பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காப்பியங்களும் சங்க இலக்கியமும்

காப்பியங்களும் சங்க இலக்கியமும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

காப்பியத்தின் இலக்கணம்

காப்பியம் என்னும் சொல்லின் பொருளையும், காவியம் அல்லது காப்பியம் என்னும் தொடர்நிலைச் செய்யுள் பற்றிய செய்திகளையும் இது தெரிவிக்கின்றது. தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணம் பற்றிய செய்திகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்கள் கூறும் செய்திகளும் தரப்பட்டுள்ளன. காப்பியப் பண்பான பாவிகம் பற்றிய செய்திகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. காப்பியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன. பண்டைக் காலம் முதல், இக்காலம் வரையிலுள்ள காப்பியங்கள் குறித்த பாகுபாடும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பெருங்காப்பியம், சிறுகாப்பியம் குறித்த செய்திகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

தனிப் பாடல்களாக இருந்த இலக்கிய வகை, காப்பிய இலக்கியமாக வளர்ந்த தன்மையை அறிய முடிகிறது. காப்பிய இலக்கணம் குறித்துத் தண்டியலங்காரம் முதலான நூல்கள் கூறும் செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியத்தின் பங்கு, பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்னும் பாகுபாடு, காப்பிய வளர்ச்சிப் படிநிலைகள் ஆகியவற்றை இதன் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தன்னேரில்லாத் தலைவனின் உயரிய பண்புகள், பண்டைக் கால மக்களின் வாழ்வு, சமயம், அரசியல், பண்பாட்டு நெறிமுறைகள் முதலியவற்றைக் காப்பியங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். கவிஞனின் புலமைத் திறம், காப்பியப் படைப்பில் முழுமையாக வெளிப்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு நீதிகளை உள்ளடக்கிச் சுவைபட விளக்கும் ஆற்றல் வெளிப்படுவதனை அறிந்துணரலாம்.

முன்னுரை

தமிழ் இலக்கியம் பல வகைப்படும். தன்னுணர்ச்சிப் பாடல்களும், அகம், புறம் பற்றிய பாடல்களும் சங்க இலக்கியமாக மலர்ந்தன. அற நூல்கள் நீதி இலக்கியமாக வடிவம் கொண்டன. பிற்காலத்தில் பக்திப் பனுவல்கள், பக்தியின் அடிப்படையில் இலக்கியத் தன்மை பெற்றுப் பெருமை கொண்டன. நல்ல நீதிகளை உள்ளடக்கிக் கதைபொதி பாடல்களாக அமைந்தவை காப்பியம் என்னும் இலக்கிய வகையாக மலர்ந்தன. இலக்கியம் கண்டதன் பின், இலக்கணம் இயம்புதல் என்னும் கருத்துப்படி, இந்தக் காப்பிய இலக்கியங்கள் தோன்றிய பிறகு, அவற்றுக்கான இலக்கண விதிகளும் நூல்களில் இடம் பெற்றன.

தண்டியலங்காரம் என்னும் நூல், காப்பிய அமைப்பை, சிறப்பாகத் தமிழ்ப் பெருங்காப்பியங்களின் இலக்கணத்தை, வரையறுத்துக் கூறுகின்றது. அவ்வகையில் காப்பிய இலக்கணம் குறித்த கருத்துகள் இப்பகுதியில் தெரிவிக்கப்படுகின்றன. காப்பியம் என்பதன் பொருள், காப்பியத்தின் தோற்றம், வகைகள், காப்பியத்தின் இலக்கணம், பெருங்காப்பியம், சிறு காப்பியம் பற்றிய செய்திகள் ஆகியவை இங்கு விளக்கப்படுகின்றன.

காப்பியம்

காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம்.

விளக்கம்

காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது. இதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள். காவியம் என்னும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம் எனக் கொள்வதுண்டு. காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது எனப் பொருள் தரும். காப்பியம் என்பதைக் காப்பு + இயம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம். இப்பெயர் தொடக்கத்தில் இலக்கண நூல்களைச் சுட்டுவதற்காகவே அமைந்து, இடைக் காலத்தில் வடமொழித் தொடர்பால் ஒருவகை இலக்கிய வடிவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர். காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர். காவியம், காப்பியம் என்னும் இவ்விரு சொற்களும் சில தமிழ்க் காப்பியப் பெயர்களில் அமைந்திருப்பதைக் காணலாம்.

