பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நெய்தல் திணைப் பாடல்கள்

கடற்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளையும், சிறப்புகளையும் அறிய இப்பகுதி துணை புரியும். நெய்தல் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள நெய்தல் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது. நெய்தல் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது. நெய்தல் நில மக்களுக்கு உரிய வாழ்க்கை ஒழுக்கங்கள் முதலிய சிறப்புகளை இப்பகுதி விளக்குகிறது. கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை முதலியவை நெய்தல் திணைப் பாடல்களில் அமைந்துள்ள முறையினையும் இப்பகுதி விளக்குகிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

* நெய்தல் திணைக்கு உரிய முப்பொருள்களை அறியலாம்.

* நெய்தல் திணையில் முப்பொருள் வெளிப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம் உணரலாம்.

* நெய்தல் திணை மக்களின் செயல்களான சிற்றில் கட்டி விளையாடல், கூடல் இழைத்தல், மீன் உணக்கல், மீன் கறி ஆக்கல், இயற்கையை உறவாக நினைத்தல் ஆகியவற்றை அறியலாம்.

* நெய்தல் பாடல்களின் இலக்கிய நயங்களாகக் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை நயங்கள் பற்றி அறியலாம்.

நெய்தல் புலவர்கள்

நெய்தல் திணையில் பல புலவர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர், ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய அகநூல்களில் பல பாடல்கள் நெய்தல் திணையில் பாடப்பட்டுள்ளன. ஐங்குறுநூற்றில் நூறு நெய்தல் பாடல்களையும் பாடியவர் அம்மூவனார். கலித்தொகையில் நெய்தல்கலிப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார். நெய்தல்கலிப் பாடல்கள் மொத்தம் முப்பத்து மூன்று. ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றின் பாடல்களோ, கருத்துகளோ மேற்கோளாகக் காட்டப்படும் இடங்களில் பாடிய புலவர் பெயர் குறிப்பிடப்பட மாட்டாது.

நெய்தல் திணையின் முப்பொருள்கள்

நெய்தல் திணைக்கு உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.

முதற் பொருள்

நெய்தல் திணைக்கு உரிய நிலம் கடலும், கடல் சார்ந்த பகுதியும் ஆகும். பெரும் பொழுது ஆறும் நெய்தல் திணைக்கு உரியன. மருதத்தைப் போலவே நெய்தலுக்கும் ஆண்டு முழுவதும் உரிய காலமாகும்.

1) இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி)

2) முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி)

3) கார் காலம் (ஆவணி, புரட்டாசி)

4) குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை)

5) முன்பனிக் காலம் (மார்கழி, தை)

6) பின்பனிக் காலம் (மாசி, பங்குனி)

இவை ஆறும் நெய்தலின் பெரும்பொழுது ஆகும். நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது எற்பாடு. எற் பாடு என்றால் சூரியன் மறையும் நேரம் அல்லது ஒளி மறையும் நேரம் என்று பொருள்படும்.

கருப்பொருள்

நெய்தல் திணைக்கு உரிய கருப்பொருள்கள் :

தெய்வம் : வருணன்

மக்கள் : துறைவன், சேர்ப்பன், பரத்தி, பரதவர், பரத்தியர், நுளைச்சி, நுளையர், நுளைச்சியர்

பறவை ; நீர்க்காக்கை, அன்னம்

விலங்கு : சுறா, முதலை

ஊர் : பட்டினம், பாக்கம்

நீர் : மணற்கேணி

பூ : நெய்தல், தாழை

மரம் : புன்னை , தாழை

உணவு : மீனும் உப்பும் விற்றலால் வரும் பொருள்.

பறை : மீன்கோட் பறை

பண் : செவ்வழிப் பண்

யாழ் : விளரியாழ்

தொழில் : உப்பு விற்றல், மீன் பிடித்தல்

உரிப்பொருள்

நெய்தல் திணைக்கு உரிய உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். இரங்கல் என்றால் வருந்துதல் என்று பொருள். கடலுள் மீன் பிடிக்கச் சென்ற தலைவனை நினைத்து, காற்றும் மழையும் தொடர்வதால் அவனுக்கு ஏற்படும் துன்பத்தை நினைத்துக் கரையில் உள்ள தலைவி வருந்திக் கொண்டிருப்பாள். தலைவன் தலைவியை மணந்து கொள்ளக் காலம் நீட்டித்தல், தலைவியைக் காண வராதிருத்தல் போன்றவையும் தலைவியின் இரங்கலுக்குக் காரணங்கள் ஆகும். இத்தகைய வருத்தம், அல்லது வருத்தம் தொடர்பான செய்திகளே நெய்தல் திணையின் உரிப்பொருள் ஆகும்.

