பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காவியமும் ஓவியமும் பாகம் 2

காவியமும் ஓவியமும் எனும் நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

'சிறு குழலோசை'

தோழி: ஆடவர் தம்முடைய கடமைகளைச் செய்வதற்குப் பிரிவதும் அவர் பிரிந்த காலத்தில் காதலிமார் பிரிவுத் துன்பத்தைச் சகித்திருப்பதும் உலக வழக்கம். உன்னுடைய கணவர், மேலும் மேலும் இல்லறம் சிறந்து நடக்கவேண்டுமென்ற எண்ணத்தால் பொருள் ஈட்டத் துணிந்தார். பொருள் ஈட்டுவதற்குச் சில காலம் உன்னைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற துயரம் அவருக்கும் உண்டு. ஆனாலும் கடமை உணர்ச்சியும் உன்னுடைய திறமையிலே நம்பிக்கையும் உடையவராகையினால் அவர் தம்முடைய முயற்சியை மேற்கொண்டார். திருட்டுத் தனமாகப் போகவில்லை. உன்னிடம் சொல்லிக் கொண்டுதானே பிரிந்தார்?

தலைவி: நீ சொல்கின்ற பேச்சிலுள்ள நியாயம் நன்றாகப் புலப்படுகிறது. என்னுடைய புத்தி இன்னும் பல சமாதானங்களைத் தெரிந்து கொண்டே இருக்கிறது ஆனால்......?

தோழி: அதுதான் சொல்லுகிறேன். உன்னுடைய அறிவினால் நீயே சமாதானம் செய்து கொண்டு ஆறுதல் அடைந்திருக்க வேண்டும். ஒருவர் சொல்லி ஆறுதல் அடைவதென்பது நடவாத காரியம். அவருடைய அன்பு உனக்குத் தெரியாதா? உன்னைக் காட்டிலும் அதிகமாக மற்றொருவருக்குத் தெரியப் போகிறதா? ஆகையால் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றியுற வேண்டுமென்ற வேண்டுகோளோடு நீ சகித்து இருந்தால் உனக்கு எவ்வளவோ நல்லது.

தலைவி: அவர் கடமையில் எனக்கும் பங்கு உண்டென்பதை நான் நன்கு உணர்கிறேன். அவர் போன காரியத்தால் விளையும் பயனிற் பெரும்பாலும் எனக்கு நன்மை பயப்பதென்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமன்று; நம்முடைய இல்லற வாழ்க்கையில் பொருள் இல்லாவிட்டால் அறமும் இல்லை, இன்பமும் இல்லையென்று அவர் அறிவுறுத்திச் சென்றாரே; அந்த வார்த்தைகளை நன்றாகத் தெளிந்தே நான் விடைகொடுத்தேன். இவ்வளவும் அறிவின் செயல். ஆனால்....!

தோழி: அறிவுக்கு மிஞ்சி என்ன இருக்கிறது? ஆனால், ஆனால் என்று சொல்கிறாயே; அந்த ஆனாலென்பது என்னவென்று சொல்லிவிடு.

தலைவி: அதச் சொல்வதற்குள் நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய்; தடை சொல்கிறாய், உபதேசம் செய்கிறாய்.

தோழி: இதோ, பார். நான் வாயை மூடிக் கொள்கிறேன். நீ அந்த 'ஆனால்' விடுகதையை விடுவி, பார்க்கலாம்.

தலைவி: என் அறிவு என் தலைவருடைய முயற்ச்சிக்கு அரண் செய்கிறது. ஆனால் என்னுடைய உள்ளத்திலே, காரணமில்லாமல் தோன்றுகிற உணர்ச்சி இருக்கிறதே, அதுதான் என்னை அறிவற்றவளாக்குகிறது; பேதைப் பெண்ணாகச் செய்து விடுகிறது. அறிவு, நியாயங்களை ஆராய்ந்து வரும் போது அந்த உணர்ச்சி கீழறுத்துக்கொண்டே வருகிறது

தோழி: நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை.

தலைவி: உனக்கு விளங்காது; எனக்கே விளங்கவில்லை. உன்னுடைய அறிவுக்குத் தோன்றுகிற காரணங்களும் நியாயங்களும் எனக்கும் தோன்றுகின்றனவென்று சொன்னேனல்லவா? அந்த நிலையில் நான் அறிவுடையவள்தான். ஆனால், அந்த அறிவையும் ஏமாற்றிவிட்டு எந்த மாதிரி அடக்கப் பார்த்தாலும் அடங்காமல் உள்ளத்தின் அடியிலே ஆடுள்ளி எழுகிற உணர்ச்சி - அதைத் துன்பமென்று சொல்வதா? இன்பமென்று சொல்வதா? ஒன்றுமே தெரியவில்லை. அந்த உணர்ச்சிதான் என்னைப் பேதையாக்குகிறது. இதோ பார்: அன்று இந்த அழகான மாலைக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து நிற்பேன்! இப்பொழுது மாலைக்காலம் ஏன் வருகிறதென்று பயமுண்டாகிறது.

சூரியன் மலை வாயில் விழுந்திருக்கிறான். வானமண்டலம் முழுவதும் செக்கச் செவேலென்றிருக்கிறது. முன்பெல்லாம் இதைக் கண்டால் என் உடம்பிலே ஒரு ஜீவசக்தி உண்டாகிவிடும். இப்போதோ இரத்தக்குழம்பைக் கண்டாற்போலல்லவோ தோன்றுகிறது? இந்தப் புல்லிய மாலை...! (திடீரென்று காதைப் பொத்திக்கொள்கிறாள்.)

தோழி: (திடுக்கிட்டு) என்ன இது? ஏன் இப்படி நடுங்குகிறாய்? ஏன் காதைப் பொத்திக் கொள்கிறாய்?

தலைவி: (பின்னும் இறுகக் காதைப் பொத்திக் கொள்கிறாள்.)

தோழி: என்ன இப்படி திக்பிரமை பிடித்தவள்போல் இருக்கிறாயே! சொல். எனக்குப் பயமாக இருக்கிறது. ஏன் இப்படிச் செய்கிறாய்? சொல், சொல்.

தலைவி: உனக்குக் கேட்கிறதா?

தோழி: என்ன?

தலைவி: என் காதில் வேல் பாய்ந்ததே, நீ உணரவில்லையா?

தோழி: வேலாவது, வாளாவது! பைத்தியம் பிடித்துவிட்டதா?

தலைவி: இன்னும் கேட்கிறதா?

தோழி: எனக்கு ஒன்றும் கேட்கவில்லை. உன்னுடைய கலங்கிய வார்த்தைகளைத் தான் கேட்கிறேன்.

தலைவி: கேட்கவில்லையா? உற்றுக் கேள்.

தோழி: ஒன்றும் கேட்கவில்லையே! (கவனிக்கிறாள்.) நடுங்கும்படியான இடியோசை ஒன்றும் காணவில்லையே! அதற்கு மாறாக மதுரமான ஓசை யொன்று கேட்கிறது.

தலைவி: கவனித்துப் பார்த்துச் சொல்.

தோழி: மாலை வந்துவிட்டது. பசுக்களை மேய்க்கக் கொண்டுபோன இடையன் மேய்த்து விட்டுத் திரும்பி ஓட்டி வருகிறான். வரும்போது ஊதுகிற புல்லாங்குழல் ஓசை எவ்வளவு இனிமையாக விழுகிறது. இதோ, மிகவும் தெளிவாகக் கேட்கிறதே! வேறு ஒன்றும் கேட்கவில்லையே!

தலைவி: அதைத்தான் சொல்கிறேன். அது என் காதில் இனிமையாக விழ வில்லையே. வேலைக் கொண்டு எறிவது போல இருக்கிறதே. புல்லாங் குழலோசை அது, கேட்பதற்கு இனிமையானது, இடையன் ஊதுகிறான் என்ற விஷயங்கள் எனக்குத் தெரிகின்றன. ஆனால் அந்தக் குழலோசையின் மதுரத்தைக் கேட்க எனக்குக் காதில்லை. அது செவிவழியே பாய்ந்து உள்ளத்தில் வேல்போல் ஊடுருவிச் செல்கிறது. ஆயன் திரும்பி வீட்டுக்கு வருகிறான்; மாடுகள் வயிறார மேய்ந்து வருகின்றன. உலகமே மாலைக் காலத்தில் தன்னுடைய சொந்த வீட்டுக்கு மீள்கிறது. என்னுடைய காதலரோ இன்னும் மீண்டுவரவில்லை; மீண்டு வருபவர்களுக்கு அல்லவா புல்லாங்குழற் கீதம் இனிக்கும்? எனக்கு, மீட்சி நிறைந்த உலகத்தில் என் தனிமையைத்தான் எடுத்துக்காட்டுகிறது. தோழி! நான் என் செய்வேன்!

