பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / வாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை

வாணிதாசனின் 'தமிழச்சி', 'கொடிமுல்லை' என்னும் இரண்டு காவியங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பகுதி என்ன சொல்கிறது?

  • தமிழச்சி, கொடிமுல்லை என்னும் இரண்டு காவியங்களிலும் பெண்கள் முதலிடம் பெறும் பாங்கினைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. தமிழச்சி என்னும் நூல் இனவுணர்வையும், கொடிமுல்லை என்னும் பெயர் கவிஞரின் இயற்கை ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதை இப்பகுதி குறிக்கின்றது.
  • ஆங்கிலேயரின் அடக்குமுறைச் சட்டத்திற்குக் கடுமையாக உட்பட்டிருந்த காலத்தில் இனஉணர்வு, மொழியுணர்வு பற்றிப் பாடியிருப்பதை எடுத்துச் சொல்கிறது.
  • வடவர் ஆதிக்கத்திலிருந்து திராவிடத்தை மீட்பது, இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காப்பது போன்ற அரசியல், பொருளியல், சமூகவியல் சிந்தனைகளைப் பற்றிக் கவிஞர் குறிப்பிட்டிருப்பதை எடுத்துச் சொல்கிறது.
  • கற்பு என்பது வாழ்வில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது என்பதை எடுத்துரைக்கிறது.
  • கடவுள் மறுப்பு, புராண இதிகாச எதிர்ப்பு, மூடநம்பிக்கை, சாதிக் கொடுமை, கலப்பு மணத்தை ஆதரித்தல், கைம்பெண்மணம், காதல் மணம், முதியோர் கல்வி, சேரிகளைச் சீர்திருத்துதல் போன்ற பகுத்தறிவுக் கருத்துகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதைப் படிப்பதால், கீழ்க்காணும் பயன்களைப் பெறுவீர்கள்.

• பெண்களின் வீரம், பேச்சாற்றல், பண்புக் கூறுகளால் புதிய, இலட்சிய உலகினைப் படைக்குமாறு முயலலாம்.

* அகவாழ்வு, புறவாழ்வு மலர, இயற்கையோடு ஒன்றி வாழும் முறைமையினை அறியலாம்.

* தீண்டாமையை மனத்திலிருந்தும் வாழ்விலிருந்தும் அகற்ற, கலப்புமணம், காதல்மணம், விதவைமணம் முதலியவை துணைபுரியும் என்பதை அறியலாம்.

* தமிழர்களின் அகத்திணைக் கூறுகளான காதல், கற்பு, மணம், குடும்பக் கட்டுப்பாடு முதலியன பற்றிக் கூற முடியும்.

* காவியத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகளை விவரித்தல் - பொதுவுடைமைக் கோட்பாட்டுச் சிந்தனைக்கு வித்திடல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

* தமிழ்மொழியின் மேன்மையை எடுத்துரைத்தல், தமிழ்ப்பண்பாட்டில் ஆரியச் சடங்குகளை நீக்குதல், தமிழ்மணம் புரியும் விதம் ஆகியவை பற்றி எடுத்துரைக்க முடியும்.

• சாதி ஒழிப்பு, சமய ஒழிப்பு, பெண்கல்வி, சொத்துரிமை பற்றி விளக்கலாம்.

முன்னுரை

கவிஞன் சமுதாயத்தில் ஒருவன் அவனுடைய கவிதைகளும் சமுதாயத்தைப் பற்றியதாகத்தான் இருத்தல் வேண்டும். கவிதையின் ஒவ்வொரு அடியும் மக்களின் வாழ்வை எதிரொலிப்பதாகவே அமைகிறது. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய கவிஞர்கள் எல்லாரும் மக்கள் வாழ்வுப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தனர்.

தற்காலச் சூழலுக்கு ஏற்ப, பொதுமக்கள் விரும்பி ஏற்கும் வண்ணம் எளிய நடையில் இனிய சந்தங்களால் காவியம் படைக்க முனைந்தனர். அவர்களில் முன்னோடியாகப் பாரதியார், நாட்டு விடுதலையை அடிப்படையாகக் கொண்டு பாஞ்சாலி சபதம் படைத்தார். அவரைத் தொடர்ந்து பாரதிதாசன், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி ஆகியன படைத்தார். பாரதிதாசன் வழியில் உருவான இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களாக வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன், சுரதா போன்றோரைக் குறிப்பிடலாம்.

புதுவையில் தோன்றிய கவிஞர் வாணிதாசன் அறிவூட்டும் இலக்கியங்களைப் படைத்தார். தன் ஊரைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களின் வாழ்வைக் கண்ணாரக் கண்டு எழுதினார்.

சிற்றூர்ப் பெண்கள் திருந்தினால்தான்
நாடு திருந்தும் என்பது என்துணிவு
அத்துணிவால் தோன்றியவளே தமிழச்சி

என்று தமிழச்சி காவியம் தோன்றிய காரணத்தைச் சொல்கிறார். அதுபோலவே, இயற்கையின் அழகை வெளிப்படுத்தவும் செந்தமிழின் செழிப்பை உணர்த்தவுமே கொடிமுல்லை படைக்கப்பட்டது. மதம் தான் தீண்டாமைக்குக் காரணமாகின்றது என்று சொல்லி, பகுத்தறிவுச் சிந்தனைகளாலேயே அதனை ஒழிக்க முடியும் என்பதை இவ்விரு காவியங்களும் சித்திரிக்கின்றன. கொடிமுல்லைக் காவியம் பகுத்தறிவுப் பார்வையோடு தான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரு காவியங்களிலும் உவமை, கற்பனை எனும் உத்திகளை நயம்படக் கையாண்டுள்ளார் கவிஞர். இரண்டு காவியங்களிலும் எளிமையான நடையினைக் கையாண்டுள்ளார். பொருள் புரியும் வார்த்தைகள், வினாவிடை முயற்சிகள், நகைச்சுவையுடன் சாடுவது, சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் போன்ற நடையமைப்பினைத் தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் கண்டு மகிழலாம்.

தமிழச்சியும் கொடிமுல்லையும்

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய காவியங்கள் தமிழச்சியும், கொடிமுல்லையும். சாத்தனார் கண்ட மணிமேகலை போலக் கதைத் தலைவியின் பெயரையே காப்பியங்கள் தாங்கி நிற்கின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் இலைமறை காயாக மக்களிடையே நிலவிவந்த ஆரியர்-திராவிடர் பிரிவினை, தந்தை பெரியாரால் பிராமண எதிர்ப்பு இயக்கமாகத் திராவிடர் கழகம் என்று உருவாகி, தமிழ் மக்கள் அளவில் எழுந்து, நாட்டளவில் நின்று கடைசியில் அரசியலில் அறிமுகமானது. அதுவே 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகமாகத் தோன்றியது. இந்தக் கால கட்டத்தில் தான் தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய காப்பியங்கள் தோன்றின. பெண்ணைப் பெருமைப்படுத்தவே தமிழச்சியைப் படைத்தார் கவிஞர். வரலாற்றுப் பின்புலத்தில் தமிழகத்தைக் காணவே கொடிமுல்லை உருவானது.

சேரி மக்களின் அடிமை வாழ்வு அகற்றவும், பெண்களை இழிவாய் எண்ணும் சின்ன புத்தியை மாற்றவுமே தமிழச்சி படைக்கப் பட்டிருக்கிறாள்.

கொடிமுல்லை - காப்பியத் தலைவியின் பெயரே நூலுக்கும் பெயராக வைத்துள்ளார். அரசன் மகளாக இருந்தாலும், செல்வத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வாழும் ஆடம்பரப் பெண்ணாக இல்லாமல், அறிவு வழியில் செல்லும் பெண்ணாகத் திகழ்வதை அறியலாம். காதலுக்கு இலக்கணமாக வாழ்பவள். காதலனைத் தவிர வேறொன்றும் விழையாதவளாகக் காணப்படுகிறாள். வரலாற்றுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், இயற்கையின் ஈடுபாட்டினை வெளிப்படுத்தவும் கொடிமுல்லை படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, இருகாப்பியங்களிலும் காப்பியத் தலைவியரையே காப்பியத் தலைவனைவிடக் கூர்ந்த அறிவுடையவர்களாகவும் செயல்திறம் மிக்கவர்களாகவும் படைத்திருப்பது பெண்களை முதன்மைப்படுத்தும் கவிஞரின் விருப்பமே என்பது புலனாகிறது.