முப்பொருள் வெளிப்பாடு

நெய்தல் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் பாடல்களில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை இப்பகுதியில் அறியலாம்.

முதற் பொருள் வெளிப்பாடு

நெய்தல் திணைக்கு உரிய நிலமான கடலும் கடல் சார்ந்த பகுதியும் பாடல்களில் வெளிப்படும் தன்மையை முதலில் காண்போம்.

முழங்குகடல்

திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்

(ஐங்குறு நூறு -105 : 1-2) (திரை = அலை; தரு = தந்த; இமைக்கும் = ஒளிவிடும்)

ஒலிக்கும் கடல் அலைகள் கொண்டு வந்த முத்துகள் வெண்மையான மணலில் கிடந்து ஒளிவிடும் என்பது இவ்வடிகளின் பொருள். கடற்கரை, பெருநீர், அழுவம், பெளவம், போன்ற சொற்களால் நெய்தல் நிலம் குறிக்கப்படுவதைப் பல பாடல்களில் காண முடிகின்றது. (எ.டு)

பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை

(ஐங்குறு நூறு – 170 :1)

பெரு நீர் அழுவத்து எந்தை தந்த ...

(அகநானூறு - 20 :1, உலோச் சனார்)

தெண்திரைப் பௌவம் பாய்ந்து

(ஐங் குறு நூறு – 121 : 3) (அழுவம், பௌவம் = கடல்) கடல் சார்ந்த மணல்பரப்பில் விரிந்திருக்கும் சோலைகள் கானல் எனப்படும்.

என்நலனே

ஆனா நோயொடு கான லஃதே

(குறுந்தொகை - 97 : 1-2, வெண்பூதி) (ஆனா = குறையாத)

• பெரும் பொழுது

குறுந்தொகை 55-ஆவது பாடலில் (நெய்தற் கார்க்கியர்) ஊதை யொடு என்று வரும் சொல் குளிர்காலத்தைக் காட்டுகின்றது. (ஊதை = வாடை)

• சிறுபொழுது

நீல ம் கூம்பும்

மாலை வந்தன்று ...

(ஐங்குறு நூறு - 116 : 2-3) எற்பாடு என்பது சூரியன் மறையும் அந்தி மாலை நேரம். நீலமலர் குவியும் அந்தி மாலை வந்தது என்பது இப்பாடல் அடிகளின் பொருள்.

கருப்பொருள் வெளிப்பாடு

நெய்தல் திணைப் பாடல்களில் சுட்டப்படும் கருப்பொருள்கள் சிலவற்றை இனி அறியலாம்.

மக்கள் - பரதவர், துறைவன், சேர்ப்பன்

உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்

(நற்றிணை - 63 :1, உலோச்சனார்) (உரவு = வலிமை; உழந்த = வருந்திய)

துறை வன் தம் ஊ ரானே

(குறுந்தொகை - 97 : 3, வெண்பூதி)

நளிநீர்ச் சேர்ப்ப!

(ஐங் குறு நூறு - 179 :1) (நளிநீர் = மிகுந்த நீர் (கடல்)

பறவை - அன்னம்

துதிக்கால் அன்னம் ......

(ஐங்குறு நூறு - 106 : 2) (துதிக்கால் = தோற்பை போன்ற கால்)

விலங்கு - சுறா

கோட்சுறா எறிந்தென

(நற்றிணை - 207 : 8) (கோட் சுறா = கொல்லவல்ல சுறாமீன்)

ஊர் - பாக்கம்

பெருங் கழிப் பாக்கம் கல்லென

வருமே தோழி கொண்கன் தேரே

(நற்றிணை - 111 : 9-10) (பெருங்கழி = பெரிய நீர்க் கழிகள் சூழ்ந்த; கல்லென = கல் என்று ஒலிக்க; கொண்கன் = தலைவன்) மேற்காட்டிய நற்றிணைப் பாடல்களின் (207, 111) ஆசிரியர்கள் பெயர் தெரியவில்லை .

மரம் - புன்னை

புன்னை

பொன்னிற ம் விரியும் பூக்கெழு துறை வனை

(ஐங்குறு நூறு - 110 : 1-2) (பூக்கெழு = பூக்கள் நிறைந்த)

பண் - செவ்வழிப்பண்

செவ்வழி யாழ் நரம்பு அன்ன

(கலித்தொகை - 118 :15)

தொழில் - உப்பு விற்றல்

உப்பு ஒய் உமணர்

(அகநானூறு - 30 : 5, முடங் கிக்கிடந்த நெடுஞ் சேரலாதன்) (ஒய் = உப்பு வண்டியைச் செலுத்தும்; உமணர் = உப்பு வாணிகர்)

இவை போன்றே பிற கருப்பொருள்களும் ஆங்காங்கே பாடல்களில் வெளிப்படுகின்றன.

