பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்

பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் ஒன்று சீவக சிந்தாமணி. இந்நூலின் எட்டாம் உட்பிரிவு விமலையார் இலம்பகம். இப்பகுதி என்ன சொல்கிறது என்பதை இப்பகுதி விளக்குகின்றது.

இப்பகுதி என்ன சொல்கிறது?

விசயை, தன் மகன் சீவகன்பால் கொண்டிருந்த தாயன்பு புலப்படுகின்றது. அறநெறிகளைப் பின்பற்றி, பகைவனான கட்டியங்காரனை வீழ்த்தி, அரசைக் கைப்பற்றிய தன் மகன் நல்லாட்சி நடத்த வேண்டும் என்கின்ற அவளது உணர்வு வெளிப்படுகின்ற நிலையை இப்பாடம் விளக்குகின்றது. விமலையின் பந்தாட்டச் சிறப்பும், விமலையைச் சீவகன் மணந்த வரலாறும் விரித்துரைக்கப் படுகின்றன. சோதிடக் கலையின் நுட்பமும், கனவின் சிறப்பும் இங்குத் தெளிவாகக் காட்டி விளக்கப்படுகின்றன. இப் பகுதியில் சீவக சிந்தாமணியின் பெயர்க் காரணமும், நூலின் அமைப்பும், சிறப்பும் குறிப்பிடப் பெறுகின்றன. நூலாசிரியரின் சிறப்பும் பெருமையும் இப்பாடத்தின் வழி தெரிவிக்கப் பெறுகின்றன.

இதைப் படிப்பதனால் என்ன பயன் பெறலாம்?

* விருத்தம் என்னும் புதிய பாவகை முதன் முதலில் திருத்தக்க தேவரால் கையாளப்பட்டது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

* தாயன்பு, சகோதரத்துவம், நட்புப் பாராட்டல் முதலான பண்புகள் வெளிப்படுவதனை இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

* கனவுக் காட்சி பலித்தல், சோதிடக் கலையின் தன்மை, நாட்டுப் பற்று, அரச நெறிமுறைகள் முதலான செய்திகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

* நூல் ஆசிரியரின் பெருமை, பாட்டுடைத் தலைவன் சீவகனின் சிறப்பு, விமலையின் தனித்திறன், இலக்கியச் சிறப்பு ஆகிய செய்திகளை முறைப்படுத்திக் காணலாம்.

* பண்டைத் தமிழரின் பண்பாட்டு நிலைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

முன்னுரை

தமிழ் மொழிக்கு வளமையும், பெருமையும் சேர்க்கும் இலக்கிய வடிவங்களுள் ஒன்றாகத் திகழ்வது காப்பியமாகும். சங்கம் மருவிய காலத்தில் தொடங்கி, இடைக்காலத்தில் மிகுதியாகப் படைக்கப்பட்ட பெருமை உடையது காப்பியமாகும். ஐம்பெருங் காப்பியங்களுள் சீவகசிந்தாமணியும் ஒன்று. இந்நூலின்கண் எட்டாவது இலம்பகமாக விமலையார் இலம்பகம் விளங்குகின்றது. இப்பகுதியில் காப்பிய நாயகனான சீவகனின் காதலும், வீரமும் வெளிப்படுகின்றன. மேலும் விமலை பந்தாடும் திறன், அவள் சீவகனை மணந்து கொள்ளுதல் ஆகிய செய்திகளைத் தொகுத்துக் கூறுகிறது.

சீவக சிந்தாமணி

தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது.

அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்துள்ள பெருமையுடையது.

பெயர்க் காரணம்

சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி. இந்நூலிற்கு இப்பெயர் அமைந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒளி கெடாத மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்தமானதாகும். இந்நூல் தோன்றிய காலம் முதல் புகழ் குன்றாது நின்று நிலவுவதே தக்க சான்றாகும்.

இலக்கண நூலார், சிந்தாமணி என்பது நெஞ்சின் கண் பொதிந்து வைத்தற்குரிய ஒரு மணி போன்றது என்பர். அதுபோல் இந்நூலைப் படிப்போர் அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே பெறுமாறு படைத்தலால் இந்நூல் இப்பெயர் பெற்றது எனலாம்.

காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக 'சீவ' என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர். சீவகனின் வரலாற்றை முழுமையாகத் தெரிவிப்பதால் சீவக சிந்தாமணி என்று இந்நூல் பெயர் பெற்றது.

நூலாசிரியர்

சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர் திருத்தக்க தேவர். சோழர் குலத்தில் அரச மரபைச் சார்ந்தவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். தீபங்குடியில் பிறந்தவர். இவருடைய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும்.

சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டும் அன்றி இல்லறச் சுவையையும் பாட முடியும் என்பதனை நிறுவும் பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர். குருவின் வேண்டுகோளுக்கு இணங்க நரி விருத்தம் பாடிய பிறகே சீவக சிந்தாமணியைப் பாடினார். இத்தகு சிறப்புக் கொண்ட திருத்தக்க தேவரைத் 'தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்' என்று வீரமாமுனிவர் பாராட்டுகின்றார். தேவர், திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தகு மகாமுனிகள் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவார்.

நூல் கூறும் செய்தி

சச்சந்தன் விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வந்தான். உரிய பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைக்கொண்டு போரிட்டு வென்றான், சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி ஆகும்.

நூல் அமைப்பு

சீவக சிந்தாமணி என்னும் பேரிலக்கியம், நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.

நூலின் சிறப்பு

சீவகனின் வீர தீரச் செயல்கள், பேரழகு, பேராற்றல், போராற்றல், அரச குடும்பத்தின் செயல்கள், அரசியல் நெறிமுறைகள், மனித குல மேம்பாட்டிற்குத் தேவையான அறக்கருத்துகள் கூறுதல் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. சீவகன் தன் ஆற்றலால் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. திருத்தக்க தேவர் தம் நூலுக்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயரிட்டனர். சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.

விமலை யார் இலம்பகம்

சீவக சிந்தாமணியில் எட்டாம் உட்பிரிவாக விமலையார் இலம்பகம் இடம் பெற்றுள்ளது. இவ்விலம்பகத்தில் 106 விருத்தப் பாடல்கள் அமைந்துள்ளன.

கதைச் சுருக்கம்

சீவகன், பலவகை மாலைகளையும், வெற்றி வேலையும் உடையவன். அவன் தம்பி நந்தட்டன், 'சீவகன் ஒரு மாமணி. அவனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்' என்று நண்பன் பதுமுகனிடம் கூறினான். பிறகு ஏமமாபுரத்திலிருந்து குதிரை மீதேறி, சீவகன் தன் தோழர்களும், மறவர்களும் புடை சூழ, தன் தாய் விசயை தங்கியிருக்கும் காட்டிலுள்ள தவப் பள்ளிக்குச் சென்றான். அங்கு விசயை வைகறையில் கண்ட கனவு நனவாகும்படி நேரில் மகனைக் கண்டாள். சீவகன் தன் தாயின் காலில் விழுந்து வணங்கினான். விசயை தாயன்புமீதூர்ந்தவளாக ஆனந்தம் கொண்டாள். பின்னர் தன் மகனுக்கு அரசர்கள் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும், பகைவரை வெற்றி கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துக் கூறினாள்.

விசயை, தன் நாட்டைக் கைப்பற்றிய கட்டியங்காரனைக் கொல்லத் தாய்மாமன் கோவிந்தனைத் துணையாகக் கொள்ளும்படி மகனைப் பணித்தாள். பின்னர்ச் சீவகன், விசயையைத் தன் மாமனாகிய கோவிந்தனின் இருப்பிடத்திற்கு அனுப்பினான். பின்பு, சீவகன் தன் தோழர்களுடன் புறப்பட்டு ஏமாங்கத நாட்டிலுள்ள இராசமாபுரத்தை அடைந்து, நகர்ப்புறத்தேயுள்ள ஒரு சோலையில் தங்கினான். மறுநாள் காலையில் சோலையிலேயே நண்பர்களை இருக்கச் செய்து விட்டுத் தான் மட்டும் வேற்றுருவில் நகருக்குள் சென்றான். அந்நகரத்தின் சாகர தத்தன் என்னும் வணிகனின் மகள் விமலை ஆவாள். அவள் பந்தாடுவதில் வல்லவள். அவளது அழகும், விளையாட்டும் சீவகனது மனத்தை மயக்கின. சீவகனும் அவளை மறக்க முடியாதவனாய், அவள் தந்தையின் கடையருகே வந்து நின்றான்.

