பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / விதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

விதிவரு முறை மற்றும் விதிவிளக்க முறை

விதிவரு முறை (Inductive Method) மற்றும் விதிவிளக்க முறை (Deductive Method) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அறிவியல் விதிகளையும், கொள்கைகளையும் அறிவியல் உண்மைகளைக் கொண்டு விளக்கும் முறையே அறிவியல் கற்பித்தலில் உள்ளது. ஆனால் அறிவியல் உண்மைகளை விளக்குவதற்கு அறிவியல் விதிகளையும் கொள்கைகளையும் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும் என அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.

விதிவருமுறை

விதிவருமுறை என்பது ஒரு குறிப்பிட்ட அறிவியல் விதியினை (Scientific Principle) சோதித்து, உற்று நோக்கி, கண்டறிந்த உண்மைகளிலிருந்து பொது விதி காணுதல் ஆகும்.

நோக்கங்கள் (Objectives)

 • மாணவன், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வான். ஆர்வம் பெறுவான்.
 • ஆய்வு செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்வான்.
 • சோதனை மேற்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வான். உற்று நோக்குதல், தகவல் சேகரித்தல் போன்ற திறன்களைப் பெறுவான்.
 • கண்டறிந்த அறிவியல் உண்மைகளை வாழ்வில் பயன்படுத்தும் திறன் பெறுவான்.

விதிவருமுறையின் படிகள் (Steps in Inductive Method - Flow Chart)

 • பிரச்சனையினை உணர்தல்
 • சூழ்நிலையினை பகுத்தாய்தல்
 • தகவல் சேகரித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்
 • பொருத்தமான தீர்வினை அடைதல்
 • தீர்வினை சரிபார்த்தல்
 • தீர்விலிருந்து பொதுவிதி காணல்

பிரச்சனையினை உணர்தல் (Realising a Problem)

 • கற்போர் தங்கள் சுற்றுச்சூழலில் உள்ள அறிவியல் சார்ந்த பிரச்சனையினை அல்லது பாடப்பொருள் சார்ந்த பிரச்சனையினை உணர வைத்து சிந்திக்கச் செய்வது அவசியம்.
 • எடுத்துக்காட்டு கற்போர் : அமிலம், காரக்கரைசல் இவற்றை எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்வது? ஆசிரியர் : சோதனைகளை மேற்கொள்வதன் மூலம்.
 • அமிலம், காரக்கரைசல்களை வேறுபடுத்தி அறிய வேண்டியதன் அவசியத்தை கற்போரிடம் உரையாடி உணரச் செய்யலாம்.

மேலும் சில உதாரணங்கள்

 1. மின்சாரம் கடத்துபவை, கடத்தாதவை
 2. ஒலி எதிரொலித்தல், ஒளிவிலகல்,
 3. பாக்டீரியா, பூஞ்சை இப்படியின் மூலம் கற்போரிடத்தில் தம்மைச் சுற்றியுள்ள அறிவியல் சார்ந்த பிரச்சனையினை உணரும் பண்பு வளரும்.

சூழ்நிலையினைப் பகுத்தாய்தல் (Analysing the situation)

பிரச்சனை ஏற்பட்டுள்ள சூழலைப் பகுத்தாய்தல் மிகவும் அவசியம். அதன் மூலம் மேற்கண்ட பிரச்சனைக்கான தீர்வினை அடைய வழி காண முடியும்.

 1. கற்போர் : அமிலக்காரக்கரைசல்களை வேறுபடுத்தி அறியத் தேவையான நீல லிட்மஸ் தாள், சிகப்பு லிட்மஸ் தாள் ஆகியவை.
 2. இவ்வாறாக, தேவையான பொருள்கள், ஆய்வக வசதிகள், போன்றவை பிரச்சனை உள்ள சூழலில் உள்ளனவா? அல்லது மாற்று ஏற்பாடுகள் தேவையெனில் என்னென்ன தேவை? போன்றவற்றை பகுத்து ஆய்தல் மூலம் பிரச்சனைக்கான சூழலைப் பற்றி கற்போர் அறிந்து கொள்ள ஆசிரியர் தூண்டலாம்.
 3. இதன் மூலம் கற்போரிடம் பிரச்சனைக்கான பின்னனியினைப் பற்றியும், தேவையானவை பற்றியும் அறிந்து கொள்ளும் திறனை வளர்க்கலாம்.