உரிப்பொருள் வெளிப்பாடு

குடும்பத்திற்குப் பொருளீட்டும் நோக்கத்தில் கடல்வழிப் பிரிந்த தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவது (இரங்கல்) உண்டு. திருமணத்திற்காகப் பொருள் ஈட்டும் நோக்கத்தில் சென்ற தலைவன் வரைவு (திருமணம் செய்தல்) நீட்டிப்பதால் வருந்தும் தலைவியும் நெய்தலில் உண்டு. களவு (திருமணத்திற்கு முற்பட்ட காதல் வாழ்க்கை), கற்பு (திருமணத்திற்குப் பிற்பட்ட குடும்ப வாழ்க்கை) இரு நிலையிலும் நெய்தலின் உரிப்பொருள் ஆகிய இரங்கல் வெளிப்படும்.

இரங்கல் - களவுக் காதலில்

அன்னை வாழிவேண்டு அன்னை !- என் தோழி

சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து

தண்கடல் படுதிரை கேட்டொறும்

துஞ்சாள் ஆ குதல் நோகோ யானே

(ஐங்குறு நூறு – 107) (நுதல் = நெற்றி; பசப்ப = பசலை நோய் கொள்ள, சாஅய் = துன்புற்று; படர் = வருத்தம்; கேட்டொறும் = கேட்கும் போதெல்லாம்; நோகோ = வருந்துகிறேன்)

தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நிற்கும் நிலையில் பிறப்பது இப்பாடல். தலைவன் வரைவு நீட்டித்தான். தலைவியைப் பசலை நோய் (இளைத்து நிறம் மாறுதல்) பற்றுகிறது. இரவெல்லாம் அவள் தூங்குவதில்லை. காரணம், தலைவனை நினைத்து வருந்துவதே. "தாயே! நான் சொல்வதை விருப்பத்துடன் கேள். என் தோழியின் ஒளியுடைய நெற்றியில் பசலை பற்றிக்கொண்டது. துன்ப மிகுதியால் வருந்தி மெலிந்தாள். குளிர்ந்த கடலின் அலை ஒலி கேட்கும் போதெல்லாம் அவனுடைய தேரின் மணி ஓசை என நினைத்து உறங்காமல் வருந்துகிறாள். அதனால் நானும் வருந்துகிறேன்" என்பது இப்பாடலின் பொருள்.

இரங்கல் - கற்பு வாழ்க்கையில்

தலைவனின் பிரிவுக் காலம் நீண்டதால் மாலைப் பொழுதிடம் மனம் குமுறி வருந்துகிறாள் கலித்தொகைத் தலைவி.

மாலை நீ

எம்கேள்வன் தருதலும் தரு கல்லாய் ; துணை அல்லை

பிரிந்தவர்க்கு நோய் ஆகிப் புணர்ந்த வர்க்குப்

புணையாகித்

திருந்தாத செயின் அல்லால் இல்லை யோ நினக்கு !

(கலித் தொகை - 148 : 16-19) (கேள்வன் = கணவன்; தருதலும் தருகல்லாய் = தருதலையும் செய்யாய்; புணர்ந்தவர்க்கு = சேர்ந்தவர்க்கு; புணை = தெப்பம்)

"மாலையே ! நீ அறிவு மயங்கினை! என் கணவரை முன்பு போல் இங்கு நீ தரவும் இல்லை. எனவே நீ எனக்குத் துணை இல்லை. கணவனைப் பிரிந்த மகளிருக்குப் பிரிவு நோயின் வடிவமே நீ தான். கணவனைச் சேர்ந்த மகளிருக்கு இன்பத்தின் தெப்பமாக இருப்பதும் நீ தான். இவ்வாறு நன்மையே ஆகாத செயல்களைச் செய்வது அல்லாமல் வேறு நற்செயல்கள் உனக்கு இல்லையோ?" என்பது இப்பாடல் அடிகளின் பொருள். இப்பாடல் வேந்தனுக்குத் துணையாகப் போருக்குச் சென்ற தலைவனைப் பற்றியது. நாடு கொள்வதற்குப் பிரிதல் களவு ஒழுக்கத்தில் இல்லை. எனவே இது கற்புக் காலத்துப் பிரிவு ஆகும். இவ்வாறு நெய்தல் திணைப் பாடல்களில் இரங்கல் என்ற வருத்தம் தொடர்பான ஒழுக்கமே நிறைந்துள்ளது.

