பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கண்ணதாசனின் மாங்கனி

கண்ணதாசனின் 'மாங்கனி' காவியம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி ஒரு வரலாற்றுச் சான்று கொண்ட பகுதியை எடுத்துப் புதுவிதமாகப் பாடியிருப்பதைக் குறிப்பிடுகிறது. சிறையில் பூத்த நாடகக் குறுங்காவியம் மாங்கனி. கற்பனை கலந்த காதல் சம்பவங்களைப் பற்றிக் கூறுகிறது.

காதல் வாழ்வில் ஏற்படும் பிரிவுத் துன்பத்தையும், காதல் கைகூடாமல் இருக்கும் நேரத்தில் ஏற்படும் மன உணர்வுகளின் வெளிப்பாட்டினையும் எடுத்துச் சொல்கிறது.

இலக்கண வரம்பினை மீறிய கவிதைப் புனைவான மாங்கனி ஆடவர், பெண்டிர் ஆகியோரின் அழகு நிலைகளைப் பற்றி எடுத்துரைக்கிறது.

தமிழ் வேந்தர்கள் மூவரின் வீரம் செறிந்த பெருமைகளையும் தமிழ்ப் பெண்களின் கற்பின் மாண்பினையும் பற்றி எடுத்துச் சொல்கின்றது.

கவியரசு கண்ணதாசன் தான் கற்ற இலக்கியத்தையும் தன்னுடைய அனுபவங்களையும் மாங்கனி காவியத்தில் பதிவு செய்திருப்பதையும் விளக்குகிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதை நீங்கள் படித்து, இதில் வரும் கவித்துவ அழகில் ஈடுபட்டால், கீழ்க்காணும் பயன்களையும் திறன்களையும் பெறுவீர்கள்.

* மானுடச் சாதியின் மகத்துவத்தில் 'காதல்' என்பது மாண்பிற்குரியது; காதலின் வளர்நிலையினை இல்லற மாண்பினுக்குட்படுத்தலே 'அறவாழ்வு' என்பதை விளக்கிக் கூறலாம்.

* மனிதன், இன்பங்களை நுகர்தலிலும் நிலையாமை தான் உண்டு என்பதை உணரலாம்.

* இசை, நடனம், கலை, அழகியல் தன்மைகளைப் பற்றிய கவிஞரின் கருத்தினை அறியலாம்.

* காவிய மாந்தர்களின் பண்பு நலன்களை விளக்க, பல்வேறு வகையான உவமைகளைக் கையாளும் திறமை பெறலாம்.

* தமிழக வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியை அறியலாம், மூவேந்தர்களின் புகழ், வெற்றி, படைச்சிறப்புகளை விளக்கலாம்.

* மாங்கனி எனும் பரத்தையர் குலப் பெண்ணைப் பற்றி உயர்த்திச் சொல்லியிருப்பதை அறியலாம்.

* தமிழ்க் காப்பியங்களின் சாயலும் சங்கப்பாடல்களின் தாக்கமும் கொண்டதாக மாங்கனி காவியத்தை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்.

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களுள் பாரதி - பாரதிதாசனுக்குப் பிறகு, உண்மையிலேயே கவியரசராகத் திகழ்ந்து, ஒப்பாரும் மிக்காருமற்றவராக வாழ்ந்தவர் கண்ணதாசன். கவியரசு கண்ணதாசனிடம் இளமையிலேயே கவிதை பாடும் ஆற்றல் இருந்தது. கற்பனை உரமும், காணும் இடத்திலேயே கவிதை புனையும் ஆற்றலும் இருந்தமையால் அவருடைய கவிதைகள் சாகாவரமுடையன ஆயின. இவர்தம் அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் சிறையில் பிறந்த காவியம்தான் மாங்கனி. இது 1954-இல் வெளிவந்தது. காவியத்தின் கதைக் கருவிற்கு வரலாற்றுச் சான்றினை ஆதாரமாகக் கொண்டு எழுதியுள்ளார்.

பழைய தமிழைப் புதுத்தமிழில் பாடியிருப்பது போல இது அமைந்துள்ளது. பழங்கதைகளைத் தற்காலச் சூழலுக்கு ஏற்ப, கற்பனைத் திறத்துடன் படைக்கப்பட்டுள்ளது. கவிஞரின் இலக்கியப் புலமையை வெளியிடுவதுபோல இக்காவியம் அமைந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை யின் இணைந்த வடிவமாகவும் காணப்படுகிறது. "செந்தமிழின் நவமணிகளை அள்ளித் தெளித்துத் தங்கத் தமிழ்ப் பாவில் இழைந்தோடவிட்ட அழகிய நாடகக் காப்பியம்" என்று பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை இதனைப் பாராட்டியிருக்கிறார். மாங்கனி தமிழ்வாழ்த்தில் ஆரம்பித்து, வஞ்சியல் விழாவில் ஆர்ப்பரித்து - புத்தர் வழியில் பொன்னரசி என்று முடித்து, 40 தலைப்புகளில் இக்கவிதைக் காவியத்தை நிறைவு செய்துள்ளார், கவிஞர்.

பண்டைய இலக்கியங்களில் பாத்திரப் படைப்புகளைக் காப்பியக் கவிஞரே அறிமுகப்படுத்தும் மரபு இருந்து வந்துள்ளது. அதுபோலவே, மாங்கனியிலும் கவிஞர் பாத்திரப் படைப்புகள் அனைத்தையும் தாமே அறிமுகம் செய்கிறார். நாடு, நகர் போன்ற அறிமுகக் காட்சிகளையும் படைத்துள்ளார். காப்பியத் தலைவி மாங்கனி ஆரவாரத்தில் தொடங்கி காதல் சுவையில் நிறைந்து, பிரிவின் ஏக்கத்தில் உழன்று, அமைதியில் முடிவதைக் காணமுடிகின்றது. ஏறக்குறைய காவியத் தலைவன் அடலேறுவும் இதே நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளான். காதல் சம்பவங்கள் கற்பனை என்றாலும், வாழ்வில் கைகூடாத காதல் நிலையினை, இருவரையும் மரணத்தில் ஒன்று சேர்த்து, காவியத்தை முடித்துள்ளார்.

மாங்கனி

கல்லக்குடிப் போராட்டம் காரணமாகத் திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது, (1954-இல்) மாங்கனி எழுப்பட்டது. வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு குறுங்காவிய நாடகம் போன்றது தான் மாங்கனி. கவிஞர் எழுதிய காவியங்களில் மாபெரும் பாராட்டுப்பெற்றது இதுவெனலாம்.

மோரிய மன்னன் அறுகையோடு மோகூர்க் குறுநில மன்னன் பாண்டியன் பழையன் என்பவன் பகைமை கொண்டதாகவும், அறுகைக்கு உதவியாகச் சேரன் செங்குட்டுவன் பழையன் மீது போர் தொடுத்ததாகவும் காணப்பட்ட ஒரு குறிப்பை வைத்து மாங்கனியைப் புனைந்ததாகக் கவிஞர் கண்ணதாசன் தம் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். மேலும் இக்காவியத்தில் அமைச்சராக வரும் அழும்பில் வேளுக்கு ஒரு மகன் இருந்ததாக வரலாற்றில் குறிக்கப்படவில்லை; ஆனால், கவிஞர் படைத்துள்ளார். அதேபோல, சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் செல்லும் இடங்களுக்கெல்லாம் கணிகையர் சிலரும் அழைத்துச் செல்லப்படுவதுண்டு எனும் வரலாற்றுக் குறிப்பினைக் கொண்டு, அதிலே ஒருத்தியாகக் கவிஞரின் கற்பனையில் பிறந்தவள் தான் இக்காவிய நாயகி மாங்கனி.