வாணிதாசன்

1915 ஜூலை 22 ஆம் நாள் கவிஞர், புதுவையையடுத்த வில்லியனூரில் திருக்காமு நாயுடு - துளசியம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் எத்திராசலு என்ற அரங்கசாமி. ஆரம்பப் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் இயற்கைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர், பாவலர் மணி, பாவலர் ஏறு, புதுமைக் கவிஞர் எனப் பலவாறு போற்றப்பட்டவர். பாரதிதாசனது பரம்பரையில் முதிர்ந்தவர்.

• புனைபெயர்

1938 இல் தமிழன் ஏட்டில் ரமி என்னும் புனைபெயரில் பாரதிநாள் என்னும் முதற்பாடல் வெளிவந்தது. அதன்பிறகு வாணிதாசன் என்று பெயரை மாற்றி எழுதினார்.

* படைப்புகள்

ஆனந்தவிகடன், திராவிட நாடு, குயில், திருவிளக்கு, நெய்தல், பொன்னி, மன்றம், முரசொலி ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். தமிழச்சி (1949), கொடி முல்லை (1950), தொடுவானம் (1952), எழிலோவியம் (1954), வாணிதாசன் கவிதைகள் முதல் தொகுதி (1956), பொங்கல் பரிசு, தீர்த்த யாத்திரை, குழந்தை இலக்கியம் (1959), சிரித்த நுணா (1963), இனிக்கும் பாட்டு (1965), எழில் விருத்தம் (1970), பாட்டரங்கம் (1972), வாணிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி (1981) என்பன போன்ற நூல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நாடகங்களையும் எழுதியுள்ளார். சிங்கப்பூர் தமிழ் முரசு இதழில் பல கவிதைகளைப் படைத்துள்ளார்.

• புலமை

தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்தவர்.

• கவிதைத் தளம்

இவ்வாறு மரபுக்கவிஞராகவும் புதுமைக் கவிஞராகவும் திகழ்ந்த கவிஞர் வாணிதாசன் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் தமது கவித்தளத்தை அமைத்து வெற்றி பெற்றுச் சிறந்தார்.

காப்பியங்களின் அமைப்பு

தமிழச்சி காப்பியம் 18 இயல்களைக் கொண்டது. இயல்களுக்கு ஏற்ற வகையில் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. 173 அறுசீர் விருத்தங்களும் 4 கும்மிப் பாடல்களும் உள்ளன. மொத்தம் 177 செய்யுட்கள் உள்ளன. இந்நூல் 1949 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

கொடிமுல்லை 1950 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் 16 இயல்களைக் கொண்டது. இயல்களுக்குத் தலைப்புகள் தரப்படவில்லை. இயல்களுக்கு ஏற்ற வகையிலான கதைக் குறிப்புகள் உள்ளன. 132 செய்யுட்களால் ஆனது. 'என் ஆசிரியர் கவியரசர் பாரதிதாசன் அவர்களுக்கு இந்நூல் படைப்பு' - என்று பாரதிதாசன் மீது கொண்டுள்ள பற்றினை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

காப்பியங்களின் நோக்கம்

சமுதாயத்தின் துயரம் காவியங்களில் ஒலிக்கலாம். அந்தத் துயர ஒலி எதிர்கால விடியலுக்கு அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும். துயரத்தை நியாயப்படுத்துதல் கூடாது எனும் நோக்கத்தில் தமிழச்சி படைக்கப்பட்டிருக்கிறது. சேரி மக்களின் வாழ்வில் உழைப்பிருந்தும் உயர்வு இல்லாமையைக் கண்ட கவிஞர், அதனை உடைத்தெறியும் நோக்கத்திலே நூலைப் படைத்துள்ளார். ஆண்கள் பெண்களுக்கு எப்போதுமே அநீதிகளை இழைத்து வந்திருக்கிறார்கள். கல்வி, போராட்டம் என எதிலும் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த கவிஞர், தமிழச்சியின் மூலம் ஆண்களை வெட்கித் தலைகுனியும்படி பேச வைக்கிறார்,

'பொரியுண்டை என உம் முள்ளே பெண்களை நினைத்தீர் போலும்' என்று ஆண்களுக்கு அறைகூவல் விடுப்பதன் மூலம், பெண்ணின் பெருமைக்கும் கற்பின் சிறப்பிற்கும் அறம்சார்ந்த அரசியலுக்கும் பெண்களைத் தயார்ப்படுத்துவதைக் காணமுடிகிறது. குறிப்பாகச் சிற்றூரில் வாழும் பெண்கள் தலைநிமிர்ந்து வெகுண்டு எழும்போது தான் நாடு வளம் பெற்று ஓங்கும் என்பதைத் தமிழச்சியில் புலப்படுத்தியுள்ளார். தமிழரின் வரலாற்றுச் சிறப்பையும் கலையார்வத்தையும் விளக்க எழுந்ததே கொடிமுல்லை. ஏற்றத்தாழ்வற்ற இலட்சிய சமுதாயத்தைப் படைக்கும் குறிக்கோளினை இதில் காணமுடிகிறது. உண்மைக் காதலுக்குக் குறுக்கே நிற்கும் உயர்வு தாழ்வுத் தடைக்கல் உடைத்தெறியப்பட வேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாகிறது. 'விலை கொடுத்து வாங்க முடியாதது காதல்' என்றும் காதலை மதிக்காத நாடு இருப்பதைவிட அழிவதே மேல் என்றும் குறிப்பிட்டிருப்பதால், காதலுக்கு ஓர் உயர்வான இடம் இக்காவியத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அந்த அளவுக்கு உண்மைக் காதலின் உயர்வும், கவிஞரின் இலட்சிய நோக்கும் இச்சிறுகாவியத்தில் பின்னிப் பிணைந்துள்ளன எனலாம்.

கதைச்சுருக்கம்

வாணிதாசன் இயற்றிய தமிழச்சி, கொடிமுல்லை எனும் காப்பியங்களின் கதைச் சுருக்கத்தை இனி பார்ப்போம்.

தமிழச்சி - கதைச்சுருக்கம்

தமிழச்சி என்பாள் சிற்றூரைச் சேர்ந்தவள். இளவயது முதலே சீர்திருத்த எண்ணங்கள் கொண்டவள். தமிழச்சி முதலியார் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், சேரி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் புரட்சி உள்ளம் கொண்ட ஒரு புதுமைப்பெண். அதனால் ஊர் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகிறாள். தமிழச்சியின் காதலன் பொன்னன். கிழவனுக்கு வாழ்க்கைப்பட மறுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணான பாப்பாத்தியை மீட்கும் பொறுப்பினைத் தன் காதலனான பொன்னனிடம் ஒப்படைக்கிறாள் தமிழச்சி. அந்தத் திட்டம் செயல்படும் போது, பொன்னனும் பாப்பாத்தியும் 'ஓடிப்போனதாக' ஊரில் புரளி கிளம்புகிறது. இதற்கிடையில் பட்டாளத்தில் இருந்து திரும்பிய பாப்பாத்தியின் காதலன் குப்பன் ஊராரின் புரளிகேட்டு ஆத்திரம் அடைகிறான்.

அதன் விளைவால் பொன்னன் கொலை செய்யப்படுகிறான். அந்தக் கொலைப்பழி தமிழச்சி மேல் சாட்டப்படுகிறது. தமிழச்சியை எப்படியாகிலும் பழிவாங்கக் காத்திருந்த ஊராருக்கு இந்த வாய்ப்புப் பெரும் காரணமாக அமைந்தது. அவளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிச் சிறையில் அடைத்தனர். சேரிக்காளை எனப்படும் மதுரைவீரன் என்பான் தமிழச்சி விட்டுச் சென்ற சேரிப் பணியைத் தொடர்ந்து செய்கிறான். பாப்பாத்தி, அவனுக்குப் பக்கத்துணையாக இருந்து உதவுகிறாள். இருவரிடையே நட்பு அரும்புகிறது. இதனைக் கண்ட ஊரார், காழ்ப்புணர்ச்சி கொண்டு, மதுரைவீரனின் குடிசையைக் கொளுத்திவிடுகின்றனர். சேரி மக்கள் மத்தியில் கோபம் கொப்பளித்து, புரட்சி வெடிக்கிறது. ஒன்று சேர்ந்து கிளம்பிய சேரி மக்களால் ஊராரின் கொட்டம் அடக்கப்படுகிறது. தமிழச்சி சிறையிலிருந்து மீட்கப்படுகிறாள். நன்மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறாள். பாப்பாத்தி - மதுரைவீரன் திருமணம் சீர்திருத்தத் திருமணமாக நடந்தேறுகிறது. தமிழச்சியின் கனவு நனவாகிறது. கதை முடிகிறது.

