பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்

சிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று பெரிய புராணம் இந்நூலில் இலைமலிந்த சருக்கத்தில் பத்தாவது உட்பிரிவு கண்ணப்ப நாயனார் புராணம். இப்பகுதி என்ன சொல்கிறது என்பதை இப்பகுதி விளக்குகின்றது.

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  • திண்ணனார், குடுமித் தேவர் மீது கொண்டிருந்த பக்தி (மெய்யன்பு) புலப்படுத்தப்படுகின்றது. திண்ணனார், சிவகோசரியார் ஆகிய இருவரின் வழிபாட்டு நிலைகளில் சடங்குகளை விட உணர்வே உயர்ந்தது என்பதனை இப்பாடம் விளக்குகின்றது.
  • இறைவனுக்கே, தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்ட சிறப்பு தெரிவிக்கப் பெறுகின்றது.
  • தனி மனித வாழ்வுக்கும், சமுதாய வாழ்வுக்கும் அன்பே முதன்மையானதும் சிறந்ததும் ஆகும் என்பதனை இப்பகுதி உணர்த்துகின்றது.
  • புராணத்தில் இடம் பெறும் திண்ணனாரின் கண்தானச் செயல், இற்றைக்கால அறிவியல் வழிப்பட்ட கண்தானங்களுக்கு முன்னோடியாகவும் முற்போக்குச் சிந்தனை உடையதாகவும் திகழ்வதை அறியலாம்.
  • ஆகம நெறியினும், அன்பு நெறியே சிறந்தது என்பதனை உணர்த்துகின்றது.

இப்பகுதியைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

* சோழர் காலத்தில் தோன்றிய காப்பியங்களுள் தமிழ்க் காப்பியமாக, பெரியபுராணம் விளங்குகின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

* ஆட்சி முறையில் தந்தைக்குப் பின் மகன் ஆளல் என்னும் வாரிசு உரிமை முறை, இறைப் பற்று, அன்பு நெறி ஆகியன பற்றியும், தன்னை இழந்தால் இறைவனின் அருள் கிடைக்கும் என்னும் ஆன்மிக உண்மையையும் இப்பகுதியால் அறிந்து கொள்ளலாம்.

* அறிவு நெறியைக் காட்டிலும் அன்பு நெறியே மேம்பட்டது, வீடுபேறு அளிப்பது என்பதனைக் கண்ணப்பர் வரலாற்றின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

* ஞான யோகம், கர்ம யோகம் ஆகிய இரண்டிலும் மேம்பட்டதாகப் பக்தி யோகம் திகழ்கின்றது என்னும் தத்துவக் கருத்தினை உணர்ந்து கொள்ளலாம்.

* ஆறே நாட்களில் வழிபாடு செய்து சிவனருள் பெற்ற கண்ணப்பரின் வரலாறு மூலம், எத்தனைக் காலம் வழிபாடு செய்கின்றோம் என்பதை விட. எப்படி வழிபாடு செய்கின்றோம் என்பதே இன்றியமையாதது என்னும் கருத்தினைப் பெரிய புராணம் புலப்படுத்தி நிற்பதனை அறிந்து கொள்ளலாம்.

* நூலாசிரியரின் பெருமை, திண்ணனாரின் சிறப்பு, பக்தி நெறி ஆகிய செய்திகளை முறைப்படுத்திக் காணலாம். அடியார்களின் பக்தி நிலை பற்றி அறிந்து கொள்ள இப்பாடம் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

முன்னுரை

தனிப் பாடல்களாக இருந்த சங்கத் தமிழ், கதைபொதி பாடல்களாக வளர்ந்து, தொடர்நிலைச் செய்யுள்கள், காப்பியம், புராணம் என்பனவாக விரிந்தது. புராணத்திற்கும், காப்பியத்திற்கும் மிகுதியான வேறுபாடுகள் இல்லை எனலாம். பெருங்காப்பிய இலக்கணங்களில் பெரும்பாலானவற்றைத் தனக்குரியதாகக் கொண்டு பழமையான வரலாற்றின் அடிப்படையில் அமைந்த நூல் புராணம் எனப்படும். சமயக் கருத்துகளை வலியுறுத்தவே காப்பியங்களும், புராணங்களும் எழுந்தன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய சமயப் போராட்டங்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் நிலவின. இடைக்காலத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) தோன்றியது பக்தி இயக்கம். இவ்வியக்கம் தமிழிற்குப் பல பக்தி இலக்கியங்களைத் தந்தது. அவற்றுள் சைவ இலக்கியங்களின் சாரமாகத் திகழ்வது சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாகும். இந்நூல் இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்த 63 சைவ அடியார்களான நாயன்மார்கள் சிறப்பையும், அவர்களின் வரலாற்றையும், தொண்டின் சிறப்பையும் விளக்குகின்றது. சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது.

சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இந்நூலில், பக்தியின் பெருமை, மக்களின் வாழ்க்கை முறை, ஆட்சி முறை, தமிழ்நாட்டின் திருத்தலங்கள் ஆகிய பல செய்திகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. தமிழில் தோன்றிய மற்ற காப்பியங்களில் வெளிப்படையாகக் காணமுடியாத ஒரு தனிச் சுவையாகப் பக்திச் சுவையைக் கொண்டும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் பாடப்பட்டதே இந்நூல் எனலாம். இத்தகு சிறப்பினைக் கொண்ட புராண நூலைத் தேசிய இலக்கியம் என்று ஆன்றோர்கள் பாராட்டியுள்ளனர். இப்பெரிய புராணத்தில் இலைமலிந்த சருக்கத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் விளங்குகின்றது. இப்பகுதியில் திண்ணனாரின் தோற்றம், பக்திச் சிறப்பு, வழிபாட்டு முறை, இறைவனுக்குக் கண்ணை அப்பிக் கண்ணப்பராதல் முதலான பல செய்திகளைக் காணலாம்.

பெரிய புராணம்

செயற்கு அரிய செய்வர் பெரியர் என்னும் குறள் வரிக்கேற்ப அறுபத்து மூன்று நாயன்மார்கள் புரிந்த இறைப் பக்தியையும், தொண்டு நெறியையும் வரலாற்று முறையில் கூறும் நூலே பெரிய புராணம் (பெரியர் புராணம்) ஆகும். இந்நூல் பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்ட நாயன்மார்களுடைய வாழ்க்கையை விவரிக்கிறது. அக்காலச் சமுதாய வரலாற்றையும் எளிய, இனிய நடையில் எடுத்து சொல்கிறது. தில்லை அம்பலத்தே ஆடும் சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார், பக்தி வளமும், இறையருட் திறமும் குறைவிலாது சிறக்குமாறு இலக்கியப் பெருங்களஞ்சியமாக, பெரிய புராணத்தை இயற்றி அருளினார்.

காப்பிய அமைப்பு

பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது. இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது. 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும். சுந்தரரின் சிறப்பு, அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருட்திறம், குரு (ஆசிரியன்), இலிங்கம் (இறைவன் திருமேனி), சங்கமம் (அடியார்) ஆகிய முறைகளில் சிவனை வழிபட்ட நிலைகள், தொண்டின் திறம், சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு வழிபட்டு முத்தி பெற்ற தன்மைகள், சிவன் அடியார்களை ஆட்கொண்ட விதம் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. அடியார்களின் வரலாறும். அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியும், இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதமும் இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார், திருத்தொண்டர் மாக்கதை என்று பெயரிட்டார். செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் (பெரியார்களின்) சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.

காப்பிய நோக்கம்

கி.பி.11, 12-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆட்சி செய்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனாவான் (அநபாய சோழன்). அம்மன்னனின் அவையில் முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் சேக்கிழார். சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையைக் கதைப் பின்னலாகக் கொண்டு பெரிய புராணத்தைப் பாடினார் சேக்கிழார். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார். சிவனை முதன்மைப்படுத்தி வழிபடும் சமயமாகிய சைவத்தையும், அடியார்களது வரலாறு, தொண்டு நிறைந்த வாழ்வு, முத்தி பெற்ற நிலை ஆகியவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் புலப்படுத்துவதே பெரிய புராணத்தின் நோக்கம் ஆகும்.

