பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கடற்கரையிலே 16 முதல் 20

கடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்) 16 முதல் 20 வரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உமறுப் புலவர்

குணகடல் என்னும் கீழ்க்கடலை நோக்கி நிற்கும் துறைமுகங்களில் ஒன்று கீழக்கரை யென்றே பெயர் பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள ஈழக் கரைக்கு எதிரே அமைந்தது பாண்டிநாட்டுக் கீழக்கரை. மரக்காயர் என்ற மகமதிய வகுப்பார் கீழக்கரையில் வர்த்தகம் செய்து வளமுற்று வாழ் கின்றார்கள். அவ் வூரைச் சேர்ந்தவர் உமறுப் புலவர். இளமையிலேயே +இளசையில் வாழ்ந்த கடிகை முத்துப் புலவரிடம் கலை பயின்று கவிபாடும் திறம் பெற்றார் அவர்; நபி நாயகத்தின் சரிதத்தைச் சீறாப் புராணம் என்னும் காவியமாகப் பாடிப் புகழ் பெற்றார்; முதுமை வாய்ந்த நிலையில் ஒரு நாள் கீழக்கரையில் நின்று குணகடலை நோக்கிப் பேச லுற்றார்:-

-----------

+ இளசை - எட்டயபுரம்

"வளமார்ந்த துறைமுகமே! செல்வமும் சீலமும் பொருந்தித் திகழ்கின்றாய் நீ! தள்ளா விளையுளும், தாழ்விலாச் செல்வரும், தக்காரும் உள்ள இடமே தலைசிறந்தது என்று தமிழ்மறை கூறிற் றன்ற்றோ? பாரி வள்ளல் வாழ்ந்ததனால் பாண்டி நாட்டுப் பறம்பு மலை புகழ் பெற்றது. சடையப்ப வள்ளலின் கொடைத் திறத்தால் வெண்ணெய் நல்லூர் விளக்க முற்றது. அவ் வண்ணமே சீதக்காதியால் சிறப்புற்றாய் நீயும்! அவர் இந் நாட்டு வணிக மன்னர்; அளவிறந்த பொருளாளர். செல்வச் செருக்கு என்பது அவரிடம் சிறிதும் இல்லை. உதவி பெற வந்தவர்க்கு 'இல்லை' என்ற சொல் அவர் வாயினின்று எந் நாளும் வந்த தில்லை; காட்சிக்கு எளியராய் கருணையே உருவமாய் விளங்குகின்றார். அவரைக் கண்டாலே கலி தீரும்.

"அறம் மணக்கும் திரு நகரே! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவ மழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசிநோய் மிகுந்தது. நாளுக்கு நாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையார் நெஞ்சிற் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி; +"கார் தட்டினால் என்ன? கருப்பு முற்றி என்ன? என் களஞ்சிய நெல்லை- அல்லா தந்த நெல்லை எல்லார்க்கும் தாருவேன்' என்று மார் தட்டினார்! இதுவன்றோ அறம்?

+ "ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலேநெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட் டியபஞ்ச காலத்திலேதங்கள் காரியப்பேர்
ஆர்தட் டினும்தட்டு வாராம லேஅன்ன தானத்துக்கு
மார்தட் டியதுரை மால்சீதக்காதிவ ரோதயனே" 
--படிக்காசு புலவர் பாட்டு.

"புகழார்ந்த கீழக்கரையே! செம்மனம் வாய்ந்த சீதக்காதியின் புகழ் செந்தமிழ் நாட்டையும் கடந்து சென்றது. வடநாட்டை ஆண்ட அவுரங்கசீப் என்னும் அரசன் அவர் பெருமையை அறிந்தான். அரசாங்க சேவையில் அவரை அமர்த்தினான். அவுரங்கரது ஆணை தலைக்கொண்டு சீதக்காதியர் சில காலம் வங்க நாட்டுக் 'கலீபா'வாக வேலை பார்த்தார். ஆயினும், இவர் மனம் தமிழகத்தையே நோக்கி நின்றது. செவிச் சுவையுடைய சீதக் காதியார் தேனினும் இனிய தமிழ்ச் சொல்லைக் கேளாமல், வடநாட்டில் வாழ முடியுமா? அறஞ் செய்ய விரும்பும் அவர் உள்ளம், ஆட்சியிலும் அர சாங்கச் சூழ்ச்சியிலும் ஈடுபட முடியுமா? வேந்தனிடம் விடைபெற்று, மீண்டும் தென்னாட்டை வந்தடைந்தார் சீதக்காதியார்; தென்னாட்டு முத்துக்களாகிய அழகிய மாலையை அவுரங்கசீபுக்குக் கையுறையாக அனுப்பினார். சீலம் வாய்ந்த சீதக்காதியாருடைய அன்பு மாலையாக அதனை ஏற்றுக்கொண்ட அரசன் சந்தனமும் தேயிலையும் வந்தனத்துடன் வழங்கினான்.

"வள்ளல் வாழ்ந்த வளநகரே! மகமதிய மதத்தில் சிறந்த பற்றுடையவர் சீதக்காதி; நபி நாயகத்தைப் பரவாத நாளெல்லாம் பிறவா நாளே என்று கருது பவர் ஆயினும், *பறந்த நோக்கம் உடையவர் அவர்; பசியால் வரும் வறிஞரையும், பரிசுக்கு வரும் அறிஞ ரையும் சாதி மதம் பாராது ஆதரிக்கும் சீலர். சைவ சமயத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கந்தசாமிப் புலவரும், நமசிவாயப் புலவரும், பிறரும் சீதக்காதி யிடம் சிறந்த சம்மானம் பெற்றதை நான் அறி வேன். எக் குடிப் பிறப்பினும், யாவரே யாயினும் கற்றோரை யெல்லாம் தமது சுற்றமாகக் கருதிய செம்மல் சீதக்காதியார் என்பது சிறிதும் மிகை யாகாது.