கொடி முல்லை - கதைச் சுருக்கம்

பல்லவ நாட்டு அரசன் மாமல்லனுக்கும் பட்டத்தரசி செங்காந்தளுக்கும் பிறந்தவள் கொடிமுல்லை. அக் கொடிமுல்லையை, இலங்கை நாட்டு இளவரசனும் பல்லவ நாட்டுப் படைத்தலைவனுமான மானவன்மனுக்கு மணம் முடிப்பது என்று பெற்றோர் முடிவு செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், கலைக் கோயிலை அமைக்க இலங்கையிலிருந்து வந்துள்ள கல்தச்சன் அழகனுக்கும் இளவரசி கொடிமுல்லைக்கும் எதிர்பாராத வகையில் காதல் அரும்புகிறது.

மாமல்லனின் அரசாங்கப் புலவனும் அழகனின் நண்பனுமான நலம்பாடி, கொடிமுல்லையின் தோழி அல்லி ஆகியோரின் உதவியால் காதலர் இருவரும் சந்தித்துப் பேசி மகிழ்கின்றனர். இக்காட்சியைக் காண நேர்ந்த மானவன்மன் கண்களை ஆத்திரம் மறைக்கிறது. அதன்காரணமாக அழகனைக் கொலைசெய்து விடுவது என்று எண்ணித் திட்டமிட்டான். ஆனால் அவன்மேற்கொண்ட முயற்சி, 'முகமூடி அணிந்த ஒருவனால் முறியடிக்கப்படுகிறது. மறுநாள், குகையினுள் செதுக்கப்பட்டிருந்த இளவரசியின் சிலையைச் சேதப்படுத்தினான் மானவன்மன்.

இதனால் கோபம் கொண்ட அழகன் சிற்றுளியினால் மானவன்மனைத் தாக்க, குகை கொலைக்களமாக மாறுகிறது. அழகன் மேல் கொலைக்குற்றம் சாட்டப்படுகிறது. அரசன் முன் நிறுத்தப்படுகிறான். அழகனைக் கழுவிலேற்றிக் கொல்வதே தீர்ப்பு என அறிவிக்கப்படுகிறது. கழுவிலேற்றப்படும் நேரத்தில், மாற்றுடையில் வந்து அழகன் தப்பித்துச் செல்ல வழிவகுத்து, நண்பனுக்காகத் தன்னுயிரைக் கொடுக்கிறான் நலம்பாடி. தப்பிச் சென்ற அழகன், 'கடற்கரை மணலில் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்' என்று எழுதியுள்ள கடிதத்தை நலம்பாடியின் இருப்பிடத்தில் கண்டவுடன், விரைவாகக் கடற்கரைப் பகுதிக்குச் செல்கிறான். அங்கே, கொடிமுல்லை குற்றுயிராகக் கிடக்கக் கண்டு நெஞ்சம் குமுறுகிறான் அழகன். காதலனைக் கடைசி முறையாகக் கண்ட மனநிறைவோடு கண்ணை மூடுகிறாள் கொடிமுல்லை. காதலியின் சோக முடிவைக் கண்ட அழகன் அழுது புலம்பியவாறு அலைகடலுள் வீழ்ந்து மறைகிறான். இவ்வாறு கதை முடிகிறது.

கதைமாந்தர்

தமிழச்சி, கொடிமுல்லை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தமிழச்சி - கதை மாந்தர்

தமிழச்சியில் காணப்படும் கதை மாந்தர் பல்வகையினர். தமிழச்சி, பாப்பாத்தி ஆகிய பெண் பாத்திரங்களும் பொன்னன், மதுரைவீரன், குப்பன் ஆகிய ஆண் பாத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழச்சி

வாணிதாசன் படைத்த தமிழச்சி சேரி மக்களின் வாழ்வில் மாற்றம் காண விழையும் முதலியார் வீட்டுப் பெண்ணாகக் காணப்படுகிறாள்.

ஆட்டிட ஆடுகின்ற
பாவை நான் அல்லள் ; சற்றுப்
பாட்டையில் நடந்தால் என்ன?
பலருடன் பழகிப் பேசி
வீட்டிற்கு வந்தால் என்ன?
விழிப்புண்டு கற்பில் ......

எனும் தமிழச்சியினைப் பார்க்கும்போது, அவள் ஒரு புதுமைப் பெண்ணாகவே காணப்படுகிறாள். பெண்விழித்தால் விடுதலை நிலைக்கும் நாட்டில் என்று பேசுகிறாள் தமிழச்சி, காதல் மணமே சிறந்தது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவள்.

கனிந்த காதலுள்ளம், பிறரிடம் காட்டும் அன்பு, ஊரார்க்கு உழைக்கும் பண்பு, மூடப் பழக்கங்களை முறியடிக்கும் துணிவு, பகுத்தறிவை மக்களுக்குப் புகட்டும் ஆர்வம், சேரியினைத் திருத்தும் முயற்சி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் எழுச்சி, தனியுடைமையை மாற்றிப் பொதுவுடைமையைப் பூத்துக்குலுங்க வைக்கும் கொள்கை போன்ற தன்மைகள் தமிழச்சியிடம் காணக்கிடக்கின்றன.

'சாப்பிடப் பிறந்ததன்றித் தன்மானம் உரிமை காவாப் பாப்பாக்களாலே பெண்கள் பாழானார்; அடிமையானார்' என்று பெண்ணடிமையாவதற்கும் உரிமைகளை இழப்பதற்கும் பெண்களே காரணம் என்பதைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், எதிர்த்திட எட்டீ வாளை! என்று பெண்களைத் தட்டி எழுப்பும் புரட்சிப் பெண்ணாகவும் அவள் விளங்குகிறாள்.

பாப்பாத்தி

தமிழச்சியின் பக்கத்து வீட்டுப் பெண். மிகவும் அழகு வாய்ந்தவள். பட்டாளத்துக் குப்பனை மனமாரக் காதலித்தவள். கிழவனுக்கு வாழ்க்கைப்படப் பெற்றோர்கள் வற்புறுத்தியபோது மறுத்துப் பேசியவள். அதை நினைத்துப் புலம்பும் கோழைப்பெண்ணாகவும் இருந்தவள். தமிழச்சியின் உறவால் மனஉறுதி பெற்றுப் புதுமைப் பெண்ணாக மாறியவள். பொன்னனோடு சென்றதால் ஊர் மக்களின் பழிச்சொல்லுக்கு ஆளானவள். அவளது உண்மைக் காதல் குப்பனால் உதாசீனப் படுத்தப்பட்டபோது நிலைகுலைந்து போகிறாள். பொன்னனைக் குப்பன் கொலை செய்த பிறகு, பாப்பாத்தியின் காதலில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. மதுரைவீரன் பாப்பாத்தி காதல் மலர்கிறது. கலப்பு மணத்திற்கு வழிவகுத்த புரட்சிப் பெண்ணாகப் பாப்பாத்தி தோன்றுகிறாள்.

பொன்னன்

தமிழச்சியின் காதலன். ஏரோட்டும் உழவன். தமிழச்சியால் நெஞ்சுறுதி பெற்று நிமிர்ந்து நிற்பவன். கணவன் என்ற நிலையை அடையாமல் காதலனாகவே வாழ்ந்து மடிகிறான். காதலியின் வேண்டுகோளை நிறைவேற்றத் துணிந்ததால் கொலை செய்யப்படுகிறான். தன்வீடு, தன்னுலகம் தன்வாழ்வு என்று அமைத்துக்கொள்ள விழைபவன். மொத்தத்தில், அவலச்சுவையின் பிரதிபலிப்பாக இப் பொன்னன் பாத்திரம் காவியத்தில் இடம் பெறுகிறது எனலாம்.