தகவல் சேகரித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல் (Collecting and Organising Information)

பிரச்சனைக்கான சூழலைப் பகுத்தாய்ந்த பின்பு பிரச்சனை பற்றிய தகவல்களை ஆய்வகத்திலும், நூலகத்திலும், வல்லுநர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை வகைப்படுத்தி, ஒழுங்குப்படுத்துதல் மூலம் பொருத்தமான தீர்வினைப் பெற இயலும்.

தீர்வினை சரிபார்த்தல் (Verifying the Solutions)

அறிவியில் விதியினை சோதனை மூலம் கண்டறிந்த பின், சேகரிக்கப்பட்ட தகவல்களோடு ஒப்பிட்டு நோக்கி, சரியான முடிவுதானா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

தீர்விலிருந்து பொது விதி காணல் (Generalising the solutions)

 • தீர்வினை சரிபாத்தபின் அதிலிருந்து பொது விதிகாணும் போது தான், விதிவருமுறை முழுமை அடைகிறது.
 • அமிலங்கள் மட்டுமே நீல லிட்மஸை சிகப்பு லிட்மஸாக மாற்றும் என்பதை அறிந்தவுடன், நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம், பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, கால்சியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றையும் வழங்கி அவற்றில் நீல லிட்மஸை நனைக்கச் செய்து, அதன் மூலம் கண்டறிந்தவற்றை வைத்து அனைத்து அமிலங்களும் நீல லிட்மஸை சிகப்பாக மாற்றும் என்பதை பொது விதியாகக் கொள்ளச் செய்யலாம்.
 • மேற்கண்டவாறு பல்வேறு சோதனைகள் செய்திட தேவையானவற்றை வழங்கி வழிகாட்டுவது ஆசிரியரின் செயல் ஆகும்.
 • இதன் மூலம் கற்போர் கண்டறிந்த தீர்விலிருந்து பொது விதி காணும் பண்பினை வளர்த்துக் கொள்வர்.
 • மேற்குறிப்பிட்ட வேதியியல் சார்ந்த எடுத்துக்காட்டின் மூலம் விதிவரு முறை பற்றி அறிந்தோம். உயிரியல் சார்ந்த மற்றொரு எடுத்துக் காட்டினையும் இங்கு காணலாம்.

பிரச்சனையினை உணர்தல் (அறிவியல் விதி)

அவரை விதை முளைக்க நீர், வெப்பம், காற்று தேவை. ஆசிரியர் கற்போரை களப்பயணம் அழைத்துச் சென்று அறிவியல் சார் பிரச்சனையைப் பற்றி குறிப்பிட்டு அதைப்பற்றி அவர்களை வினா எழுப்பச் செய்து அல்லது விடை கூறச் செய்து கலந்துரையாடி பிரச்சனையினை உணரச் செய்யலாம்.

சூழ்நிலையினைப் பகுத்தாய்தல்

 • ஆசிரியர், கற்போரை குழுவாகப் பிரித்து ஒரு குழுவை மட்டும் செயலில் ஈடுபடச் செய்து மற்ற குழுக்களை உற்று நோக்கச் செய்தல்.
 • முதல் குழுவில் உள்ள மாணவர்களைத் தோட்டத்திற்கு அழைத்து சென்று அவரை விதையினை விதைத்து முளைக்கச் செய்வதற்கான காரணிகள் பற்றிக் கூறுதல். (காரணிகள் : நீர், வெப்பம், காற்று, தரமான விதை)
 • அக்குழுவினரிடம் அவரை விதையினை தோட்டத்தில் விதைத்து முளைக்கச் செய்யத் தேவையான காரணிகள் அமைந்துள்ளனவா? என ஆராயச் சொல்லுதல். மற்ற வசதிகள் மற்றும் சூழல் அவ்விடத்தில் அமைந்துள்ளனவா? என்றும் அறியச் செய்தல்.

