பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குறிஞ்சித் திணைப் பாடல்கள்

குறிஞ்சி ஒழுக்கம் தொடர்பாகவும், அதன் பின்னணியாக விளங்கும் நிலம், அதன் கருப்பொருள்கள் தொடர்பாகவும், குறிஞ்சிப் பாடல்களில் புலவர்கள் காட்டியுள்ள இலக்கிய அழகுகள் தொடர்பாகவும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது. குறிஞ்சித் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது. குறிஞ்சி நில மக்களுக்கு உரிய வாழ்க்கை ஒழுக்கங்கள், பண்புகள் ஆகிய சிறப்புகளை இப்பகுதி விளக்குகிறது. குறிஞ்சித் திணைப் பாடல்களின் கற்பனை நயம், சொல்லாட்சி, உவமை முதலியவற்றையும் இப்பகுதி விளக்குகிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

* குறிஞ்சித் திணைக்கு உரிய முப்பொருள்களையும் அறியலாம்.

* குறிஞ்சித் திணையில் முப்பொருள் வெளிப்பாடு எவ்வாறு அமைந்து உள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம் உணரலாம்.

* குறிஞ்சித் திணைக்குரிய காதல் ஒழுக்கங்களான அறத்தொடு நிற்றல், வரைவு கடாஅதல், இற்செறிப்பு, இரவுக்குறி ஆகியவற்றையும்; குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் ஆகியவற்றையும் அறியலாம். குறிஞ்சி நிலத்துக்கு உரிய குறிஞ்சி மலர் பற்றி அறியலாம்.

• குறிஞ்சிப் பாடல்களின் இலக்கியச் சுவையாகக் கற்பனை, சொல்லாட்சி, உவமை நயங்கள் பற்றி அறியலாம்.

முன்னுரை

தலைவனும் தலைவியும் களவுக் காதலில் கூடி மகிழும் ஒழுக்கத்தைக் கூறுவது குறிஞ்சித் திணை. இந்நிகழ்வுக்குப் பொருத்தமான மலைப்பகுதியே பின்னணியாக அமைகிறது. குறிஞ்சி ஒழுக்கம் தொடர்பாகவும், அதன் பின்னணியாக விளங்கும் நிலம், அதன் கருப்பொருள்கள் தொடர்பாகவும், குறிஞ்சிப் பாடல்களில் புலவர்கள் காட்டியுள்ள இலக்கிய அழகுகள் தொடர்பாகவும் அறிமுகம் செய்து கொள்ள இப்பகுதி துணைபுரியும்.

குறிஞ்சிக்கோர் கபிலர்

குறிஞ்சித் திணையில் பல புலவர்கள் பல பாடல்களைப் பாடியுள்ளனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் பல பாடல்கள் குறிஞ்சித் திணையில் பாடப் பெற்றுள்ளன. குறிஞ்சி நில மக்களின் ஒழுக்கங்களை விளக்கும் குறிஞ்சிப்பாட்டு என்ற பத்துப்பாட்டு நூல் குறிஞ்சித் திணையை மிக விரிவாக விளக்கிச் சிறப்புச் சேர்க்கின்றது. ஐங்குறுநூற்றில் நூறு குறிஞ்சிப் பாடல்களையும் பாடியவர் கபிலர். கலித்தொகையில் குறிஞ்சிக்கலிப் பாடல்களைப் பாடியவரும் கபிலர். குறிஞ்சிப்பாட்டு நூலைப் பாடியவரும் அவரே. ஆகவே குறிஞ்சிக்கோர் கபிலர் என்று இவர் சிறப்பிக்கப்படுகிறார். அதனால் இப்பாடத்தில் ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றின் பாடல்களோ, கருத்துகளோ மேற்கோளாகக் காட்டப்படும் போது பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை. வேறு தொகை நூல்களில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாடல்களும் உள்ளன. பிற புலவர்கள் பாடியவையும் உள்ளன,

குறிஞ்சித் திணையின் முப்பொருள்கள்

நிலமும் பொழுதும் முதற்பொருள் என்பதை அறிவீர்கள். நிலத்திற்கு உரிய தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர். பூ, மரம், உணவு, பறை, பண், யாழ், தொழில் முதலியன கருப்பொருள்கள் என்பதையும் அறிவீர்கள். நிலத்திற்குரிய மக்களின் ஒழுக்கமே உரிப்பொருள் என்பதை அறிவீர்கள். குறிஞ்சித் திணைக்கு உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.

முதற் பொருள்

குறிஞ்சித் திணைக்கு உரிய நிலம் மலையும் மலைசார்ந்த நிலமும் ஆகும். பெரும்பொழுது கூதிர்காலம் (குளிர்காலம், முன்பனிக்காலம் ஆகியன). ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் குளிர்காலம் என்பர். மார்கழி, தை மாதங்களை முன்பனிக்காலம் என்பர். சிறுபொழுது யாமம். யாமம் என்பது இரவு பத்து மணி முதல் அதிகாலை இரண்டு மணி வரை உள்ள பொழுதாகும்.

கருப்பொருள்கள்

குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்கள்: தெய்வம் - முருகன்; மக்கள் - சிலம்பன், வெற்பன், குறவன், குறத்தி; பறவை - மயில், கிளி; விலங்கு - புலி, கரடி, பன்றி, யானை; ஊர் - சிறுகுடி; நீர் - சுனை, அருவி; பூ - குறிஞ்சி, காந்தள், வேங்கை; மரம் - சந்தனம், அகில், தேக்கு, அசோகம்; உணவு - தினை, மலை நெல், கிழங்கு, பறை - வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை; பண் - குறிஞ்சிப்பண்; யாழ் - குறிஞ்சி யாழ்; தொழில் - தேனெடுத்தல், தினைப்புனம் காத்தல், கிழங்கெடுத்தல்.

உரிப்பொருள்

குறிஞ்சித் திணைக்கு உரிய உரிப்பொருள் புணர்தலும், புணர்தல் தொடர்பான ஒழுக்கமும். புணர்தல் என்பது கூடுதல், சேருதல் என்று பொருள்படும். அதாவது, தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் கூடி மகிழ்தல். புணர்தல் என்பது கூடல் என்ற சொல்லாலும் குறிக்கப்படும்.

முப்பொருள் வெளிப்பாடு

சென்ற பாடத்தில் முல்லைத் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் எவ்வாறு வெளிப்பட்டன என்பதை அறிந்தீர்கள். அதைப் போல இப்பாடத்தில் குறிஞ்சித் திணைப் பாடல்களில் முதல், கரு, உரி ஆகிய முப்பொருள் வெளிப்பாடு அமையும் தன்மையை அறியலாம்.