சீவகன் கடையருகே வந்தவுடன், விலையாகாமல் நெடுநாள் தேங்கிக் கிடந்த பொருட்கள் எல்லாம் விலை போயின. அது கண்ட தத்தன் சீவகனை நோக்கி, அன்போடு வரவேற்றான். “முன்பு ஒரு சோதிடன், உன் மகளுக்குரிய கணவன், உன் கடைக்கு வலிய வருவான். அப்படி அவன் வலிய வந்ததும் உன் கடையில் விற்காது கிடந்த பழஞ்சரக்கெல்லாம் விற்று முதலாகும்” என்று அவள் பிறந்த போதே பயனைக் கணித்துக் கூறியிருந்தான். இன்று நீ என் கடையருகே வந்து நின்றதும் என் இருப்பெல்லாம் விற்றுத் தீர்ந்தன. எனவே நீதான் அச்சோதிடன் கூறிய, என் மகள் விமலைக்கேற்ற கணவனாவாய்” என்று கூறி அவனைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று விமலையைத் திருமணம் செய்து கொடுத்தான். சீவகன் விமலையோடு கூடி இரண்டு நாள் இன்புற்று இருந்து, பின் தன் தோழர்களை அடைந்தான்.

கதை மாந்தர்கள்

இவ்விலம்பகத்தில் விசயை, சீவகன், கோவிந்தன், தம்பி நந்தட்டன், நண்பன் பதுமுகன், சாகர தத்தன், கமலை, விமலை, சோதிடன் ஆகியோர் கதை மாந்தர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இலம்பகத்தில் இடம் பெறும் நிகழ்ச்சிகள்

விமலையார் இலம்பகத்தில், விசயை, சீவகனுக்குக் கூறிய அறவுரைகளும், சீவகன் தெருவில் சென்ற காட்சியும், விமலை சீவகனைக் காணுதலும், திருமணமும் முக்கிய நிகழ்ச்சிகளாக இடம்பெற்றுள்ளன.

விசயையின் அறவுரைகள்

விசயை, தன்னைக் காண வந்த அன்பு மகனைச் சீராட்டி, பாராட்டினாள். நூல் வல்லார் கூறுகின்ற அரசர்கள் கைக்கொள்ள வேண்டிய நெறி முறைகளையும், வெற்றி வாழ்வினைப் பெறக் கைக்கொள்ள வேண்டிய நெறிகளையும் எடுத்துக் கூறினாள். மேலும், “உன் மாமன் கோவிந்தனோடு சேர்ந்து, அவன் சொற்படி நடந்து, நம்மோடு நிலைபெற்று இருக்கின்ற பகையையும் பகைவரையும் வெல்வாயாக” என்று கூறினாள் விசயை. சீவகன் உடனே, "என் மீது வைத்த அன்பினால் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் மாமனின் இருப்பிடம் சென்று தங்கியிருங்கள்” என்றும், "நான் ஏமாங்கத நாடு சென்று, பகையழித்து வெற்றியுடன் வருகின்றேன்” என்றும் கூறிப் புறப்பட்டான்.

மாமன் மற்றுன் சீர்தோன்ற வேமலருஞ் சென்றவன் சொல்லி னோடே பார்தோன்ற நின்ற பகையைச்செறற் பாலை யென்றாள். (பாடல் -43)

(மாமன் மலரும் = மாமன் மனம் மகிழும்; செறற் பாலை = கொல்லத் தக்காய்)

அரசர்கள் கைக்கொள்ள வேண்டிய நெறிகள்

1) இறையாக வந்த செல்வத்தை ஆறில் ஒரு பங்கு பெருக்குதல்

2) பழம் பகையை மனத்தில் இருத்துதல்

3) பகைவரை, அவர் பகைவரோடு மோத விடுதல்

4) பல பகைவர்கள் இருப்பின் அவர்களைப் பிரித்துத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுதல்.

