பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வில்லி பாரதம்

வில்லி பாரதம் நூலின் சிறப்பு மற்றும் பாரதத்தில் கிருட்டிணன் தூது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி பாரதம் என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுகிறது. தமிழிலக்கியத்தில் பாரத நூல்கள் பற்றிய விளக்கங்களைக் கூறுகின்றது. வில்லிபுத்தூரார் பற்றிய வரலாற்றையும், வில்லிபாரதத்தின் கதையமைப்பு, வருணனை பற்றிய விளக்கத்தையும் கூறுகிறது. தனிவாழ்விலும் பொதுநிகழ்வுகளிலும் தூதுவிடுத்தல் பற்றிய குறிப்பினையும் பாண்டவர்கள் சார்பாகக் கிருட்டிணன் தூது சென்றதன் விளைவு பற்றியும் எடுத்துரைக்கிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

• தமிழில் பாரதக் கதையைச் சொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றி அறியலாம்.

• தனி மனித ஒழுக்கத்தின் இழிவு, மேன்மை பற்றித் தெரிந்து கொள்ளலாம். உலகில் அழிவைத் தரும் போருக்கு அடிப்படைக் காரணங்களுள் ஒன்று மண்ணாசை என்பதை எடுத்துச்சொல்லலாம்.

• கண்ணனின் இளம்பருவ விளையாடல்கள், வீரச்செயல்கள் பற்றி அறியலாம். தருமத்தின் முன் அதர்மம் அழியும் என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.

முன்னுரை

பாரதம் என்னும் சொல்லுக்கு - பரதனது வம்சத்தவரைப் பற்றிய நூல் என்று பொருள். இந்தப் பரதன் சந்திரவம்சத்தில் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடந்தோன்றிப் புகழ் பெற்ற ஓர் அரசன். பரத வம்சத்தைச் சேர்ந்த பாண்டவர், துரியோதனன் ஆகியோரைப் பற்றியும் அவர்களைச் சார்ந்தவர்களைப் பற்றியும் உணர்த்தும் நூல் பாரதம் எனப்பட்டது. நான்கு வேதங்களுக்குச் சமமாக ஐந்தாம் வேதம் என இந்நூல் போற்றப்பட்டது. அனைவராலும் வழிபடத்தக்க மேம்பாட்டை உடையதாயிருத்தலால், இந்த இதிகாசம், 'மகா' எனும் அடைமொழி கொடுக்கப்பட்டு, மகாபாரதம் எனவும் வழங்கும். இந்நூலை முதலில் வடமொழியில் செய்த வேத வியாசமுனிவரால் வைக்கப்பட்ட 'பாரதம்' என்கிற பெயரே, வழிநூலாகிய இத்தமிழ் நூலுக்கும் பெயராயிற்று. எனவே வில்லிபாரதம் ஒரு வழிநூல்.

வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருட்டிணன் தூது, சஞ்சயன் தூது என்னும் மூன்று தூதுச்சருக்கங்கள் உள்ளன. இவற்றில் உலூகன் தூதும், கிருட்டிணன் தூதும் பாண்டவர் சார்பாக நூற்றுவர்பால் அனுப்பப் பெற்றவை. சஞ்சயன் தூது திருதராட்டிரனால் பாண்டவர்பால் விடுக்கப்பெற்றது. கிருட்டிணன் தூது 264 பாடல்களால் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. காப்பியத்தின் உயிர்ப்பகுதியாகக் கிருட்டிணன் தூது அமைகிறது. முதலில் அண்ணன் தம்பி பூசலாக உருவானது; பிறகு பாண்டவர், கெளரவர் மானப்பிரச்சினையாக ஆனது; அதற்குப்பிறகு அரசியல் பிரச்சினையாக வளர்ந்தது. இவ்வாறு ஒரே காப்பியத்தின் கருவானது மூன்று நிலைகளில் நிற்பதால் தான், பாரதம் என்றென்றும் சுவை மிக்க காப்பியமாக விளங்கிவருகிறது.

பாரதத்தின் தொடக்கத்தில் கெளரவ, பாண்டவரின் முன்னோர் வரலாற்றையும் இன்றியமையாத மாந்தர்களின் பிறப்பு நிலையினைப் பற்றியும் விவரித்துப் பங்காளிகளின் பொறாமையே பாரதப் போருக்கான வித்தாகிறது என்பது கூறப்படுகிறது. பாண்டவர்க்கமைந்த நாட்டினைக் கெளரவர் கைக்கொள்ள நினைக்கும் எண்ணமே அந்தப் பொறாமை வளர்வதற்கு உரமாக அமைகிறது.

நூற்றுவரின் தலைவன் துரியோதனன், பாண்டவரின் வலிமை மிக்க வீமனை அழிக்க முடிவுசெய்தல், அரக்கு மாளிகையில் அனைவரையும் அழிக்க முயலுதல், இராஜசூய யாகத்தின் மூலமாகக் கண்ணனுக்குப் பெருமை சேர்த்து, கௌரவர்களைப் பாண்டவர் பழித்தல், மோதல் இல்லாமல் சூது போரால் நூற்றுவர் வெற்றிகொள்ளல், பாஞ்சாலி துகிலுரிதல் - அப்போது கண்ணன் திரெளபதிக்கு உதவுதல், அரசிழந்த பாண்டவர்களின் நிலை எனக் கதை நீண்டு செல்லும் போக்கினைத் தொடர்ந்து, பகையில் அழிவு நேராமல் இருக்க, பாண்டவர் விடுத்த தூதுச் செயல்கள், போர்ச்செயலை நோக்கி விரைவு படுத்தவே உதவுகின்றன. கண்ணன் தூது சென்று ஆற்றிய செயல்கள் கௌரவர்களின் முழு வலிமையைக் குலைத்தன. இறுதியில் போர் மூண்டு துரியோதனன் வீழ்த்தப் பட்டான். தருமன் அரசனானான். கண்ணன் தூது மேற்கொண்டதும், அப்பணியை எவ்வாறு திறம்பட முடித்தான் என்பதும் இப்பாடப் பகுதியில் விளக்கப் பெறுகின்றன.