நெய்தல் திணையின் இயல்புகள்

வரைவு கடாவுதல் (மணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல்), வரைவு நீட்டித்தல், பகற்குறி, இரவுக்குறி போன்ற அகவாழ்க்கை நிகழ்வுகள் குறிஞ்சியில் உள்ளது போல் நெய்தலிலும் உண்டு. அகநிகழ்வு அல்லாத, நெய்தலுக்கே சிறப்பாக உரிய சில நிகழ்வுகளையும் காண முடிகின்றது. அவற்றுள் சிற்றில் கட்டி விளையாடல், கூடல் இழைத்தல், மீன் உணக்கல், மீன்கறி ஆக்கல், இயற்கையையும் உறவாக நினைத்தல், மடலேறுதல் போன்றவை குறிக்கத்தக்கன. இவை அகவாழ்க்கை நிகழ்வுகளோடு இணைத்துச் சொல்லப்படுகின்றன.

சிற்றில் கட்டி விளையாடல்

கடற்கரை மணலில் இளம்பெண்கள் வீடு கட்டி விளையாடுவதைச் சிற்றில் கட்டி விளையாடல் என்பர். தலைவியை மணந்து கொள்வதில் கருத்தின்றிப் பகலில் மீண்டும் மீண்டும் தலைவியைக் காண வருகிறான் தலைவன். 'இதனை அன்னை அறிந்தால் தலைவியை வெளியில் அனுப்பாமல் வீட்டில் இருத்தி விடுவாள். எனவே விரைவில் மணந்துகொள்' என்கிறாள் அகநானூற்றுத் தோழி.

ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை

கோதை ஆயமொடு வண்டல் தைஇ

ஓரை ஆடினும் உயங் கும் நின் ஒளியென

(அகநானூறு - 60 : 9-11, குடவாயிற் கீரத்தனார்) (ஊதை = வாடைக்காற்று; அடைகரை = நீர்க்கரை; கோதை = மாலை; ஆயம் = தோழியர் கூட்டம்; வண்டல் = சிற்றில்; தை இ = கட்டி; ஓரை = விளையாட்டு)

"ஊதைக் காற்றால் குவிக்கப்பட்ட உயர்ந்த மணற்குன்றை உடையது நீர்க்கரை. அக்கரையில் மாலை அணிந்த தோழியருடன் சிற்றில் கட்டி விளையாடினாலும் "உன் உடம்பின் ஒளி வாடும். அங்குப் போகாதே” என்று சினப்பாள் தாய். அப்படிப்பட்ட தாய் உன் வருகையை அறிந்தால் தலைவியைக் காவலில் வைத்துவிடுவாள்” என்று தோழி கூறுகிறாள். அகநானூற்றுப் பாடலொன்று இளம் பெண்கள் விளையாடும் வரிமனையை (சிற்றில் அல்லது மணல்வீட்டை), கடல் அலை வந்து அழிக்கும் என்று குறிக்கிறது.

மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி

இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்

(அகநானூறு - 90 :1-2, மதுரை மருதனிள நாகனார்)

(வெண்தலை = நுரையோடு கூடிய அலைகள்; புணரி = கடல்)

தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து மணல்வீடு கட்டி விளையாடுவது நெய்தல் நில இளம் பெண்களின் உற்சாகமான பொழுதுபோக்கு எனத் தெரிகிறது.

கூடல் இழைத்தல்

மணலில் பெரிதாக வட்டங்கள் வரைந்து, அவை இரட்டைப் படையில் அமைந்தால் தலைவன் வருவான் என்ற நம்பிக்கை நெய்தல் நிலப் பெண்களிடம் இருந்தது. மேலும் கண்ணை மூடி வட்டம் இழைக்கும் போது மணல் வட்டம் கூடாமல் போவதுண்டு. கூடாமல் போனாலோ அல்லது வட்டங்கள் ஒற்றைப் படையில் அமைந்தாலோ தலைவனின் வருகை இல்லை என்று நம்பினர். கடற்கரையில் மட்டுமல்லாது இல்லத்திலும் கூடல் இழைப்பது உண்டு. தன் இல்லத்தில் கூடல் இழைக்கின்றாள் ஒரு தலைவி. ஒரு முனை மற்ற முனையுடன் கூடவில்லை. ஆதலால் அது இளம்பிறை போல் விளங்கியது. அந்த இளம்பிறை பின்பு முழு நிலவாக மாறி வருத்தும் என்று எண்ணுகிறாள்; தான் உடுத்திருந்த ஆடையால் அதை மூடுகிறாள்; உடனே இளம்பிறையை அணியும் சிவபெருமான் பிறையைத் தேடுவான் என்று எண்ணுகிறாள். தான் சிவனுக்கு அதைக் கொடுத்து உதவி செய்தவளாக விளங்க எண்ணுகிறாள். உடனே மூடும் முயற்சியைக் கைவிடுகிறாள். இக்காட்சியைக் கலித்தொகையில் நல்லந்துவனார் காட்டுகின்றார் (142 : 24-29).

