பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாரதிதாசனின் வீரத்தாய்

காப்பியங்களும் சங்க இலக்கியமும் பாரதிதாசனின் 'வீரத்தாய்' படித்து பயன்பெறவும்.

இப்பகுதி என்ன சொல்கிறது?

  • புரட்சிக்கவிஞன் பாரதிதாசனின் வீரத்தாய் எனும் காவியம் ஒரு பெண்ணின் பெருமையைப் பற்றி எடுத்துச் சொல்கிறது.
  • படைபலம், பணபலம் ஒன்றும் இல்லாமலேயே தன்தோள் வலிமை ஒன்றினாலேயே சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காணும் பெண் 'விஜயராணி'யைப் பற்றிப் பேசுகிறது.
  • நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசன், மதுவிற்கு அடிமையாகிக் கிடப்பதையும், அதனால் நாட்டை இழக்கும் சூழ்நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
  • சூழ்ச்சி வலையால் நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் படைத்தலைவனைத் தன் அறிவு முதிர்ச்சியாலும் மனவுறுதியாலும் வீரமகள் விஜயராணி வெற்றி பெறுவதைச் சொல்கிறது.
  • கிறுக்கனாக வளர இருந்த மகனைக் கீர்த்திமிக்க கலைகளில் தேறவைத்துக் கிழவராக மாறுவேடம் பூண்டுக் காலம் பார்த்துக் கடமையை முடிக்கும் வீரத்தாயினைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • அரசியலில் ஓர் ஆண் செய்த தவற்றினை ஒரு பெண் அகற்றிக் காட்டுவதையும் காணமுடிகிறது.
  • பெண் என்றால் இப்படியல்லவா இருத்தல் வேண்டும் எனப் போற்றும்படி கல்வி, கேள்வி, வீரத்தில் சிறந்து விளங்கி, சூழ்ச்சியாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாத்தும், மகனுக்கு அந்நாட்டுரிமையைப் பெற்றுத் தந்தும் கடமையை நிறைவு செய்யும் பெண்மணியாக விஜயராணியைப் படைத்துப் பெண்ணின் பெருமைகளைப் பற்றியெல்லாம் எடுத்துரைக்கிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதைப் படித்து, இதில் உள்ள கவிதை வரிகளைச் சிந்திப்பீர்களானால். கீழ்க்காணும் சமூக நலன்களையும் மாற்றங்களையும் பெறுவீர்கள்.

• 'வீரத்தாய்' காவிய நாயகன் மதுவிற்கு மயங்கிக் கிடந்ததால், நாட்டையே இழக்கும் ஆபத்து உண்டாயிற்று. இதிலிருந்து மது அருந்துவதனால் வரும் கேட்டினை அறியலாம்.

• சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் காணலாகும் வீர மகளிரை நினைத்துப்பார்க்குமாறு செய்கிறது இக்கதை என்பதை உணரலாம்.

• எதிரியை வீழ்த்துவதற்கு நேரம், காலம் பார்த்தல் அவசியம் என்பதை 'வீரத்தாய்' மூலம் அறியலாம்.

• பெண்ணின் கடமைகளைப் பட்டியல் இடலாம்.

• ஆண் துணையின்றிப் பெண்களே தலைமை தாங்கி நாட்டை வழிநடத்திட முடியும் என்பதனை உறுதியாக நம்பலாம்.

பெண்கள் கல்வி கற்றலின் அவசியத்தை இந்நூல்வலியுறுத்துவதை அறியலாம்.

வீரக்கலைகளிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் காணலாம்.

பொதுவுடைமை - குடியரசு தத்துவத்தினைத் தெரிந்து கொள்ளலாம்.

முன்னுரை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி 1938-ல் வெளிவந்திருக்கின்றது. அக்கவிதைத் தொகுதியின் மூலம் மூன்று காவியங்களைப் படைத்துள்ளார் என்பதை அறியலாம். புரட்சிக் கவிஞர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பெற்றது, கவிஞரின் காவியங்களுள் முதலாவதான 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' எனும் காவியமாகும். அதனைத் தொடர்ந்து புரட்சிக்கவி, வீரத்தாய் எனும் காவியங்கள். தமிழ்ப் பெண்கள் வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் காட்ட நினைத்துத் தான் வீரத்தாயைப் படைத்தார். ஒன்பது காட்சிகளால் படைக்கப்பட்ட 'வீரத்தாய்' காவியம் ஓர் ஓரங்கக் கவிதை நாடக வகையைச் சார்ந்தது எனலாம்.

உறவினர் அனைவரையும் இழந்த பிறகும் தனக்கிருந்த ஒரே மகனைப் போருக்குச் செல்லுமாறு அனுப்பியவள் புறநானூற்றுத் தாய். சீவகனின் தாய் அனாதையாய் இடுகாட்டில் மயில் பொறியில் இறங்குகிறாள்; தவக்கோலம் பூண்டு மறைந்து வசித்து வருகிறாள். அவள் மகன் முனிவர் ஒருவரிடம் மாமன்னர்க்குரியதான பல கலைகளைப் பயில்கிறான். அவனே காப்பியத் தலைவனாகச் சீவக சிந்தாமணியில் படைக்கப்படுகிறான். அதேபோல, கரிகாலன் பிறப்பில் அனாதை. அவனை, அவன் மாமன் இரும்பிடர்த்தலை அரசனாக மாற்றினான். அது போலவே, 'வீரத்தாய்' காவியத்தில் மகனை வீரனாக்குவது அவனது தாயே. இக்காவியத்தில் ஆண்மாந்தர்களை விடப் பெண் மாந்தர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தை அகற்றிட, அப்பெண்களின் பார்வையைப் பறித்த சமுதாயத்திற்குப் பகுத்தறிவை ஊட்டிட நினைத்து உருவானதுதான் 'வீரத்தாய்' காவியம். மணிபுரி, மன்னன் இல்லாமல் பாழாய்க்கிடக்கும் நிலையைப் பயன்படுத்தி சேனாதிபதி காங்கேயனும் மந்திரியும் ஒன்றுசேர்ந்து சூழ்ச்சியால் அரசாட்சியைப் பெற்றிட, இளவரசியையும் சுதர்மனையும் ஊர்ப்புறத்தில் விட்டுவிட்டுச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், இளவரசி யாருக்கும் தெரியாமல் தன் மகனுக்கும் தெரியாமல் அவனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுத்து வளர்க்கிறாள். தகுந்த நேரம் பார்த்துச் சூழ்ச்சியை முறியடித்து வெற்றியும் பெறுகிறாள். இளவரசன் சுதர்மன் மணிபுரி அரசின் முடியைச் சூடும் சமயத்தில், சுதர்மனே, 'இந்த நாடு எல்லார்க்கும் உடைமை, எல்லார்க்கும் உரிமை' என முரசறைவித்துக் குடியரசு ஆட்சிமுறைக்கு நாட்டை மாற்றுகிறான் என்பதைப் பற்றிச் சொல்வது' தான் 'வீரத்தாய்' காவியம்.