வில்லிபாரதம்

தமிழில் அதிகமான வடசொற்களைக் கலந்து வரும் நூலாக வில்லி பாரதம் காணப்படுகிறது. சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல் முதலிய நூலழகுகள் இந்நூலில் அமைந்துள்ளன. ஆழ்வார்களுடைய சொற்களும், பொருள் கருத்துகளும் சிற்சில இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிபுத்தூரார் இயற்றிய பெருங்காப்பியம் வில்லி பாரதம். வியாசரை முதல் நூலாசிரியராகக் கொண்ட வில்லிபுத்தூரார் தமக்குமுன் வழங்கிய சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பாரத வெண்பா, வடமொழியிலமைந்த பாலபாரதம், மக்களிடையே வழங்கிய பாரதம், கிளைக்கதைகள், நாட்டுப் பாடல்கள், பழமொழிகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு தமது நூலைப் பாடினார்.

நல்லாப்பிள்ளை பாரதம்

வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலே சுருக்கமாகக் கதையைத் தொகுத்துக் கூறும் 300, 400 பாடல்கள் தவிர, மற்றைய நாலாயிரஞ் செய்யுட்களை எடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை என்பவர், புதிதாகத் தாம் 11 ஆயிரம் பாடல்கள் பாடி, இடையிடையிற்கோத்தும் இறுதியில் சேர்த்தும் பாரதம் 18 பருவங்களையும் பூர்த்தி செய்தார்; அது நல்லாப்பிள்ளை பாரதம் என வழங்கப்படுகிறது.

நூலாசிரியர்

திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகையென்னும் இராசதானியில் கல்வி, அறிவு, செல்வம், அதிகாரங்களில் குறைவின்றி ஆட்சி செலுத்தி வந்தவன் வரபதியாட் கொண்டான். கல்வி, கேள்வித்திறமைகளையும், அடக்கம், அன்பு, ஒழுக்கம் முதலிய நற்குணங்களையும் கொண்ட வில்லிபுத்தூராரின் ஆற்றலைக் கேள்வியுற்ற அம்மன்னன் அவரை அழைத்துத் தனது அவைப் புலவராக்கினான். தனது சமஸ்தானத்துக்கு, உலகம் உள்ளவரைக்கும் அழியாத பெருமை உண்டாகும்படி, வடமொழியில் வேத வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தமிழில் எழுதும்படி வேண்ட, அவ்வாறே வில்லிபுத்தூரார் பாடினார்.

வில்லிபுத்தூரார் திருமுனைப் பாடி நாட்டில் சனியூரில் வீரராகவாச்சாரியாருக்கு மகனாக அவதரித்தவர், வைணவ மதம் சார்ந்த அந்தணர் என்னும் செய்திகள் நூலின் சிறப்புப் பாயிரத்தின் மூலம் அறியமுடிகிறது. தன்னை ஆதரித்த வரபதியாட்கொண்டானை இந்நூலின் இடையிடையே புகழ்ந்து பேசியுள்ளார். இவர் மகாபாரதம் தவிர வேறு நூல் எதுவும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. பிற்காலத்தவர் இவரை 'வில்லிபுத்தூராழ்வார்' என்றே குறிப்பிட்டனர். இவருடைய காலம் ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டு ஆகும். திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரிநாதருடைய சம காலத்தவர் வில்லிபுத்தூரார் என்றும் கூறப்படுகிறது.

நூலாசிரியர் பற்றிய கதை

வில்லிபுத்தூரார்க்கும் இவர் தம்பியர்க்கும் தாய் பாகத்தைப் (பரம்பரைச் சொத்துரிமை) பற்றி விவாதமுண்டாக, அவ்விஷயத்தை அவர்கள் அரசனிடம் கொண்டு சென்றனர்; அரசன் இவரது கல்வித் திறத்தை முன்னரே கேள்வியுற்று அறிந்தவனாதலால், 'இவ்வளவு கற்றறிந்தவர்க்கும் உண்மையறிவு உண்டாகவில்லையே! என்று வருத்தமடைந்து அவ்வுண்மையறிவை இவர்க்கு உண்டாக்குவதற்கு ஏற்ற உபாயம் மகாபாரத நூலைப் பயிலும் படி செய்வதே' என்று உறுதிசெய்து, 'மகாபாரதத்தை நீர் தமிழில் பாடவேண்டும்; பாடின பின்பு தான் உங்கள் வழக்குத் தீர்க்கப்படும்' என்று கட்டளையிட்டான்; உடனே இவர் அவ்வாறே அப்பாரதத்தைப் பாடி, அந்நூலின் நீதியின் கருத்தூன்றியவராய், பின்பு தாமே தம் பங்கை தம்பியர்க்கே கொடுத்துவிட்டார் என்றும் இவரைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது.

காப்பிய அமைப்பு

வட மொழி மகாபாரதத்தில் மொத்தம் 18 பருவங்கள் உள்ளன. வில்லியார், முதல் 10 பருவங்களை மட்டுமே பாடியுள்ளார்.

(1) ஆதி பருவம்

(2) சபா பருவம் (

3) ஆரணிய பருவம்

(4) விராட பருவம்

(5) உத்தியோக பருவம்

(6) வீட்டும் பருவம்

(7) துரோண பருவம்

(8) கன்ன பருவம்

(9) சல்லிய பருவம்

(10) சௌப்திக பருவம்

ஆகியவை. மொத்தம் - 4337 பாடல்கள். 'கிருட்டிணன் தூதுச் சருக்கம்'- உத்தியோக பருவத்தில் அமைந்துள்ளது. 13 ஆண்டுகள் காட்டிலும் மறைந்தும் வாழ்ந்த பிறகு, பாண்டவர்கள் தங்களுக்கு உரிய அரசினைக் கேட்கவே, பாண்டவர் சார்பாகக் கிருட்டிணன் தூது சென்ற வரலாற்றை உணர்த்தும்பகுதி, இது.