சான்றுகள்:

• காவியம் என்று பெயர் பெறுபவை

யசோதர காவியம், நாககுமார காவியம், இயேசு காவியம், இராவண காவியம்,

* காப்பியம் என்று பெயர் பெறுவன

கண்ணகி புரட்சிக் காப்பியம், கற்புக் காப்பியம்

தோற்றம்

எம்மொழியிலும், தொடக்கத்தில் காப்பிய இலக்கியம் தோன்றுவதற்கான அடிப்படைகளும், வளர்ச்சிப் படிநிலைகளும் அமைந்திருக்கும். திடீரென ஒரு பேரிலக்கியப் படைப்பு ஒரு மொழியில் முகிழ்த்து எழுதல் என்பது இயலாத ஒன்று. முதலில் தனிப் பாடல்களாகவும், செய்யுள் தொகுப்புகளாகவும் இருந்த தொல் பழங்கால (Primitive) இலக்கியப் படைப்பு மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்றது; கதையைத் தொகுத்துக் கூறும் பாடல்கள் பிறந்தன. கற்பனை வளம் விரிவடைந்தது. இவ்வாறுதான் காப்பியப் படைப்புகள் உருவாயின. தனிமனிதனின் வீரதீரச் செயல், அவன் பிறப்பு, வளர்ப்பு, அவன் சார்ந்த மரபு முதலான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், விழாக்களிலும் வழிபாடுகளிலும் பாடுபொருளாயின. அவனது புகழ் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டது. அவன் ஒரு குறிக்கோள் மனிதனாக உயர்த்தப்பட்டான். மேலும் அவன் தெய்வீக நிலையை எய்தினான். அவனைப் போற்றிப் புகழ்ந்த நிலை, படிப்படியாக அவன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையாக உருவாகித் தனிச்சிறப்பும் உயர்வும் பெற்றது.

பின்னர் இசையோடு கூடிய கூற்று வகைக் கதைப்பாடல்கள் உருவாகத் தலைப்பட்டன. புலவர்கள் இவ்வரலாற்றுப் பழங்கதைப் பாடல்களைத் தொகுத்து, அவற்றை ஒரு முறைப்படுத்தித் தம் கவித்துவச் சிறப்பால் உயிரோட்டமுள்ள ஓர் ஒப்பற்ற படைப்பாகக் காப்பியத்தை ஆக்கித் தந்தனர்.

காப்பிய மரபு

காப்பிய இலக்கணங்களாகச் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றிய காப்பியக் கவிஞர்கள் பலரும், சில இயல்புகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப அமைத்தனர். அவை காப்பிய மரபுகள் ஆயின. எடுத்துக்காட்டாக மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்னும் வருணனைகளைத் தனித்தனியே நாட்டுப் படலம், நகர்ப் படலம் எனப் பகுத்து விரிவாகப் பாடினர். இவை காப்பியக் கதைப் போக்கிற்குப் பெரிதும் துணை செய்யாத நிலையிலும் இம் மரபுகள் காப்பிய அமைப்பில் வேரூன்றி விட்டன. காப்பியத்தைத் தொடங்கும் போது வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறுவதும் மரபாக உறுதிப்பட்டது.

காப்பியத்தின் முதல் சொல் பெருமைக்குரிய சொல்லாக அமைய வேண்டும் என்பது கூட மரபு ஆனது. எடுத்துக்காட்டாக, கம்பராமாயணம் உலகம் யாவையும் எனத் தொடங்குகிறது. பெரியபுராணம் உலகெலாம் உணர்ந்து எனத் தொடங்குகிறது. காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் பாவிகமாக (உட்பொதிவாக) - வைப்பது அல்லது வெளிப்படையாகச் சொல்வது மரபு ஆயிற்று. இயற்கையிறந்த நிகழ்வுகளும் (Supernatural), எதிர்வரும் நிகழ்வுகளை உணர்த்துவதான கனவு, நிமித்தம், வான்மொழி (அசரீரி) ஆகியவையும் காப்பியங்களில் இடம்பெறுவது மரபாயிற்று. காப்பியங்களில் கதை நிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும், இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம் பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன.