வீரத்தாய்

'வீரத்தாய்' எனும் காவியம் ஓரங்கக் கவிதை நாடகமாகக் காணப்படுகிறது. ஒன்பது காட்சிகள் கொண்டு கதை தழுவிய கவிதையாகக் காணப்படுகிறது. இலக்கண வேலியைத் தாண்டி, காப்பிய நெறியில் புதுமையைக் கொண்டுள்ள காவியம். தமிழ்ச் சமுதாயத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பெண் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த காட்சி, புரட்சிக் கவிஞனுக்கு வேதனை அளித்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுக்கப்பட்டு வந்த உரிமை கூடப் பிற்காலத்தில் இல்லாமல் இருந்ததைப் பார்த்துக் கோபமடைந்த கவிஞர், தமிழ்ச் சமுதாய வாழ்விற்கு மகளிரே தலைமையேற்கும் வரலாற்றை மீட்டமைக்க, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தி, 'வீரத்தாய்' எனும் காவியத்தலைவி மூலம் அதனை நிறைவேறச் செய்கிறார்.

வீரத்தாய் கவிதை நாடகத்தில் வீரமும் உறுதியும் அமைந்தவளாகவும், உலகத்தினர் மெச்சும் வகையில் எல்லாக் கலையினையும் கற்றவளாகவும் ஒரு தலைவியைப் படைத்திட வேண்டும் என்று கவிஞர் தம் இதயத்தில் பொங்கிப் புறப்பட்ட பெண்ணின் பெருமையே வீரத்தாயாக' உருக்கொண்டது. அடிப்படையான பெண்மை நலச் சிந்தனை 'வீரத்தாய்' கவிதைக் காடு முழுவதும் பூத்துக்குலுங்குவதைக் காணலாம். பிள்ளைகளைப் பெற்றதோடு கடன் முடிந்து விட்டது என்றில்லாமல், உற்ற கடமைகள் பல உண்டு என்று உணர்த்தி, உயர்கலைகள் பல கற்பித்து ஒழுக்க வீரனாய்ச் சுதர்மனை உருவாக்கிப் பிறநாட்டு வேந்தர்களும் போற்றும் அளவிற்கு உயர்த்திப் பெருமை சேர்த்திட 'வீரத்தாய்' என்று பட்டம் சூட்டி மகிழ்வித்திருக்கிறார் கவிஞர்.

சீவக சிந்தாமணியின் சீவகன் தாயை மனத்துள் கொண்டே கவிஞர் 'வீரத்தாயை' வரைந்துள்ளார் போலத் தோன்றுவதைக் காணலாம். இக்காவிய நாடகம் - இன்பியல் நாடகமா துன்பியல் நாடகமா என்பதைவிட, எழுச்சியியல் நாடகமாக நினைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு பட்ட மாந்தர்களைப் படைத்து, கருத்தின் வேகத்தைக் குறைக்க விரும்பாமல், கவிஞர் கதையைவிடக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அறிந்து மகிழலாம்.

ஆசிரியர் - பாரதிதாசன்

1891 ஏப்ரல் 29 ஆம் நாள் புதுச்சேரி கனகசபைக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் பாரதிதாசன். பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். 1895 இல் ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் ஆரம்பக்கல்வி பயின்றார். 1906 இல் வித்வான் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 1907 இல் புதுச்சேரி மகாவித்வான்ஆ.பெரியசாமி ஐயாவிடமும் பங்காரு பத்தரிடமும் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1908 இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். பாரதியாரின் வேண்டுகோளுக்கிணங்க, 'எங்கெங்குக் காணினும் சக்தியடா' எனும் பாடலைப் பாடிப் பாரதியின் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தாம் கொண்ட மதிப்பின் காரணமாகப் 'பாரதிதாசன்' எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார். சமூக விடுதலைக்காகவே ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் படைத்தார். 1946 இல் அறிஞர் அண்ணா தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு ரூபாய் 25,000/- நிதி அளிக்கப் பெற்றது. 1954 இல் புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1962 இல் இராஜாஜியால் சிறப்பிக்கப் பெற்றார். 1964 ஏப்ரல் 21 ஆம் நாள் இயற்கை எய்தினார். பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தாலும் அவரது பாடல்கள் தமிழரின் வாழ்விற்கும் மேன்மைக்கும் அடிப்படையாக அமைந்தன. இவ்வாறு தேசியத்திலிருந்து தமிழ்த் தேசியமாகி, சர்வ தேசிய எல்லைகளை நோக்கி விரிகிற படைப்புகளாகப் பாரதிதாசன் படைப்புகள் அமைந்துள்ளன.

காப்பிய நோக்கம்

பாரதியின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்வை உண்டு பண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டியது எனலாம். கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தைப் பகுத்தறிவுப் பாதையில் கொண்டு செல்லவும், சமூகத்தில் பலவீனர்கள் என்பதை மாற்றிடவும் தான் வீரத்தாயைப் படைத்தார். அதனை உள்நோக்கமாகக் கொண்டுதான் பெண் மாந்தர்களைத் தலைமைப் பாத்திரமாக ஏற்க வைத்துள்ளார். அதிலும் ஆண் மாந்தர்களை விஞ்சுகின்ற அளவுக்குப் பெண் மாந்தர்களைப் படைத்துள்ளார். எத்தனை வஞ்சம் இடைப்பட்டாலும் அத்தனையும் தவிடுபொடியாக்கிக் காட்ட, ஒரு பெண்ணால் முடியும் என்பதை நிலை நிறுத்துகிறார்.

ஆண் துணையின்றி, சுற்றுச்சார்பு ஏதுமின்றித் தோள்வலிமை ஒன்றாலேயே ஒரு பெண் சாதித்து வெற்றி பெறுவாள் என்பதை நிலை நாட்டும் நோக்கத்தில் தான் காப்பியத் தொடக்கத்திலேயே 'விஜய ராணி' யை வீர தீரக் கலைகளிலும் அறிவு முதிர்ச்சியிலும் திறம் பட்டவள் என்று அறிமுகம் செய்கிறார். குடும்ப அமைப்புக்குக் கடைக்காலாக நின்று சமூக வாழ்விற்கு நெடுத்துணையாக விளங்குகின்ற பெண்கள், கல்வியில்லாமல், உரிமையில்லாமல், முன்னேற வழியில்லாமல் கடைக்கோடிப் பள்ளத்தில் தள்ளப்பட்டதை மாற்றிடவும், தமிழ்ச் சமூக வாழ்விற்கு ஏற்றம் தந்திடவும் சமூக வாழ்விற்கு மகளிர் தான் தலைமையேற்றிட வேண்டும் என நினைத்த பாவேந்தர் பாரதிதாசன்.

