பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கடற்கரையிலே 1 முதல் 8

கடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்) 1 முதல் 8 வரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முகவுரை

கண்ணுக்கினிய காட்சி தரும் கடற்கரையிலே நின்று, கவிஞரும் கலைஞரும் பேசும் பான்மையில் அமைந்த இக் கட்டுரைகளிலே தமிழகத்தின் செழுமையும் செம்மையும், பழமையும் பண்பாடும் சிறந்து விளங்கக் காணலாம்.

திருவள்ளுவர்

கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் - இன்னோர் தரும் காட்சிகள் எத்தனை? சென்னைமா நகரின் சிறந்த நலங்களில் ஒன்று அதன் கடற்கரை யன்றோ?
அங்குள்ள திரு மயிலைக் கடற்கரையில் வேனிற்கால மாலைப் பொழுதிலே வந்து நின்றார் ஒருமேதை. சீலமே உருவாய அப் பெரியார் சிறிது நேரம் கடலைக் கூர்ந்து நோக்கினார். அப்போது அடி வானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம். இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும்போ லிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டுப் பெயர்ந்தார் அல்லர் அப் பெரியார்; கடலின்மேல் மண்டிய மேகத்தை நோக்கிப் பேசலுற்றார்:-
"என்னே இம் மேகத்தின் கருனை! சென்னை மாநகரில் அனல் வீசுகின்றது; கேணிகளில் குடி தன்ணீர் குறைகின்றது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக் கடல், அளவிறந்த தண்ணீரைத் தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்ட மடிக்கின்றதே! இது தகுமா? முறையா? இந் நெடுங் கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? ‘கொடு’ என்றால் கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும்! அன்னாரைத் தடிந்து கொள்ளுதல் தக்கதே யாகும் என்று கருதியன்றோ இம் மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளை கொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?
"கருணைமா முகிலே! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று மனங்களிக்கின்றேன். கார் முகிலே! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளைகொண்ட உன்னை இம் மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர். பண்டைத் தமிழர்; அதனால் உன்னை+ எழிலி என்று அழைத்தனர்.
----------
+ எழில்=அழகு; எழிலி=அழகுடையது (a thing of beauty).
"கைம்மாறு வேண்டாக் கருமுகிலே! உனக்கு மனமுவந்து தன்ணீர் அளித்தால், தனக்கு நலம் உண்டு என்பதை அறியாது போயிற்றே இக் கடல் நீ மழை பெய்யாவிட்டால் இந் நெடுங் கடலும் தன் நீர்மை குன்றுமே! நீ ஆற்று நீராக வந்து கடலைப் பெருக்குகின்றாய்; ஊற்று நீராகப் பொங்கிக் கடலை ஊட்டுகின்றாய்; மழை நீராகப் பொழிந்து கடலை நிறைக்கின்றாய். ஒரு வழியாகக் கொடுத்துப் பல வழியாக வாங்குகின்ற உபாயமும் இக் கடல் அறியா தொழிந்ததே!

"நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்கா தாகி விடின்"

என்று நான் பாடியதை நீ மெய்பித்து விட்டாயே!

"மன்னுயிரை வாழ்விக்கும் மாரியே! உன்னை மனமாரப் போற்றுகின்றேன்; வாயார வாழ்த்துகின்றேன். பாரெல்லாம் புகழும் காரே! வாழி; ஏழுலகேத்தும் எழிலியே! வாழி" என்று வாழ்த்திக் கொண்டு தமது மயிலாப்பூர்க் குடிசையின் உள்ளே புகுந்தார் அம் மேதை. மழை கொட்டிற்று
-----------------------------------------------------------

இளங்கோவடிகள்

பாரதநாடு ஒரு பழம் பெரு நாடு. அந் நாட்டின் தென் கோடியாய்த் திகழ்வது குமரி முனை. குமரிக் கரையிலே நின்று கடலைக் காண்பது ஓர் ஆனந்தம். தமிழ் நாட்டுக் குணகடலும் குடகடலும் குதித்தெழுந்து ஒன்றோடொன்று குலாவக் காண்பது குமரிக்கரை. கருமணலும் வெண்மணலும் அடுத்தடுத்து அமைந்து கண்ணுக்கு விருந்தளிப்பதும் அக் கரையே. கன்னித் தமிழும் கவின் மலையாளமும் கலந்து மகிழக் காண்பதும் அக் கரையே.
இத்தகைய குமரிக் கடற்கரையிலே வந்து நின்றார் ஒரு முனிவர். அவர் திருமுகத்திலே தமிழின் ஒளி இளங்கிற்று. நீலத்திரைக் கடலை அவர் நெடிது நோக்கினார். அந் நிலையில் அவருள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது. தண்ணொளி வாய்ந்த அவர் வண்ணத்திருமுகம் வாட்டமுற்றது; கண் கலங்கிக் கண்ணீர் பொங்கிற்று. தழுதழுத்த குரலிலே அவர் பேசத் தொடங்கினார்:-
"ஆ! குமரிக் கடலே! உன்னைக் காணும்போது என் நெஞ்சம் குமுறுகின்றதே! உன் காற்றால் என் உடல் கொதிக்கின்றதே! அந்தோ! அலை கடலே! எங்கள் அருமைத் தமிழ்நாடு உனக்கு என்ன தீங்கு செய்தது? எங்கள் தாய்மொழியைப் போற்றி வளர்த்த பாண்டியன் உனக்கு என்ன பிழை சொய்தான்? தமிழ் நாட்டு மூவேந்தருள் எமது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை முன்னின்று ஆதரித்தவன் அவனே என்பதை நீ அறியாய் போலும்; கண்ணும் ஆவியுமாகத் தமிழ் அன்னையைப் பொற்றினானே அம் மன்னன்! பழந் தமிழைப் பண்ணுறத் தெரிந்து ஆய்ந்து பசுந்தமிழ் ஆக்கினானே! அவன் புகழை அறிந்து நீ அழுக்காறு கொண்டயோ? அன்றி, உன் முத்துச் செல்வத்தை அவன் வளைத்து வாரிக்கொண்டான் என்று வன்கண்மை யுற்றாயோ?
"கடுமை வாய்ந்த கருங்கடலே! மண்ணாசை உன்னையும் விட்டபாடில்லையே! மண்ணைத் தின்று தான் தீரவேண்டுமென்றால், பண்பு வாய்ந்த எங்கள் பாண்டிநாடுதானா உன் கண்ணிலே பட்டது? விலங்கினம் போன்ற வீணர் வாழும் நாடுகளை நீ விழுங்க லாகாதா? நெஞ்சாரப் பிறரை வஞ்சித்து வாழும் தீயவர் நாட்டை நீ தின்று ஒழித்த லாகாதா? பிற நாட்டாரது உரிமையைக் கவர்ந்து, அவரை அடிமை கொள்ளும் பேராசைப் பேயர்கள் வாழும் நாட்டைப் பிடித்து உண்ண லாகாதா? நிறத் திமிர் கொண்டு அறத்தை வேரறுக்கும் வெறியர் வாழும் நாட்டை நீ அழித்து முடித்த லாகாதா? 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற பரந்த உண்மையைப் பறைசாற்றிய எங்கள் தமிழ் நாடா உன் மனத்தை உறுத்தியது? மன்னுயிரை யெல்லாம் தம்முயிர்போல் கருதிய முனிவரும் மன்னரும் வாழ்ந்த எங்கள் தமிழகமா உன் கருத்தை வருத்தியது? நாடி வந்தவர்க்கெல்லாம் நாடளித்து, வாடி வந்தவர்க்கெல்லாம் விருந்தளித்து அறநெறியில் நின்ற எங்கள் அருமைத் திருநாடா உன் பேய்ப்பசிக்கு இரையாக வேண்டும்?
"பொல்லாக் கடலே! தென்னவனுக் குரிய எத்தனை ஊர்களைத் தின்றுவிட்டாய்! எத்தனை ஆறுகளைக் குடித்து விட்டாய்! எத்தனை மலைகளை விழுங்கி விட்டாய்! பழங்காலத்தில் பஃறுளி (பல்துளி) என்ற ஆறு பாண்டியனுக்கு உரியதாயிருந்ததென்று தமிழ்க் கவிதை கூறுகின்றதே! அந்த ஆற்றின் அழகைச் சங்கப் புலவராகிய நெட்டிமையார் பாடினாரே! அந்த ஆறெங்கே? அதன் பரந்த மணல் எங்கே? அவ் வாற்றைக் கொள்ளை கொண்ட உன் கொடுமையை அறிந்து, கண்ணீர் வடித்தானே எங்கள் பாண்டியன்! அன்று அவன் அழுத குரல், இன்றும் உன் காற்றின் வழி வந்து என் காதில் விழுகின்றதே! இம்மட்டோ உன் கொடுமை? எங்கள் பழந்தமிழ் நாட்டின் தென்னெல்லையாகத் திகழ்ந்த குமரியாற்றையும் குடித்து விட்டாயே! 'தமிழகத்தின் வடக்கு எல்லை திருவேங்கடம், தெற்கு எல்லை குமரியாறு' என்று பனம்பாரனார் பாடினாரே! அக் குமரியாறு எங்கே? 'தமிழ் கூறும் நல்லுலகத்தின்' எல்லையாக நின்ற அந்த ஆற்றையும் கொள்ளை கொண்டு எங்கள் வரம்பழித்து விட்டாயே! பஃறுளி யாற்றுக்கும் குமரி யாற்றுக்கும் இடையே அமைந்த நாடு நகரங்கள் எல்லாம், இருந்த இடந் தெரியாமல் உன் கொடு மையால் கரைந்து ஒழிந்தனவே! அந் நிலப்பரப்பில், அடுக்கடுக்காக உயர்ந்து ஓங்கி நின்ற குமரி என்னும் பெருமலையும் உன் பாழும் வயிற்றில் பட்டு ஒழிந்ததே! ஐயோ! நீ எங்கள் மண்ணைக்கடித்தாய்; ஆற்றைக் குடித்தாய்; மலையை முடித்தாய் இப்படி எல்லாவற்றையும் வாரி எடுத்து வயிற்றில் அடக்கும் உன்னை 'வாரி' என்று அழைப்பது சாலவும் பொருந்தும்! நீ வாரி உண்டாய்! நீங்காத வசையே கொண்டாய். உன் கொடுமையால் தமிழ் நாடு குறுகிற்று; என் உள்ளம் உருகிற்று.

+ " நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு"

என்று குறுகிய தமிழ் நாட்டைப் பாடியபொழுது என் மனம் என்ன பாடு பட்டது என்பதை நீ அறிவாயோ?
"நெடுங்கடலே! செந்தமிழ் நாட்டைக் கொள்ளை கொண்டமையால் நீ கொடுங்கடல் ஆயினாய்! உன் கொடுமையால் நாடிழந்த பாண்டியன் வடதிசையிலுள்ள கங்கையும் இமயமும் கொண்டு வசையொழிய வாழ்ந்தான். உன்னைத் தூற்றுவேன்; அம்மன்னனைப் போற்றுவேன்.

++ "வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி"
++ சிலப்பதிகாரம்: காடுகாண் காதை.
என்று வாழ்த்திக்கொண்டு கடற்கரையை விட்டு அகன்றார் அம் முனிவர்.

+ நெடியோன் குன்றம் = திருவேங்கடமலை.
தொடியோள் பௌவம் = குமரிக்கடல்.
- சிலப்பதிகாரம்:வேனிற்காதை


-----------------------------------------------------------

நக்கீரர்

தென்பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தெய்வ மணங் கமழ்ந்து திகழ்வது செந்தில் என்னும் திருச்செந்தூர். அங்கு அலை பாட மயில் ஆடும்; அகம் உருக அருள் பெருகும். ஒரு நாள் காலைப் பொழுதிலே அக் கடற்கரையில் வந்து நின்றார் நற்றமிழ் வல்ல நக்கீரர். தமிழ் ஆர்வம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. திருச்சீர் அலைவாய் என்ற ஆலயத்தின் அருகே நின்று அவர் பேசலுற்றார்:-
"அருந்தமிழ்க் கடலே! உன்னைக் காணப் பெறாது பன்னாள் வருந்தினேன். ஆயினும், எந்நாளும் உன்னை மறந்தறியேன். ஐந்தாறு நாளைக்கு முன்னே உன் பெருமையை ஒரு பழைய ஏட்டிலே கண்டேன்; ஆனந்தம் கொண்டேன். உன் அலைகளின் அழகும், அலைவாயில் அமைந்த ஆலயத்தின் சிறப்பும், ஆலயத்தை யடுத்த மணல் மேட்டின் மாண்பும் எத்துணை அருமையாக ஒரு பாட்டிலே படம் எடுத்துக் காட்டப்படுகின்றன! அப் பாட்டின் நயங்களைச் சங்கப் புலவரும் பாராட்டினர். மதுரைமா நகரில் அரசு புரிந்த நன்மாறன் என்ற பாண்டியனை வாழ்த்துவது அப் பாட்டு. 'நன் மாறனே! நீ பல்லாண்டு வாழ்க. கந்தவேள் வீற்றிருக்கும் செந்திலம்பதியில் உள்ள மேட்டு மணலினும் பலவாக நின் வாழ்நாள் நிறைக' என்று வாழ்த்தினான் இளநாகன். அவன் மதுரைப் புலவன்; மதுர மொழியன். அவன் + பாட்டைக் கேட்டிருப்பாய் கடலே!
"செந்தில் ஆழியே! உன்னைக் கண்டோர் எல்லாம் - உன் காற்றை உண்டோர் எல்லாம் - உன்னைப் பாராட்டிப் போற்றினர். குமரிக் கடல்போல் நீ கொடுங் கடல் அல்லை; உன் கரையில் நின்று குமுறினார் எவரும் இல்லை. தமிழகத்தில் உள்ள கடற்கரையூர்களை யெல்லாம் நான் கண்குளிரக் கண்டுள்ளேன். பட்டினம் என்று புகழ் பெற்ற காவிரிப்பூம் பட்டினத்தின் கடற்கரையை நான் அறிவேன். அங்கு மலை போன்ற மரக்கலங்கள் அலைகடலில் நீந்தி வருதலும் போதலும் ஆனந்தமான காட்சியே. ஆயினும், அக் கரையில் எப்போதும் ஆரவாரம்! அல்லும் பகலும் ஓயாத பண்டமாற்று! அமைதியை நாடுவார்க்கு அக் கடற்கரையில் இடமில்லை. எம் மருங்கும் வணிகர் கூட்டம்; பொருளே அவர் நாட்டம். உன்னிடம் ஆரவாரம் இல்லை; அமைதி உண்டு. பரபரப்பு இல்லை; பண்பாடு உண்டு. மரக்கலத்தால் வரும் பொருட் செல்வம் இல்லை; அதனினும் மேலாய அருட்செல்வம் உண்டு.

+ "வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
... ... ... ...
நீ நீடு வாழியே, நெடுந்தகை! தாழ்நீர்
வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுவாழ் எக்கர் மணலினும் பலவே."
- புறநானூறு 55.