"சான்றோரை ஈன்ற பழம்பதியே! நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் கற்றறிந்து அடங்கிய பெரியார் ஒருவரை ஆன்ம நேயராகப் பெற்றார் சீதக்காதியார். இஸ்லாமிய உலகத்தில் சதக் கத்துல்லா என்னும் சான்றோரை அறியாதார் உளரோ? நபி நாயகத்தின் திருவுள்ளத்தை நன்றாக உணர்ந்தவர் அவரே! அல்லாவின் பெருமையைத் தமிழ்நாட்டார் அனைவரும் அறியவேண்டும் என்பது அவர் ஆசை. அவரடியின்கீழ் அமர்ந்து அறிவுரை கேட்கும் பேறு கடையேனாகிய எனக்கும் கிடைத்தது. ஒரு நாள், சாந்தமே உருவாகிய சதக்கத்துல்லாவைக் காண்டேன்; காந்தத்தின் வாய்ப்பட்ட இரும்புபோல் ஆயினேன்; அப் பெருமான் அருளால் நபி நாயகத்தின் மார்க்கத்தை நன்கு உணர்ந்தேன்; என் உள்ளத்தில் அவர் திருவாய் மலர்ந்த வசனங் களே நிரம்பி நின்றன. அவற்றை எண்ணுந் தோறும் இன்பத்தேன் என் உள்ளத் தடத்தில் ஊற் றெடுத்துப் பெருகிற்று. அறிவிற் சிறியவனாயினும் ஆர்வத்திற் சிறந்து நின்ற என் நிலையை அறிந்தார் என் குருநாதர்; வாய்திறந்து ஒரு வாசகம் பேசினார். அதை நினைக்கும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் உருகுகின்றது; கண்களிற் கண்ணீர் பெருகுகின் றது. 'அப்பா! நபிநாயகத்தின் சேவைக்கு நீ ஆளாகி விட்டாய். அவர் பெருமையைத் தமிழகத்தார் அறி யும் வண்ணம் ஒரு பெருங் காவியம் செய்க' என அவர் பணித்தார். உடனே, அவர் திருவடியிலே விழுந்தேன்; எழுந்தேன்; நற்றவச் செல்வராகிய அப் பெருமான் திருவடியைச் சிந்தையாரத் தொழுது சீறாப்புராணம் பாடத் தொடங்கினேன். ஐயாயிரம் திருவிருத்தங்களைக் கொண்ட அக்காவியத்தில்+ ஏதேனும் அருமை இருந்தால் அதற்கு உரியவர் என் குருநாதரே. வாசி இருந்தால் அஃது அவர் ஆசியின் பயனே. இருமையும் தரும் அப்பெருமானிடம் என்னை ஆட்படுத்திய அண்ணல் சீதக்காதியாரை என்றும் மறக்க இயலுமோ?

+ "நம்மை ஆளுடையான் வேத
நபிதிரு வசனம் தீனோர்
சம்மதித் திடப்பார் எல்லாம்
தழைக்கவே விளக்கம் செய்தோர்
இம்மையும் மறுமை யும்பேறு
இலங்கிய சதக்கத் துல்லா
செம்மலர் அடியி ரண்டும்
சிந்தையில் இருத்தி னேனே"
-- சீறாப்புராணம்.

"அழியாப் புகழ் பெற்ற அருங்கரையே! செந் தமிழ் வளர்த்த சீதக்காதியார் இறந்தார் என்று அறிந்தபோது, அந்தோ! அலறி அழுத புலவர் எத்தனை பேர்! கதறிப் புலம்பிய கவிஞர் எத்தனை பேர்! கோமான் கொடை மிகுந்த சீமான்-இறந் திட்டபோதே புலமையும் செத்ததுவே' என்று சரம கவி பாடினார் ஒருவர். 'தினம் கொடுக்கும் கொடை யானே! தென் காயற் பதியானே! சீதக்காதி! இனி யாரை நோக்கி உயிர் வாழ்வோம்?' என்று ஏங்கினார் பலர். 'செத்தும் கொடை கொடுப்பான் சீதக்காதி' என்று கருதி அவர் சமாதியில் இரந்து நிற்பவர் இன்றும் பலராவர்.

"கருங்கடலே! ஆண்டாண்டுதோறும் அழுது
புரண்டாலும் மாண்டார் மீண்டுவருவதுண்டோ?

சீதக்காதியார் போன்ற சீலர் பலர் இச் செந்தமிழ் நாட்டிலே தோன்றுவாராக! வாழையடி வாழையென அவ் வள்ளல் குலம் வாழ்க!" என்று வாழ்த்திச் சென்றார் உமறுப் புலவர்.

---------------------------------------------

17. கால்டுவெல் ஐயர்

தென்பாண்டி நாட்டிலே ஐம்பதாண்டு வாழ்ந்து தமிழ் மொழிக்கு அரும்பெருந் தொண்டு புரிந்தவர் கால்டுவெல் ஐயர். தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகளின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து அவற்றின் பெருமையை மேலை நாட்டார்க்குக் காட்டிய மேதை அவரே; நெல்லை நாட்டின் வரலாற்றை நல்ல முறையில் முதன் முதல் எழுதித் தந்தவர் அவரே. பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தூர்ந்து கிடந்த துறைமுகங்களின் பழம் பெருமையை வெளியிட்டவர் அவரே. இத்தகைய கால்டுவெல், பாண்டி நாட்டு மூதூராகிய கொற்கைக்கு மூன்று மைல் தூரத்தில் விலகி நிற்கும் கருங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-

"கொற்கைக் கருங்கடலே! ஐயாயிரம் மைலுக்கு அப்பாலுள்ள அயர்லாந்து தேசத்திலே பிறந்தவன் நான்; ஆங்கில நாட்டு நாகரீகத்திலே தோய்ந்து வளர்ந்தவன்; கிருஸ்து மத சேவை செய்ய ஆசை யுற்று இளமையிலே தமிழகம் போந்தேன்; தென் தமிழ்நாடு என்னும் நெல்லை நாட்டையே என் தாயக மாகக் கொண்டேன்; வடமொழியும் தென்மொழியும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்தேன். தென்மொழியின் திறம் என் கருத்தைக் கவர்ந்தது. அம் மொழியின் நீர்மை என் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. ஆதலால், தமிழ்ப்பணியே தலைப்பணியாகக் கொண் டேன். இந் நெல்லை நாட்டிலே பல்லாண்டுகளாக வாழ்ந்து, ஒல்லும் வகையால் தமிழ்த்தொண்டு செய்து வருகின்றேன். பாண்டிநாட்டுப் பெரும் பட்டினமாய் பழங்காலத்தில் விளங்கிய கொற்கையம்பதியை காணும் ஆசையால் இங்குற்றேன்.