தோழி: (தனக்குள்): காமமயக்கத்தின் விசித் திரந்தான் எவ்வளவு விநோதமாயிருக்கிறது! இனிய பொருளிலே இன்னாமையைக் காணும் காதலின் தத்துவம், உணர்ந்தவர்களுக்கே விளங்கும்.

தலைவி கூற்று

தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை

ஆரான்பின் ஆயன் உவந்ததும் - சீர்சால்

சிறுகுழல் ஓசை செறிதொடி, வேல்கொண்

டெறிவது போலும் எனக்கு.

ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார் பாட்டு.

[தேரோன் - தேரையுடைய சூரியன். செக்கை - செவ்வானம். புன்மாலை - பொலிவழிந்த மாலைக்காலம். ஆர் அன்பின் - அரிய பசுக்களின் பின்னாலே. ஆயன் - இடையன். செறி தொடி - இறுகிய வளைகளை அணிந்த தோழியே. எறிவது - குத்துவது.)

தேயும் உயிர்

அழகிய ஓடை; மலையடிவாரத்தில் இருபுறத்திலும் உள்ள பாறைகளில் மோதும் அலைகள், மெல்ல மெல்ல ஓரங்களில் ஒதுங்கி வரும் மலர்கள், தளிர்கள், இடை இடையே அருவியே பூத்தது போன்ற சிறுசிறு நுரைத் தொகுதிகள். முதல் நாள் தான் மழை பெய்தது. அதனாற் புதுவெள்ளம் வந்திருக்கிறது. 'நுரையும் நுங்குமாக' அருவியின் புதுமைக்கோலம் விளங்குகின்றது. ஒரு சிறு நுரை. அதன் ஜன்மஸ்தானம் எதுவோ தெரியவில்லை. கரையோரத்தில் மெல்ல மெல்ல வரும் போதே அங்கேயுள்ள சிறு கற்களின்மேல் அது மோதுகின்றது. ஒரு தடவை மோதினவுடன் அதிலிருந்து ஒரு பகுதி கரைந்துவிடுகிறது. அப்புறம் சிறிது தூரம் மெல்ல மெல்ல அருவியின் போக்கிலே கலக்கிறது. மீண்டும் கரையோரத்தில் உள்ள பாறையில் மோதிச் சுழலுகிறது. அந்தச் சுழற்சியிலே அதன் உருவம் பின்னும் சிறுத்துவிடுகின்றது. இப்படி வரவர அது தேய்ந்து உருமாறி வருகின்றது. என்ன வியப்பு! சிறிது நேரத்திற்கு முன்னே கண்ட அந்த நுரை எங்கே! இப்போது அதைக் காணோமே! அந்தச் சிறு நுரை அருவிக் கரையிலுள்ள கற்களில் மோதிமோதி மெல்ல மெல்லத் தேய்ந்து இப்பொழுது இல்லையாயிற்று.

ஒரு புலவன் இந்தக் காட்சியிலே உள்ளத்தை இழந்துவிடுகிறான். உலக வாழ்க்கையாகிய அருவியிலே எத்தனை உயிர்களாகிய நுரைகள் வேதனைக் கற்களில் மோதி மோதித் தேய்கின்றன! அந்த நினைவைத் தான் கண்ட காட்சியோடு அவன் பொருத்திப் பார்க்கிறான். புறத்தே கண்ட ஈசுவர சிருஷ்டியை உபமானமாக வைத்து அப்பெரும்புலவன் அகத்தே ஒரு ஜீவ சித்திரத்தைச் சிருஷ்டிக்கிறான்.

உயிர் ஒன்று உடல் இரண்டாக வாழ்ந்த காதலர்களில், காதலன் காதலியைச் சிலகாலம் பிரிய நேர்கிறது. அவள் பிரிவெனும் கொடுந்தீயினால் வெம்புகிறாள். முன்பு இன்ப மயமாக இருந்த உலகம் முழுவதும் அவளுக்கு இப்பொழுது முள்ளடர்ந்த காடாக இருக்கிறது. அவளுடைய நிலை, மலரினும் மெல்லிய காதலின் தன்மை முதலியவற்றின் உண்மையை வெளியில் உள்ளார் எப்படி அறியக்கூடும்? அவளுடைய உயிர்த் தோழியே அறியவில்லை. "உலகத்திலே கணவன் மனைவி யென்று இருந்தால் பிரியாமலும் வேறு ஊருக்குப் போகாமலும் இருப்பார்களா? உன்னுடைய ஆசையை அடக்கிக் கொள்ளக் கூடாதா?" என்று அவள் கேட்கிறாள்.

காதலின் சக்தியை அவள் அறிந்துகொள்ள வில்லை என்பதைத் தலைவி உணர்கின்றாள்; 'இப்படியும் வன்னெஞ்சக்காரர்கள் இருப்பார்களா? காதலை அடக்குவதாவது!' என்று எண்ணுகிறாள். காதல் உயிரோடு பிணைக்கப்பட்டதாயிற்றே: அதை விரிப்பதும், சுருக்குவதும் எப்படி? அவளுடைய நெஞ்சத்தில் பிரிவால் உண்டான துன்பத்தோடு, மனமறிந்த தோழிகூடத் தன் நிலையை அறியாமல் இப்படிச் சொல்லும் கொடுமையும் கலந்து வேதனையை மிகுவிக்கிறது.

தோழிக்குப் பதில் சொல்ல விரும்பினாள். ஆனால் அந்தக் கல்நெஞ்சக்காரியினுடைய முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு அவள் மனம் பொருந்த வில்லை. யாரையோ பார்த்துச் சொல்லுவது போலச் சொல்ல ஆரம்பிக்கிறாள்: "காதலைத் தடுத்து அடக்குவாயென்று சொல்கிறார்களே, அவர்களுக்கு அந்தக் காதலைப்பற்றி ஒன்றுமே தெரியாதோ? அவர்கள் காதலைத் தெரிந்து கொள்ள மாட்டாத அவ்வளவு வன்மை யுடையவர்களா? அவர்கள் அப்படியே இருக்கட்டும். நமக்கு அது சாத்தியமில்லை. நாம் எம்முடைய காதலரைக் காணோமானால் மிகுந்த துன்பம் பெருகிய உள்ளத்தோடு, கரையிலுள்ள கற்களில் மோதிவரும் சிறிய நுரையைப்போல் மெல்ல மெல்ல இல்லையாகி விடுவோம்" என்று சொல்லுகின்றாள்.

இவ்வாறு கவிஞனது மனத்துள் ஒரு சிறிய காட்சி சிருஷ்டிக்கப்படுகிறது. அதன் பயனாக அவன் வாயிலிருந்து ஒரு செய்யுள் எழுகின்றது:

தலைவி கூற்று

காமம் தாங்குமதி என்போர், தாம் அஃது

அறியலர் கொல்லோ? அனைமது கையர்கொல்!

யாம்எம் காதலர்க் காணோம் யின்

செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

கல்பொரு சிறுநுரை போல

மெல்ல மெல்ல இல்லா குதுமே.

-குறுந்தொகை - கல்பொரு சிறு நுரையார் பாட்டு.

(தாங்குமதி - தடுப்பாயாக. மதுகை - வன்மை . துனி - துன்பம். பொருதல் - மோதுதல்.]

இந்த அரிய கவியைக் கவிஞன் புலவர் குழாத்திலே மிதக்கவிடுகிறான். புலவர் நெஞ்சை இக்கவி அள்ளுகின்றது. அது முதல் இக்கவியை இயற்றின கவிஞனை அவர்கள் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவனைக் காணும்போதெல்லாம் அவர்கள் தம்முடைய அகத்தே, கல்பொரு சிறுநுரையை அல்லவா காணுகிறார்கள்? ஆதலால் அக்கவிஞனையும் "கல் பொரு சிறு நுரையார்" என்றே வழங்கத் தலைப் பட்டனர்.

