பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள்

சங்க இலக்கியங்களில் கைக்கிளையும் பெருந்திணையும் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றின் இயல்புகளையும் அவை அமைந்த பாடல்களையும் இப்பகுதியில் அறியலாம்.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள கைக்கிளை, பெருந்திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது. கைக்கிளையின் விளக்கம், கைக்கிளை மரபு, கைக்கிளை பாடிய புலவர்கள், சங்க அக இலக்கியங்களிலும் புற இலக்கியங்களிலும் கைக்கிளை அமைந்துள்ள விதம் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது. பெருந்திணையின் விளக்கம், பெருந்திணை மரபு, பெருந்திணை பாடிய புலவர்கள், சங்க இலக்கியங்களில் பெருந்திணை அமைந்துள்ள விதம் ஆகியவற்றையும் இப்பகுதி விவரிக்கிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

• கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றின் விளக்கத்தை அறியலாம்.

• கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றின் மரபுகளை அறியலாம்.

• கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் பாடிய புலவர்கள் பற்றி அறியலாம்.

• அக இலக்கியங்களில் மட்டும் அல்லாது புறநானூற்றிலும் இவ்விரு திணைகளும் இடம் பெற்றமையை அறியலாம்.

• பிற இலக்கியங்களில் கைக்கிளை அமைந்துள்ள விதத்தை அறியலாம்.

முன்னுரை

இருவருள் ஒருவர் மட்டும் காதல் கொள்வது, பருவப் பொருத்தம் இன்றிக் காதல் கொள்வது ஆகியனவும் உலகில் உண்டு. இவற்றைத்தாம் முறையே கைக்கிளை, பெருந்திணை என்பர். சங்க இலக்கியங்களில் கைக்கிளையும் பெருந்திணையும் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றின் இயல்புகளையும் அவை அமைந்த பாடல்களையும் இப்பகுதியில் அறியலாம்.

கைக்கிளை

கைக்கிளை என்பதைச் சுருக்கமாக ஒருதலைக் காமம் என்ற அளவில் அறிவீர்கள். கைக்கிளையின் விளக்கம், கைக்கிளை அமைந்த பாடல்கள், சங்க இலக்கியங்களில் கைக்கிளைப் பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

விளக்கம்

தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் காமத்தையே கைக்கிளை என்பர். சுருக்கமாகச் சொன்னால் கைக்கிளை என்பது ஒருதலைக் காதல் ஆகும். கை என்பது சிறுமை எனப் பொருள்படும். கிளை என்பது உறவு எனப் பொருள்படும்.

சிறுமையான உறவு அல்லது பெருமையில்லா உறவு என்பது கைக்கிளையின் பொருள். ஆயினும் இது பற்றிய இலக்கணத் தெளிவைப் பின்னர்க் காணும்போது இது அவ்வளவு இழிவானதன்று என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

இலக்கணம்

கைக்கிளையைத் தொல்காப்பியர், கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.

காமம் சாலா இளமை யோள்வயின்

ஏமம் சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்

தன்னொடும் அவெளாடும் தருக்கிய புணர்த்துச்

சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே

(தொல்காப்பியம் - பொருளதிகாரம், அகத்திணையியல்: 53,)

(சாலா = அமையாத - மிகாத; வயின் = இடத்து; ஏமம் = பாதுகாவல்; இடும்பை = துன்பம்; எய்தி = அடைந்து; தருக்கிய = ஒத்தவை; புணர்த்து = சேர்த்து; புல்லி = பொருந்தி)

காமத்திற்குப் பொருத்தம் இல்லாத இளையவளிடத்தில் பாதுகாவல் அற்ற (காதல்நோய் தீர்வதற்கு வழியில்லாத) காதல் துன்பம் கொள்கிறான் தலைவன். புகழ்தல், பழித்தல் என்ற இரு வகையாலும் அவளைப் பற்றிப் பேசுவான்; தனக்கும் அவளுக்கும் ஒத்த (சம மான) குணங்களைச் சேர்த்துச் சொல்வான். அவளோ பிறரோ கேட்காதபடி அவன் பேசுவதால் அவன் சொல்லிற்கு மறுமொழி இராது; தானே சொல்லி இன்புறுவான். இவ்வாறு அமையும் ஒருதலைக் காதல்தான் கைக்கிளை எனப்படும். கைக்கிளைக் காமம் என்பது இறுதி வரை ஒருதலைக் காதலாகவே இருந்து விடுவதன்று. தலைவனுடைய வேட்கையைத் தலைவி பின்னர்ப் புரிந்து கொண்டு உடன்படும் போது அது நல்ல காதலாக மலரும்.

ஆகவே கைக்கிளையைக் காதலின் தொடக்கம் எனவும் கொள்வார்கள். அன்பின் ஐந்திணைக் களவுக் காதலுக்கு முன்பு கைக்கிளை நிகழ்வது இயல்பு என நம்பியகப்பொருள் (நூ.28) கூறுகிறது. இவ்வாறு அன்றிக் காதலாக மலராமல் இறுதிவரை கைக்கிளையாகவே நின்று விடுவதுதான் இழிவான கைக்கிளை எனலாம். தலைவன் ஒருவன் கைக்கிளைக் காதல் கொள்வது ஆண்பாற் கைக்கிளை எனப்படும். அது போலவே தலைவி ஒருத்தி கைக்கிளைக் காதல் கொள்வது பெண்பாற் கைக்கிளை எனப்படும். ஆனால் அது இலக்கணமாகச் சொல்லப்படவில்லை. பின்னர் நீங்கள் காணவிருக்கும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் பெண்பாற் கைக்கிளை அமைந்துள்ளது. அதனால் அவற்றை அகத்திணையில் சேர்க்காமல் புறத்திணையில் சேர்த்துள்ளனர்.

பாடல்களும் இலக்கியங்களும்

ஒருதலைக் காதலான கைக்கிளைப் பாடல்கள் சங்க அக இலக்கியங்களில் மிக மிகக் குறைவு. குறுந்தொகையில் ஒன்று (பாடல்:78) நற்றிணையில் இரண்டு (பாடல் : 39, 94), கலித்தொகையில் நான்கு (பாடல் 56, 57, 58, 109) ஆகியன கைக்கிளைக்கு உரியனவாக உள்ளன. பரிபாடலின் பதினோராவது பாடலில் கைக்கிளையைக் காண முடிகிறது. புற இலக்கியமான புறநானூற்றில் மூன்று(பாடல் 83, 84, 85) பாடல்கள் கைக்கிளைத் திணையைச் சார்கின்றன.