தகவல் சேகரித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்

 • ஆசிரியர் குழுவில் உள்ள மாணவரை நூலகம், ஆய்வகம் மற்றும் வேளாண் அலுவலரிடமிருந்து விதை முளைத்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய செய்முறைகள், தயாரிப்புகள், செய்திகள் போன்றவற்றை சேகரிக்கச் செய்தல்.
 • சேகரித்தத் தகவல்களை முறைப்படி வகைப்படுத்தி ஒழுங்கமைக்கச் செய்தல்.

பொருத்தமான தீர்வினை அடைதல்

ஆசிரியர் தரமான விதை மற்றும் தரமற்ற விதை, சூரிய ஒளிபடும் படி விதையினை விதைத்தல், சூரிய ஒளி படாத இடத்தில் விதைத்தல், காற்றுள்ள இடத்தில் விதைத்தல், காற்று இல்லாத வகையில் விதைத்தல், நீர் விடுதல், நீரில்லாமல் வைத்திருத்தல் போன்ற சூழல்களில் விதைகளை முளைக்க வைத்திட மாணவருக்கு வழி காட்ட வேண்டும். ஒவ்வொரு நாளும் உற்று நோக்கி குறிப்பெடுக்கச் செய்திட வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு எச்சூழல்களில் விதைத்த விதைகள் முளைத்துள்ளன என்பதை கண்டறிந்திடச் செய்தல் வேண்டும். அதிலிருந்து அவரை விதை முளைக்க என்னென்ன காரணிகள் தேவை என்பதை அம்மாணவர் அறியச் செய்தல்.

தீர்வினை சரிபார்த்தல்

அவரை விதை முளைக்க என்ன சூழல், என்ன காரணிகள் தேவை என்பதை மாணவர் அறிந்தபின் அவற்றை ஏற்கனவே சேகரித்த தகவல்கள், செய்திகளுடன் ஒப்பிட்டு அவர்கள் கண்டறிந்த தீர்வினை சரிபார்க்கச் செய்தல்.

தீர்விலிருந்து பொது விதி காணல்

மற்ற குழுக்களுக்கும் கடலை, உளுந்து, கொண்டைக் கடலை, பாசிப்பயறு போன்ற விதைகளை வழங்கி, மேற்குறிப்பிட்டவாறே வெப்பம், காற்று, நீர் படும்படியாகவும், படாதபடியாகவும் சூழல்களை ஏற்படுத்தி, விதைகளை விதைத்து உற்று நோக்கி சில நாட்கள் கழித்து அவைகள் முளைத்துள்ளனவா? என கண்டறியச் செய்தல். விதை முளைத்தலுக்கான காரணிகள் சாதகமாக அமைந்துள்ள போது விதை முளைத்தலை காண முடியும் என்ற உண்மையை உணரச் செய்யலாம். பலவகை விதைகளைப் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்து கண்டறிந்ததிலிருந்து அனைத்து வகையான விதைகளுக்கும் முளைப்பதற்கு, வெப்பம், காற்று, நீர் போன்ற சாதகமான காரணிகள் தேவை என்பதை பொது விதியாகக் கொள்ள செய்யலாம்.

ஆசிரியரின் பங்கு (Role of the Teacher)

 1. கற்போர் பிரச்சனையை உணர வைத்திட வேண்டும்.
 2. தேவையான பொருள்கள், கருவிகள், நூல்கள் பெற வழிகாட்டிட வேண்டும்.
 3. ஆய்வு ஊக்கம் பெறத் தூண்டிட வேண்டும்.

நன்மைகள் (Merits)

கற்போர் ஆய்வுச் செயல்பாட்டில் ஈடுபட ஊக்கமளிக்கிறது. தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றினை அறியும் போது ஆர்வம் மிகுதியாகிறது. தன்னம்பிக்கை, ஆய்வகத் திறன்கள் மேம்படுகின்றன. அறிவியல் அறிவு, அறிவியல் மனப்பான்மை, ஆய்வுச்சிந்தனை வளரும். அறிவியல் விதிகளை வாழ்வில் பயன்படுத்தும் ஆற்றல் வளரும்.