தென்னரசி, பொன்னரசி கவிஞர் படைத்த கற்பனைப் பாத்திரங்கள், காதல் சம்பவங்களை, காவியத்தைச் சுவையாக அமைக்கப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. மாங்கனியில் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரண்டு பொருள்கள் பற்றியும் கவிதை புனைந்திருப்பதைக் காணலாம். இலக்கண வரம்பை மீறி உணர்ச்சி நிரம்பிய நடையுடன் எழுதப்பட்டுள்ள இந்தக் காவியத்தின் ஒரு பகுதி, கவிஞர் நடத்திய தென்றல் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் முழுமையாக நூல்வடிவம் பெற்றது. 'கண்ணதாசன் கவிதைகள்' முதல் தொகுதியில் மாங்கனி' இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிரியர் - கண்ணதாசன்

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கவியரசு கண்ணதாசன், 24-06-1927-இல் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தந்தை சாத்தப்பன், தாய் விசாலாட்சி என்பவர். கண்ணதாசன் இளமையிலேயே கவிபுனையும் ஆற்றல் பெற்றவர். 1944-இல் ஏப்ரல் 14-இல் இவரது முதல் கவிதை அச்சாகியது. 1948இல் சேலம் மாடர்ன் தியேட்டரில் பணி செய்தார். அறிஞர் அண்ணாவின் பேச்சுகளால் கவரப்பட்டு 1949-இல் தி.மு.க-வில் நுழைந்தார். சுமார் பத்து ஆண்டுகள் தி.மு.க-வின் கருத்துகளைத் தம் எழுத்துகளில் வடித்தார். பின்னர்த் தமிழ்த் தேசியக் கட்சியின் மூலமாக இந்தியத் தேசியக் காங்கிரசில் நுழைந்து, அதன் கொள்கைகளைத் தமது கவிதைகளில் வெளியிட்டார். தமது 17-ஆம் வயதில் 'திருமகள்' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார்.

தென்றல், திரை ஒளி, மேதாவி, கண்ணதாசன், சண்டமாருதம், கடிதம் முதலான இதழ்களில் எழுதி வந்தார். பாரதியார், பாரதிதாசன் ஆகியவர்களைப் பின்பற்றி எழுதியவர்; அதே போல, அருணகிரிநாதர், பட்டினத்தார் முதலியவர்களின் பக்திப் பாதையையும் பின்பற்றி எழுதியவர். 1970இல் அனைத்திந்திய சிறந்த கவிஞர் பட்டம் பெற்றவர். 1977இல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். இவ்வாறு பக்திக் கவிஞர்களைப் போலவும் சமூகக் கவிஞர்களைப் போலவும் சித்தர்களைப் போலவும் தம் கவிதைகளில் கருத்துகளை வெளிப்படுத்தியவர் கண்ணதாசன்.

கண்ணதாசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்) மனம் போல் வாழ்வு, வனவாசம், அதைவிட ரகசியம், தெய்வ தரிசனம், இலக்கியத்தில் காதல், அர்த்தமுள்ள இந்து மதம், ஆட்டனத்தி ஆதிமந்தி, ஞானமாலிகா, ராகமாலிகா, இயேசுகாவியம், மாங்கனி, தைப்பாவை, வேலாங்குடித் திருவிழா என இவரது படைப்புகள் நீண்டு கொண்டே செல்லும். இது தவிர, 'முத்தையா' எனும் இயற்பெயரில் பல கடிதங்களையும் எழுதியுள்ளார். இவ்வாறு, திராவிட இயக்கக் கவிஞராக அறிமுகமாகி, திரை இசைக் கவிஞராக உலா வந்து, பின்னர், மதநம்பிக்கையாளராக மாறி, மானுடச் சாதியின் மகத்துவத்தை உலகறியச் செய்த ஒப்பற்ற கவிஞராகத் திகழ்ந்தவர் தான் கவியரசு கண்ணதாசன். 1981-அக்டோபர் 17-இல் கவிஞர் அமரரானார். ஆனாலும், அவரது கவிதைகள் நம் இதயங்களில் நீங்கா இடம் பெற்ற கவிதைகளாக உலா வருகின்றன என்பதே உண்மை .

கதைச் சுருக்கம்

சேரன் செங்குட்டுவன் வடக்கே கனக விசயர்களை வென்று, அவர்கள் தலையில் கண்ணகிக்குக் கல்கொண்டு வந்து வஞ்சிமாநகரில் விழா எடுக்கிறான்.

அடலேற்றின் காதல்

அந்த வேளையில் சேரன் அவையில் மாங்கனி என்ற கணிகை குலப்பெண் யாவரையும் கவரும் விதத்தில் நடனமாடினாள். அப்போது, அங்கிருந்த அமைச்சர் அழும்பில்வேள் மகன் அடலேறு, அவள் அழகைக் கண்டு மயங்கிக் காதல் கொள்கிறான். தன் மாளிகையில் மாங்கனியை நினைத்தவாறே உட்கார்ந்திருந்த அடலேறுவிடம், மோகூர் மன்னன் பழையனுக்கு எதிராகப் போர்தொடுக்கும் செய்தியைச் சொல்கிறான். அமைச்சரும் அவன் தந்தையுமான அழும்பில்வேள், போருக்குச் செல்லும் எண்ணம் ஒரு பக்கமிருந்தாலும், அந்த இரவில் தனியாக இருக்கும் மாங்கனியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறான் அடலேறு. மாங்கனி அவனைத் திட்டியும் பழித்தும் பேசி மறுத்துவிடுகிறாள். ஆனாலும், அடலேற்றின் பண்பினையும் பெருந்தன்மையையும் நினைத்து அவனிடம் மனத்தைப் பறிகொடுத்தவளாகவே காணப்படுகிறாள்.

அடலேற்றின் படையெடுப்பு

அடலேற்றின் தலைமையில் சேரர் படை மோகூருக்குச் செல்கிறது. ஆடல், பாடல்களுக்காக மாங்கனியும் அவளுடன் ஐந்து பெண்களும் செல்கின்றனர். மோகூரின் வடக்குப் பகுதியில் தனித்தனியாகக் கூடம் அமைத்துத் தங்குகின்றனர். அன்று நள்ளிரவில் அடலேறு மாங்கனியைச் சந்தித்துப் பேசித் தனது கூடாரத்தை அடைகின்றான். அவ்வேளையில் மோகூர் மன்னன் தன் படைத்தலைவனான மலைமேனியை உளவறிந்துமாறு அனுப்புகிறான். மலைமேனி சேரர் படைகளைப் பார்க்கிறான். அதனருகில் மாங்கனியையும் மற்ற பெண்களையும் பார்க்கிறான். பார்த்த மாத்திரத்திலே மாங்கனியையும் மற்ற பெண்களையும் மலைமேனியின் ஆட்கள் காட்டிற்குத் தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

போர் வெற்றி

சேரர் படை வீரர்கள் பல படைகளைக் கடந்து பகைவர்களை அழித்து, மோகூருக்குள் நுழைந்து, வெற்றி பெற்றுப் பெருமகிழ்ச்சியோடு அரண்மனைக்குள் நுழைய, நான் சரணம்' எனக்கூறிப் பழையன் பணிந்தான். அவன் பெண் மக்கள் இருவரும் கண்களில் நீர் சொரிய ஆங்கே வந்து நின்றனர். மூவரையும் படைத்தலைவன் தளிவேல் சிறைப்படுத்தினான்.

அடலேற்றின் செயல்கள்

மோகூர் நாட்டைக் கைப்பற்றிய பெருமிதத்துடன் அந்த நகரை வலம் வந்தான் அடலேறு. அப்போது கட்டுப்பாடற்ற சில சேர வீரர்கள் அக்கிரமச் செயல்கள் செய்வதைப் பார்த்துக் கண்டித்தான் அடலேறு. தளிவேல் என்பவன் பழையன் மகள் பொன்னரசியின் கூந்தலை அறுத்துவிடுகிறான். தென்னரசி மட்டும் அவனை எதிர்த்து நின்றாள். அந்த நேரத்தில் அங்கு வந்த அடலேறு, தளிவேலைக் கண்டித்து, அவனது வீரப்பதக்கங்களைப் பறித்தான்.

பின்னர், பழையன் மற்றும் மக்கள் இருவரையும் விடுவித்து அவர்களைத் தேற்றுகிறான். உடனே, பழையன் அடலேற்றை விருந்திற்கு அழைக்கிறான். அடலேறு அவ்விருந்தில் கலந்து கொள்கிறான். அப்போது பழையன் மகளிர் முக்கனியைக் கொண்டு வந்து படைக்கும் நேரத்தில், மாங்கனியைத் தொட்டு எடுக்கும் நேரத்தில், காட்டு வெளியில் தங்கவைத்துவிட்டு வந்த தன் காதலி மாங்கனி நினைவுக்கு வர விரைவாகப் புறப்பட்டுப் போய்விடுகிறான். அவனது செயலை நினைத்துப் பழையனும் அவனது மகளிரும் மிகவும் வருத்தமுறுகிறார்கள்.