மதுரை வீரன்

சேரிக்காளை என்று கவிஞரால் அறிமுகம் செய்யப்படுகிறான். அறப்பணி செய்ய தமிழச்சி விடுத்த அழைப்பினை ஏற்று, நான் என்றான் சேரிக்காக நல்குவன் உயிரை என்று துணிவோடு செயல்படுகிறான். தமிழச்சி சிறை சென்ற பொழுது, ஊராரின் எதிர்ப்புக்கு உள்ளானவன். அதே நேரத்தில் தன்னிடம் பாதுகாப்பிற்காக இருக்கும் பாப்பாத்தியைக் கண்ணுங் கருத்துமாகக் காப்பாற்றியவன். பாப்பாத்தியின் மேல் காதல் கொண்டு, வெளிப்படுத்தமுடியாமல் இருந்தவன். இவனது கண்ணியமும் நாகரிகமுமே பாப்பாத்தியின் மனத்தில் இடம்பெற வைத்தது. சொல்வேறு செயல் வேறு என்றில்லாமல் சொன்ன சொற்படி வாழ்பவனாகத் திகழ்கிறான். சாதியை எதிர்க்கும் சமதர்மவாதியாகவும், உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் பாட்டாளித் தோழனாகவும் சிறப்பிடம் பெறுகிறான். இவ்வாறு ஊராரின் வீழ்ச்சிக்கும் தமிழச்சியின் மீட்சிக்கும் காரணமாகத் திகழும் கடமை வீரனாகக் காட்சியளிப்பதோடு மட்டுமன்றி, காப்பியம் தொடர்வதற்கு இன்றியமையாத படைப்பாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணிக்கச் சுடரொளியாள் செத்தாள் ; இந்த
மண்ணுலகம் புளிக்குது எனக்கிங் கென்னவேலை

என்று வருந்துகிறான்.

அரசனுக்கும் ஆண்டிக்கும் வேறுவேறு
சட்டதிட்டம் அற்றுலகம் வாழ வேண்டும் ;
அரசன்தன் இச்சையைப் போல் எதையும் செய்யும்
அடுக்காத செயல் மண்ணில் ஒழியவேண்டும்

என்று தான் வாழ்ந்த நாட்டின் அமைப்பையே சாடுவதைக் காணலாம்.

கொடி முல்லை

காவியத்தின் தலைவி. மன்னன் மாமல்லனின் மகள். நற்றமிழாள் கொடி முல்லை, கொய்யாப்பூக் கொடிமுல்லை, கயல்விழியாள் கொடிமுல்லை என்று அழைக்கப்படுபவள். பாரதிதாசனின் புரட்சிக்கவியில் வரும் அமுதவல்லியோடு ஒப்பிடக் கூடிய அளவுக்குக் கொடிமுல்லையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கொடிமுல்லையின் அழகு, காப்பியம் முழுவதும் கதிரொளி வீசுகிறது.

கட்டுக்கும் முட்டுக்கும் அஞ்சி வாழ்ந்தால்
காதலெங்குத் தழைத்திருக்கும்? சொல்வீர்

என்று, தான் காதலித்தவனை அடைய உலகை எதிர்க்கப் புறப்பட்டவள். பாராளும் வேந்தன் மகள் சிற்பக் கலைஞனைக் காதலிப்பது கண்டு கொதித்தெழுகிறான் மன்னன். தந்தையின் கோபத்துக்கு ஆளான தன் காதலனைக் காக்க, தந்தையிடம் கருணைமனு அனுப்பியும் மன்னன் கேட்காததால், அவசரக்காரியாகித் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்கிறாள். இறுதி மூச்சு வரை காதலனுக்காக ஏங்கித் தவிக்கும் இதயம் பெற்றவளாகத் திகழ்கிறாள்.

நலம் பாடி

பல்லவநாட்டு அரசவைப் புலவன். அழகனின் நண்பன். கதைத் தலைவனுக்கு ஆலோசனை தரும் அந்தரங்க நண்பன். நண்பன் அழகனை முகமூடி அணிந்து வந்து காப்பாற்றுகிறான். காதலுக்குச் சாதி, மதம், அரசன், ஆண்டி என்ற வேறுபாடுகள் இல்லை என்பதை விளக்கி, அழகன் மேல் பழிசுமத்துதல் தவறு என்று மன்னனிடம் வாதாடுகிறான். இறுதியில் நண்பனுக்காகவே தன் இன்னுயிரைக் கொடுக்கின்றவனாகக் காட்சியளிக்கிறான். கதைத் தொடக்கத்தில் அழகன் - கொடிமுல்லைக் காதலை மலைக்கும் மடுவுக்கும் ஒப்பிட்டுப் பேசியவன் பின்னர் அவர்களின் உண்மையான காதலினை அறிந்ததும் அவர்களுக்காக ஆணித்தரமான வாதத்தை எடுத்து வைப்பவனாகிறான்.

மாமல்லன்

இக்காவியத்தில் இடம் பெறும் வரலாற்றுப் பாத்திரம். கொடிமுல்லையின் தந்தை. நிலைத்த புகழை நாடும் நேரிய கலை ஆர்வலன். மூடப்பழக்கங்களை ஆதரித்தவன். உயர்வு தாழ்வு கருதும் மன்னன், தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவு எடுக்கும் ஆணவம் கொண்டவன். கடவுள் பெயரால் சொல்லப்படும் கதைகளும் சாதி, சமயச் சண்டைகளும் இல்லாமல் நாட்டை ஆளவே முடியாது என நம்புகிறான்.

எக்காலம் பகுத்தறிவு பெற்று மக்கள்
எதிர்ப்பாரோ அன்றிடரும் தீரும்

என்னும் கருத்துடையவனாகக் காணப்படுகிறான். மக்களே என்றைக்குப் பகுத்தறிவு பெற்று எதிர்க்கிறார்களோ, அன்றைக்குத்தான் மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியும் என்பது அவனது கருத்தாக இருக்கிறது.

உயர்சாதி என்பதையும் மறந்து, தீயோன்
எங்களரும் கொடிமுல்லை அறிவை மாய்த்தான்

என்று கூறும்போது, அவனது சாதிச் செருக்கினையும் பிற்போக்கு மனநிலையையும், வெளிப்படையாக அறியமுடிகிறது.

நுழைபுலத்தான்

மாமல்லனின் சிறந்த அமைச்சன். கடமை தவறாதவன். தன் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை பயனற்றது என்று சொன்ன அரசனுக்கு, செத்துப் போனவரைப் பழிகூற வேண்டாம் வேந்தே! புகழ் நடுக என்று பணிவுடன் அறுவுறுத்துகிறான். பல்லவன் தன் பெயரால் ஊரமைத்துப் புதுமை செய்ய விரும்பி நாளும் கோளும் பார்க்க வேண்டும் என்று சொன்னபோது,

வேந்தே
கடைக்காலக் கொள்கையிது ; வீணர்சூழ்ச்சி
ஆள்வினையை நம்பாது மக்கள் வீழும்
அளறு மிகுமுள் நிறைந்த பாட்டை ; காலில்
தேள் கொட்ட நெறி தென்னைக் கேறலுண்டோ?
செப்பிடுவீர்

(ஆள்வினை = முயற்சி; அளறு = சேறு; பாட்டை = வழி)

என்று அரசனுக்குப் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னவன். கொடிமுல்லையைக் காதலித்ததால், கல்தச்சனுக்கு நீதி வழங்க வேண்டிய நிலை வரும்போது, அரசனைப் பார்த்து 'முன்பின்னே ஆய்ந்துணர்ந்த பின்னர் நல்ல முடிவிற்கு வருவது மேன்மை' என்று அறிவுறுத்துகிறான். அதை ஏற்க மறுத்த அரசனைப் பார்த்து, "மானந்தான் தமிழருக்குப் பெரிது; நாட்டில் பழிதாங்கி வாழ்வதோ? உமது முன்னோர்" என்று அறிவுறுத்திய பிறகும் அரசன் கேட்காததால், 'குற்றம் அழகனிடம் இல்லை ' என்று நீதிக்காகக் குரல் எழுப்புகிறான்.