"நற்றமிழ் நாட்டுக் கொற்கைக் கடலே! நான்மாடக்கூடல் என்னும் மதுரை மாநகரம் தோன்றுவதற்கு முன்னே, இக் கொற்கையம்பதியே பாண்டியர் வாழ்ந்த தலைநகரமாய் விளங்கிற்று. இதனாலன்றோ கொற்கை வேந்தன் என்றும், கொற்கைக் கோமான் என்றும், கொற்கையாளி என்றும் பாண்டியன் பெயர் பெற்றான்? கொற்கைத் துறையின் பெருமையால் நீயும் கொற்கைக் கடல் என்று அழைக்கப் பெற்றாய்.

"தூர்ந்தழிந்த துறைமுகமே! ஈராயிரம் ஆண் டுக்கு முன்னே பாரறிந்த பாண்டித்துறைமுகம் நீயே! அந் நாளில் காயல் துறையைக் கண்டவர் யார்? தூத்துக்குடியைத் தெரிந்தவர் யார்? இக் கொற்கைத் துறையிற் குளித்த முத்து, மேலை நாட்டுக் கொற்றவர் முடிமீது விளங்கிற்று. கொற்கைத் துறைவனாகிய பாண்டியனை மேலைநாட்டுப் பெருமன்னர் பலர் அறிந்திருந்தனர். யவன நாட்டு அகஸ்தஸ் என்னும் பேரரசனிடம் தூதனுப்பி உறவாடிய பாரத மன்னன் பாண்டியனே என்பது என் கொள்கை. இத் தகைய பெருமை யெல்லாம் முத்து விளைத்த கொற்கைத் துறையால் வந்ததன்றோ? இப்போது அத்துறை எங்கே? மரக்கலங்கள் எங்கே? ஆணிமுத்து விலைப்படும் அங்காடி எங்கே? மன்னர் வாழ்ந்த மாளிகை எங்கே? எல்லாம் கனவிற் கண்ட காட்சிபோற் கழிந்தனவே! அன்று முத்தம் அளித்த நீயும் மூன்று மைல் விலகி நிற்கின்றாயே! அந்தோ! கொற்கை மாநகரே! பாண்டிய நாட்டு மக்களே நின் பழமையை அறியாமல் வாழ்கின்றார்களே! தாலமி என்ற யவன அறிஞன் எழுதிவைத்த குறிப்பன்றோ இன்று நின் பழம் பெருமை விளக்குகின்றது?

"துறையைத் தூர்த்த திருநதியே! தமிழ் மணக்கும் பொதிய மலையினின்று நிலை புறப்பட்டு வருகின்றாய். எழுபது மயில் நடந்து நெல்லை நாட்டுக்குச் செழுமை தருகின்றாய்; உன்னாலேயே தென்பாண்டி நாடு பயிர் முகங் காட்டும் பழனத் திரு நாடாயிற்று. நெல்லை நாட்டை வாழ்விக்கும் நீ, 'நல்லை, நல்லை' என்று உன்னை நாவார வாழ்த்துகின்றேன்; மனமாரப் போற்றுகின்றேன். ஆயினும், உன் கொடுமையை என்னால் மறக்க முடியவில்லையே! உன்னாலேயே உலகம் புகழ்ந்த கொற்கைத் துறைக்கு இன்னல் விளைந்தது. உன் தண்ணீரிற் கலந்து வந்த மண்ணும் மணலும் கொற்கைத் துறைமுகத்தைத் தூர்த்து விட்டன. நெல்லை நாட்டை நீ ஊட்டி வளர்த்தாய்; அதன் நல்ல துறைமுகத்திற்குக் கேட்டை விளைத்தாயே! நிலத்துக்கு நீர் அளித்தாய்; கடலுக்கு மண்ணடித்து விட்டாயே!

"பாண்டிப் பழம் பதியே! 'கெட்டார்க்கு இவ்வுலகில் நட்டார் இல்லை' என்னும் பழமொழிக்கு நீயும் ஓர் எடுத்துக்காட்டனாய்! கருங்கடல் உன்னைக் கைவிட்டு அகன்றபோது, வறும்பூத் துறக்கும் வண்டுபோல வணிகரும் செல்வரும் உன்னை விட்டுப் பெயர்ந்தார்கள்; கடலருகே யமைந்த காயல் என்னும் இடத்தைத் துறைமுகமாகத் திருத்தி அங்கே குடியேறினார்கள். கடல் வாணிகத்தால் தழைத்தோங்கித் தலையெடுத்தது காயல்மா நகரம். அதன் சிறப்பை எழுதிப்போந்தார் மார்க்கப் போலர். ஆயினும், காயலின் வாழ்வும் நெடுங்காலம் நிலைக்கவில்லை. உனக்கு நேர்ந்த கேடு காயலையும் தொடர்ந்தது. பொருநையாற்று மண்ணால் காயலும் தூர்ந்து ஒழிந்தது. பொருநையாற்று முகத்தில் துறைமுகம் அமைத்தால் அது நிலைக்காது என்பதை அறிந்த நெல்லை நாட்டார் தூத்துக்குடியைத் துறைமுக நகரமாக்கினார்கள். சரித்திர முறையில் பாண்டிநாட்டின் ஆதித் துறைமுகம் நீயே; இடைக்காலத் துறைமுகம் காயல்; தற்காலத் துறைமுகம் தூத்துக்குடி. இவற்றை யெல்லாம் ஆராயந்தரிவதற்குள் நான் பட்டபாடு கொஞ்சநஞ்ச மன்று.

"குறுகி நிற்கும் கொற்கைப் பதியே! சென்ற ஆண்டில் ஒரு நாள், சில வேலையாட்களோடு இந்து வந்து சேர்ந்தேன். அங்குமிங்கும் சில இடங்களை அகழ்ந்து பார்க்க வேண்டுமென்பது என் ஆசை. அப்போது இவ்வூர் வாசிகள் கூடித் திரண்டார்கள்; என்னை நோக்கி என்னென்னவோ மறைவாகப் பேசினார்கள். 'இந்தப் பாதிரியார் புதையல் எடுக்கப் புறப்பட்டு வந்திருக்கிறார்' என்றான் ஒருவன். 'புதையலை எடுத்தால் பூதம்விடுமா?' என்று மாற்றம் உரைத்தான் மற்றொருவன். அன்னார் கருத்தை அறிந்து கொண் டேன். உடனே முதியோர் சிலரை என்னருகே அழைத் தேன். 'பூதங்காக்கும் புதையலிடம் நான் போவதில்லை' என்று வாக்களித்தேன். அதை ஏற்றுக்கொண்டு இவ் வூரார் என்னை வேலை செய்ய விட்டார்கள். 