மீன் உணக்கல்

மணற்பரப்பில் மீன்களை வெயிலில் காயப் போடுவதை மீன் உணக்கல் என்று சொல்வதுண்டு. தம் உணவுக்காகவும், விற்றுப் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தவும் மீன் உணக்கல் தொழிலைப் பரதவர் செய்வர். பண்டமாற்று = பொருள் மாற்று. அதாவது தன்னிடம் உள்ள ஒரு பொருளை (இங்குக் காய்ந்த மீன் கருவாடு) மற்றவரிடம் கொடுத்து அவரிடம் உள்ள வேறு பொருளைத் தன் தேவைக்கு வாங்குவது. தலைவன் வரைவு நீட்டிக்கிறான். தலைவி இற்செறிப்பில் வைக்கப்பட்டுள்ளாள். ஒருநாள் தலைவியின் வீட்டு வேலிக்கு அப்பால் உள்ள இடத்தில் நிற்கின்றான் தலைவன். அவனிடம், “விரைந்து மணம் செய்" என்று வலியுறுத்துகிறாள் நற்றிணைத் தோழி.

அலர் (பழி) தூற்றும் தன் ஊரைப் பற்றி அவள் சொல்வது நயமான பகுதி ஆகும்.

உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர்

மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்

கல்லென் சேரிப் பு லவற் புன்னை

விழவு நாறு விளங்கு இணர் விரிந்து உடன் கமழும்

அழுங்கல் ஊர்

(நற்றிணை - 63 :1-5, உலோச்சனார்) (உரவு = வலிமை; உழந்த = வருந்திய; உணக்கிய = காயவிட்ட; புலவல் = புலவு நாற்றம்; இணர் = பூங்கொத்து; அழுங்கல் = பேரொலி)

"வலிமையுடைய கடலில் சென்று உடல் வருத்திப் பெரிய வலைகளை வீசி மீனைப் பிடிக்கின்றனர் பரதவர். மிகுதியான மீன்களைப் புதிய மணற் பரப்பில் காயப் போடுகின்றனர். 'கல்' என்று ஒலிக்கக்கூடிய சேரி முழுதும் புலவு நாற்றம் (மீன் நாற்றம்) வீசுகிறது. அச்சேரியை அடுத்திருக்கும் புன்னை மரங்கள் விழாவிற்குரிய மணமுடைய பூங்கொத்துகளை ஒரு சேர விரிக்கின்றன. புன்னையின் நறுமணம் மீன் உணக்கும் புலவு நாற்றத்தைப் போக்குகின்றது. அத்தகைய ஊரில் மக்கள் பழி தூற்றும் ஒலி மிகுகின்றது". பரதவர் மீன் உணக்கும் செய்தி இவ்வாறு உலோச்சனார் பாடலில் அழகான வருணனை ஆகியிருக்கிறது.

மீன்கறி ஆக்கல்

பிற நிலப் பகுதி மக்களை விட, நெய்தல் நிலப் பகுதி மக்களுக்கு அதிக அளவு உணவாவது மீன். மீனைச் சமைத்து உண்பது பற்றி நெய்தல் திணைப் பாடல்களில் செய்திகள் உள்ளன. போந்தைப் பசலையாரின் அகநானூற்றுப் பாடல், மீன் உணவைப் பற்றிக் கூறுகிறது. (110-16-17) தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நிற்கிறாள். அதாவது தலைவியின் களவுக் காதலை வெளிப்படுத்தும் இடம் இது.

"தாயே! தலைவியும் நானும் தோழியர் கூட்டத்துடன் சென்று கடலில் ஆடினோம். கடற்கரைச் சோலையில் மணல்வீடு கட்டியும், சிறுசோறு சமைத்தும் விளையாடினோம். சோலையில் சிறிது இளைப்பாறினோம். எம்மிடம் ஒருவன் நெருங்கி வந்தான். "நான் மிகவும் இளைத்திருக்கிறேன். இந்த மெல்லிய இலைப் பரப்பில் நீங்கள் சமைத்த சோற்றை விருந்தினனாக உண்பதில் இடையூறு உண்டா?" என்று அவன் கேட்டான். "இந்த உணவு உமக்கு ஏற்றது அன்று. இழிந்த கொழுமீனால் ஆன உணவு" எனச் சொன்னோம்”. என்று கடற்கரை நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறாள் தோழி. கொழுமீன் வல்சி என்று வரும் தொடர் மீன் உணவு என்று பொருள்படும்.