முதற் பொருள் வெளிப்பாடு

நிலம்

குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்

பைஞ்சுனைப் பூத்த பகு வாய்க் குவளையும்

(ஐங்குறுநூறு - 199 : 1-2) (குன்ற நாடன் = முருகன் அல்லது நிலத்தலைவன்; குன்றத்துக்கவாஅன் = பக்கமலை; பகுவாய் = மலர்ந்தவாய்)

தலைவியின் பண்பைப் பாராட்டும் தலைவனின் கூற்றாக இப்பாடல் அமைகிறது. இப்பாடலின் மேற்காட்டிய இரு அடிகளும் குறிஞ்சி நிலத்தை நம் கண் முன் கொண்டு வருகின்றன. முருகனது அல்லது தலைவியின் தந்தையது மலையின் பக்க மலையில் மலர்ந்த வாயை உடைய குவளை மலர்கள் பசிய சுனையில் பூத்துக் கிடக்கின்றன என்பது இதன் பொருள்.

கல்கெழு நாடன் கேண்மை

(நற்றிணை -206, ஐ யூர் முடவனார்) (கல் = மலை ; கெழு = நிறைந்த; கேண்மை = நட்பு )

சாந்த நறும் புகை

தேங்கமழ் சிலம்பின் வரையகம் கமழும்

(ஐங்குறுநூறு - 253 : 1-2) (சந்தனம்; தேன்கமழ் சிலம்பு = தேன்மணக்கும் மலை; வரையகம் = பக்கமலை)

குன்றம், கல், மலை, வரை, சிலம்பு, வெற்பு, சாரல் ஆகிய சொற்கள் குறிஞ்சி நிலப்பகுதியைக் குறிப்பவை.

பொழுது

கூதிர்ப்

பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே

(ஐங்குறு நூறு -252 : 4-5) (கூதிர்ப் பெருந்தண் வாடை = கூதிர்க் காலத்துப் பெரிய குளிர்ந்த காற்று)

இவ்வரிகளில் பெரும்பொழுதாகிய பனிக்காலம் சுட்டப்படுகிறது.

இருளிடை என்னாய் நீ இரவு அஞ்சாய்

(கலித்தொகை - 38 :14) (இருளிடை = இருண்டு கிடக்கும் இடம்)

நடு நாட் கங்குலும் வருதி

(ஐங்குறு நூறு -296 : 3) (நடுநாட் கங்குல் = நள்ளிரவு)

இவ்விரு பாடல் அடிகளும் சிறுபொழுதான யாமத்தைக் குறிக்கின்றன.

கருப்பொருள்கள் வெளிப்பாடு

குறிஞ்சித் திணைக்குரிய சில கருப்பொருள்கள் பாடல்களில் வெளிப்படுவதைச் சான்றுகள் கொண்டு அறியலாம்.

தெய்வம் : முருகன்

முரு கயர்ந்து உவந்த முது வாய் வேலை

(குறுந்தொகை-362 :1, வேம்பத்தூர்க் கண்ணன் கூத்தனார்) முருகனை வழிபட்டு மகிழ்ந்த அறிவு மிகுந்த வேலனே! என்பது இதன் பொருள்.

மக்கள் : சிலம் பன்,

விண்டோய் மாம லைச் சிலம்பன்

(குறுந்தொகை: 362:6)

பின்னிரும் கூந்தல் நன்னுதல் குறமகள்

(ஐங்குறு நூறு -285 : 1) (பின்னரும் கூந்தல் = பின்னிய கரிய கூந்தல்; நுதல் = நெற்றி)

பறவை : கிளி, மயில்

வெள்ள வரம்பின் ஊழி போகியும்

கிள்ளை வாழிய பலவே!

(ஐங்குறு நூறு -281 : 1-2) (ஊழி = இறுதிக் காலம்; வரம்பு = எல்லை ; கிள்ளை - கிளி)

'வெள்ளம் பெருக்கெடுக்கும் யுக முடிவான இறுதிக் காலத்தையும் தாண்டி, கிளியே நீ பல்லாண்டு வாழ்க!' என்பது இதன் பொருள்.

மயில் கள் ஆலப் பெருந்தேன் இமிர

(ஐங்குறு நூறு -292 : 1)

மயில்கள் அகவ, பெரிய வண்டுகள் ஒலிக்கும்.

விலங்கு : புலி

ஆகொள் வயப்புலி ஆகும் அஃது

(அகநானூறு -52 : 6, நொச்சி நியமங் கிழார்) (ஆகொள் = பசுவைக் கவர்கின்ற; வய = வலிய)

மராஅ யானை மதம் தப ஒற்றி

(அகநானூறு -18 :4, கபிலர்) (மராஅ = இனத்தோடு சேராத; தப் = கெட; ஒற்றி = மோதி)

இனத்தோடு சேராத ஆண்யானையின் மதம் அழியுமாறு அதனை வெள்ளம் மோதி இழுக்கும் என்பது பொருள்.

மரம், பூ : சந்தன மரம், காந்தள் பூ

குன்றக் குறவன் ஆரம் அறுத்து என

நறும் புகை சூழ்ந்த காந்தள் நாறும்

(ஐங்குறு நூறு - 254 : 1-2) (ஆரம் = சந்தன மரம்; காந்தள் = காந்தள் மலர்)

தொழில் : தினை காத்தல்

சிறு தினைக் காவல னாகி

(ஐங் குறு நூறு - 230 : 2)

உரிப்பொருள் வெளிப்பாடு

காதல் மிகுதியால் இரவு நேரத்தில் வந்து தலைவியைச் சந்திக்க விரும்புகிறான் தலைவன். அந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறு தோழி குறிப்பாகக் கூறுகிறாள்.

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கரு வி மாம ழை வீழ்ந்தென, அருவி

விடர்அகத்து இயம்பும் நாடஎம்

தொடர்பும் தேயுமோ நின்வயி னானே?

(குறுந்தொகை- 42, கபிலர்)

(கருவி = மின்னல், இடி போன்ற தொகுதி; விடர் = குகை, மலைப்பிளவு; இயம்பும் = ஒழுகும்)

"தலைவனே! நீ இரவில் வராவிட்டால் மெய்யுற்றுப் பெறுகின்ற இன்பம் இல்லாமல் போகலாம். அதனால் என் தலைவி உன்னுடன் கொண்ட நட்புக் குறைந்து போகுமா? நள்ளிரவில் பெரும் தொகுதியை உடைய பெரிய மழை பெய்கிறது. மலைக் குகைகளின் வழியே ஒழுகும் அருவியின் ஓசை மறுநாளும் கேட்கிறது. அத்தகைய மலை நாட்டைச் சார்ந்தவனே! என் வினாவிற்கு விடையைச் சொல்வாயாக”.

