடியாத கலைத்திட்டம் சார்ந்த பல்வேறு இணைச் செயல்பாடுகளை அமைத்துக் கொடுத்து, மாணவரின் ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பள்ளிகளில் அறிவியல் மன்றம் அமைப்பதன் முக்கியத்துவம்

 • பொதுவாக தொடக்கக் கல்வி நிலையில் பயிலும் மாணவர் பொருள்களை உற்று நோக்கவும், கையாளவும், சோதனைகள் அமைக்கவும், புதியன உருவாக்கவும், பொருள்களைப் பகுத்தாயவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். அதற்கான வாய்ப்புகள் கட்டுப்பாடுடைய வகுப்பறைச் செயல்பாடுகள் வாயிலாகக் கிடைப்பதில்லை.
 • மேலும் நேரடி அனுபவங்கள் கிடைக்காத வகுப்பறைச் சூழல்கள் பெரும்பாலும் இருப்பதால், அறிவியல் தத்துவங்கள், கொள்கைகள், பொது விதிகள் போன்றவைகளைப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் நிலைக்கு மாணவர் தள்ளப்படுகின்றனர்.
 • இதன் விளைவாகத் தேர்ச்சி விழுக்காடு குறையவும், மன நலம் பாதிக்கப்பட்டு அறிவியல் கற்கும் ஆர்வம் குறையவும் வாய்ப்புகள் உருவாகின்றன. இவைகளுக்கெல்லாம் ஒரு வடிகாலாக அமைவது அறிவியல் மன்றச் செயல்பாடுகளாகும்.
 • மாணவர் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், அவைகளை வெளிக் கொணரவும், அறிவியல் அறிவை முழுமையாகப் பெறவும், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவும், அறிவியலை உண்மையான ஆர்வத்துடன் கற்கவும், பயனுள்ள பொழுதுபோக்குச் செயல்களில் ஈடுபடவும் அறிவியல் மன்றச் செயல்பாடுகள் உதவுமென்பதால் ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் மன்றம் அமைக்கப்பட்டு, அது முறையாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

அறிவியல் மன்றங்களின் வகைகள்

அறிவியல் மன்றங்களை நோக்கங்களின் அடிப்படையில் இருவகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன,

 • பொது (நோக்கம் சார்ந்த) அறிவியல் மன்றம் (General Science Club)
 • சிறப்பு (நோக்கம் சார்ந்த) அறிவியல் மன்றம் (Specialised Science Club)

அறிவியல் மன்றத்தின் பொது நோக்கங்கள்

 • மாணவரிடத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்.
 • அறிவியல் முறையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறனை வளர்த்துக் கொள்வதில் பயிற்சி அளித்தல்.
 • ஆராயும் திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்த்தல்.
 • பயனுள்ள அறிவியல் பொழுதுபோக்கு வேலைகளில் ஈடுபடும் ஆர்வத்தினை வளர்த்தல்.
 • அறிவியல் அறிவை வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்தும் திறனை உருவாக்குதல்.
 • நற்காரியங்களை செய்து முடிப்பதில் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்தல்.
 • நவீன கால அறிவியல் வளர்ச்சிகளையும், மனித வாழ்வில் அவைகளின் தாக்கங்களையும் குறித்து அறிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தல்.
 • அருகிலுள்ள பிற பள்ளிகளில் செயல்படும் அறிவியல் மன்றங்களுடன் தொடர்பு கொண்டு அறிவியல் கருத்துகளைப் பறிமாறிக் கொள்ளும் திறன் வளர்த்தல்.

அறிவியல் மன்றத்தின் அமைப்பு

பொது அறிவியல் மன்ற அமைப்பும், சிறப்பு அறிவியல் மன்ற அமைப்பும் கீழே குறிப்பிட்டுள்ள பொறுப்பாளர்களைக் கொண்டு செயல்படலாம்.

ஆதரவாளர் (Patron)

பள்ளியின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஆதரவாளராக செயல்படுவார். கழகச் செயல்பாடுகள் அனைத்தும் பயனுள்ள வகையில் அமைவதற்குத் தேவையான வசதிகளையும் ஒத்துழைப்பையும் நல்குவார். மன்றத்தைச் சார்ந்த அனைவரும் இவருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

அமைப்பாளர் (Sponsorer)

அமைப்பாளர் மன்றத்தின் ஆணிவேராவார். எனவே பள்ளியில் பணியாற்றும் ஆர்வமுள்ள, அறிவு முதிர்வு பெற்ற அறிவியல் ஆசிரியர் அமைப்பாளராகச் செயல்பட வேண்டும். இவர் மன்றச் செயற்குழு உறுப்பினர்களைத் திறம்பட வழிகாட்டி, செயல்பாடுகள் அனைத்தும் செவ்வனே நடைபெற பக்க பலமாகத் திகழ்வார்.

செயற்குழு (Executive committee)

இக்குழுவில் தலைவர், செயலர், உதவிச் செயலர், பொருளாளர், நூலகர், பொருள் வைப்பறை அலுவலர், விளம்பர அலுவலர், வகுப்பறைப் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். இவர்கள் அனைவரும் மன்றப் பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓராண்டு முழுமைக்கும் பொறுப்பு வகிப்பார்கள்.

உறுப்பினர்கள் (Members)

அறிவியல் பாடம் கற்கும் சுமார் 25 மாணவர்களை மட்டும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளலாம். மன்றத்தில் சேர வேண்டுமென மாணவர்களை வற்புறுத்தாமல் ஆர்வமுள்ளவர்களை மட்டுமே உறுப்பினர்களாக்குவது சிறந்த பயனை அளிக்கும்.