குடவாயிற் கீரத்தனாரின் பாடலில் (அகநானூறு - பாடல்60) தோழி தலைவனிடம் கூறும் கூற்றில் மீன் உணவு வகைகள் இடம் பெறுகின்றன. 'பரதவனின் மகளான தலைவி அவனுக்கு உணவு எடுத்து வருகிறாள். உப்புக்கு விலையாகப் பெற்ற நெல்லினது அரிசியால் ஆன வெண்சோற்றின் மீது அயிலை (ரை) மீனை இட்டுச் சமைத்த அழகிய புளிக்கறியைச் சொரிந்து கொழுவிய மீன் கருவாட்டுப் பொறிக்கறியுடன் தந்தை உண்ண அவள் தருவாள்', புளிக்கறி என்பது புளிக்குழம்பைக் குறிக்கின்றது. அயிரை மீன் புளிக் குழம்பும், கொழுமீன் கருவாட்டுப் பொறியலும் பரதவரின் உணவு வகைகள் எனத் தெரிகின்றது.

இயற்கையுடன் உறவு கொள்ளல்

நெய்தல் நில மக்கள் இயற்கைப் பொருள்களையும் உறவாக நினைப்பார்கள். புன்னை மரத்தை உறவாக நினைத்த நெய்தல் மகளிரை நற்றிணைப் பாடலில் காணலாம். மணலில் புன்னைக் காயை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் சிறுமியர், வெள்ளிய மணலில் விளையாட்டாகப் புன்னைக் காயை அழுத்திப் புதைத்தாள் சிறுமியாய் இருந்த தலைவி. பின்னர் அக்காய் முளைக்க ஆரம்பித்தது கண்டு அச்செடிக்குப் பாலும் , நெய்யும் ஊற்றி வளர்த்தாள். செடியும் மரமாக வளர்ந்தது. தலைவியும் வளர்ந்தாள். தான் வளர்த்த புன்னை மரத்தை அவளது தங்கை என அறிமுகப்படுத்தினாள் அவள் தாய். அம்மரத்தின் கீழ் அவளது காதலன் அவளுடன் உறவாட வந்தான். அவள் நாணம் உறுகிறாள். அதைத் தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நம் மொடு நகையே

(நற்றிணை - 172 : 4-7, ஆசிரியர் பெயர் தெரியவில்லை )

(நுவ்வை = உன் தங்கை ; நகை = சிரித்து விளை யாடல்)

“இந்தப் புன்னை உங்களை விடச் சிறந்தது; உங்களுக்குத் தங்கை" என அன்னை கூறினாள். அத்தங்கையின் அருகில் நின்று உன்னோடு பேச நாணுகிறாள் தலைவி. ஆகவே நீ அவளை விரைவில் திருமணம் செய்து கொள் என்ற குறிப்புடன் தோழி பேசுகிறாள். இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையை வாழும் மனிதர்கள் இயற்கைப் பொருள்களையும் தம் உறவாக நினைப்பது அவர்தம் மென்மையான பண்புக்கு மிகச் சிறந்த சான்றாகிறது.

இலக்கிய நயங்கள்

நெய்தல் திணைப் பாடல்களில் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை முதலிய இலக்கிய நயங்கள் சுவையூட்டும் தன்மையை இப்பகுதியில் அறியலாம்.

கற்பனை

புன்னை மரத்தைத் தங்கையாகக் கருதும் நற்றிணைப் பாடல் (172) கற்பனைக்கு நல்ல சான்று. தலைவனது பிரிவால் வருந்தும் தலைவி ஒருத்தியின் காம நோய்க் கொடுமையைக் காட்டும் அம்மூவனார் பாடிய குறுந்தொகைப் பாடலில் அமைந்துள்ள கற்பனை நயத்தைக் காண்போம். பிரிவு வேதனையால் இரவு முழுதும் உறக்கம் இன்றித் தவிக்கிறாள் தலைவி. அவளுக்குத் துணையாக, ஆறுதல் சொல்ல அந்த இரவில் யாரும் இல்லை.

இரவு முழுதும் இடைவிடாமல் கடல் அலைகளின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இடைவிடாமல் துன்ப அலை வீசிக் கொண்டிருக்கும் தன் உள்ளத்துக்கும் கடலுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகக் காண்கிறாள் தலைவி. கடலை நோக்கிக் கேட்கிறாள் : "கடலே ! கரையில் உள்ள வெண்மை நிறமுடைய தாழம் பூக்களை அலைகள் மோதி மோதி அலைக்கழிக்கின்ற இந்த இரவு முழுவதும் உனது வருத்தமான குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நீ யார் மீது கொண்ட காதல் காரணமாக இத்துன்பத்துக்கு ஆளானாய்?”.

யாரணங் குற்றனை கடலே ......

வெள்வீத் தாழைத் திரையலை

நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே

(குறுந்தொகை - 163 : 1, 4-5)

'கடலும் யாரையோ காதலித்துக் காம நோயால் புலம்புகிறது' என்ற தலைவியின் எண்ணம் கவிஞரின் அழகிய கற்பனையில் இருந்து எழுந்திருக்கிறது.