காப்பியச் சிறப்பு

அறுபத்து மூன்று நாயன்மார்களின் புகழ் மிக்க வரலாற்றினை உலகறிய, பக்திச் சுவையோடு விரிவாக எழுதிய பெருமைக்கு உரியவர் சேக்கிழார் ஆவார். அவர் சோழ நாட்டு அமைச்சராக இருந்தமையால் நாட்டின் பல பகுதிகளுக்கும், நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் நேரில் சென்று, அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர். பிற மொழிக் கதைகளைத் தழுவாமல், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களைப் போலவே பெரியபுராணம் என்னும் நூல் சிறப்புற்றுத் திகழ்கின்றது. ஆண் பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.

நூலாசிரியர்

சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் அருண்மொழித் தேவர். இப்பெயரே அவருக்குப் பெற்றோர் இட்டு வழங்கியதாகும். சேக்கிழார் என்பது இவரது குடிப்பெயராகும். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால், இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணிபுரிந்தார். அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, அடியார்களின் பெருமையை வரலாறாக எழுதினார். இந்நூலின் பெருமையை உணர்ந்த மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தான். இவருடைய காலம் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். சிவத் தொண்டர்களின் வரலாற்றைச் சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. கல்வெட்டுகள் இவரை மாதேவடிகள் என்றும், இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று இவரைப் பாராட்டுகின்றார்.

கண்ணப்ப நாயனார் புராணம்

பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாக) இடம் பெற்றுள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார். திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன், கண்ணப்பன், வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.

கதைச் சுருக்கம்

பொத்தப்பி என்னும் நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகன் என்பவன் வேடர்குலத் தலைவனாக இருந்து மக்களைக் காத்து வருபவன். தத்தை, அவன் மனைவியாவாள். நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாமல் இருக்கவே, முருகனை வேண்டி விழா எடுத்தனர். அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முருகன் அருள் புரிந்தான். அவர்களுக்கு அழகான வலிமை மிக்க ஆண்குழந்தை பிறந்தது. நாகன் அக்குழந்தையைத் தன் கைகளால் தூக்கும்போது திண் என்று இருந்தமையால் திண்ணன் என்று பெயரிட்டான். திண்ணன் வளர்ந்து குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுச் சிறப்படைந்தான். நாகன் முதுமை காரணமாகத் தன் பதவியினைத் தன் மகனாகிய திண்ணனிடம் தந்து நாடாளும்படி பட்டம் சூட்டினான். இதனைக் கண்டு, தேவராட்டியும் வந்து, நலம் சிறக்க என வாழ்த்திச் சென்றாள். ஒரு நாள் திண்ணன் நாணன், காடன் ஆகிய நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார்.

வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப்பன்றியைத் திண்ணன் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள். அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணன். இதனைக் கண்ணுற்ற நாணன். இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா என்றான். மலை ஏறும்போது திண்ணனுக்கு மட்டும் புதுவிதமான இன்பமும் உணர்வும் ஏற்பட்டன.

குடுமித் தேவருக்கு, சிவ கோசரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி பூசை செய்வதனை நாணன் மூலம் அறிந்தார். மலையேறிய திண்ணன், குடுமித் தேவரைக் கண்டவுடன் அவரை வணங்கியும், கட்டித் தழுவியும் ஆடினார்; பாடினார். நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப்படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் குடுமித் தேவருக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார்.

வழக்கம் போல, பூசை புரிய வந்த சிவ கோசரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்தினார், புலம்பினார். பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூசனை புரிந்து சென்றார். அடுத்து, திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திச் சிவ கோசரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றித் திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார். ஆறாம் நாள் திருக்காளத்தி நாதர் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது.

உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார். தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

குறிப்பு :

பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.

உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் -அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.

• கதைமாந்தர்

கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இடம்பெறும் கதை மாந்தர்கள். நாகன், தத்தை, திண்ணன், நாணன், காடன், வேடுவர்கள், தேவராட்டி, குடுமித் தேவர், சிவ கோசரியார்.

இடம் பெறும் நிகழ்ச்சிகள்

நாயனாரின் வாழ்க்கையையும் அதில் ஏற்பட்ட மாற்றத்தையும் விரிவாகக் காணலாம்.