கிருட்டிணன் தூது

போரின்றிச் சமாதானத்திலே இராச்சியம் கிடைப்பதானால் மட்டுமே அதனைப் பெற்றுக் கொண்டு வாழ விருப்பமா? அல்லது முன்பு 12 வருஷம் வாசஞ்செய்து பழகியுள்ள கொடிய வனத்திற்கே மீண்டும் சென்று வாழ்நாள் முழுதும் வறுமையில் வாழ விருப்பமா? அல்லது மானத்தையும் வீரத்தையுமே முக்கியமாகக் கொண்டு துணிவாகச் சென்று துரியோதனாதியரை எதிர்த்துப் போர் செய்து வென்று இராச்சியத்தைப் பெற விருப்பமா? எனத் தனித்தனியாகப் பாண்டவரின் கருத்தைக் கேட்டு அறிகிறான் கண்ணன் .

முதலில் தருமன், சமாதானத்தில் காரியத்தை முடிக்க வேண்டும் என்று கண்ணனிடம் தெரிவித்தான். அதற்குக் கண்ணன் சமாதானத்திற்கு வராதவர்களை அழித்தல் நியாயமே என்று தருமனிடம் சொல்கிறான். மீண்டும் தருமனின் சமாதானப் பேச்சினைக் கேட்ட வீமன், தன் அண்ணன் தருமனைப் பழித்து பேசுகிறான். ஒருவாறு தருமனும், கண்ணனும் வீமனை அமைதிப்படுத்தினார்கள். அருச்சுனனும், தன்னுடைய சபதத்தையும், வீமன், திரெளபதி ஆகியோரின் சபதத்தையும் எடுத்துச் சொல்லி, போரினால் மட்டுமே இழந்ததைப் பெறவும், சபதத்தினை முடிக்கவும் கூடும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். நகுலனும் அதே கருத்தைத் தெரிவித்துத் துரியோதனனைத்தான் கொல்ல விரும்புவதாகக் கூறுகிறான். பின்னர், தத்துவ ஞானமுடையவனான சகாதேவனைக் கேட்க, கண்ணனின் திருவுள்ளத்தைத் தான் அறிந்துள்ளதாகச் சொல்லி, அவனது கால்களைக் கட்டினான். பின்பு, கண்ணன் தன்னை விடுவிக்க வேண்ட, விடுவிக்கப்படுகிறான். சகாதேவன் பணிந்து, கண்ணனிடம், இப்பொழுது சமாதானம் தான் சிறந்தது எனச் சொல்ல, அது கேட்ட திரெளபதி அழுது புலம்புகிறாள். அவளைத் தேற்றி, தருமனின் வேண்டுகோளின்படி தூது செல்ல ஆயத்தமானான் கண்ணன். இப்பகுதியை, 1 முதல் 53 வரையிலான பாடல்களால் அறியமுடிகிறது.

முதல் நாள் தூது

கண்ணன் தூது சென்று மீண்ட நிகழ்ச்சி மிகக்குறுகிய கால எல்லைக்குள்ளேயே நிகழ்ந்துள்ளது. சங்குகளும் அழகிய பேரிகைகளும் சல்லரியென்னும் வாத்தியங்களும், தாரைகளும், ஊது கருவிகளும் எல்லாவிடங்களிலும் ஒலிக்க, அழகிய வெண்கொற்றக் குடை நிழலைச் செய்யவும் அரசர்கள் பலருடனும் சதுரங்க சேனைகளுடனும், அத்தினாபுரி நோக்கிப் புறப்பட்டான், கண்ணன். கற்கள் அடர்ந்த மலைகளையும், கொடிய வெப்பம் கொண்ட பாலை நிலத்தையும், காட்டாறுகளையும் கடந்து, உயர்ந்த மதில்களாலும், கோபுரங்களாலும் சூழப்பட்டு விளங்கும் பெரிய அத்தினாபுரியைக் கண்டான். அந்நகரத்தின் மதில்கள், மாடங்கள், இராசவீதிகள், துரியனின் அரண்மனை எனப் பல்வேறு காட்சிகளை இப்பகுதியில் வில்லிபுத்தூரார் வருணித்துள்ளார். மேகமண்டலத்தையும், நட்சத்திரலோகத்தையும் மிகக் கடந்து, எல்லா மலைகளினும் உயர்ந்த சக்கரவாளமலையை விட உயர்ந்த மதில்கள் அந்நகரில் பரந்துள்ளன எனப் பாடுகிறார், புலவர்.

இரண்டாம் நாள் தூது

அத்தினாபுரம் அடைந்த கண்ணன், நகரின் தென்பகுதியில் ஒரு சோலையில் அமர்ந்தான். அவன் பாண்டவர்களுக்குத் தூதனாக வந்துள்ளான் என்பதைத் தூதுவர்கள் துரியோதனனிடம் கூறினர். துரியோதனனும் கண்ணனை வரவேற்கப் புறப்பட்டான். அவனைச் சகுனி தடுத்து நிறுத்தினான். வீடுமன், துரோணன், அசுவத்தாமன், விதுரன், கிருபன் ஆகியோரும் அரசர் பலரும் கண்ணனை எதிர்கொள்ளச் சென்றனர். அத்தினாபுரத்தினுள் சென்ற பின்பு, துரியோதனன் அரண்மனைக்குச் செல்லாமல், தத்துவ ஞானத்தையும் மிக்க அருளையுமுடைய விதுரன் வசிக்கின்ற திருமாளிகையினுள் புகுந்தான். விதுரன், பாண்டவர் பால் மிகுந்த பிரியமுடையவனாதலால், கண்ணன் அவன் வீட்டுக்குச் சென்றான். பின்பு, விதுரன் படைத்த உணவினை உண்டு மகிழ்ந்தான். மாலைப் பொழுது வந்தது. விதுரன், கண்ணனின் வருகையைப்பற்றி வினவினான். ஐவருக்குத் தூதனாகத் தான் வந்துள்ளதைத் தெரிவித்தான். அன்றிரவு விதுரன் மாளிகையிலே உறங்கினான்.