இப்பாடலில் தலைவன் - தலைவியின் கூடல் தொடர்பான செய்தி குறிக்கப்படுவதால், குறிஞ்சியின் உரிப்பொருள் தெளிவாகத் தெரிகிறது. (தலைவியைக் கூடத் தலைவன் முயல்வதும், தோழி அதற்கு மறுத்துரைப்பதும் கூடல் தொடர்பானவையே) இரவில் பிறர் அறியாதபடி மலையில் மழை பெய்கிறது. ஆயினும் அருவியின் ஒலியால் மழை பெய்தது அறியப்படுகிறது; பேசப்படுகிறது. அதுபோல் இரவில் பிறர் அறியாதபடி தலைவன் - தலைவி சந்திப்பு நிகழ்ந்தாலும், பகலில் தலைவியின் மேனி (உடல்) வேறுபாடு ஊரார்க்கு இரவுச் சந்திப்பை உணர்த்திவிடும்; அவர்கள் இதைப்பற்றிப் பழித்துப் பேசத் தொடங்கி விடுவார்கள். ஆகவே இச்சந்திப்பு வேண்டாம் என மறைமுகமாக உணர்த்துகிறாள் தோழி.

நாறு உயிர்

மடப்பிடி தழீஇத் தடக்கை யானை

(குறுந்தொகை- 332 : 3-4, இளம் போத்தன்) (நாறு உயிர் = மணக்கும் மூச்சு; மடப்பிடி = இளைய பெண்யானை; தழீஇ = தழுவி; தடக்கை = பெரியகை)

மணக்கும் மூச்சை உடைய இளமையான பெண் யானையை அன்புடன் தன் துதிக்கையால் தழுவிக்கொள்ளும் ஆண் யானை என்பது பொருள். யானைகளின் அன்புநிலை காட்டிக் கூடல் என்ற உரிப்பொருள் இங்கு உணர்த்தப்படுகிறது. இவ்வாறு அனைத்துக் குறிஞ்சித்திணைப் பாடல்களிலும் கூடல் என்ற உரிப்பொருள், கூடல் தொடர்பான செய்திகளைச் சுட்டி வெளிப்படுத்தப் படுகிறது.

நனவில் புணர்ச்சி நடக்கு மாம் அன்றோ

நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே

கனவில் புணர்ச்சி கடிது மாம் அன்றோ

(கலித்தொகை - 39 : 34-36) புணர்ச்சி என்ற சொல் இப்பாடலில் மீண்டும் மீண்டும் வந்து குறிஞ்சியின் உரிப்பொருளை வெளிப்படுத்துகிறது.

குறிஞ்சித் திணையின் சிறப்புகள்

அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலியன குறிஞ்சித் திணைக்குச் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகள் ஆகும்.

அறத்தொடு நிற்றல்

அகத்திணை மாந்தர்களின் மன, மண ஒழுக்கங்களைக் களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் அடக்குவர். இவ்விரண்டையும் இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் களவு ஒழுக்கத்தை, அதாவது பிறருக்குத் தெரியாமல் தலைவன்-தலைவி மனங்கள் ஒன்று சேர்ந்ததை உண்மையோடு வெளிப்படுத்தலே அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி,தோழி, செவிலி, நற்றாய் என ஒவ்வொருவரும் அறத்தொடு நிற்பதுண்டு. அறத்தொடு நிற்றலின் விளைவு தலைவியை அவள் விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாகும். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தலாகும்.

தலைவிக்கு உடனிருந்து பிறர் அறியாமல் களவுக் காதலுக்கு உதவியவள் தோழி. களவுக் காதல் கற்பாக மாற வேண்டும். காதல் வெளிப்பட்டுத் திருமணம் நிகழ வேண்டும். ஆதலால் வாய்ப்பு ஏற்படும் பொழுது தோழி செவிலிக்குத் (செவிலிவளர்ப்புத்தாய்) தலைவியின் காதலைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். களவை வெளிப்படுத்தல் என்று கூறாமல் அறத்தொடு நிற்றல் என்று பெயர் வைத்துள்ளது சிறப்பாகும். தலைவியின் கற்பு அறத்தைக் காப்பதற்காகக் களவு உண்மையை வெளிப்படுத்துவதால் இது அறத்தொடு நிலை என்று சொல்லப்படுகிறது.

அகவன் மகளே ! பாடுக பாட்டே!

இன்னும் பாடுக பாட்டே அவர்

நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே !

(குறுந்தொகை- 23 : 3-5, ஒளவையார்) (அகவன் மகள் = குறிசொல்லும் பெண்; நன்னெடும் = நல்ல நெடிய; குன்றம் = மலை)

ஒரு குறிப்பிட்ட மலையைச் சார்ந்த தலைவன் ஒருவனை விரும்பினாள் தலைவி. செவிலித்தாய் தலைவியின் போக்கில் மாற்றத்தை உணர்கிறாள். எனவே குறத்தியை அழைத்துத் தலைவியின் மாற்றத்துக்குக் காரணம் அறியக் குறி கேட்கிறாள். குறத்தி குறி கூறுமுன் வழக்கப்படி பல மலைகளையும் பற்றிப் பாடத் தொடங்குகிறாள். தலைவனுடைய மலையைப் பாடும் போது தோழி குறுக்கிட்டுக் கூறுகிறாள் : “குறத்தியே! பாடு, பாடு, அவருடைய மலையை மட்டுமே பாடிக் கொண்டேயிரு" என்கிறாள். இவ்வாறு குறி கூறுபவளைப் பார்த்து அவர் மலையை மட்டுமே பாடும் என்பது தாய்க்கு ஐயத்தை உறுதியாக ஏற்படுத்தும். அவர் மலை என்பதில் உள்ள குறிப்பு தலைவியின் மாற்றத்திற்கான காரணத்தைத் தாய்க்கு வெளிப்படுத்திவிடும். களவு வெளிப்பட்ட பின் திருமண ஏற்பாடுகள் தொடங்கிவிடும். இதுவே தோழியின் எதிர்பார்ப்பு. இவ்வாறு குறிப்பாக நிகழ்வதே அறத்தோடு நிற்றல் நிகழ்ச்சி.

குறிஞ்சிப் பாடல்களை இயற்றுவதில் மிகச் சிறந்தவர் கபிலர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு. 261 அடிகளை உடைய குறிஞ்சிப்பாட்டு அறத்தொடு நிற்றல் துறையில் அருமையாக அமைந்துள்ளது. தோழி செவிலித்தாய்க்குக் கூறும் கூற்றாக இப்பாட்டு அமைந்துள்ளது.

