பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

களப்பயணம்

களப்பயணம் (Field Trip) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அனைத்து வயதினரும் மகிழ்வோடு ஈடுபடும் களப்பயணம், கல்வி கற்பதற்குரியதொரு கற்போர் மையமான சிறந்த முறையாகும். இது கற்போருக்கு நேரடி அனுபவங்களை அளித்து, கற்கும் ஆர்வத்தினைத் தூண்ட வல்லது.

கற்போரை நான்கு சுவர்களுக்குள் அமர்த்தி, ஐம்புலன்களை முழுமையாகப் பயன்படுத்திக் கற்பதற்கு வாய்ப்பு அளிக்காமல், அறிவியல் கருத்துகள் விளக்கப்படும் போது, கருத்துகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுத்திக் கற்க இயலாமல் செய்கிறோம். மேலும் குழந்தைகளின் சுதந்திரப் போக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் போது கற்றலை சுமையாக எண்ணும் நிலை ஏற்படுகிறது. இவைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது களப்பயண முறையாகும்.

களப்பயணத்தின் முக்கியத்துவம்

 • அறிவியல் பாடம், கருத்துகளைக் கற்றுக் கொள்ள உதவுவதால் நேரடி அனுபவங்களை, வகுப்பறை, ஆய்வகம், களப்பயணம் / வெளிப்பயணம் என வெவ்வேறு வழிமுறைகளில் வழங்கலாம். இதில் களப்பயண முறை, பிறவழி முறைகளை விட கற்போரைக் கவர்ந்த முறை என்பதே உண்மையாகும். ஏனெனில் கற்க வேண்டிய கருத்துகளோடு தொடர்புடைய பொருள்களை செயலாற்றும் நிலையிலும், இயற்கையான நிலையிலும் நேரடியாகக் கண்டு கருத்துத் தெளிவு பெறுவதோடு, மகிழ்ந்து, பரவசத்துடன் பாராட்டவும் வாய்ப்புகள் இம் முறையில் கிடைக்கின்றன.
 • களப்பயணத்தின் போது பொருள்களை நேரடியாக உற்று நோக்குதல், பொருள்களைக் கையாளுதல், சூழலை ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்தல், சேகரித்தத் தகவல்களை வகைப்படுத்துதல், தகவல்களின் அடிப்படையில் முடிவுக்கு வருதல் போன்ற அறிவியல் மனப்பான்மை சார்ந்த செயல்களில் கற்போர் ஈடுபடுத்தப்படுவதால், பொருளுணர்ந்து கற்று, புதிய சூழலில் பெற்ற அறிவைப் பயன்படுத்தும் திறனையும் பெறுகிறார்கள்.
 • இதனால் கற்பவை நீண்ட நாட்கள் மனதில் நிலைத்திருப்பதோடு அறிவியல் கற்பதில் ஆர்வம் மேலோங்குகிறது. இக்கருத்தை எட்கர்டேல் (1960) தனது ஆராய்ச்சியின் முடிவாக அமைக்கப்பட்ட அனுபவக் கூம்பு மூலம் நமக்கு உணர்த்துகிறார். அதாவது, நேரடி அனுபவங்களே கற்றலில் நற்பயனை அளிக்கக் கூடியவை என்பதாகும்.
 • இவ்வாறு கற்றலுக்குத் துணை செய்யும் களப்பயண முறையை அறிவியல் கற்பிக்கக் கையாண்டு, கற்போரின் ஆளுமை வளர்ச்சிக்கு வழி கோல வேண்டும்.

களப்பயணம் - வரையறை

பாடக் கருத்துகளோடு தொடர்புடைய இயங்கும் அல்லது இயங்கா நிலையிலுள்ள, இயற்கை அல்லது செயற்கை சூழலில் காணப்படும் உயிர் அல்லது உயிரற்ற பொருள்களை நேரடியாகப் புலன்களை உட்படுத்தி கற்பதற்குரிய இடங்களுக்கு பள்ளியின் வாயிலாக மேற்கொள்ளப்படும் கல்விப் பயணமே களப்பயணம் எனப்படுகிறது.