"காண இனிய கருங்கடலே! அதோ! கிழக்கு வெளுக்கின்றது. நீல வானமும் நீயும் கூடுகின்ற குணதிசையில் செங்கதிரோன் ஒளிவீசி எழுகின்றான். அக் காட்சியைக் கண்டு குயில்கள் பாடுகின்றன; மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. ஆடும் மயில்களின் கோலம் என் கண்ணைக் கவர்கின்றதே! அணி அணியாக இம் மயில்கள் எல்லாம் கிழக்கு நோக்கி ஆடுகின்றனவே! அதன் கருத்தென்ன? செங்கதிர்ச் செல்வன் - ஞாலம் போற்றும் ஞாயிறு - உதிக்கும் அழகைக் கண்டு அவை குதிக்கின்றனவா?
"நீல நெடுங்கடலே! உன் + தொடுவானில் உதிக்கின்ற செஞ்சுடரைக் காணும்பொழுது, ++ ஆடும் மயிலில் எழுந்தருளும் முருகன் திருக்கோலம் என் கண்ணெதிரே மிளிர்கின்றது. என்னையாளும் ஐயனை- செய்யனை-செந்திற் பெருமானைப் பாடவேண்டும் என்று என் உள்ளம் துடிக்கின்றது. ஆயினும், பார்க்குமிடம் எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளை எப்படித் தமியேன் பாடுவேன்? ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ் சோதியை எங்ஙனம் சொல்லோவியமாக எழுதிக் காட்டுவேன்? உயிர்க் குயிராய் நின்று உலகத்தை இயக்கும் உயரிய கருணையை எவ்வாறு சொற்களால் உணர்த்துவேன்? அவன்ஆட்டுவித்தால் உலகம் ஆடும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. இத்தகைய இறைவனாகிய முருகனை ஏழையேன் என் சொல்லி ஏத்துவேன்?

+ தொடுவான் - Horizon
++ "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி"
- திருமுருகாற்றுப்படை.

"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக்

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே"

என்று என் அத்தனை நித்தலும் கைதொழுவேன்.
"அலைவாயில் அமர்ந்தருளும் அண்ணலே! செந்திலம்பதியைப் படைவீடாகக் கொண்ட கந்தப் பெருமானே! உன்னைக் கலியுக வரதன் என்பார்; கடற்கரை யாண்டி என்பார்; அரந்தை கெடுத்து வரந்தரும் ஆண்டவன் என்பார்; செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை என்பார்; இன்று போலவே என்றும், எம்பெருமானே! கடற்கரையில் நின்று நின் அடியாரைக் காத்தருளல் வேண்டும். தமிழ் மக்களெல்லாம் நின் அடைக்கலம்" என்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கடற்கரையை விட்டகன்றார் நக்கீரர்.
-----------------------------------------------------------

பரணர்

சேர நாட்டின் பழைய துறைமுக நகரம் முசிறிப் பட்டினம். பேரியாறு கடலிற் பாயும் இடத்தில் பெருமையுற்று விளங்கிய அந் நகரம் சேரநாட்டின் திருமுகம்போல் இலங்கிற்று. செங்குட்டுவன் என்ற சேரமன்னன் அரசு வீற்றிருந்தபோது, சீரும் சிறப்பும் வாய்ந்திருந்த முசிறிக் கடற்கரையிலே வந்து நின்றார் பரணர் என்ற நல்லிசைக் கவிஞர். அப்புலவர் பெருமானை மெல்லிய பூங்காற்றால் வரவேற்று, திரைக் கரத்தால் தொழுது நின்றது முசிறிக் கடல். அது கண்டு இன்புற்ற பரணர் ஆர்வத்தோடு பேசலுற்றார்:-
"சேர நாட்டுச் செல்வமே! உன் சீர்மை கண்டு சிந்தை குளிர்ந்தேன். மலை வளமும் அலை வளமும் பெற்ற இந் நாடு உன்னாலன்றோ தலைசிறந்து விளங்குகின்றது? நறுமலரை நாடிவரும் வண்டினம் போல், உன் துறைமுகத்தை நோக்கிவரும் பல நாட்டுக் கப்பல்களைக் கண்குளிரக் காண்கின்றேன்.
"குடகடலின் கோமானே! உன் பெருமையெல்லாம் சேரமன்னன் பெருமையன்றோ? எங்கும் புகழ் பெற்ற செங்குட்டுவன் உன்னைக் கண்ணெனக் கருதிக் காக்கின்றான். அவன், செம்மை சான்ற வீரன்; வெம்மை வாய்ந்த வேந்தன். அடிபணிந்த அரசரை ஆதரிப்பான்; மாறுபட்ட மன்னரைக் கீறி எறிவான்; தமிழகத்தைப் பழித்தவர் வாயைக் கிழித்திடுவான். இத்தகைய மான வீரனை மன்னனாக உடைய உனக்கு என்ன குறை?
"வளமார்ந்த துறைமுகமே! உன் கடற்கரையில் சேர நாட்டுச் செல்வம் எல்லாம் சேர்ந்து குவிந்து சிறந்த காட்சி தருகின்றதே! மலைவளம் உடைய சேர நாட்டுக்கு மலையாளம் என்ற பெயர் எத்துனைப் பொருத்தமாக அமைந்திருக்கின்றது? மலைசார்ந்த நாடுகள் இம் மாநிலத்தில் எத்தனையோ உள்ளன! அவை இத்தகைய சிறப்புப் பெயர் பெற்றனவா? பாரிலுள்ள மலையெல்லாம் சேரநாட்டு மலையாகுமா? எத்தனை நாடுகளில் எரிமலை யிருந்து ஏக்கம் தருகின்றது! எத்தனை நாடுகளை மலைத்தொடர் நட்ட நடுப்பெற நின்று வெட்டிப் பிரிக்கின்றது! இத் தரணியிலே தலைகாய்ந்த தட்டை மலைகள் எத்தனை! முடி சாய்ந்த மொட்டை மலைகள் எத்தனை! இவை யெல்லாம் மலையென்று சொல்லத்தகுமா? தெள்ளு தமிழ் வள்ளுவனார் கூறியாங்கு, 'வாய்ந்த மலை' யன்றோ நாட்டுக்கு வேண்டும்? அத்தகைய மலைக்கு ஒரு சான்றாக நிற்பது இச்சேர நாட்டு மலை. கோங்கும் வேங்கையும் ஓங்கி வளர்ந்து, ஆரமும் அகிலும் அடர்ந்து செறிந்து, மாமுகில் தவழும் வளமலை யன்றோ மலையாள நாட்டு மலை? மேலைப்பெருங் கடலின் வழியாக வரும் மாரிக் காற்றைத் தலையாலே வரவேற்று மழை பொழியச் செய்யும் மலையன்றோ இந் நாட்டு மலை? இம்மலையிலே பிறந்து, முசிறிக் கடலிலே கலந்து மகிழும் பேரியாற்றின் அழகுதான் என்னே! அந் நதி திருமாலின் மார்பிலே திகழும் ஆரம் போன்றது என்று அழகுறப் பாடினாரே இளங்கோவடிகள்! அவர் புகழ்மாலை பெற்ற பேரியாறு நெடுமலையைக் கடந்து, சேர நாட்டின் வழியாக நடந்து, கடலிலே பரந்து பாய்கின்ற காட்சியை இன்று கண்டேன்; கண் குளிர்ந்தேன்!
"பார் அறிந்த பெருந்துறையே! இந்த ஆற்றங்கரையிலும், அலைகடல் ஓரத்திலும் அடுக்கடுக்காக மிளகு மூட்டைகள் மிடைந்து கிடக்கின்றன. கடற்கரையெங்கும் மிளகு மணம் கமழ்கின்றது. இம் மிளகின் சுவைகண்ட மேலைநாட்டார் உன் துறைமுகத்தில் வந்து மொய்க்கின்றார்கள்; சேர நாட்டாருடன் வேற்றுமையின்றிக் கலந்து வாழ்கின்றார்கள்; பண்ட மாற்றுக்கு வேண்டும் அளவு இந் நாட்டு மொழியைக் கற்றுக்கொள்கின்றார்கள்; கட்டி கட்டியாகச் செம் பொன்னைக் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள்; கப்பல் கப்பலாக மிளகை ஏற்றிச் செல்கின்றார்கள்; கருமையான மிளகு, மேலைநாட்டுச் செம்பொன்னை இந் நாட்டிற்குக் கொணர்ந்து சேர்ப்பது அருமை வாய்ந்ததன்றோ?
"கரவறியாத் துறைமுகமே! பண்டமாற்றுச் செய்யும் முறையில் பொய்யும் புனைசுருட்டும் எந் நாளும் இந் நாட்டாரிடம் இல்லை. வாணிகம் செய்வ தில் முசிறியார் ஒருபோதும் மிகைபடக் கொள்ளார்; குறைபடக்கொடார். குட்ட நாட்டில் விளையும் மிளகு, மேலைநாட்டு யவனர்க்கு மெத்த இனிய பொருள். அதைக் கண்டால் அன்னார் கொட்டமடித்து வாரிக் கொள்கின்றார்கள்; கேட்ட விலையைக் கொடுக்கின் றார்கள். அந்த மிளகிலே அவ்வளவு தேட்டம்! ஆயினும், வெள்ளையர் நாவில் குட்டநாடு என்ற சொல் திட்டவட்டமாக வருவதில்லை. அதைக் "கொத்தநாரு" என்று அவர் சொத்தையாகச் சொல்லுவர். தென் மொழியில் உள்ள டகரம் அவர் நாவில் ஒருபோதும் சரியாக வராது. முசிறிக் கடற்கரையிலே அவர் குழறும் தமிழைக் கேட்பதும் ஒருவகை இன்பந்தான்!
"செல்வத் துறைமுகமே! உன் கடற்கரையிலே செந்தமிழ் சிதைந்து வழங்கினாலும் பழுதில்லை. உன் நாடு பொன்னாடு ஆவது கண்டு என் உள்ளம் குளிர் கின்றது. பொன்னுடையான் சேரன்; புகழுடையான் சேரன்; அம் மன்னன் நீடூழி வாழ்க+ என்று செங்குட்டுவனை வாயார வாழ்த்தி விடைகொண்டார் பரணர்