அன்னாய் வாழி வேண்டு அன்னை

(குறிஞ்சிப் பாட்டு -1) (அன்னாய்= அன்னையே; வாழி = வாழ்க; வேண்டு=விரும்பிக் கேள் அன்னை = அன்னையே)

குறிஞ்சிப்பாட்டின் இம்முதல் அடி அறத்தொடு நிற்க விரும்பும் தோழி செவிலித்தாயின் கவனத்தைத் தன்முகமாகத் திருப்பப் பேசும் பேச்சுத் தொடக்கம். தன்னை நோக்கித் திரும்புபவள் தன் சொல்லின் உண்மையை நோக்கித் திரும்புவாள் என்று தோழி நம்புகிறாள். களவு ஒழுக்கத்தால் தலைவியின் மேனி (உடல்), ஒழுக்கம் (இயல்புகள்) இவை வேறுபடுகின்றன. செவிலி, வேலனையும் கட்டுவிச்சியையும் (கட்டுவிச்சி - நெல்மணியை முறத்தில் இட்டுக் குறிசொல்பவள்) வரவழைத்துக் காரணம் கேட்கிறாள். அதனால் எப்பயனும் விளையவில்லை. இந்நிலையில் தலைவி தோழியிடம், 'தோழி! நம் வீட்டுக் கட்டுக் காவலை மீறிச் சென்று, தலைவனும் நானும் கொண்ட காதலைத் தாயிடம் சொல்வது தவறாகுமா?' என்று கேட்கிறாள்.

நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி

இருவேம் ஆய்ந்த மன்றல் இது என

நாம் அற வுறாலின் பழியும் உண்டோ ?

(குறிஞ்சிப் பாட்டு : 20-22) (எந்தை = என்தந்தை, அருங்கடி = அரிய காவல்; நீவி = கடந்து; இருவேம் ஆய்ந்த = தேர்ந்து கொண்ட; மன்றல் = களவுமணம்)

"தோழியே! தாம் விரும்பியவர்க்கு என்னை மணம் முடிக்க நினைக்கின்றனர் தாயும் தந்தையும். அவர்களது விருப்பமும், எனது மனமும் ஒன்றிப் போகுமாறு செய்ய வேண்டும். 'காவலைக் கடந்து நானும் தலைவனும் தேர்ந்து கொண்ட மணம் இது' என்று நாமே தாயிடம் எடுத்துச் சொன்னால் புகழே ஆகும். பழி ஆகாது", இவ்வாறு தலைவி தோழியை அறத்தொடு நிற்கத் தூண்டுகிறாள்.

அதன் படியே குறிஞ்சிப்பாட்டு முழுவதுமாகத் தோழி அறத்தொடு நிற்கிறாள். தினைப்புனம் காக்குமாறு செவிலி தலைவியையும் தோழியையும் அனுப்பிய ஒருநாள், தலைவியை நோக்கி வந்த சினம் கொண்ட யானையிடமிருந்து தலைவன் காப்பாற்றியதையும், அன்று முதல் அவர்களுக்கிடையே தோன்றிய காதலையும், தலைவன் தலைவியை மணந்து கொள்வதாக அருவிநீர் உண்டு வாக்குறுதி (சத்தியம்) அளித்ததையும், அவன் அழகையும், பண்புகளையும், குடும்ப வளத்தையும் எல்லாம் விரிவாகக் கூறிச் செவிலியின் மனம், காதலர் காதலுக்கு ஆதரவாக இசையும் வண்ணம் முயல்கிறாள் தோழி. குறிஞ்சித்திணைக்கு மிகுந்த நயம் சேர்ப்பது அறத்தொடு நிற்றல் துறையாகும்.

வரைவு கடாவுதல்

இரவில் வந்து தலைவியைச் சந்தித்துத் திரும்புகிறான் தலைவன். இந்நிலை நீடிக்கிறது. தலைவனிடம் தலைவியை விரைவில் மணந்து கொள்ளுமாறு வேண்டுகிறாள் தோழி. இதனையே வரைவு கடாவுதல் (மணந்துகொள்ள வேண்டுதல் அல்லது தூண்டுதல்) என்பர். சூழலை விளக்கி மணம் புரியுமாறு தலைவனைத் தோழி வேண்டுவது என வரைவு கடாவுதலுக்குப் பொருள் கொள்ளலாம். (வரைவு : திருமணம்; கடாவுதல்; வேண்டுதல்) வரைவு கடாவுதல் குறிப்பாலும், வெளிப்படையாலும் அமையப் பெறும். குறிப்பாய் உணர்த்தும் போது பயனற்றுப் போனால் மட்டுமே வெளிப்படையாய்க் கூறுதல் மரபு.

ஓங்கல் வெற்ப

ஒரு நாள் விழுமம் உறினும், வழிநாள்

வாழ்குவள் அல்லள் என் தோழி...

கொடுந்தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை

பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும் பில்

பகல் நீ வரினும் புணர்குவை...

(அகநானூறு -18 : 8-10; 14-16, கபிலர்) (ஓங்கல் = உயர்ந்த; வெற்ப = மலைநாடனே!; விழுமம்உறினும் = துன்பம் அடையினும்; வழிநாள் = மறுநாள் கொடுந்தேன் = வளைந்த தேன்கூடு; கோடு = உச்சி; நளிப்பு = செறிவு; பொதும்பு = புதர்; புணர்குவை = சேர்வாய்)

வரைவு நீட்டிக்கின்றான் தலைவன். அதாவது, திருமணம் செய்ய முயலாமல் காலம் கடத்துகிறான். இரவில் வந்து தலைவியைச் சந்திக்கின்றான். இரவு வருகின்றவனைப் பகலில் வா என்று இப்பாடலில் தோழி கூறுகிறாள். "உயர்ந்த மலைநாடனே! இரவில் வரும் உனக்கு ஒருநாள் துன்பம் நேர்ந்தாலும் என் தோழி மறுநாள் உயிர்வாழ மாட்டாள். வளைந்த தேன்கூடுகள் கட்டப்பட்டுள்ள உயர்ந்த மலைச்சாரல் எம் ஊர். அம்மலைச் சாரலில் பழங்கள் பழுத்துத் தொங்கும் மரச்செறிவில் உள்ளது காந்தள் புதர். அப்புதரில் நீ பகற்காலத்தில் வந்தால் தலைவியைக் கூடலாம்.” இப்பாடல் தோழியின் நாவன்மைக்கு மிகச்சிறந்த சான்றாகிறது. பகலில் வரலாம் என அவள் கூறினாலும் பகலில் தேன் எடுக்க வருபவராலும், பழம் பறிக்க வருபவராலும், காந்தள் மலர் கொய்ய வருபவராலும் இடையூறு ஏற்படும் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறாள். ஆதலால் நீ விரைந்து இவளை மணந்து கொள்வதே நன்மை பயக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி !

யார் அஃது அறிந்திசி னோரே? சாரல்

சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கி யாங்கு இவள்

உயிர்தவச் சிறிது ; காமமோ பெரிதே

(குறு ந்தொகை- 18, கபிலர்) (வேரல் = மூங்கில்; வேர்க்கோட்பலா = வேரில்குலை உடைய பலாமரம்; தவ = மிக)

இப்பாடலில் விரைந்து வந்து மணக்குமாறு தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்துகிறாள் தோழி. "வளர்ந்த மூங்கிலை வேலியாகக் கொண்ட மலைச்சாரல் நாட்டினனே! உனது நாட்டில் வேலியின் உள்ளே வேரில் குலைகளை உடைய பலா மரங்கள் நிறைந்திருக்கும். எங்கள் மலையிலோ பலாவின் உயர்ந்த சிறு கிளையில் தாங்க முடியாதபடி பெரிய பழம் தொங்கும். அந்தக் கிளைபோல் தலைவியின் உயிர் மிகச் சிறியது. பெரிய பழம்போல் அவ்வுயிர் சுமக்கும் காமமோ பெரியது. யார் இதனை அறிவார்? நீ விரைந்து வந்து அவளை மணந்துகொள்” என்பது பொருள்.

இற்செறிப்பும் இரவுக் குறியும்

களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் உடல் மாறுபாடு கண்டதாய் அவளை வெளியில் செல்ல விடாது வீட்டின் உள்ளேயே நிறுத்திக் கொள்வாள். இந்த மரபினை இற்செறிப்பு என்பர். (இல் - வீடு; செறிப்பு - தடுத்து நிறுத்திக் கொள்ளல்)

பாரி.

பலவுறு குன்றம் போலப்

பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே

(நற்றிணை -253 :7-9, கபிலர்) (பலவுறு = பலாமரம் நிறைந்த; அருங்காப்பு = அரிய காவல்; கவின் = அழகு)

வள்ளல் பாரியின் பலாமரம் நிறைந்த பறம்பு மலைபோலப் பேரழகு வாய்ந்தவள் தலைவி. அத்தலைவி அரிய காவலில் வைக்கப்பட்டுள்ளாள். இவ்வாறு இற்செறிப்பு என்ற அருங்காவல் வைப்பு, பல பாடல்களில் இடம் பெறுகிறது. தலைவி இற்செறிக்கப்பட்ட பின் அவளைப் பகலில் சந்திக்க இயலாதவன் ஆகிறான் தலைவன். இரவு நேரத்தில் அவளைச் சந்திக்க வருகின்றான். இரவில் வந்து தலைவியைச் சந்திக்கத் தோழி ஏற்பாடு செய்து வைக்கும் இடம் இரவுக் குறி எனப்படும். தொடர்ந்து இரவில் வரும் அவனைத் தடுத்து இனிமேல் 'இரவில் வராதே, மணம் புரிந்துகொள்' என்று குறிப்பாகவும், வெளிப்படையாகவும் சொல்கிறாள் தோழி. இதனை இரவுக் குறி மறுத்தல் என்று கூறுவர்.

பகல்நீ வரினும் புணர் குவை

(அகநானூறு - 18: 16, கபிலர்)

முன்னர் வரைவு கடாவுதலுக்குச் சான்றாகப் பார்த்த இப்பாடல் இரவுக்குறி மறுத்தற்கும் சான்றாகிறது. இரவில் வரும் தலைவன் தலைவியைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் செல்லுமாறு நேர்கின்ற தடைகள் பற்றிக் கூறுகின்றது குறிஞ்சிப் பாட்டு.

இரவரல் மாலை ய னேவரு தோறும்

காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும்

நீ துயில் எழினும் நிலவு வெளிப் படினும்

(குறிஞ்சிப்பாட்டு : 239-241) (இர வரல் மாலை யன் = இரவில் வரும் தன்மை உடையவன்; வருதோறும் = வரும்போதெல்லாம்; காவலர் = ஊர்க்காவலர்; கடுகினும் = காவல் செய்ய வந்தாலும்; கதநாய் = சினம் உடைய நாய்; நீ துயில் எழினும் = செவிலியான நீ உறக்கம் நீங்கி எழுந்தாலும்) காவலர், சினம் கொண்ட நாய், நிலவு, செவிலியின் விழிப்பு ஆகிய பல தடைகளை வென்று ஒவ்வொரு நாளும் இரவில் தலைவியைச் சந்திப்பது தலைவனுக்குப் பெருஞ்சாதனை ஆகிறது.

குறிஞ்சியைப் போற்றல்

மலைப்பகுதியில் மட்டுமே காணப்படும் மலர் குறிஞ்சி மலர்; கரிய கொம்பினில் பூப்பது; இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் தன்மையது. குறிஞ்சி நிலத்தோர் தம் வாழ்வின் சிறந்த கூறாக இம்மலரைப் போற்றுகின்றனர்.

சாரல்

கருங் கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(குறுந்தொகை - 3: 2-4, தேவ குலத்தார்)

தலைவி, மலைநாடனின் நட்பு மிகவும் பெரியது. பரந்தது உயர்ந்தது என்று கூற விரும்புகிறாள். எத்தகைய மலை நாட்டிற்குத் தலைவன் என்று கூறும் போது கரிய கிளையில் பூக்கும் குறிஞ்சி மலரை நினைக்கிறாள். குறிஞ்சித்தேன் மிகவும் இனியது. குறிஞ்சி மலர்களில் உள்ள தேனை எடுத்து வண்டுகள் பெரிய தேன்கூட்டைக் கட்டியிருக்கும் மலைநாடன் என்று அவனைக் குறிப்பிடுகிறாள். சிறப்பான குறிஞ்சித் தேன் போன்றது தங்களது காதல் என உணர்த்துகிறாள். குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 வகை மலர்களை அடுக்கிக் கூறுகிறார். அவற்றுள் குறிஞ்சியும் உண்டு.

ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்

தண்கயக் கு வ ளை குறிஞ்சி வெட்சி...........

(குறிஞ்சிப் பாட்டு : 62-63)

குறிகேட்டல்

மலைவாழ் மக்களில் குறிசொல்லும் மரபினர் உண்டு. குறிசொல்லும் பெண் கட்டுவிச்சி என்று அழைக்கப்பட்டாள் என்பதை முன்னர்க் கண்டோம். தலைவியின் உடல், ஒழுக்க வேறுபாடுகளைக் காணும் செவிலி குறிசொல்லுபவளை அழைத்துக் காரணம் கேட்பது மரபு. சங்க காலத்தில் குறிஞ்சித் திணையின் சிறப்பியல்பாக விளங்கிய குறிகேட்டல் நிகழ்வு பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியம் எழக் காரணமாகியது.