'மான் செய்த தந்திரம்'

அன்பும் கடமையும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதுபோலத் தோன்றுகின்றன. அறம் செய்வது அவன் கடமை. அதற்குரிய பொருள் ஈட்டுவதும் அவன் கடமை.

பொருள் அவனிடம் நிரம்ப இருக்கிறது. ஆனாலும் அப்பொருள் அவன் சம்பாதித்தது அன்று; அவனுடைய பரம்பரைச் செல்வம்; அதைச் செல்வமாகவே கருதல் கூடாது. அப்படி அதை தன் கடமையை நிறைவேற்றுதற்காகச் செலவழித்தால் அவனது ஆண்மைக்கு இழுக்கு வந்துவிடும். தானே உழைத்துச் சம்பாதித்து விருந்தோம்ப வேண்டும்; இது பெரியோர்கள் வைத்த நியதி.

இந்த நியதிப்படி அவன் வெளிநாட்டுக்குச் சென்று பொருள் தேட எண்ணுகிறான். தன் அருமைக் காதலியைப் பிரிந்து செல்வதற்கு அவன் மனம் துணியவில்லை; கலங்கித் தடுமாறுகின்றது; ஆயினும் 'நம் ஆண்மைக்கு இழுக்கு வருமே' என்ற அச்சத்தால் அவன் பிரிந்துவிடுகிறான். அதற்கு முன் தான் போவதைப்பற்றி பலகால் எண்ணி, 'அவளுக்குக் கூறுவதா? வேண்டாமா?' என்று மனங் குழம்பி நிற்கிறான். இறுதியினில் காதலியின் உயிர்த் தோழியினிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறான்.

பொருள் எளிதில் கிடைத்துவிடுகிறதா? காடும் மலையும் கடுகி வழி நடந்து வேறு தேசம் செல்ல வேண்டும். மழை மறந்து பாலைவனமாகப் போன இடங்கள் இடையே இருக்கின்றன. கொடுங்கோல் அரசனது நாட்டைப்போல நினைப்போர் உள்ளமும் சுடும். பாலை, பயிர் பச்சை ஈவிரக்கம் இல்லாமல் கிடக்கின்றது. எங்கோ ஒரு மூலையில் ஒரு சாண் உயரத்தில் ஒரு மொட்டை மூங்கில் நிற்கிறது. அதில் இலையும் இல்லை; கொழுந்தும் இல்லை. பாறைகளெல்லாம் பொரிந்து போய் ஆருத்திரமூர்த்தியின் நெற்றி கண்ணின் பார்வை விழுந்த இடத்தைப்போல் அந்தப் பூமி ஒரே பரப்பாகப் பரந்திருக்கிறது. கானலும், அதை நீரென்று எண்ணி ஓடித் திரியும் ஒன்று அல்லது இரண்டு மான்களும் அதுவும் உலகத்தில் ஒரு பகுதி என்பதை நினைவுறுத்திக் கொண்டிடுக்கின்றன. காதலன் போகும் வழி இதுதான்.

தோழி பாலை நிலத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறாள். அதன் வெம்மையையும், அதன் வழியே வியாபாரிகள் பயணம் செய்வதையும், வழிப்பறி செய்வோர் அவர்களைக் கொள்ளை இடுவதையும் அவளுக்குப் பலர் சொல்லி இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் அவள் நினைவுக்குக் கொண்டு வருகிறாள். தன் உயிர்க் காதலனது பிரிவைத் தாங்க மாட்டாமல் துடித்துச் சோர்ந்து விழுந்து கிடக்கும் தலைவியைப் பார்க்கும்போது அவள் மனம் மறுகுகின்றது. 'இவள் துயரத்தை மாற்றுவது எப்படி? என்று யோசிக்கிறாள். அவளுக்குக் கற்பனை அறிவு உண்டு. தலைவிக்குக் கதைகள் கூறிப் பொழுதுபோக்கும் தந்திரத்தில் அவள் மிகவும் சாமர்த்தியம் உடையவள். ஆதலின், பாலை நிலத்தின் கொடுமை பரப்புக் கிடையே காணப்படும் அன்பை, தூய காதலை, வெளிப்படுத்தும் ஒரு காட்சியை அவள் உள்ளத்துள்ளே காண்கின்றாள்.

நீரில்லாத பாலைவனந்தான் அது. பல இடங்களில் பழைய காலத்தில் தண்ணீர் தேங்கி இருந்த குழிகள் மாத்திரம் இருக்கின்றன. இரண்டு மான்கள் நாவறண்டு கண் சுழலத் திரிகின்றன. ஒன்று பெண்; மற்றொன்று ஆண்.

ஆண் மாணுக்குத் தன் தாகம் பெரிதாகத் தோன்ற வில்லை. 'இந்த மெல்லியலுக்குச் சிறிது நீர் தேடித் தர - வேண்டுமே!' என்று அது தவிக்கின்றது. கடவுள் கருணை செய்கிறார். எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறிய சுனை காணப்படுகிறது. சூரியனது வெயிலால் அதில் சுண்டிப்போய்க் குழம்பிய சிறிதளவு நீர் தேங்கி நிற்கிறது. இரண்டு மான்களும் அந்தச் சுனைக்கருகில் நிற்கின்றன.

அன்பின் அதிசய சக்திதான் அன்ன சிறப்புடையது! அன்பின் முதிர்வில் இணையற்ற தியாகம் கனிகின்றது. அந்தச் சுனையிலுள்ள சிறிதளவு நீரை யார் உண்பது என்பதில் விவாதம் வந்துவிடுகின்றது. அசுர எண்ணம் அந்த மான்களிடத்தில் தோன்ற வில்லை. 'நீ குடி' என்று ஆண்மான் அன்பு கனியச் சொல்கிறது; 'நீதான் குடிக்கவேண்டும்' என்று பெண் மான் பேசுகிறது. தெய்வீகக் காதலிலே தோன்றிய எண்ணமல்லவா?

சிறிது நேரம் இரண்டும் அங்கே நிற்கின்றன. ஆண்மான் தன்னுடைய ஆண்மை அதிகாரத்தினால் பெண்மானைக் குடிக்கும்படி வற்புறுத்தலாம். பெண் மானும் அந்த வற்புறுத்தலுக்கு அஞ்சிக் குடிக்கலாம். அப்பொழுது அது மனத்தில் மகிழ்ச்சியோடு இனிமையாக உண்ணாதே. 'நம் காதலன் குடிக்க வில்லையே!' என்ற வருத்தத்தோடு அது குடிக்கும். அந்த வருத்த மிகுதியினால் அது குடித்தும் குடிக்காதது போலவே அல்லவா இருக்கும்? இந்த யோசனை ஆண் மானுக்குத் தோன்றுகிறது. இரண்டு பேரும் குடிக்கவோ அதில் ஜலம் இல்லை, அது போதாது. இந்தச் சங்கடத்தில் என்ன செய்வது?

தான் உண்டு மிஞ்சிய நீரைக் குடிப்பதானால் பெண்மான் அதனை இனிது உண்ணும். இல்லை யெனில் உண்ணாது. அதன் காதல் உயர்வு அப்படி இருக்கிறது. இந்தப் பெரிய சிக்கலைப் போக்கு வதற்குத் திடீரென்று அதற்கு ஒரு தந்திரம் தோன்று கின்றது.

வெகு வேகமாக அந்தச் சுனையில் ஆண்மான் தன் வாயை வைது உறிஞ்சுகின்றது; வாஸ்தவத்தில் ஜலத்தைக் குடிக்கவில்லை. குடிப்பது போலப் பாசாங்கு செய்கிறது. "உஸ்" என்ற ஒலி மட்டும் கேட்கிறது. அது பெண்மானின் காதிலே படும்போது அதன் உள்ளம் குளிர்கின்றது. பாதித்தாகம் அடங்கி விடுகிறது. 'நம் காதலன் உண்டு தாகம் தீர்த்துக் கொண்டான். அவன் உண்டு மிஞ்சியதை நாம் இனிக் குடிக்கலாம்' என்று அது நினைக்கின்றது. அப்படியே மிக்க மகிழ்ச்சியோடு அது சுனையிற் சிறிதளவுள்ள நீரைக் குடித்துவிடுகின்றது. அந்நீர் எய்தாது (போதாது) என்று எண்ணிக் கலங்கிய கலைமான், பிணைமான் இனிது உண்ண வேண்டித் தன் கள்ளத்தினால் ஊச்சிய (உறிஞ்சிய) தந்திரம் பலித்து விட்டது. அது பிணைமானைத் தழுவிக் களிக்கின்றது.