மானவன்மன்

இலங்கை இளவரசன். பல்லவ நாட்டுப் படைத்தலைவன். மாமல்லனுக்கு உறவினன். கொடிமுல்லைக்கு உரியவனாகக் கருதப்படுபவன். இள வயது முதல் கொடிமுல்லையுடன் ஊஞ்சல் ஆடி, கழுத்தில் மாலை சூட்டி மகிழ்ந்தவன். பருவ வயதினையடைந்த கொடிமுல்லையை மணக்கத் துடித்தான். அவளோ மறுத்தாள். கல்தச்சனான அழகனோடு அவளைக் காணும்போது மிகவும் வேதனைப்பட்டான். பொறாமையும் அவனைக் கோபமுறச் செய்தது. அழகனைக் கொல்ல நினைத்துச் சென்றவன், அழகனின் கோபத்துக்கு ஆளாகிப் பலியானான். அத்துடன் அவன் வாழ்வு முடிகிறது

அவன் அழிவை அடிப்படையாகக் கொண்டே கதையின் உச்சக்கட்டம் அமைகின்றது. மாமல்லனைப் போன்று இவனும் ஒரு வரலாற்றுப் பாத்திரம். கதைப்போக்கில் மானவன்மன் இடையூறு விளைவிக்கும் கொடியோனாகப் படைக்கப்படுகிறான். தமிழ்மறவன் மானவன்மன் என்றும், குன்றைத் தகர் தோளன் என்றும் கதையின் தொடக்கத்தில் இவனைப் பற்றி அறிமுகம் செய்யப்படுகிறது. கதையில் தீங்கு செய்யும் பாத்திரமாகவே படைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை நெறி

கவிஞர் வாணிதாசன் காலத்தில் பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சமூக விழிப்புள்ள எவரையும் பெரியார் இயக்கம் வெகுவாகக் கவர்ந்தது. அவ்வகையில் பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாடும், சீர்திருத்தத் திருமண முறையும் கவிஞரைக் கவர்ந்தன. இவரது உள்ளமும் அவற்றிற்கு ஆட்பட்ட காரணத்தால், தமது காவியங்களில் சீர்திருத்தத் திருமணமும், கலப்பு மணம், காதல் மணமும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தமையால் இதனை அப்படியே தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் படைத்துள்ளார்.

திருமணம்

திருமணம் என்பது மனப்பொருத்தமும் குணப்பொருத்தமும் பார்த்து நடத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

தமிழச்சியில் 'மதுரைவீரன் - பாப்பாத்தி' திருமணம் சீர்திருத்தத் திருமணமாகவும் கலப்புத் திருமணமாகவும் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் பார்க்கவில்லை!
பார்ப்பானைத் தேடவில்லை!
மஞ்சள் நூல், தாலி, பீலி
வாங்கவும் இல்லை ! தீயைக்
கொஞ்சமும் வளர்க்கவில்லை!
குந்தாணி, அம்மி எல்லாம்
வஞ்சகர் திணித்தார்!

(தமிழச்சி : பக்கம் : 66)

என்று அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் இல்லாமல், நெல்லும் மலரும் தூவி மணமக்களை வாழ்த்தித் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குமுன் தமிழர்கள் திருக்குறளை ஓதி மணம் முடித்தல் வேண்டும் என்கிறார் கவிஞர். தமிழச்சியில் நடைபெறும் திருமணத்தில் தாலி அணிதலும் இல்லை; அகற்றலும் இல்லை.

காதலின் மாண்பு

தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் காதலின் மாண்பு குறித்து அதிகமாகவே பேசப்பட்டுள்ளது. தமிழச்சியின் காதலன் சாதாரண உழவன். கொடிமுல்லையின் காதலன் சாதாரணக் கல்தச்சன். தங்களுடைய காதலுக்குத் தடையாக இருப்பவற்றை உடைத்தெறியும் முயற்சியிலேயே இருவரும் காணப்படுகின்றனர்.

காதலர்

மன இன்பத்திற்கேதடி சாதிமதம் என்று பாடும் கவிஞர் வாணிதாசன் தமிழச்சியில் பாப்பாத்தி-மதுரைவீரன் திருமணத்தைக் காதல் மணமாகவும் அதே வேளையில் கலப்பு மணமாகவும் நடத்தி வைக்கிறார். கொடிமுல்லையில் அழகன்-கொடிமுல்லைக் காதல் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உடையது எனினும் வாழ்வில் இணையாத காதலர்கள் சாவில் இணைகின்றனர். தமிழச்சியில் காதல் ஒரு கூறாகிறது. கொடிமுல்லையில் காதலே உயிர்நாடியாக அமைகிறது.

கயற்கண்ணாள் என் இன்பத்தலைவி ! உள்ளக்
கடலலைக்கும் கதிர்க்கற்றை

என்ற அழகன் கூற்று காதல் படுத்தும் பாட்டினை விளக்குகிறது கொடிமுல்லைக் காவியம். இங்குக் காதலனின் உள்ளம் கடலாகிறது. அவள் கதிர்க்கற்றையாகிறாள். நிலவொளி கடலை அலைக்க, காதலியின் கண்ணொளி காதலனின் உள்ளக் கடலை அலைக்கிறது

என் மனம் கொள்ளை கொண்டான்
இருக்கின்றான் அவனை யன்றி
முன்னாண்ட மூவேந்தர்கள்
முளைத்தாலும் விழையேன் (தமிழச்சி : ப-28)

என்று காதலித்தவனையே மணக்கும் உறுதி பூண்டவளாகத்தமிழச்சி காணப்படுகிறாள். 'காதல் துணைவனை அடையாவிட்டால் குவளை தின்று இறந்து படுவேன்' என்றும் தமிழச்சியில் 'காதல்' பற்றிய கருத்துகளை விதைத்துள்ளார் கவிஞர்.

காதலியின் கண் வீச்சில் விழுந்த காதலன் நிலையை,
வலைப்பட்ட மீனொப்ப அவள் மைக்கண்ணில்
அகப்பட்ட மனமடக்கி நடந்திட்டானே

என்று கொடிமுல்லைக் காப்பியத்தில் காதலின் வல்லமையைப் புலப்படுத்துகிறார் கவிஞர். மேலும்,

காதலுக்குத்
தொலைதூரம் சாதிமதம் ; அரசன் ஆண்டி
சொக்கும் எழில்
என்றும்,
மலையினுக்கும் மடுவிற்கும் உள்ள வேறு
பாடு, உண்மைக் காதலுக்கு வணங்கும்

என்று கொடி முல்லையில் காதலின் மேன்மைகளையும், காதலுக்குக் குறுக்கே நிற்கும் உயர்வு தாழ்வு தடைக்கல் உடைத்தெறியப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார் கவிஞர். மேலும், 'விலை கொடுத்து வாங்க முடியாதது காதல்' என்றும் கூறுகிறார். 'காதலுக்கு மதிப்பளிக்காத நாடு இருப்பதைவிட அழிவதே மேல்' என்பன போன்ற கருத்துகளையும் கொடிமுல்லையில் படைத்திருக்கிறார். காதலுக்கு ஓர் உயர்வளித்துப் பேசப்பட்ட கொடிமுல்லையில் வாழ்வில் ஒன்று சேராமல் இறப்பில் ஒன்று சேர்வதையே காணமுடிகிறது.

• மாற்று மருந்து

காதல் நோய் தீரவேண்டுமானால் அதற்கான மாற்று மருந்து என்ன என்பதைச் சொல்ல வருகிறார் கவிஞர்,

நச்சுப் பாம்பின்
கடிபட்டார் பிழைத்திடுவார் ; தோளணைப்பே
காதலுக்கு மாற்று

என்று கொடிமுல்லைக் காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இவ்வாறு அன்பின் உயர்ந்த வெளிப்பாடான காதல் உணர்வுகளைத் தமது இருகாப்பியங்களிலும் படைத்திருக்கிறார் வாணிதாசன்.

சாதியும் தீண்டாமையும்

சாதிகளைத் தோற்றுவிப்பவன் மனிதனே. தன் வாழ்விற்கும் வசதிகளுக்கும் ஏற்ப அதனை மாற்றிக் கொள்கிறான் என்பதும் மனிதனின் முன்னேற்றத்திற்குச் சாதி ஒரு தடையாக உள்ளது என்பதும் கவிஞர் வாணிதாசனின் கருத்து.

சாதியை வகுத்து நம்மைப்
பாழ்செய்த தடியர் கூட்டம்
ஏதேனும் சிறிய நன்மை
நமக்காக நினைத்த(து) உண்டா ?

என்று தமிழச்சி பாத்திரத்தின் மூலம் சாதியை ஒழிக்க நினைக்கிறார் கவிஞர். தாழ்த்தப்பட்ட சாதி என்று தள்ளிவைக்கப்பட்ட சேரி மக்களின் வாழ்வில் சீர்திருத்தத்தை விரும்பும் தமிழச்சி, சாதி பார்ப்பவனைத் தடியர் கூட்டம் என்றே சாடுகிறாள்.