வெற்றி வாழ்வைப் பெறும் நெறிகள்

1) பல்வகை வெற்றிகளை உண்டாக்குதல்

2) மேல்நிலையை அடைதல்

3) மெலியவரை வலியவராக்குதல்

4) கல்வி, அழகு உண்டாகச் செய்தல் முதலான செயல் புரிவதால் பல நாடுகள் கிடைக்கும். இறையாகப் பெரும் பொருள் வந்து சேரும். உலகில் கிடைக்காதது ஒன்றுமில்லை என்று நினைத்தல்.

தெருவில் கண்ட காட்சி

சீவகன் குதிரை மேலேறி மலை, காடு, வயல், அருவி கடந்து ஏமாங்கத நாடு அடைந்தான். பிறகு இராசமாபுர நகரின் வளம் காணும் பொருட்டு, அழகிய வடிவங்கொண்டு வெளியே சென்றான். அத்தெருவிலே நின்று கொண்டிருந்த பெண்களின் அழகு, துறவிகளையும் இல்லறத்திலே ஈடுபடத் தூண்டும் தன்மையுடையதாக இருந்தது. அவ்வழி வந்த சீவகனின் அழகினைக் கண்ட பெண்கள். இவன் முருகனோ? மன்மதனோ? யார் என்றே தெரியவில்லையே? தெரிந்தால் கூறுங்கள் என்று வருத்தப்பட்டனர். அத்தெருவின் ஒரு புறத்தில் விமலை பந்தாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது பந்து, தெருவின் ஓரத்தில் ஓடிச் சென்றது. அப்பந்தை எடுக்கச் சென்ற போது, அவள் சீவகனைக் கண்டாள். இருவரும் கண்களால் கலந்து, காதல் நோயால் அவதியுற்றனர்.

மின்னின் நீள்கடம் பின்னெடு வேள்கொலோ மன்னும் ஐங்கணை வார்சிலை மைந்தனோ என்ன னோஅறி யோம்உரை யீர்எனா.... (பாடல் - 60)

(நெடுவேள் = முருகன்; என்னனோ = யார் தான் என்று)

விமலை பந்தாடுதல்

விமலை, மான்போலும் மருளும் நோக்குடைய கண்களை உடையவள். தேவமகளைப் போன்ற அழகுடையவள். பால் போலும் இனிய மொழி பேசுபவள். பெண்மைக்கு அழகுதரும் நீங்காத நிறங்கொண்டவள். மார்பிலே மந்தார மாலையினை அணிந்தவள். ஒரே நேரத்தில் ஐந்து பந்துகளை விடாமல் பந்தடிக்கும் திறனுடையவள்.

மானொடு மழைக்க ணோக்கி வானவர் மகளு மொப்பாள் பானெடுந் தீஞ்சொ லாளோர் பாவைபந் தாடு கின்றாள் (பாடல் - 63)

மலை தன்னுடைய அழகிய கைகளிலே ஐந்து பந்துகளைக் கொண்டு ஆடினாள்.

1) மேலே எழும்பியும் முறை தவறிக் கீழே விழுதலின்றியும் ஓடுகின்ற பந்து, கூடச் சென்று ஆடும் போது மாலைகளுக்குள் சென்று மறைந்த பந்து கைகளுக்கு வந்து சேரும்.

2) கருங் கூந்தலுக்குப் பின்புறம் சென்று மறைந்த பந்து, அழகுடைய முகத்தின் முன்னே வரும்.

3) தலைக்கு மேலே சென்ற பந்து, மார்பில் அணிந்த மாலைக்கு நேரே வந்து சேரும்.

4) இன்னும் தலை மாலைக்கு மேலே உயரப் போன பந்து, கை விரல்களுக்கு இடையிலும் வந்து சேரும்.

5) இடையில் மாலை தொடுத்தும், குங்குமம் அணிந்தும் படிப்படியாக உயரும்படி பந்தினை அடித்தும், தன்னைச் சுற்றி வட்டமாக வரும்படி பந்தினை எறிந்தும் மயில் போலப் பொங்கியும், வண்டும் தும்பியும் தேன் உண்ணாமல் பாட, வலிமையோடு பந்தாடினாள் விமலை.