சொல்லாட்சி

கலித்தொகைப் பாடலொன்று சொல்வன்மைக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் சான்றாகின்றது. தலைவியின் உறவினர் மணத்துக்குச் சம்மதிக்கின்றனர். தலைவனும் சம்மதிக்கின்றான். ஆனால் காலம் தாழ்த்துகின்றான். விரைந்து மணக்குமாறு தோழி கூறுகிறாள். "இல்வாழ்வு நடத்துதல் என்பது வறியவர்க்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்து உதவுதலாகும்; ஒன்றைப் பாதுகாத்தல் என்பது கூடியவரைப் பிரியாமல் இருத்தலாகும்; மக்கள் பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதலாகும்; அன்பு என்பது, தன் சுற்றம் கெடாது இருக்கச் செய்தலேயாகும். அறிவு என்பது அறியாதவர் தம்மைப் பார்த்துச் சொல்லும் சொல்லைப் பொறுத்தலேயாகும்" என்று பலவாறாக மனித வாழ்விற்குத் தேவையான பண்புகளைப் பட்டியல் இடுகிறாள் தோழி.

ஆற்று தல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப் படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப் படுவது தன்கிளை செறாஅமை

(கலித்தொகை - 133 : 6-9) (அலந்தவர் = வறியவர் (ஏழையர்); பாடு = உலக ஒழுக்கம், மரபு; கிளை = சுற்றம்; செறாஅமை = பகை கொள்ளாமை)

'பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்' என்பது எத்தகைய சொல் இனிமையும் பொருள் சிறப்பும் கொண்டு அமைந்துள்ளது என்பதை நோக்குங்கள்!

உவமை

உவமை நயம் சிறக்கும் நெய்தல் பாடல்கள் பல. சான்றாகச் சிலவற்றைக் காணலாம். 'நண்டு தாக்குவதால் துறையில் வாழும் இறால் மீன் புரளும் இடம் தொண்டி. இனிய ஆரவாரம் நிறைந்த அத்தொண்டி போன்றது இவளது நெற்றி' என்கிறார் அம்மூவனார் (ஐங்குறுநூறு - 179). ஓர் ஊரைச் சொல்லி அதைப் போன்றது நெற்றி என்று ஏன் சொல்ல வேண்டும்? "அழகாலும், இன்பத்தாலும் இனிய ஆரவாரங்கள் நிறைந்த தொண்டிக்கு ஒரு சிறு துன்பம் நேர்ந்தாலும், அது ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதுபோலக் காதல் துயரால் இவளது நல்ல நெற்றி பசலை கண்டால், மற்றவர்க்குக் களவுக் காதல் தெரிந்துவிடும். இவள் நாணம் உடையவள் என்பதால் உயிர்வாழ மாட்டாள். அதனால் வளம் மிகுந்த தொண்டி போன்ற இவளது அழகு மிகுந்த நெற்றியில் பசலை வரக் காரணமாக இருக்காதே. விரைவில் மணந்து கொள்" என்று குறிப்பாகத் தலைவனிடம் உணர்த்த இவ்வாறு கூறுகிறாள்.

உவமையைச் சொல்வதில்,

கடலினும் பெரிது எமக்கு அவரு டை நட்பே

(ஐங்குறு நூறு - 184)

என்ற தொடர் சிறக்கின்றது. கடலை விடப் பெரியது அவர் கொண்ட காதல் என்று தலைவி கூறுவது இலக்கிய இன்பம் தருகிறது. நெய்தல் நில மக்களுக்கு ஏற்ற, அவர் தம் வாழ்க்கை முறைக்கு ஏற்ற உவமையை எடுத்தாள்வது உண்டு. புறங்காட்டி ஓடாத கொள்கையை உடைய மன்னன் ஒரு பாசறை அமைக்கின்றான். அதில் உள்ள யானைகளின் பொன்னால் ஆன முகத்திரைகள் (முகபடாங்கள்) ஆடுகின்றன; ஒளிவிடுகின்றன. அதைப்போல் கடலில் பரதவர் மீன் பிடிக்கப் பயன்படுத்தும் தோணிகளில் (படகுகளில்) விளக்குகள் ஒளி சிந்துகின்றன. (அகநானூறு - 100 : 5-10, உலோச்சனார்) இந்த உவமை பரதவர்கள் புறங்காட்டி ஓடாதவர்கள், அவர்தம் படகுகள் யானைபோல் பலம் வாய்ந்தவை என்ற கருத்துகளையும் உணர்த்துகின்றது.