பாலை வெம்மையினிடையே நிகழும் இந்த அன்பு நிகழ்ச்சி தோழியின் உள்ளத்தைக் குளிர்விக்கின்றது. அதை அப்படியே தலைவிக்குச் சொல்கிறாள். 'உன் காதலர் திருவுள்ளத்திலே போவதாக விரும்பிய நெறி இத்தகையது' என்கிறாள். 'வெவ்விய பாலையிலே ஆண்மான் தன் பெண்மானின் துயரைத் தீர்க்கச் செய்யும் தந்திரத்தைப் பார்த்து நின் காதலன் உன்னை நினைப்பான். அந்த மானுக்குள்ள அன்பு நிலைகூடத் தன்னிடத்திலே இல்லையே என்று வருந்துவான். விரைவிலே போன காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடுவான்' என்ற விஷயத்தைத் தோழி சொல்வதில்லை; ஆனாலும் அந்த மான் கதையைக் கேட்ட தலைவி அதை ஊகித்துக் கொள்கிறாள். அவளுக்கு நம்பிக்கை உதயமாகிறது. 'வருவான்' என்ற துணிவோடு அவனை எதிர்பார்த்து நிற்கிறாள்.

இந்தக் காட்சிகளையே பின்வரும் பாடல் உணர்த்துகிறது.

தோழி கூற்று

சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணைமான் இனி துண்ண வேண்டிக்--கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்

உள்ளம் படர்ந்த நெறி.

--ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்.

[எய்தாது - போதாது. பிணைமான் - பெண்மான். கலை மான் - ஆண்மான். கள்ளத்தின் - பொய்யாக. ஊச்சும் - உறிஞ்சும். சுரம் - பாலைவனம். படர்ந்த - விரும்பிய.]

நெஞ்சமும் அறிவும்

மாலை வேளை. ஒரு காட்டின் நடுவிலே பாசறை அமைந்திருக்கிறது. இரும்பை உருக்கி வார்த்தாற் போன்ற சரீரத்தையுடைய ஒரு வீரன் பாசறையைச் சுற்றிக்கொண்டு உலவி வருகிறான். போரினிடையே ஒரு நாள் ஓய்வுக்கு இடம் இருந்தது. குதிரைப் பந்தியையும் யானைப் பந்தியையும் சுற்றிப்பார்த்து வரலாமென்று புறப்பட்டான். யானைப் படையின் அருகில் வந்தபோது அவன் கண்கள் இரண்டு சிறிய யானைகளின் மீது பாய்ந்தன.

போர்செய்து இளைப்புற்றிருந்த அந்த மதயானைகள் அப்போது ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஏதோ பழங்கயிறு ஒன்று கிடைத்தது. அதன் ஒரு பக்கத்தை ஒரு யானை பற்றிக் கொண்டது. மற்றொரு பக்கத்தை இரண்டாவது யானை பற்றிக்கொண்டது. இரண்டும் கயிற்றை இழுத்து விளையாடுகின்றன. கயிறோ பழையது. இந்த இரண்டு யானைகளுக்கும் இடையே அது தன் பிராணனை விட்டுக்கொண்டிருக்கிறது; அதன் ஜீவ சுவாஸம் ஒவ்வொன்றாக வெளிவருவதுபோல அதன் புரி ஒவ்வொன்றாக விட்டுக்கொண்டு வருகிறது. யானைகளின் குதூகலத்துக்கு எல்லையில்லை.

இந்த விளையாட்டிலே ஈடுபட்டுச் சிறிது நேரம் நின்றிருந்தான் அவ்வீரன்; பிறகு அப்படியே உலாவி விட்டுத் தன் கூடாரத்தின் வாயிலை அடைந்து உட்கார்ந்தான். அருகில் ஒருவரும் இல்லை. வானத்தை நிமிர்ந்து நோக்கினான். வெண்மதி தண்ணிலவைப் பால்போலச் சொரிந்து கொண்டு வானப் பரப்பை யெல்லாம் அபிஷேகம் செய்து கொண்டிருந்தது.

அந்தத் தண்ணிய திங்களின் வெள்ளொளி அவனுக்கு இன்பத்தை உண்டாக்க வில்லை. அவன் மனத்தை எத்தனையோ காததூரத்திற்கு அப்பால் கொண்டுபோய் விட்டது. இயற்கையின் அழகைப் புறக்கண்களால் கண்டு அநுபவிக்க அவனால் இயலவில்லை; அவன் அகத்தே, தன் உள்ளத்தைப் பறித்த பேரழகு துளும்பும் ஓர் உருவத்தைக் காண்கிறான்.

என்ன அழகு! கூந்தல்! முதுகுப் புறத்திலே நீண்டு தாழ்ந்த கூந்தல்; தாழ்ந்து இருண்ட கூந்தல். கண்கள்! மையுண்ட கண்கள்! அந்தக் கண்களின் பொலிவிலே சோபிக்கின்ற இதழ்கள்; காதல் மயக்கத்தை உண்டாக்குவதற்குப் போதியபடி சிறிது திறந்திருக்கின்றன, போதின் நிறம் பெறும் ஈரிதழ் போலே; மலரும் பருவத்திலுள்ள போதுதான். இந்த இரண்டும் அவன் உள்ளத்தைப் பிணித்து விட்டன. அவனுடைய காதலி இந்த இரண்டினாலும் அவன் மிடுக்குடைய உள்ளத்தைக் குவிய வைத்துவிட்டாள்.

அவளைப் பிரிந்து இங்கே தனித்து இருக்கிறான். உடல்தான் இங்கே இருக்கிறது; உள்ளத்தை அவள் பிணித்துக்கொண்டாள். இப்போது இந்த நிலவொளியினாலே சக்தி யூட்டப்பெற்ற நெஞ்சம் சொல்கிறது: "ஏன் இங்கே தனியாகக் கிடந்து அவஸ்தைப் படுகிறாய்? வா, போவோம்" என்று அந்தப் பற்றுள்ளம் தூண்டுகிறது. அதன் தூண்டுதலுக்கு உட்பட்டுக் காதலுகத்திலே சஞ்சாரம் செய்கிறான், அந்தக் காதலன். அவன் மனம் படும் பாடு சொல்லத் தரமன்று.

கண்கள் ஸ்வாதீனத்திற்கு வருகின்றன. தலையைக் கீழே தாழ்த்திப் பார்க்கிறான். கூடாரமும் பாசறையும் அவன் நிலையை அவனுக்கு எடுத்துக் காட்டுகின்றன. காதலியைப் பிரிந்து படையிற் சேர்ந்து தன் கடமையைச் செய்து ஊதியம் பெற்றுச் செல்ல வந்திருக்கிறான் அவன். வீட்டிலே சமாதானக் காலத்திலே காதலியோடு இருக்கும்போது அவன் காதலன். அரசன் படையிலே ஒரு தலைவனாய்ப் போர் செய்ய வந்திருக்கும்போதோ வீரனாக இருக்கிறான்.

காதலியிடம் சிறைப்பட்ட நெஞ்சத்தின் உபதேசம் சிறிது மறைகிறது. அப்போது அறிவு தலைக் காட்டுகிறது. "அட பைத்தியமே! நீ யார்? படைத் தலைவன் அல்லவா? பகைவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்யும் மகா வீரனல்லவா? நீ ஏற்றுக் கொண்ட காரியத்தை முடிக்காமல் மறந்துவிடலாமா? அது பேதைமையல்லவா? பாதியிலே நீ போய் விட்டால் உனக்குப் பழி வந்து நேருமே! இதை நீ நினைத்துப் பார்க்கவில்லையே? உன் காதல் வீணாகவா போகிறது? இவ்வளவு நாள் பிரிந்திருந்தாய், இன்னும் சிறிது காலம் அவசரப்படாமல் இரு" என்று தக்க காரணங்களுடன் அவனுக்கு உபதேசம் செய்கிறது.