என் தோழி மேனி

விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடுநோய்

அகலுள் ஆங் கண் அறியுநர் வினாயும்

(குறிஞ்சிப் பாட்டு: 2-4)

(விறல் = வெற்றி; இழை = அணி; நெகிழ்த்த = கழலும் படி செய்த; வீவு அருங்கடுநோய் = மருந்துகளால் நீக்குவதற்கு அரிய கொடிய நோய்; அகல்உள்ஆங்கண் = அகன்ற உள் இடத்தை உடைய ஊரில்; அறியுநர் = குறியால் உணருபவர்) குறிஞ்சிப்பாட்டு எழக் காரணம் செவிலி குறிகேட்க ஆரம்பித்தலே ஆகும். "தாயே! என் தோழியின் உடலில் அணிந்துள்ள ஆடை அணிகள் நெகிழ்கின்றன. மருந்துகளால் நீக்க முடியாத நோயினளாக அவள் உள்ளாள். அவளுக்கு வந்துள்ள அரிய, கொடிய நோயின் காரணத்தை அறிய நீ விரும்புகின்றாய். அதனால் அகன்ற உள்ளிடத்தை உடைய ஊரில் உள்ள குறியால் உணருபவரை அழைக்கிறாய். 'என்மகள் அடைந்த நோய்க்குக் காரணம் யாது ?' எனக் கேட்கிறாய்." எனக் கூறியே தோழி தொடங்குகிறாள்.

குறி சொல்லும் வேலன், கட்டுவிச்சி ஆகியோர் கட்டினாலும், கழங்கினாலும் குறி பார்த்துச் சொல்வர். முறத்தில் பரப்பிய நெல்கொண்டு பார்க்கும் ஒருவகைக் குறியே கட்டு எனக் கூறப்படுகிறது. கழற்சிக் காய்கொண்டு பார்க்கும் குறியைக் கழங்கு எனக் கூறுவர். குறுந்தொகையில் 'அகவன் மகளே அகவன் மகளே! (பாடல் எண்23, ஒளவையார்) என்ற பாடலும் குறிகேட்கும் இயல்பை எடுத்துக் காட்டுகிறது.

தினைப்புனம் காத்தல்

தினை விளையும் நிலம் தினைப்புனம் ஆகும். விளைந்த தினைக் கதிர்களைத் தலைவியும், தோழியும் கிளி முதலிய பறவைகளிடம் இருந்து காப்பர். தினைப்புனம் காவல் காக்கத் தலைவி தோழி இருவரையும் செவிலி அனுப்பிவைக்கும் வழக்கம் உண்டு. இதனைக் குறிஞ்சிப்பாட்டு காட்டுகிறது.

துய்த்தலை வாங்கிய புனிறு நீர் பெருங் குரல்

நல் கோள் சிறு தினைப் படுபுள் ஓப்பி

எல்பட வருதியர் எனநீ விடுத்தலின்

(குறிஞ்சிப் பாட்டு :37-39) (துய் = பஞ்சு; வாங்கிய = விளைந்த; புனிறு = இளமை; தீர் = நீங்கிய; பெருங்குரல் = பெரிய கதிர், படு புள்= வீழ்கின்ற பறவைகள் (கிளிகள்); ஓப்பி = ஓட்டி; எல் பட = சூரியன் மறைய; வருதியர் = வருவீராக)

"பஞ்சு போன்ற நுனியைக் கொண்டு நன்றாக விளைந்து வளைந்தன தினைக்கதிர்கள். அக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டி மாலையில் வருமாறு என்னையும், தலைவியையும் நீ தினைப்புனத்திற்கு அனுப்பினாய்" என்று செவிலியிடம் தோழி கூறுகிறாள். பரண் அமைத்து அதில் அமர்ந்து பல கருவிகளால் ஒலி எழுப்பிக் கிளிகளை விரட்டும் இயல்பினைக் குறிஞ்சிப்பாட்டு காட்டுகிறது. (குறிஞ்சிப் பாட்டு : 40-44)

இலக்கிய நயங்கள்

குறிஞ்சித் திணைப் பாடல்களில் காணப்படும் இலக்கிய நயங்களாகிய கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.

கற்பனை

குறிஞ்சிப்பாட்டில் தலைவியும், தோழியும் அருவி நீராடியதைச் சொல்லும் போது கற்பனை நயத்தைச் சுவைக்க முடிகிறது. கடல் குறைய நீரை மொண்டு கொண்டு வானில் கூடின மேகங்கள்; காற்று வீசியது; மேகங்கள் கலங்கின; முரசம் போன்று இடியை முழங்கின; பறவைகள் தம் கூடுகளில் போய் அடங்கின; முருகப் பெருமானின் வேல் போல் மின்னல் தோன்றியது; இத்தொகுதிகளுடன் தலைவனின் மலைமேல் மழை பொழிந்தது. நெடிய மலை உச்சியிலிருந்து வெண்மையான அருவி கொட்டியது. தெளிந்த நீரையுடைய அருவி தூய வெள்ளை ஆடை போல் இருந்தது. பளிங்கைக் கரைத்து வைத்தது போன்று சுனை பரவி இதமளித்தது. (குறிஞ்சிப்பாட்டு: 46-57) குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தலைவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று நினைக்கிறான் தலைவன். நாணம் உடைய அவளை நாணத்திலிருந்து நீக்க அவள் உடல்தொட்டுக் கூந்தலைத் தடவுகிறான். இதனை மெய் தொட்டுப் பயிறல் என்பர். கற்பனை சிறக்க வண்டை அழைத்துப் பேசுகிறான்.

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறி எயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோநீ யறியும் பூவே

(குறுந்தொகை - 2, இறையனார்)

(கொங்கு = பூந்துகள், தேன்; அஞ்சிறை = அழகிய சிறகுகள்; தும் பி = வண்டு; காமம் = விருப்பம்; செப்பாது = சொல்லாமல்; கண்டது = ஆராய்ந்து கண்ட உண்மை; மொழிமோ = சொல்க; பயிலியது கெழீஇய = பல பிறவியிலும் என்னோடு இணைந்த; செறிஎயிற்று = நெருங்கிய பல்வரிசையினை உடைய; அரிவை = பெண்; கூந்தலின் = கூந்தல் போல; நறியவும் = நறுமணம் உள்ளதும்)

"அழகிய சிறகுகளை உடைய வண்டே ! நீ மலர்களில் உள்ள பூந்துகளை ஆராய்ந்து உண்கின்றாய். என் வினாவிற்கு விடை தருவாயாக. எனக்காக நான் விரும்பியதை நீ சொல்ல வேண்டாம். பல பிறவியிலும் என்னோடு தொடர்ந்து வரும் அன்பினை உடையவள் என் காதலி. அவள் மயில் போன்ற சாயலினை உடையவள். நெருங்கிய பல்வரிசை உடையவள். அவளது கூந்தலைப் போல நறுமணம் உடைய பூவை நீ அறிந்ததுண்டோ ?"