"படியாத பெண்ணினால் தீமை - என்ன
பயன் விளைப்பாள் அந்த ஊமை" என்றும்
"நெடுந்தமிழ் நாடெனும் செல்வி - நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி"

என்றும் பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

பொதுவுடைமைச் சமுதாயத்தை விரும்பிய கவிஞர் பாரதிதாசன், 'வீரத்தாய்' காவியத்தை முடிக்கும் போது பொதுவுடைமைச் சமுதாய நோக்கத்தோடு, மன்னராட்சி ஒழிந்த மக்களாட்சிக் குரலோடு முடித்திருப்பதை அறிய முடிகிறது.

கதைச்சுருக்கம்

மணிபுரி மாளிகை மன்னன் மது அருந்தித் தன்னை மறந்து கிடக்கிறான். இதற்குக் காரணம் சேனாதிபதி காங்கேயன். மன்னன் மரித்தால், அரசி விஜயராணியை அரண்மனையை விட்டுத் துரத்தி விடலாம், அரசிளங்குமரன் சுதர்மனைக் காட்டில் அலையவைத்துப் படிப்பறிவு, போர்ப் பயிற்சி இல்லாமல் செய்து விடலாம்' என்பது சேனாதிபதி திட்டம். திட்டத்தை அறிந்த விஜயராணி, தானே அரண்மனையிலிருந்து மறைந்து விடுகிறாள். சேனாதிபதி, சுதர்மனைக் காட்டில் ஒரு கிழவனிடம் வளர்க்கச் சொல்லி ஒப்படைக்கிறான். தன் கையாள் காளிமுத்துவின் மூலம் அரச குமாரனைப் படிப்பறிவற்ற மூடனாக வளர்க்க வேண்டும் என்று சொல்லுகிறான்.

சேனாதிபதியின் கற்பனை

சேனாதிபதியும் அமைச்சனும் தாங்களே அரசனாகவும், தலைமையமைச்சனாகவும் கற்பனையில் மகிழ்கின்றனர். 'நமது விஜயராணி, வீரம் செறிந்தவள், நடுவில் புகுந்து தொல்லை கொடுத்தால்..? என்று அமைச்சன் கேட்க, 'அவள் என்ன சாதாரணப் பெண்தானே! எதற்குப் பயப்பட வேண்டும்?' என்று கேலி பேசுகிறான் சேனாதிபதி. 'பெண்களை நான் எளியவர்களாய் நினைக்கவில்லை' என்கிறான் அமைச்சன். சேனாதிபதி சிரித்தவாறே, ஆடைக்கும் அணிகலனுக்கும் ஆசைப்படுபவர்கள்; அஞ்சுவதும் நாணுவதும் ஆடவர்களைக் கொஞ்சி மகிழ்வதும் மகளிர் இயல்பு. மனித சமூகத்தில் வலிவற்ற பகுதி அவர்கள்.' என்றான். 'வலுவற்ற பகுதிதானே வீரம் மிகுந்த ஆண்களைப் படைக்கிறது. மகளிர் கூட்டம் தான் சக்தி பெற்றது. மேலும் எட்டு வயதுடைய அரசகுமாரன் வளர்ந்ததும் 'ஆட்சியைக் கொடு' என்று வருவானே?' அவனை நடைப்பிணம் போல் வளர்க்க வகை செய்துள்ளேன். யாரும் அறியாத ரகசியமாய்! மிகவும் சாமர்த்திய சாலிதான். உன் திட்டம் என்ன என்று கேட்டான் மந்திரி.

பொக்கிஷம்

'பொக்கிஷத்தைத் திறக்க வேண்டும் - பொக்கிஷச் சாவியை அரசி எடுத்துப் போய்விட்டாள். அதைத் திறப்பவர்களுக்குப் பரிசளிப்பதாகத் தண்டோரா போடச் செய்ய வேண்டும். கஜானா கைக்கு வந்தால், பணத்தால் பதவியைப் பெற்று விடலாம்' என்கிறான் சேனாதிபதி காங்கேயன்.

காட்டில் சுதர்மன்

சுதர்மன் காட்டில் கிழவர் ஒருவர் மேற்பார்வையில் வளர்கிறான். சேனாதிபதி, அரசகுமாரனுக்குப் போர்ப் பயிற்சி எதுவும் கற்றுத் தரக் கூடாது என்று சொல்லியும், அந்தக்கிழவர் மறைவிடத்தில் அவனுக்கு வாள் பயிற்சி தினமும் அளித்து வருகிறார். தன்னை இவ்வளவு அக்கறையுடன் வளர்க்கும். அந்தக் கிழவர் யார்?' என்பதையறிய சுதர்மன் முயல்கிறான். 'என்னையறிய முயற்சி செய்யாதே, உன் பகைவன் என் பகைவன். இது மட்டும் தெரிந்து கொள்' என்கிறார் முதியவர்.

பொக்கிஷம் திறத்தல்

ஒரு நாள் காலை வாள் பயிற்சி நடந்து முடிந்த நேரம், தண்டோரா போடும் சத்தம் கேட்கிறது. 'பொக்கிஷம் திறக்க வாரீர், பரிசு பெற்றுச் செல்வீர்'. கிழவர் யோசிக்கிறார். அரண்மனைக்குள் செல்ல நல்ல சமயம் என்று நினைத்து அரண்மனை சென்றார். கிழவர் பொக்கிஷ அறைக்குள் புகுந்தார். நாலைந்து முயற்சிகளுக்குப் பிறகு ஒரு சாவியினால் கஜானாவைத் திறந்தார். அமைச்சன் ஆச்சரியமடைந்தான். பரிசுப்பணத்தை அளிக்கும்படி வேண்டினார் கிழவர். இவருடைய சாமாத்தியத்தை அறிந்த சேனாதிபதி, 'இங்கே அரண்மனையிலேயே தங்கியிருங்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படும்' என்றான்.

சேனாதிபதியின் ஆசை

மணிபுரி மகுடம் தரிக்க சேனாதிபதி நாள் குறித்தான், வெளிநாட்டரசர்களுக்கு எல்லாம் ஓலை அனுப்பினான். வெள்ளி, வள்ளி, கொன்றை, குன்றநாடு என்று பல நாட்டு மன்னர்கள் வருகை தருகிறார்கள். பொக்கிஷத்தைத் திறந்த கிழவரை அரண்மனையில் காணவில்லை. சேனாதிபதி காங்கேயனுக்கு ஒரு சந்தேகம். அமைச்சனுடன் அரச குமாரனைப் பார்க்கக் காட்டுக்குப் போகிறான். அங்கே அந்த முதியவர், அரச குமாரனுக்கு வில், வாள் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். எழுந்த கோபத்தில் சேனாதிபதி, தன் உடை வாளை உருவி, அரச குமாரனை வெட்ட வாளை ஓங்குகிறான். கிழவரின் வாள் அதைத் தடுக்கிறது. சேனாதிபதி வாள் கீழே விழுகிறது. உயிர் மேல் ஆசை கொண்டு அதிர்ச்சியும், பீதியும் தாங்காமல் அரண்மனை திரும்புகிறான்.