ஒரு பக்கம் காதலியின்பால் காதல் பூண்டு சிறைப்பட்ட நெஞ்சமும், ஒரு பக்கம் பேதைமை என்றும் பழி என்றும் பழி கூறித் தன் காதல் வேகத்தை தணிக்கும் அறிவும் மாறி மாறிப் போராட, அவன் ஒன்றும் தோன்றாமல் மயங்குகிறான்; தியங்குகிறான்; உருகுகிறான்; மறுகுகிறான். உடம்பு மெலிவது போலத் தோன்றுகிறது.

இந்தப் போராட்டத்தில் தான் மாலையிற் கண்ட யானை விளையாட்டு அவனுடைய ஞாபகத்திற்கு வருகிறது. களிறுகள் இரண்டு தம்முன் மாறுமாறாகப் பற்றிய தேய்புரிப் பழங் கயிற்றை நினைத்துப் பார்க்கிறான்; "நானும் அப்படித்தான் இருக்கிறேன். என் உயிர்க் காதலியின்பால் வைத்த நெஞ்சம் ஒரு பக்கம் இழுக்கிறது; அறிவு மற்றொரு பக்கம் இழுக்கிறது. நடுவில் அகப்பட்டுக்கொண்டு என் உடம்பு உருகுகிறது" என்கிறான்.

இந்தச் சித்திரத்தை அந்த வீரக் காதலனது கூற்றாகப் பின்கண்ட சங்கச் செய்யுள் காட்டுகிறது.

தலைவன் கூற்று

புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதின்

நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்

உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெ

செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்;

செய்வினை முடியா தெவ்வஞ் செய்தல்

எய்யா மையோ டிளிவுதலைத் தருமென

உறுதி தூக்கத் தூங்கி அறிவே

சிறிது நனி விரையல் என்னும்; யிடை

ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய

தேய்புரிப் பழங்கயிறு போல்

வீவது கொல்லென் வருந்திய வுடம்பே.

-- நற்றிணை - தேய்புரிப் பழங்கயிற்றினார் பாட்டு.

[முதுகிலே தாழ்ந்து இருண்ட கூந்தலையும், மலரும் பருவத்திலுள்ள மலரின் நிறத்தைப் பெற்ற ஈரமான இமைகள் விளங்கும் மையுண்ட கண்களையும் உடையவளாய் நம் உள்ளத்தைத் தன்பாற் கட்டுப் படுத்தியவளிடத்தே, 'துன்பந் தீர்வோம்; போவோம்' என்று நெஞ்சம் சொல்லும். மேற்கொண்ட காரியத்தை நிறை வேற்றாமல் துன்பம் உண்டாக்குதல் அறியாமையோடு பழியும் தரும் என்று உறுதியை எடுத்துக்காட்டி அறிவானது, 'சிறிது காலம் அதிக அவசரப்படாமல் இரு' என்று சொல்லும். இதற்கிடையே, என் புண்பட்ட உடம்பு, விளங்குகின்ற உயர்ந்த கொம்புகளையுடைய ஆண் யானைகள் எதிரெதிரே பற்றி இழுக்கும் தேய்ந்த புரிகளையுடைய பழைய கயிற்றைப்போல அழிவதாகுமோ!]

அவர் போன வழி

கிழவி: அந்தப் பாலை நிலங்களிலெல்லாம் எயினர்கள் வாழ்கிறார்கள்; இருந்து வாழவில்லை; அலைந்து வாழ்கிறார்கள்.

தலைவி: பாட்டி, அவர்களுக்கு என்ன வேலை? எப்படி ஜீவிக்கிறார்கள்?

கிழவி: மற்றவர்கள் மரணத்தை அடைகிறார்கள்; அவர்கள் உயிர் வாழ்கிறார்கள்.

தலைவி: இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

கிழவி: அவர்கள் மரணமடைவதனால் அவர்கள் கொண்டுபோகும் பொருள்களை வௌவிக்கொண்டு இந்த வேடர்கள் ஜீவிக்கிறார்கள்.

தலைவி: 'அவர்கள்' யார்?

கிழவி: அவர்களா? தூர தேசத்துக்குப்போய்ப் பணம் சம்பாதிக்கலாமென்று போகிறவர்களும், சம்பாதித்த பணத்தோடு வருகிறவர்களும், வியாபாரம் செய்யப் போகிறவர்களுமாக எவ்வளவோ பேர் பாலை நிலத்தில் போகிறார்கள், வருகிறார்கள். அவர்கள் இந்த எயினருக்குப் பயந்து கூட்டமாகப் போவார்கள். தனி மனிதனாகப் போனால் அவன் கொடும் பிரயாணத்துக்குத் தயாராக இருக்கவேண்டியதுதான்!

தலைவி: அப்படியானால் அந்தக் கொடிய மனிதர்கள் கொலை செய்வார்களென்றா சொல்லுகிறீர்கள்!

கிழவி: ம், கொலை செய்வதிலேயே அவர்களுக்கு இன்பம். போகிறவர்களிடத்தில் பொருள் ஒன்றும் இல்லாவிட்டாலும், அவர் தலையைப் போக்கி முண்டமாக மாற்றிடுவதைப் பார்ப்பதிலே அவர்களுக்குத் திருப்தியாம்.

தலைவி: ஐயோ! கேட்கும் போதே குலை நடுங்குகிறதே!

கிழவி: தங்க நிழலும் தாகத்திற்கு ஜலமும் கிடைக்காத வறண்ட பாலை வனத்திலே மறலியின் தூதர்களாக அவர்கள் விளங்கிறார்கள்.

தலைவி: பாட்டி, போதும், இந்தப் பயங்கர வருணனை.

கிழவி: வறண்ட பாலைவனமென்றால் ஒன்றுமே இல்லாத நிலப் பரப்பு என்று நினைத்துவிடாதே. அங்கங்கே பாறைகளில் சிறு சிறு சுனைகள் எறும்பு வளையைப்போல இருக்குமாம்.

தலைவி: சுனையென்றால் நிறைய நீர் இருக்க வேணுமே?

கிழவி: நாசமாய்ப் போச்சு! சின்னச் சுனையிலே எவ்வளவு தண்ணீர் இருக்கப் போகிறது? வெயில் தகிக்கும் தகிப்பிலே, இருக்கிற தண்ணீரும் வற்றிப் போய்விடுமே.

தலைவி: அப்படியானால் அந்தப் பாறைகள் இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்?

கிழவி: அதைத்தானே நான் சொல்லவந்தேன்? எறும்பு வளைகளைப் போலக் குறுகிய பல சுனைகளையுடைய அந்தப் பாறை உலைக்கல்லைப் போலக் கொதித்துக் கிடக்கும். அந்தப் பாறையிலே முன்னே சொன்னேனே, அந்த எயினர்கள் ஏறித் தங்கள் ஆயுதங்களைச் சரிப்படுத்திக் கொள்வார்கள்.

தலைவி: உலைக்கல்லிலே ஆயுதங்களைச் செப்பஞ் செய்துகொள்கிறார்கள் இந்த ஊரில். உலைக்கல்லைப் போன்ற பாறையில் அவர்கள் சரிசெய்து கொள்வார்கள் போலும்!

கிழவி: ஆமாம். வளைந்த வில்லையுடைய எயினர்களின் அம்பு எவ்வளவோ கொலைகளைச் செய்து மழுங்கிப் போகுமல்லவா? அப்போது அந்தப் பாறைதான் சாணைக்கல்லாக உபயோகப் படுகிறது. தங்கள் அம்புகளைப் பாறையிலே தீட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் கொலைத் தொழிலுக்கு அந்தப் பாறை உதவி செய்கிறது.

தலைவி: ஐயோ! அதைச் சொல்ல வேண்டாமே என் தலை கிறு கிறுக்கிறதே!

தலைவி: (தனக்குள்) ஐயோ! என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லையே! கணமேனும் பிரியாமல் இருந்த எங்களை விதியும் சம்பிரதாயமும் கடமையும் பிரித்து விட்டனவே. இந்தப் பாழும் பணம் இல்லாவிட்டால் என்ன? என் அருமைக் காதலர் அதைத் தேடிக்கொண்டு போயிருக்கிறாரே! பாலைவனத்தின் வழியாகப் போக வேண்டுமாமே!