மூன்றாம் நாள் தூது

மூன்றாம் நாள் காலை துரியோதனனின் அவைக்களத்திற்குச் சென்றான். கண்ணன் அவைக்கு வரும்போது எதிர்சென்று யாரும் தொழக்கூடாது என்று துரியோதனன் கட்டளையிட்டான். ஆனால் வீடுமன் முதலியோர் எதிர்கொள்ள, அவையில் நுழைந்தான் கண்ணன். கண்ணனிடம் தன் இல்லத்தில் வந்து தங்காமைக்கு உரிய காரணத்தை, துரியோதனன் வினவினான். "ஒருவர் வீட்டில் உண்டு பின்பு அவரோடு போரிட நினைத்தால் அவர்கள் நரகம் அடைவார்கள்” என்றான் கண்ணன். அதன் பின்பு தூது வந்த காரணத்தைக் கேட்டான் துரியோதனன். "சூதாட்டத்தில் அரசை இழந்து, நீங்கள் சொன்னபடி தவறாமல் அயலார் போலப் புறப்பட்டுச் சென்று, காட்டில் சேர்ந்து, பல நாள்கள் கழித்துப் பாண்டவர்கள் வந்துள்ளார்கள். ஆதலால் நீ அவர்களுக்குரிய நாட்டைக் கொடுப்பாய். நீ அவ்வாறு செய்தால், அரசர்கள் உன்னைப் புகழ்வார்கள். அவ்வாறு செய்யாவிட்டால் 'அறனும் மாண்பும் புகழும் இழப்பாய்' என்றான் கண்ணன்.

துரியோதன் அதனை ஏற்கவில்லை. 'நீ வெறுத்தாலும், ஏனைய மன்னர்கள் திகைத்தாலும் சொன்ன சொல் தவறியவன் எனப் பழித்தாலும், பாண்டவர்கள் என்னோடு சண்டையிட்டாலும், இவ்வுலகில் ஈ இருக்கும் இடம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன்' என்றான். அதனைக் கேட்ட கண்ணன் அவனிடம், "நாடு முழுவதையும் தர விருப்பம் இல்லையென்றால் அதில் பாதியாவது வழங்குவாய்" என்றான். அதற்கும் இணங்கவில்லை. ஐந்து ஊர்களையாவது தருக என்றான். அதையும் ஏற்கவில்லை. கண்ணன் அவனை நோக்கிப் பாண்டவர்களுக்கு அரசாட்சியைக் கொடுக்காமல் போரிட விரும்பினால், குருநிலத்தில் வந்து போரிடுவதாகக் கையடித்து உறுதி தர வேண்டினான். துரியோதனனும் அருகில் இருந்த தூணில் ஓங்கி அறைந்தான். கண்ணனின் பிறப்பை இகழ்ந்தான்.

துரியோதனன், கண்ணனுக்கு விருந்து கொடுத்த விதுரனைப் பழித்துப் பேசினான். 'பொதுமகளின் புதல்வனாகிய விதுரன்' என அவனது பிறப்பை இழித்துப் பேசினான். ஆத்திரம் அடைந்த விதுரன் பழிகருதி அவனைக் கொல்லாது விடுவதாகத் தெரிவித்தான். இனிப் போரில் வில்லைத் தொடவேமாட்டேன் என்று கூறி அதனை உடைத்தெறிந்தான். பாண்டவர் - கெளரவரின் பாட்டனான வீடுமன் துரியனை அவனது பேச்சிற்காகவும் செயலுக்காகவும் கண்டித்தான். அவை முடிந்து, விதுரன் தன் வீடு சென்றான். விதுரன் தன் வில்லை உடைத்தது எதனால் என்று கண்ணன் கேட்டான். அதற்கு விதுரன், "வருவதை உணராதவனும், அமைச்சர் சொல் கேளாதவனும், அழிவை எண்ணாதவனும், நாவடக்கம் இல்லாதவனுமாகிய துரியோதனனுக்காக உயிர் விடுவது பழுது" என்றான்.

துரியோதனனின் கடுஞ்சொல் எனக்குப் பிடிக்காததால் வில்லை ஒடித்தேன் என்றான். கண்ணன் விதுரனின் ஆண்மையைப் புகழ்ந்தான். இனிப் பாரதப் போர் தவிர்க்க இயலாதது என உணர்ந்து, கண்ணன் குந்தியிடம் சொல்கிறான். அவரிடம், தான் தூதனாக வந்ததையும், "கர்ணன், பாண்டவர்கள் தனக்குத் தம்பியர் என்ற உறவு அறியாமையால் விசயனோடு எதிர்த்துப் போரிட உள்ளான். நீ வரலாற்றைத் தெரியச் சொல்லி, அவனைப் பாண்டவர்களோடு சேர்ப்பாயாக" என்றான். ஒருவேளை அவன் வர மறுத்தால் அரவ பாம்புக் கணையை ஒருமுறை மட்டுமே விசயன் மேல்விடுக்குமாறு வரம் கேட்டுப் பெறுமாறும் சொன்னான்.

கண்ணன் மூலமாகத் தன் மகன்தான் கர்ணன் என்பதையறிந்த குந்தி வருந்தினாள். கண்ணன், கலங்கிய குந்தியை நோக்கி, 'பாண்டவருள் ஒருவர் இறந்தால் ஐவரும் உயிர் விடுவர் ஆதலின் கர்ணனைக் குறித்து வருந்தாதே' என்று சொல்லி விதுரன் மாளிகைக்குத் திரும்பினான் கண்ணன்.

நான்காம் நாள் தூது

துரியோதனன், சகுனி, திருதராட்டிரன் மற்றும் கர்ணன் யாவரும் கூடி, விதுரனையும் கண்ணனையும் கொல்லச் செய்ய, தயாராக வைத்திருந்த பொய் ஆசனத்தில் உட்காரவைத்தனர். ஆசனம் முறிந்து நிலவறையில் இறங்கியது. கண்ணன் திருவடிகள் பாதாளத்தில் செல்லத் திருமுடி வானத்தில் செல்லப் பேருருக் கொண்டான். துரியனை நோக்கி, 'அரசனே! உன் தீய அறிவினால் என்னைக் கொல்ல நினைத்தாய். விரைவில் உன்குலம் அனைத்தையும் போர் செய்து ஒரு நொடிப் பொழுதினுள்ளே பொடியாக்குவேன். உனக்கு எதிராக ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று தந்த உறுதிமொழியையும், நான் உன்னைக் கொன்றால், பாண்டவர்கள் சொன்ன சூளுரை பழுதாகும் என்பதையும் கருதியே உன்னைக் கொல்வதற்கு அஞ்சினேன்" என்றான்.