களப்பயணம் மேற்கொள்ளப் பின்பற்றப்படும் படிநிலைகள்

களப்பயணம் வாயிலாகக் கற்போரிடம் தேவையான கற்றல் அனுபவங்களை அளித்து, கற்றல் அடைவுகளை எதிர்பார்க்கும் ஓர் ஆசிரியர், முதலில் களப்பயண நோக்கத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள நான்கு நிலைகளையும் முழுமையாகத் தவறாது மேற்கொள்ள வேண்டும். அவையாவன:

 • திட்டமிடுதல் (Planning)
 • ஏற்பாடுகள் செய்தல் (Preparation)
 • பயணம் மேற்கொள்ளல் (Execution)
 • மதிப்பீடு செய்தல் (Evaluation)

திட்டமிடுதல் (Planning)

இது முதன்மையான, முக்கியமான நிலையாகும். திட்டமிடுதல் தெளிவாக இருந்தால் பயணம் பயனுள்ளதாக அமையும் என்பது உண்மை. எனவே, திட்டமிடும் போது களப்பயண நோக்கத்தை ஆசிரியர் தெரிந்திருப்பதோடு பயண பங்கேற்பாளர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், களப்பயணம் மேற்கொள்ளத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடங்கள், களப்பயண பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை களப்பயணத்திற்குத் தேவையான நாட்கள் போக்குவரத்துக்கும் களத்திலும் செலவிட வேண்டியதற்குமான மொத்த கால அளவு களப்பயண இடங்களைக் குறித்த செய்திகள் களப்பயண போக்குவரத்து வழிமுறைகள் மற்றும் வசதிகள் எதிர்பார்க்கப்படும் செலவினங்கள் மற்றும் செலவுத் தொகை முன் அனுமதி பெற வேண்டிய அதிகாரிகள் / பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் களப்பயணத்தின் போது ஆசிரியர்கள் மற்றும் கற்போர் கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள், கற்போரின் பெற்றோரிடம் கொடுக்க வேண்டிய பயணத் திட்ட நகலின் படிவம் போன்றவைகள் குறித்து இந்நிலையில் சரியாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏற்பாடுகள் செய்தல் (Preparation)

திட்டமிட்டபடி செயலாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது களப்பயணத்தை முன்னின்று நடத்தும் ஆசிரியரின் கடமையாகும். அவ்வாறு ஈடுபடும் போது, தன்னுடன் பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் கற்போரை செயல்பாடுகளில் ஈடுபடுத்தி பொறுப்பாசிரியர் ஓர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படலாம்.

முன்னேற்பாட்டுச் செயல்பாடுகளை ஆசிரியர்களுக்கும் கற்போருக்கும் பகிர்ந்தளிக்கும் போது, அவர்களின் செயல்திறன்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்நிலையில் செய்ய வேண்டுவன

களப்பயணமாக அழைத்துச் செல்லும் கற்போரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வயது, உடன் வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆகியவைகளையும், செல்ல வேண்டிய இடங்கள் களப்பயண நாட்கள், பயண அட்டவணை ஆகியவைகளையும் பேருந்தின் வாயிலாக பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தால் பேருந்து உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும்; தொடர் வண்டியின் வாயிலாகச் செல்லத் திட்டமிட்டிருந்தால் உரிய அலுவலருக்குத் தலைமையாசிரியர் மூலமாக விண்ணப்பித்துத் தேவையான சலுகைகளை அனுபவிக்க முன் கூட்டியே அனுமதி பெறுதல் வேண்டும். பேருந்து, தொடர்வண்டி அல்லது நடைபயணம் ஆகிய முறைகளில் எந்த முறையில் களப்பயணம் மேற்கொண்டாலும், பங்கேற்கும் குழந்தைகளை குழுக்களாகப் பிரித்து, குழுத்தலைவனைத் தேர்ந்தெடுத்து உடன் வரும் ஆசிரியர்களிடம் குழுக்களை ஒப்படைத்தல் வேண்டும்.

பள்ளி நிர்வாகம் அல்லது அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெறுவதோடு, குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து அவர்களைக் களப்பயணம் அழைத்துச் செல்வதற்கான ஒப்புதல் கடிதங்களையும் பெறுதல். அவ்வாறு ஒப்புதல் கடிதம் பெறப் பணிக்கும் போது பயண அட்டவணையை ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ளுவதற்குரிய தொலைபேசி எண்களோடு கொடுத்தல் வேண்டும்.

களப்பயணமாகச் சென்று பார்க்க வேண்டிய இடங்களிலிருந்து முன் அனுமதி பெற வேண்டுமெனில் தலைமையாசிரியர் வாயிலாக முன் கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெறுதல். மேலும், பயணத்தின் போது தங்க வேண்டிய இடங்கள் திட்டத்தில் இடம் பெற்றிருப்பின் அவ்விடங்களின் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு, தங்கும் காலங்களைத் தெரிவித்து முன் அனுமதி பெறுதல் வேண்டும்.