+ "மலைத்தாரமும் கடல்தாரமும்
தலைப்பெய்து வருநர்க்கு யாவும்
பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி'


-----------------------------------------------------------

சாத்தனார்

சோழ நாட்டிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் முன்னொரு காலத்தில் உலகறிந்த பெரு நகரம். கண்ணகி யென்னும் வீரமா பத்தினியைத் தமிழ் நாட்டுக்குத் தந்த திருநகரம் அதுவே. அந் நகரின் அழகிய கடற் கடற்கரையை வந்தடைந்தார் மணிமேகலை ஆசிரியராகிய சாத்தனார். அலை அலையாகப் பல எண்ணங்கள் அவர் உள்ளத்தில் எழுந்தன. பெருங்கடலை நோக்கி அவர் பேசலுற்றார்:-
"சோழ நாட்டுச் செழுங்கடலே! கங்கையினும் சிறந்த காவிரியாற்றின் நீரால் நீ நாளும் புனிதமடைகின்றாய். குடமலையிலே பிறந்து, கருநாட்டிலே தவழ்ந்து, தமிழ்த் திருநாட்டிலே நடந்து, உன்னை நோக்கி விரைந்து வரும் காவிரியைப் புகழாத கவி ஞரும் உளரோ? அந்த ஆற்று முகத்திலே வீற்றிருப் பது நின் அருமைத் திரு நகரம். இந்நகரின் அழகைக் கண்ணாற் பருகிக் களிப்புற்ற அறிஞர் +காவிரிப் பூம் பட்டினம் என்றும் பூம்புகார் நகரம் என்றும் அழைத்தார்களே!
-----------------------------------------
+பூ-அழகு : பூம்பட்டினம்-The city beautiful
"பாடல் பெற்ற பட்டினமே! உன் அழகுக்கு அழகு செய்தான் திருமாவளவன் என்னும் சோழ மன்னன். இந் நாட்டை யாண்ட ஆதியரசர்களில் தலை சிறந்தவன் அவனே; தமிழகத்திற்கு ஏற்றமும் தோற்றமும் அளித்த ஏந்தல் அவனே;ஈழ நாட் டைச் சோழ நாட்டோடு இணைத்த வீரன் அவனே."
இங்ஙனம் திக்கெலாம் புகழ் பெற்று விளங்கிய திருமாவளவன் உன் அருமையும் பெருமையும் அறிந்தான்; காவிரி நாட்டுக்கு நீயே உயிர் என்பதை உணர்ந்தான்; கண்ணினைக் காக்கின்ற இமைபோல் உன் நலத்தினைக் காக்க முற்பட்டான். மன்னவனே முன்னின்றால் முடியாத தொன்று உண்டோ? அன்று முதல் நீயே சோழ நாட்டின் தலைநகரம் ஆயினாய்! அளவிறந்த பொன்னும் பொருளும் செலவிட்டு உன்னைப் புதுக்கினான் அம்மாநில மன்னன். காவிரியின் வண்டல் படிந்து தூர்ந்திருந்த உன் துறைமுகத்தைத் திருத்தினான்; பெருக்கினான்; ஆழமாக்கினான். அதனால் + கயவாய் என்ற பெயர் இத் துறைமுகத்திற்கு அமைந்தது. தட்டுத் தடையின்றி எட்டுத் திசையினின்றும் வணிகர் இங்குக் குடியேறி வாழத் தலைப்பட்டார். வந்தவர்க்கெல்லாம் நீ வீடு தந்தாய். நிற வேற்றுமையையும் பிற வேற்றுமையையும் பாராது வஞ்சமற்ற மாந்தரை யெல்லாம் நீ வரவேற்றாய். சீனகரும் சோனகரும் உன் கயவாயின் அருகே மணிமாட மாளிகை கட்டி வாழ்வாராயினர். இவ் வழகிய கடற்கரையிலே தாழைவேலி சூழ்ந்த ஏழடுக்கு மாடங்கள் எத்தனை! கண்டோர் வியப்புற வானளாவி நிற்கும் பண்ட சாலைகள் எத்தனை!