வரம்புகள் (Limitations)

இம்முறை அனைத்து பாடங்களுக்கும் பொருந்தாது. இம்முறையினால் இறுதியான முடிவை எட்ட முடியாது. சில விதி விளக்குகள் உள்ளன. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் முறை ஆகும். விதிகளை அறிந்து கொள்வதற்கு மட்டுமே இம்முறை பொருந்தும்.

விதி விளக்க முறை

நோக்கங்கள் (Objectives)

கற்போர், அறிவியல் விதிகளை சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கும் திறன் பெறுவர். அறிவியல் சார் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறன் பெறுவர். சோதனை மேற்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வர். உற்று நோக்குதல், தகவல் சேகரித்தல் போன்ற திறன்களைப் பெறுவர். கண்டறிந்த அறிவியல் உண்மைகளை புதிய சூழ்நிலையில் பயன்படுத்தும் திறன் பெறுவர்.

விதி விளக்க முறையின் படிகள் (Steps in Deductive Method) -

 • பிரச்சனையினைப் புரிந்து கொள்ளுதல்
 • தகவல் சேகரித்தல்
 • அறிவியல் விதியினை மீள் பார்வை செய்தல்
 • முடிவு காணல்
 • புதியசூழலில் பயன்படுத்தி முடிவினை சரிபார்த்தல்

பிரச்சனையினைப் புரிந்து கொள்ளுதல் (Understanding the Problem)

அறிவியல் பாடப் பொருள் சார்ந்த ஒரு பிரச்சனையினை ஆசிரியர் கற்போரிடம் கூற வேண்டும். அப்பிரச்சனையினை, ஒரு பொதுவான அறிவியல் விதியினை உடையதாக தேர்வு செய்தல் வேண்டும். அதனைப்பற்றி கற்போரிடம் விளக்க வேண்டும். கற்போர் அப்பிரச்சனைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு ஆவியாதல் மூலம் பொருள்கள் குளிர்வடைகின்றன. இப்பொதுவான விதியை ஆசிரியர் கற்போரிடம் விளக்குதல் வேண்டும். அதற்கு இவ்விதி தொடர்புடைய புலனாகும் சில உதாரணங்களை கற்போரிடம் கூறி விளக்கலாம். அதாவது;

 1. நீர் ஆவியாதல்
 2. பெட்ரோல் ஆவியாதல்
 3. குளோரோஃபார்ம் ஆவியாதல்.

இச்செயல்பாட்டின் மூலம் கற்போர் பொதுவான அறிவியல் விதியினை புரிந்து கொள்ள இயலும்.

தகவல் சேகரித்தல் (Collecting Information)

 • மேற்சொன்ன பிரச்சனை தொடர்பாக ஆய்வகத்தில் சில சோதனைகளை மேற்கொண்டும், நூலகத்திலிருந்து தகவல்களை சேகரித்திடவும் வேண்டும்.
 • எடுத்துக்காட்டு என்னென்ன பொருட்கள் ஆவியாதல் மூலம் குளிர்வடைகின்றன? என்ன வேதி வினை மூலம் இந்நிகழ்வு ஏற்படுகிறது? இது போன்ற தகவல்களை சேகரித்திட வேண்டும். இதற்கு ஆசிரியர் உதவிட வேண்டும்.

பொது விதியினை மீள்பார்வை செய்தல் (Reviewing the General Principle)

 • பொது விதியினைப் பற்றிய தகவல்கள், சேகரித்த பின், அத்தகவல்களை அப்பொது விதியுடன் பொருத்தி மீள்பார்வை செய்திட வேண்டும். பிறகு பிரச்சினைக்கு பொருத்தமான குறிப்பிட்ட அறிவியல் விதியினைக் குறிப்பிட வேண்டும்.
 • நீரை பீக்கரில் வெப்பப்படுத்தி, ஆவியாக்கி, வளி மண்டலத்தில் குளிர்விக்கும் சோதனையைக் கற்போரை மேற்கொள்ள வைத்தல்.
 • இதன் மூலம் நீர் வெப்பத்தால் ஆவியாகி பிறகு குளிர்வடையும் என்ற விதியினைப் பெறலாம்.
 • இங்கு கற்போர் சோதனை மேற்கொள்ள ஆசிரியர் உதவிட வேண்டும்.