"பாண்டிப் பெருங்கடலே! 'பாண்டி நாடே பழம்பதி' என்பது தமிழகத்தார் கொள்கை. அதன் உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டாமா? பழங் கதைகள் சொல்வதிற் பயன் உண்டா? பாண்டி நாட் டிலே பாழடைந்து கிடக்கும் பழம்பதிகள் எத்தனை? மதில் இடிந்து கிடக்கும் மாளிகைகள் எத்தனை? தூர்ந்து கிடக்கும் துறைமுகங்கள் எத்தனை? இவற்றை யெல்லாம் துருவிப் பார்க்க வேண்டாமா? புதை பொருள்கள் கதை சொல்லுமே! கற்கருவிகள் காலங் காட்டுமே! இந்த வகையில் ஆராய்ந்து கொற்கையின் பெருமையைக் காணும் நாள் எந்நாளோ?" என்று உருக்கமாகக் கூறிக் கொற்கைக் கடலிடம் விடை பெற்றார் கால்டுவெல் ஐயர்.

-----------------------------------------------------------

பரிதிமாற் கலைஞர்

தென்னாட்டுக் கடற்கரை நகரங்களில் தலைமை சான்றது சென்னை. அதன் அழகிய கடற்கரையைப் புகழாதார் இல்லை. மாலைப் பொழுதில் அங்கு வீசும் மெல்லிய காற்றை நுகர்ந்து களித்திருப்பவர் பல்லா யிரவர். வேலை பார்த்துக் களைத்தவரும், வேலையின்றி இளைத்தவரும், காரில் ஏறி வருவோரும், கால் நடை யாய்த் திரிவோரும் அங்கே காட்சி யளிப்பர். மதுரையிற் பிறந்து, ஆங்கிலமும் அருந்தமிழும் ஆர்வமுறப் பயின்று, சென்னைக் கிறிஸ்துவ கல்லூரி யில் தமிழாசிரியராக விளங்கியவர் பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரியார். அவர் உண்மை யான தமிழ்த் தொண்டர்; தமிழின் நலமே தம் நல மாகக் கொண்டவர்; ஒரு நாள் அந்திமாலையில் சென்னை நீதிமன்றத்திற்கு அருகேயுள்ள கடற் கரைக்குச் சென்றார்; சுற்று முற்றும் பார்த்துப் பேச லுற்றார்:-

"சென்னைமா நகரின் செல்வமே! உன் அருமையை அறியாதார் இந் நகரில் உண்டோ? செல் வருக்கும் வறிஞருக்கும் நீ ஒருங்கே சுகம் தருகின்றாய்; இளைஞர்க்கும் முதியவர்க்கும் இன்பம் பயக்கின்றாய்; நல்லார்க்கும் பொல்லார்க்கும் நலம் புரிகின்றாய்! கலந்து பேச விரும்புவார்க்குக் களிப்பருள்வாய் நீ! எல்லார்க்கும் இனிய பூங்காற்றே! நீ என்றென்றும் வாழ்க.

"தமிழகத்தின் தலைநகரே! உன்னைக் காணும் பொழுது தமிழ்ப் புலவனாகிய என் உள்ளம் களிக் கின்றது. பழம் பெருமை வாய்ந்த தமிழகத்தின் தலை நகரம் நீயே என்று கருதும் பொழுது பெரியதோர் இன்பம் பிறக்கின்றது. கன்னித் தமிழ்-என்றும் உள தென் தமிழ்-தொன்று தொட்டு வழங்கும் திரு நகரம் நீயே என்று எண்ணும் பொழுது என்னையும் அறியா மல் கவிதை எழுகின்றது.

"மன்னு தொல்புகழ்த் தமிழ்மகள்
நடமிடும் வளஞ்சால் சென்னை மாநகர்"

என்று உன்னைப் பாடி மகிழ்வேன்.

"அருமைத் திருநகரே! நீ கருவாய் இருந்தபோது, திருவள்ளுவரின் அருளைப் பெற்றாய்! உருவாகி வரும் பொழுது ஆழ்வார்களின் ஆசி பெற்றாய்! திருந்தி வருங்கால் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றாய்! பெருகி வளர்ந்த பின் 'தருமம் மிகு சென்னை' என்று வடலூர் அடிகளால் வாழ்த்தப் பெற்றாய்! இத் தகைய புகழ்மாலை பெற்ற நீ, எத்தாலும் சிறப்புற்றிருத்தல் வியப்பாகுமோ? புதுமை சான்ற பட்டினமே! அந் நாளில் பட்டினம் என்றால் காவிரிப்பூம்பட்டினமே. அதுவே தமிழகத்தின் பழைய பட்டினம். இந் நாளில் பட்டினம் என்றால் நீயே! உன்னைப் பார்க்கும்பொழுது, தமிழ் நாட்டின் பழைய நிலையும் பண்பாடும் அலை அலையாக என் உள்ளத்திலே எழுகின்றன. இதோ! உயர்ந்து எழுந்து நின்று தரையிலும் தண்ணீரிலும் ஒளி வீசுகின்றதே! இதைத் 'தீபஸ்தம்பம்' என்று எவரோ சொல்லி விட்டார்! அப் பெயர் இந் நாட்டுப் பள்ளிகளிலும் பரவத் தொடங்கிவிட்டது. அந்தோ! இவ் வொளியைக் குறிப்பதற்கு நல்ல தமிழ்ச் சொல் இல்லையா? நம் முன்னோர்கள்-திரைகட லோடித் திக்கெட்டும் புகழ் பெற்றவர்கள்-இதற்கு அழகிய பெயரிட்டுள்ளார்களே! அப் பெயர் மண்ணுள் மூழ்கி மறைந்தொழியலாகுமா? 'கலங்கரை விளக்கம்' என்ற அச் சொல் இன்று நேற்று எழுந்ததா? சிலப்பதிகாரத்தில் வழங்கும் செந்தமிழ்ச் சொல்லன்றோ? 'கலங்கரை விளக்கம்' என்ற சொல் இருக்க, தீபஸ்தம்பம் போன்ற பதங்களை வழங்குதல் நன்றோ?

"நீதி மன்றத்தின்மீது சுழன்று ஒளிரும் சுடர் விளக்கே! உன்னைப் போன்ற ஒளியைக் கண்டுதான் 'சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே'என்று புகழ்ந் ததோ எங்கள் அருமைத் திருவாசகம்? +சிவநெறியே சிந்திக்கும் என் உள்ளத்தில் அச் செஞ்சடைக் கடவுளின் கோலம் அன்றோ காட்சி தருகின்றது? காதவழி தூரம் ஒளி வீசும் கலங்கரை விளக்கே! வாழி.