திருக்குறளில் தகையணங்குறுத்தல், குறிப்பறிதல் ஆகிய அதிகாரங்களில் கைக்கிளையைக் காண முடிகின்றது. முத்தொள்ளாயிரப் பாடல்கள் பலவற்றில் சேர, சோழ, பாண்டிய நாட்டு மகளிர் பலர் அவர்தம் மன்னர் மீது கொள்ளும் ஒருதலைக் காதலைக் காணலாம். நாயக-நாயகி பாவத்தில் அமைந்த நாயன்மார், ஆழ்வார் பாடல்களில் அடியார்கள் இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியராகவும் கொண்டு அவன் அன்பைப் பெறத் துடிக்கும் ஒருதலைக் காதலைக் காட்டு கின்றனர். கோவை, உலா, கலம்பகம், தூது, குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்களிலும் கைக்கிளைக் காதல் காட்டப்படுகின்றது.

இளம் பூரணர் காட்டும் சான்று

கைக்கிளையை விளக்கும் காமம் சாலா இளமையோள் வயின் என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவிற்குக் கபிலரது குறிஞ்சிக் கலிப்பாடல் ஒன்றை (பாடல் எண்: 56) உரையாசிரியர் இளம்பூரணர் சான்று காட்டுகின்றார்.

ஊர்க்கால் நிவந்த பொதும் பருள்

எனத் தொடங்கும் பாடல் அது.

காமத்திற்கு அமையாத அழகிய இளம்பெண் ஒருத்தியைக் காண்கிறான் தலைவன். 'நிலாப் போன்ற முகத்துடன் இங்கே வரும் இவள் யார்? கொல்லிமலையில் வல்லவனால் செய்யப்பட்ட பாவையோ? எல்லா அழகிய பெண்களின் உறுப்புகளையும் ஒருங்கிணைத்துப் பிரமன் செய்த பேரழகியோ? ஆயரைக் கொல்ல அழகிய வடிவாக வந்த கூற்றுவனோ?' எனப் பலவாறு ஐயம் கொள்கிறான்.

கைக்கிளைக் காதலின் தொடக்க நிலையாகிய 'காட்சி', 'ஐயம்' ஆகியவை இப்பகுதியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். பின்னர்த் தலைவன், தலைவியின் அணி, ஆடை ஆகியவைகளைக் கொண்டு அவள் ஒரு மானிடப் பெண்ணே என ஐயம் தீர்கிறான். இது கைக்கிளையின் மூன்றாம் நிலையாகிய 'தெளிவு' என்பதைக் குறிக்கும். இத் தெளிவு தோன்றிய பின் தலைவனது கைக்கிளைக் காதல் மேலும் பெருகுகிறது. மருந்தில்லாத நோய்க்கு ஆளாகிறான். அவளோடு 'பேசிப் பார்ப்போம்' எனத் தனக்குள்ளேயே பேசுகிறான். இப்பேச்சில் அவள் அழகைப் புகழ்தலும், அவ்வழகு அவனைத் துன்புறுத்துவதால் இகழ்தலும் அமைகின்றன.

பெருத்தநின் இள முலை

மயிர்வார்ந்த வரி முன்கை மடநல்லாய் நின்கண்டார்

உயிர்வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ?

(அடி: 23-25)

(வார்ந்த = நேராக அமைந்த ; வரி முன்கை = மயிர் வரிசையை உடைய முன்கை, மடநல்லாய் = இளம்பெண்ணே!; உணர்தியோ = உணர்கிறாயா?)

"இளமையான அழகியே! உன் மார்பு கண்டவர்களின் உயிரை வாங்கி விடுகிறது. இதனை நீ உணர்வாயா? உணர மாட்டாயா?" என்று அவன் கூறும்போது அவனுள் காதல் பெருக்கெடுக்கிறது.

யாது ஒன்றும் வாய்வாளாது இறந்துஈவாய் கேள்!

(அடி :29)

(வாளாது = பேசாமல்; இறந்து ஈவாய் = கடந்து செல்கிறாய்)

"கேட்டவர்க்கு எதையும் வாய்திறந்து சொல்லாமல் போகின்றவளே, கேள்" என்று அவன் தொடர்ந்து கூறுகிறான். இவை எல்லாம் சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் என்ற தொல்காப்பிய நூற்பாத் தொடரை நினைவூட்டுகின்றன.

நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்

போதர விட்ட நுமரும் தவறு இலர்

நிறைஅழி கொல் யானை நீர்க்கு விட்டாங் குப்

'பறை அறைந் தல்லது செல்லற்க' என்னா

இறையே தவறு டையான்

(அடிகள் : 30-34)

"அழகால் பிறரைக் கவர்ந்து இழுக்கும் பெண்ணே ! நீ குற்றம் உடையவள் இல்லை. உன்னை இங்குச் செல்ல விட்ட உறவினரும் குற்றம் உடையவர் அல்லர். கொல்லும் இயல்புடைய யானையை நீர்நிலைக்கு அனுப்பும் போது பறைசாற்றி மக்களுக்குத் தெரிவிப்பது போல, நீ செல்லும் போதும் பறை முழக்காமல் செல்லக் கூடாது என்று உன்னைத் தடுத்து ஆணையிடாத அரசனே குற்றம் உடையவன்" என்கிறான் அந்த இளைஞன்.

இப்பாடலில் கைக்கிளை இலக்கணமாகிய பாதுகாவலற்ற (மருந்தற்ற) துன்பம் எய்தல், நன்மை தீமை இரண்டும் கூறித் தன்னை அவளோடு இணைத்துப் பார்த்துப் புலம்புதல், அவளுடைய பதில் பெறாமல் அவனே புலம்பி இன்புறல் ஆகியவை அமைந்திருப்பதைக் காணலாம்.

அக இலக்கியங்களில் கைக்கிளை

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அன்பின் ஐந்திணைகளுக்கு உரிய மிகச் சில பாடல்களில் கைக்கிளையும் அமைந்திருப்பதைக் காணலாம். கைக்கிளைப் பாடல்களில் பெரும்பாலானவை ஆணின் ஒருதலைக் காதலைக் கூறும் ஆண்பாற் கைக்கிளைப் பாடல்களே ஆகும்.

குறுந்தொகை

நக்கீரனார் பாடிய (பாடல், 78) குறுந்தொகைப் பாடலில் பாங்கனின் கூற்றில் தலைவனின் ஒருதலைக் காதல் வெளிப்படுகின்றது. தனக்கு ஏற்பட்ட ஒருதலைக் காதலைத் தலைவன் தானே தனக்குள் சொல்லி மகிழும் மரபிலிருந்து சற்று மாறுபட்டுப் பாங்கன் தலைவனது ஒருதலைக் காமத்தைக் கண்டிக்கும் முறையில் கூறுவதாக அமைகிறது. தலைவன் பெண் ஒருத்தியை நினைந்து காம நோய்க்கு உட்பட்டு மெலிந்ததை அறிகிறான் பாங்கன். அறவுரை கூறித் தலைவனைத் தேற்றுகிறான்.