வேஷம் கலைகிறது

பலநாட்டு மன்னர்களும் சேனாதிபதியை 'அரசகுமாரன் எங்கே? அவனை முதலில் கொண்டு வந்து காட்டு. பிறகு 'நீ முடி சூடலாம்' என்கின்றனர். 'இதோ, அரசகுமாரன்!'. ஒலிவந்த திசையைப் பார்க்கின்றனர் அனைவரும். அந்த முதியவருடன் கையில் வாளுடன் வீரம் செறிய வந்து நிற்கிறான் சுதர்மன். சபையுள் நுழைந்த கிழவர் - தம் தாடி மீசை எல்லாவற்றையும் உரித்தெடுத்துப் போட்டார் - பார்த்தவர்கள் பிரமித்தனர். 'நான்தான் ராணி விஜயராணி, சேனாதிபதியும் அமைச்சனும் கனவு கண்டபடி நான் இறக்கவில்லை. என் பிள்ளையை இந்த நாட்டு அரச குமாரனை வீரமகனாக வளர்த்திருக்கிறேன்' என்று கர்ஜனை புரிகிறாள். சுதர்மன், சேனாபதியை மன்னித்து, தன் நாட்டைக் குடியரசாக அறிவிக்கிறான்.

கதை மாந்தர்

குறைவான பாத்திரப்படைப்புகளைக் கொண்டே இக்காவியத்தை முடித்திருப்பதனால், இதனை ஓரங்கக் கவிதை நாடகமாகக் கருதலாம். வீரத்தாய் விஜயராணி, சேனாபதி காங்கேயன் ஆகிய இருவரின் பங்களிப்பே காவியத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

விஜயராணி

ஆண்மாந்தரை எளிதாக விஞ்சும் பெண்மாந்தரான 'வீரத்தாய்' எனும் பெயரிலேயே காப்பியத்தை அமைத்துள்ளார்.

படியாத பெண்ணினால் தீமை - என்ன
பயன் விளைப்பாள் அந்த ஊமை - என்று

படியாத பெண்களால் இந்தச் சமுதாயத்திற்கு என்ன பயன் வந்துவிடப் போகிறது என்று இரக்கமும், அதே நேரத்தில் கோபமும் கொண்டவராகப் பெண்ணினத்தை நேசிக்கிறார் பாரதிதாசன். அந்த எண்ணத்திலேயே,

"அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்!
தரையினர் மெச்சும் சர்வ கலையினள்"

என்று வீரத்தாயை முதலில் அறிமுகம் செய்கிறார்.

பெண்கள் மிகவும் சாதாரணமானவர்கள் என்னும் தவறான கணிப்பைத் தவிடுபொடியாக்கிச் சேனாபதியின் ஆசைக் கனவுகளையே சிதறடித்து விடுகிறாள் அரசி. வெற்றிக்கான விதையைச் சரியாகப் பாதுகாப்பதில் வீரத்தாய் விழிப்பாகக் காணப்படுகிறாள். கிழவராக வேடம் பூண்டு, கல்வியறிவில்லா மூடனாக வளர இருந்த சுதர்மனைக் கல்வி, கேள்வி, வீர தீரக் கலைகளில் தேர்ச்சி பெறச் செய்து ஒழுக்கமிக்க வீரனாக வளர்க்கிறாள் வீரத்தாய். பெண் என்றால் இப்படியன்றோ பிறந்திட வேண்டும் என்று பல நாட்டு மன்னர்களும் போற்றும் விதத்தில் வீரத்தாயைப் படைத்துள்ளார் கவிஞர். பெண்மையைப் புல்லாக மதித்துப் புன்மை செய்யப் புறப்பட்ட சேனாபதி பெண்மையின் வலிமை மிகுந்த இயல்பினைக் கண்டு, இடிந்து, தலைகுனிந்து நிற்பதைக் காணமுடிகிறது. சுற்றுச் சார்பு ஏதுமின்றித் தன் தோள் வலி ஒன்றையே நம்பிக் காலம் பார்த்திருந்து வெற்றி சூடும் பெண்மணியாக வீரத்தாய் படைக்கப் பட்டிருக்கிறாள். எத்தனை வஞ்சகம் இடைப்பட்டாலும் அத்தனையும் இடையொடிந்து போக, வாள் பயிற்சி பெற்ற வஞ்சியாகவும் வயிரம் பாய்ந்த நெஞ்சளாய்த் தான் பெற்ற பிள்ளைக்குத் தக்க கலைகளைப் பயிற்றுவிப்பவளாகவும் காணப்படுகிறாள்.

'அறிவு பெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்!

என்றும்,

தக்க நல்லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ ! என்றும் மந்திரியின் மூலமாக வீரத்தாயின் பெருமைகள் பேசப்படுகின்றன.

'நிற்கையிலே நீ நிமிர்ந்து நில் குன்றத்தைப் போல
நெளியாதே லாவகத்தில் தேர்ச்சி கொள்'

எனத் தன்மகனைத் தேற்றி, வீரம் செறிந்தவளாகக் காணப்படுகிறாள்.

இறுதியில் நாட்டைக் குடியரசுக்குட்படுத்தி மக்களின் வாழ்த்துக்களைப் பெறுபவளாக 'வீரத்தாய்' படைக்கப்பட்டிருக்கிறாள்.

காங்கேயன்

காப்பியங்களில் வரும் எதிர்பாத்திரப் படைப்புப் போலத் தான் காங்கேயனும் படைக்கப்பட்டுள்ளான். மணிபுரி மன்னனிடம் கூடவே இருந்து மதுப்பழக்கத்தை உண்டு பண்ணி அதிகாரத்தைப் பறித்துக் கொண்டவன் காங்கேயன். சூழ்ச்சி செய்து, சூழ்நிலையை உருவாக்கி நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டவனாகவும் காணப்படுகிறான். இத்திட்டத்திற்கு மந்திரியை உதவிக்கு அழைத்து, அவனுக்குப் பங்கு தருவதாகச் சொல்லித் தன் பக்கமாக இழுத்தவன். அதே நேரத்தில், அரசி விஜயராணியை வசப்படுத்தவும் நினைத்தவன். ஆடை, அணிகலன்களை அணிந்து கொள்வதும் வாசமலர்களைச் சூடிக் கொள்வதும் ஆடவர்களுக்குச் சேவை செய்வதுமே பெண்களின் தலையாய பணி என்று பெண்களை இழிவாகக் கருதுபவன்.

'அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே!' எனக் கேவலமாக இளவரசி விஜயராணியை நினைத்து, அழிவிற்கு ஆட்படுபவனாகக் காணப்படுகிறான். கல்வி, கலை. நல்லொழுக்கம் - இம் மூன்றிலும் தேறாதவன் ஆண்மகனே ஆனாலும் 'நடைப்பிணம்'தான் எனக் கூறி, இவ்வழியிலேயே மன்னன் மகன் சுதர்மனை வளர்க்கவும் திட்டமிடுகிறான் காங்கேயன். 'ஆவி அடைந்த பயன் ஆட்சி நான் கொள்வதப்பா' என வஞ்சனையால் நாட்டைப் பெற வகை தேடினவனாகக் காணப்படுகிறான். அரசாங்க பொக்கிஷத்தை அவசர அவசரமாகத் திறக்கச் சொல்லி, அதனை, அனுபவிக்கத் துடிக்கும் நெஞ்சினனாகக் காங்கேயன் இருக்கிறான். தானே மணிபுரி அரசனாக முடிசூடப் போவதாகச் சொல்லும் வேளையில் மணிபுரி மக்களுக்கு மகிழ்ச்சி தராத ஓர் அரசனாகக் காணப்படுகிறான்.

மன்னனையும் அரசியையும் பற்றித் தவறான இழிவான செய்தியைப் பரப்புகிறான். 'அமுதூட்டி அருமையாக வளர்த்த மன்னன் மகனுக்குக் கல்வி வரவில்லை' என்று தவறாகப் பிரச்சாரம் செய்கிறான். இவ்வாறு வஞ்சனை, பொய், ஆத்திரம், பேராசை எனும் பல்வேறு முகங்களின் ஒட்டுமொத்த உருவமாய்க் காங்கேயன் திகழ்வதை இக்காவியத்தில் காணலாம். இறுதியில் பொய்யுரைகளை நம்பாத பல நாட்டு மன்னர்களும் கண்டிக்கும் அளவிற்கு அவனது ஏமாற்று வேலை அமைந்துள்ளது.

பாரதிதாசனின் சமுதாயச் சீர்திருத்த உணர்வு

பாரதிதாசன் சிறந்த சமுதாயச் சீர்திருத்தவாதி. தமது சீர்திருத்த உணர்வுகளைக் காப்பியத்தின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீருவதற்குக் கல்வி எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதைச் சுட்டுகிறார். மேலும் பெண்ணின் பெருமையே நாட்டின் பெருமை என்றும் வலியுறுத்துகிறார்.

கல்வி

'நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்'

என வீறார்ந்து முழங்கும் பாவேந்தர், தாம் வாழ்ந்த காலத்துச் சமுதாயத்தில் காணப்பட்ட சாதிப் பிளவு, சமயப் பிரிவு, பொருளாதார ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் கொடுமைகளைக் கண்டு மனம் வெகுண்டு குருதிக் கண்ணீர் வடித்தார். இதற்கெல்லாம் காரணம் பெண்கள் கல்வி கற்காமையே என்று நினைத்தார். அதன் வெளிப்பாட்டினைத்தான் 'வீரத்தாய்' காவியத்தில் மிகவும் அற்புதமாகப் படைத்துக் காட்டுகிறார். கல்வி கற்ற பெண்ணாக வீரத்தாய் இருப்பதாலேயே அவளை எல்லாவித அடிமைத் தனத்திலிருந்தும், சூழ்ச்சியிலிருந்தும் மீள்கிற வீரப் பெண்ணாகப் படைத்துள்ளார்.

'படியாத பெண்ணினால் தீமை'
எனத் தமது மற்றொரு நூலில், படியாத பெண்ணை 'ஊமை' என்று திட்டுவதைக் காணலாம்.

கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத்
தூக்குமரம் அங்கே உண்டாம்!

என்றும்

எளிமையினால் ஒரு தமிழன் கல்விஇல்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!

என்றும் கல்வியின் அவசியத்தைத் தமது கவிதைகளில் படைத்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.

கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல், கண்டதெல்லாம் குடும்பம் என்றே பெண்கள் உலகத்தைக் காண விரும்பாத கவிஞர், வீரத்தாயை, வீரமும் உறுதியும் சர்வ கலையினையும் கற்றுக் கல்விப் பெருமையும் உடையவளாகக் காட்டுகிறார் கவிஞர். 'கல்வி இல்லாதவனை நடைப்பிணம்' என்று இளவரசன் சுதர்மனைக் குறிப்பிடும் போது கூறுவதைக் காண முடிகிறது. 'கல்வியில்லாதவனை ஆவியில்லாதவன்' என்று மந்திரி மூலமாகப் பேசும் பாவேந்தரை வீரத்தாயில் காணலாம். 'கல்வியில்லாதவன் நாட்டிலே வாழ்ந்தாலும் காட்டில் வாழ்வதற்குச் சமம்' என்பதை சுதர்மனைக் காளிமுத்து என்னும் தன்னுடைய ஆளிடத்தில் பழக்கவிடும்போது குறிப்பிடும் சேனாபதியின் பேச்சிலிருந்து அறியமுடிகிறது.

மன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ ஒன்றும் வராமல் செய்யுமாறு நினைத்த சேனாபதி காங்கேயனின் சூழ்ச்சித் திறமைகளையெல்லாம் தவிடுபொடியாக்குபவளாக 'வீரத்தாயை'க் கல்வி, கேள்விகளில் சிறந்தவளாகப் படைத்திருக்கும் பாவேந்தர் பாரதிதாசனின் உயர்ந்த எண்ணத்தை அறிய முடிகிறதல்லவா! வீரத்தாயைப் பார்த்து அறிவு பெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்' என்று மந்திரியைப் பேச வைத்துள்ளமையும் காண்கிறோமல்லவா?

'தக்க நல்லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ !' என்று கல்வி கற்ற சான்றோராக வீரத்தாயைப் போற்றுவதையும் காணமுடிகிறது. 'அரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம்' என்று நினைக்கும் தவறான சமூகச் சிந்தனைக்குச் சவுக்கடி கொடுக்க நினைத்த பாவேந்தர்,

'அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
என்னும்படி'
பெண்ணினத்தை அமைத்து,

'எல்லார்க்கும் எல்லா உரிமைகளும்; எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக!' என்று பொதுவுடைமைக் கோட்பாட்டை முழக்கமிடும் புதல்வனைப் பெற்ற வீரத்தாயினைக் காப்பியத்தின் இறுதியிலும் படைத்திருப்பது, பெண்ணின் பெருமையைப் பாடிய கவிஞர் பாரதிதாசன் என்பதைப் பறைசாற்றுகிறது.

பெண்ணின் பெருமை

தமிழ்ச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமே. பெண் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பாரதிதாசன்.

'ஆடை அணிகலன், ஆசைக்கு வாச மலர்
தேடுவதும், ஆடவர்க்குச் சேவித்து இருப்பதுவும்,
அஞ்சுவதும், நாணுவதும், ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம்
மானுடர் கூட்டத்தில் வலிவற்ற ஒரு பகுதி

என்கிற பெண்களின் இழிநிலைக்கருத்தினை மாற்றியமைத்திடவே, 'வீரத்தாய் நாடகத்தில் வீரமும் உறுதியும் சர்வகலையினையும் பயின்றவளாக வீரத்தாயைப் படைத்துள்ளார். இதன் மூலம் பாரதிதாசனின் பெண்மை நலச் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. மேலும்

அரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம் என்பாய்
புரிவரோ விஜயராணி புரிந்தவிச் செயல்கள் மற்றோர்

எனும் கவிதை வரிகளில், பெண்கள் அறிவிலாக் கூட்டம் இல்லை என்பதனை 'விஜயராணி' மூலம் முறியடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.