பின்பு, கர்ணனைத் தனியே அழைத்து, அவனது பிறப்புப் பற்றியும், பாண்டவர் பிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தான். அவனைப் பாண்டவரோடு சேருமாறு கூறினான். அதற்குக் கர்ணன், தான் பாண்டவர் பக்கம் சேர்ந்தால் உலகம் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் என்றான். அப்படிச் செய்வது செய்ந்நன்றி மறப்பதாகும் என்றான். கண்ணன் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினான். அடுத்து அசுவத்தாமனைத் துரியோதனனிடமிருந்து பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான் கண்ணன். "யான் பாண்டவர்க்காகக் கேட்ட ஐந்து ஊர்களைத் தர மறுத்ததற்குப் போர்க்களத்தில் நீயே சான்றாவாய். வீரத்தில் உனக்கு நிகராவார் உண்டா? துரியோதனன் உனக்குப் படைத்தலைமை தந்தால் நீ அதனை ஏற்காமல் மறுக்கவேண்டும். அப்பொழுது தான் பாண்டவர் உயிர்பிழைப்பர்' என்றான் கண்ணன்.

அந்நேரத்தில் தன் கை மோதிரத்தைக் கீழே விழவிட, அசுவத்தாமன் அதனை எடுத்துக் கொடுத்து ஏதோ சத்தியம் செய்வதுபோல ஒரு நாடகத்தைக் கண்ணன் செய்வதனைத் துரியோதனன் பார்த்து விடுகிறான். அந்த நேரத்திலிருந்து அசுவத்தாமனை நம்பக்கூடாது என்று ஒதுக்கிவிடுகிறான் துரியோதனன். இதன்பிறகு, கண்ணன் கர்ணனுடைய வலிமையைக் குறைக்கும் வழியில் இறங்கினான்.

இந்திரனை அழைத்து, 'கர்ணன் விசயனைக் கொன்றால் நாடு துரியோதனனுக்கு உரியதாகும். மற்ற பாண்டவரும் இறப்பர். அது விசயனின் தந்தையாகிய உனக்குப் பழியைத் தரும் என்று சொல்லி, கர்ணனை அழிக்கமுடியாது காக்கும் பொருளான அவனது கவச குண்டலத்தைப் பெற்றுவருமாறு சொன்னான். இந்திரனும் கிழட்டு அந்தணன் வேடமிட்டு அவ்வாறு கேட்கும் பொழுது, "கண்ணன் மாயத்தால் இந்திரனை அனுப்பியுள்ளான். கவச குண்டலங்களைத் தராதே" என்று விண்ணிலிருந்து வந்த குரலையும் பொருட்படுத்தாமல் கொடுத்து விடுகிறான் கர்ணன்.

இந்திரன் தன்னை வெளிக்காட்டி, கர்ணனுக்கு வெற்றி தரும் ஒரு வேலாயுதம் தருகிறான். இந்திரன் கண்ணனிடம் வந்தடைகிறான். மீண்டும் கண்ணன், குந்தியைக் கர்ணனிடம் அனுப்ப முயற்சி மேற்கொள்கிறான். குந்தியும் கர்ணனிடம் சென்று, தானே அவன் தாய் என்று உணர்த்தி, நம்பச் செய்கிறாள். பாண்டவரோடு வந்து சேர்ந்து சிறப்போடு வாழ அழைக்கிறாள். அதற்குக் கர்ணன் அன்று முதல் இன்று வரை என்னை அன்போடு அரவணைத்து, எனக்கு ஏற்றமும் அளித்து வரும் துரியனை விட்டு வரமுடியாது என்று அழுது கண்ணீர் மல்கச் சொன்னான். மீண்டும் கர்ணன் தனது தாயைப் பார்த்து, வந்த நோக்கம் யாது என வினவினான்.

போரில் அருச்சுனன் மேல் அரவக் கணையை ஒருமுறைக்கு மேல் விடுதல் கூடாது என்றும், ஐவருள் ஏனையவர்களோடு போரிடக்கூடாது என்று வரம் வேண்டினாள். அவ்விரு வரத்தையும் நல்கினான். தனது தாயிடம், போரில் தான் வீழ்ந்த போது தனக்குப் பாலூட்டி, என் மகன் தான் என்பதை அனைவருக்கும் சொல்லவேண்டும் என்றும் போர் முடியும் வரை பாண்டவர்களுக்கு நான் குந்தியின் மகன் என்ற உண்மையை உரைக்கக் கூடாது என்றும் வேண்டினான் கர்ணன். குந்தியும் அவ்வரங்களைத் தந்தாள். குந்தி அழுதவாறே கண்ணனைச் சென்றடைந்து, நடந்ததை உரைத்தாள். கண்ணனும் தன் எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்து, அன்றே பாண்டவரிடம் திரும்பிச் சென்றான். நடந்த அனைத்தையும் பாண்டவர்கள் அறியுமாறு எடுத்துச் சொன்னான். இவ்வளவில் கண்ணன் தூது நிறைவடைந்தது.

தூதில் இடம் பெறும் பாத்திரங்கள்

வில்லிபாரதத்தில் எடுத்தாண்டுள்ள காப்பிய மாந்தர் ஏறத்தாழ 300 பேர். இவர்களில் மானிடராக வாழ்ந்தவர்களும், தேவர்களும், இராக்கதர்களும் உள்ளனர். மானுட வடிவம் தாங்கி வந்த தெய்வங்களும், தெய்வங்களின் அருளால் பிறந்த மானிடர்களும் இக்காப்பியத்தில் விளங்குகின்றனர். தூதுச் சருக்கத்தில் பாண்டவர்கள், திரெளபதி, விதுரன், துரியோதனன், அசுவத்தாமன், கர்ணன், குந்தி, இந்திரன், வீடுமன், சகுனி ஆகியோர் காணப்படுகின்றனர். திரெளபதிக்கு அடுத்த நிலையில் வில்லியார் அமைக்கும் பெண் பாத்திரப் படைப்பு குந்தியாவாள். தன் மக்களுக்காகத் தாய்மைத் துன்பத்தை விரும்பி ஏற்பதையும், கர்ணன் தன் மகன் என அறிந்து பாண்டவர்பால் அழைக்க முயல்வதையும், அவன் இறந்த பின் உண்மையை உலகுக்கு அறிவிக்கும் நிலையினையும் படிப்போர் உணர்வு பெருகப் படைத்துள்ளார் வில்லியார்.