+ "கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கையும்"
*சிலப்பதிகாரம் இந்திர விழவு எடுத்த காதை*

"பூம்புகார்த் துறையே! அல்லும் பகலும் நின் அருமைத் துறைமுகத்தை நோக்கிக் கப்பல்கள் நீந்தி வரும் காட்சியைக் கண்டு கண் குளிர்ந்தேன். அந்த மாலை வந்தெய்து முன்னரே கடற்கரை யெங்கும் தீ நா விளக்குகள் திகழ்கின்றன. துறைமுகத்தின் அருகே ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம் காட்சி தருகின்றது. 'கலங்கரை விளக்கம்' என்ற சொல்லின் அழகுதான் என்னே! 'கருங் கடலில் நீந்தி வரும் கப்பல்களை நெறிகாட்டி அழைக்கும் விளக்கு' என்ற அருமையான பொருளை யுடையதன்றோ அச்சொல்? 'தன்னை நோக்கித் தவழந்து வரும் குழந்தையை முகமலரந்து, கைநீட்டி அழைக்கும் தாய் போல, இருட்டிலே கருங் கடலில் மிதந்து வரும் கப்பல்களை ஒளிக் கரத்தால் வரவழைக்கும் விளக்கு' என்ற அழகிய கருத்தன்றோ அச் சொல்லில் அமைந்திருக் கின்றது? கடற்கரையில் உள்ள அவ் விளக்கைக் காண்பது கண்ணுக்கு இன்பம். அதன் பெயரைக் கேட்பது காதுக்கு இன்பம். இவ் விருவகை இன்பத்தையும் நுகர்ந்தன்றோ இளங்கோவடிகள் 'இலங்கு நீர் வரைப்பிற் கலங்கரை விளக்கம்' என்று உளங்குளிர்ந்து பாடினார்? அவர் ஆசைபற்றிப் பாடிய பாட்டின் ஓசை நயம் உணராத செவி என்ன செவியே?
"வளமார்ந்த துறைமுகமே! இந்நானிலத்தில் உள்ள நானாவிதப் பொருள்களும் நீரின் வழியாகவும், நிலத்தின் வழியாகவும் உன் +அங்காடியில் வந்து நிறைகின்றனவே! வடமலையிற் பிறந்த பொன்னும் மணியும், குடமலையிற் பிறந்த ஆரமும் அகிலும், தென் கடல் முத்தும், குணகடற் பவளமும், சேரநாட்டு மிளகும், சோழநாட்டு நெல்லும், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் உன் அங்காடி யெங்கும் நிறைந் திருக்கின்றன. பசியும் பிணியும் பகையும் இன்றி, பண்பும் பயனும் உடையராய்க் குடிகள் வாழ்கின்றார்கள். இதுவன்றோ வாழ்வு?
------------------
+அங்காடி= பசார்(Bazaar)
"தலைசிறந்த திரு நகரே! நீ அருளுடையாய்; பொருளுடையாய்; அழகுடையாய்; புலவர் பாடும் புகழுடையாய். நின் சீரும் சிறப்பும் பாடித் திருமா வளவன் கையாற் பரிசு பெற்றான் கடியலூர்க் கண்ணன். பட்டினப்பாலை என்னும் பெயரால் அவன் பாடிய பாட்டிலே செந்தமிழ்ச்சுவை சொட்டுகின்றது. தமிழ்த்தாய் உன்னை வாழ்த்துகின்றாள். அவளருளால் வாழும் அடியேனும் உன்னைப் போற்றுகின்றேன். கண்ணகியை ஈன்ற காவிரிப்பூம் பட்டினமே! வாழி; ஆற்று முகத்தில் வீற்றிருக்கும் அணி நகரே! வாழி; நாட்டையும் நகரையும் ஊட்டி வளர்க்கும் காவிரித் தாயே! வாழி வாழ்க; வாழ்க" என்று வாழ்த்திய வாயினராய்க் காவிரியைத் தொழுத கையினராய்க் கடற்கரையை விட்டகன்றார் சாத்தனார்

"பாடல்சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி
+ மணிமேகலை: பதிகம்

-----------------------------------------------------------

புனிதவதி

தமிழ்நாட்டிலே காரைக்காலின் பெருமை யாரைக் கேட்டாலும் தெரியும். வாணிகத்தால் வளம் பெற்ற காரைக்கால், புனிதவதி பிறந்தமையால் புனித முற்றது. காரைக்கால் அம்மையார் என்னும் செம்மை சேர் நாமம் பெற்றவர் அவரே! அவ்வம்மையார் கருவிலே திருவுடையார்; கனிந்த திருவருளுடையார்; நாவிலே தமிழுடையார்; நற்றவத்தின் திறமுடையார்.
அவர் சில காலம் இல்லறம் நடத்தினார். ஒரு நாள், அவரிடம் அமைந்திருந்த தெய்வத்தன்மையைக் கண்டான் அவர் கணவன்; துணுக்கம் கொண்டான். வணங்கத் தக்க தெய்வத்தை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு மனையறம் புரிய அவன் மனம் இசைய வில்லை. கடல் கடந்து வாணிகம் செய்து வருவதாகச் சொல்லிக் காரைத் துறைமுகத்தில் அவன் கப்பலேறினான். மாதங்கள் பல சென்றன. ஆண்டுகளும் சில கழிந்தன. கணவன் திரும்பி வரக் காணது கையற வெய்திய காரைக்கால் அம்மையார் ஒரு நாள் கடற்கரையிலே நின்று உள்ளம் உருகிப் பேசலுற்றார்:-
"காரைப் பெருங்கடலே! நான் கண் பெற்ற கால முதல் நீ காட்சி தருகின்றாய். குழந்தைப் பருவத்தில் உன் தெள்ளிய மணலிலே தவழ்ந்து விளையாடினேன்; உன் அலைகளோடு உறவாடினேன்; இளங்காற்றை நுகர்ந்து இன்புற்றேன்; உன் துறைமுகத்தில் கப்பல் களைக் கண்டு களிப்புற்றேன். கரை காணாக் கருங் கடலே! ஆயினும், இப்பொழுது உன்னைக் கண்டு அஞ்சுகின்றது என் நெஞ்சம். ஆற்றாமையால் அலமருகின்றது என் உள்ளம். 'என் கணவர் - மாசற்ற மணாளர் - வாணிகம் செய்து வருவேன்' என்று சொல்லி உன் துறைமுகத்தில் வங்கமேறிச் சென்றார்; 'நெடுநிதி கொணர்வேன்' என்று நெடுங்கட லோடினார். ஆண்டு பல சென்றன. அவர் எங்குள்ளார் என்று அறியாது பாவியேன் ஏங்கித் தவிக்கின்றேன். 'அவர் ஏறிச் சென்ற கப்பல் என்னாயிற்றோ? இதுகாறும் அவர் வாராத காரணந்தான் யாதோ?' என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகின்றதே!
"நேச நெடுங்கடலே! என் கணவர் சென்ற வழிமேல் விழிவைத்து எத்தனை மாதமாகக் காத்திருக் கின்றேன்! வருகின்ற கப்பலை யெல்லாம் வாஞ்சை யோடு நோக்குகின்றேன். அந்தோ! ஒவ்வொரு நாளும் நான் படும் துயரத்தை யாரிடம் சொல்வேன்? கொண்ட கணவர்க்குத் தொண்டு செய்யும் உரிமை இழந்தேன்; தொல்லை வினையால் துயர் உழந்தேன்.
"அருமை சான்ற ஆழியே! உன்னையே தஞ்சமாக அடைந்தேன். வஞ்சம் ஒன்றும் அறியாத என் கணவர் வாழுமிடத்தைக் காட்டாயா? அஞ்சேல் என்று அருள் செய்யமாட்டாயா? முந்நீர் கடந்து வரும் மெல்லிய காற்றே! நீயேனும் ஒரு மாற்றம் உரையாயோ? பன்னாள் உன்னொடு பழகினேனே! அப்பான்மையை மறக்கலாமா? நட்டாரைக் கை விடுதல் நன்றாகுமா? ஐயோ! ஓர் உயிர்க்கும் நான் தீங்கு நினைத்தறியேனே. எனக்கு ஏன் இந்த இடர் வந்தது?
"அறவாழி அந்தணனே! நின்னை அறக்கடல் என்று ஆன்றோர் பாடினரே; அருட்கடல் என்று அறிந்தோர் போற்றினரே. இக் காரைக் கடலினும் பெரிதன்றோ நின் கருணைக் கடல்? கங்கு கரையின்றி எங்கும் நிறைந்த கருணையங் கடல் நீயே யன்றோ? மன்னுயிரை யெல்லாம் காத்தளிக்கும் அருங் கருணையால் அன்றோ அந்நாள் கடலினின்று எழுந்த பெரு நஞ்சை அள்ளி உண்டாய்? கண்டம் கறுத்தாய்; நீலகண்டன் என்ற பெயர் பெற்றாய். அண்டத்தை யெல்லாம் காக்கின்ற அருளின் அடையாளமன்றோ நின் கண்டத்தின் கருமை? அக் கருமையின் பெருமையை நினைத்து அடியேன் உருகுகின்றேனே!

"பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறம்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்பது இடர்"

எம்பெருமானே! நான் அறிவறிந்த காலமுதல் நின்னை நினையாத நாள் உண்டோ? அன்பு மொழிகளால் வாழ்த்தாத நாள் உண்டோ? அடங்கிப் பணிந்து வணங்காத நாள் உண்டோ? என்றும் நின் திருவடியே சரணமெனக் கொண்டேன். எல்லாம் உன் செயலே என்றுணர்ந்தேன். இவ்வாறு வளர்ந்து வந்த என்னை நீயே இல்லறத்தில் உய்த்தாய்; நாகையில் உள்ள நல்லார் ஒருவருக்கு இல்லாளாய இருக்க வைத்தாய்; இல்லறத்தில் பொருத்திய நீயே பின்பு என் கணவரைப் பிரித்துவிட்டாயே! ஐயனே! இதுவும் உன் திருவிளையாட்டோ? அல்லும் பகலும் உன்னையே நினைந்துருகும் அடியார்க்கு இத் தகைய துன்பம் வரலாகுமோ? தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க்கு மனக்கவலை இல்லை யென்பது மறைமொழி யன்றோ?
"கண்ணுதற் பெருங் கடவுளே! காரைக் கருங் கடலைக் காலையும் மாலையும் நோக்கிக் கன்ணீர் வடிக் கின்றேனே! என் துயரைக் கண்டு உற்றார் எல்லாம் உருகுகின்றனரே! மனையறமும் மறுகுகின்றதே! செம்மேனி எம்மானே! என் மனக் கவலையை மாற்றல் உனக்கு அரிதோ? அடியாரது அல்லல் தீர்பது ஆண்டவன் கடன் அன்றோ? என் செயலாவது இனி யாதொன்றுமில்லை, ஈசனே!
"காரைத் துறைமுகமே! இனி யான் உன் திருமுகத்தைப் பாரேன். பார்த்துப் பார்த்துப் பதங் குலைந்தது போதும். இறைமுகம் நோக்கிய எனக்கு உன் துறைமுகத்தில் இன்னும் என்ன வேலை? இன்றே என் பந்த பாசமெல்லாம் ஒழித்தேன்; மாயப் பிறப்பறுக்கும் மெய்ப் பொருளைச் சேர்ந்தேன்; என்றும் கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்று கட்டுரைத்துக் கடற்கரையை விட்டுக் காற்றினும் கடிது சென்றார் காரைக்கால் அம்மையார்.
-----------------------------

திருநாவுக்கரசர்

தமிழ் நாட்டில் ஈசனுக்குரிய கோயில் ஈச்சுரம் என்று வழங்கப் பெறும். முன்னாளில் மன்னரும் முனிவரும் பல ஈச்சுரங்கள் எடுத்தனர். பல்லவ மன்னன் ஒருவன் எடுத்த திருக்கோயில் பல்லவனீச்சுரம் எனவும் அகத்திய முனிவன் எடுத்த ஆலயம் அகத்தீச்சுரம் எனவும் வழங்குதலால் இவ் வுண்மை விளங்கும். இத் தகைய ஈச்சுரங்களை யெல்லாம் முறையாக வணங்க ஆசைப் பட்டார் திருநாவுக்கரசர். அவ்வாசையால் தமிழகத்திலுள்ள ஈச்சுரங்களைத் தொகுத்து ஒரு திருப்பாசுரம்+ பாடினார்:

+ "நாடக மாடிடம் நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம்,
நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கான
கேடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம்,
குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால்
ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம்,
அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்று ஏத்தி
இறைவன் உறைசுரம் பலவும் இயம்பு வோமே"
- அடைவு திருத்தாண்டகம்

அப்பாட்டில் அமைந்த திருக்கோயில்களை ஒன்றன் பின் ஒன்றாக வணங்கிப் பாண்டி நாட்டிலுள்ள இராமேச்சுவரத்தை வந்தடைந்தார்; கோடிக்கரையில் நீராடி அக் கோயிலைத் தொழுதல் முறையாதலால் கடற்கரைக்குச் சென்றார்; தென்முகமாக நின்றார் அவர், தூய வெண்ணீறு துதைந்த மேனியர்; மாசற இமைக்கும் உருவினர்; ஈசனார் புகழைப் பேசாத நாளெல் லாம் பிறவா நாளே என்று கருதும் பெற்றியர். இத் தன்மை வாய்ந்த பெரியார் கோடிக் கரையிலே நின்று பேசலுற்றார்:-
"ஆ! கோடிக்கடலே! பாண்டிநாட்டின் ஒரு கோடியில் நின்று பாரத நாட்டுப் பல கோடி மாந்தரை இழுக்கும் பண்புடையாய் நீ! நாடி வருபவர்க்கெல்லாம் நீ நலந் தருகின்றாய்; வாடி வருபவர்க்கெல்லாம் வழி காட்டுகின்றாய். முன்னொரு நாள் காதல் மனையாளைப் பிரிந்த கமலக் கண்ணன் கவலையுற்று உன் கடற்கரையிலே வந்து நின்றான். அவ் வீரனது மனத் துயரை நீ மாற்றினாய்; அவனுடன் வந்த வானரப் பெருஞ்சேனையை இலங்கையிற் கரையேற்றினாய்; அன்று முதல் கோடானு கோடி மக்களைப் பிறவிப் பெருங்கடலினின்றும் கரையேற்றிக் கொண்டிருக்கின்றாய். இதனாலன்றோ, 'கோடியுற்றார் வீடு பெற்றார்' என்று ஆன்றோர் உன்னைப் போற்றுகின்றனர்?
"அறப்பெருங்கடலே! உன்கரையை வந்தடைந்தவர், இலங்கையில் முன்னாள் வாழ்ந்த அரக்கரை மறக்க வல்லரோ? உன்கரையில் மோதும் அலைகளெல்லாம் அவர் கதையை எடுத்தோது கின்றனவே! அரக்கர் கோமானாகிய இராவணன் கோடி மாதவங்கள் செய்தான்; என்னையாளுடைய ஈசனருளால் யாரும் பெறாத வரம் பெற்றான்; திறம் பெற்றான்; வளமார்ந்த இலங்கையில் வல்லரசனாய் வீற்றிருந்தான்; ஈசனுக் கினிய மாசில் வீணையைத் தன் மணிக் கொடியில் எழுதினான்; எட்டுத் திசையிலும் அவ் விசைக்கொடியை நாட்டினான்; முடி மன்னரெல்லாம் அவன் அடி பணிந்தார்கள். வெற்றிமேல் வெற்றி யடைந்தபேது அவன் தலை கிறுகிறுத்தது. 'மாநில முழுதும் எனதே' என்ற மமதை கொண்டான் அவன்; ஆகாயத்திலும் ஆணை செலுத்த விரும்பினான்; அதற்குத் தடையாக இமய மலையே நின்றாலும் அதைத்தட்டி வீழ்த்தத் துணிந் தான். ஒரு நாள், ஈசனார் வீற்றிருக்கும் இமய மலையைக் கடந்து செல்ல மாட்டாது இறங்கிற்று அவன் விமானம். 'ஐயனே! இது கயிலாய மலை! இதைக்கடந்து விமானம் செல்லாது' என்று அறிவுறுத்தினான் அவன் +வலவன். அம் மொழி அரக்கர் கோன் செவியில் ஏறிற்றா? கயிலாயம் என்ற சொல்லைக் கேட்ட பொழுது அவனுள்ளம் கசிந்ததா? கெடுமதியால் அவன் கடுகடுத்தான்; ++ தருக்கும் செருக்கும் தலைக்கொண்டான். அந்தோ! ஆணவத் தின் கொழுந்தாகிய அரக்கன் வெள்ளிமா மலையை அள்ளியெறிய முயன்றானே! ஈசனையே அசைத்து விடலாம் என்று எண்ணினானே!
+ வலவன்-வான ஊர்தியை இயக்கும் பாகன் இவனை ஆங்கிலத்தில் Pilot என்பர்.