................ ஆடவரைப்
பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தை
துஷ்டருக்குப்
புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணி
விட்டான்",

என்று, தன் மகன் சுதர்மனைக் கொல்ல வந்த சேனாபதியைத் தனது வாளால் தடுத்துக் காப்பாற்றுபவளாகக் காணப்படும் 'வீரத்தாய்' விஜயராணி' மூலம் ஆண்மை உள்ளதாகக் கூறி இறுமாக்கும் ஆடவரைப் பெற்றெடுத்த தாய்க்குலமாயிற்றே அது; வீரமற்றதெனில் பிறந்த ஆண் குலமென்றோ பீடழியும்' எனக் குறிப்பிடுகிறார்.

"ஆவி சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக்
கோவித்த தாயினெதிர் கொல்படைதான் என் செய்யும்"

என்றும், 'ஆர் எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறி தன்னை!' எனவும் பிறநாட்டு மன்னர்கள் வாயிலாகப் பெண்ணின் பெருமையைப் பேசும்படி செய்துள்ளார் பாரதிதாசன்.

"அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
என்னும்படி அமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகு நாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம்
போகும் நாள், இன்பப் புதிய நாள்"

என்று அன்னையின் தத்துவத்தை உலகுக்குக் காட்ட வந்த பெண் படைப்பாகவே வீரத்தாயைப் படைத்துள்ளார் கவிஞர் பாரதிதாசன். தமிழர்களுக்கு என்று இருந்த வீரமரபினையும் பெண் கல்வியின் பெருமையினையும் ஒன்றாகச் சேர்த்து 'வீரத்தாய்' காவியம் நிறைவுறுகிறது.

பொதுவுடைமை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்ந்த காலம் நாடு வளமிழந்து, வறுமையில் உழன்று, உரிமை கெட்டு, அடிமையில் கிடந்து, ஏற்றத்தாழ்வான ஒரு சமுதாயமாக இருந்து கொண்டிருந்தது. உலகம் முழுவதிலும் நாடுகள் பொருளாதார அடிப்படையில் புரட்சியைத் தோற்றுவித்துப் புதிய சமுதாயத்தை அமைத்துக் கொண்டிருந்தன.

அதன் வழியிலே - பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைப்பதில் பாரதிதாசனும் பேரார்வம் காட்டினார். தொழிலாளர்களைப் போர் வீரர்களாக ஆக்கினார். இந்த உலகம் உழைப்பாளர்களுடையது, மேல் கீழ் என்று பேசும் அறியாமையைப் பொதுவுடைமையினால் தானே அகற்ற முடியும் என்று நம்பினார். இந்த மாற்றங்களையே தனது படைப்புகளில் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்குப் பங்கில்லாத மன்னராட்சியால் கொடுமைகள் ஏற்படலாம். அவர்களின் கூக்குரலுக்குப் பதில் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் 'குடியரசு' ஆட்சியைப் பிரகடனப்படுத்துகிறார் பாரதிதாசன். இதனைப் புரட்சிக்கவி, வீரத்தாய், கடல்மேல் குமிழி, குறிஞ்சித்திட்டு ஆகிய தனது படைப்புகளில் நிறைவேற்றிக் காட்டுகிறார் கவிஞர். குறிப்பாக, வீரத்தாய் காவியத்தில்,

"எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக
வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக;
வில்லார்க்கும் நல்ல நுதல் மாதர் எல்லார்க்கும்
விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!"

என்று மணிபுரியை 'ஓதும் குடியரசுக்குட்படுத்தி 'அரசியல் சட்டம் இயற்றிட வழிவகுக்கிறார் பாரதிதாசன்.

முதலாளித்துவ மோசடிக் கொள்கையால் கிடைக்கும் கூலியைக் கெஞ்சிப் பெற்றுத் 'தலைவிதி' என்று நொந்து கொண்டு தொலையாத துயரினைக் கண்ட பாரதிதாசன், தோழா! ஓடப்பனே! நீ ஒடுங்கி நில்லாதே, உதைப்பயனாகி நீ; ஓர் நொடிக்குள் ஒப்பப்பர் ஆகிடு! என்று உலக சமத்துவத்தின் குரலை உரத்து எழுப்பியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

'உழைப்போர் உதிர்ந்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலகுழைப்பவர்க் குரியதென்பதையே'

என்று தனது காவியங்களில் உழைப்போர் மேனிலையடையவும், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி முறை நிலவிடவும், பொதுவுடைமைச் சமுதாயம் பூத்துப் பொலியவுமான பாடல்களைப் படைத்துள்ளார் என்பது புலனாகின்றது.

பாரதிதாசனின் தமிழ் உணர்வு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம்.

தமிழ் மொழியில் ஈடுபாடு

தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார். காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர். மங்கை ஒருத்தி தரும் சுகமும் தமிழ்மொழிக்கு ஈடாகாது என்று பேசியவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்தார் பாவேந்தர், வீரத்தாயில் 'மலையைப் பெயர்க்கும் தோள் உடையோராக வளருங்கள், கீழ்ச் செயல்கள் விடுங்கள், வீரத்தைப் போற்றுங்கள், வீரத்தில் உயருங்கள்' என்று அனைத்துத் தமிழர்களுக்கும், குறிப்பாகப் பெண்ணினத்துக்கும் அறைகூவல் விடுப்பதைக் காணமுடிகிறது.

தமிழர்களின் விழிப்புணர்ச்சி

வீரத்தாயில்
என் நாட்டை நான் ஆள ஏற்ற கலை யுதவும்
தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்

என்று சுதர்மன் மூலமாகப் பேசுகிறார் கவிஞர். தொல்காப்பியம், திருக்குறளுக்கு மட்டும் விளக்கம் தருபவன் தமிழ் ஆசிரியன் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் சூழ்ச்சிகளுக்கு இடங்கொடாமல், தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் தமிழர்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துபவரே தமிழாசிரியர் என்று வீரத்தாயில் நிலை நிறுத்தியுள்ளார். இவ்வாறு, வீரத்தாய் காவியப் பண்பும் பாத்திரப் படைப்புகளும் தமிழே உருவானவர்களாகக் காணப்படுகின்றனர்.

தமிழனின் வீரப் பாரம்பரியம்

தமிழ்ப் பெண்களை வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் நினைவூட்டி, தமிழர்களின் வீரத்திற்குச் சான்றாகக் காணப்படுகின்ற புறநானூற்று வீரக்கதைகளை நினைவுபடுத்திடவும் வீரத்தாய் எனும் பெயரில் காவியம் படைத்தளித்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல் செய்யப் புறப்படுவெளியில்!