அடலேற்றின் பகையும் துன்பமும்

மாங்கனியைக் காணாதவனாக அடலேறு மிகவும் அழுது புலம்புகிறான். ஒன்றும் செய்வதறியாது திகைப்புற்று நிற்கிறான். இந்நிலையில் 'தளிவேல்' அடலேறுவிற்குப் பகைவனாக மாறிவிடுகிறான். மாங்கனியை, சூரபதன் என்பவனுக்கு விற்றுவிடுகிறான். மாங்கனியைச் சூரபதன் காவலுக்குட்படுத்திக் கொடுமைகள் பல நிகழ்த்துகிறான். இச்சூழ்நிலையில், வெற்றிப் பெருமிதம் ஒருபக்கம் இருந்தாலும், தன் காதலியைத் தொலைத்த சோகத்துடன் அடலேறு சேரநாடு திரும்புகிறான்.

அடலேற்றின் திருமணம்

சில நாள்கள் கழித்து, பழையனிடமிருந்து தன் மகள் தென்னரசியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டி ஓலை வருகின்றது. மன்னன் விருப்பப்படியும் தன் தந்தையின் கட்டளையின் பேரிலும் திருமணத்திற்குச் சம்மதித்து அடலேறு மணம் புரிகிறான்.

மாங்கனியின் வருகை

பல இன்னல்களிடையேயும் தன் காதலனை மனத்தில் நிறுத்தி நாடி வருகிறாள் மாங்கனி. சேர நாடு வந்தடைகிறாள். அடலேறுவிற்குத் திருமணம் நடந்து முடிந்துவிடுகிறது. கேள்விப்படுகிறாள். ஆறாத்துயரில் மூழ்குகிறாள். தென்னரசியும் அடலேறுவும் இருக்கும் அறையின் அருகில் செல்கின்றாள். அங்கு இருவரும் ஒன்றிப்போய் பேசி மகிழ்வதைப் பார்த்து, 'அத்தான்' என்றாள் மாங்கனி. அந்தக் குரலைக் கேட்ட அடலேறு மாங்கனி! மாங்கனி! என்று வெளியே ஓடிவருகிறான்.

துன்பமுடிவு

மாங்கனி அங்கு நிற்காமல் துயரத்தோடு ஓடி, சுழன்று வரும் ஆற்றில் விழுகிறாள். அவளைக் காப்பாற்ற அடலேறும் விழ, அவ்விருவரையும் காப்பதற்காகத் தென்னரசியும் விழுந்து விடுகிறாள். இப்படி மூவரும் ஆற்றில் மூழ்கி இறந்து விடுகின்றனர். இக்கதையே மாங்கனி காப்பியம்.

கதைமாந்தர்

மாங்கனி காப்பியத்தின் தலைமை மாந்தர்களாகக் காணப்படுபவர்கள் அடலேறுவும் மாங்கனியும். அவர்கள் இருவரின் காதல் உணர்வை இக்காப்பியம் வெளிப்படுத்துகிறது.

அடலேறு

மாங்கனி காவியத்தின் தலைவனாக 'அடலேறு' படைக்கப்பட்டிருக்கின்றான். தன்னேரில்லாத் தலைவனாகவே காணப்படுகிறான். காவியத்தின் பெரும்பகுதி காதல் வயப்பட்ட ஒரு குணாதிசயப் படைப்பாகவே அடலேறு காணப்படுகிறான். ஆடல் அழகி மாங்கனியைப் பார்த்து, அடலேறு அடைந்த நிலையினை,

செழுங்கொடியைக் கண்வாங்கி மனத்துட் போட்டு
சீரணிக்கமுடியாமல் நின்றான் ஆங்கே!

என்று எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன்.

அடலேறுவின் காதல்

மாங்கனி வந்து அவையில் ஆடற்கலை நிகழ்த்திவிட்டுச் செல்கிறாள். அப்படிச் செல்பவளின் பின்னாலே போகிறான் அடலேறு. மாங்கனி சென்று மறைகிறாள்; ஆனாலும் அவள் சென்ற இடத்தையே பார்த்துப் பார்த்து ஏக்கம் கொண்டவனாக, அவளது பாதத்தின் தடயத்தைப் பார்த்து மகிழ்பவனாகக் காணப்படுகிறான் அடலேறு:

போனவளின் பின்னாலே மெல்லப் போனான்!
புதுமனதின் முதல் கூச்சம் இழுக்கக் கண்டு
சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப்பார்த்தான்
தென்றலது போனதற்குச் சுவடு ஏது?
கைத்திறத்தால் தரை தடவிப் பார்த்து அன்னாள்
கால்பட்ட இடத்தில் இளஞ் சூடு கண்டான்!

என்று அடலேறுவின் காதல் செயல்பாட்டினை அழகுபட எடுத்துரைக்கிறார் கவிஞர்.

பித்துமனம் நிலையழியப் பெருமூச் சோடு
பேரரசைத் தோற்கடித்த வாளைப் பார்த்தான்!
குத்திடுவேல் வாளெல்லாம் களத்திலேதான்;
கோதையர்பால் துரும்பேதான்

என்று தன்னுடைய வாள்வீரத்தையும் தோள்வீரத்தையும் காதல் போர்க்களத்தில் தோற்றுவிடுவனவாகப் பேசுவதைக் காண்கிறோம்.

விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு
வெளியிருக்கும் நினைவின்றி, வாய் வடித்து
மொழிபிறக்கும் தொடர்பின்றிக் காதல் ஒன்றே
மூண்டிருக்கும் உருவானான் அமைச்சன் மைந்தன்!

என்று காதல்வயப்பட்டவனின் நிலையினைப் பேசுகிறார் கவிஞர்.

மரம்பழாத
பழந்தின்னும் நினைவான அடலேறங்கே
பசியாற முடியாமல் சோலை புக்கான்!
மரத்தோடு மரமாக நின்றான்; தந்தை
வலுவோடு அழைத்திட்ட குரலுங்களோன்;
சிரத்தூடு மலர்பட்டுச் 'சில்' லென்றேறி
சிலையாக்க, மூச்சின்றி நின்றான் மைந்தன்!

என்று, தன் சிந்தனையில் மாங்கனியைத் தவிர, மற்ற செயல்பாடுகளையெல்லாம் மறந்தவனாகக் காட்சியளிக்கிறான்.

கோபமும் பண்பும்

நள்ளிரவு நேரத்தில் மாங்கனியைச் சந்தித்துத் தனது காதலை வெளிப்படுத்த நினைத்துச் செல்கிறான். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத மாங்கனி அவனைக் கோபத்துடன் திட்டி விடுகிறாள். அடலேறு அப்போதும் அவளிடம் கோபம் கொள்ளாமல், மன்னிப்புக் கேட்கும் ஒரு மாண்பாளனாகக் காணப்படுகிறான்.

மாங்கனிக்குத் தன் மேல் கோபம் வரவழைத்துவிட்டேனே என்று ஏக்கத்துடன் தன்னுடைய படுக்கை அறைக்குள் சென்ற செயலினை,

பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற்போலப்
படுக்கையில் அடலேறு வந்து வீழ்ந்தான்

என்று அடலேறுவின் நிலை பேசப்பட்டுள்ளது.

காதலியின் மூலமாகவே காதலனின் பண்பு நலன்கள் பற்றிப் பேசவைப்பதில் கவியரசு கண்ணதாசன் கைதேர்ந்தவர்.

ஆணழகன்! சிங்காரன்! அவனியெல்லாம்
அடக்கிவைத்த மாவீரன்! அறிவுத்தோட்டம்!
தேன்பொழியும் கருணைமனம்! வடகோ டன்னத்
திரண்டிருக்கும் உயர்தோளன்! அழியாச் செல்வம்
மானமிகும் மறக்குலத்தான் என்றாள்!

என்று ஒரு தமிழ் மன்னனின் பெருமைகளைப் பேசுவதைப் போல அடலேறுவின் பண்பு நலன்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

அடங்காத பொலிகாளை உருவம் போலும்
அடலேறு செல்கின்றான் தலைமை தாங்கி

என்று வீரம் செறிந்த ஒரு காவியத் தலைவனாகக் காணப்படுகிறான். மேலும், பெண்களைக் கொடுமைப்படுத்தும் தன் நாட்டு வீரர்களைக் கண்டிப்பவனாகவும் மாங்கனியைக் காணாதவனாக அழுது துடித்துப் புலம்புபவனாகவும் அடலேறு விளங்குகிறான்.