திண்ணனார்

பொத்தப்பி எனும் மலைநாட்டில் உள்ள உடுப்பூர் என்னும் ஊரினை வேடர் குலத் தலைவன் நாகன் என்பான் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி தத்தையாவாள். அவர்களுக்கு நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறு இல்லாமல் இருக்கவே, முருகனுக்கு விழா எடுத்தனர். அம்முருகனின் அருளால் பிறந்தவனே திண்ணன். திண் என்று இருந்த காரணத்தால் தன் மகனுக்குத் தந்தையாகிய நாகன் திண்ணன் என்று பெயரிட்டான். வேடுவர் குல மரபிற்கு ஏற்ப வில், வேல், ஈட்டி, முதலான ஆயுதங்களைக் கற்றுத் தேர்ந்து கையில் ஏந்தியவன், திண்ணன், அவன் கரிய நிறமுடையவன். உரத்த குரலுடையவன். தலை மயிரைத் தூக்கிக் கட்டியவன். தலையிலே மயிற்பீலி அணிந்தவன். சங்கு மணிகளும், பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையும், புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் மார்பிலே அணிந்தவன். இடையிலே புலித் தோல் ஆடையணிந்தவன், குறுவாளையும் வைத்திருப்பவன். கால்களில் வீரக் கழல் பூண்டு, தோல் செருப்பு அணிந்தவன். வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவன்.

குடுமித் தேவரைக் காணல்

தந்தை நாகனுக்கு வயது முதிர்ந்தது. அதனால் நாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை வேட்டையாட வேண்டி, தன் மகனை வேடர் தலைவனாக்கினான் நாகன். இதனைக் கண்ட தேவராட்டியும் நலம் சிறக்க எனக் கூறித் திண்ணனாரைப் பாராட்டி வாழ்த்திச் சென்றாள். ஒருநாள் நாணன், காடன் என்னும் இரு நண்பர்களோடு வேட்டைக்குச் சென்றார் திண்ணனார். காட்டில் திரிந்த வலிய பன்றியைத் தம் குறுவாளால் வீழ்த்தினார். அருகில் ஓடும் பொன்முகலி ஆற்றினையும் வானளாவி நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார். நண்பர்கள், "இம்மலையில், குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா” என்றார்கள். திண்ணனாருக்கு மலையேறும் போதே புதுவிதமான இன்பமும், உணர்வும் உண்டாயின.

வழிபடல்

மலையேறிய திண்ணனார் பேருவகை கொண்டு ஓடிச் சென்று, காளத்தி நாதரைக் கட்டித் தழுவினார். ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். மேலும் கன்றை ஈன்ற பசுவைப் போலப் பிரிய மனமின்றிச் சுழன்று சுழன்று இறைவனிடமே நின்றார். பின்பு பொன் முகலியாற்றங் கரையினருகில் காடன், தீயில் இட்டு பக்குவப்படுத்திய பன்றி இறைச்சியினைத் தம் வாயினால், சுவையும் பதமும் பார்த்துப் பின் ஒருகையில் அதனை எடுத்துக்கொண்டு, மற்றொரு கையில் வில்லம்பு ஏந்தினார். இறைவனது திருமஞ்சனத்திற்காகப் பொன்முகலியாற்று நீரை வாயில் நிறைத்துக்கொண்டு, பூசனைக்காகப் பூங்கொத்துகளைத் தம் தலையில் செருகிக் கொண்டு, மலையுச்சிக்கு வந்தார். குடுமித் தேவரின் மேல் இருந்த சருகுகளைச் செருப்பணிந்த தம் பாதங்களால் விருப்பமுடன் தள்ளினார். தம் வாயிலிருந்த நீரால் திருமஞ்சனம் செய்தார். தம் தலையில் இருந்த மலர்களைத் திருமுடி மீது சார்த்தி, பன்றி இறைச்சியினைத் திருவமுதாகப் படைத்து மகிழ்ந்தார். குடுமித் தேவருக்கு இரவில் துணை யாருமில்லை என்று எண்ணி, இரவு முழுவதும் அவரே கையில் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலை புலர்ந்தது. திண்ணனார், காளத்தி நாதருக்குத் திருவமுது தேடிவரப் புறப்பட்டார்.