நோதக் கன்றே காமம் யாவதும்

நன்று என உணரார் மாட்டும்

சென்றே நிற் கும் பெரும்பே தமைத்தே

(குறுந்தொகை, 78)

(நோதக்கன்று = வெறுக்கத் தக்கது; பேதைமைத்தே = அறிவின்மை உடையது)

'தலைவனே! காமம் என்பது, சிறிது அளவேனும் நன்மை தருவது என்று அறியாத பேதையாரிடத்தும் சென்று ஒருவரை இரந்து நிற்கச் செய்யும் தன்மையை உடையது. ஆதலால் அது வெறுத்து ஒதுக்கத் தக்கது என்று உணர்வாயாக.'

இப்பாடல் கைக்கிளைக்கும் பொருந்துகிறது. தமிழ்க் காதல் என்ற நூலில் வ.சுப. மாணிக்கம் இப்பாடலைக் கைக்கிளைப் பாடலாகக் கருதலாம் என்று கூறுவது (ப-106) இங்குக் குறிக்கத்தக்கது.

நற்றிணை

குறிஞ்சித் திணையில் மருதனிள நாகனார் பாடிய நற்றிணைப் பாடலில் கைக்கிளை அமைந்துள்ளதாகக் கூறுவர்.

சொல்லின் சொல் எதிர் கொள்ளாய்

திருமுகம் இறைஞ்சி நாணுதி கதும் எனக்

காமம் கைம் மிகின் தாங்குதல் எளிதோ

(நற்றிணை -39 :1-3)

(மகின் = கடந்தால்)

'நான் உன்னை நாடிச் சில சொற்களைச் சொன்னால், நீ அவற்றை ஏற்கவில்லை; காமம் எல்லை தாண்டுமானால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமோ?' என்று தலைவன் தலைவியிடம் தன் காதலை எடுத்து உரைக்கின்றான். இங்குத் தலைவன் தானே பேசிப் புலம்புவது தெரிகிறது.

சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

என்று தொல்காப்பியர் கூறும் இலக்கணத்தை இப்பாடலின் முதல் அடி நினைவூட்டுகிறது.

• பெண்பாற் கைக்கிளை

தொல்காப்பியர் பெண்பாற் கைக்கிளை ஒழுக்கத்தைச் சொல்லவில்லை. இதற்குக் காரணம் சொல்வது போல் இளந்திரையனாரின் நற்றிணைப் பாடலில் "தான் கொண்ட காதல் ஒழுக்கத்தைப் பெண் சொல்வது பொருந்துவதன்று" என்று தலைவி ஒருத்தி கூறக் காணலாம்.

தோழியிடம் பேசுகிறாள் தலைவி.

யானே,பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி

(நற்றிணை , 94 : 3)

(தட்ப = புலப்படுத்தாமல்)

என்று தன் பெண்மைத் தன்மையால் தலைவனிடம் தன் காதலைக் கூற முடியாத நிலையிலிருப்பதைத் தெரிவிக்கிறாள். 'அவனிடம் காதல் கொண்டு, அவன் மார்பால் துன்புறும் என் நிலையை அறியாத இவன் என்ன ஆண் மகன்?' எனத் தன் ஆற்றாமையைக் கூறுகிறாள். இது ஒருவகையில் பெண்பால் கைக்கிளையாகத் தோன்றுவதைப் புரிந்து கொள்ளலாம்.

கலித்தொகை

கலித்தொகையின் 56, 57, 58 மற்றும் 109ஆம் பாடல்கள் கைக்கிளைப் பாடல்கள் ஆகும்.56 ஆவது பாடலில் கைக்கிளை அமைந்திருப்பதை இளம்பூரணர் உரையின் துணைகொண்டு முன்பே பார்த்தோம். கபிலர் பாடிய குறிஞ்சிப் பாடலாகிய 57ஆவது பாடலில், கொடி போலவும், மின்னல் போலவும், அணங்கு போலவும் தோன்றும் பெண் ஒருத்தி பந்தாடிக் கொண்டிருக்கிறாள். அவள் மீது கைக்கிளைக் காதல் கொண்ட தலைவன் அவளைப் பார்த்துப் பல சொற்களையும் சொல்கின்றான். அதற்கு ஒரு விடையும் சொல்லாமல் தலைவி நிலம் நோக்கித் தலை கவிழ்ந்து தன் வீட்டுக்குச் செல்கிறாள்.

"குளிர்ந்த மாலையை அணிந்தவன் பாண்டிய மன்னன். அவனது பொதிகை மலையில் அழகை உடைய கொத்துக்களாய் அமைந்த வேங்கைப் பூ உண்டு. அப்பூவைப் போன்ற தேமலை உடையவளே! முத்துமாலை அணிந்த உன் இளம் முலைகள், இந்த இளம் பருவத்திலும் பாண்டியனின் வலிமையும், மதமும் உடைய யானையின் கொம்புகளை விடச் சினம் கொண்டவையாய் உள்ளன. இந்தக் கொடுமை உன்னுடைய இந்த இளமைப் பருவத்துக்குத் தக்கதோ?" (அடிகள் : 16-19) என்று பல சொற்களைக் காம மிகுதியால் கூறுகிறான் தலைவன். அவள் பதில் கூறாமல், தலை கவிழ்ந்து தன் வீட்டுக்குச் சென்று விடுகிறாள். தன் அறிவை அவளிடம் இழந்துவிட்டு அரற்றுகிறான் தலைவன்.

இங்குத் தலைவியின் இளமை பற்றிக் கூறுவதனால் 'காமம் சாலா இளமையோள்' என்னும் தொல்காப்பிய இலக்கணம் பாட்டில் அமைந்திருக்கக் காணலாம். தன் சொற்களுக்கெல்லாம் அவள் மறுமொழி தராமல் சென்று விட்டாள் என அவன் கூறுவது 'சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்' என்னும் கைக்கிளை இலக்கணத்தை உணர்த்துகிறது. 'தன் அறிவைக்கவர்ந்து சென்று விட்டாள்' என அவன் வருந்துவது, 'ஏமம் சாலா இடும்பை'யை (மருந்து இல்லாத நோயை) அவன் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. இவ்வாறு கைக்கிளைக் காதலின் அனைத்து இலக்கணங்களுக்கும் விளக்கம் போல இப்பாடல் அமைந்திருக்கின்றது. கபிலரே பாடிய, கலித்தொகையின் 58-ஆவது பாடலில் சிலம்பு ஒலிக்க, வளைக்கை வீசிக் கொண்டு நடந்து வரும் தலைவி தன் உயிரைக் கவர்ந்து கொண்டு போவதாகவும், அச்செயலை அவளது இளமை காரணமாக அவள் அறிந்திருக்கவில்லை என்றும் தலைவன் புலம்புகிறான்.

உளனாஎன் உயிரைஉண்டு உயவு நோய் கைம்மிக

இளமை யான் உணராதாய்

(அடிகள் 7-8)

என அவளிடம் பேசுகிறான்.