+ "சுற்றி நின்றுசு டர்க்கற்றை வீசலால்
உற்று நோக்குநர் உள்ளம்ம லர்தலால்
மற்றி ராப்பொழு தத்தின்வ யங்கலால்
வெற்றி வேணியன் மேலொளிர் திங்களோ"
-பாவலர் விருந்து : பட்டினக் காட்சி

"பாக்கங்கள் பல உடைய பட்டினமே! கடற் கரையில் அமைந்த சிற்றூரைப் பாக்கம் என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். அந்த முறையில் சென்னப்பட்டினமே! நீயும் பல பாக்கங்களை உடை யாய். சேப்பாக்கம் முதல் கீழ்ப்பாக்கம் வரை எத் தனையோ பாக்கங்கள் உன்பால் உள்ளன. இன்னும் உன் பக்கத்திலுள்ள எத்தனை பாக்கங்களை நீ நாளடைவில் இணைத்துக் கொள்வாயோ? எத்துணை நலங்களைப் பிணைத்துக் கொள்வாயோ? உன் பெருமையெல்லாம் தமிழர் பெருமை! உன் வாழ்வெல்லாம் தமிழர் வாழ்வு! ஆதலால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க நன்னகரே!

"வெள்ளையர் ஆளும் விரிநகரே! நின் கோட்டை யின் அருகே இரவெல்லாம் அரவம்; சட்டைக்காரரின் கூட்டம்; வெள்ளைக்காரரின் வெறியாட்டம். இவற்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை!

+ "வெள்ளைக் காரர்கள் பற்பலர் மிக்கஉல் லாசக் 
கள்ள ருந்திய படைஞர்கள் கவினுற உலவ
எள்ளி னும்பிறர் அதைச்சிறி தேனும்எண் ணுகிலாக்
கொள்ளி வாய்ப்புகைச் சுருட்டினர்......"
+ பாவலர் விருந்து:பட்டினக் காட்சி

உன்பால் வந்து குழுமுகின்றார்கள். நல்லார் அவ் வழிச் செல்லவும் நாணுகின்றனரே! சென்னைமா நகரே! வெள்ளையரால் நீ அடைந்த சிறுமை யெல் லாம் சொல்லத்தான் படுமோ? சிந்தைக்கினிய, செவிக்கினிய செந்தமிழ்ப் பெயர்களை அவர்கள் சிதைத்துவிட்டார்களே! திருவல்லிக்கேணி என்பது எத்துணை அழகான பெயர்! அல்லிமலர் பூத்த குளத் தைக் காண்பது ஓர் ஆனந்தமன்றோ? அக் குளத்தின் அருகே எழுந்த ஊரை 'அல்லிக்கேணி' என்று அழைத்தனர் நம் முன்னோர். அது, திரு என்னும் அடைபெற்றுத் 'திருவல்லிக்கேணி' யாயிற்று. இத் திருப் பெயரைத் 'திரிப்பிளிக்கேன்' ஆக்கிவிட்டார் களே வெள்ளையர்! அப் பாழான பெயர், நகரம் எங்கும், நாடெங்கும் பரவி விட்டதே. இத் தீமை தீரும் நாள் எந் நாளோ? இம்மட்டோ! நீ சிறந்து விளங்கும் கடற்கரையின் பெயர்தான் எப்படிச் சீர்கெட்டுக் கிடக் கின்றது? 'சோழ மண்டலக் கரை' என்பதன்றோ உன் கரையின் பெயர்? தமிழின் சிறப்பொலி ழகரம் வெள்ளையர் நாவில் நுழைவதில்லை. சோழ மண்டலம், அவர் நாவில் 'கோர மண்டல்' ஆயிற்று. ஆங்கிலக் கல்லூரிகளிற் பயிலும் இந் நாட்டு மாணவர்கள், 'கோர மண்டல் கோஸ்டு' என்று நித்தமும் தம் நெஞ்சிலே குத்திக் கொள்கின்றார்கள். இவ்வாறு கட்டழிந்து கிடக்கிறது நம் கல்வி முறை!

"மாசுற்ற மணிநகரே! இப்படிச் சீர்குலைந்த பெயர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ! சென்னை யின் இருப்புப்பாதை நிலையங்களில் தமிழ் அன்னை படும் பாடுதான் என்னே! எழுமூர் ஆங்கிலத்தில் எக்மூர் ஆயிற்று, கடற்கரை நிலையம் 'பீச்சு' என்று தமிழிலே எழுதப்பட்டுள்ளது. கோட்டைக்கு அடுத்த நிலையம் 'பார்க்கு' என்று குறிக்கப்படுகின்றது. இவை ஏன் தமிழ்ப் பெயர் பெறலாகாது? பீச்சு என்பதைக் கடற்கரை என்று மாற்றினால் என்ன கேடு? பார்க்கு என்பதைப் 'பூங்கா' என்று அழைத்தால் என்ன பிசகு?

"சென்னைக் கடலே! உன்னைப் போற்றுகின் றேன். வெள்ளையர் ஆட்சியினின்று நீ விரைவில் விடுபடல் வேண்டும்; இடையே வந்த கேடெல்லாம் ஒழியவேண்டும். நீ என்றும் தமிழ்க் கடலாகத் திகழ வேண்டும்; அருந்தமிழ்த் தாய் அதற்கு அருள் புரிய வேண்டும்" என்று பணிந்து வணங்கி விடைபெற்றார் பரிதிமாற் கலைஞர்.
-----------------------------------------------------------

சிதம்பரனார்

தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி இந் நாளில் எந்நாட்டாரும் அறிந்த துறைமுகநகரம். அந் நகரின் பெருமையைத் தம் பெருமை யாக்கிக் கொண்டார் சிதம்பரனார். அவர் தந்நலம் துறந்த தனிப்பெருந் தொண்டர். அன்னார் செய்துள்ள சேவையை நினைத்தால் உடல் சிலிர்க்கும்; உயிர் நிமிர்ந்து உணர்ச்சி பொங்கும்; உள்ளமெல்லாம் நெக்கு நெக்காய் உருகும். 'இந்தியக் கடலாட்சி எமதே' எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறி மயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். தென்னாட்டுத் திலகர் எனத் திகழ்ந் தவர் அவர். பாட்டாளி மக்களுக்குப் பரிந்து பேசிய தற்காக-நாட்டிலே சுதந்தர உணர்ச்சியை ஊட்டிய தற்காக-அவரைச் சிறைக் கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரன்னார்; ஒரு நாள் மாலைப் பொழுது துறைமுகத்தின் அருகே உலாவச் சென்றார். பழைய நினைவுகள் எல்லாம் அவர் மனத்திலே படர்ந்தன. அக் கடற்கரையிலே நின்று அவர் பேசலுற்றார்:-