அங்கை யந்த லத்த கத்த ஐந்து பந்த மர்ந்தவை மங்கை யாட மாலை சூழும் வண்டு போல வந்துடன் (பாடல் - 65)

(அங் கை அம் தலத்த = அழகிய உள்ளங்கையினிடத்தில்)

இப்பகுதியில், விமலை பந்தாடிய விதம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. பாடலின் சந்தம் (ஓசை) பந்தாடும் அசைவுகளை உணர்த்துவது போல் உள்ளது அல்லவா?

திருமணம்

சீவகனும் விமலையும் தம்முள் மாறி மாறிக் காதல் நோயால் அவதியுற்றனர். விமலையின் அழகினைப் பார்த்துத் திகைப்புடன், அவள் தந்தை சாகர தத்தன் கடையருகில் சீவகன் நின்றான். அப்போது விற்காமல் தேங்கிக் கிடந்த பழஞ் சரக்குகளெல்லாம் ஆறு கோடிப் பொன்னுக்கு மேல் இலாபத்துடன் விற்று விட்டது. இதனைக் கண்ட விமலையின் தந்தை சாகர தத்தன், சீவகனைக் கண்டு மகிழ்ந்தான். அவனைத் தன் மாளிகையில் இருத்தி, இந்த இல்லம் இனி இருப்பிடம் என்று கூறினான். “எனக்கும் என் வாழ்க்கைத் துணைவி கமலைக்கும் பிறந்த அழகுப் பெண்ணே விமலை என்பாள். அவள் பிறந்த பொழுது அவளின் எதிர்கால வாழ்வைக் கணித்துக் கூறினான் ஒரு சோதிடன். “பன்னிரண்டாம் வயதில் இம்மங்கைக்குரிய மணவாளன், உன் கடையின் அருகே வருவான். அப்போது தேங்கிய பொருட்கள் எல்லாம் விற்று விடும்" என்பதே அவன் கணித்துக் கூறிய செய்தியாகும்" என்றான்.

திருமல்க வந்த திருவேயெனச் சேர்ந்து நாய்கன், செருமல்கு வலோய்க் கிடமால் இதுவென்று செப்ப (பாடல் - 86)

மங்கைக் குரியான் கடையேறும்வந் தேற லோடும் வங்கந் நிதிய முடன்வீழுமற் றன்றி வீழா தெங்குந் தனக்கு நிகரில்லவ னேற்ற மார்பம் நங்கைக் கியன்ற நறும்பூ வணைப்பள்ளி யென்றான். (பாடல் - 89)

(திருமல்க - செல்வம் பெருக; திருவே = செல்வமே; நாய்கன் = வணிகன்; செரு = போர்; வலோய்க்கு = வேலினை உடைய உனக்கு)

"சோதிடன் கூறிய செய்தி, இன்று நடந்ததால் நீயே என் மகளுக்குக் கணவனாவாய், இவளைத் தழுவி இன்பநலம் பெறுக” என்றும் கூறினான் சாகர தத்தன். புதுமனையில் இருத்தி மங்கல இசை முழங்கத் திருமணம் புரிவித்தான். இருவரும் ஒன்று கூடிய அன்பால் இரு உடலும் ஓர் உயிரும் ஆனார்கள். பின் சீவகன் விமலையுடன் இரண்டு நாட்கள் கூடியிருந்து, பின் சோலையில் தங்கியிருந்த தன் தோழர்களைக் காணவேண்டும் என்று கூறிப் பிரிந்து சென்றான்.

இப்பகுதி, விமலைக்குத் திருமணம் நடந்த விதம் பற்றி உணர்த்துகின்றது.

இலக்கியச் சிறப்பு

காப்பிய இலக்கண மரபுப்படி அமைந்த முதல் காப்பியம் சீவக சிந்தாமணி. இது விருத்தப்பாவில் அமைந்துள்ளது. வருணனைக்குப் பொருத்தமான பாவாக அது விளங்குகிறது.

இயற்கை வருணனை

விமலையார் இலம்பகத்தில் சீவகன் ஏமாங்கத நாடு செல்லும் போது காட்டினைக் கடந்து சென்றான். அங்குக் காணப்பட்ட இயற்கையழகைத் திருத்தக்க தேவர் சுவைபட வருணித்துள்ளார். பெரிய மலைகளில் மலையாடுகள் தம் கால்களால் மிதித்த மணிகள் பலவும் செந்துகள்களாயின. அத்துகள்கள் மலையிலிருந்து கொட்டுவது, விண்ணுலகமே உளுத்துக் கொட்டுவதாய்த் தோன்றியது. இப்படி விழுந்த அந்த மணிகளின் செந்துகள்கள் படிந்த மரங்கள் கற்பகத் தருவை ஒத்துத் தோன்றின.

அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலின் ஒண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்

விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்

கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே (பாடல் - 11)

(வருடை = மலையாடு; உழக்கல் = மிதித்தல்; தூளி = துகள், உளுவுண்டென: உளுத்தது போல)

மணிகளின் செந்துகள் படிந்த மரம், கற்பக மரத்திற்கு ஒப்பாயிற்று.

கேள்வி பதில்கள்

1. சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் எத்தனை?

விடை : சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் 13.

2. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் பெயர் என்ன ?

விடை : திருத்தக்க தேவர்

3. சீவகனின் பெற்றோர் யாவர்?

விடை : சச்சந்தன், விசயை என்போர் சீவகனின் பெற்றோர் ஆவர்.

4. சிந்தாமணி என்றால் என்ன ?

விடை : சிந்தாமணி என்பது 'ஒளிகெடாத ஒரு வகை மணி' யாகும்.

5. சீவக சிந்தாமணியை மணநூல்' என்றழைக்கக் காரணம் என்ன ?

விடை : சீவகன் மகளிர் எண்மரைத் திருமணம் செய்து கொள்ளும் வரலாற்றை விரித்துரைக்கும் நூலாதலால் 'மண நூல்' என்று அழைத்தனர்.

6. இக் காப்பியம் உணர்த்தும் சமயம் யாது ?

விடை : சீவக சிந்தாமணி உணர்த்தும் சமயம் சமணம் ஆகும்.

7. சீவக சிந்தாமணியின் முதல் நூல்கள் யாவை ?

விடை : சீவக சிந்தாமணி தோன்றுவதற்குக் காரணமாக அமைந்த முதல் நூல்கள் வடமொழியில் உள்ள (1) கத்திய சிந்தாமணி, (2) சத்திர சூடாமணி, (3) ஸ்ரீ புராணம் ஆகியவை ஆகும்.

6. சீவகனின் தாய் மாமன் யார் ?

விடை : சீவகனின் தாய் மாமன் கோவிந்தன் ஆவான்.

7. விசயை கண்ட கனவு யாது ?

விடை : விசயை, விடியற்காலையில் சீவகனை நேரில் காண்பது போல் கனவு கண்டாள்.

8. விமலை என்பாள் யார்?

விடை: சாகர தத்தனுக்கும் கமலைக்கும் பிறந்த மகளே விமலை ஆவாள்.

9. விமலை பயின்ற விளையாட்டு என்ன ?

விடை : விமலை பந்தாடுதலில் திறன் பெற்றிருந்தாள்.

10. சோதிடன் கணித்துக் கூறியது என்ன ?

விடை : விமலை பிறந்த பொழுது, அவள் தந்தை சாகர தத்தனிடம், இம்மங்கைக்குரிய மணவாளன் உன் கடைக்கு வரும் போது, விலையாகாமல் தேங்கிக் கிடந்த சரக்கெல்லாம் விற்கும் என்று சோதிடன் கணித்துக் கூறினான்.

11. விமலை பந்தாடுந்திறன் பற்றி எழுதுக.

விடை : விமலை ஒரே நேரத்தில் இரு கைகளிலும் ஐந்து பந்துகளை விடாமல் பந்தடிக்கும் திறனுடையவள். மேலே எழும்பியும், முறை தவறிக் கீழே விழுதலின்றியும் ஆடுகின்ற பந்து கையில் சேரும். ஒரு பந்து கையிலும், மற்றொன்று முகத்தின் முன்னேயும், பிறிதொன்று தலைக்கு மேலேயும், மார்புக்கு நேராகவும், கூந்தலுக்குப் பின்னாலும் சென்று வட்டமாக வரும்படி பந்தாடும் வல்லமை உடையவள்.

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

Filed under:
3.16393442623
S.kasthuri Sep 13, 2020 11:22 AM

This is very useful and intersting to me

S.RENUKA Oct 30, 2019 12:54 PM

இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top