களப்பயணம் மேற்கொள்ளும் இடங்களைப் பற்றிய முன்னறிவை ஆசிரியர் பெற்று, அவ்விடங்களைப் பற்றிய சிறுகுறிப்புகள், உற்று நோக்கி சேகரிக்க வேண்டிய செய்திகள் மற்றும் பொருள்கள், அதிக கவனம் தேவைப்படும் இடங்கள் போன்றவைகளையும் பயணத்தின் போது கொண்டு வரவேண்டிய அடிப்படை தேவைக்குரிய பொருள்களைப் பற்றியும் குழந்தைகளிடம் தெரிவித்தல் வேண்டும்.

இவ்வாறான முன்னேற்பாடுகளை ஆசிரியர்களையும் குழந்தைகளையும் இணைத்து செய்யும் போது, பயணத்தில் அனைவரும் பொறுப்புணர்வோடும், மிகுந்த ஈடுபாட்டுடனும் நடந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.

பயணம் மேற்கொள்ளல் (Execution)

திட்டமிட்டபடி முன்னேற்பாடுகளைத் திறம்பட செய்து முடித்திருந்தால் பயணம் சிரமமின்றி அமைவது திண்ணம் என்பதை பொறுப்பாசிரியர் மனதில் கொள்ள வேண்டும்.

பயணம் மேற்கொள்ளும் போதும், பார்வையிடும் இடங்களிலும் ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பிலுள்ள குழந்தைகளைக் கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரப் போக்கில் செயல்பட அனுமதிக்கலாம். திட்டமிட்டபடி பயணம் அமைய, ஒதுக்கப்பட்ட கால அளவைக் கருத்தில் கொண்டு, தேவை ஏற்படும் இடங்களில் துரிதமாகவோ அல்லது மெதுவாகவோ செயல்களில் ஈடுபட வேண்டும்.

அதே நேரத்தில் களப்பயண நோக்கம் நிறைவேறுவதற்கேற்ப குழந்தைகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் அவர்களைக் கேள்விகள் கேட்குமாறும், செயல்களில் பங்கேற்குமாறும் செய்தல் வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் குழந்தைகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்களை, அவர்களின் வயது மற்றும் அனுபவங்களை மனதில் கொண்டு, ஊக்கப்படுத்தும் வகையில் அளிக்க வேண்டும்.

மதிப்பீடு செய்தல் (Evaluation)

களப்பயணம் முடிந்த ஓரிரு நாட்களில் மதிப்பீடு செயலில் ஈடுபடுதல் வேண்டும். இச் செயலின் போது, களப்பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளின் நிறை, குறைகள் யாவை? என்பன போன்றவைகளை கண்டறியும் நோக்கங்களை மையமாகக் கொண்டு பொறுப்பாசிரியர் செயல்பட வேண்டும்.

 • களப்பயணக் குறிக்கோளின் அடைவைக் கண்டறிய, கீழே குறிப்பிட்டுள்ளவை போன்ற செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அவர்களுடைய செயல்பாடுகளின் வெளிப்பாடுகளைக் கணித்தல் வேண்டும்.

குழந்தைகளுக்கான செயல்பாடுகள்

 • மேற்கொள்ளப்பட்ட களப்பயணம் பற்றி கட்டுரை எழுதுதல். களப்பயணத்தின் போது சேகரிக்கப்பட்டப் பொருள்களை அல்லது செய்திகளை வகைப்படுத்தி, விளக்கிக் கூறுதல்.
 • உற்று நோக்கப்பட்ட பொருள்களின் மாதிரிகளை அமைத்து வழங்குதல்.
 • உற்று நோக்கப்பட்டவைகளின் படங்களை வரைந்து வண்ணம் தீட்டுதல்.
 • படத் தொகுப்புகள் தயாரித்தல்.
 • களப்பயண அனுபவங்கள் குறித்து வகுப்பறையில் பேசுதல்.
 • மேலும் நடந்து முடிந்த களப்பயணச் செயல்களின் நிறைகள் மற்றும் குறைகள் குறித்து உடன் வந்திருந்த ஆசிரியர்களையும், குழந்தைகளையும் கருத்துக்கூறச் செய்ய வேண்டும்.
 • பெறப்பட்ட அனைத்து கருத்துகளையும் தொகுத்து, பின்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் களப்பயணத்தின் போது பயன்படுத்துவதற்கேற்ப களப்பயண ஏடுகளில் பதிவு செய்தல் வேண்டும்.