(உளனா = சிறிதளவு உயிரோடு நான் இருக்கும்படி; உயவுநோய் = காமநோய்; கைம் மிக = மிக அதிகமாக)

வேறு யாராலும் தீர்க்க முடியாத நோயை உண்டாக்குவது அவள் அழகு. அதனை அவள் வீட்டார் அறிவர். அறிந்தும் அதற்கு மேலும் அவளை அலங்காரம் செய்து, தம் செல்வச் செருக்கினால் வெளியே புறப்பட விட்டுவிட்டார்கள்; அவர்களே தவறுடையவர்கள் எனப் புலம்புகிறான் தலைவன்.

களைநர் இல் நோய் செய்யும் கவினறிந்து அணிந்து தம்

வள மை யால் போத்தந்த நுமர்தவறு

(களைநர் = நீக்குவார்; கவின் = அழகு; அணிந்து = அலங்காரம் செய்து; வளமை = செல்வச் செருக்கு; போத்தந்த = வெளியே புறப்படவிட்ட; நு மர்= உன் வீட்டார்)

கைக்கிளைக் காதலின் உச்ச நிலையில், "என் நோய் பொறுக்கும் எல்லையைத் தாண்டி விட்டால் மடல் ஏறி உனக்கு ஒரு பழியை ஏற்படுத்தி விடுவேன் போல் இருக்கிறதே” என்றும் தலைவன் புலம்புகிறான். இப்பாடலிலும் தலைவன் தலைவியின் மறுமொழி பெறாமல் தானே பேசுகிறான்; அவள் காமத்திற்கு உரிய பருவம் வராத இளமையுடையாள் என்பதைக் கூறுகிறான் ; தனக்கு ஏற்பட்டுள்ள காமநோய் வேறு யாராலும் தீர்க்க முடியாதது என்பதை உணர்த்துகிறான். மேலும் தன்னைத் துன்புறுத்தும் தீங்கை அவள் மற்றும் அவளது உறவினர் பக்கமாகவும், தான் மடல் ஏறி உயிர் கொடுக்க இருக்கும் நன்மையைத் தன் பக்கமாகவும் சேர்த்துச் சொல்கிறான். இவை அனைத்தும் தொல்காப்பிய நூற்பாவில் சொல்லப்பட்ட கைக்கிளை இலக்கணத்துக்குப் பொருந்துமாறு அமைந்திருப்பதை நீங்கள் ஒப்பிட்டுக் கண்டு கொள்ளலாம்.

பரிபாடலிலும் புறநானூற்றிலும் கைக்கிளை

பரிபாடலிலும் புறநானூற்றிலும் பெண்பாற் கைக்கிளை அமைந்திருப்பதைக் காணலாம். முதலில் பரிபாடலில் இடம்பெறும் கைக்கிளைப் பாடலைக் காணலாம்.

பரிபாடல்

நல்லந்துவனார் பாடிய பரிபாடலில், தலைவி தோழியுடன் வையை ஆற்றில் நீராடுகிறாள்.

இன்ன பண்பின் நின் தைந்நீராடல்

மின்னிழை நறுநுதல் மகள் மேம்பட்ட

கன்னிமை கனியாக் கைக்கிளைக் காமம்

(பரிபாடல், 11 : 34-136)

என்று தோழி கூறும் வரிகள் தலைவியின் கைக்கிளைக் காமத்தைக் காட்டுகின்றன.

(தைந்நீராடல் = தை மாதம் வையை ஆற்றில் நீராடல்; மின்னிழை = ஒளிவிடும் நகை; நறுநுதல் = மணம் மிக்க நெற்றி)

தலைவி வையை ஆற்றில் தைநீராடக் காரணம் அவளது கைக்கிளைக் காமம் என்கிறாள் தோழி. விரைவில் தலைவன் ஒருவனை மணம்பெற வேண்டி நிற்கும் நிலை இங்குக் கைக்கிளைக் காமம் ஆகிறது.

புறநானூறு

புறநானூற்றில் மூன்று பாடல்கள் (83, 84, 85) கைக்கிளைத் திணையில், பழிச்சுதல் (பாராட்டுதல்) துறையில் அமைந்த பெண்பாற் கைக்கிளைப் பாடல்கள் ஆகின்றன. இம்மூன்று பாடல்களும் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி மீது ஒருதலைக் காதல் கொண்டு நக்கண்ணையார் என்ற பெண்பாற் புலவர் பாடியவை. கோப்பெரு நற்கிள்ளி தன் தந்தையாகிய சோழன் தித்தனைப் பகைத்து நாடு துறந்து வறுமையுற்று அலைந்தவன். எனினும் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். அவர் பாடிய பாடல்களில் பாடப்பட்டவன் கற்பனைத் தலைவனாக அல்லாமல் உண்மைத் தலைவனாக அமைந்தமையால்

இப்பாடல்கள் புறநானூற்றில் சேர்க்கப்பட்டன. "கோப்பெரு நற்கிள்ளி மீது கொண்ட காதலால் என் கைவளைகள் கழன்று விழுகின்றன. காரணம் என்னவென்று என் தாய் கேட்பாளே! அவளுக்கு நான் அஞ்சுகிறேன். அவனது வீரத் தோளைத் தழுவ நினைக்கிறேன். ஆனால் பலரும் அவனைச் சூழ்ந்துள்ளனர் ; அந்த அவையில் உள்ளவரை எண்ணி நாணுகிறேன். இந்த ஊர் தாயைப் போலவும், அவையைப் போலவும் இரு தன்மை உடையதாக இருக்கிறது. எனவே மயக்கத்தை உடைய இந்த ஊர் என்னைப் போலவே நடுக்கத்தை அடையட்டும்” என்கிறார். (புறநானூறு - 83) இப்பாடலில் தலைவியின் காதலைத் தலைவன் அறியவில்லை என்பதை உணர்கிறோம். ஆகவே இது கைக்கிளையாகிறது.

பிற இலக்கியங்களில் கைக்கிளை

திருக்குறள், நாயன்மார் பாடல்கள், ஆழ்வார் பாடல்கள், முத்தொள்ளாயிரம், சில சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றில் ஒருதலைக் காதல் மரபைக் காண முடிகின்றது.

திருக்குறள்

அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

(குறள் - 1081)

எனத் 'தகையணங்குறுத்தல்' அதிகாரத்திலும்,

இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு

நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து

(குறள் -1091)

எனக் குறிப்பறிதல்' அதிகாரத்திலும் ஆண்பாற் கைக்கிளையைக் காண முடிகின்றது. "இவள் தெய்வப் பெண்ணோ ? அழகு மயிலோ? கனமான குழையை அணிந்து உள்ளதால் மானிடப் பெண்ணோ ? என்று என் உள்ளம் மயங்குகிறது" (குறள் 1081) என்று தலைவன் தன் ஒருதலைக் காதலை உணர்த்துகிறான். "மை தீட்டப் பெற்ற இவளின் கண்களில் இரு விதப் பார்வைகள் உள்ளன. ஒன்று காமநோயை உண்டாக்குகிறது. மற்றது அந்நோய்க்கு மருந்தாகிறது” (குறள் 1091) என்றும் தலைவன் தன் கைக்கிளைக் காதலை உணர்த்துகிறான்.