காதலுக்குத் தொலை தூரம் சாதிமதம் என்று கொடிமுல்லையில் பேசப்படுகிறது.

கல்வியின் சிறப்பு

சாதியை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்குக் கல்விக்கண்ணைத் திறந்திடல் வேண்டும் என்பது கவிஞரின் எண்ணம். தமிழச்சியில்

படித்திடில் சாதிப்பேச்சும்
பறந்திடும் ; அறிவும் உண்டாம் ;
படித்திடில் அடிமை ஆண்டான்
எனும் பேச்சும் பறக்கும் அன்றோ

என்று சாதியை எளிதில் ஒழிக்க வேண்டுமானால் கல்வி ஒன்றினால் தான் முடியும் என்பதைக் கவிஞர் விளக்குகிறார்.

தீண்டாமை

தீண்டாமை அகல வேண்டும் மனத்தில், தீண்டாமை ஒழி என்று நினைத்த கவிஞர், முதலியார் வீட்டுப் பெண்ணாகத் தமிழச்சியைப் படைத்து, சேரி மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வைத்துள்ளார். சேரி மக்களின் அடிமை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்திட எழுந்த காப்பியமே தமிழச்சி.

ஆண்டான் அடிமைகள் ஏய்ப்பதற்கே - நம்மை
அடிமைக் குழியினில் சாய்ப்பதற்கே
தீண்டாமை என்றொரு பொய்யுஞ் சொன்னார் -

என்று பாடுகிறார் கவிஞர்.

மதுரைவீரன் - பாப்பாத்தித் திருமணமும் சாதியை உடைத்தெறிய நடத்திவைக்கும் மணமாகவே காணமுடிகிறது. இதேபோலக் கொடிமுல்லையிலும், சாதியையும், தீண்டாமையையும் ஒழிக்கவே அழகன் எனும் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

காப்பியங்களின் சிறப்பு

வாணிதாசன் சிறந்த இயற்கை ஈடுபாடு உடையவர். எனவே இயற்கையைப் பற்றிச் சிறப்பாகப் பாடியுள்ளார். மேலும் அவரது கற்பனை வளத்தையும், அணிநலன்களைக் கையாளும் திறனையும் இக் காப்பியங்களில் காணலாம். இவை காப்பியங்களின் சிறப்புக் கூறுகளாகக் காணப்படுகின்றன.

இயற்கை

இயற்கையை அனுபவித்து மகிழாத கவிஞனோ, இயற்கையின் நுட்பங்களைக் கூர்ந்து நோக்காத கவிஞனோ இதுவரையில் தோன்றியதில்லை. அவ்வகையில் வாணிதாசனைத் தமிழ்நாட்டின் இயற்கைக் கவிஞர் என்றே அழைக்கலாம்.

தேன்ததும்பும் பூப்பறித்தாள் முல்லை, நாளும்
செடி பறித்தாள், தொடுத்திட்டாள் ; ஆங்குவந்த
மானைத் தன் மார்பணைத்தாள் ; போ! போ! என்று
வந்த இளம் பசுங்கன்றை விரட்டி நின்றாள்

எனக் கொடிமுல்லையில் இயற்கையின் ஈடுபாடு அவரைக் கதையைத் தொடரச் செல்ல வைக்கிறது. இதேபோல்,

தீங்குயில்கள் மரக்கிளையில் சிறகடிக்கும் ;
தென்னையிலே கூடமைக்கும் காக்கை

என்றும் இயற்கையின் மீது கவிஞருக்கு இருக்கும் ஈடுபாட்டினை அறிய முடிகின்றது. அதுபோலவே, தமிழச்சியிலும், பெண்கள் தண்ணீர்த் துறையில் குடத்தில் நீர் முகக்கும் காட்சியைப் படைக்க விரும்பிய கவிஞர், படித்துறை எங்கும் வட்டமதிக்கூட்டம் என்று பாடுகிறார்.

தாமரை மொட்டுக்குள்ளே - அழகு
தங்கிக் கிடக்குதடி

என்று மலர்களைப் பற்றியும்,

நொந்துபோன உள்ளத்தினை மாற்றும் நுழைபுலத்தோர்
ஒக்கும் சோலை

என்று சோலையைக் கவலை தீர்க்கும் மருந்து போலவும் இயற்கையைப் பாடுகிறார் கவிஞர். இவ்வாறு இயற்கையைக் கவலைக்கு மருந்தாகவும், கற்பனைக்கு வித்தாகவும் படைத்துள்ளார். இயற்கையின் மூலம் மக்களுக்கு அறிவூட்ட முற்படுவதையும் இவரது காவியங்களில் காணலாம்.

கற்பனை

கொடிமுல்லைக் காவியமே கவிஞனின் கற்பனையில் உருவானது. "மாமல்லபுரம் சென்றிருந்தோம். கலையும் மலையும் கத்தும் கடலும் என் கருத்தைக் கவர்ந்தன. கற்பனையைத் தூண்டின. அதன் விளைவே இந்நூல்” என்கிறார் கவிஞர்.

ஞாயிற்றின் ஒளியோடு தொடங்கும் 'தமிழச்சியில் '
வானிடைத் தோன்றும் செம்மை
வளம் பெறப் பரிதி காலை
தானொரு ஓவியன்போல்
பொன்னிறம் தடவும் ; ஆங்கே

ஏனெனை மறந்தாய் என்றே
எதிர்நின்று தடுக்கும் மேகம்
கான்மலர் இவற்றைக்கண்டு
கைகொட்டி நகைத்து நிற்கும்

எனக் கதிரவனுக்கும் கார் முகிலுக்கும் இடையே நடக்கும் போராட்டம் கவிஞனால் அழகுபட வருணிக்கப்படுகிறது.

மாலை நேரத்தில் காற்று வாங்கச் சென்ற கவிஞன் குளத்தில் உள்ள தாமரையை நேசிக்கிறான். தாமரை இலைமேல் நிற்கும் தண்ணீர் கொற்கையில் குளித்த முத்தாகவும், தாமரை இலை தட்டாகவும் தவளை கத்துவது தென்னை மரங்களைக் கூவி அழைப்பதாகவும், தென்னைமரம் வாங்குவோனாகவும், தாமரைப்பூ விலை பேசுபவனாகவும் கவிஞன் கண்ணில் படுகின்றன. பிறிதொருபாடலில், மதியவன் மறைந்துவிட்ட வானத்தை இருளரசி எப்படி ஆட்கொள்கிறாள் என்பதை, கீழ்வானை இருள் விழுங்கக் கண்டான் என்று கொடிமுல்லையில் படைக்கிறார்.

செவ்வல்லி தீச்சுடர் போல் மலரும் ; மேற்குத்
திசை மறையும் பரிதி கண்டு முளரி கூம்பும்
அவ்வோடை பூக்காத ஆம்பல் நோக்கி
அண்டிவரும் நீர்ப்பாம்பு காதல் பேச
(பரிதி = சூரியன்; முளரி = தாமரை)

என மதியின் வருகையைக் கவிஞன் நம்முடைய மதியை மயக்கும் வகையில் வருணிக்கிறார். இவ்வாறு கண்ணால் கண்ட காட்சியைக் கற்போரும் கண்டதுபோல் இன்பமடையச் செய்வது கவிஞனின் கற்பனையாற்றலுக்குச் சான்றாகின்றது.

அணிநலன்கள்

'அணிகள் இல்லாத கவிதை பணிகள் இல்லாத பாவை' என்பர். வாணிதாசனின் கவிதைகளில் அணிகளுக்குக் குறைவேயில்லை. கருத்துகளுக்கேற்ப ஆங்காங்கே அணிகள் எழிலாக ஒளிர்கின்றன. பொதுவுடைமை, பகுத்தறிவு, தீண்டாமை, சாதி ஒழிப்பு எல்லாம் ஏட்டளவில்தான். உழைப்பதற்கு மட்டுமே சேரி மக்கள் தேவை என்ற நிலையில் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதை,

கல்லிக் கீழ்ச் செடியைப் போலக்
காலத்தைக் கடத்தி விட்டீர்

என்ற தமிழச்சியின் கூற்றால் அறியலாம்.

கொடிமுல்லைக் காப்பியத் தலைவன் அழகனும் கொடிமுல்லையும் முதல் சந்திப்பிலேயே இதயத்தைப் பறிகொடுத்தனர். அதனைக் கூறவந்த ஆசிரியர்,

அடிபட்டுக் கால் முறிந்த மானைப் போல
அவளவனைப் பார்த்திருந்தாள்

என்று குறிப்பிடுகிறார்.