காப்பிய இலக்கணம்

தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப் படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

பெருங்காப்பியம்

1) பெருங்காப்பியமாவது வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றுமோ பெற்றும் காப்பியம் தொடங்கலாம்.

2) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளைப் பயனாகத் தருவதாக அமையும்.

3) தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

4) மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

5) திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல் முதலிய நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

6) அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.

7) சந்தி எனப்படும் கதைப் போக்கு (கதைத் தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.

8) அமைப்பு முறையில் பெருங்காப்பியம் உள் பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

9) எண்வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

10) கற்றறிந்த புலவரால் புனையப்பட்டதாக இருத்தல் வேண்டும். நாற்பொருளும் குறையாது வரவேண்டும். இவை தவிரப் பிற உறுப்புகளில் சில குறைந்தும் வரலாம்.

பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு, வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரம் தூது செலவுஇகல் வென்றி
சந்தியின் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி,
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப
(தண்டியலங்காரம், நூற்பா -8)
கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர்

(தண்டியலங்காரம், நூற்பா -9)

சிறுகாப்பியம்

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றேனும், இரண்டேனும், மூன்றேனும் குறைந்து வருவது காப்பியமாகும். தண்டியலங்காரம் கூறும் காப்பியம் என்பது சிறுகாப்பியத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அறமுதல் நான்கினுங் குறைபாடுடையது காப்பியம் என்று கருதப் படுமே

(தண்டியலங்காரம், நூற்பா -10)

மேற்கூறிய பெருங்காப்பியமும், காப்பியமும் ஒருவகைச் செய்யுளாலும், பலவகைச் செய்யுள்களாலும், உரைநடை கலந்தும், பிறமொழி கலந்தும் வரலாம்.

அவைதாம்

ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே

(தண்டியலங்காரம், நூற்பா -11)

மேற்கூறியவாறு தண்டியலங்காரம் காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது.

பாவிகம்

காப்பியத்தினுடைய பண்பாகப் பாவிகம் என்பதையும் அந்நூல் குறிக்கின்றது. பாவிகம் என்பது காப்பியப் பண்பே

(தண்டியலங்காரம், நூற்பா - 91)

காப்பியம் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினையே பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது நூலின் தனிச் செய்யுள்களிலோ, பகுதிகளிலோ புலனாவது இல்லை. தொடக்கம் முதல் முடிவு வரை நூலை முழுமையாக நோக்கும் போதே இப்பண்பு விளங்கும்.

பிற நூல்களில் காப்பிய இலக்கணம்

வீரசோழியம் புராணத்திற்கும் காப்பியத்திற்கும் மிகுந்த வேறுபாடு இல்லை என்னும் அடிப்படையில், காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது. பன்னிரு பாட்டியல் காப்பியத்தைத் தலை, இடை, கடை என மூன்றாகப் பிரித்து விளக்குகின்றது. மாறனலங்காரம், வச்சணந்தி மாலை, நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்களிலும் காப்பிய இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

தொல்காப்பியம் கூறும் தொன்மை, தோல் முதலான இலக்கிய வனப்புகள் (அழகு) எட்டினையும் காப்பியத்தோடு தொடர்புபடுத்திக் காண முடியும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்ற விதிப்படி, காப்பியங்களின் அமைப்பு அடிப்படையிலேயே இவ்வகை இலக்கணங்கள் அமைந்தன எனலாம். தமிழ்க் காப்பியங்களில் இவ்விலக்கண அமைதி பெரும்பாலும் அமைந்துள்ளது. தமிழில், முன்னர் குறிப்பிட்ட பெருங்காப்பியம், காப்பியம் முதலானவைகளுடன் இதிகாசம், புராணம், கதைப்பாடல் ஆகியவற்றையும் காப்பியத்துள் அடக்குவதுண்டு.