சிவபிரானின் அருள் வாக்குப் பெறல்

திண்ணனார் சென்றவுடன் வழக்கம் போல் சிவ கோசரியார் பூசை செய்ய வந்தார். மேலுள்ள இறைச்சி முதலானவற்றை நீக்கி ஆகம முறைப்படி பூசை செய்துவிட்டுச் சென்றார். திண்ணனார் முன் போலவே வேட்டையாடி விலங்குகளைத் தீயில் சுட்டு அமுதாக்கிப் படைத்திட வந்தார். தொடர்ந்து, சிவ கோசரியார் வழிபட்டுச் சென்றவுடன், திண்ணனார் வந்து அவற்றை நீக்கி வழிபடுவதும் தொடர்ந்தது. தினமும் சிவன் திருமேனி மீது இறைச்சி இருப்பது கண்டு சிவ கோசரியார் வருந்தினார். மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான், நீ கூறும் மறைமொழிகள் அவன் அன்பு மொழிகளுக்கு ஈடாகாது, நீ வேள்வியில் தரும் அவியுணவைக் காட்டிலும் அவன் தரும் ஊனமுது இனியது என்றும் இந்நிகழ்ச்சியினை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்றும் கூறினார்.

அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும் அவனுடைய அறிவுஎல்லாம் நமை அறியும் அறிவு என்றும் அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனிய வாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறிநீஎன்று அருள்செய்தார்.

(பெரி: க.பு.:157)

என்றும் திண்ணனாரின் பக்திச் சிறப்பைச் சிவபிரான் கூறினார்.

கண்ணப்பன் ஆதல்

ஆறாம் நாள், திருக்காளத்திப் பெருமான் திண்ணனார் தம் மீது கொண்டுள்ள அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வதறியாமல் திகைத்தார். பூசைக்காகக் கொண்டு வந்த பொருள்கள் சிதறின. தம் கையால் இரத்தம் கசிவதைத் துடைத்தாலும் நிற்கவில்லை. உடனே பச்சிலைகளைத் தேடிக் கொண்டுவந்து தடுத்துப் பார்த்தார். நிற்கவில்லை. இந்த நிலையில் திண்ணனார் அடைந்த துயரத்தையும், தவிப்புகளையும் சேக்கிழார் உணர்ச்சி மிக்க கவிதையாய் வடித்திருக்கிறார்.

பாவியேன் கண்ட வண்ணம்
பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள்
அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகி லேன்யான்
என்செய்வேன் என்று பின்னும்...

(க.புராணம் :174)

(பரமனார், அத்தனார், விமலனார் = சிவபிரானின் சிறப்புப் பெயர்கள்; மேவினார் பிரிய மாட்டா= சேர்ந்தவர்கள் பிரிய இயலாத பேரன்பு கொண்ட)

இனி என்ன செய்வது என்று சிந்தித்து நின்றார். அப்பொழுது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே அம்பினால் தமது வலக்கண்ணை அகழ்ந்தெடுத்து, ஐயன் திருக்கண்ணில் அப்பினார். இரத்தம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். அடுத்து, சிவபிரான் தமது இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார், 'இதற்கு யான் அஞ்சேன், முன்பே மருந்து கண்டுபிடித்துள்ளேன். அதனை இப்பொழுதும் பயன்படுத்துவேன். எனது இன்னொரு கண்ணையும் அகழ்ந்தெடுத்து அப்பி ஐயன் நோயைத் தீர்ப்பேன்' என்று எண்ணினார். அடையாளத்தின் பொருட்டு, காளத்தி நாதர் திருக்கண்ணில் தமது இடக்காலை ஊன்றிக் கொண்டு, மனம் நிறைந்த விருப்புடன் தமது இடது கண்ணைத் தோண்டுவதற்கென அம்பை ஊன்றினார். குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப! என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். மேலும், என்றும் என் வலப்பக்கம் இருக்கக் கடவாய் என்று பேரருள் புரிந்தார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார். இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் அன்று முதல் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

கேள்வி பதில்கள்

1. சைவத் திருமுறைகளில் பெரிய புராணத்தின் இடம் யாது?

விடை : சைவத் திருமுறைகளில் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது.

2. பெரிய புராணம் பிறமொழி தழுவிய காப்பியமா?

விடை : பெரியபுராணம், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு பாடப்பட்ட தமிழ்க் காப்பியமாகும்.