தோழி: (தானே பேசிக் கொள்கிறாள், தலைவியின் காதிற் படும்படி.) உலகத்தில் புருஷர்களாகப் பிறந்தவர்கள் முயற்சியோடு இருக்கவேண்டும். தாம் ஈட்டிய பொருளை வைத்துக் கொண்டு இல்லறவாழ்க்கை நடத்தவேண்டும்; அதுதான் இன்பவாழ்க்கை. புருஷர்கள் தங்கள் கடமையை முன்னிட்டுக் காதலியரைப் பிரிவது வழக்கந்தான்.

தலைவி: (தனக்குள்) இவள் என்ன உளறுகிறாள்! புருஷர்களாம், வழக்கமாம்! (கவனிக்கிறாள்.)

தோழி: (தலைவியின் காதிற் படும்படி) காதலர் பிரிந்ததன் நியாயத்தை உணராமல் எப்போதும் அவரை நினைத்து ஏங்கிக்கொண்டிருப்பது அழகன்று; அறிவும் அன்று.

தலைவி: (தனக்குள்) அழகையும் அறிவையும் கண்டவள் பேசுகிறதைப் பார்! நான் எதை நினைத்து வருந்துகிறேன் என்பதைக் கொஞ்சமாவது இந்த ஜடம் யோசித்துப் பார்த்ததா? அவர் பிரிவா என்னை வருத்துகிறது? அவர் போன வழி, அந்தக் கொடுமையான பாலை நிலம். அதை நினைத்தல்லவா என் உள்ளம் குமுறுகிறது?

அந்தப் பாட்டி அன்றைக்குச் சொன்னாளே! (வெளிப்படையாக) எறும்பு வளை போன்ற குறிய பல சுனைகளையுடைய உலைக்கல்லைப் போன்ற பாறையின்மேல் ஏறி, வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும் கவர்த்த வழிகளையுடையது அவர் போனவழி என்று சொல்லுகிறார்கள். கவலை கொள்பவர்களைப் போலப் பிரமாதமாக ஆரவாரிக்கும் இந்த ஊர், இதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் வேறு என்ன என்னவோ விஷயங்களைச் சொல்லிப் புத்தி கூற வருகிறது! ஆகா! என்ன அறிவு!

தலைவி கூற்று

எறும்பி அளையிற் குறும்பல் சுனைய

உலைக்கல் அன்ன பாறை ஏறிக்

கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்

கவலைத் தென்ப அவர் சென்ற றே;

அதுமற் றவலங் கொள்ளாது

நொதுமற் கழறும்இவ் வழுங்க லூரே.

--குறுந்தொகை - ஓதலாந்தையார் பாட்டு.

(எறும்பி - எறும்பு. அளையின் - வளையைப்போல். குறும் பல் சுனைய - குறுகிய பல சுனைகளை உடைய. கொடு வில் எயினர் - வளைந்த வில்லையுடைய வேடர். பகழி மாய்க்கும் - அம்பைத் தீட்டும். கவலைத்து - பிணங்கிய வழி களை உடையது. என்ப - என்று சொல்வார்கள். ஆறு - வழி. அவலம் - வருத்தம். நொதுமல் - அயலான வார்த்தைகளை. கழறும் - இடித்துரைக்கும். அழங்கல் - ஆரவாரம். ஊரென்றது இங்கே தோழியை.)

அலமரும் கண்

ஒவ்வொரு நாளும் பகற்பொழுதைக் கழிப்பதற்கு அவள் செய்யும் தந்திரங்கள் அளவிடற் கரியன. அவளுடைய உயிர்த்தோழி கதை சொல்லியும் பாட்டு இசைத்தும் அறங்கூறியும் அவளுக்கு முதல் உண்டாக்கி வந்தாள். தன்னுடைய காதலனது பிரிவாகிய வெந்தீயிலே அந்த மடமங்கை அவன் வரவு குறித்துத் தவம் புரிந்து வந்தாள் என்று தான் சொல்லவேண்டும். தவமுனிவர்கள் செய்வதை அவளுந்தான் செய்கிறாள். எவ்வளவோ நாட்கள் அவள் சோறின்றிப் பட்டினி கிடக்கிறாள். நல்லுடையும் மணமலரும் பொன்னணியும் அவள் உள்ளத்தைக் கவரவில்லை. இனி எந்நாளும் பிரிவின்றி வாழும் பெருவரத்தை வேண்டிக் கடுந்தவம் முயன்று காத்திருக்கிறாள் அவள்.

ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒரு கண்டம். மாலைக்காலம் வந்தால் அவளுடைய மனத்திண்மை எங்கேயோ ஓடிவிடும். தண்ணிய தென்றல் வீசும் மாலைக்காலத்தில் தன் காதலனோடு ஒருங்கிருந்து இன்புறும் நிலையில் அவள் இருந்தால் அப்போது அந்த மாலை அமுதமயமாக இருக்கும். இப்பொழுதோ தன் நாயகன் பிரிவை நன்கு எடுத்துக் காட்டித் துன்புறுத்தும் யமனாகவே அதைக் கருதுகிறாள்.

செங்கதிர்ச் செல்வனாகிய சூரியன் கோபம் ஆறிக் கதிர்களைச் சுருக்கிக்கொண்டு அஸ்தமன கிரிக்குள் ஓய்வு பெறப் போகிறான். அவனுடைய வான யாத்திரையோடு உலகமுழுதும் யாத்திரை செய்தது; அவன் வானத்தை அளந்த ஒவ்வொரு கணமும் உலகிலுள்ள உயிர்கள் எழுச்சி பெற்று உலவின. அவன் இப்பொழுது சினங்கரந்து சென்றான்; உலகமும் ஓய்வு பெற்று இரவுக் கன்னியின் அணைப்பிலே சாந்தி பெறப் போகிறது.

ஆனால், அவளோ? இனிமேல்தான் அவளுடைய உயிருக்கும் தனிமைக்கும் போராட்டம் ஆரம்பமாகப் போகிறது! ஐயோ பாவம்! மாலை வந்ததென்றால் மனம் நடுங்கி உடல் வெயர்த்துக் குலைகுலைகிறாள்.

அவன் வந்துவிடுவானென்ற நினைவு அவள் உள்ளத்தில் பசுமையை வைத்திருக்கிறது. இவ்வளவு நாட்களாக அவள் பட்ட இடும்பை பெரிதல்ல. சில நாட்களாக அவளிடத்தில் தோன்றும் தளர்ச்சி அச்சத்தை உண்டாக்குகிறது. ஏன்?

செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த பொழுதுகள் பலவற்றை அவள் கழித்து விட்டாள். இன்று அந்தப் பொழுது அவள் உயிரை வாட்டத் தனியே வரவில்லை. படப்பலத்துடன் வந்திருக்கிறது. அவள் வைத்து வளர்க்கிறாளே, அந்த முல்லைக் கொடியிலிருந்துதான் அந்தப் படை புறப்படுகிறது. அருமை செய்து பாதுகாத்த அந்த முல்லைக்கொடியை அவள் இவ்வளவு நாட்களாகக் கவனிக்கவே இல்லை; இன்று அது தன்னைக் கவனிக்கும்படி செய்துவிட்டது. கம்மென்று வீசும் முல்லைப் பூவின் நறுமணம் அவளை ஒரு கணம் ஆட்கொண்டது. அப்பொழுதுதான் அவளுக்குத் தான் வளர்த்த அப்பூங்கொடியின் நினைவு நன்றாக வந்தது. பார்த்தாள்; முல்லை பூத்து முறுவலிக்கிறது. பைங்கொடி முல்லையின் மணம் எங்கும் கமழ்கிறது. அந்த மணத்தை நுகர வண்டினங்கள் வந்து சுழல்கின்றன; முரல்கின்றன.

தான் வளர்த்த முல்லைக்கொடி என்னும் பேரழகி பூத்துப் பொலிந்து நிற்கும் பேரழகை அவள் கண் பார்த்தது. அந்த அழகிலே அவள் மகிழ்ச்சியைக் காணவில்லை. மலர்ந்த மலர்களிலே மொய்த்துக் காதலிசை பாடிக் கொஞ்சும் வண்டின் செயலிலே அவள் இயற்கையின் மோகன கீதத்தை உணரவில்லை. தன் தனிமையைக் குத்திக் காட்டும் அடையாளமாகத் தான் அந்தக் காட்சி அவளுக்குப் பட்டது.