காப்பியப் பாகுபாடு

தண்டியலங்காரம் காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என்று இரு வகைப்படுத்துகிறது என்பதை முன்னர்க் கண்டோம். பன்னிரு பாட்டியல் தலை, இடை, கடை என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தினையும் ஐம்பெருங் காப்பியங்கள் என்று வழங்குவது மரபாக இருந்து வருகிறது. வடமொழியில் பஞ்சமகாகாவியம் என்று வழங்குவதைப் பின்பற்றி இவ்வாறு தமிழிலும் வழங்கும் போக்கு அமைந்தது எனலாம்.

ஐம்பெருங் காப்பியம்

ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு, முதன்முதலில் நன்னூல் மயிலைநாதர் உரையில் காணப்படுகிறது. கந்தப்ப தேசிகர் இயற்றிய திருத்தணிகை உலாவில் இவ்வைந்து காப்பியங்களையும் ஐம்பெருங்காப்பியங்கள் என்று முதன் முதலில் தெளிவாகக் கூறியுள்ளார். சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம் ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன.

தன்மை அடிப்படை

மேலை நாட்டினர் காப்பியத்தின் தன்மைகளுக்கு ஏற்பப் பின்வருமாறு வகைப்படுத்துவர். அவை,

1) தொல்பழங்காலக் காப்பியம் (PRIMITVE EPIC)

2) கலைக் காப்பியம் அல்லது இலக்கியக் காப்பியம் (ARTEPIC (or) பTERARY EPIC) என்பன.

1) தொடக்கக் காலக் காப்பியங்களில் வீரதீரச் செயல்களே முக்கியத்துவமும் தலைமைச் சிறப்பும் பெற்றன. இந்த வீர உணர்வில் மிகுந்து விளங்கிய காப்பியங்களையே தொல்பழங்காலக் காப்பியம் என்பர். இவ்வகைக் காப்பியங்களுக்கு எடுத்துக்காட்டு: ஹோமரின் இலியாது, ஒதீஸி.

2) ஒரு தனிப் பெருவீரனைச் சுற்றி மட்டும் அமையாமல், கதை நிகழ்வுகளுக்கு ஓர் இலட்சியக் கனவு நோக்கத்தையும் இணைத்துக் காட்டப்பட்டிருப்பது கலை அல்லது இலக்கியக் காப்பியம் என்பர். மிகப் பழைய காப்பியங்களைத் தனியே பிரித்து விட்டால், மற்றவை இவ்வகையில் அடங்கும்.

பாடு பொருள் அடிப்படை

இவை தவிரப் புலவர்கள் பாடக் கூடிய பாடுபொருள் அடிப்படையிலும் (சுவை, வரலாறு, பக்தி முதலியன) பாகுபாடு செய்யலாம் என்பது கீழே விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

பெயர் - ஆங்கிலப் பெயர்

நகைச்சுவைக் காப்பியம் - Burlesque Epic

நிகழ்ச்சிக் காப்பியம் - Epic of Action

வீர சாகசக் கற்பனைக் காப்பியம் - Romantic Epic

வீரக் காப்பியம் - Heroic Epic

அங்கதப் பொருண்மைக் காப்பியம் - Satire Epic

உருவக நிலைக் காப்பியம் - Symbolic Epic

எள்ளல் (கேலி) காப்பியம் - Mock Epic

செந்நடைக் காப்பியம் - Classical Epic

வரலாற்றுக் காப்பியம் - Historical Epic

தேசியக் காப்பியம் - National Epic

புராணக் காப்பியம் - Mythological Epic

சமயக் காப்பியம் - Religious Epic

அறக் காப்பியம் - Moral Epic

காப்பிய உறுப்புகள்

முன்பு காப்பிய இலக்கணம் என்னும் பகுதியில் நாம் கண்ட காப்பிய உறுப்புகள் சிலவற்றை இங்குக் காணலாம்.

கதை அமைப்பு

காப்பியத்தின் உயிர் நாடியான கதை, காலத்திற்கும், காப்பிய ஆசிரியனின் நோக்கத்திற்கும் ஏற்ப அமையும். வாய்மொழிக் கதைகள், பழமரபுக் கதைகள், வரலாற்று நிகழ்ச்சிகள், கற்பனையில் எழுந்தவை என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் காப்பியத்தின் கதை அமையும்.