உள்ளுறை

அகநானூற்றின் 130-ஆவது பாடல் உள்ளுறைக்குச் சான்றாகிறது. தலைவி ஒருத்தி மீது காதல் கொண்டு வாடும் தலைவனின் வேறுபாடு கண்டு இகழ்கிறான் பாங்கன் (தோழன்). அவனிடம் தலைவன் மறுமொழி கூறுகிறான்; தலைவியைப் பார்த்த இடத்தைக் கூறுகிறான். கடற்கரையில் தாழையின் மணம் நன்கு பரவிப் புலால் நாற்றத்தைப் போக்கும் இடம் அது என்கிறான். தலைவியின் காதல் பார்வை தலைவனின் கட்டுப்பாடு (நிறை) முதலியவற்றைப் போக்கிவிட்டது என்பது இந்த வருணனையின் உள்ளுறைப் பொருள். அலைகள் கொண்டுவந்து கரையில் வீசியுள்ள முத்துகள் குதிரையின் ஓட்டத்தைத் தடுக்கும் என்கிறான். தலைவியின் காதல் அவன் நெஞ்சத்தைக் தடுத்து நிறுத்தியது என்பது உள்ளுறை. (அகநானூறு - 130 : வெண்கண்ணனார்)

நற்றிணைப் பாடலில் (63, உலோச்சனார்) தோழியின் கூற்றில் உள்ளுறை அமைகின்றது. தலைவன் - தலைவி காதலை ஊரார் அலர் (பழி) தூற்றுவதன் காரணமாக விரைவில் தலைவியை மணம் புரியுமாறு தோழி தலைவனிடம் வேண்டுகிறாள். அப்போது, 'கழிச்சேற்றில் (உப்பங்கழிச் சகதியில்) ஓடும் குதிரைகளின் உடம்பிலே பட்ட சேறு கடல்நீரால் கழுவப்படும்' என்று ஒரு வருணனை சொல்கிறாள். களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைவி, தலைவன் இருவர் மீதும் படிந்த அலர்ப்பழி, அவ்விருவரும் இணையும் திருமணத்தால் நீக்கப்படும் என்பதை உள்ளுறையாக உணர்த்துகிறது இவ்வருணனை.

தொகுப்புரை

நெய்தல் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது. இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படும் முறை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. சிற்றில் கட்டி விளையாடல், கூடல் இழைத்தல், மீன் உணக்கல், மீன் கறி ஆக்கல், இயற்கையையும் உறவாக நினைத்தல், மடலேறுதல் முதலிய நெய்தலின் சிறப்புகளை அறிந்துகொள்ள முடிந்தது. நெய்தல் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

கேள்வி பதில்கள்

1) ஐங்குறுநூற்றில் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?

விடை : அம்மூவனார்.

2) நெய்தல்கலிப் பாடல்களைப் பாடியவர் யார்?

விடை : நல்லந்துவனார்.

3) நெய்தலுக்குரிய சிறுபொழுது எது?

விடை : எற்பாடு.

4) நெய்தலுக்குரிய விலங்குகள் யாவை?

விடை : சுறா, முதலை.

5) நெய்தலுக்கு உரிய உரிப்பொருள் யாது?

விடை : இரங்கல், இரங்கல் தொடர்பான ஒழுக்கம்.

6) பெருநீர் அழுவம் என்பதன் பொருளைத் தருக

விடை : கடற்பரப்பு.

7) கொண்கன் என்பது யாரைக் குறிக்கும்?

விடை : தலைவனை.

8) 'தண்கடல் பகுதிரை கேட்டொறும் துஞ்சாள்' - யார்?

விடை : நெய்தல் தலைவி.

9) தலைவனின் பிரிவுக் காலம் நீண்டதால் கலித்தொகைத் தலைவி எதனிடம் புலம்புகின்றாள்?

விடை : மாலைப் பொழுதிடம்.

10) சிற்றில் என்றால் என்ன?

விடை : மணலில் கட்டி விளையாடும் வீடு.

11) ஊதை என்பதன் பொருள் யாது?

விடை : வாடைக் காற்று.

12) கூடல் இழைக்கும்போது வட்டங்களின் இரட்டைப் படை எதனை உணர்த்தும்?

விடை : தலைவனின் வருகையை.

13) பண்டமாற்று என்றால் என்ன?

விடை : பொருள் மாற்று. தன்னிடம் உள்ள ஒரு பொருளைக் கொடுத்துத் தன் தேவைக்கேற்ற இன்னொரு பொருளை ஈடாகப் பெறுவது.

14) புன்னையின் நறுமணம் எதனைப் போக்குகின்றது?

விடை : புலவு நாற்றத்தை.

15) அயிலை மீன் புளிக்கறியைக் குறிப்பிடும் புலவர் யார்?

விடை : குடவாயிற் கீரத்தனார்.

16) மகளின் தங்கையாகத் தாய் எதனைக் கூறுகிறாள்?

விடை : புன்னை மரத்தை.

ஆசிரியர் : முனைவர். நா. இளங்கோவன்

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

2.85185185185
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top