ஒளியிழந்த வானத்தின் மேனி போல
தூக்கத்தில் நடப்பது போலவும் -நடந்து செல்கிறான்

மாங்கனியைக் காணாத அடலேறுவின் நிலையினைக் கவியரசு இவ்வாறு பேசுகிறார். இறுதிவரை, காதலுக்காகவே வாழ்ந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்பவனாகவே காவியத்தில் அடலேறு படைக்கப்பட்டிருக்கிறான்.

மாங்கனி

தன்னேரில்லாத தலைவன் போலவே இளமையும், அழகும் நாணும் பொற்பும் பெற்ற தலைவி காவிய நாயகி மாங்கனி. ஆடல், பாடல், அழகு சிறந்த கலை மடந்தை.

மின்வெட்டுக் கண்கட்ட மேவினாற்போல்
மென்பட்டுப் பூங்குழலி பூமிதொட்டுப்
பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்து வந்தாள்.

என்று மாங்கனியைக் கவிஞர் அறிமுகம் செய்கிறார்.

மாங்கனியின் அழகு

கவியரசரின் கற்பனையில் பிறந்த பரத்தையர் குலப் பெண்தான் மாங்கனி. உயர்ந்த ஒழுக்கம் கொண்ட, ஆடல் அழகு வாய்ந்த பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.

கொலைவாளுக்கு உறைபோல விழிவாளுக்கு இமை
சிலையோடும் சமமாக விளையாடும் புருவம்
சிறுவானப் பிறைமீது அலைமோதும் அழகு

என்று சேரமன்னனின் அவைக்களப் புலவன் மூலமாக மாங்கனியின் அழகு பேசப்படுகிறது.

விரிக்காத தோகைமயில்! வண்டுவந்து
மடக்காத வெள்ளைமலர்! நிலவு கண்டு
சிரிக்காத அல்லிமுகம்! செகத்தில் யாரும்
தீண்டாத இளமை நலம்; பருவஞானம்!

என்று சேரமன்னன் மாங்கனியைப் பற்றியும் அவளது இளமை அழகையும் பற்றிப் பேசுவதாகக் காணமுடிகிறது.

இவ்வாறு அனைவராலும் மாங்கனியின் அழகு நலன்கள் பேசப்படுவதைக் காணலாம்.

தாயின் வற்புறுத்தலும் மகளின் மறுப்பும்

மாங்கனி தன்னைப்போலவே நடனமாதாக இருந்துவிடக் கூடாது என்பதால், தன்குலத்து ஆடவன் ஒருவனை மணக்க வற்புறுத்துகிறாள் அவள் தாய். ஆனால், தனக்குப் பிடிக்காத ஒருவனை எப்படி மணப்பது என்று மாங்கனி தன் தாயைப் பார்த்துக் கேட்கிறாள்.

கற்சிலையோ அம்மா நான்; கயவன் அந்தக்
காமுகனுக் கென் நெஞ்சத்தைத் தத்தம் செய்ய?
பொற்கிளியை வானரத்தின் மடியில் போடப்
பொருந்தியதோ உன்னுள்ளம் போதும் போதும்

என்று, தான் விரும்பாத ஆடவனை வற்புறுத்தி மணக்கச் செய்யும் போக்கினைக் கண்டிப்பதை, மாங்கனி மூலம் வெளிப்படுத்துகிறார் கண்ணதாசன்.

காதலும் கண்டிப்பும்

தன்மேல் காதல் கொண்ட அடலேறு, இரவில் தனியாக இருக்கும் தன்னிடம் வந்து காதலைத் தெரிவிக்க வரும் நேரத்தில், அவனைப் பார்த்து

திறந்திருந்த வீட்டிற்குள் ஓசையின்றித்
திருடனைப்போல் நுழைந்தீரே! தென்னர்தானா?
மானத்தை இக் கோதை மறவாள்! போம்!போம்!

என்று, உள்மனத்தில் அவனைக் காதலித்தாலும், திட்டிப் பழித்துப் பேசி அனுப்பிவிடுபவளாகக் காணப்படுகிறாள்.

நள்ளிரவு ! தாசிமனை! இளம்பெண்தூங்கும்
நறு மலர்ப் பஞ்சணையருகோர் காளைவந்து
மெல்லமுகந் தொடுவதுதான் உங்கள் ஏட்டில்
வீரர்கள் பெண்கேட்க வரும் செய்தியா?

என்று, தான் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டுப் பெண் கேட்கவே வந்தேன் என்று சொன்ன அடலேறுவைப் பார்த்துக் கோபப்படுகிறாள். "கள்ளமனத்தோடு எம்குலமக்கள் வாழ்ந்தது பழையகாலம் இப்போதில்லை என்பதை மறந்துவிட்டீர்களா?" என்று தன் குடும்ப, குலத்தொழிலின் இழிநிலையை உடைத் தெறிபவளாகக் காணப்படுகிறாள் மாங்கனி. அதே நேரத்தில் அடலேறு நடந்து கொண்ட பெருந்தன்மையினை நினைத்து அவன் மீது காதல் கொள்பவளாகவும் இருக்கிறாள்.

போராட்டமும் முடிவும்

மலைமேனி எனும் கொடூரன் தன்னை மானபங்கம் செய்ய முயற்சி செய்த போது, அவனை எதிர்த்து, போராடி, வீழ்த்தித் தப்பித்து ஓடிவரும் பெண்ணாகக் காட்சியளிக்கிறாள். பெண்குலமே காணாத துன்பத்தைக் காதலுக்காகப் படுபவளாக மாங்கனி படைக்கப்பட்டிருக்கிறாள். தன் காதலன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் என்பதை அறிந்த மாங்கனி, தனிமைக்குள் உடல்வேக நிற்கிறாள். தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேகமாக ஓடி மறையும் துன்பப் பாத்திரப்படைப்பாக இறுதியில் படைக்கப்பட்டிருக்கிறாள். இவ்வாறு ஆட்டத்தில் தொடங்கி அமைதியில் முடியும் மாங்கனியின் கதை, இணையில்லாச் சேரநாட்டுக் காதல் கதை என்பதை நினைவுறுத்துகின்றது.

இல்வாழ்க்கை நெறி

இல்வாழ்க்கைக்குரிய நெறிகளுள் கற்பின் சிறப்பினையும், காதலின் உயர்வினையும் எடுத்துரைக்கிறார் கண்ணதாசன்.

காதல்

மனித வாழ்வில் தோன்றும் உணர்வுகளில் காதல் உணர்வு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. அழகினால் கவர்ச்சியினால் தொடங்கும் காதலானது உள்ளத்தால் வலுவடைகிறது. காதல் உள்ளத்தைப் பொறுத்து அமைகிறது. காதல் இல்லாமல் இவ்வுலகத்தில் இன்பம் நிலவாது. ஆண்-பெண் படைப்பின் தீர்வே காதலாகிறது என்பதைத் தமது கவிதை வரிகளில் நிரூபித்துக் காட்டியவர் கவியரசர் கண்ணதாசன்.

காதலின் உயர்வு

'காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்' என்றும், 'காதல் போயின் சாதல்' என்றும் பாரதியார் காதலின் உயர்வை வலியுறுத்திப் பாடினார். 'காதல் அடைதல் உயிரியற்கை' எனப் பாவேந்தர் பாரதிதாசனாரும் பாடினார். இவர்களைப் பின்பற்றியே ஆலங்குடி சோமுவும் "காதல் என்பது தேன்கூடு அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு” எனத் திரைப்படப் பாடலில் வெளிப்படுத்தினார்.

மாங்கனியில் காதல் உணர்வு

தாம் படைத்த மாங்கனி குறுங்காவியம் முழுவதிலும் காதலின் வெளிப்பாடுகளைப் பல நிலைகளில் உணர்த்தியுள்ளார், கண்ணதாசன்.

தலையிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க
வழியிருக்குஞ் சாலைதனில், ஆனால் காதல்
குலையிருக்கும் நெஞ்சத்தின் பாரமொன்றும்
குறையா தென்று! அரற்றினான் கொற்றவீரன்

என்று, மாங்கனியின் கண் சுழற்சியால் அகப்பட்ட அடலேறுவின் காதல் நிலையினைப் பேசுகிறார் கவிஞர். காதல் வளர்ந்து, தனிமையில் முதன்முதலில் சந்திக்க முயல்கின்றனர்.