களப்பயணத்திற்கான இடங்கள்

களப்பயணங்கள் பயனுள்ளதாக அமைய வேண்டுமெனில் குழந்தைகளின் அறிவியல் பாடங்களோடு தொடர்புடைய பொருள்கள் இருக்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அறிவியல் பாடங்களை ஆய்ந்து, களப்பயணங்கள் தேவைப்படும் பாடப்பகுதிகளை அடையாளம் கண்டு, அதற்குரிய இடங்களையும் குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

பொதுவாகக் களப்பயணம் மேற்கொள்ளப்படும் சில இடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன:

 • தோட்டங்கள்
 • மாடு, ஆடு, கோழி வளர்ப்புப் பண்ணைகள்
 • சரணாலயங்கள்
 • மிருகக்காட்சியகங்கள்
 • தேனீ வளர்க்குமிடங்கள்
 • காய்கறிச் சந்தைகள்
 • சோப்பு தயாரிக்குமிடங்கள்
 • பழக்கூழ் தயாரிக்குமிடங்கள்
 • உணவுப் பொருள்கள் பதப்படுத்துமிடங்கள்
 • வீடு கட்டுமிடங்கள்
 • மீன் காட்சியகங்கள்
 • நீரோடைகள்

களப்பயணம் மேற்கொள்ளும் போது ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

 • பாடக்கருத்துகளுக்கும், களப்பயண இடங்களுக்கும் இடையே நேரடியான தொடர்பிருக்க வேண்டும்.
 • களப்பயண இடங்களுக்கும் பயணத்தில் பங்கேற்கும் குழந்தைகளின் வயது மற்றும் பொருளாதார நிலை ஆகியவைகளுக்கும் மிகுந்த பொருத்தப்பாடு இருக்க வேண்டும்.
 • களப்பயணம் மேற்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் காலம், பயணம் மேற்கொள்வதற்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
 • களப்பயணமாகச் செல்லும் இடங்களைப் பற்றிய முன் அறிவை ஆசிரியர் பெற்றிருக்க வேண்டும்.
 • களப்பயணத்திற்கான முன் அனுமதிகளை உரிய காலத்தில் உரியவர்களிடமிருந்து பெறுதல் வேண்டும்.
 • பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதங்களைப் பெற வேண்டும்.
 • களப்பயணம் செல்லும் இடங்களில் உற்று நோக்கி சேகரிக்க வேண்டிய செய்திகள் / பொருள்கள் குறித்து முன்னறிவிப்பு செய்தல் வேண்டும்.
 • களப்பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழந்தைகளிடம் கூற வேண்டும்.
 • களப்பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டிய முதலுதவிப் பொருள்களை அடையாளம் கண்டு, எடுத்துச் செல்லல் வேண்டும்.

நிறைகள்

 • பொருள்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த நேரடி அனுபவங்கள் - கிடைக்கின்றன.
 • களப்பயணத்தின் மூலமாகக் கிடைக்கும் நேரடி அனுபவத்தால் கற்க வேண்டிய கருத்துகளில் தெளிவு ஏற்படுவதோடு, கருத்துகளை நீண்ட நாட்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள முடிகிறது.
 • அறிவியல் செய்திகளை அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
 • பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளைத் தவிர கற்றல் நோக்கத்தோடு தொடர்புடைய கூடுதலான விவரங்களைச் சேகரிக்க முடிகிறது.
 • வகுப்பறையில் விளக்க முடியாத பொருள்களைப் பற்றிய நேரடி அனுபவங்கள் வெளியில் கிடைப்பதால் கற்றல் எளிதாகிறது. குழந்தைகளிடம் உற்று நோக்கும் திறன் வளர்கிறது.
 • குழந்தைகள் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறி கற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 • குழந்தைகளை மையமாகக் கொண்ட முறை என்பதால் குழந்தைகள் கற்றலில் மகிழ்வுடன் ஈடுபடுகிறார்கள்.
 • குழந்தைகள் கூட்டாகச் செயல்படுவதால் அவர்களிடையே சமூகத் திறன்கள் வளர்கின்றன.
 • ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உறவு பலப்படுகிறது. அறிவியல் பாடம் கற்கும் ஆர்வம் அதிகமாகிறது.
 • மதிப்பீட்டுச் செயல்பாடுகளில், களப்பயணம் தொடர்பான செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது படைப்பாற்றல் திறன் வளர வாய்ப்புக் கிடைக்கிறது.