இது மட்டுமா? தன் காதலன் பிரியும்போது சொல்லிச் சென்ற வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறாள்; "ஆம், இப்போதுதான் வருவதாகச் சொன்னார். கார் - காலத்திலே வந்துவிடுவேனென்று ஆணையிட்டுச் சொன்னாரே; இன்னும் வரவில்லையே! பைங்கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர இதோ கார்காலம் வந்துவிட்டதே!" என்று எண்ணுகிறாள். அதற்குள் அவளுக்கு அவசரம். "வரமாட்டாரோ...!" -- அவள் மனம் கொந்தளித்துக் குமுறி நிலைகலங்கி மருண்டு தவிக்கிறது.

மாலையின் தண்மையும் முல்லைக்கொடு பூத்துப் பொலியும் காட்சியும் வெள்ளிய முல்லை மலரின் நறுமணமும் வண்டினது இனிய முரற்சியும் அவளுக்கு இன்பத்தை உண்டாக்கவில்லை. அண்ணாந்து பார்க்கிறாள். வானத்தில் மேகங்கள் சுழன்று திரிகின்றன. வான முழுதுமே அவளுக்குச் சுழல்கின்றது.

"முல்லை மலர் பூத்தது பொய்யோ? அது பொய்யானால் மேகங்கள் வானத்தில் உலவுகின்றனவே, அதுகூடவா பொய்? நிச்சயமாகக் கார்பருவம் வந்து விட்டது. அவர் வரவில்லையே! சொன்ன சொல் பொய்த்துவிடுவாரோ?"-- இப்படி எழுந்த கவலைத் திரைகளின் துளிகளைப்போல அவள் கண்கள் களகள வென்று நீரை உதிர்க்கின்றன. அந்த முல்லையையும் வண்டையும் வானத்தையும் பார்த்துப் பார்த்து நீர் நிறைந்த அவள் கண்கள் அலமருகின்றன; நிலையில்லாமற் கலங்குகின்றன. அந்தப் பார்வையில் தான் எத்தனை ஏக்கம்!

செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினாற்

பைங்கொடி முல்லை மணங்கமழ - வண்டிமிரக்

காரோ டலமருங் கார்வானங் காண்டொறும்

நீரோ டலமருங் கண்.

--ஐந்திணை எழுபது - மூவாதியர் பாட்டு.

[செங்கதிர்ச் செல்வன் - சூரியன். சினம் - வெம்மை. கரந்த - மறைத்ட. போழ்தினால் - பொழுதில். இமிர - ஒலிக்க. காரோடு - மேகத்தோடு. அலமரும் - சுழலும். கார்வானம் - கார்காலத்து காசம்; கரிய வானமும் ஆம். காண்டொறும் - காணுந்தோறும்.]

அவள் நிலை

நூல் நவின்ற பாக!

இதென்ன புதுமையாக இருக்கிறது? எஜமானன் வண்டிக்காரனை ஸ்தோத்திரம் செய்யவாவது! மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு அடிமையைப்போல் உழைக்கும் சாரதிக்கு என்ன பெருமையப்பா! - இப்படி இந்தக் காலத்தில் நினைப்பார்கள்.

ஆனால் இந்த எஜமானன் அப்படி நினைப்பவன் அல்ல. எங்கெங்கே அறிவுத் திறமை இருக்கிறதோ, அங்கங்கே அதற்கு ஏற்ற மதிப்பை அளித்துப் பாராட்டும் உள்ளம் இந்த எஜமானனுக்கு, தலைவனுக்கு, உண்டு. தேர்ப்பாகனுக்கு அவ்வளவு பெருமை தரவேண்டுவதும் நியாயந்தான்.

'நூல்களைப் பயின்ற அறிவுடைய பாகனே' என்று தலைவன் சாரதியை விளிப்பது உயர்வு நவிற்சியல்ல. அந்தப் பாகனுக்கு பலவகை நூல்கள் தெரியும். குதிரைகளின் உள்ளந் தெரிந்து பாதுகாத்து அவை ஏவாமலே ஓடும்படி செய்யும் திறமை அவனுக்கு இருக்கிறது. அசுவ சாஸ்திரத்தை அவன் முற்றக் கற்றிருக்கிறான். தான் தேரை ஓட்டிச் செல்லும் இடங்களின் நிலையும், அவற்றிலே எவ்வெவ்வாறு தேரை ஓட்டவேண்டுமென்ற அறிவும் அவனுக்கு இருக்கின்றன. பிரயாணிகளிடமிருந்து தெரிந்து கொண்ட செய்திகளும் நேரிலே கண்டு அனுபவித்த செய்திகளும், நில இயல்பைப் பற்றிய நூல்களினால் உணர்ந்த செய்திகளும் அவனை ஒரு பூகோள சாஸ்திர அறிஞனாக ஆக்கியிருக்கின்றன. அதனால்தான் அவன் வெறும் லகான் பிடிக்கும் குதிரைவண்டிக்காரனாக இல்லாமல், நூல் நவின்ற பாகனாக விளங்குகிறான்.

இந்த நூல்கள் கிடக்கட்டும்; மனிதர்களின் மன இயல்பையும் அவன் நன்கு தேர்ந்திருக்கிறான். தசரதருடைய தேர்ப்பாகனாகிய சுமந்திரன் சிறந்த மந்திரி யென்பது புராணப் பிரசித்தம். தேர்ப்பாகன் மந்திரியாக இருந்தானென்று சொல்வதை - விட ஒரு மந்திரியே அரசனுக்குச் சார்த்தியம் செய்தானென்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இங்கே, தலைவன் நெடுந்தூரம் பிரயாணம் செய்யும்போது அவனுடைய உள்ளம் உவக்கும்படியாகக் கதைகளையும் யோசனைகளையும் சொல்லி ஊக்கம் ஊட்டும் திறமை இந்தத் தேர்ப்பாகனிடம் இருக்கிறது. தலைவனுடைய உணர்ச்சியும் வேகமும் எந்த அளவில் இருக்கின்றனவோ அந்த அளவை அறிந்து தேரைச் செலுத்துவதில் பாகன் வல்லவன். அவனை நூல் நவின்ற பாகன் என்று, சொந்த அனுபவத்தால் உணர்ந்து கொண்ட தலைவன் சொல்வது எப்படி முகஸ்துதியாகும்?

அவனைப் பார்த்துத் தலைவன் என்ன சொல்கிறான்?

தேர் நொவ்விதாச் சென்றீக!

'நின் தேர் வேகமாகப் போகட்டும்' என்று சொல்கிறான். சொல்கிற மாதிரிதான் எவ்வளவு கொளரவமாக இருக்கிறது? 'வேகமாக ஓட்டு' என்று கட்டளையிடவில்லை. 'குதிரைகளை முடுக்கு' என்று சொல்லியிருக்கலாம். அவை உயிருள்ள ஜீவன்களல்லவா? அவற்றை அளவுக்குமேல் முடுக்குவது தவறு. அன்றியும் அந்த குதிரைகளைக் குழந்தைகளைப் போலப் பாதுகாப்பவன் பாகன். அவற்றைப் பதமறிந்து ஓட்டும் உரிமை அவனுக்குத்தான் உரியது. அதை விரட்டும்படி சொல்லும் உரிமை தலைவனுக்கு இல்லை; இல்லையென்று தலைவன் நினைத்தான். ஆனாலும் அவனுக்குத் தேர் வேகமாகப் போய்க் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டுமென்ற விருப்பம் மட்டுக்கு மிஞ்சி இருக்கிறது. அந்த விருப்பத்தைத் தன் தோழனுக்குச் சொல்வது போலே சொல்கிறான். 'அப்பா, கொஞ்சம் தேர் வேகமாகப் போகட்டும்.'

எதற்காக அவ்வளவு வேகம்? பாகன் வெறும் வேலைக்காரனாக இருந்தால், "வேகமாக ஓட்டு" என்று கட்டளையிட்டு விட்டுப் பேசாமல் இருந்துவிடலாம். நாம் வண்டிக்காரனை முடுக்க, அந்த முடுக்குதலுக்குப் பயந்து வண்டிக்காரன் குதிரைகளை முடுக்க அவை அவன் தாற்றுக்கோலுக்கு அஞ்சி உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுவது நம்முடைய வண்டி சவாரியின் லஷணம்.