கொடி முல்லையும் அவளது தோழி அல்லியும் ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்கின்றனர். ஓடும் முல்லையைத் துரத்தும் அல்லியைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர், அதனை

.............. இன்பம்
அள்ளுதற்குப் பெட்டையினைத் துரத்திச் செல்லும்
ஆண்கோழி போல் அல்லி துரத்துகின்றாள்

என்ற உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். அதேபோல் கொடிமுல்லை தன் கூந்தல் அங்கும் இங்குமாக அலைய ஓடினாள் என்பதற்கு எருமை வாலொத்த சடை அலையச் சென்றாள் என்பது கேளாத உவமைகளாயுள்ளன. காதலி கொடிமுல்லையிடம் மனத்தைத் தூதுவிட்ட அழகன் துயிலிழந்து தலைசாய்க்காது தவிக்கும் காட்சியைத்

தலையணைமேல் கையூன்றிப் பிடரிதாங்கிக்
கிணறேறத் தத்தளிக்கும் நல்ல பாம்பின்
நிலையினிலே படுத்திருந்தான்

என்று படம்பிடித்துக் காட்டுகிறார்.

பொரியுருண்டை என உம்முள்ளே
பெண்களை நினைத்தீர் போலும்

என 'மிகமலிவான விலையில் கிடைப்பது குழந்தையின் பல்லுக்கு மெதுவாக இருக்கும்' என்ற உவமையின் மூலம் பெண்களை மலிவான பொருளாகக் கருதுவதைத் தமிழச்சியின் மூலம் கண்டிக்கிறார். 'வயதில் நாங்கள் அம்மியைப் போலே வீட்டில் இருந்தனம்' என்பதில், பெண்களை ஓர் உயிரற்ற திடப்பொருள் போலக் கருதி நடத்துவதைக் கண்டிக்கிறார். அதே நேரத்தில் பெண்களே தங்கள் நிலையை உணராமல் வாழ்ந்த பாங்கினையும் இவ்உவமையின் மூலம் வெளிப்படுத்துகிறார். இவ்வாறாக, தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் உவமைகள் பல விரவிக் கிடக்கின்றன.

'தமிழச்சி'யும் 'கொடிமுல்லையும் - ஒப்பீடு

இவ்விரு காவியங்களிலும் கதைத் தலைவியராக வரும் பெண் பாத்திரங்களின் பெயர்களே, தலைப்புகளாக அமைந்துள்ளன. தமிழச்சி என்னும் பெயர் இன உணர்ச்சியையும், கொடிமுல்லை கவிஞரின் இயற்கை ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றன. தமிழச்சி - சிற்றூர்ப் பெண்ணாகிறாள். கொடிமுல்லையோ பல்லவ நாட்டு இளவரசி. இருவருமே காதல் வயப்பட்டவர்கள். தமிழச்சியின் காதலன் சாதாரண உழவன். கொடிமுல்லையின் காதலனோ சாதாரணக் கல்தச்சன்.

தீமையை எதிர்த்துப் போராடுவதில் கொடிமுல்லையைவிட, தமிழச்சி முன்னணியில் இருக்கிறாள். கொடிமுல்லையின் வாழ்வு தற்கொலையில் முடிகிறது. தமிழச்சியின் வாழ்வோ, புதிய நாட்டை உருவாக்கும் புரட்சி வாழ்வாக அமைகிறது. தமிழச்சி காவியம் சமுதாயப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமுல்லைக் காவியமோ வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்டு மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பற்றியதாகக் காணப்படுகிறது.

இருகாவியங்களிலும் கொலை நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. கொடிமுல்லையில் மானவன்மன் கொலை நடக்கிறது. கதைத் தலைவன் அழகன் தண்டனை பெறுகிறான். தமிழச்சியில் பட்டாளத்துக் குப்பனால் பொன்னன் கொலை செய்யப்படுகிறான். கொலைக்குற்றமோ, கதைத் தலைவி தமிழச்சியின்மீது சாட்டப்படுகிறது; அவள் தண்டனைக்கு ஆளாகிறாள். அழகன் தற்கொலைகளால் துன்பியலாக முடிவது கொடிமுல்லை. பாப்பாத்தி - மதுரைவீரன் திருமணத்துடன் இன்பியலாக முடிவது தமிழச்சி. இவ்வாறு சமூகப் பின்புலமும் வரலாற்றுப் பின்புலமும் கொண்டு, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் புதுமைக் காவியங்களாக இவ்விரு காவியங்களும் படைக்கப்பட்டுள்ளன எனலாம்.

தமிழுணர்வு

கவிஞனுக்குத் தன்னுடைய மொழிதான் முதற்காதலி. தமிழ்மொழியின் ஒலி நயத்திலும் இசையிலும் ஆழ்ந்துவிடும் கவிஞன், அதனை மீண்டும் மீண்டும் செவி குளிரக் கேட்க விரும்புகிறான். காதலர்களின் களவின்பம் தமிழின்பம் இரண்டையும் அழகாக ஒப்பிட்டுக் காட்டுகிறார் வாணிதாசன்.

தலைகாலே தெரியாது காதலர்கள்
தனித்தமிழின் இன்பத்தைத்துய்ப்பது போல
நிலையற்றுக் கிடந்தார்கள் தோட்டத்துள்ளே

என்று தனித்தமிழின் இன்பத்தைத் தமிழச்சியில் புகழ்கிறார். தமிழ் இன்பம் அவளுதடு என்று கொடி முல்லையில் தமிழ்தரும் சுகத்தைக் காதலியின் இதழ்தரும் சுகத்திற்கு ஒப்புமைப்படுத்திக் காட்டுகிறார்.

கத்திக்கும் நானினிமேல் அஞ்சேன் ; வேந்தன்
காவலுக்கும் நானஞ்சேன் ; தமிழைப் போலத்
தித்திக்கும் கொடிமுல்லையாளே! உன்னைச்
சேரவழி அழகனுக்குக் காட்டாயோ சொல்

என்று கொடிமுல்லையை நினைத்துப் பித்தனாகப் புலம்பும் அழகன் மூலமாகத் தமிழைப் புகழ்வதைக் காண முடிகிறது. கொடிமுல்லைக் காவியத்தில் தொடக்கத்திலேயே அரசனை வாழ்த்த வந்த புலவரின் வாய்மொழியாகச் செந்தமிழ்போல் வாழ்க என்று வாழ்த்துவது கவிஞனின் மொழிப்பற்றினை அறிய உதவும் சான்றுகளில் ஒன்று. அதேபோல்,

புலவோய்! நல்ல
அடைத்தேனைத் தமிழ்ப் பாட்டில் பிழிக

என்று தேனைவிடச் செந்தமிழ் சிறந்தது என்பதை விளக்குகிறார்.

உளம்வாட்டும் கொடுந்துயரை மாற்றுகின்ற ஓசைநிறை பாட்டெங்கள் தமிழ்ப்பாட் டேயாம்

என்று தமிழிசையின் பெருமையினைப் பற்றிக் கவிஞர் கொண்டிருந்த வேட்கையின் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறு கொடிமுல்லையிலும் தமிழச்சியிலும் தமிழ் மொழியின் மேன்மையினைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

தொகுப்புரை

இயற்கையாகவே சேரி மக்களின் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே கவிஞர் வாணிதாசன் தமிழச்சி காப்பியத்தைப் படைத்துள்ளார். சேரி மக்களது வாழ்வில் மாற்றம் உருவாக வேண்டும் என்பது கவிஞரின் எண்ணமாகிறது. இந்தக் காவியத்தில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.

* சேரியில் சீர்திருத்தம்.

* காதலை உயர்த்திப் பேசுதல்.

* கைம்மையைக் கண்டிப்பது.

* கற்பின் அவசியத்தைப் பாதுகாக்குமாறு பெண்களுக்கு வலியுறுத்தல்.

* இதிகாச புராணங்களைச் சாடுதல். சாதியக் கொடுமைகளையும் பாகுபாட்டினையும் எதிர்த்தல்.

* பொதுவுடைமைச் சமுதாயத்திற்கு அடிகோலுதல்.

* பெண்கல்வி, முதியோர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தல்.

* குடும்பக் கட்டுப்பாட்டினைப் போற்றல்

* தாய்மொழி, தாய்நாட்டின் பெருமை பேசுதல்.