காப்பியச் சிறப்பு

பல கிளைக் கதைகளும், அணிநலன்களும் வருணனைகளும் காப்பியத்தின் சிறப்பாக அமைந்துள்ளன.

கிளைக் கதைகள்

வில்லி பாரதத்திலும், அந்தக் காலத்து மக்களுக்கு விருப்பமான கதைகள் எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண்ணன், சிவன், ராமன் பற்றிய கதைகளைத் தொடர் வடிவில் சுருக்கமாகச் சுட்டுவதும், பிற்காலத்தில் வழங்கிய சம்பந்தர் கதையைக் குறிப்பிடுவதும், நளாயினி கதை, சிவபெருமான் மூங்கிலில் பிறந்தது, முப்புரம் எரித்தது போன்ற கதைகளும் வில்லிபாரதத்தில் காணமுடிகிறது. கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில், இந்திரன் கோபத்தால் இடையர்க்கும், இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையைப் பெய்வித்த பொழுது கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்தது (பாடல்-27), பூதகி நஞ்சு தீற்றிய முலைப்பாலைக் கொடுத்துக் கண்ணனைக் கொல்ல வந்த கதை (பாடல்-32) ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

நளகூபரன், மணிக்கிரீவன் என்னும் குபேர புத்திரர்கள் - நாரதர் சாபத்தால் மருதமரமாய் ஆனவர்கள், யசோதையால் கயிற்றில் கட்டப்பட்ட கண்ணன் மருதமரத்தில் - குறுக்காக வர, மரங்கள் முறிந்து விழவும், குபேரபுத்திரர்கள் உயிர் பெற்று வந்தனர். (பாடல்-27)

மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்க, திருமால் வாமன அவதாரம் எடுத்துத் திரிவிக்கிரமனாக உலகம் அளந்த கதை (பாடல்-37).

பாணாசுரனைத் தனது சுதர்சனம் எனும் சக்கரத்தைப் பிரயோகித்து, அவனது ஆயிரந்தோள்களையும், தாரை தாரையாய் உதிரமொழுக அறுத்து, அவனுயிரையும் சிதைக்க இருக்கும் போது சிவபெருமான் வேண்டியதால், நான்கு கரங்களுடன் அவனை உயிருடன் விட்டார் திருமால் (பாடல்-4). இவ்வாறு பல கிளைக்கதைகள் கிருட்டிணன் தூதுச்சருக்கத்தில் காணப்படுகின்றன.

அணி நலன்கள்

துரியோதனனை அழிக்க வேண்டும் என்று வீமன் கண்ணனிடம் சொல்லும் போது, தருமன் சொல்வதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. எனது அவயவங்களில் ஒன்றில் மற்றொன்று அஜாக்கிரதையினால் பட்டு அதற்கு வருத்தத்தை உண்டாக்கினால், அதற்காக அந்த வருத்தும் உறுப்பைக் கோபித்துக் களைபவரில்லாமை போல, ஒரு குடும்பத்தவருள் மற்றொருவருக்குச் சோர்வினால் தீங்கிழைத்தால், அதற்கு அவரை அழிப்பது தகுதியன்று என்று கூறும் தருமனின் கருத்தை மிக அழகாக அமைத்துள்ளார் புலவர். (பாடல் 8)

கிருட்டிணன் தூது சென்ற அத்தினாபுரத்தில் நகரத்தினை அடுத்துள்ள சோலைகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, பாக்குமரப் பழுத்த குலைகளுக்குப் பவழத் திரளும், பச்சை இலைகள், பச்சைக் குலைகளுக்கு மரகதமும், தொங்கும் வெள்ளிய பாலைக்கு முத்துக் கோவையும் உவமையாக வருகின்றன. (பாடல் 56)

அத்தினாபுரத்தையும், அந்நகர மாளிகையையும் அந்நகரத்தில் எழும் பலவகை ஒலிகளையும் பற்றிக் குறிக்கும் பாடல்களில் சொற்பொருட் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது. (பாடல்-67) இவ்வாறு வில்லிபாரதத்தில் அணி இலக்கணங்களின் பயன்பாட்டினை அறிய முடிகிறது

வருணனை

வாழ்வின் கூறுகளை உள்ளத்தில் பதியும்படி பல திறன்கள் கொண்ட வருணனைகளை வில்லிபுத்தூராழ்வார் கையாளுகின்றார். யானைப்படையைப் பற்றி அதிகமாக வருணித்துள்ளார்.

கண்ணன் விதுரன் வீட்டில் விருந்துண்டு மகிழ்ந்திருக்கிறான். அந்த மாலைப் பொழுது - சூரியன் அஸ்தமான நிகழ்வை வில்லியார் வருணிக்கிறார். கண்ணபிரான் விருந்துண்டு வீற்றிருந்த சமயத்தில், சூரியனும் மகாமேரு மலைக்கு அந்தப்புறத்தில் சென்று தேவாமிருதத்தை உண்ணுதற்கு அஸ்தமித்தான் என்று வருணிக்கிறார். (பாடல்85) அதுபோலவே, மாலை நேரத்துச் செவ்வானத்தின் தோற்றமானது, பிராமணர்கள் எல்லாரும் தாம் கழிக்கவேண்டிய கடமைகளை எண்ணி, வேதமந்திரமாகிய கொடிய வில்லின் மேலே, நீராகிய பாணத்தைக் கையால் வைத்து, சூரியனது பெரிய பகைவர்களான அசுரர்களின் மேலே பிரயோகித்தலால் பரவிய இரத்தம் போல நினைக்கும்படி மேற்குத் திசை சிவந்தது என்று வருணிக்கிறார். (பாடல்-86)

மேலும், மாலைக்காலத்தில் குவிந்த தாமரைத் தொகுதிகள், பகல் பொழுது முழுவதிலும், உக்கிரமாக எழும் சூரியனொளி, நீரில் வாழும் தெய்வமகளிர் மேல் படாதபடி பரப்பப்பட்டிருந்து, அந்தப் பகல்பொழுது ஒடுங்கிவிட்டது என்கிற காரணத்தால், வரிசையாக மடக்கப்பட்ட, அழகிய மென்மையான பட்டுக்குடைகளைப் போல இருந்தன என்று வருணிக்கிறார். (பாடல் 88)

அந்தக் காலத்தில் அத்தினாபுர நகரத்தின் தோற்றத்தினை,
கலந்து மங்கல முழவு வெண்சங் கொடுகறங்க
மிலைந்த பூங்குழல்வனிதையர் மெய்விளக்கெடுப்பக்
கலந்த தாமரைத் தடமெலாங் குவிந்தது கண்டு

வில்லிபாரதமும் பிறவும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அதைப்போல இராமாயணக் கதை பற்றிய செய்திகளும் வில்லிபாரதத்தில் கூறப்பட்டுள்ளன.