'மாங்கனி ' என்றான் வீரன்; மாங்கனி காதல் மீறித்
'தாங்குவீர்' என்றாள்! தாங்க, தளிர்க்கொடி சுற்றிக்
கொண்டாள்,
'நீங்கிடேன்' என்றான் மெள்ள

என்று காதலில் அகப்பட்டவர்களின் சந்திப்புப் பற்றிப் பேசுகிறார் கவிஞர் கண்ணதாசன். மேலும், காதல் வெள்ளத்தில் சிக்கிச் சிதறுண்டு தத்தளித்த அடலேறுவின் மனத்தை,

பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற்போலப்
படுக்கையில் அடலேறு வந்து வீழ்ந்தான்
சிரத்தூடு மலர்பட்டுச் 'சில்' லென்றேறி
சிலையாக மூச்சின்றி நின்றான் மைந்தன்!

என்று காதல் வயப்பட்ட மனத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.

காதலில் பிரிவு

காதலர்கள் இருவரும் பேச ஆரம்பித்துவிட்டால், நேரம் ஆனதைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். அதே நேரத்தில் பிரிய வேண்டிய கட்டாயமான பகல் நேரம் அரும்புகிறது. பிரிய மனமில்லாதவர்களாய் இருக்கின்றனர்.

அடுத்தார் குடித்தார் அகன்றுவிட மனமின்றி
அடுத்தார் குடித்தார் அல்லும் மெல அகன்று
விடியும் வரைக்கும் விலகவிலை, தங்களிரு
மெய்யும் துயில விலை!

என்று மாங்கனி - அடலேறு பிரிவின் துன்பத்தைப் பற்றிப் பேசுகிறது காவியம்.

மாங்கனியை விட்டு இறுதியாகப் பிரியப் போகும் அடலேறுவின் நிலையைப் பற்றிப் பேச நினைத்த கவிஞர்,

பேச்சினை முடிக்குமுன்னே
பிறிதொரு முத்தம் வைத்துப்
பெருஞ்சுவை எடுத்துக் கொண்டான்

என்று, 'இனி இதுபோல் சுகம் பெறுதல் முடியாது' என்பதை இக்கவிதை வரிகளில் நமக்கு முன்னதாகவே உணர்த்துகிறார். இவ்வாறு, கவிஞர் கண்ணதாசன் மாங்கனி காவியம் முழுவதிலும் காதல் உணர்வை மிகவும் சிறப்பாகக் கவிதைப் படுத்தியிருக்கிறார்.

கற்பு

மனித வாழ்வில் தோன்றும் உணர்வுகளில் காதல் உணர்வும் குறிப்பிடத்தக்கது. இரு மனங்களுக்கிடையே வேர்விட்டு, கிளைவிட்டு, பூத்துக்குலுங்கிப் பரிபூரண இல்லற வாழ்வைத் தேடி அழைத்துச் செல்லும் அறப்பயணம். அந்த மாண்பமைந்த இல்லற வாழ்விற்குக் 'கற்பே' இருவரும் போற்றிப் பாதுகாக்கும் அணிகலனாகும். இந்த அருங்குணத்தோடு ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வில் இனிதே புகுந்தால் இன்பம் நல்கும்.

மாளிகை செல்வம் வாகன சுகங்கள்
மற்றவை கூடினும் மனையறம் இன்றேல்
பெண்ணின் பிறப்பே பேதமையாகும்

என்று பெண்ணிற்கும்,

ஆயிரம் கல்வி அறிவெனத் தேறினும்
ஆடவன் வாழ்வும் அன்புடை மனைவி
இல்லாதாயின் இல்லா தாகும்

என ஆடவர்க்கும் இல்லற வாழ்வின் மேன்மையைப் போற்றித் தமது பாடல்களில் போதித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

மாங்கனி காவியத்திலும் 'கற்பு' பற்றிய சிந்தனைகளைப் பல இடங்களில் பரவ விதைத்திருக்கிறார்.

மண்ணான தாசிகுலம் பிறப்பாலன்றி
மடிதொடர்ந்து வரும் என்று நினைக்கலாமோ?

என்று, தனக்குப் பிடிக்காத ஒருவனை மணக்க வற்புறுத்திய தாயின் வற்புறுத்தலை எதிர்த்துப் பேசுகிறாள் மாங்கனி.

மாங்கனியின் கற்பு

'தாசிகுலம்' என்பது தொடர்ந்து அனுபவித்துவரும் கொடுமையாக இல்லாமல், மாற்றிக் காட்டுவோம் என்று போராடத் துடிக்கும் ஒரு பெண்ணின் மனவேதனையில், கற்பொழுக்கத்துடன் மாங்கனியைப் படைக்க நினைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். மாங்கனியின் மீது காதல் கொண்ட அடலேறு நள்ளிரவில் வீடு தேடி வருகிறான். அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத மாங்கனி,

தீங்கு நினை வுற்றீரோ அமைச்சர் பிள்ளை,
தேவடியாள் குலந்தான்நான்; குணத்தில் அல்ல!

என்று பேசுவதன்மூலம், கற்பின் சிந்தனையை மாங்கனியின் கோபத்திலும் அதனைப் பற்றிச் சிந்திக்கச் செய்கிறார் கவிஞர்.

தாசிமனை என்று நினைத்து, எந்த நேரத்திலும் சென்று பேசலாம் என்று வருவது வீரர்களுக்கு அழகா? என்று அடலேறுவைப் பார்த்துக் கோபமாகக் கேட்கிறாள் மாங்கனி.

கள்ளமனம் எம்குலத்தில் பழைய சொத்து
காளையதைக் கொண்டுவரல் நன்றேயல்ல!

என்று, தான் பெண் கேட்கவே வந்தேன் என்று சொன்ன அடலேறுவைப் பார்த்துப் பேசுபவளாகவும் மாங்கனி உருவாக்கப்பட்டிருக்கிறாள்.

அதே நேரத்தில், அமைச்சர் மகன் படம் எடுக்கும் நாகம் போல் வந்திருந்து தன்னைக் கெடுத்துவிட்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்? நீதி கிடைத்திருக்கும். ஆனால், அழிந்துவிடும் கற்பினை யார் தருவார்? என்ற சிந்தனை வரிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் கற்பின் மேன்மையை உணர்ந்தவர்கள் என்பதையும், பெண்மையைப் போற்றுபவர்கள் என்பதையும் கவிஞரின் கவிதைகள் மூலம் நம்மால் உணர முடிகிறது. மோகூர் நாட்டின் மீது போர் தொடுத்துச் சென்ற அடலேறுவும் மாங்கனியும், அந்நகரின் எல்லையில் தனித்தனியே கூடாரம் அமைத்துத் தங்குகின்றனர். நள்ளிரவில் மாங்கனியும் அடலேறுவும் கொள்ளைப் பெருமயக்கத்தில் குடமதுவைக் கிண்ணத்தில் கொட்டிக் குடிப்பதுபோல, பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். பொழுது விடிகிறது. இதனைப் பற்றிச் சொல்கின்ற கவிதை வரிகளில்,

அடுத்தார் குடித்தார் அல்லும் மெல அகன்று
விடியும் வரைக்கும் விலகவிலை தங்களிரு
மெய்யும் துயிலவிலை! ஆனாலும் அவ்விரவு
களங்கப் படவுமிலை! கட்டழகர் தென்னரன்றோ !

என்று காதலிருவரும் கற்புடன் இருந்தனர் என்பதைக் கவிஞர் அழகாக எடுத்தியம்புவதைக் காணலாம். மாங்கனியும் அடலேறும் மகிழ்ந்து பிரிகின்றனர். அந்தப் பிரிவை,

அடைந்த நன் மார்பை விட்டுக்
கள்ளியின் நடையில் அந்தக்
களங்கமில் கன்னி சென்றாள்!

என்று மாங்கனியின் கற்பின் சிறப்புப் பேசப்படுகிறது.

கற்பின் கனல்

சேரர் படை மோகூரை வளைத்து விடுகிற சூழலில், கட்டுப்பாடற்ற சில சேர வீரர்கள் கண்டவரைக் கைதொட்டு இழுத்து, அக்கிரமச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்பொழுது, பாண்டிய நாட்டுப் பெண்கள் சிலர் அந்த வீரர்கள் சிலரை வெட்டுகின்றனர். இதனைப் பற்றிச் சொல்ல நினைத்து, கவியரசர்,

தட்டுப் பாடானாலும் கற்பை விற்கச்
சம்மதியார் நற்குலத்திற் பிறந்த மக்கள்!

என்று பாண்டிய நாட்டுப் பெண்களின் கற்பின் சிறப்பினைக் குறிப்பிடுகிறார்.