வரம்புகள்

 • குறிப்பிட்ட அறிவியல் பாட வேளைக்குள் களப்பயணம் மேற்கொள்ள முடியாததாகையால் பிற பாட வேளைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
 • களப்பயணம் தேவைப்படும் அனைத்து பாடப்பகுதிகளுக்கும் இம்முறையைப் பின்பற்றி கற்றல் அனுபவங்களை அளிக்க முடியாத வகையில் பள்ளி மற்றும் சமூக சூழல்கள் உள்ளன.
 • களப்பயணமாக செல்ல நினைக்கும் அனைத்து இடங்களைப் பற்றிய முன் அறிவை ஆசிரியர்கள் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. களப்பயணமாக அழைத்துச் செல்லும் ஆசிரியர் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியுள்ளதால், ஆசிரியர்கள் பெரும்பாலும் களப்பயணம் மேற்கொள்ள அதிகமாக விரும்புவதில்லை. பொருள் செலவு அதிகமாக வாய்ப்புள்ளது.

கற்பித்தல் நோக்கம்

 • ஒவ்வொரு மாணவரும் தனது பள்ளிச் சூழலில் கிடைக்கும் மருத்துவப் பயனுள்ள தாவரங்களை அடையாளம் காணுதல்.
 • மேற்குறிப்பிட்ட கற்பித்தல் நோக்கத்தை அடையச் செய்வதற்காக, அறிவியல் ஆசிரியர் மாணாக்கர்களைப் பள்ளிக்கருகிலுள்ள தோட்டம் மற்றும் வயல்வெளிப் பகுதிகளுக்கு களப் பயணம் மேற்கொள்ளச் செய்கிறார் என்பதாகக் கொள்வோம்.

ஆசிரியர் பின்பற்றிய படி நிலைகள்

திட்டமிடுதல்

 • களப்பயணம் மேற்கொள்ள வேண்டிய தேதி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி எனவும், களப்பயண நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை எனவும் முடிவு செய்கிறார்.
 • இக்காலத்தில் பெரும்பாலான தாவரங்கள் செழிப்புடன் வளர்ந்து காணப்படும் என்பதால் களப் பயணத்திற்கு இது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.
 • களப்பயண நோக்கத்தை குழந்தைகளிடம் தெளிவாகக் கூறிய பின்பு, பயணம் மேற்கொள்ளும் பள்ளிக்கருகிலுள்ள தோட்டம் மற்றும் வயல் பகுதிகளில் எல்லைகளை, அவ்விடங்களைச் சுற்றிப் பார்த்தபின்பு முடிவு செய்கிறார்.
 • களப்பயண இடங்கள் பள்ளிக்கு அருகிலிருப்பதால் நடைப்பயண முறையைக் கையாள வேண்டுமென முடிவெடுக்கிறார்.
 • பயணத்தில் பங்கு பெறும் ஒவ்வொருவரையும் உணவு, குடிநீர், தாவரங்களை வெட்டுவதற்கும், தோண்டி எடுப்பதற்கும், சேகரிப்பதற்கும் தேவையான உபகரணங்கள், நெகிழ்வுத் தாள் பைகள், குறிப்பேடுகள் போன்றவைகளைக் கொண்டு வரச் செய்ய வேண்டுமென தீர்மானிக்கிறார்.
 • அரசு பள்ளி என்பதால் தலைமையாசிரியர் வாயிலாக மாவட்டக் கல்வி அலுவலருக்குக் கடிதம் எழுதி, நவம்பர் மாதம் முன் அனுமதி பெற வேண்டுமென திட்டமிடுகிறார். ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும், பயணத் தேதி, நேரம், இடம், மாணாக்கர் கொண்டு வர வேண்டிய பொருள்கள், ஆசிரியரின் தொலைத்தொடர்பு எண் ஆகியவைகள் அடங்கிய திட்ட நகலை அளித்து, மாணாக்கரை களப்பயணம் அழைத்துச் செல்வதற்குரிய ஒப்புதல் கடிதத்தை பெற வேண்டுமென முடிவு செய்கிறார்.
 • வகுப்பிலுள்ள 40 மாணவர்களை, குழுவிற்கு 8 பேர் வீதம் 5 குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவனை நியமிக்க வேண்டுமென திட்டத்தில் குறிப்பிடுகிறார்.