"தென்னாட்டுத் துறைமுகமே! முந்நூறு ஆண்டு களாக நீயே இம் முத்துக் கரையில் முதன்மை பெற்று விளங்குகின்றாய்! முன்னாளில் வளமுற் றிருந்த கொற்கைப் பெருந்துறையின் வழித் தோன் றல் நீயே என்று உணர்ந்து, உன்னை வணங்கு கின்றேன்; வாழ்த்துகின்றேன்.ஆயினும், அக் காலத் துறைமுகத்தின் மாட்சியையும், இக் காலத்திற் காணும் காட்சியையும் நினைத்துப் பார்க்கும்பொழுது என் நெஞ்சம் குமுறுகின்றதே! பார் அறிந்த பொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து பறந்தது. கொற்கைக் கடல் முத்து வளம் கொழித்தது. பழங் குடிகளாகிய பரதவர் மறக்கல வாணிகத்தால் வளம் பெற்று மாடமாளிகைகளில் வாழ்ந்தார்கள். இது, சென்ற காலத்தின் சிறப்பு. இன்று, மீனக்கொடி எங்கே? ஆங்கில நாட்டுக் கொடியன்றோ இங்கே பறக்கின்றது? பரங்கியர் கப்பலன்றோ எங்கும் பரந்து திரிகின்றது? கொள்ளை லாபம் அடிக்கின்ற வெள்ளையர் கப்பலில், கூலிவேலை செய்கின்றனர் நம் நாட்டு மக்கள்! சொந்த நாட்டிலே வந்தவர்க்கு அடிமை செய்து வயிறு வளர்ப்பது ஒரு வாழ்வாகுமா? 'வசை யொழிய வாழ்வாரே வாழ்வார்' என்ற வள்ளுவர் வாய்மொழியை மறக்கலாமா?

"வளமார்ந்த துறைமுகமே! இந்த வசையை ஒழிப்பதற்காக இந் நகரில் சுதேசக் கப்பல் கம்பெனியொன்று இருபதாண்டுகளுக்கு முன் உருவாயிற்று. பாரத நாட்டுச் செல்வரும் அறிஞரும் அந்தக் கம்பெனியில் பங்கு கொண்டார்கள். பழங்காலப் பாண்டியரைப் போல், மதுரைமா நகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்து, புலவர் பாடும் புகழுடயவராய் விளங்கிய பாண்டித்துரைத் தேவர் அக் கம்பெனியின் தலைவர் ஆயினார். அதன் செயலாளனாக அமைந்து பணி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. கம்பெனியார் வாங்கிய சுதேசக் கப்பல் உன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அக் கப்பல் இங்கிருந்து கொழும்புத் துறையை நோக்கிப் புறப்பட்ட நாளில், இன்பவெள்ளம் என் உள்ளத்திலே பொங்கி எழுந்தது; கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

"வாணிக மாமணியே! அன்றுமுதல் சுதேசக் கப்பல் வாணிகம் வளர்ந்தது; வெள்ளையர் வாணிபம் தளர்ந்தது. அதுகண்டு அவர் உள்ளம் எரிந்தது. வெறுக்கத் தக்க சூழ்ச்சிகளை அன்னார் கையாளத் தலைப்பட்டார்; சுதேசக் கம்பெனி வேலையினின்றும் நான் விலகிக்கொண்டால் நூறாயிரம் ரூபாய் கையடக்கம் தருவதாக முறைமுகமாக கூறினர். எனக்கு உற்ற துணையாக நின்று ஊக்கம் தந்த நண்பர்களைப் பலவாறு பயமுறுத்தினர்; இவையெல்லாம் பயனற்று ஒழிந்த நிலையிலே அடக்கு முறையைக் கையாளக் கருதி அரசாங்கத்தின் உதவியை நாடினார். 

"பரங்கியர் ஆளும் துறையே! ஆங்கில அரசாங்கம் சர்வ வல்லமையுடைய தென்றும், அதை அசைக்க எவராலும் ஆகாது என்றும் அப்போது பொது மக்கள் எண்ணி யிருந்தார்கள். அதனால் அடிமைத்தனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந் நாட்டு மக்களிடையே வளர்ந்தது. துரைதனத்தார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல், 'சார், சார் ' என்று சலாமிட்டுப், 'புத்தி, புத்தி' என்று வாய்பொத்திச், 'சரி, சரி' என்று சம்மதித்துத் தாளம் போடும் போலி அறிஞர், பட்டங்களும் பதவிகளும் பெற்று உயர்ந்தார்கள். அரசாங்கம் ஆட்டுவித்தால் அப் பதுமைகள் ஆடும்; எப்போதும் 'அரசு வாழ்க'என்று பாடும். இத்தகைய சூழ் நிலையிலே எழுந்தது சுதந்தர நாதம்! வந்தேமாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது; காட்டுக் கனல்போல் எங்கும் பரவிற்று. 'சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்' என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார் மராட்டிய வீரர் ஒருவர். அவரே பாரத நாடு போற்றும் பாலகங்காதர திலகர். தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார். அவர் அஞ்சாத நெஞ்சினர்; செஞ்சொற் கவிஞர்; 'வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம், என்ற அழகிய பாட்டிசைத்து, நாட்டிலே ஆர்வத்தைத் தட்டி எழுப்பினார்; 'நொந்தே போயினும், வெந்தே மாயினும் வந்தேமாதரம்' என்னும் வீர மந்திரத்தை விடமாட்டோம் என்று வீறு பெறக் கூறினார்.