"கடுகிய தேர் செலாது; கயிலாயம் ஈது
கருதேல் உன்வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதன்மம் என நின்ற பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்றுசென்று விரைவுற் றரக்கன்
வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
நினைவுற்றது என்தன் மனனே"
- திருநாவுக்கரசர் தேவாரம்

அவன் கற்றதனால் யாது பயன்? வரம் பெற்றதனால் என்ன நலன்? செருக்குற்றவர் சீரழிவர் என்பதற்கு அரக்கர்கோன் ஒரு சான்றாயினன்; அசைத்துப் பெயர்த்த கயிலாய மலையின்கீழ் அகப்பட்டுக் கதறினான்; தவறு செய் ததை உணர்ந்து பதறினான்; இன்னிசை பாடினான். கருணையே உருவான எம்பெருமான் அரக்கன் செய்த பிழையையும் பொறுத்தான்; நாளும் வாளும் தந்து நல்லருள் புரிந்தான்.
"ஆழ்ந்தகன்ற அருங்கடலே! ஆண்டவன் அளித்த வாளின் வன்மையால் புறப் பகையை யெல் லாம் அடக்கினான் அவ் வரக்கன். ஆயினும், அகப் பகையாகிய காமத்தை அடக்கும் வலிமை பெற்றா னில்லையே! ஆண்மையுள் எல்லாம் சிறந்த ஆண்மை -பேராண்மை-என்பது அது வன்றோ? பிறன் மனை நோக்காத ஆண்மையைப் பேராண்மை என்று வள்ளுவரும் பாடினாரே! போராண்மை பெற்ற இராவணன் பேராண்மை பெற்றான் அல்லன்; இன்பத் துறையில் எளியன் ஆனான்; மற்றொருவன் மனைவியை-மாசிலாக் கற்பினாளை-வஞ்சித்துக் கவர்ந்தான்! அறம் மறுக, ஆண்மை மாசுற, அம் மங்கையை அசோக வனத்தில் சிறை வைத்தான் கல்லும் கரைந்துருகக் கற்பின் செல்வி கண்ணீர் வடித்தாள். அவள் அழுத கண்ணீர் அரக்கர் குலத்தை அறுக்கும் படையாயிற்று; வில்லின் செல்வனாகிய இராமனை இலங்கைக்கு வரவழைத்தது. பொன் னகரினும் சிறந்த இலங்கைமா நகரம் போர்க் களமாயிற்று. அரக்கரெல்லாம் அழிந்தனர். அறப் பகையால் இராவணனும் ஆவி துறந்தான்.

அல்லற்பட்டு ஆற்றாது சீதை அழுத கண்ணீர்
அரக்கர் கோமானை அழித்தது.

"கோடிப் பெருந்துறையே! நன்றி செய்த உன்னை மீண்டும் நாடி வந்தான் இராமன்; என்றும் நீ செய்த நன்மையை உலகம் உணருமாறும், இராவணனைக் கொன்ற பழி தீருமாறும் உன் கரையருகே ஈசனுக்கு ஓர் ஆலயம் எடுத்தான்; பூசனை புரிந்தான். இராமன் எடுத்த அவ் வாலயம் இராமேச்சுரம் என்று பெயர் பெற்றது.

"தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற
ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் மேவிய சிந்தையினார்கள் தம்மேல்வினை வீடுமே."+ + தேவாரத் திருப்பாசுரம்

என்று எம்பிரான் சம்பந்தன் பாடிய பாட்டைப் படித்தேன்; என் தீவினையெல்லாம் தீருமாறு உன்னை அடுத்தேன். அரக்கர் தலைவனைக் கெடுத்த அகந்தை என்னும் நோய் அடியேனை அணுகாமல் காத்தருளல் வேண்டும். காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக் குற்றமும் அகற்றிக் கயிலாய நாதனிடம் என்னைக் கடிதனுப்ப வேண்டும். இராமனுக்கு அருள் புரிந்த இராமலிங்கப் பெருமானை நாடுகின்றது என் நெஞ்சம்! சென்று வருகின்றேன்" என்று கோடிக் கரையில் விடைபெற்றுக் கோயிலை நோக்கி நடந் தார் நாவரசர்.
-----------------------------------------------------------