இச்செயல்பாட்டின் மூலம் கற்போருக்கு சோதனை செய்யும் திறன், உற்று நோக்கும் திறன் மற்றும் துல்லியமாக முடிவு காணும் திறன் ஆகியவை வளர்ச்சியடையும்.

முடிவு காணல் (Drawing Inferences)

கற்போர், பொது விதியினை மீள்பார்வை செய்த பின் அதிலிருந்து முடிவினைக் காணல் வேண்டும்.

பொருள்கள் ஆவியாதல் மூலம் குளிர்வடைகின்றன என்ற பொது விதியிலிருந்து நீர் கொதிக்கும் போது ஆவியாகி பிறகு குறைந்த வெப்பநிலையில் குளிர்ந்த நீராகிறது என்ற குறிப்பிட்ட விதியினை, சோதனையிலிருந்து உறுதி செய்து கொள்ளலாம். இங்கு ஆசிரியரின் வழிகாட்டுதல் அவசியம். கற்போரிடம் இச்செயல்பாடு ஆய்வு செய்யும் சிந்தனை, முடிவுகாணும் திறன் போன்றவற்றை வளர்க்க உதவும்.

முடிவினை வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்திச் சரிபார்த்தல் (Verifying the Principles in Life Situations)

பெறப்பட்ட முடிவினை வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்தி அதனை சரிபார்த்து கொள்ளும் போது, பொது விதியிலிருந்து குறிப்பிட்ட அறிவியல் விதியினை பெற இயலும் என்பதை உறுதி செய்து கொள்ள இயலும்.

பிரச்சனையினைப் புரிந்து கொள்ளுதல்

ஆசிரியர், ''காற்றுக்கு அழுத்தம் உண்டு' என்ற பொது விதியினைப் பற்றி மாணவரிடம் விளக்க வேண்டும். அவ்விதியினை மாணவர் சரியாக புரிந்து கொள்ளுவதற்கேற்ப காற்றுக்கு மேல் நோக்கு அழுத்தம், கீழ்நோக்கு அழுத்தம், பக்கவாட்டு அழுத்தம் என்ற மூன்று நிலைகளிலும் அழுத்தும் திறன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்க வேண்டும்.

தகவல்களை சேகரித்தல்

மேற்குறிப்பிட்ட அறிவியல்சார் பிரச்சனையைப் பற்றி மேலும் அதிகமான அறிவு பெற மாணவரை ஆய்வகத்தில் 'காற்றுக்கு அழுத்தம் உண்டு' என்பதனை நிரூபிக்கும் மூன்று சோதனைகளையும் செய்து அனுபவம் மூலம் அறியவும், நூலகத்தில் காற்றின் அழுத்தம் பற்றி அறிய உதவும் புத்தகத்திலிருந்து தகவல்களைப் பெற்றிடவும் ஆசிரியர் வழிகாட்டிட வேண்டும்.

பொது விதியினை மீள்பார்வை செய்தல்

மேற்குறிப்பிட்ட பொது விதியினை சேகரித்த தகவல்களோடு பொருத்திப் பார்த்து மீள் பார்வை செய்திட வேண்டும். இங்கு ஆய்வகத்தில் மாணவர், அப்பொது விதியினை சரி பார்ப்பதற்கான சோதனைகளை மேற்கொள்ள ஆசிரியர் வழிகாட்டுதல் அவசியம். தேவையான பொருள்களையும், செய்ய வேண்டிய முறைகளையும் ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை உறிஞ்சச் சொல்லுதல்.