"புதுமை கண்ட துறைமுகமே! அந் நாளில் 'வந்தேமாதரம்' என்றால் வந்தது தொல்லை . அந்த வாசகத்தில் ஒரு வஞ்சகம் இருப்பதாக ஆங்கில அரசாங்கம் கருதிற்று. பொதுக் கூட்டங்களிலும், தொழிலாளர் கூட்டங்களிலும், நான் பேசும்பொழுது வந்தேமாதர'த்தை அழுத்தமாகச் சொல்லுவது வழக்கம். அதைக்கேட்டு நாட்டு மக்கள் ஊக்கமுற்றார்கள்; உணர்ச்சி பெற்றார்கள். உள்ளதைச் சொன்னால் கள்ளமுடையவர் உள்ளம் எரியுமல்லவா? எரிவுற்ற அரசாங்கம் என்னை எதிரியாகக் கருதிற்று; என்மீது பலவகையான குற்றம் சாட்டிற்று. நாட்டின் அமை தியை நான் கெடுத்தேனாம்! நல்ல முதலாளிமாருக்குத் தொல்லை கொடுத்தேனாம்! வெள்ளையர்மீது வெறுப்பை ஊட்டினேனாம்! வீர சுதந்தரம் பெற வழிகாட்டினேனாம் வெள்ளைக் கோர்ட்டிலே இக் குற்ற விசாரணை விறுவிறுப்பாக நடந்தது. இரட்டைத் தீவாந்தர தண் டனை எனக்கு விதிக்கப்பட்டது. அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக மாறிற்று அத் தீர்ப்பு. ஆறாண்டு கோவைச் சிறையிலும், கண்ணனூர்ச் சிறையிலும் கொடும் பணி செய்தேன். என் உடல் சலித்தது; ஆயினும், உள்ளம் ஒரு நாளும் தளர்ந்ததில்லை; சிறைச் சாலையைத் தவச் சாலையாக நான் கருதினேன்; கை வருந்த மெய் வருந்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம்; என்று எண்ணி உள்ளம் தழைத்தேன்.

"செல்வச் செழுந்துறையே! சிறைச்சாலையில் என்னைக் கண்காணித்தவர் பலர். கடும்பணி இட்ட வர் பலர். அவரை நான் எந்நாளும் வெறுத்தததில்லை. ஆனால், முறை தவறி நடந்தவர்களை எதிர்த்தேன்; வரை தவறிப் பேசியவர்களை வாயால் ஒறுத்தேன். ஒரு நாள் மாலைப்பொழுது: உடல் நலிந்து, உள்ளம் தளர்ந்து சிறைக்கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். அங்கே வந்தான் ஒரு ஜெயிலர்; அதிகாரத் தோரணை யில் நீட்டி நிமிர்ந்து நின்று கொண்டு எனக்குச் சில புத்திமதி சொல்லத் தொடங்கினான். அப்போது என் மனத்தில் கோபம் பொங்கி எழுந்தது. ‘அடே மடையா! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன்? மூடு வாயை! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான். உன்னுடைய கவர்னருக்கும், மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான்’ என்று வேக முறப் பேசினேன். மானமிழந்து வாயிழந்து மறைந்தான் ஜெயிலர்.

"தமிழ்ப் பெருந்துறையே! உன் தாழ்விலும் வாழ்விலும்-எந்த நாளிலும்-என் தமிழ்த் தாயை நான் மறந்தறியேன்; இந்த நகரத்தில் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பண்டித் துரைத்தேவரோடு உறவு கொண்டு, தமிழ் நூல்களைக் கற்றேன். அதனால் நான் அடைந்த நன்மைக்கு ஓர் அளவில்லை. சிறைச் சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத் தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ? தொல் காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லை யெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன். ஆங்கிலமொழி யில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை ‘மனம்போல் வாழ்வு’ என்று தமிழிலே மொழி பெயர்த்தேன். உயர்ந்த நூல்களிற் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளு மாறு ‘மெய்யறிவு’, ‘மெய்யறம்’ என்ற சிறு நூல்கள் இயற்றினேன். இவற்றை என் தமிழ்த் தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தேன் சிறையி லிருந்து நூற்ற என் சிறு நூல்களையும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு செந்தமிழ்த்தாயின் திருவருளை வேண்டுகிறேன்.

"வருங்காலப் பெர்ருவாழ்வே! காலம் கடிது சென்றது. என் சிறை வாழ்வு முடிந்தது. இந் நகரை வந்தடைந்தேன். என் அருமைக் குழந்தை களைக் கண்டு ஆனந்தமுற்றேன். ஆயினும் என் ஆசைக் குழந்தையை-தேசக் கப்பலை- இத் துறை முகத்தில் காணாது ஆறாத் துயருற்றேன். 'பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே' என்று பரிதவித்தேன். 'என்று வருமோ நற்காலம்' என்று ஏங்கினேன். இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் சுதந்தரம் வந்தே தீரும். வீர சுதந்தர வெள்ளம் புறப்பட்டு விட்டது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் ஆகும்? பாரத நாட்டிலே,

"பாயக் காண்பது சுதந்தர வெள்ளம்
பணியக் காண்பது வெள்ளயர் உள்ளம்"

என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?" என்று உருக்கமாகப் பேசிக் கடற்கரையை விட்டகன்றார் வீரச் சிதம்பரனார்.
-----------------------------------------------------------

பாரதியார்

தமிழ் நாட்டுக்குப் புத்துயிரும் வாழ்வும் அளித்தவர் பாரதியார். பாருக்குள்ளே நல்ல நாடு - பண்பும் பழமையும் வாய்ந்த நாடு-பாரதப் பெரு நாடு- உரிமையிழந்து, பெருமைகுன்றி, வெள்ளை யாட்சி யில் குறுகி நின்ற நிலை கண்டு அவர் மனம் கொதித் தார். 'இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனாவாசம்' என்பதை நன்றாக அறிந்திருந்தும் வெள்ளையார் ஆட்சியை எதிர்த்தார் அவ்வீரர்; பாட்டாலும் உரையாலும் தமிழ் நாட்டாரைத் தட்டி எழுப்பி வீர சுதாந்தர வேட்கையை ஊட்டினார். சென்னையம் பதியின் கண்ணென விளங்கும் திருவல்லிக்கேணியிலே பல்லாண்டு வாழ்ந்தார் பாரதியார்; நாள் தோறும் அந்திமாலையில் கடற்காரையிலே நின்று ஆவேசமாய்ப் பாடுவார்; ஒருநாள் அக்கடலை நோக்கி ஆர்வமுறப் பேசலுற்றார்:-

"அருந்தமிழ்க் கடலே! இன்று உன்னைக் காண ஏனோ என் உள்ளம் களிக்கின்றது! நீள நினைந்து நெஞ்சம் தழைக்கின்றது! 'எங்கள் அருமைத் தமிழகத்தை வாழ்விக்க வந்த வள்ளுவர் முன்னாளில் உன்னைக் கண்டார்; உன் காற்றை உண்டார்; உன் கரையில் உலாவினார்' என்று எண்ணும்பொழுது இன்பம் பொங்குகின்றது என் உள்ளத்தில்! 'உன் மணற் பரப்பிலே நன்னீர் சுரந்து, அல்லி மலர் பூத்து நின்ற கேணிதான் அக் கவிஞர் பெருமான் கருத்தைக் கவர்ந்ததோ?' 'தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்ற அருமைத் திருக்குறள் உன் அருகேயுள்ள திருவல்லிக்கேணியைத்தான் குறித்ததோ? இளங்காற்றளித்துச் சிறு நன்மை செய்த உனக்கு எத்துணை அருமையான கைம்மாறு அளித்துவிட்டார் அப்பெருமான்! உன் அல்லி மணற் கேணிக்கு அழியாப் பெரும் பதம் அளித்து விட்டாரே! அவர் வாழ்த்துரையால்தான் திருவல்லிக் கேணிக்கு வாழ்வின்மேல் வாழ்வு வருகின்றதோ?