ஏற்பாடுகள் செய்தல்

 • களப்பயணம் மேற்கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தையும், தேதியையும், கால் அளவையும் பங்கு பெறும் மாணவர்களின் பட்டியலையும் குறிப்பிட்டு, தலைமையாசிரியர் வாயிலாக மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து களப்பயணத்திற்கான முன் அனுமதி பெறப்படுகிறது.
 • களப்பயண இடங்கள், அதன் எல்லைகள், தேதி, நேர அளவு ஆகியவைகள் மாணவர்களிடம் அறிவிக்கப்படுகின்றன.
 • ஒவ்வொரு மாணவனிடமும் பயணத் திட்ட நகல் வழங்கப்பட்டு, அவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதங்கள் பெறப்படுகின்றன.
 • களப்பயணத் தேதிக்கு முந்தைய நாள் வகுப்பறையில் அமரச் செய்து ஒவ்வொரு குழுவினைச் சார்ந்த மாணாக்கர் பெயர்களும், குழுத் தலைவனின் பெயரும் அறிவிக்கப்பட்ட பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மாணாக்கருக்கு வழங்கப்பட்டன.
 • களப்பயணத் தேதியன்று காலை 9 மணிக்கு அனைவரும் வகுப்பறைக்கு வந்து சேர வேண்டும்.
 • ஒவ்வொருவரும் அவரவருக்குத் தேவையான மதிய உணவு, குடிநீர், குறிப்பேடு போன்றவைகளை கொண்டு வர வேண்டும்.
 • பயணத்தின் போது மூலிகைத் தாவரங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளதால், அதற்குத் தேவையான பைகள், உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டு வருதல் வேண்டும்.
 • தனித்தனியாக மூலிகைத் தாவரங்களைச் சேகரித்தாலும் குழுவை விட்டு யாரும் அகலக் கூடாது.
 • தோட்டம் மற்றும் வயல்வெளிகளில் காணப்படும் பொந்துகள், புதர்ச்செடிகள், முட்கள் போன்றுள்ள இடங்களில் அதிக கவனத்தோடு செயல்படுவதோடு, மரங்களில் ஏறவோ, தேன்கூடுகள் காணப்பட்டால் அவைகளைக் கலைக்கவோ கூடாது.
 • தோட்ட மற்றும் வயல்வெளியிலுள்ள கிணறுகளை எட்டிப்பார்க்கவோ, அவைகளினுள் இறங்கவோ கூடாது.

களப்பயணம் மேற்கொள்ளல்

 • களப்பயண நாளன்று வகுப்பறையில் காலை 9 மணிக்கு மாணாக்கர்கள் கூடுகிறார்கள். அவர்களின் வருகை குழுத் தலைவர்களால் உறுதி செய்யப்படுகிறது.
 • பின்னர் நடைப்பயணமாக அனைத்து மாணாக்கர்களும் அருகிலுள்ள தோட்டம் மற்றும் வயல் வெளிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
 • அங்கு வெவ்வேறு திசைகளில் அவர்கள் சென்று மூலிகைத் தாவரங்களைச் சேகரிக்கிறார்கள். பெயர்கள் தெரியாத தாவரங்களைக் குறித்து ஆசிரியரிடம் கேட்கும் போது, தேவையான விளக்கத்தை ஆசிரியர் தருகிறார்.
 • களப்பயண காலத்தில், உணவு இடைவேளை தவிர (பிற்பகல் 1 மணி முதல் 2 மணி முடிய) பிற நேரங்களில் இது போன்ற செயல்பாடுகளில் மாணவர் ஈடுபட்டு மூலிகைத் தாவரங்களை சேகரித்ததும், ஆசிரியர் பிற்பகல் 3 மணியளவில் ஒலி எழுப்பி அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்க்கிறார். பின்பு அனைவரும் பள்ளியிலுள்ள வகுப்பறைக்கு வந்து சேருகிறார்கள்.
 • களப்பயணம் சென்று திரும்பிய செய்தி தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பீடு செய்தல்

களப்பயண மறு நாளன்று ஒவ்வொரு மாணவரையும் தான் சேகரித்த மூலிகை தாவரங்களையும் அவைகளின் பயன்களையும் பட்டியலிடுமாறு ஆசிரியர் பணிக்கிறார். மேலும் சேகரிக்கப்பட்ட தாவரங்களை உலர்த்தி, ஒவ்வொரு தாவரத்தின் வட்டாரப் பெயர், தாவரப் பெயர், தாவரக் குடும்பப் பெயர், வளரிடம், தாவரத்தின் பண்புகள் மற்றும் பயன்கள் போன்ற குறிப்புகளோடு குறிப்பிட்ட தினங்களுக்குள் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்துகிறார்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
2.7
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top