3. பெரிய புராணம் உணர்த்தும் செய்தி யாது?

விடை : எளிய நிலையில் மனம் தளராமல் இறைச் சிந்தனையோடு, தொண்டு புரிந்தால் இறையருள் பெறலாம்' என்னும் செய்தியை 63 நாயன்மார்களின் வரலாற்றைத் கொண்டு உணர்த்தும் நூலே பெரியபுராணம் ஆகும்.

4. சேக்கிழாரை ஆதரித்த மன்னன் யார்?

விடை : சேக்கிழாரை ஆதரித்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழன் (அநபாய சோழன்) ஆவான்.

5. பெரிய புராணம் இயற்றக் காரணமான நூல்கள் எவை?

விடை : சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் பெரிய புராணம் பாடுவதற்குக் காரணமாக அமைந்த நூல்கள் ஆகும்.

6. பெரிய புராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

விடை : பெரியபுராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் சுந்தரர் ஆவார்.

7. திண்ணனாரின் பெற்றோர் யாவர்?

விடை : திண்ணனாரின் தந்தை: நாகன்; தாய்: தத்தை ஆவர்.

8. குடுமித் தேவர் எங்கு வீற்றிருக்கின்றார்?

விடை : பொன்முகலி ஆற்றங்கரையின் அருகில் இருக்கும் திருக்காளத்தி மலையில் குடுமித் தேவர் வீற்றிருக்கின்றார்.

9. சிவ கோசரியாருக்கும், திண்ணனாருக்கும் உள்ள வழிபாட்டு நிலை வேறுபாடு யாது?

விடை : சிவ கோசரியாரின் வழிபாடு ஆகம முறைப்படி செய்வதாகிய அறிவு வழிப்பட்டது-சடங்கு வழியான வைதிக நெறி, ஆனால் திண்ணனாரின் வழிபாடு அன்பு செலுத்துதல் ஆகிய உணர்வு வழிப்பட்டது-பக்தி நெறி, இறைவனுக்கு விருப்பமானது.

10. திண்ணனாருக்கு எத்தனை நாட்களில் இறைவன் காட்சி தந்தார்?

விடை : ஆறே நாட்களில் இறைவன் திண்ணனாருக்குக் காட்சி தந்தார்.

11. திண்ணனாரின் தோற்றச் சிறப்புப் பற்றிக் குறிப்பிடுக.

விடை : வேட்டுவர் குலத் தோன்றல் திண் என்னும் உடலைப் பெற்றதால் திண்ணன் எனப் பெயர் பெற்றார். தலைமயிரைத் தூக்கிக் கட்டியவர். தலையிலே மலர்களைச் சூடியவர். கழுத்திலே சங்கு மணிகளும், பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையையும், புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் அணிந்தவர். இடையிலே ஆடையாகப் புலித் தோலையும், குறுவாளையும் வைத்திருப்பவர். கால்களில் வீரக் கழல் பூண்டு செருப்பு அணிந்தவர். தலையிலே மயிற்பீலி சூடியவர். வில், வேல், அம்பு, வாள், ஈட்டி முதலானவற்றைக் கையிலே ஏந்தியவர். வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவர்.

12. திண்ணனாருக்கு, கண்ணப்பர் எனப் பெயர் வரக் காரணம் என்ன?

விடை : சிவ கோசரியாருக்கு, இறைவன் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வது அறியாமல் திகைத்தார். பின்னர் துடைத்தாலும், பச்சிலையிட்டாலும் நிற்காதது கண்டு வருந்தி நின்றார். அப்போது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி நினைவுக்கு வர, தன் கண்ணையே அம்பினால் அகழ்ந்தெடுத்து அப்பினார்.

உதிரம் நின்றது. அது கண்டு மகிழ்ந்தாடினார். உடனே, சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். உடனே அஞ்சாமல் இடது கண்ணையும் அப்ப, காளத்தி நாதரின் திருக்கண்ணில் தமது இடக்கால் விரலை ஊன்றி, அம்பினால் இடக்கண்ணைத் தோண்ட முனைந்தார், குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தன் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார், கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

Filed under:
3.16666666667
விநாயகமூர்த்தி Mar 13, 2020 07:55 AM

இப்பகுதியில் உள்ள கன்னப்பனின் செய்தி மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.....

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top