தமிழ் இலக்கிய வரலாறும் பாரதமும்

எட்டுத் தொகையில் ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார் பாடிய பாரதம் கிடைக்கவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் பெருந்தேவனார் என்பவர் பாடிய பாரத வெண்பா' வில் சில பகுதிகளே கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருணிலை விசாகன் என்பவர் பாரதம் பாடியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தைப் பாடினார். அதுவே வில்லிபாரதம் என அழைக்கப்படுகிறது. அதன் பாயிரத்தை இவருடைய மகன் வரந்தருவார் பாடினார் என்பர் சிலர். பாரதக் கதையைத் தமிழில் கூறுவதற்குப் பலர் முயற்சி மேற்கொண்டனர். பாரதக் கதைகள் பல தோன்றினாலும், வில்லிபாரதம் மட்டும் தனிப் பெருமை பெற்றுத் திகழ்கிறது.

தமிழ் இலக்கியத்தில் தூது எனும் இலக்கியவகை 14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. உமாபதி சிவாச்சாரியரின் நெஞ்சு விடுதூது என்பதே முதல் தூது நூலாகும். அதற்குமுன் வடமொழியில் தூது நூல் தோன்றியுள்ளது.

இராமாயணமும் வில்லிபாரதமும்

வில்லிபாரதத்துக்கு முன் கம்பராமாயணம் மிகவும் புகழ் பெற்ற நிலையில் இருந்தது. இராமாயணக் கதை பற்றிய குறிப்புகளை வில்லிபுத்தூரார் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார். இராமனை அருச்சுனனுடன் ஒப்பிடுவதும், வாயுவின் மகனான வீமனை பிறப்பு முதல் அனுமனுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் காணப்படுகிறது.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை வெல்வதற்கு இராமபிரான் சேனையாகக் கூட்டிக் கொண்டு போன வானர வீரர்கள் தென்கடலில் அணைகட்டுதற்பொருட்டுப் பல மலைகளைக் கொணர்ந்து கடலில் இட்டனர் என்பது கதை. இதில் இரத்த வெள்ளத்துக்கு உவர்நீர்க் கடலும், மல்லர்க்கு மலைகளும் உவமை. (பாடல்-200)

'இன்று போய் நாளை வா' என்ற நிலையில் கர்ணனுக்கு இராவணனை உவமை ஆக்கிப் பேசுவதும், சிசுபாலனுக்குக் கும்பகர்ணனை உவமையாகக் கூறுவதும், இராமாயணத்தின் மீது வில்லியார் கொண்ட பற்றை வெளிப்படுத்துகின்றன.

தொகுப்புரை

வில்லி பாரதத்தில் கிருட்டிணன் தூது காப்பியத்தின் உயிர்ப்பகுதி. சாம, பேத, தான, தண்டம் என்னும் அரச நீதியை ஒட்டித் தருமன் கண்ணனைத் தூது விடுக்க எண்ணினான். கண்ணனும் தருமனையும் அவனது தம்பியரையும் உடனிருத்தி அவர்கள் கருத்தினை வினவினான்.

"போர் நிகழ்ந்தால் இருபக்கத்திலும் பலரும் மாள்வர். பெரியோர்களையும், உறவினர்களையும், தம்பியரையும் போரில் கொன்று பெறும் வெற்றியைக் காட்டிலும், திருதராட்டிரன் சஞ்சய முனிவரிடத்துச் சொல்லி அனுப்பியவாறே, காடுகளில் இரவும் பகலும் திரிந்து பழங்களையும், கிழங்குகளையும் உண்டு பிழைத்திருத்தலே சிறப்பாகும். உன் தூது வெற்றி பெறாவிட்டால் பின்னர்ப் போரிடலாம். கெளரவரிடம் நாட்டின் ஒரு பகுதியைக் கேள். தரவில்லையென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அவையும் இல்லையென்றால், ஐந்து இல்லம் வேண்டும், அவற்றையும் தர மறுத்தால் போருக்குப் புறப்படச் சொல்” என்றான் தருமன்.

வீமன் தருமன் உரையைக் கேட்டுச் சினங்கொண்டான். "கண்ணபிரானே! ஊனமிலாத் தருமன் மானமில்லாமல் பேசுகிறான். திரெளபதி அரசவையில் மானத்தால் கூவி முறையிட்ட காலத்தில் 'சினங்கொள்ளாதே' என்று கூறி, நமக்கும் நம் குலத்திற்கும் என்றும் தீராத பழியை உண்டாக்கினான்.' என்று விரைந்து பேசிய வீமனின் கோபத்தைக் கண்ணன் தணித்தான்.

அப்பொழுது விசயன் எழுந்து, கண்ணனையும் தருமனையும் வணங்கி, "இனியும் பொறுத்துக் கொண்டிருந்தால் பகைவர்களை அழிப்பது எப்போது? திரெளபதி குழலை முடிப்பது எப்போது? துகில் உரியப்பட்ட போது, பெருமாளை அழைத்தவாறு அவள் நின்றாள். நாம் மாண்டவரைப் போல வாளா இருந்தோம். இம் மாசு தீர வேண்டாமா? கண்ணன் யாது சொன்னாலும் துரியோதனன் கேட்கமாட்டான்” என்றான். அடுத்து, நகுலனும், "தூதினால் பயன் இல்லை" என்று பேசினான். கண்ணன் தூது போனாலும் துரியோதனன் நாட்டைக் கொடுக்கமாட்டான். ஆதலால் நாட்டைத் தருமாறு கையேந்தி நிற்காமல் போர் தொடுத்தல் வேண்டும் என்றான். அடுத்ததாக, சகாதேவனை மட்டும் தனியாக அழைத்துப்பேசி, கண்ணன் அவனது கருத்தை அறிய முற்பட்டான். சகாதேவன் 'ஆதிமூர்த்தியே, நீ தூது போனால் என்ன? போகாவிட்டால் என்ன? எது எவ்வாறாயினும் எல்லாம் உன் நினைவின் படியே முடியும். அதனை உள்ளபடியே யான் அறிவேன்' என்றான்.