 • ஒரு மூடியுடன் கூடிய டப்பாவை எடுத்துக் கொண்டு அதன் மேல்பக்கம் ஒரு துளையிட்டு விட்டு அடிப்பக்கம் சில துளைகளை இட்டு, அதனை தண்ணீருக்குள் மூழ்கச் செய்து நீரை நிரப்பச் சொல்லுதல்.
 • பிறகு அதனை வெளியே எடுத்து மேல் உள்ள துளையினை ஒரு விரலால் மூடச் செய்து, சிறிது நேரத்திற்குப் பிறகு அத்துளையிலிருந்து விரலை எடுத்து விடச் செய்தல். இரண்டு நிகழ்வுகளையும் உற்று நோக்கச் செய்தல்.
 • ஒரு டம்ளரில் நீர் நிரப்பிக் கொண்டு அதன் வாய்ப்பகுதியை ஒரு அட்டையினால் மூடச் சொல்லுதல்.
 • அட்டையைப் பிடித்துக் கொண்டு டம்ளரை தலைகீழாக கவிழ்த்துவிட்டு அட்டையிலிருந்து கையை எடுத்து விடச் செய்தல். என்ன நிகழ்கிறது? என்று அறியச் செய்தல்.
 • இவ்வாறாக பொது விதியினை மீள் பார்வை செய்திட சில சோதனைகளை மாணவர்களை மேற்கொள்ளச் செய்து உற்று நோக்கி அறியச் செய்தல்.

முடிவு காணல்

மேற்கண்ட சோதனைகளிலிருந்து காற்றுக்கு பக்கவாட்டு அழுத்தம் இருப்பதால் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலினுள் உள்ள காற்றை உறிஞ்சும்போது பாட்டில் சுருங்குகிறது என்றும்,

துளையிடப்பட்ட டப்பாவின் மேல் துளை மீதுள்ள விரலை எடுத்து விடும் போது காற்றுக்கு கீழ் நோக்கு அழுத்தம் இருப்பதால் நீரை கீழே அழுத்தி தள்ளுகிறது என்பதையும்

தலைகீழாக வைக்கப்பட்ட டம்ளரில் அட்டையின் மீது மேல்நோக்கு அழுத்தம் செயல்படுவதால் அட்டை கீழே விழாமல் உள்ளது என்பதையும் மாணவர்களைக் கண்டுணர வைக்கலாம். இச்சோதனைகள் மூலம் பொது விதியிலிருந்து குறிப்பிட்ட விதியினை உறுதி செய்து கொள்ளலாம்.

முடிவினை வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்திச் சரிபார்த்தல்

தாது உப்புக்கள் சேர்ந்த குடிநீர் சேமிப்புக் கலனில் (Mineral Water Can) நீர் திறப்பான் வழியே வருவதை மாணவர் உற்று நோக்கி அங்கு காற்று அழுத்தம் செயல்படுவதை கண்டறிந்திடச் செய்தல். ஏற்கனவே சோதனை மூலம் பெற்ற குறிப்பிட்ட விதியினை வாழ்க்கைச் சூழலிலும் பயன்படுத்தி உறுதி செய்து கொள்ள இயலும்.

ஆசிரியரின் பங்கு (Role of the Teacher)

 • பொது விதியினை விளக்கிட வேண்டும்.
 • அதிலிருந்து குறிப்பிட்ட விதியினை வரவழைக்க கற்போரைத் தூண்டிட வேண்டும்.
 • தகவல் சேகரிக்க, ஆய்வு மேற்கொள்ள உதவிட வேண்டும்.
 • பெறப்பட்ட குறிப்பிட்ட விதியினை சோதித்து சரிபார்க்க உதவ வேண்டும்.

நன்மைகள் (Merits)

 • இம்முறையில் சில நன்மைகள் உள்ளன. அவையாவன: 1. குறைந்த நேரத்தில் முடிக்க இயலும்.
 • விதிவருமுறையுடன் இம்முறையையும் சேர்த்து, அறிவியல் சார்ந்த அன்றாட வாழ்வில் உள்ள பிரச்சனைக்களுக்கான தீர்வினை அடைய முடியும்.

வரம்புகள் (Limitations)

 • பல அறிவியல் விதிகளையும், கொள்கைகளையும் மனப்பாடம் செய்தே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே இது மனப்பாடம் செய்யும் திறனை மட்டுமே அதிகமாக வளர்க்கிறது.
 • மேலும் இது அறிவியல் விதியினை விளக்கக்கூடிய முறை அல்ல. உறுதி செய்திடும் முறையே ஆகும்.
 • கற்போர் சுறுசுறுப்பாக செயல்பட இயலாது. இம்முறையில் சிந்தித்தல், காரணமறிதல், கண்டறிதல் போன்றவற்றிற்கு வாய்ப்பில்லை.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.8
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top