சேரர் படை பாண்டியனின் மோகூர் எல்லையில் தங்குகிறது. அந்தப் படைகளின் எண்ணிக்கையைப் பற்றி உளவறிய வருகின்றான் பழையனின் படைத்தலைவன் மலைமேனி என்பவன். அப்பொழுது, ஆங்கிருந்த மாங்கனி மற்றும் பிற மகளிரைப் பார்த்தவுடன் அட்டூழியங்களைச் செய்கிறான். பல பெண்கள் மயங்கி வீழ்கின்றனர். மாங்கனியைத் தொட்டு இழுக்க வந்த மலைமேனியின் தலையில் ஒரு பலகையால் அடித்து அவனைச் செயல் இழக்கச் செய்கிறாள்.

சறுக்காத பாதத்தாள் உயிரே யன்றித்
தடங்கற்பைப் பலிகொள்ள இசையா ளானாள்

என்று மாங்கனியின் கற்புத்திறம் கவிஞரால் பேசப்படுகிறது.

கற்பின் செல்வி

மலைமேனியை வீழ்த்திவிட்டுப் போராடிப் பிறகு தப்பித்துச் செல்கிறாள் மாங்கனி. போராடி ஓடும்போது பள்ளமொன்றில் விழுந்து விடுகின்றாள். நெற்றி பிளந்து போகுமளவிற்குக் காயமுறுகிறாள். ஆனாலும் கற்பை இழக்காதவளாகப் பெருமிதம் கொள்கிறாள். இதனை,

தாசி மகள் என்றாலும் கற்புக் காக்கும்
தமிழ்மகள் சேரமகள் மூர்ச்சையாக

என்று கவிஞர் தமிழ்ப் பெண்களின் கற்பின் மேன்மையை உயர்வாகச் சுட்டுகிறார்.

மாங்கனியையும் மற்றும் நான்கு பெண்களையும் மலைமேனி ஆட்கள் சிறையிலிட்டுள்ளனர். நினைவு திரும்பிய மாங்கனி, மற்ற நால்வரையும் பார்க்கிறாள்.

பெண்ணமுத நால்வரையுங் கண்டாள்; வாயிற்
பேச்சின்றி முகம்பார்த்தாள் கற்பின் செல்வி

என்று பேச்சிழந்த நிலையிலும் தன்னைச் சார்ந்தவர்களைப் பார்த்து ஆறுதல்படும் மாங்கனியாகப் படைத்திருப்பதை அறியமுடிகிறது.

மலைமேனி எனும் மிருகத்திடமிருந்து மீட்டுத் தளிவேலன் என்னும் சேரநாட்டு வீரனிடம் அகப்படுகிறாள் மாங்கனி. தளிவேலனும் மாங்கனியை வைத்துப் பொன்னைப் பெற்றுவிட விரும்பி, 'சூரபதன்' என்பவனிடம் விற்று விடுகிறான். கொலைகாரச் சூரபதன், 'என்ன கொடுமை செய்வானோ?' என்று மாங்கனியும் ஏங்கி இருக்கிறாள்.

இதனை வெளிப்படுத்த விரும்பிய கவியரசு கண்ணதாசன்,

விலைமாது விலையானாள்; வேங்கைவாயில்
கலைமானாய் அடைபட்டாள்; கற்பும் இந்நாள்;

என்று, மாங்கனியின் பாத்திரப் படைப்பைப் பேச நினைக்கும் போதெல்லாம், கற்பின் திறத்தைப் பற்றிப் பேசுவதைக் காணலாம். இவ்வாறு மாங்கனியில் மகளிரின் கற்பு பற்றிய சிந்தனைகளைக் கவியரசு கண்ணதாசன் உரக்க வெளிப்படுத்திச் செல்வதைக் காணமுடிகிறது.

காப்பியச் சிறப்பு

மாங்கனியில் பல சிறப்பு வாய்ந்த உவமைகள் கையாளப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கமும் காணப்படுகின்றது. தமிழ்மொழியின் சிறப்புக் கூறுகளும் கூறப்பட்டுள்ளன. இவை காப்பியத்தின் சிறப்பினை எடுத்துரைக்கின்றன.

உவமைகள்

உவமை எனப்படுவது கவிஞன் தான் கூறக் கருதிய பொருளைத் தக்க ஒப்புமை கொண்டு உணரச் செய்யக் கையாளும் உத்தியாகும். உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன் உயர்ந்தவனாகின்றான் என்பதைப்போல உயர்ந்த உவமைகள் சிறந்த படைப்புகளுக்குக் காரணமாகிறது.

மாங்கனி காவியம் முழுவதிலும் 108 உவமைகளைக் கையாண்டுள்ளார். ஒரு பொருளின் தன்மையைப் பறைசாற்றவும், ஆடவர், பெண்டிரின் அழகினைப் பற்றி விளக்கிடவும், கதை மாந்தர் சிலரின் இன்ப, துன்பங்களை வெளிப்படுத்தவும், இயற்கை எழிலை வெளிக் கொணரவும் என உவமைகள் மாங்கனியில் மிளிர்கின்றன.

காற்றுக்கு முருங்கை மரம் ஆடல்போலும்
கடலுக்குள் இயற்கைமடி அசைத்தல் போலும்
நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும்
நல்லோர்தம் அவைக்கண்ணே நடனமிட்டாள்

என மாங்கனியின் நடனச் சிறப்பினை உவமைகள் மூலம் விளக்குகிறார் கவியரசு கண்ணதாசன். விரலுக்குச் செங்காந்தளும், அவளது வடிவ அழகிற்குப் பொன்கட்டிச் சிலையும், சிரிப்புக்கு முல்லைப்பூவும் உவமையாக, பெண்கள் நடந்து செல்வதைப் பசுக்கூட்டங்கள் நடப்பது போல, என உவமைகளை நிரப்பி மாங்கனியைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

ஆடவரைப் பற்றிக் குறிப்பிடும் போது,
நடையினிலே ஆடவர் சிம்மம் போலும்

என்றும், உறுதிவாய்ந்த உடம்பிற்கு 'மலை'யை உவமையாகவும், மலைமேனி வீரரெல்லாம் திரண்டு வந்து என்றும் மாங்கனியில் பயன்படுத்தியிருப்பது புலனாகிறது.

இழிவான செயல்களைச் செய்பவர்களை நாய்க்கு ஒப்பிட்டுப் பேசுவதைக் காணலாம்.

தெருவிலுனை நாய்போல் இழுக்கச் செய்வேன் என்று பெண்களை அவமானப் படுத்தும் சில வீரர்களைச் சாடுகிறார். போர்க்காலங்களில் நடனமாடுவதற்கும், பாட்டுப் பாடுவதற்கும் மங்கையை அழைத்துவரும் வீரனுக்குப் பறவையை உவமைப்படுத்தி, அப்படிப்பட்ட பெண்கள் வேண்டாம் என்று சொல்வது போல,

நடையிலே வாத்துப் போலும்,
நயக்குரல் காகம் போலும்

எனும் கவிதை வரிகளில் உவமைகளைப் பயன்படுத்தியிருப்பதை அறியலாம்.

அடலேறும் மாங்கனியும் ஒன்றிப் போய் காதல் மொழி பேசி மகிழ்கின்றனர். இதனை

மறுவொன்றும் இல்லாத தந்தப் பேழை
வைரத்துப் புதைந்துள்ள தன்மை போலும்

என்று உவமையின் மூலம் ஒருவரோடு ஒருவர் கொஞ்சி மகிழும் தன்மையை விளக்குகிறார் கவிஞர். மாங்கனியைப் பிரிந்து வந்த ஏக்கத்திலேயே அடலேறு தன் அறையில் உள்ள கட்டிலின் மீது விழுகிறான். இது

பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற்போலப்
படுக்கையிலே அடலேறு வீழ்ந்தான்

என்று உவமிக்கப்பட்டுள்ளது.

கொலைகாரக் கொடு மனதுடையவனான பாதகன் மலைமேனி மங்கையரை அடையச் செல்கின்ற தன்மை 'புறாப்பிடிக்கப் போவான் போலவும்' என்று உவமிக்கப்படுகிறது.