வண்டை அழைத்து, அதன் வாழ்க்கை முறை காட்டித் தன் கருத்தை நிலை நிறுத்தும் பாங்கு சிறப்பிற்கு உரியது. இங்கு ஒரு நாடகமே நடக்கிறது. வண்டோடு பேசும் பேச்சு தலைவியின் அழகைப் பாராட்டும் பேச்சு; தலைவி அதைக் கேட்டுப் புன்முறுவல் பூப்பது தெரிகிறது; கூந்தலில் மொய்க்கும் வண்டை விலக்குவது போன்ற ஒரு பாவனையில் தலைவன் தலைவியின் கூந்தலைத் தீண்டுவது புலப்படுகிறது.

சொல்லாட்சி

காதலின் அகல, உயர, ஆழ அளவுகளைக் கூறிப் பாடப்பட்ட குறுந்தொகைப் பாடல் சொல்லாட்சிக்குச் சிறந்த சான்று ஆகும். தலைவனோடு தான் கொண்ட நட்பின் தன்மையைத் தலைவி தோழிக்கு எடுத்துரைக்கிறாள்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங் கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(குறுந்தொகை - 3, தேவ குலத்தார்)

கரிய கொம்புகளில் பூத்துள்ளன. குறிஞ்சி மலர்கள். அவற்றில் இருந்து வண்டுகள் தேனைச் சேர்த்துத் தேன்கூடுகளைக் கட்டுகின்றன. இத்தகு இனிமை நிறைந்த மலை நாட்டினன் என் தலைவன். அவனிடம் நான் கொண்ட நட்பானது நிலத்தைவிட அகலமானது; வானத்தைவிட உயர்ந்தது; கடலைவிட ஆழமானது. குறிஞ்சி மலரில் உள்ள தேனை மலை உச்சியில் தேன்கூட்டில் சேர்க்கின்றது தேனீ என்னும் வண்டு. அதுபோல் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த எங்கள் உள்ளங்கள் இனிமையாய் ஒன்றுபட்டன. பால்வரை தெய்வம் என்ற விதி எங்கள் இருவரையும் இணைத்துள்ளது,' என்பன போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கியது இப்பாடல். இது தோழியிடம் தலைவி கூறுவது. 'கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடன்' என்பது சொல்லால் வரைந்த ஓவியம் ஆகிறது.

உவமை

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ் வழி அறிதும்

செம் புலப் பெயல் நீர் போல

அன்பு டை நெஞ்சம் தாம் கலந்தனவே

(குறுந்தொகை-40, செம் புலப் பெயனீரார்) (யாய் = என்தாய்; ஞாய் = உன்தாய்; எந்தை = என்தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம் புலம் = செம்மண் நிலம்; பெயல் நீர் = மழைநீர்)

முன்பின் தெரியாத ஒருவனிடத்து உள்ளத்தைப் பறிகொடுத்தாள் தலைவி. இவன் நம்மை மணப்பானோ அல்லது விட்டுவிடுவானோ என உள்ளம் கலங்குகிறாள். அவளைத் தேற்றுகிறான் தலைவன். "என்தாயும், உன் தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை . ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல் நீர்போல ஒன்று கலந்துவிட்டன.” இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது.

பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. இவ்விரண்டையும் இனிப் பிரிக்க முடியாது. இவ்வாறே தலைவன், தலைவி காதலையும் பிரிக்க இயலாது. முன்பின் அறியாத் தலைவன் தலைவியின் மனத்தில் நம்பிக்கையை உண்டாக்குவதற்கு அருமையான உவமையைப் பயன்படுத்தி உள்ளது பாராட்டத் தக்கது. குறிஞ்சித்திணைப் பாடல்களில் எண்ணற்ற உவமைகள் நிறைந்து காணப்படுகின்றன.

சான்றாக :

இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்

வினையிடை நின்ற சான்றோர் போல

(குறிஞ்சிப் பாட்டு : 27-28)

'பகை கொண்ட இரு பேரரசர்களை ஒன்று சேர்த்துக் கூட்டும் அறிவுடையவரைப் போல' என்பது இதன் பொருள். தோழி, தலைவிக்கும் செவிலிக்கும் இடையே நின்று தலைவியின் காதலைத் தெரிவித்து, மணம் கூட்டும் பெரும் முயற்சியில் ஈடுபடுவதற்குக் கவிஞர் இந்தப் பொருத்த மான உவமையைக் கையாள்கிறார்.

உள்ளுறை

குறிஞ்சிப் பாடல்களில் உள்ளுறை நிறைந்து காணப்படுகின்றது. 'மலையில் ஓங்கி வளர்ந்துள்ளது மூங்கில். அந்த மூங்கில் ஈன்ற அரிசியைத் தின்ன விருப்பத்துடன் வருகின்றது ஆண்யானை. மேல் நோக்கித் துதிக்கையை உயர்த்தி முயற்சி செய்கின்றது அது. தன் கைக்கு அரிசி எட்டாததால் தன் கொம்பில் துதிக்கையை வளைத்துப் போட்டு வருத்தம் நீங்குகின்றது. அக்கையைப் போன்ற வளைந்த தினைக் கதிர்கள்..' என்றொரு செய்தியைத் தோழி குறிஞ்சிப்பாட்டில் செவிலியிடம் சொல்கிறாள். (குறிஞ்சிப்பாட்டு : 35-37)

மலையில் ஓங்கி வளர்ந்த மூங்கில் தலைவியின் உயர்ந்த குடியாகிறது; மூங்கில் ஈன்ற நெல் தலைவி; பசியுடைய யானை காதல் வேட்கையுள்ள தலைவன்; யானை மேல்நோக்கி முயற்சி செய்தல் தலைவன் இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க முயற்சி செய்தல்; கைக்கு எட்டா உயரத்தில் மூங்கில் அரிசி இருப்பது தலைவி இற்செறிப்பில் இருப்பதைக் குறிக்கிறது. யானையின் தந்தங்கள் தலைவனின் நற்குணங்கள் நிறைந்த உறுதிப் பாடாகும். இவ்வாறு யானையின் வருணனை தலைவன் - தலைவி காதல் இயக்கத்துக்கு உள்ளுறையாகிறது.

குறுந்தொகைப் பாடலில் (பாடப்பகுதி 2.3.3) இரவில் யாரும் அறியாது பெய்த மழை, பகலில் அருவியாக வழிந்து அனைவர்க்கும் வெளிப்பட்டுவிடும் என்னும் வருணனை, தலைவன் - தலைவியின் களவுக் காதல் சந்திப்பு, தலைவியின் தோற்ற மாறுதலால் பிறர்க்கு வெளிப்பட்டு விடும் என்பதை உணர்த்தும் உள்ளுறை உவமையாகி விடுகிறது.