திரெளபதியும் கண்ணனிடம், போரில்லாமல் நாடு கிடையாது என்று சொல்ல, கண்ணன் போர் வேண்டாம் என்று சொல்லவும், திரௌபதி அழுதவாறே நின்றாள். பின்னர், கண்ணன் திரெளபதியின் கண்ணீரைத் துடைத்து, அமைதிப்படுத்தினான். பிறகு, கண்ணன் மலையையும், காட்டையும், ஆறுகளையும் கடந்து அத்தினாபுரி நோக்கிப் புறப்பட்டான். கண்ணன் விதுரன் வீட்டில் தங்கியமையால், துரியோதனனுக்கும் விதுரனுக்கும் பிளவு ஏற்பட்டது. விதுரன் வில்லினை ஒடிக்கவும் செய்தான். இது தூதின் முதல் வெற்றி. அடுத்து, அசுவத்தாமனைத் துரியோதனனிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்தான் கண்ணன். இது இரண்டாவது வெற்றி. குந்தியின் மூலமாகவும், இந்திரனை கொண்டும் கர்ணனின் வலிமையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் கண்ணன். இவ்வாறு கண்ணன் தூதனாகவும், சூதனாகவும் இருந்து, பாரதப் போரைத் துவக்கி, வெற்றியைப் பாண்டவர்க்கு அளித்துக் காத்ததாகக் காப்பியம் அமைகிறது.

கேள்வி பதில்கள்

1. பாரதம் எனும் சொல்லின் பொருள் யாது?

விடை : 'பாரதம்' எனும் சொல்லுக்கு - பரதனது வம்சத்தவரைப் பற்றிய நூல் என்று பொருள். இந்தப் பரதன் சந்திரவம்சத்தில் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடந்தோன்றிப் புகழ் பெற்ற ஓர் அரசன். அவர்கள் பாண்டவரும் துரியோதனனும் அவனைச் சார்ந்தவர்களும் ஆவர். அவர்கள் சரித்திரத்தை உணர்த்தும் நூல் பாரதம்.

2. வட மொழியில் தோன்றிய முதல் பாரத நூலின் பெயர் யாது?

விடை : மகாபாரதம். இதனை முதலில் வடமொழியில் செய்தவர் வேதவியாச . மாமுனிவர் ஆவார்.

3. வில்லிபாரதம் - குறிப்பு வரைக.

விடை : திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்த வில்லிபுத்தூராழ்வார் என்பவர் பாரதத்தைத் தமிழில் இயற்றியுள்ளார். அவர் பெயரையும் சேர்த்து, வில்லிபாரதம் என்று அது அழைக்கப்படுகிறது. இவரது காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு ஆகும். வடமொழியில் உருவான வியாச பாரதத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளது.

4. வில்லிபாரதத்தில் எத்தனைத் தூதுச் சருக்கங்கள் உள்ளன?

விடை : வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருஷ்ணன் தூது, சஞ்சயன் தூது எனும் மூன்று தூதுச் சருக்கங்கள் உள்ளன

5. வில்லிபாரதத்தில் உள்ள பருவங்கள் எத்தனை?

விடை 10 பருவங்கள் கொண்டு வில்லிபாரதம் இயற்றப்பட்டுள்ளது.

6. வில்லிபுத்தூராழ்வார் பற்றிக் குறிப்பிடுக.

விடை : வில்லிபுத்தூராழ்வார் தமிழில் மகாபாரதம் பாடிய ஒரு மகாகவி. வைணவர்; அந்தணர். திருமுனைப்பாடி நாட்டில் 'வக்கபாகை' - இராசதானியை ஆண்டு வந்த வரபதியாட்கொண்டான் எனும் அரசனால் ஆதரிக்கப்பட்டவர். இவர் மகாபாரதம் தவிர, வேறு நூலெதுவும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாருக்கு 'வில்லிபுத்தூராழ்வார்' என்று ஒரு பெயர் உண்டு. இப்பெயரையே இவர் பெற்றோர் தம் மகனுக்கு இட்டனர். இவர் அதிகமான வடசொற்களைத் தம் நூலில் கையாண்டுள்ளார்

7. கிருட்டிணன் தூதில் இடம்பெறும் கதைமாந்தர் யாவர்?

விடை : கிருட்டிணன் தூதில், பாண்டவர் ஐவர், திரெளபதி, விதுரன், துரியோதனன், அசுவத்தாமன், கர்ணன், சகுனி, குந்தி, வீடுமன், இந்திரன் போன்ற கதைமாந்தர் இடம் பெறுகின்றனர்.

8. கிருட்டிணன் தூதில் இடம் பெற்றுள்ள கிளைக் கதைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுக.

விடை : இந்திரன் கோபத்தால் இடையர்க்கும், இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையைப் பெய்வித்த போது, கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்தது, இக்கதை அச்சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

9. மாலைப் பொழுதின் வருணனையை வில்லிபுத்தூரார் எங்ஙனம் விளக்கியுள்ளார்?

விடை : மாலைக் காலத்தில் குவிந்த தாமரைத் தொகுதிகள் பகல் பொழுது முழுவதும் உக்கிரமாக எழும் சூரியனொளி, நீரில் வாழும் தெய்வ மகளிர் மேல் படாதபடி பரப்பப்பட்டிருந்தது. அப்பகல் பொழுது ஒடுங்கிவிட்டதென்ற காரணத்தால், வரிசையாக மடக்கப்பட்ட, அழகிய மென்மையான பட்டுக் குடைகளைப் போன்று இருந்தன என வருணித்துள்ளார்.

ஆசிரியர் பெயர் : கோ. கிருஷ்ணன்

ஆதாரம் - தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

Filed under:
3.17857142857
வாலி Aug 24, 2020 11:51 AM

அருமையான தகவல்...

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top