மாங்கனியின் நடன அழகில் மயங்கி மனத்தைப் பறிகொடுத்து நிற்கிறான் அடலேறு. இந்நிலை,'அப்பொழுதே பிறந்தவன் போல் விழித்தான்' என்று உவமிக்கப்பட்டுள்ளது. இதுபோல, காப்பியம் முழுமையிலும் கற்பிற்கு, கலைக்கு, அழகுக்கு என உவமைகளின் அணிவகுப்பு நடத்தி மானுடச் சாதியின் மகத்துவத்தைக் காப்பிய நிலையில் அமைத்துள்ளார் கவியரசு கண்ணதாசன்.

இலக்கியத் தாக்கம்

பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ளத் துணையாக இருப்பவை காப்பியங்களும் சங்கப் பாடல்களுமாகும். குறிப்பாக, அகப்பொருள் நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய நூல்கள் குறிப்பிட்டுச் சொல்லும் காதல் பற்றிய செய்திகளைக் கவிஞர் தம்முடைய கவிதை வரிகளில் பல இடங்களில் எடுத்தாண்டிருப்பதை அறிய முடிகிறது. அதுபோலவே காப்பியங்களின் தாக்கமும் மாங்கனியில் இடம்பெற்றிருப்பதை அறியலாம்.

சிலம்பும் மேகலையும்

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இணைந்த வடிவமாக மாங்கனியை அமைத்துள்ளார் கவிஞர். சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியைப் போலவே இளமை, அழகு, நாண், பொற்பு பெற்ற தலைவியாகவும், ஆடல், பாடல் அழகு சிறந்த கலைமடந்தையாகவும் மாங்கனி காணப்படுகிறாள். மணிமேகலையின் துறவறத்தைக் காட்ட நினைத்த கவிஞர் கண்ணதாசன். பொன்னரசியைப் படைத்து மகிழ்வுறுகிறார். மனித வாழ்வு பிறப்பில் தொடங்கி உலக இன்பங்களில் உழன்று, இறப்பில் முடியும் பெரும்பயணமாகி விடுகிறது. சிலர் விரும்பியதைப் பெறுகின்றனர். சிலர் விரும்பியது நிறைவேறாது மாய்ந்து விடுகின்றனர். சிலருக்குத் தோல்வியான வாழ்வு அமைந்தாலும் அதைத் தம் அருங்குணத்தால் வெற்றியாக்குகின்றனர். மாங்கனியில் வரும் பொன்னரசியின் வாழ்வு அவ்வாறு அமைந்த வாழ்வாகின்றது. காதலில் வளர்ந்து, கற்பினில் சிறந்து, பிரிவினில் தளர்ந்து பொறுமையில் நிறைகிறாள். காதலிலே தோல்வியைத் தழுவினாலும் கற்பினில் வழுவாது; இல்லற வாழ்வை இழந்தாலும் துறவற வாழ்வில் தன்னைப் புனிதப் படுத்திக் கொண்டவளாகப் பொன்னரசி காணப்படுகிறாள்,

மூவேந்தரின் நாடுகளை இணைத்துப் பேசிய சிலப்பதிகாரம் போல மாங்கனியிலும் பேசப்பட்டுள்ளது.

நாம் மூவர் ஆனாலும் ஒருமனத்தார்
நாட்டின் வேறானாலும் ஓர் இனத்தார்
தேன்பாய்ந்த செந்தமிழே சேர் குணத்தார்
திசையினில் உலகிற்குத் தென் புலத்தார்

என்று சேரமன்னனின் மூலம் கவிஞர் தமிழ் நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார்.

மணிமேகலை புத்த மதத்தைப் போற்றிடும் காப்பியம். மாங்கனி காவியத்திலும் புத்த மதத்திற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. காவிய முடிவில் பொன்னரசி புத்த மதத்தைத் தழுவியவளாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகை

அதுபோலவே குறுந்தொகைப் பாடல் ஒன்றினையும் காதலர்களின் பிணைப்பைப் பற்றிச் சொல்வதற்குக் கவிஞர் கண்ணதாசன் எடுத்தாண்டுள்ளார்.

குக்கூ வென்றது கோழியதனெதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்
தோள் நோய் காதலர்ப்பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே

(குறுந்தொகை: 157).

எனும் குறுந்தொகைப் பாடலை அடியொற்றியே,

விடிந்தது கண்ணே என்றான் அடலேறு
விழித்தவள் காதில் அச்சொல்
ஒடிந்தது வீணை என்று ஒலித்தது.

என்பதாக அமைத்துள்ளார் கண்ணதாசன். இவ்வாறாகக் கவிஞர் கண்ணதாசன் தமது மாங்கனி காவியத்தில், தாம் கற்ற பழந்தமிழ் இலக்கியங்களின் பகுதியைப் பல இடங்களில் எடுத்தாண்டு, சுவைபடவும் பொருள்படவும் படைத்துள்ளார் என்பது புலனாகிறது.

தமிழ் மொழியின் பெருமை

இந்தியா விடுதலை பெற்றதும் மொழி, இனம், விடுதலையடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்க் கவிஞர்கள், தமிழர்களிடையே மொழியுணர்வைத் தோற்றுவிக்க, அதனைத் தமது கவிதைகளில் படைத்தனர்.

செந்தமிழ்த் தேன் மொழியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க்கொடியாள்

எனத் திரை இசைப் பாடல்களிலும் தமிழ்மொழியின் சிறப்பினைப் புகழ்ந்த கவியரசு கண்ணதாசன் தாம் படைத்த காவியங்களிலும் கொஞ்சி விளையாடும் கன்னித் தமிழைக் காணமுடிகிறது. 20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முத்தமிழுக்கும் தொண்டாற்றிப் புகழ் பெற்றவர் இவர்.

தென்சந்தப் பாப்பாடி நடனம் ஆடு,
தேன்மொழியே, தமிழ்நாட்டார் மகிழ்வு காண!

எனத் தேன்போன்ற தாய்மொழி பேசுபவளாக மாங்கனியை அழைத்து அறிமுகம் செய்வதைக் காணலாம்.

இன்பத் தமிழ்

மாங்கனி, இரவு நேரத்தில் இனிமையான ஒரு கீதத்தைப் பாடுகிறாள். அந்தக் கீதத்தின் இனிமையைச் சொல்ல நினைத்த கவியரசர் கண்ணதாசன்,

என்னசுகம்! ஆகா என்ன சுகம் - மாறா
இளமைத் தமிழ்ச் சிரிப்பில் என்னசுகம்?..
தென்னமுதாம் தமிழ் இன்னமுதை நினைத்தால்
என்ன சுகம் ஆகா....

என்று தமிழ்மொழியால் பாடப்படும் பாடலின் இன்பத்தை உயர்த்திப் பேசுவதை அறியலாம்.

தமிழின் சிறப்பு

மோகூரின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டின் எல்லையில் படைகள் தங்கின. அன்று இரவில் மாங்கனியும் அடலேறுவும் தனிமையில் சந்தித்துப் பேசுகின்றனர்.

தமிழரே! உயிரே! உள்ளந்
தாங்கொணாக் காதலோடு
உமதுருத் தேடி வந்தேன்

என்று மாங்கனியைக் காணாதவனாக அடலேறு, தன்னுடைய ஏக்கத்தினை வெளிப்படுத்திய பேச்சிலும் கூடத் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.

தமிழ்ப் பெண்கள் வீரம்

பாண்டிய மன்னனான பழையன் மகள் தென்னரசி. தென்னரசியை அறிமுகப்படுத்தும் கவிஞர்

தென்னரசி கலைச் செல்வி, தமிழர்கல்வி
தேர்ந்தமகள்; வீரத்தில் சிறுத்தையன்னாள்!

என்று தமிழ்ப்பெண்கள் வீரம் செறிந்தவர்கள் என்று எடுத்துக்காட்டியிருப்பது புலப்படுகின்றது.

தாசிமகள் என்றாலும் கற்புக்காக்கும்
தமிழ்மகள் சேரமகள்

என்று மாங்கனி பல இடங்களில் பேசப்பட்டிருக்கிறாள். தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் கருத்தமைந்த வடிவங்களில் மாங்கனி காவியத்தை நமக்கெல்லாம் சொந்தமாக்கியுள்ளார் என்பதை உணரமுடிகிறது.