நாயன்மார், ஆழ் வார் பாடல்கள்

அன்பினால் இறைவனை அடையத் துடிக்கும் ஆன்மா, தன்னைப் பெண்ணாகவும் இறைவனைத் தலைவனாகவும் கொண்டு அன்பு செலுத்தும். இந்நிலையை நாயக-நாயகி பாவம் என்பர். சைவ சமய அடியார்களாகிய நாயன்மார்களும், வைணவ சமய அடியார்களாகிய ஆழ்வார்களும் இறைவனைத் தலைவனாக்கி, தம்மைத் தலைவியராய் ஆக்கி நாயக-நாயகி பாவத்தில் பல பாடல்களைப் புனைந்துள்ளனர்.

தலைவியின் ஒருதலைக் காதலான பக்தியைத் தாய் கூறுவது போல நாவுக்கரசர் பாடியுள்ளார். தலைவனுடைய பெயரையும், நிலையையும், ஊரையும் கேட்டு, அதைச் சொல்லிச் சொல்லி, அவன் மேல் பித்தாகிறாள் தலைவி. தாய்-தந்தை சமூகக் கட்டுப்பாடு எல்லாவற்றையும் விடுத்துத் தன்னை மறந்து, தன் பெயரையும் மறந்து, இறைவன் திருவடியே தஞ்சமெனக் கிடக்கிறாள் அவள். இதனைச் சொல்கிறது தேவாரப் பாடல் :

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

தலை ப் பட்டாள் நங்கை தலைவன் தாளே!

(நாவுக்கரசர் தேவாரம் ,6 : 25-7)

முத்தொள்ளாயிரம்

பிற்காலத்தில் தோன்றிய கோவை, உலா, தூது, கலம்பகம், குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் கைக்கிளைக் காதல் அமைந்த இலக்கியங்கள் ஆகும். தெய்வம் அல்லது அரசன் மீது ஒரு பெண் கொண்ட காதலை இந்த இலக்கியங்கள் காட்டுகின்றன. முத்தொள்ளாயிரம் என்ற பிற்கால இலக்கியம் கைக்கிளைத் திணையின் வளர்ச்சி நிலைக்கு நல்ல சான்றாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர் மீது பெண்கள் கொள்ளும் ஒருதலைக் காதலை இந்நூல் முழுதும் காண முடிகிறது.

ஒரு பெண் உலா வரும் சேர மன்னன் கோதையைக் காணச் செல்கிறாள்; கதவைத் திறக்கிறாள்; நாணம் வந்ததால் வீட்டினுள் செல்கிறாள்; மீண்டும் கதவருகே செல்கிறாள்; நாணத்தால் வீட்டினுள் திரும்புகிறாள். பெரும் பணக்காரர் இல்லத்தில் சென்று நிற்கத் தயங்கும் ஏழை போல் அவள் நெஞ்சு போவதும் வருவதுமாகத் தடுமாறுகிறது.

ஆய்மணிப் பைம்பூண் அலங்கு தார்க் கோதையைக்

காணிய சென்று கதவு அடைத்(ந்)தேன் - நாணிப்

பெருஞ் செல்வர் இல்லத்து நல் கூர்ந்தார் போல

வரும் செல்லும் பேரும்என் நெஞ்சு

(முத்தொள்ளாயிரம் ,16)

(ஆய்மணிப் பைம் பூண் = ஆராய்ந்து எடுத்த இரத்தின மணியால் ஆன மாலை; அலங் குதார் = அசைந்தாடும் மலர்மாலை; காணிய = காண்பதற்காக, நல்கூர்ந்தார் = வறுமையுற்றவர் (ஏழை))

பெருந்திணை

பெருந்திணை விளக்கம், பெருந்திணையின் வகைகள், அக இலக்கியங்களிலும், புறநானூற்றிலும் பெருந்திணை அமைந்துள்ள தன்மை ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம். பெருந்திணை பாடிய புலவர் பெயர்களையும் அறியலாம்.

விளக்கம்

பெருந்திணையைப் பொருந்தாக் காமம் அல்லது ஒவ்வாக் கொள்ளும் காதலே பெருந்திணை ஆகும். இப்பொருத்தமின்மை பற்றிப் பெருந்திணையின் இலக்கணத்தில் விளக்கமாகக் காணலாம்.

பாடிய புலவர்கள்

கலித்தொகையில் மருதம், முல்லை, நெய்தல் திணைகளில் அமைந்த பதினான்கு பாடல்கள் பெருந்திணைக்கும் உரியனவாக உள்ளன. புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (பாடல் எண்கள் 143, 144, 145, 146, 147) பெருந்திணையைச் சார்ந்துள்ளன. மருதக்கலியில் இரண்டு பாடல்களும் (எண்:62, 94, ஆசிரியர் மருதனிள நாகனார்) முல்லைக்கலியில் இரண்டு பாடல்களும் (எண் : 112, 113, ஆசிரியர் சோழன் நல்லுருத்திரன்) நெய்தல் கலியில் பத்துப் பாடல்களும் (பாடல் எண் 138 முதல் 147வரை, ஆசிரியர் நல்லந்துவனார்) பெருந்திணையில் அமைந்தவை ஆகும். புறநானூற்றில் 143ஆவது பாடலைக் கபிலரும், 144, 145ஆவது பாடல்களைப் பரணரும், 146ஆவது பாடலை அரிசில்கிழாரும், 147ஆவது பாடலைப் பெருங்குன்றூர் கிழாரும் பாடியுள்ளனர்.

இலக்கணம்

தொல்காப்பியர் பெருந்திணையின் நான்கு கூறுகளை விளக்குகிறார்.

ஏறிய மடல் திறம் இளமை தீர்திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே

(தொல் காப்பியம் , பொருளதிகாரம், அகத்திணையியல், 56)

(மிடலொடு = மாறிய திறனொடு, முறையற்ற செயலொடு; செப்பிய = சொல்லப்பட்ட)

ஏறிய மடல் திறம், இளமை தீர்ந்த திறம், தெளிவு அற்ற மிகுந்த காமம், காமம் மிகுந்து விடுதலால் செய்யும் வரம்பு கடந்த செயல்கள் ஆகிய நான்கும் பெருந்திணையைக் குறிப்பன என்பது இந்நூற்பாவின் கருத்து. இனி இவற்றைத் தனித்தனியே விளக்கிக் காணலாம்.