தலைவன்

மக்களில் நற்பண்பு மிக்கவர்களைக் காப்பியத் தலைவர்களாகக் கொள்ளும் மரபு உள்ளது. தன்னேரில்லாத் தலைவன் என்பவன் பேராண்மை, எல்லாரையும் தன்வயப்படுத்தும் தகுதி, உயர்பண்புடைமை, விழுமிய கல்வியறிவு, அனைவரையும் ஈர்க்கும் தோற்றப் பொலிவு, அனைவராலும் விரும்பப்படும் இயல்பு, தான்வாழும் காலத்திலேயே தன்னைப் பற்றிய வரலாறு தோன்றக் காரணமாக இருத்தல் போன்ற தலைமைப் பண்புகள் உடையவனாய் இருத்தல் வேண்டும் எனலாம்.

பாத்திரப் படைப்பு

பாத்திரப் படைப்புத்தான், காப்பியங்களுக்கு உயிர்த் தன்மையாகும். காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களும் ஒரே அளவில் ஒரே சீராகப் பங்கு பெறுவதில்லை. காப்பியக் கதையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை, கதை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாத்திரங்களை முதன்மைப் பாத்திரங்கள் எனலாம். ஒன்றிரண்டு செயல்களோடு காப்பிய அரங்கிலிருந்து மறைகின்ற பாத்திரங்களைத் துணைப் பாத்திரங்கள் எனலாம். மேலும் எதிர்நிலைப் பாத்திரங்களும் உண்டு.

கிளைக் கதைகள்

கிளைக் கதைகள், மையக் கதைக்குத் துணையாக அமையும். இவை இன்றியும் கதை நிகழலாம் என்பதால் இவை முதன்மை இடம் பெறுவதில்லை, கிளைநிலை மட்டுமே பெறும். காப்பியத்தில் சுவை கூட்டுவதற்காக, தேவைக்கு ஏற்பக் கிளைக் கதைகள் மிகுந்தும் குறைந்தும் அமையும்.

காப்பியங்கள்

காப்பியங்கள் உலகிலுள்ள பல மொழிகளிலும் படைக்கப்பட்டு உள்ளன. அவை அந்தந்த நாட்டுப் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்து காணப்படுகின்றன. அக்காப்பியங்கள் பற்றிய செய்திகளைக் கீழே காணலாம்.

உலக மொழிகளில் காப்பியங்கள்

உலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றை காணலாம்.

காப்பியத்தின் பெயர்

மொழி/நாடு

ஆசிரியர்

இலியாது, ஒதீஸி

கிரேக்க மொழி

ஹோமர்

ஆர்லண்டோ இன்ன மராட்டோ

இத்தாலி

பயர்டோ

ஷாநாமா

பாரசீகம்

அபுல்காசிம் மன்சூர்

மே

செக்மொழி

மெக்கா

வாண்டன் ஓஸ்ரெய்னால்ட்

டச்சு மொழி

பிளீமிஷ்

இந்திய மொழிக் காப்பியங்கள்

இந்திய மொழிகளிலும் பழங்காலம் முதல் காப்பியப் படைப்புகள் தோன்றி வந்துள்ளன. பின்வரும் இந்தியக் காப்பியங்கள் குறிப்பிடத் தக்கவை ஆகும்.

காப்பியத்தின் பெயர்

மொழி

ஆசிரியர்

இராமாயணம்

வடமொழி

வால்மீகி

மகாபாரதம்

வடமொழி

வியாசர்

இராம சரித மானஸ்

ஹிந்தி

துளசிதாசர்

குமாரசம்பவம், இரகு வம்சம்

வடமொழி

காளிதாசர்

நூர் நாமா

பாரசீகம்

அமீர் குஸ்ரு

சுதாம சரித்திரம்

குஜராத்தி

பக்தசிரோமணி

பத்மாவதி

வங்காளம்

ஆலாவுல்

பிரபுலிங்க லீலை

கன்னடம்

சாமரசன்

குமார சம்பவம்

தெலுங்கு

நன்னிசோட

தமிழில் காப்பியங்கள்

தமிழில் காலந்தோறும் தோன்றிய காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், கதைப்பாடல் எனத் தமிழறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வடநூலார் வடமொழியில் கவியால் எழுதப்படும் அனைத்தையும் காவியம் என்னும் சொல்லால் குறித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