பாகனுக்குத் தேர் வேகமாகப் போகவேண்டிய அவசியத்தை வெளிப் படுத்துவதைத் தன் கடமையாக நினைக்கிறான் தலைவன். அதைச் சொன்னால் தான் தலைவனுடைய மனோவேகம் பாகனுக்குப் புலப்படும். சொல்ல ஆரம்பிக்கிறான்.

தேன் நவின்ற கானம்:

இதோ பார்! இந்தக்காடு முழுவதும் இப்போது எப்படி ஆகிவிட்டது! நாம் முன்னாலே வந்தபோது வெறிச்சென்று இருந்த மரங்களெல்லாம் கார்காலம் வந்தவுடன் பருவமடைந்த கன்னிகை போலத் தளித்துத் தழைத்து மலர்ந்து நிற்கின்றன. வண்டுகள் மலர்களில் மொய்த்துத் தேன் உண்டு மகிழ்கின்றன. கண்ணுக்கு நிறைந்த காட்சியும் காதுக்கு இனிய ரீங்காரமும் உள்ளதாக விளங்குகின்றது இந்தக் கானம்.

கானத்து எழில்:

அந்தக் கானகத்துக்கு முழு அழகையும் தந்திருக்கிறது கார்காலம். இந்த எழிலை நான் பார்க்கிறேன்; நீயும் பார்க்கிறாய். நான் சென்ற காரியம் நிறைவேறியமையால், நல்ல வெற்றியைப் பெற்றுத் திரும்புகிறேன். வெற்றி மிகுதியினால் நிறைந்த மகிழ்ச்சியிலே என் உள்ளம் பூரித்து நிற்பது போல் இந்தக் காடு நிற்கிறது. ஆனால்.......?

எழில் நோக்கி:

இந்த அழகைப் பார்த்து நிற்கும் வேறு ஓர் உயிரை என் மனம் இப்பொழுது நினைக்கிறது. அந்த உயிர் என் உயிர் போன்றது. நான் அவ்வுயிருக்கு உயிர் போன்றவன். என் காதலியைத்தான் சொல்கிறேன். அவள் இந்த எழிலை நோக்கி நிற்பாள். நான் மீண்டு வருவேனென்று குறிப்பிட்டுச் சென்ற காலம் இதுதான். இந்தக் காலத்தை எதிர்நோக்கி நின்ற அவள், தேன் நவின்ற (வண்டுகள் பயின்ற) கானத்து எழில் நோக்கி, நாம் வந்துவிடுவோமென்ற துணிவு கொள்வாள். கானத்து எழிலினூடே அவள் இயற்கைத் தேவியின் பேரழகைப் பார்க்கமாட்டாள். நிலமகளின் வளத்தை நினைக்கமாட்டாள். என்னுடைய காரியம் நிறைவேறியிருக்கும் என்பதையும் நான் மீண்டு வந்துவிடுவேன் என்பதையுமே சிந்தித்து நிற்பாள்.

நாந்தான் அவளுக்கு உயிர். நான் பிரிந்துவந்து விட்டதனால் அவளுடைய உயிரும் பிரிந்து வந்திருக்க வேண்டும். அப்படி அவ்வுயிர் பிரிந்து போகாமல் அவள் பாதுகாக்கிறாள். எப்படி?

தான் நவின்ற கற்புத்தாள் வீழ்த்து:

அவள் நெடுங்காலமாகப் பயின்று வந்திருக்கிறாள். மகளிர் இலக்கணம் இன்னதென்பதைத் தாய் தந்தையர் கற்பித்ததனாலும் நூல்களைப் பயின்றதனாலும் தன்னுடைய கூரிய அறிவின் திறத்தினாலும் தெரிந்துகொண்டிருக்கிறாள். கற்புத்திறனெல்லாம் முற்றக் கற்ற காரிகை அவள். தலைவன் இல்லற வாழ்வு நிறைவேற வேண்டியும், பொருள் ஈட்ட வேண்டியும் தலைவியைப் பிரிந்து செல்வது இயல்பு. மேலே இன்ப வாழ்வு பெருகுவதற்குரிய பொருளும் அவ்வாழ்வு மிக்க இன்பமுடையதாகும் வாய்ப்பும் அந்தப் பிரிவினால் உண்டாகும். தலைவன் அவ்வாறு பிரியுங்கால் அப்பிரிவைப் பொறுத்துத் துன்பத்தையெல்லாம் அடக்கியிருத்தல்தான் உண்மையான கற்பு நெறி. அதை என் காதலி நன்றாகப் பயின்று தேர்ந்தவள். அப்படி உணர்ந்த கற்பாகிய தாளைச் செறித்து உடம்பாகிய வீட்டினின்றும் உயிரைப் போகவிடாமல் நிறுத்தி வைத்திருப்பாள். அதுவும் ஒருவகைத் தவம். இந்தக் கானம் எழில் நிரம்பி மலர் குலுங்கத் தோன்றும் தோற்றம் அவளுடைய தவத்தின் நிறைவுக்கு அறிகுறியாகவே, அவள் நான் வருவதை எதிர் நோக்கி நிற்பாள். வண்டுகள் ஒலிக்கும் ஒலியினூடே என் தேர் மணியின் ஒலியையும் கானத்தின் எழிலூடே இத்தேரின் எழிலையும் காண வேண்டி நிற்பாள். எவ்வாறு நிற்பாள் தெரியுமா?

கவுள்மிசைக் கை ஊன்றி நிற்பாள்:

தவம் புரிபவர்களுக்கு நெடுங்காலம் தவம்புரிந்த எய்ப்புத் தோன்றாது; அது நிறை வேறும்போது தான் மிகுதியான களைப்பு உண்டாகும். பல காவதம் நடந்தவனுக்குக் குறித்த இடம் அணுகியபோதுதான் கால் வலி தெரியும். இவ்வளவு காலம் கற்புத்தாள் வீழ்த்துப் பொறுத்து நின்றவளுக்குக் கார்காலம் வந்துவிட்டதென்று அறிந்தவுடன் அதிகமான சோர்வு உண்டாகும். கானத்தை நோக்கி, அதன் எழிலை நோக்கி நிற்பாள். தன் கன்னத்தில் கையை வைத்து நான் வரும் திக்கை நோக்கி நிற்பாள்.

நிற்பாள் நிலை:

அந்தக் காட்சியை, அவள் நிற்கும் நிலையை, நினைக்கையிலே எனக்கு மயிர் சிலிர்க்கிறது. இவ்வளவு காலம் தன் உயிரைப் போகாமல் தாங்கி, இப்போது, வாடிய கானம் எழில்பெற்று விளங்குவதைப் பார்த்து, அதைப்போலத் தானும் இந்த எழில் பெற்று விளங்கும் செவ்வியை எதிர்நோக்கி, தன் கவுள்மிசைக் கை ஊன்றி ஈற்கும் அந்த அழகிய நிலையிலே அவளைப் பார்க்கவேண்டும் என்று என் நிலை உணர்கம் யாம். அந்த நிலையைப் போய் நாம் பார்ப்போம். நீயும் பார்த்து வியக்கலாம். ஆதலின், நூல் நவின்ற பாக, தேர் வேகமாகப் போகட்டும். இவ்வாறு சொல்லி முடிக்கிறான் தலைவன்.

தலைவன் கூற்று

நூனவின்ற பாகதேர் நொவ்விதாச் சென்றீக

தேனவின்ற கானத் தெழினோக்கித்-- தானவின்ற

கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி

நிற்பாணிலையுணர்கம் யாம்.

-ஐந்திணையைம்பது - மாறன் பொறையனார் பாட்டு.

[நவின்ற - பயின்ற. நொவ்விதா - விரைவாக. சென் றீக - செல்க. தேன் - வண்டு. தாழ் - தாழ்ப்பாள். கவுள் - கன்னம்.]

இதன் தொடர்ச்சி-காவியமும் ஓவியமும் பாகம் 3

ஆசிரியர் - கி. வா. ஜகந்நாதன்

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

2.78571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top