• ஏறிய மடல் திறம்

இது மடல் ஏறுவதைக் குறிக்கும். மடலேறுதல் ஆணுக்கு மட்டுமே உரியது. தலைவன் மடல் ஏறுவேன் எனச் சொல் அளவில் கூறுவது கைக்கிளையளவில் நிற்கும். உண்மையில் தலைவன் மடல் ஏறிவிடுவது பெருந்திணையாகி விடும்.

தான் விரும்பும் தலைவியை மணக்க இயலாத நிலை ஏற்படும்போது தலைவன் மடல் ஏறுகிறான். அதைக் கண்ட தலைவி இரங்கி அவனுக்கு உடன்படுகிறாள். அவ்வாறு அவளை அடைந்த விதத்தைத் தலைவன் தன்னைச் சேர்ந்தோருக்குத் தெரிவிக்கின்றான். (கலித்தொகை, பாடல் 138) இப்பாடலில் தலைவன் தலைவியை அடைகிறான். எனினும் அடைந்த விதம் (மடலேறுதல்) அன்பின் ஐந்திணைக்குப் பொருந்துவதாக இல்லை. நாணமற்ற ஒரு செயலால் களவைப் பலர் அறிய வெளிப்படுத்தி விட்டமையால் இது பெருந்திணை ஆயிற்று. தலைவன் பூளைப்பூ, ஆவிரம் பூ, எருக்கம் பூ ஆகியவற்றைத் தொடுத்து மடல் குதிரையில் கட்டி, ஊர்க்கடைத் தெருவில் மடல் ஏறி,

எல்லீரும் கேட்டீமின் என்று

படரும், பனை ஈன்ற மாவும் சுடர் இழை

நல்கியாள் நல்கியவை

(அடிகள் : 11-13)

(எல்லீரும் = எல்லோரும் ; கேட் டீமின் = கேளுங்கள்; படர் = துன்பம்; மா = குதிரை; நல்கியாள் = என்னால் காதலிக்கப்பட்டவள்; நல்கியவை = கொடுத்தவை)

"விளங்கும் அணியை உடைய என்னால் விரும்பப்பட்டவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும், வருத்தத்தால் உண்டான பனை மடலால் செய்த குதிரையும் ஆகும்" என்பது பொருள். ஒளி பொருந்திய அணியை உடையவள் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாதபடி காம நோயை எனக்குத் தந்தாள். அந்நோயால் என் உயிர் அழுந்தியது. நெருப்பில் பட்ட மெழுகாய் உருகித் தேய்கிறது. இஃது எல்லாரும் இரக்கப்படுமாறு இருப்பது" இப்பாடலைக் கேட்டு அவள் இரங்கித் தன்னை ஏற்றதாகக் கூறுகிறான்.

• இளமைதீர் திறம்

பெருந்திணையின் இரண்டாவது வகையாகக் குறிப்பிடப்படுவது இளமை தீர் திறம் ஆகும்.இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல் இளமை தீர் திறம் ஆகும். இது மூன்று வகையில் அமையலாம். தலைவி முதியவளாகத் தலைவன் இளையவனாக இருக்கலாம் ; தலைவன் முதியவனாகத் தலைவி இளையவளாக இருக்கலாம்; இருவருமே இளமை தீர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஒரு குறளனும் (குள்ளன்) கூனியும் முதலில் ஊடிப் பேசிப் பின் கூடுகின்றனர்.

ஒருவரையொருவர் உருவத்தைக் கொண்டு இகழ்ந்து பேசுகின்றனர். (கலித்தொகை, பாடல் -94)

நீருள் நிழல் போல் நுடங் கிய மென்சாயல்

ஈங்கு உருச் சுருங்கி

இயலுவாய் ! நின்னொடு உசாவு வேன்

(அடிகள் : 2-4)

(நு டங்கிய = அசைந்து தெரிந்த ; ஈங்கு = இங்கு; உரு= உருவம்; உசாவுவேன் = பேசுவேன்)

"கரையில் நின்ற ஒரு பொருளின் நிழல் நீருக்குள் தெரிவது போல் கூன் கொண்டு உருவம் சுருங்கி நடப்பவளே! உன்னோடு நான் பேச வேண்டும்" என்று இப்பாடலில் கூனியைப் பார்த்துக் குறளன் கூறுகிறான். அதற்கு அவள்,

காண்தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்

ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே ! நீ" எம்மை

வேண்டுவல் என்று விலக்கினை ; நின்போல் வார்

தீண்டப் பெறு பவோ மற்று? (அடிகள் :5-8)

(காண்தகை இல்லா = கண்ணால் பார்க்கத் தகுதி இல்லாத; குறள் = குள்ளம்; நாழி = நேரம்;ஆண்டலை = ஒரு பறவை, ஆந்தை; பறழ் = குஞ்சு)

"கண்ணால் பார்க்கச் சகிக்க முடியாத குள்ளனாகப் பிறப்பதற்குரிய நேரத்தில், ஆந்தைப் பறவைக்கு அதன் பெட்டை ஈன்ற குஞ்சான மகனே! நீ என்னை விரும்புவேன் என்று மேலே போகாமல் தடுத்தாய். உன்னைப் போன்று குறளனாக இருப்பவர் என்னைத் தீண்டப் பெறுவாரோ?" என்று பதில் தருகிறாள். தொடர்ந்து இருவரும் மாறிமாறி இவ்வாறு விளையாட்டாய்ப் பேசிக் கொண்டபின் காம் ஒழுக்கம் மேற்கொள்கின்றனர்.

'உருச் சுருங்கி இயலுவாய்' என்றும் 'கொக்குரித்தாற் போலத் தோன்று பவளே' என்றும் சொல்வதனால் தலைவி உருவம் சுருங்கியமையும், உடலில் தோல் சுருங்கியமையும் உணர்த்தப்படுகின்றன. இதனால் தலைவியின் இளமை தீர்ந்த முதுமை சுட்டப்படுகின்றது. 'ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே' என்பதால் தலைவனின் இளமை தீர்ந்த திறம் சுட்டப்படுகின்றது. உருவப் பொருத்தமின்மை, பருவப் பொருத்த மின்மை ஆகிய இரண்டுமே இக்காதலைப் பெருந்திணைக் காதலாக அடையாளம் காட்டுகின்றன. வேறு குறைபாடுகள் இன்றித் தலைவனும் தலைவியும் வயது முதிர்ந்தபின் காமம் கொள்வதற்கு ஒரு காரணம், இளமையில் பொருள் தேடுதல் போன்றவற்றால் போதுமான காம நுகர்ச்சி இல்லாமல் போவதே ஆகும். அதனையும் பெருந்திணை என்றே கொள்வர்.

• தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

இது அறிவுத் தெளிவு அற்றுக் காமத்தில் மிகுதல் ஆகும். இது பெரும்பான்மை தலைவிக்கு உரியது. தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் வருந்தியிருக்கும் தலைவியைத் தோழி தேற்றுவாள். ஆனால் தேறுதல் பெறாத தலைவி, காமம் மிகுந்திடப் பிறர் கேட்பத் தன் காமத்தையும் அதனால் தான் படும் துன்பத்தையும் எடுத்துரைப்பாள்.