* இதிகாசம்

கடவுளரும் கடவுளின் அம்சம் ஆனவர்களும், மானிடராகப் பிறந்து, பல தெய்வீகச் செயல்களை ஆற்றி, இறுதியில் தெய்வீக நிலை எய்துவதைப் பற்றி விரிவாகப் பேசுவன இதிகாசங்கள் எனப்படும். (இதிகாசம் என்னும் சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது என்பதாம்.)

* புராணம்

கடவுளர் பற்றிய புராணங்களில் தெய்வங்கள், தெய்வீக நிலையில் நின்று செயல்படுகின்றன. இத்தெய்வங்களின் அற்புதச் செயல்கள் ஒரு தலத்தைச் (இடம்) சார்ந்து அமைகின்ற போது அதைப் பற்றிக் கூறும் கதைப் பாடல்கள் தல புராணங்கள் என்று பெயர் பெறுகின்றன.

* காப்பியம்

சிறப்பு மிக்க, மனிதப் பாத்திரங்கள், நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள் எனப்படுகின்றன. தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன. இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றது. அவற்றுள் சில குறிப்பிடத்தக்க காப்பியங்களைச் சுட்டிக் காட்டலாம்.

காப்பியத்தின் பெயர்

ஆசிரியர்

சமயம்

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள்

சமணம்

சீவகசிந்தாமணி

திருத்தக்கதேவர்

சமணம்

சூளாமணி

தோலாமொழித்தேவர்

மணம்

மணிமேகலை

சீத்தலைச் சாத்தனார்

பௌத்தம்

குண்டலகேசி

நாதகுத்தனார்

பௌத்தம்

இராமாயணம்

கம்பர்

வைணவம்

பாரதம்

வில்லிப்புத்தூரார்

வைணவம்

பெரியபுராணம்

சேக்கிழார்

சைவம்

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர்

சைவம்

சீறாப்புராணம்

உமறுப்புலவர்

இஸ்லாம்

தேம்பாவணி

வீரமாமுனிவர்

கிறித்துவம்

இரட்சண்ய யாத்திரிகம்

கிருஷ்ணப்பிள்ளை

கிறித்துவம்

இதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும் இலக்கியத்தை, கண்ட காவியம் என்று வடமொழி அறிஞர் குறிப்பிடுவர். அத்தகைய முயற்சி தமிழிலும் நிகழ்ந்தது. நைடதம் (அதிவீர ராம பாண்டியர்), நளவெண்பா (புகழேந்திப்புலவர்), குசேலோபாக்கியானம் (வல்லூர் தேவராசப் பிள்ளை ), அரிச்சந்திர புராணம் (நல்லூர் வீரைகவிராயர்) முதலியவை இந்த வகைக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இன்றுவரை தமிழில் உருவான காப்பியங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும். தமிழ்க் காப்பியங்களின் அமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரம் பற்றிய செய்திகளை இங்குக் காண்போம்.

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். மகளிர் காலில் அணியும் அணி சிலம்பு. சிலம்பால் விளைந்த நூல் ஆதலின் சிலப்பதிகாரம் என்றாயிற்று. கண்ணகியின் சிலம்பும், பாண்டிமாதேவியின் சிலம்பும் கதைக்கு அடிப்படையானவை. இக்காப்பியம் மூன்று காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டது. சோழ நாட்டில் புகார் நகரில் பிறந்த கண்ணகி, பாண்டி நாட்டு மதுரையை அடைந்து, கணவனை இழந்து, சேர நாட்டில் புகுந்து தெய்வமாகியதே கதையாம். இதனைச் சமணக் காப்பியம் என்பர் அறிஞர்.