திருமங்கை மன்னன்

தமிழ் நாட்டிலே, கலைமணம் கமழும் துறைமுக நகரங்கள் சில உண்டு. அவற்றுள்ளே தலை சிறந்தது மகாபலிபுரம். அங்குள்ள பாறைகளெல்லாம் பழங்கதை சொல்லும்; கல்லெல்லாம் கலைவண்ணம் காட்டும். அந் நகரின் கடற்கரையிலே அனந்த சயனத்தில் ஆனந்தமாய்ப் பள்ளிகொண்டுள்ளார் திருமால். தலசயனம் என்பது அக்கோயிலின் பெயர். அங்குள்ள பெருமாளை வணங்கித் தமிழ்ப் பாமாலை அணிந்து போற்றும் ஆசையால் வந்தடைந்தார் திருமங்கை யாழ்வார்; பள்ளிகொண்ட பரந்தாமனது கோயிலருகே நின்று நெடுங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-
"தொண்டை நாட்டுப் பண்டைத் துறைமுகமே! நீ, மல்லை என்னும் பெயருடையாய்; எல்லையற்ற புகழுடையாய். உன் கடற்கரையிலே குன்றும் மணலும் கொஞ்சி விளையாடும். உன் அளப்பரும் பெருமையை அறிந்தன்றோ மாமல்லை என்று உன்னைப் போற்றினார் எங்கள் + மாதவச் செல்வர்?
---
+ பூதத்தாழ்வார் மகாபலிபுரம் என்னும் மல்லையிலே பிறந்த மாதவர்.
"மா மல்லை, கோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்" - என்பது அவர் திரு வாக்கு.
"அவர் அருள் வாக்குப் பெற்ற நீ, மேன்மேலும் வளமுற்றாய்; வனப்புற்றாய்; தமிழகத்தை ஆளும் பல்லவ மன்னரின் செல்வப் பாவையாய் விளங்கு கின்றாய். மாமல்லன் என்னும் மாநில மன்னன் சிறப் பாக உன்னைச் சீராட்டினான். அவன் பல்லவர் குல திலகன்; பகைவரை வென்று அடக்கிய வீரன்; வட நாட்டிலுள்ள வலிமை சான்ற வாதாபிக் கோட்டை யைத் தகர்ந்தெறிந்த தலைவன். அவ் வீரவேந்தன் உன்பால் அன்புகொண்டான். காவிரித்துறை முகத்தைத் திருத்திய திருமாவளவனைப் போல் உன் துறையைத் திருத்திய திருமாவளவனைப் போல் உன் துறையைத் திருத்தி யமைத்தான் மாமல்லன். அன்று முதல் + மாமல்லபுரம் என்ற பெயரும் உனக்கு அமைவதாயிற்று.
--------
+ மாமல்லபுரம் என்ற பெயர் மகாபலிபுரம் என மருவி வழங்குகின்றது.
"மல்லைமா நகரே! மாமல்லன் அரசு வீற்றிருந்த நாளில் நீ அடைந்த புகழுக்கு ஓர் அளவுண்டோ? கடல் சூழ்ந்த இலங்கையின்மீது படையெடுத்தான் மாமல்லன். அப் படையின் பரப்பையும் சிறப்பையும் நீ நன்கு அறிவாயே! உன் துறைமுகத்திலன்றோ அச் சேனை வெள்ளம் கப்பலேறி இலங்கையை நோக்கிச் சென்றது? மண்ணாசை பிடித்தவனல்லன் மாமல்லன். அவன் இலங்கையை வென்று அரசாள விரும்பினா னல்லன். அந் நாட்டு மன்னன்-மான வர்மன்-மாற்றார் செய்த சூழ்ச்சியால் நாடு இழந்து மாமல்லனை வந்தடைந்தான். அவன் வடித்த கண்ணீர் மல்லன் உள்ளத்தைக் கரைத்தது. தஞ்சமடைந் தோரைத் தாங்கும் தகைமையாளன் மாமல்லன்; அற்றார்க்கும் அலந்தார்க்கும் உற்ற தோழன்; ஆதலால், தன்னந் தனியனாய் வந்து தஞ்சமடைந்த மானவர்மன் நிலை கண்டு மனம் இரங்கினான்; அவனது மனக்கவலையை மாற்றுவதாக வாக்களித்தான். அதன் பொருட்டு உன் துறைமுகத்தினின்று புறப்பட்டது தமிழ்ச் சேனை; மாற்றாருடன் போர்புரிந்தது; வெற்றி பெற்றது. மானவர்மன் இலங்கைக்கு அரசன் ஆயினான். அவன் மானங்காத்த பெருமை உனக்கும் உரியதன்றோ?
"நல் வாழ்வு பெற்ற மல்லை நகரமே! இலங்கையில் வெற்றி மாலை சூடிய பெரும்படை வீர முழக்கத்துடன், 'மல்லன் வாழ்க, வாழ்க' என்று வாழ்த்திக் கொண்டு, மரக்கலங்களில் இங்கு வந்த காட்சியைக் கண்டவர் மறப்பரோ? + பொன்னையும், மணியையும், பொருளையும், போர்க்களிறுகளையும் சுமந்து நெளிந்து உன் துறைமுகத்தை நண்ணிய கப்பல்களின் மாட்சி சொல்லுந் தன்மையதோ? இவையெல்லாம் மல்லையங் கரையிலே பள்ளி கொண்ட மாதவன் செயலன்றோ?

+"புலங்கொள்நிதிக் குவையோடு புழைக்கைம்மாக் களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெங்கும் நான்றொசிந்து கலங்கள்இயங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள்மனத் தாரவரை
வலங்கொள்என் மடநெஞ்சே"
- திருமங்கை மன்னன் திருப்பாசுரம்.

"மன்னர் போற்றும் மணிநகரே! வெற்றி மேல் வெற்றி பெற்ற மாமல்லன் உன்னை அழகு செய்யத் தலைப்பட்டான்; உன் கரும்பாறைகளை யெல்லாம் கலைக்கோயிலாகக் கருதினான். அவன் ஆணை தலைக் கொண்டு கற்பணியில் வல்ல சிறிபியர் கைசெய்யத் தொடங்கினர். அன்னார் ஆக்கிய நற்பணியின் அழகு தான் என்னே! இதோ, ஒன்றையொன்று அடுத்து அடுக்கடுக்காக உயர்ந்து நிற்கும் ஐந்து திருக்கோயில்களும் தமிழ் நாட்டுச் சிற்பக் கலையின் சீர்மைக்கு அழியாத சான்றாகுமல்லவா? இவற்றின் மருங்கேயுள்ள குகைக்கோயிலின் சிற்பத் திறனைத்தான் என்னென்று சொல்வேன்? இங்கு +ஏனத்தின் உருவாகி எம்பெருமான் காட்சி தருகின்றான். ஏன வடிவத்தில் அமைந்த எம் இறைவனது ஞான ஒளியைக் கண்டோர், இவ் வூனப் பிறவியை அறுத்து அந்தமில் இன்பம் அடைவரல்லரோ? ஏனக் கோயிலை அடுத்து அமைந்துள்ளது ஈசன் கோயில். அங்குள்ள கல்லோவியத்தின் செம்மையைச் சொல்லவுங் கூடுமோ? போர்க் கோலம் கொண்ட பராசக்தி, சங்கு சக்கரம் ஏந்தி, சிங்கத்தின்மீ தமர்ந்து எருமைத் தலையுடைய அசுரன் ஒருவனைத் தாக்கும் தன்மையில் அமைந்த அவ்வடிவம் என் உள்ளத்தை அள்ளுகின்றதே!
----------
+ ஏனம் = வராகம்.

"ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என் நாயகரே"
- திருமங்கை மன்னன் திருப்பாசுரம்,

இம் மட்டோ! மாயக் கண்ணன்-மணிவண்ணன்-கோவர்த் தனகிரியைக் குடையாகப் பிடித்துக் கோகுலத்தைக் காத்த கருணை அடுத்த பாறையில் வடிக்கப் பெற்றுள்ளது. 'கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை, எம்பெருமானைக் கண்டுகொண்டேன்' அக் கல்லோவியத்தில்! கண்ணன் கருணையால் கவலை நீத்த கோகுலத்தில் ஆயர் குழலூதும் அழகும், கன்றினிடம் அன்புடைய கறவைப் பசு மனமுவந்து இடையர்க்குப் பால் தரும் மாண்பும் அக்கல்லில் அமைந்து இனிய காட்சி தருகின்றனவே! அதன் மருங்கிலுள்ள பாறையிலே அருந்தவத்தின் கோலம் இலங்குகின்றது. ஒற்றைக் காலை ஊன்றி, உச்சிமேற் கைகூப்பி, வற்றிய மேனிய னாய் நற்றவம் புரியும் ஒரு மாதவன் வடிவம் அழகாக அக் கல்லில் வடிக்கப் பட்டிருக்கின்றது. அவனது அருந்தவத்தின் செம்மையால் சுற்றும் முற்றும் அமைதியே நிலவுகின்றது. எத்தனை கலைவாணர் கருத்து இக் கற்பனையில் அமைந்துள்ளதோ?
"நல்லோர் ஏத்தும் மல்லைமா நகரே! உன்னைக் காணப் பெற்றோர் வெம்மை நீத்துச் செம்மை யடைவர்; பிணக்கம் ஒழித்து இணக்கம் எய்துவர். உன் கடற்கரைக் கோயிலிலே கண்ணுதலோனும் கமலக் கண்ணனும் இணங்கி நின்று இன்பக் காட்சி தருகின்றனர். இதைக் கண்டும் இவ்வுலகம் பிணக்க நெறியிற் செல்லுதல் பேதைமை யன்றோ?

"பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்குதிருச் சக்கரத்தெம்
பெருமானார்க் கிடம்விசும்பில்
கணங்கள் இயங் கும்மல்லை
கடல்மல்லைத் தலசயனம்
வணங்குமனத் தாரவரை
வணங்குஎன் தன்மடநெஞ்சே"

என்று உருக்கமாகப் பாடிக்கொண்டு திருக்கோயிலின் உள்ளே சென்றார் திருமங்கையாழ்வார்.

ஆசிரியர் : ரா.பி. சேதுபிள்ளை

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

2.73333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top