"நீலத்திரைக் கடலே! உன்னைக் கடைக்கணித்த அப்பெருந்தகையை ஏழையேன் என்சொல்லி ஏத்துவேன்? மாநிலமெங்கும் புகழ் பெற்று விளங்கும் அப் பெருமானைத் தமிழகம் செய்த தவக் கொழுந்து என்பனோ? நானிலம் செய்த நற்றவத்தின் பயன் என்பனோ? ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்பனோ? செந்தமிழ்ச் செம்மணிகளாய் இலங்கும் மும்மணிகளுள் அவரே நடு நாயகமாய்க் காட்சி தருகின்றார். புனிதமான அக்காட்சியை என் புன் கவியால் எழுதிக் காட்ட முடியுமா?ஆயினும் கடுக்கின்றது ஆசை; கதிக்கின்றது கவிதை.

"கல்விசி றந்தத மிழ்நாடு-புகழ்க்
கம்பன்பி றந்தத மிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத் தின்மணம்
பாரெங்கும் விசும்த மிழ்நாடு.
வள்ளுவன் தன்னைஉ லகினுக் கேதந்து
வான்புகழ் கொண்டத மிழ்நாடு-நெஞ்சை
அள்ளும்சி லப்பதி காரமென் றோர்மணி
ஆரம்ப டைத்தத மிழ்நாடு"

என்று பாடுவேன்; ஆனந்தக் கூத்து ஆடுவேன்.

"நல்லோர் போற்றும் அல்லிக்கேணியே! உன் மலர்க்கேணியின் அழகைக் கண்டுதான் மாமுகில் வண்ணன் அதனருகே கோயில் கொண்டானோ? அன்று பஞ்சவருக்குத் துணை புரிந்த அஞ்சன வண்ணன் - பார்த்தனுக்குப் பாகனாகிய பரந்தாமன்- அறப்பெருந் துணைவன் - அடியார்க்கு எளியன் - நின்னகத்தே நின்று அருள் புரிகின்றான். அந்தக்

"கண்ணைக் கண்டேன் - எங்கள்
கண்ணனைக் கண்டேன் மணி
வண்ணனை ஞான மயிலினைக் கண்டேன்."

"தொல்புகழ் வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார் யார்? உன் கடற்கரையில் அன்று தமிழ்த் தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகின்றது. அன்று உன் அரங்கத்தில் எங்கள் தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள்; இன்று, ஆங்கில மாது களியாட்டம் ஆடுகின்றாள். அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ் வளம் ஏறுமா? அவள் இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ! திருவல்லிக்கேணியே! வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்; பேர் இழந்தாய்; 'திரிப்பளிக்கே'னாகத் திரிந்துவிட்டாய்!

"அல்லிக் கருங்கடலே! உன் அழகமைந்த கரையிலே, வெள்ளையர் விளையாடித் திரிகின்றார்; வெறியாட்டயர்கின்றார்; உலாவுகின்றார்; குலாவுகின்றார். அவரைக் கண்டு அஞ்சி, நம்மவர் நெஞ்சம் குலைகின்றாரே! சிப்பாயைக் கண்டால் அச்சம்; துப்பாக்கியைக் கண்டால் நடுக்கம்; சட்டைக் காரனைக் கண்டால் குட்டிக் காரணம். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? பிறந்த நாட்டில் பிறர்க் கடிமை செய்தல் பேதைமை யன்றோ?

"அறப்பெருங் கடலே! வீர சுதந்தர வேட்கை இந் நாட்டிலே வேரூன்றி விட்டது. இனி அதை அசைக்க எவராலும் ஆகாது. வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால் பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள் சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத் தில் அடைக்கலாம்; செக்கிழுக்க வைக்கலாம்; துச்சமாக எண்ணித் தூறு செய்யலாம். ஆயினும், அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை வீட்டியே தீரும்!

"சொந்த நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே
துஞ்சிடோம - இனி அஞ்சிடோம்"

என்ற வீர சுதந்தர வேகத்தை நிறுத்த யாரால் முடியும்? எரிமலையைத் தடுக்க - அதன் வாயை அடைக்க - எவரால் இயலும்?

செந்தமிழ்க் கடலே! இக் கரையில் கொஞ்சம் இடம் வேண்டும் என்று கெஞ்சிய வெள்ளைக்காரன் இன்று மிஞ்சி விட்டான்; கோட்டை வளைத்தான்; நமக்குக் கேட்டை விளைத்தான்; இந்நகரை வெள்ளை யர் பாக்கம் என்றும், கறுப்பர் பாக்கம் என்றும் பிரித்தானே! வெள்ளையர் மேலோராம்; கறுப்பர் கீழோராம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று பரந்த கொள்கையைப் பழித்து நிற்பது வெள்ளையர் ஆட்சி. அது வீழ்ந்தே தீரும்.

"என் அருமைத் தமிழ்க் கடலே! அது விழு கின்ற நாளிலே பாரத சமுதாயம் ஒன்று பட்டு வாழும். சாதிப் பூசல்கள் ஒழியும்; சமயப் பிணக் கங்கள் அழியும்; தமிழ் நாடு தலையெடுக்கும். அப்போது,

"உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனை செய்வோம்"

என்று ஆடுவோம்; பள்ளுப் பாடுவோம்; 'ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம்' என்று அகம் களித்து இக் கடற்கரையில் இறுமாந்து உலாவு வோம்" என்று ஏறுபோல் நடந்து சென்றார் பாரதியார்.

ஆசிரியர் : ரா.பி. சேதுபிள்ளை

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

3.05263157895
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top