இக்காலக் காப்பியங்கள்

பழையன கழிதலையும், புதியன புகுதலையும் காலந்தோறும் தோன்றுகின்ற இலக்கியங்களில் காணலாம். அவ்வகையில், தமிழ்க் காப்பிய வளர்ச்சிப் போக்கும் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சமய அடிப்படையில் பல காப்பியங்கள் எழுந்தன. இடைக்காலத்தில் சமயங்களை வளர்த்த சமயச் சான்றோர் வரலாறுகளைப் பாடுவது மிகுதியாகக் காணப்பட்டது. குறிப்பாகச் சோழர் காலத்தில்தான் மிகுதியான காப்பியங்கள் தோன்றின. அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலத்தைக் காப்பிய இலக்கியக் காலம் என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள்.

கி.பி. 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் மிகுதியும் புராண நூல்கள் எழுந்தன. சோழர் காலத்தை அடுத்தும் இக்காலத்திலும் கதைப் பாடல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. இக்காலத்தில் காப்பிய இலக்கணங்களுள் ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி அமைக்கப்பட்ட செய்யுள் படைப்புகள் சிறு காப்பியம், சிறு காவியம், குறுங்காப்பியம், குறுங்காவியம் என்று பெயரிட்டு வழங்கப்படுகின்றன. இக்காவியங்கள் மொழிபெயர்ப்பாகவும், தழுவல் காப்பியங்களாகவும் இருக்கின்றன. அண்மைக் காலம் வரையிலும் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் கீழே பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன.

பாரதியார் - கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்.

பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி.

கவிமணி - மருமக்கள் வழி மான்மியம்

கண்ணதாசன் - ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி,ஏசு காவியம்.

முடியரசன் - பூங்கொடி, வீரகாவியம்

கவியோகி சுத்தானந்த பாரதியார் - பாரத சக்தி மகா காவியம்

டாக்டர் சாலை இளந்திரையன் - சிலம்பின் சிறுநகை

தி. வெங்கட கிருஷ்ணய்யங்கார் - இராகவ காவியம்

புலவர் குழந்தை - இராவண காவியம்

வாணிதாசன் - கொடிமுல்லை

அண்ணாதாசன் - கலைஞர் காவியம்

தமிழ் ஒளி - மாதவி காவியம்

இக்காலக் காப்பியத்தைப் பற்றிய விளக்கத்தை ஒரு சான்று கொண்டு நோக்கி உணரலாம்.

* பாரதியார் - பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம், பாரதக் கதையின் ஒரு பகுதியாகத் திகழ்கின்றது. சூதில் அனைத்தையும் இழக்கின்றான் தருமன். அந்நிலையில் துச்சாதனன் திரௌபதியின் கூந்தல் பற்றி இழுத்துச் சபைக்குக் கொண்டு வருகின்றான். நாணழிந்த திரெளபதி, சபையோர் முன்னிலையில் தான் அடைந்த அவமானத்தால் ஆத்திரமடைந்து, கொடூரமான ஒரு சபதம் செய்கின்றாள். தொடர்ந்து வீமன், அர்ச்சுனன் முதலானோரும் சபதம் எடுக்கின்றனர். இதுவே இக்கதை பொதி பாடலின் கருவாகும். இக்கதைப் பாடல் குறியீட்டு நிலையில் இந்திய விடுதலை உணர்வைப் பிரதிபலிக்கின்றது. இக்காவியம் இரண்டு பாகங்களையும் 5 சருக்கங்களையும் 308 பாடல்களையும் கொண்டது.

கேள்வி பதில்கள்

1.தண்டியலங்காரம் காப்பியத்தை எவ்வாறு வகைப்படுத்துகிறது?

விடை : தண்டியலங்காரம் காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இரு வகைப்படுத்துகிறது.

2. பாவிகம் என்பது யாது?

விடை : காப்பியம் முழுவதிலும் ஊடுருவி நிற்கும், கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தே பாவிகம் எனப்படும்.

3. ஐம்பெருங் காப்பியங்கள் என்பவை யாவை?

விடை : சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாகும்.

4. காவியம் என்று பெயர் பெறும் இலக்கியங்களைக் கூறுக.