என்று, இளைய உள்ளங்களுள் வீரத்தை ஊட்டியவர் பாரதிதாசன். தாம் படைத்த மூன்று காப்பியங்களிலும் வீரப்பெண்களைத் தலைமைப்படுத்தியே அமைத்துள்ளார். 'சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பனின் மனைவி வஞ்சியும், புரட்சிக்கவியில் கவிஞனின் காதலி அமுதவல்லியும், வீரத்தாயில் விஜயராணியும் வீரம் செறிந்த கதைமாந்தர்களாகக் காணப்படுகின்றனர். விஜயராணியை அறிமுகம் செய்யும்போதே வீரமும் உறுதியும் அமைந்தவளாகக் காட்டுகிறார் கவிஞர். அதுபோலவே 'வீரத்தமிழன்' எனும் பாடலில் இராவணனை, மாசுபடுத்தி ஊறுபடுத்தப்பட்ட தமிழ் மறவர்களில் மூத்தவனாகக் காண்கிறார் பாரதிதாசன். தமிழனின் வீர மரபினை இராவணனைப் படைத்ததன் மூலம் போற்றிப் பெருமிதம் கொள்கிறார் கவிஞர். தமிழனின் வீரப் பாரம்பரியத்தை நினைவுபடுத்த விரும்பியே வீரத்தாய் காவியத்தில் தன் மகனைத் தாயே வீரனாக்குகின்ற வகையில் படைக்கிறார். சுதர்மனை நோக்கி வீசிய சேனாபதியின் வாளினைத் தனது வாளினால் துண்டித்துவிடும் வீர மகளாக விஜயராணி காணப்படுகிறாள்.

"பறித்தெடுத்த தாமரைப் பூம் பார்வையிலே வீரம்
பெருக்கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே"

எனும் வரிகளைப் பிற நாட்டு வேந்தர்கள் மூலம் சுதர்மனின் வீரத்தைப் பேச வைக்கிறார் கவிஞர் பாரதிதாசன். அதுபோலவே,

ஆவி சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக்
கோவித்த தாயின் எதிர் கொல் படைதான்
என் செய்யும்

என்றும் விஜயராணியின் வீரத்தைப் புலப்படுத்துகிறார். கடைசியில் புரட்சிக்கவியில் வருவது போலவே 'குடியரசு' ஓங்க, வீரமகன் அரசியல் பிரகடனம் செய்வதைக் காண முடிகிறது. இவ்வாறு தாயையும் மகனையும் வீரத்தின் விளைநிலமாக அமைத்து, கொடியவர்களிடம் இருந்து நாட்டைக் காக்கும் வீரப் பெண்ணாகவும் அதே நேரத்தில், ஒழுக்கம் மிக்க வீரப்புதல்வனைப் பெறும் வீரத்தாயாகவும் படைத்துத் தமிழரின் வீர மரபினை நிலை நிறுத்தியுள்ளார் பாவேந்தன் பாரதிதாசன்.

பா நலம்

எதுகை மோனை கவிதையின் அடிப்படைக் கூறு. பாரதிதாசன் எதுகை மோனையைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அதைப்போல, கவிதைக்கு மெருகு ஊட்டும் உவமைகளையும் பயன்படுத்தியுள்ளார். இவை காப்பியத்தின் பா நலத்தை எடுத்துரைக்கின்றன.

எதுகை மோனை

எதுகை மோனைகள் தாமாகவே வந்து கவிஞருக்குக் கை கொடுப்பதைக் காணலாம்.

கீழ்க்குறிப்பிடப்படும் பாடல்கள் எதுகை மோனைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

"ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும்,
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர்குலம்"
"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்"

எனும் பாடல்களில் எதுகை மோனை நயங்களுடன், தமது நேர்க்கூற்றாகவே தமிழ்க்கனல் கொப்பளிக்கும் பாடல்களை இயற்றியுள்ளார்.

உவமைகள்

கவிஞர்கள் தங்களுடைய உணர்வுகளைத் தெளிவாகவும் கூர்மையாகவும் வெளிப்படுத்துவதற்கு உவமைகளைக் கையாள்வார்கள். அந்தவகையில் காப்பியப் பாத்திரப் படைப்புகளின் அவலநிலை, ஆற்றல், செயல்திறம், தோற்றம், இயற்கையை வருணித்தல் ஆகியவற்றை விளக்க வீரத்தாயில் பல இடங்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார் பாரதிதாசன். இலட்சியத்தை அடைவதற்காக 'நீறுபூத்த பெருங்கனல் போல் பொறுத்திருப்பாய்' என்று சுதர்மனுக்கு விஜயராணி அறிவு புகட்டுவதைக் காண முடிகிறது.

'பிணிபோல் அன்னவன் பால் தீயொழுக்கம்' என்று சுதர்மனுக்குத் தீயொழுக்கம் பிடித்திருக்கிறது என்பதைச் சேனாபதியின் மூலம் பயன்படுத்தியிருப்பதும், "மானைத் துரத்தி வந்த வாளரி போல் வந்து குறித்தெடுத்துப் பார்க்கின்றீர்" என்று வெள்ளிநாட்டு வேந்தனின் பேச்சிலும், 'கானப்புலி போல் கடும் பகைவர் மேற்பாயும்' என்று சுதர்மனின் வீர உரையிலும் உவமைகளைப் பயன்படுத்திருப்பதைக் காணமுடிகிறது.

ஆள் நடமாட்டமே இல்லாத சிற்றூரின் நிலையை "ஆந்தை அலறும் அடவி சிற்றூர்" என்று வருணிப்பதைக் காணலாம். இவ்வாறு வீரத்தாய் காவியத்தில் உவமை, உருவகம், கற்பனை, ஓசை, சந்த நயங்களை அமைத்துச் செஞ்சொல் கவி இன்பத்தைப் பெற வைத்துள்ளார் பாரதிதாசன்.

தொகுப்புரை

தமிழ்ச் சமுதாயம் ஒரு ஆணாதிக்கச் சமுதாயமாக இருப்பதைப் பார்க்கிறார் பாரதிதாசன். பெண்களைத் தெய்வங்கள் என்று போற்றிக் கொண்டே, இன்னொரு பக்கம் இழிநிலையில் வைத்திருக்கும் காட்சியும் கவிஞரின் கண்களுக்குப் புலப்படுகிறது. இந்த விழ்ச்சியிலிருந்து பெண்மக்களைக் கரையேற்ற முயன்று இருப்பதை வீரத்தாய் கவிதைக் காவியத்தில் காண முடிகிறது. கதை மாந்தர்கள் அனைவரிலும் தலைமை சான்றவளாகப் பெண்ணே படைக்கப்பட்டுள்ளாள். மன்னன் மதுவிலே மயங்கிக் கிடக்கிறான். படைத் தலைவன், பதவியைப் பிடித்திடத் திட்டம் போடுகிறான். பக்கத்துணைக்கு அமைச்சனையும் அழைத்துக் கொள்கிறான் - பதவி ஆசைகாட்டி! சூழ்நிலையை உருவாக்கிச் சூழ்ச்சியால் நாட்டைக் கைப்பற்ற முயலும் படைத்தலைவனின் சூதினை, பின்புலம் ஏதுமின்றித் தன் தோள் வலிமை ஒன்றையே நம்பித் தகுந்த நேரமும் காலமும் பார்த்திருந்து, சமயோசித புத்தியைப் பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகிறாள் வீரத்தாய் விஜயராணி.