* திராவிட நாட்டுப் பெருமையை எடுத்துச் சொல்லல்.

* விதவை மணத்தை ஆதரித்தல்

எனக் கவிஞரின் கருத்துகளைக் காவியம் முழுவதிலும் காணலாம்.

வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கொடிமுல்லை, இயற்கையின் அழகு, பெண்ணுரிமைச் சிந்தனை, பகுத்தறிவு, மூடநம்பிக்கைகளை ஒழித்தல் போன்ற சிந்தனைகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. காதலுக்குச் சாதியில்லை என்னும் சீர்திருத்த நோக்கு இச்சிறுகாவியத்தில் சிறப்பிடம் பெறுகின்றது. கதைமாந்தர்களின் இயல்புகள் அழகாகச் சுட்டப்படுகின்றன. உவமை, உருவகம், கற்பனை, தனித்தமிழ் நடையெனக் காப்பியங்களின் சுவைக்கு மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன. தமிழச்சியும் கொடிமுல்லையும் காவிய உலகில் புதியன படைக்கும் புரட்சி நூல்கள் என்றால் அது மிகையாது எனலாம்.

மக்களின் பேச்சு வழக்கில் காணும் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துள்ளார். கவிஞரின் இராகம், தாளம் ஈடுபாட்டையும் இசைப் பாடல்கள் வடிக்கும் ஆர்வத்தையும் இக்காவியங்களில் காண முடிகிறது. திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், தற்காலக் கவிஞர்கள் ஆகியோரின் சிந்தனைகளை மேற்கோள்காட்டியிருப்பது இக்காவியங்களுக்கு மேலும் வலுவூட்டுகின்றன.

கேள்வி பதில்கள்

1. வாணிதாசனின் வாழ்க்கைக் குறிப்பு - வரைக.

விடை : 1915-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 22 -ஆம் நாள் புதுவையை அடுத்த வில்லியனூரில் திருக்காமு நாயுடு துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அரங்கசாமி, எத்திராசன் என்பது செல்லப் பெயராகும். இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவருக்கு ஒன்பது பிள்ளைச் செல்வங்கள். திராவிட இயக்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

2. வாணிதாசனின் முதல் கவிதை எது?

விடை : பாரதி நாள் இன்றடா பாட்டிசைத்துப் பாட்டா

என்ற பாடல் 1938-ஆம் ஆண்டு தமிழன் ஏட்டில் எழுதியது.

3. வாணிதாசன் படைத்த நூல்கள் எத்தனை?

விடை : 17 நூல்கள் இயற்றியுள்ளார்.

4. வாணிதாசன் எந்தெந்த இதழ்களில் கவிதைகள் எழுதினார்?

விடை : தமிழன், ஆனந்தவிகடன், திராவிடநாடு, காதல்குயில், திருவிளக்கு, நெய்தல், பிரசண்ட விகடன், பொன்னி, முத்தாரம், முரசொலி போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார்.

5. தமிழச்சி காவியம் உருவான விதம் பற்றிக் குறிப்பிடுக.

விடை : தான் வாழ்ந்த ஊரைச் சுற்றியுள்ள கிராமத்தில் சேரி மக்களின் வாழ்க்கை அவலத்தைக் கண்ணாரக் கண்டு கொதித்தெழுந்து சீர்திருத்த எண்ணங்களை விதைக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது இந்தக் காவியம். சிற்றூர்ப் பெண்கள் திருந்தினால்தான் நாடு திருந்தும் என்பது என்துணிவு அத் துணிவில் தோன்றியவளே தமிழச்சி என்கிறார்.

6. சாதி வேறுபாட்டினைக் கவிஞர் எவ்வாறு கண்டிக்கிறார்?

விடை : 'சாதிக் காடுகளை வெட்டிச் சாய்க்க வேண்டும்' என்று சேரிப் பெண்கள் கும்மியில் தம் கண்டிப்பினை வெளிப்படுத்துகிறார். சாதியை வகுத்து நம்மைப் பாழ்செய்த தடியர் கூட்டம் என்று சாடியுள்ளார். சாதிப்பெயர்களை ஒழிக்கவேண்டும், ஆண் பெண் இணைந்தது மானுடம். சாதிப் பூட்டை உடைத்தெறிந்து விரும்பியவனையே துணைவனாக அடைய வழி வகுக்கிறார் கவிஞர். 'காதலுக்குத் தொலைதூரம் சாதிமதம்' என்று கொடிமுல்லையில் பேசுவதன் மூலம் சாதிச்சனியனை ஒழிக்கும் நோக்கத்திலேயே தமது படைப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

7. காதல் பற்றி இரு காவியங்களின் கருத்தினைக் குறிப்பிடுக

விடை : 'காதல் துணைவனை அடையாவிட்டால் குவளை தின்று இறந்துபடுவேன்' என்று தமிழச்சியில் பாப்பாத்தி எனும் பாத்திரப் படைப்பின் மூலம் காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார், கவிஞர். வலைப்பட்ட மீனொப்ப அவள் மைக் கண்ணில் அகப்பட்ட மனமடக்கி நடந்திட்டானே எனக் காதலியின் கண்வீச்சில் விழுந்த காதலனின் நிலையை எடுத்துச் சொல்கிறார்.

8. கவிஞர் வாணிதாசனின் தமிழ்மொழிப் பற்றினைக் குறிப்பிடுக.

விடை : காதலர்களின் களவின்பமும் தமிழின்பமும் ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

தலைகாலே தெரியாது காதலர்கள்
தனித்தமிழின் இன்பத்தைத் துய்ப்பது போல
நிலையற்றுக் கிடந்தார்கள் தோட்டத்துள்ளே

என்று தமிழச்சியில் தனித்தமிழின் இன்பத்தைப் புகழ்கிறார்.

தமிழ் இன்பம் அவளுதடு என்றும், தமிழைப் போலத் தித்திக்கும் கொடிமுல்லையாளே! என்று கொடிமுல்லையிலும் தமிழ்மொழியின் மேன்மையினையும் உயர்வினையும் குறிப்பிடுகிறார்.

9. தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் காணலாகும் கற்பனை வளத்துக்குச் சான்று தருக.

விடை : கம்பன், தன் கற்பனையில் ஒரு 'கோசல நாட்டைப் படைத்ததுபோல, தமிழச்சி கண்ட கற்பனை நாடு ஒன்றினைக் கவிஞரும் படைத்துக் காட்டியிருக்கிறார். அக்கற்பனைத் திருநாட்டில், ஆண்டியும் அரசனும் இல்லை; அவசரச் சட்டமும் இல்லை; வேண்டியது விருப்பம் போல் கிடைக்கும்; வழக்குகள் இல்லை; அந்நாட்டில் படிக்காத மக்களே இல்லை; மறுமணம் பெறுவதால் விதவைகள் இல்லை. அந்நாட்டில் உரிமைகளும் பொது; உடைமைகளும் பொதுவாகவே இருக்கும் எனக் கற்பனை நாட்டைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

விண்மீன்கள் இல்லாத வானத்தைக் கரியபட்டுச் சேலை' என்கிறார், 'மதியவன் மறைந்துவிட்ட வானத்தை இருளரசி எப்படி ஆட்கொள்கிறாள்' என்பதை, 'கீழ்வானை இருள் விழுங்கக் கண்டான்' என்று கொடிமுல்லையில் படைக்கிறார்.

10. வாணிதாசன் ஓர் இயற்கைக் கவிஞர் என்பதை நிறுவுக.

விடை : வாணிதாசன் இயற்கையை மனிதவாழ்விற்கு உறுதுணையாக அமைத்துள்ளார். 'மழைபட்ட மதியைப் போன்றாள்!' என்று கொடிமுல்லையையும், மழைபட்ட நிலா முகத்தாள்! என்று தமிழச்சியையும் பற்றிப் பேசுகிறார்.

நல்லபாம்பு என நெளிந்து
நழுவிடும் ஓடை
நாணலின் பூவை யொத்த
நரைமயிர்ப் பாட்டி

என இயற்கைப் பொருள்களை உவமையோடு விளக்குவதிலிருந்து கவிஞருக்கு உள்ள இயற்கை ஈடுபாட்டினைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆசிரியர் பெயர் : கோ. கிருஷ்ணன்

ஆதாரம் - தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

2.9512195122
Nithilavalli Sivakumar Aug 21, 2019 02:41 PM

இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top