விடை : நாககுமார காவியம், யசோதர காவியம், இயேசு காவியம், இராவண காவியம் முதலான நூல்கள் காவியம் என்று பெயர் பெற்றுள்ளன.

5. தன்னேரில்லாத் தலைவனின் பண்புகள் யாவை?

விடை : மக்களில் நற்பண்பு மிக்கவர்களைக் காப்பியத் தலைவர்களாகக் கொள்ளும் மரபு உள்ளது. தன்னேரில்லாத் தலைவன் என்பான் பேராண்மை, எல்லாரையும் தன் வயப்படுத்தும் தன்மை, உயர்பண்புடைமை, விழுமிய கல்வியறிவு, அனைவரையும் ஈர்க்கும் தோற்றப் பொலிவு, அனைவராலும் விரும்பப்படும் தன்மை, தான் வாழும் காலத்திலேயே தன்னைப் பற்றிய வரலாறு தோன்றக் காரணமாக இருத்தல் போன்ற தலைமைப் பண்புகள் உடையவனாய் இருத்தல் வேண்டும்.

6. காப்பியத்தில் கதையமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்?

விடை : காப்பியத்தின் உயிர்நாடியே கதையாகும். அது காலத்திற்கும், ஆசிரியனின் நோக்கத்திற்கும் ஏற்ப அமையும். வாய்மொழிக் கதைகள், பழமரபுக் கதைகள், வரலாற்று நிகழ்ச்சிகள், கற்பித்துக் கொள்ளப்படுபவை என்பனவற்றுள் ஏதேனும் ஒரு விதத்தில் காப்பியக் கதையின் அடிப்படை அமைய வேண்டும்.

7. காப்பிய மரபுகள் சிலவற்றைக் கூறுக.

விடை : i) பாவிகம், காப்பியத்தின் சிறப்பு வாய்ந்த மரபாகும்.

ii) காப்பியத்தில் காப்பியக் கட்டமைப்பு சிறப்பாக அமைந்திருக்கும்.

iii) காப்பியம் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் முதலான பிரிவுகளைப் பெற்றிருக்கும். சுவை, பாவம்

(மெய்ப்பாடு) ஆகிய கூறுகளையும் கொண்டிருக்கும்

8. கிரேக்க மொழியில் உருவான காப்பியத்தின் பெயர் என்ன?

விடை : கிரேக்க மொழியில் ஹோமர் இயற்றிய காப்பியம் இலியாது ஆகும்.

9. வடமொழியில் படைக்கப்பட்ட காவியங்கள் எவை?

விடை : வால்மீகி முனிவரின் இராமாயணம், வியாசரின் மகாபாரதம், காளிதாசரின் ரகுவம்சம் முதலியவை.

10. காப்பியங்களைப் பாடுபொருள் அடிப்படையில் பாகுபாடு செய்ய முடியுமா?

விடை : காப்பியங்களைப் புலவர்கள் பாடுகின்ற பாடுபொருள் அடிப்படையில் பாகுபாடு செய்ய முடியும். சான்றாக, நகைச்சுவைக் காப்பியம், தேசியக் காப்பியம், புராணக் காப்பியம், சமயக் காப்பியம், அறக் காப்பியம் முதலானவற்றைக் கொள்ளலாம்.

11. தமிழில் முதற்காப்பியங்களாகப் போற்றப்படுபவை எவை?

விடை : இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன.

12. இதிகாசம் என்றால் என்ன?

விடை : கடவுளரும், கடவுளின் அம்சமானவர்களும், மானிடராகப் பிறந்து, பல தெய்வீகச் செயல்களை ஆற்றி, இறுதியில் தெய்வீக நிலை எய்துவதைப் பற்றி விரிவாகப் பேசுவன இதிகாசங்கள் எனப்படும்.

13. சேக்கிழார் இயற்றிய காப்பியம் யாது?

விடை : சேக்கிழார் இயற்றிய காப்பியம் பெரியபுராணம்.

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

Filed under:
3.36842105263
அபிராமி May 16, 2018 08:41 AM

சோழர் கால இலக்கியங்களை சுருக்கமான வாக்கியமாக தருக .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top