வெற்றிக்கான விதையைச் சரியாகப் பாதுகாப்பதில் வீரத்தாய் விழிப்பாக இருக்கிறாள். கிழவராக மாறுவேடம் பூண்டு, கெட்டு வளர வேண்டிய மகனைப் பக்குவமாக வளர்த்து, ஒழுக்கம் மிக்க வீரனாகச் சுதர்மனை வளர்க்கிறாள். பகைவனை அண்டி அவனிடம் பதவி பெற்றுப் பக்குவமான காலம் வந்ததும் பலரும் அறிய அவனது வஞ்சனைத் திரைகிழித்து வெளியே வரவழைக்கும் மனவுறுதியும் அறிவு முதிர்ச்சியும் பெற்றவளாக விளங்குகிறாள் விஜயராணி. பெண் என்றால் இப்படியல்லவா பிறந்திடல் வேண்டும்; பெண்ணுலகமே இப்படி ஆகிவிட்டால் துன்பமெல்லாம் பிறக்காதல்லவா? அதனால்தான் 'வீரத்தாய்' எனும் பட்டம் சூட்டிப் பெருமிதம் கொள்கிறார். பாவேந்தர் பாரதிதாசன். புரட்சிக்கவிஞர் தம் இதயத்தில் பொங்கிப் புறப்பட்ட பெண்ணின் பெருமையே வீரத்தாயாக உருக்கொண்டுள்ளது. ஆண் துணையேயில்லாமல் பெண்கள் அரசியலில் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நினைவூட்டுவதே இந்தக் கதையாகும்.

கேள்வி பதில்கள்

1. 'வீரத்தாய்' காவியம் உருவான ஆண்டு எது?

விடை : 1938- இல் வெளியான 'பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

2. 'வீரத்தாய்' காவியம் எடுத்துரைக்கும் கருத்து யாது?

விடை : பெண்ணின் கல்வியறிவையும், மக்களாட்சித் தத்துவத்தையும் எடுத்துக் கூறுகிறது.

3. பாரதிதாசன் இயற்றிய மூன்று கவிதைக் காவியங்களைக் குறிப்பிடுக.

விடை : சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி வீரத்தாய்

4. 'பாரதிதாசன்' என்னும் பெயர் கொண்டது எங்ஙனம்?

விடை : இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். அவர் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தான் கொண்ட மதிப்பின் காரணமாகச் 'சுப்புரத்தினம்' எனும் தன் இயற் பெயரைப் 'பாரதிதாசன்' என மாற்றிக் கொண்டார்.

5. மன்னன் மகன் சுதர்மனைச் சேனாபதி காங்கேயன் எவ்வாறு இழிவாக மதிப்பிடுகிறான்?

விடை : கல்வி, கலை, நல்லொழுக்கம் என்னும் மூன்றிலும் தேறாதவன். கல்வியில்லாதவன் ஆண் மகனேயானாலும் 'நடைப்பிணம்' தான் என்றும் குறிப்பிடுகின்றான்.

6. பெண்களைப் பற்றிச் சேனாபதியின் கருத்து யாது?

விடை : ஆடைக்கும் அணிகலன்களுக்கும் ஆசைப்படுபவர்கள்; அஞ்சி அஞ்சி நடப்பதும், நாணுவதும் ஆடவர்களைக் கொஞ்சி மகிழ்வதும் மகளிர் இயல்பு என்கிறான். 'அரிவையர் கூட்டம் எல்லாம் அறிவில்லாத கூட்டம்' என்றும் குறிப்பிடுகிறான்.

7. வீரத்தாயில் கல்வியின் சிறப்பு எவ்வாறு எடுத்துரைக்கப்படுகிறது?

விடை : கல்வியில்லாதவன் நடைப்பிணத்துக்குச் சமமானவன் என்றும் கல்வியில்லாதவனால் இந்த உலகிற்கு எந்த நன்மையும் தர இயலாது என்றும் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில், அறிவு பெற்றபடியாலே எல்லாம் பெற்றீர்! 'தக்க நல்லறிஞர் இன்றித் தரணியும் நடவாதன்றோ ! எல்லார்க்கும் கல்வி, சுகாதாரம் வாய்த்திடுக என்றும் கல்வியின் மேன்மையினைச் சொல்கிறார் பாரதிதாசன்.

8. பாரதிதாசனின் மொழிப் பற்றுக்குச் சான்று தருக.

விடை : தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் ஒளிர்கின்றன.

'தமிழ்நாடு தமிழருக்கே' எனும் கொள்கையில் தீவிரமாக இருந்தவர். என் நாட்டை நான் ஆள ஏற்ற கலையுதவும் தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர் ஆசிரியர் என்று வீரத்தாயில், தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் விழிப்புடன் இருத்தல் அவசியம் என்பதையும் பாவேந்தர் பாரதிதாசன் சுட்டிக் காட்டுகிறார்.

9. வீரத்தாயில் காணலாகும் பொதுவுடைமைக் கருத்துகளை எழுதுக,

விடை : மக்கள் அனைவரும் சமமானவர்கள். எல்லோருக்கும் எல்லாமே பொதுச் சொத்துக்கள் எனும் பொருளியல் கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர் பாரதிதாசன். இதனை வீரத்தாயில் வீரமகனான சுதர்மன் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

'எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே'

என்று மணிபுரியை ஆளும் உரிமை இனி மன்னனுக்கில்லை, அனைத்து மக்களுக்கும் தான் என்று குடியரசுக்குட்படுத்தும் அரசியல் பிரகடனத்தைக் காண முடிகிறது.

10. 'வீரத்தாய்' - கதைக் கவிதையின் பா நலத்தைப் பாராட்டுக.

விடை : இலக்கணக் கட்டுப்பாடு இல்லாமல், கதை தழுவிய கவிதை வகையைச் சார்ந்தது 'வீரத்தாய்' காவியம். ஓரங்கக் கவிதை நாடகமாகவும் அதனைக் காண முடிகிறது. எதுகை, மோனைகளைச் சரளமாகக்கொண்ட கவிதை வரிகள் வீரத்தாயில் பரவிக்கிடக்கின்றன.

ஆசிரியர் பெயர் : கோ. கிருஷ்ணன்

ஆதாரம் - தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

3.075
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top