கலித்தொகையின் 142ஆவது பாடல் இதற்குத் தகுந்த சான்றாகும்.

பெண்ணின்றி

யாவரும் தண்குரல் கேட்ப.., எழில் உண்கண் ஆயிதழ் மல்க அழும்

(அடிகள் : 8-12)

'பெண்தன்மை இல்லாமல், பிறர்க்குக் கேட்காமல் சொல்ல வேண்டிய காதல் வேதனை பற்றிய செய்தியை எல்லாருக்கும் கேட்கும்படி கூறி அழுகின்றாள்' எனத் தோழியர் பேசுகின்றனர்.

'ஞாயிறே! அவரைத் தேடிப் பார்த்து எனக்குத் தா. அப்போதுதான் உயிர் திரியாக, என் நெஞ்சமே அகலாக எரிகின்ற என் காமத்தீ அவியும்' எனத் தன் காம வெப்பத்தை வெளிப்படையாகப் பேசுகிறாள். இவ்வாறு தேறுதல் ஒழிந்த காமத்தின் வெளிப்பாடு பெருந்திணையாயிற்று.

• மிக்க காமத்து மிடல்

காமம் மிகுந்துவிடுதலால் செய்யும் முறை கடந்த செயல்களைக் குறிப்பது இது. பிரிந்து செல்ல வேண்டிய தலைவன், பிரிய வேண்டாம் எனத் தலைவியோ தோழியோ வற்புறுத்தாத நிலையிலும், காம மிகுதியால் தன் பயணத்தை நிறுத்திவிடுதல், தலைவியிடம் பணிந்து நின்று வேண்டுதல், மணவாழ்வில் மனைவி விடுத்தலால் வேறு பெண்டிரை நாடிச் செல்லுதல் போன்றவை ஆணின் 'மிக்க காமத்து மிடல்' ஆகும்.

“யார் இவன் என்னை விலக்குவான்?" (கலித்தொகை, 112: 1) எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடலில், "நின் பெற்றோர் சொல்லாடாது நிற்க எனக் கூறினரே அன்றிச் சேர வேண்டாமெனக் கூறினரோ?" என்று தலைவன் தலைவியிடம் கேட்கிறான். அவளும் சேர உடன்படுகிறாள். இவ்வாறு மிக்க காமத்தால் அவளைக் கூடுவதால் இது பெருந்திணை ஆயிற்று. தலைவன் வருவதாகக் கூறிய பருவம் வந்தபோது 'இது அப்பருவம் தான் என்றும், அப்பருவம் அன்று' என்றும் தலைவி மயங்குதல் போன்றவை பெண்ணின் 'மிக்க காமத்து மிடல்' ஆகும்.

அக இலக்கியங்களில் பெருந்திணை

சங்க அக இலக்கியங்களில் கலித்தொகையில் மட்டுமே பெருந் திணையைச் சார்ந்த பதினான்கு பாடல்கள் உள்ளன. மருதக்கலியில் இரண்டு, முல்லைக் கலியில் இரண்டு நெய்தற்கலியில் பத்து என மொத்தம் பதினான்கு பாடல்கள் பெருந்திணை ஒழுக்கத்தைக் கூறுகின்றன என முன்னர்க் கண்டோம். பிற அக இலக்கியங்களில் பெருந்திணையைக் காண இயல வில்லை.

குறிஞ்சிக்கலி

கலித்தொகையில் 62ஆவது பாடலும் பெருந்திணையைச் சார்ந்ததாகும். ஒத்த உருவு முதலியவை இல்லாத தலைவன் தலைவி இருவரும் மிக்க காமத்தால் மாறுபட உரையாடிக் கூடக் கருதுகின்றனர். "தன்னுடன் புணரும் குறிப்பு இல்லாத என்னைப் புணர்ச்சி விருப்புடன் கையால் வலியப் பிடிக்கும் இவன் நாணம் இல்லாதவன்” என்று தலைவி கூறுகிறாள். "உன் மேனியைத் தழுவுவதற்கு இனிதாய் உள்ளது. அதனால் தழுவினேன்" என்று பதில் தருகிறான் தலைவன். "தனக்கு இனிதாய் இருக்கிறது என்று எண்ணிப் பிறர்க்கு இனியது அல்லாததை வலியச் செய்வது இன்பத்தை அளிக்குமோ?" என்று தலைவி வினா எழுப்புகிறாள். "தண்ணீர் விரும்புவர்க்கு இனியது என்று அருந்துவது அல்லாமல் அந்த நீர்க்கு இனியதாய் இருக்கும் என்று எண்ணி அருந்துவாரோ!" என்று விடை தருகிறான் தலைவன்.

வேட்டார்க்கு இனிதாயின் அல்லது நீர்க்கினிதென்று

உண்பவோ நீருண் பவர்

(அடிகள் : 10-11)

(வேட்டார்= தாகம் கொண்டார்; உண்பவோ= உண்பார்களோ)

காமத் துன்பத்தில் ஆழ்த்தும் பெண்களை வன்மையாகச் சேர்வதும் ஒருவகை மணம் என நூலோர் கூறுகின்றனர் என்றும் கூறுகின்றான். இவைகளைக் கேட்ட தலைவி புணர்ச்சிக்கு உடன்படுகிறாள். இது மிக்க காமத்து மிடல் என்னும் பெருந்திணை ஒழுக்கம்.

நெய்தற்கலி

பெருந்திணையைச் சற்று அதிக அளவில் (பத்துப் பாடல்கள்) பாடியவர் நல்லந்துவனார். மடலேறுதலைக் கூறும் 138ஆம் பாடலை முன்பே கண்டோம். இங்கு வேறொரு நெய்தற்கலிப் பாடலைக் காண்போம். தலைவன் மடல் ஏறி வருந்துவது கண்ட தலைவியின் உறவினர்கள் தம் குடிக்குப் பழி வரும் என அஞ்சி, பாண்டியனுக்கு அவன் பகைவர் திறை கொடுத்தது போலத் தலைவனுக்குத் தலைவியை அவ்விடத்திலேயே கொடுத்தனர். (பாடல் எண் : 141)

புற இலக்கியத்தில் பெருந்திணை

தலைவன் தலைவி பெயர் சுட்டப்பட்டதால் அகத்தில் இருக்க வேண்டிய பெருந்திணைப் பாடல் புறப்பாடல் ஆகிறது. புறநானூற்றில் இடம் பெறுகிறது.

புற நானூறு

புறநானூற்றில் ஐந்து பாடல்கள் பெருந்திணையில் அமைந்துள்ளன

வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து நல்லூர்ப் பரத்தையிடம் உறவு கொண்டிருந்தான். இதனைக் கண்ட கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகிய நால்வரும் பேகனிடம் கண்ணகியின் துயரத்தைக் கூறுகின்றனர்; அவளுடன் சேர்ந்து வாழுமாறு வேண்டுகின்றனர்.