மன்றம் செயல்படுவதற்கான வழிமுறைகள்

 • அமைப்பாளராக செயல்படும் ஆசிரியர் அறிவியல் மன்றம் அமைப்பது குறித்து ஆதரவாளருடன் கலந்தாலோசித்து மன்றத்திற்குப் பெயர் சூட்ட வேண்டும்.
 • மன்றத்தின் நோக்கங்களை வரையறை செய்ய வேண்டும். நோக்கங்களைத் தெளிவாக, அறிவியல் கற்கும் மாணவர்களிடம் விளக்க வேண்டும்.
 • ஆரம்பத்தில் மன்றத்தில் சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களில் சிலரை செயற்குழு உறுப்பினர்களாக ஆதரவாளரின் ஒப்புதலுடன் நியமிக்கலாம்.
 • மன்றத்தில் சேர விரும்பும் மாணவர்களை எழுத்துப் பூர்வமாக, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் மன்றச் செயலருக்குத் தெரிவிக்கும்படி அறிவுறுத்தல் வேண்டும்.
 • தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்த்ததும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டச் செய்து, ஓட்டெடுப்பு வாயிலாக ஜனநாயக முறைப்படி, அமைப்பாளர் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் சிலரை செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • அமைப்பாளர், தேர்வு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி உறுப்பினர்களின் பணிகளையும், பேணவேண்டிய ஆவணங்களையும், அறிக்கைகளையும் விளக்கிக் கூற வேண்டும்.
 • உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத்தொகையை ஆதரவாளரின் ஆலோசனைப்படி அஞ்சல் நிலையம் அல்லது அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் செலுத்தி கணக்கு வைத்துக் கொள்ள வழிகாட்ட வேண்டும்.
 • இவ்வாறான அமைப்பு தொடர்பான செயல்களையும் பின்பு, ஓராண்டில் மேற்கொள்ள வேண்டிய நோக்கங்கள் அடிப்படையிலான செயல் திட்டங்களையும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்து, பிறகு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
 • செயல் திட்டங்களின் அடிப்படையில் மன்றச் செயல்பாடுகளை மேற்கொள்ள அமைப்பாளர் உரிய காலங்களில் வழிகாட்ட வேண்டும்.
 • ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்பும் செயல்பாடு குறித்த நிறை, குறைகளை அமைப்பாளர் முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் விவாதிக்கலாம்.
 • குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் கூட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று முறைகள் கூட்டங்களில் பங்கேற்கவில்லையெனில், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விடலாம்.
 • மேலும் திறமையின்றி ஆர்வமில்லாமல் செயல்படும் உறுப்பினர்களையும் நீக்கி விடலாம். உறுப்பினர்களை நீக்குவதற்கு செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 • அறிவியல் மன்றம் உயிரோட்டமுள்ளதாகத் திகழ வேண்டுமெனில், அமைப்பாளராகச் செயல்படும் ஆசிரியர் சிறந்த ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு மன்றத்திற்கு ஓர் அச்சாணியாக இருக்க வேண்டும்.

அறிவியல் மன்றச் செயல்கள்

மன்றத்தின் மனம் பிற மன்றச் செயல்களைத் தீர்மானிக்கும் போது, மன்றத்தின் நோக்கங்கள், செயல்களுக்குத் தேவையான காலங்கள், பொருளாதாரங்கள் போன்றவைகளை மனதில் கொள்ள வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் செயல்கள், அனைத்து உறுப்பினர்களும், பிற மாணர்வகளும் ஆர்வமுடன் ஈடுபடும்படியாக இருத்தல் வேண்டும்.

செயல்கள்

 • தற்காலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பான அறிவியல் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து கலந்துரையாடல்கள், விவாதங்கள், கருத்தரங்குகள் போன்றவைகளை நடத்துதல்.
 • வினாடி - வினாக்கள், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், பேச்சு போன்ற செயல்களை உள்ளடக்கிப் போட்டிகள் நடத்துதல்.
 • அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு களப்பயணங்கள் / கல்விப் பயணங்கள் மேற் கொள்ளல்.
 • அறிவியல் கண்காட்சி நடத்துதல்.
 • அரிய பொருள்களைச் சேகரித்து, பதப்படுத்தி பொருட்காட்சி அமைத்தல்.
 • மாணவர்கள் அன்றாடம் வாழ்க்கையில் பயன்படுத்தும் எழுதும் மை, சோப்பு, மெழுகுவர்த்தி, பினாயில் போன்றவைகளைத் தயாரித்துக் காட்டி, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
 • அறிவியல் தொடர்பான சிறப்புப் பேச்சாளர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்துதல்.
 • அறிவியல் நாள் மற்றும் அறிவியல் அறிஞர்களின் பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடுதல்.
 • போலியோ சொட்டு மருந்து கொடுத்தல், இரத்ததானம், கண் சிகிச்சை போன்ற முகாம்களில் தொண்டு செய்தல்.
 • காலநிலைக் குறிப்புகள் மற்றும் அறிவியல் சார்ந்த நவீன செய்திகளைத் தொகுத்து நூலாக வெளியிடல்.
 • சுற்றுச்சூழல் மன்றம் (Eco-Club) எனத் தனி மன்றம் அமைத்து சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பதில் பயிற்சி அளித்தல்.

மாணவர்களுக்கு நேரடி அனுபவங்களை அளித்து நிலையான நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தப் பயன்படும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மூலகாரணியான அறிவியல் மன்றம் ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top