தொகுப்புரை

கவியரசு கண்ணதாசன் பல வரலாற்றுக், குறிப்புகளைக் கொண்டு, 1954-இல் திருச்சிச் சிறைச்சாலையில் படைத்த ஒரு குறுங்காவியம் மாங்கனி. பல தலை முறைகளுக்கு முன்னால் இருந்த மக்களின் உள்ளங்களில் பதிந்த வரலாற்று நிகழ்வுகளைக் கவிஞர் தம்முடைய படைப்புக்கு ஆதாரமாக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சி காதலின் மாண்பினை விளக்கும் கதையாகிவிட்டதால் சிறந்து விளங்குகின்றது. கவிதைகள் வெறும் பொழுது போக்கிற்காக அமையாமல் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவே என்று மாங்கனி உணர்த்துகிறது. பழந்தமிழ்க் காவியங்களில் உள்ள கதாபாத்திரங்களை இன்றைய சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு படைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். தமிழ்மொழியின் மேன்மையைச் சொல்லல், அழகியல் உணர்வுகளின் வெளிப்பாடு, காதல், கற்பு இவற்றைப் பற்றிய உயர்வு. நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு என மாங்கனி பல பரிமாணங்களைக் கொண்டதாகப் புனையப்பட்டுள்ளது.

கேள்வி பதில்கள்

1. மாங்கனி காவியம் தோன்றிய சூழல் யாது?

விடை : 1954-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லக்குடிப் போராட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டுத் திருச்சிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது எழுதப்பட்ட காவியமே மாங்கனி.

2. மாங்கனி காவியக் கருவிற்குச் சான்றாகக் கவியரசு கண்ணதாசன் குறிப்பிடுவது யாது?

விடை : மோரிய மன்னன் அறுகையோடு மோகூர்க் குறுநில மன்னன் பழையன் என்பான் பகைமை பாராட்டியதாகவும் அறுகைக்கு உதவியாகச் சேரன் செங்குட்டுவன் பழையன் மீது போர் தொடுத்ததாகவும் காணப்பட்ட ஒரு குறிப்பை வைத்து இக்காவியம் புனைந்ததாகக் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.

3. கவியரசு கண்ணதாசனின் பிற படைப்புகள் பற்றிக் குறிப்பிடுக.

விடை : கண்ணதாசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்) மனம்போல் வாழ்வு, வனவாசம், இலக்கியத்தில் காதல், அர்த்தமுள்ள இந்துமதம், தைப்பாவை, ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசுகாவியம் எனப் பல நூல்களையும் திரைப்படப் பாடல்கள் பலவும் இயற்றியுள்ளார்.

4. மாங்கனியின் காதலன் யார்?

விடை : சேரன் செங்குட்டுவனின் அமைச்சனான அழும்பில்வேள் மகனான 'அடலேறு' என்பவன்தான் மாங்கனியின் காதலன்.

5. மாங்கனியின் அழகினைக் கண்ணதாசன் எவ்வாறு அறிமுகம் செய்கிறார்?

விடை : மின்வெட்டுக் கண்கட்ட மேவினால் போல்
மென்பட்டுப் பூங்குழலி பூமிதொட்டுப்
பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்துவந்தாள்;

என்றும், அவையிலிருந்தவர்களின் பார்வையும் அறிவும் மாங்கனியின் மேலே விழுந்தது என்றும் கண்ணதாசன் அறிமுகப்படுத்துகிறார்.

6. மாங்கனியைக் கண்ட அடலேறுவின் நிலையைக் கவியரசு கண்ணதாசன் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

விடை : மாங்கனியின் ஆடல், பாடல், அழகில் மயங்கிய அடலேறு, ஒளியில்லாத விழிகளைக் கொண்டவனாகவும் நெஞ்சம் மட்டும் இங்கிருக்க, நினைவெல்லாம் வெளியிலுமாகச் சம்பந்தமில்லாத பேச்சுகளைப் பேசுபவனாகவும், காதல் ஒன்றே உள்ளத்தில் மூண்டிருக்கும் வாலிபனாகவும் அடலேறு காணப்பட்டான் என்று குறிப்பிடுகிறார்.

7. மாங்கனியின் ஆடல் அழகினைக் கவிஞர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

விடை :

காற்றுக்குள் முருங்கைமரம் ஆடல் போலும் கடலுக்குள்
இயற்கை மடி அசைத்தல் போலும் நாற்றுக்குள்
இளங்காற்று நடித்தல் போலும் நல்லோர்தம் அவைக்
கண்ணே நடனமிட்டாள்

என்று மாங்கனியின் ஆடல் அழகு பேசப்படுகிறது.

8. காதல் பற்றிய கவிஞர் கண்ணதாசனின் கருத்துகளுக்குச் சான்று தருக.

விடை : மாங்கனியின் கண் சுழற்சியில் அகப்பட்ட தலைவன். காதல் சுமையை இறக்கி வைக்க இயலாமல் நெஞ்சம் சோர்ந்ததாக,

தலையிருக்கும் பாரத்தை இறக்கிவைக்க
வழியிருக்கும் சாலைதனில்; ஆனால் காதல்
குலையிருக்கும் நெஞ்சத்தின் பாரமொன்றும்
குறையாதென்று அரற்றினான் கொற்ற வீரன்
என்றும்,
மாங்கனி என்றான் வீரன்; மாங்கனி காதல் மீறித்
'தாங்குவீர்' என்றாள்! தாங்க, தளிர்க்கொடி சுற்றிக்
கொண்டாள்'

என்றும் காதல் பற்றிய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

9. தமிழ்ப் பெண்களின் கற்பின் சிறப்பினை மாங்கனி மூலமாக எவ்வாறு கவிஞர் போற்றியுள்ளார்?

விடை : நள்ளிரவு நேரத்தில் மாங்கனியைத் தேடி வந்த அடலேறுவைப் பார்த்துக் கோபமுடன்,
தீங்கு நினைவுற்றீரோ அமைச்சர் பிள்ளை,
தேவடியாள் குலந்தான் நான்; குணத்தில் அல்ல,

என்று, மாங்கனியின் மூலம் வெளிப்படுத்துகிறார். அதேபோல, மாங்கனியும் அடலேறுவும் இரவு முழுவதுமாகக் கொஞ்சிப் பேசி மகிழ்கின்றனர். இதனை,

விடியும் வரைக்கும் விலகவில்லை ; தங்களிரு
மெய்யும் துயிலவில்லை! ஆனாலும் அவ்விரவு
களங்கப்படவுமில்லை .

என்று கற்பின் உறுதிப் பாட்டினைக் கவிஞர் வெளிப்படுத்துவதை உணர முடிகின்றது.

10. கவியரசு கண்ணதாசனின் மொழிப் பற்றுக்குச் சான்று தருக.

விடை :

தென் சந்தப் பாப்பாடி நடனம் ஆடு,
தேன்மொழியே, தமிழ்நாட்டார் மகிழ்வுகாண!

எனத் தேன்போன்ற தமிழ்மொழியைப் பேசுபவளாக மாங்கனியை நமக்கு அறிமுகம் செய்கிறார் கவியரசர்.

11. மாங்கனியில் பயிலும் உவமைகளுள் சிலவற்றை எடுத்துக் காட்டுக.

விடை : மாங்கனி காவியத்தில் உவமைகளுக்குப் பஞ்சமில்லை. ஆண், பெண் அழகு பல இடங்களில் உவமைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.

பெண்களின் விரலுக்குச் செங்காந்தளும், அவளது வடிவ அழகிற்குப் பொன்கட்டிச் சிலையும், சிரிப்புக்கு முல்லைப் பூவும் உவமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆடவரின் அழகினைப் பற்றி, 'நடையிலே ஆடவர் சிம்மம் போலும்' என்பது போன்ற உவமைகளும் கையாளப்பட்டுள்ளன.

12. மாங்கனியில் காணலாகும் காப்பியத் தாக்கத்தினைப் புலப்படுத்துக.

விடை : சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இணைந்த வடிவமாக மாங்கனி அமைக்கப்பட்டிருக்கின்றது. சிலம்பில் வரும் மாதவியைப் போல, - மாங்கனியும், மணிமேகலையில் வரும் காவியத்தலைவி மணிமேகலை போலப் பொன்னரசியும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு முக்கியப் பாத்திரப் படைப்புகளின் மூலம் காப்பிய நிகழ்வுகளை நமக்கு அறிவுறுத்துகிறார் கவியரசு கண்ணதாசன். அதேபோல, சங்க இலக்கிய அகப் பாடல்களில் வரும் காதல் பற்றிய நிகழ்வுகளும் மாங்கனியில் பேசப்படுகின்றன என்பதையும் அறியமுடிகிறது.

ஆசிரியர் பெயர் : கோ. கிருஷ்ணன்

ஆதாரம் - தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

Filed under:
3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top