நின்னும் நின் மலையும் பாட இன்னாது

இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்

முலை யகம் நனைப்ப விம்மிக்

குழல் இனை வது போல் அழுதனள் பெரிதே

(புறநானூறு -143 : 12-15)

"பேகனே! உன் ஊருக்கு யான் வந்து உன்னையும் உன் மலையையும் பாடினேன். அப்போது வேதனையுற்று வடித்த கண்ணீரை நிறுத்த முடியாமல், மார்பு நனைய விம்மிக் குழல் அழுவது போல் அழுதாள் ஒருத்தி" எனக் கூறுகிறார் கபிலர். பேகன் பெருங்குன்றூர்கிழாருக்குப் பரிசில் தர முன் வந்தான். ஆனால் புலவரோ அதை மறுக்கிறார்.

"நேற்று நான் செவ்வழிப் பண்ணைப் பாடி வந்தேன். ஒருத்தி கண்ணீர் விட்டு வருந்தினாள். அவிழ்ந்த கூந்தலை உடையவள் அவள். அவள் தன் கூந்தலை முடித்து மகிழ நீ அருள வேண்டும். இதுவே நான் வேண்டும் பரிசில்" என்கிறார் புலவர். (புறநானூறு - 147)

இப்பாடல்கள் பேகனுக்குப் பரத்தையிடம் தோன்றிய பொருந்தாக் காதலைக் கூறுகின்றன; மேலும் கண்ணகி பேகனிடம் கொண்ட மிகுந்த காதலால் புலம்புவது காரணமாகவும் இப்பாடல்கள் பெருந்திணை ஆகின்றன.

தொகுப்புரை

கைக்கிளையின் விளக்கம், தொல்காப்பியர் கூறும் கைக்கிளை இலக்கணம், கைக்கிளை பாடிய புலவர்கள், கைக்கிளையைக் காட்டும் அக இலக்கியங்கள், கைக்கிளையை உணர்த்தும் புற இலக்கியம் (புறநானூறு), பிற இலக்கியங்களில் இடம்பெறும் கைக்கிளை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.

பெருந்திணையின் விளக்கம், தொல்காப்பியர் கூறும் பெருந்திணை மரபு, பெருந்திணை பாடிய புலவர்கள், பெருந்திணையைக் காட்டும் கலித்தொகை, பெருந்திணையை உணர்த்தும் புறநானூறு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.

கேள்வி பதில்கள்

1) கைக்கிளை என்பதன் பொருள் யாது?

விடை : பெருமையில்லா உறவு - சிறுமையான உறவு- ஒருதலைக் காதல்.

2) குறுந்தொகையில் கைக்கிளைத் தன்மையை உணர்த்தும் பாடல்கள் எத்தனை? பாடியவர் யார்?

விடை : ஒருபாடல், பாடியவர் நக்கீரனார்.

3) நற்றிணையில் கைக்கிளைப் பொருள் உணர்த்தும் பாடல்கள் எத்தனை? பாடியோர் யார்?

விடை : இரண்டு பாடல்கள், பாடியோர்;

(1)மருதனிள நாகனார்

(2) இளந்திரையனார்.

4) கலித்தொகையில் கைக்கிளைக்கும் உரியனவாகக் கருதப்படும் பாடல்கள் எத்தனை?

விடை : நான்கு பாடல்கள்.

5) புறநானூற்றில் கைக்கிளைத் திணையில் பாடிய புலவர் யார்? பாடல்கள் எத்தனை?

விடை : நக்கண்ணையார், மூன்று பாடல்கள்.

6) இறைவனின் காதலைப் பெறத் துடிக்கும் ஒருதலைக் காதலரைக் காட்டும் பாடல்கள் யாவை?

விடை : நாயன்மார், ஆழ்வார் பாடல்கள்.

7) ஓர் ஆண்மீது பல பெண்கள் கொள்ளும் கைக்கிளைக் காதலைக் காட்டும் இலக்கியம் எது?

விடை : முத்தொள்ளாயிரம்

8) திருக்குறளில் கைக்கிளையை உணர்த்தும் குறள்கள் எந்த எந்த அதிகாரங்களில் உள்ளன?

விடை : தகையணங்குறுத்தல், குறிப்பறிதல் அதிகாரங்களில்

9) பரிபாடலில் எந்தப் பாடலில் கைக்கிளைத் தன்மை சுட்டப்படுகிறது?

விடை : பதினோராவது பாடலில் - நல்லந்துவனாரின் 'வையை' என்ற பாடலில்.

10) கைக்கிளைக் காதல் கொண்ட கலித்தொகைத் தலைவன் யாரைக் குற்றவாளி ஆக்குகிறான்?

விடை : தலைவியின் வரவைப் பறையறைந்து அறிவிக்காத அரசனை

11) பெருந்திணை என்பதன் பொருள் யாது?

விடை : பொருந்தாக் காமம்.

12) ஒவ்வாக் கூட்டம் என்பது எத்திணையைக் குறிக்கும்?

விடை : பெருந்திணையை

13) எந்த அக இலக்கியத்தில் பெருந்திணையைக் காண முடிகிறது?

விடை : கலித்தொகை

14) இளமை தீர்திறம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை : மூன்று வகைப்படும். அவை, தலைவன் முதியவன் - தலைவி இளையவள் தலைவி முதியவள் – தலைவன் இளையவன் தலைவன் முதியவன் - தலைவி முதியவள்

15) மருதக்கலியில் பெருந்திணை உணர்த்தும் பாடல்கள் எத்தனை?

விடை : இரண்டு.

16) நெய்தற்கலியில் பெருந்திணை உணர்த்தும் பாடல்கள் எத்தனை?

விடை : பத்து

17) நெய்தற்கலித் தலைவன் தான் விரும்பியவள் கொடுத்தவை எவை எனக் குறிப்பிடுகிறான்?

விடை : (1) வருத்தம் (2) பனை மடலால் ஆன குதிரை.

18) "நின் போல்வார் தீண்டப் பெறுபவோ?" - யார் யாரிடம் கூறுகிறார்?

விடை : கூனி குறளனிடம்.

19) வையாவிக் கோப்பெரும் பேகனைப் பெருந்திணையில் பாடிய புலவர்கள் யார்?

விடை : கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகிய நால்வர்.

20) ”இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்" - யார்?

விடை : வையாவிக் கோப்பெரும் பேகனின் மனைவி கண்ணகி.

ஆசிரியர் : முனைவர். நா. இளங்கோவன்

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

3.0
முகுந்தன் Jul 16, 2020 10:50 AM

வணக்கம் அய்யா. பயனுள்ள கட்டுரையை அளித்தமைக்கு மிக்க நன்றி.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top