இறைச்சி

பாடுகம் வா வாழி தோழி ! வயக்களிற்றுக்

கோடு உலக்கை யாகநல் சேம்பின் இலை சுள கா

ஆடுகழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம்

பாடுகம்வா வாழி

(கலித்தொகை- 41 : 1-4) (பாடுகம் = பாடுவோம்; வயக்களிற்றுக்கோடு = வலிய யானைக்கொம்பு; சுளகு = முறம்; கழை = மூங்கில்; அறை = பாறை; இருவாம் = இருவரும்)

தலைவன் வேலியை அடுத்து நிற்கிறான். தோழியும் தலைவியும் உலக்கை கொண்டு நெல் குற்றும் பாட்டைப் பாடுகின்றனர். இப்பாட்டை வள்ளைப் பாட்டு எனச் சொல்வர். தலைவன் தலைவியை மணந்து கொள்ள விரும்பினான். உரியவரை அவளுடைய பெற்றோரிடம் அனுப்பினான். அவர்களும் மணத்துக்கு இசைவு (சம்மதம்) தெரிவித்தனர். அதைத் தோழி தலைவிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

"தோழி! வாழ்க ! நாம் பாடுவோம் வா! எவ்வாறு பாடுவோம் என்று சொல்கிறேன் தோழி ! நாம் இருவரும் அசையும் மூங்கில் உதிர்த்த நெல்லைப் பாறையாகிய உரலில் இடுவோம்; வலிமை வாய்ந்த யானைக் கொம்பாகிய உலக்கை கொண்டு குற்றுவோம். நல்ல சேம்பினது இலையை முறமாகக் கொண்டு புடைத்துப் பாடுவோம்". இது பாடல் அடிகள் தரும் வெளிப்படைப் பொருள்.

உயர்ந்த மூங்கிலின் நெல் தானே உதிர்ந்தது; அதனை நாம் எடுத்து உரலில் இடுவோம் என்னும் வருணனை, உயர்ந்த தலைவனை நமக்குத் தெய்வம் தானே கொண்டு வந்து கொடுத்தது. அவனை நம் வயமாக்கிக் கொண்டோம் என்னும் வேறொரு குறிப்புப் பொருள் தருகிறது. யானைக் கொம்பு கொண்டு நெல்லைக் குற்றிப் பயன்படச் செய்வது, வரைவு கடாதல் செயலால் தலைவன் பெண்கேட்டு இல்லறப் பயனை அடையச் செய்கிறோம் எனப் பொருள் தருகிறது. சேம்பிலை அரிசி புடைக்க முழுமையாகப் பயன்படாது. அதுபோல, களவுக் காதலால், விரைவாக மணந்துகொள்ள முடியாது எனும் பொருள் கிடைக்கிறது. இவ்வாறு பொருள்கொள்ள அமைகிறது இறைச்சி.

தொகுப்புரை

குறிஞ்சித் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது; இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படுவதை அறிந்து கொள்ள முடிந்தது. அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலிய குறிஞ்சித் திணையின் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது. குறிஞ்சிப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை, இறைச்சி ஆகிய இலக்கியச் சுவைகளைப் புரிந்து சுவைக்க முடிந்தது.

கேள்வி பதில்கள்

1) குறிஞ்சித் திணைப் பாடல்களைச் சிறப்பாகப் பாடியுள்ள புலவர் யார்?

விடை : கபிலர்

2) குறிஞ்சித் திணைக்கு உரிய முதற்பொருள்கள் யாவை?

விடை : நிலம் : மலையும் மலை சார்ந்த பகுதியும்

பொழுது : பெரும்பொழுது - குளிர்காலம், முன்பனிக்காலம் சிறுபொழுது - யாமம் (நள்ளிரவு)

3) குறிஞ்சித் திணைக்கு உரிய உரிப்பொருள் யாது?

விடை : புணர்தல், புணர்தல் தொடர்பான நிகழ்வுகள்.

4) குறிஞ்சி நிலத்துக்கு உரிய தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடுக.

விடை : முருகன்

5) சிலம்பு, வெற்பு ஆகிய சொற்களின் பொருள் யாது?

விடை : மலை

6) இரவில் மழை பெய்ததை, பகலில் குறிஞ்சி நிலத்தார் எவ்வாறு அறிந்துகொள்வர்?

விடை : அருவியின் ஒலி கேட்டு

7) தடக்கை யானை எதனைத் தழுவியது?

விடை : இளமையான பெண்யானையை

8) எவ்விரண்டை இணைப்பது அறத்தொடு நிற்றல் ஆகும்?

விடை : களவு, கற்பு ஆகிய இரண்டையும்.

9) அகவன் மகள் யார்?

விடை : குறிசொல்லும் பெண்.

10) யாருக்குத் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லக் கபிலர் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார்?

விடை : ஆரிய அரசன் பிரகத்தனுக்கு.

11) வரைவு கடாவுதல் என்றால் என்ன ?

விடை : தலைவியை மணந்து கொள்ளுமாறு தலைவனை வேண்டுதல் அல்லது தூண்டுதல்.

12) இற்செறிப்பு என்றால் என்ன?

விடை : தலைவியை வெளியில் செல்லவிடாமல் வீட்டினுள்ளேயே இருத்திவிடுதல்.

13) குறிஞ்சி மலர் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை மலரும்?

விடை : பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும்.

14) தலைவியின் கூந்தல் மணம் பற்றித் தலைவன் யாரை கேட்க்கிறான்?

விடை : தும்பியிடம் (உயர்ந்தசாதி வண்டிடம் அல்லது பெரிய வண்டிடம்)

15) 'நிலத்தினும் பெரிதே' என்ற பாடலைப் பாடியவர் யார் ?

விடை : தேவகுலத்தார்.

16) செம்புலப் பெயல்நீர் போலக் கலந்தவை எவை?

விடை : தலைவன், தலைவியின் அன்பு கொண்ட உள்ளங்கள்.

17) 'வள்ளைப் பாட்டு' என்றால் என்ன?

விடை : உலக்கை கொண்டு நெல் குற்றும் போது பாடும் பாட்டு.

ஆசிரியர் : முனைவர். நா. இளங்கோவன்

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

2.96153846154
மதிமொழி தங்கராஜ் Mar 31, 2020 08:50 PM

பாரி மன்னரை பற்றி கபிலர் பாடும் பாடல்கள் பதிவிடவும்... பாரிமன்னர் மூவேந்தர்கள் விழ்ந்தமை... பாரி வீரம்...பாடல்கள் மூலம் கதையை கூறும் பாரி மன்னர் பற்றிய தகவல் தருமாறு... மேலே குறிப்பிட்ட பாடல்கள் தகவல்கள் கருத்துக்கள் மிகவும் அருமை பயனுள்ளவை... நன்றி...

ஜமுனா Aug 06, 2019 08:41 PM

மிகவும் அருமை ‌.... இன்னும் எதிர்பார்க்கிறேன்.. நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top