பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலைத் திணைப் பாடல்கள்

இப்பகுதியில் பாலைத் திணைப் பாடல்களைப் பற்றி அறியலாம். பாலை நிலப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகளையும் சிறப்புகளையும் அறிய இப்பகுதி துணைபுரியும்.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள பாலைத் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது. பாலைத் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது. பாலை நில மக்களுக்கு உரிய வாழ்க்கை ஒழுக்கங்கள் முதலிய சிறப்புகளை இப்பாடம் விளக்குகிறது. கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை முதலியன பாலைத் திணைப் பாடல்களில் அமையும் முறையினையும் இப்பகுதி விளக்குகிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

* பாலைத் திணைக்கு உரிய முப்பொருள்களை அறியலாம்.

* பாலைத் திணையில் முப்பொருள் வெளிப்பாடு எவ்வாறு அமைந்து உள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம் உணரலாம்.

* பாலைத் திணைக்குரிய அக ஒழுக்கங்களான உடன்போக்கு, செலவு அழுங்குவித்தல், நற்றாய் வருந்துதல், செவிலி மகளைத் தேடிச் செல்லல், தலைவியை ஆற்றுவித்தல் போன்றவற்றையும் அறம் பாராட்டல், மறவர் கொள்ளை அடித்தல் போன்ற புற நிகழ்வுகளையும் அறியலாம்.

* பாலைத் திணைப் பாடல்களில் தோன்றும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்கள் பற்றியும் அறியலாம்.

பாலைத் திணைப் புலவர்கள்

ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். ஐங்குறுநூற்றில் உள்ள நூறு பாலைப் பாடல்களையும் பாடியவர் ஓதலாந்தையார். கலித்தொகையில் உள்ள முப்பத்தைந்து பாலைப் பாடல்களையும் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் நற்றிணையில் பத்து, குறுந்தொகையில் பத்து, அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்களையும் பாடியுள்ளார். ஐயத்துக்கு இடமான ஒன்றிரண்டு போக இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே பாலைத் திணையில் அமைந்தவை. இச்சிறப்புக் கருதித்தான் பாலை பாடிய என்ற அடைமொழியை இவர் பெற்றுள்ளார்.

அள்ளூர் நன்முல்லை, உகாய்க்குடி கிழார், மதுரைச் சீத்தலைச் சாத்தன் போன்ற பல புலவர்கள் பாலைத் திணையில் பாடியுள்ளனர். ஓதலாந்தையார், பாலை பாடிய பெருங்கடுங்கோ இருவரும் முறையே ஐங்குறுநூறு, கலித்தொகை நூல்களில் உள்ள அனைத்துப் பாலைத் திணைப் பாடல்களையும் பாடியுள்ளனர். ஆகவே இப்பாடத்தில் அவ்விரு நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்படும் பொழுது பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை.

பாலைத் திணையின் முப்பொருள்கள்

நிலமும் பொழுதும் முதற்பொருள்; தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், மரம், தொழில் போன்றவை கருப்பொருள்கள்: நிலத்திற்கு உரிய மக்களின் ஒழுக்கம் உரிப்பொருள். பாலைத் திணைக்கு உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.

முதற்பொருள்

முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் மழையின்றி வறண்டு தம் வளமான இயல்பு குறையும்போது அவை பாலை நிலம் எனப்படும். பாலைக்கு உரிய நிலம் சுரமும் சுரம் சார்ந்த இடமும் ஆகும். சுரம் என்பது வறண்ட, பயனற்ற வெயில் கொளுத்தும் காட்டுப் பகுதியைக் குறிக்கும். எனவே பாலை எனத் தனி ஒரு நிலப் பகுப்பு இல்லை . வறட்சியின் காரணமாகவே பாலை நிலம் தோன்றுகிறது.

• பெரும் பொழுது

பாலையின் பெரும்பொழுது இளவேனிற் காலமும் முதுவேனிற் காலமும் ஆகும். இளவேனிற் காலம் என்பது சித்திரை, வைகாசி மாதங்கள். முதுவேனிற் காலம் என்பது ஆனி, ஆடி மாதங்கள். மொத்தத்தில் வெயில் சுட்டெரிக்கும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களே பாலைத் திணைக்குரிய பெரும்பொழுது ஆகும். பாலையின் பெரும்பொழுதாகப் பின்பனிக் காலத்தையும் குறிப்பிடுவர்.

• சிறுபொழுது

நன்றாக வெயில் சுட்டெரிக்கும் நேரமான பகல் 12 மணி முதல் மதியம் 2 மணிவரை உள்ள நண்பகல் நேரமே பாலையின் சிறுபொழுது ஆகும்.

கருப்பொருள்

பாலைத்திணைக்கு உரிய கருப்பொருள்கள்.

தெய்வம் : கொற்றவை (காளி)

மக்கள் : விடலை, காளை, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.

பறவை : கழுகு, பருந்து

விலங்கு : செந்நாய், இளைத்த யானை, புலி

ஊர் : குறும்பு நீர் வற்றிய கிணறு

பூ : பாதிரி, மரா, குரா

மரம் : இருப்பை, ஓமை, பாலை

உணவு : வழிப்பறி செய்த பொருள்கள், வளமான பகுதிகளில் சென்று

கொள்ளை அடித்த பொருள்கள்

பறை : போர்ப்பறை, ஊரெறி பறை

பண் : பாலை (பஞ்சுரம்)

யாழ் : பாலையாழ்

தொழில் : வழிப்பறி செய்தல்.

உரிப்பொருள்

பாலைத் திணைக்கு உரிய உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். பொருள் ஈட்டத் தலைவன் பிரியக் கருதுதல், அதனைத் தோழி வாயிலாகத் தெரிவித்தல், தலைவி வருந்திப் பிரிவுக்கு உடன்படாமை, தோழி தலைவனைப் பிரியாதிருக்கச் செய்தல், பின் தலைவன் பிரிதல், பாலை நிலக் கொடுமைகளை நினைத்துத் தலைவி அஞ்சுதல், தோழி தேற்றுதல், பிரிந்திருக்கும் இடத்திலிருந்து கொண்டு தலைவன் வருந்துதல் போன்ற நிகழ்வுகளையும் கூற்றுகளையும் பாலைத் திணைப் பாடல்களில் காணலாம். தலைவி தலைவனோடு பிறர் அறியாமல் உடன்போக்கில் சென்றுவிடத் தலைவியின் பிரிவால் தாயர் வருந்துவதும் பாலைத் திணையில் கூறப்படும்.

முப்பொருள் வெளிப்பாடு

பாலைத் திணைக்கு உரிய நிலமான சுரம் சுரம் சார்ந்த பகுதிகள் வறண்ட காடு, மலை சார்ந்த பகுதிகளே ஆகும். நிலப்பகுதி, பொழுது முதலியன பாலைத் திணைப் பாடல்களில் எவ்வாறு வெளிப்படுகின்றன, கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் ஆகியன எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை இப்பகுதியில் அறியலாம்.

முதற்பொருள் வெளிப்பாடு

தன்னுடன் இணைந்து நடந்து வரும் தலைவியுடன் தலைவன் போவதாக உள்ள நற்றிணைப் பாடலில் பாலை நிலப் பகுதி இவ்வாறு குறிக்கப் படுகிறது.

மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை

மணலிடு மருங்கின்

(நற்றிணை -362 :7-8. மதுரை மருதனிள நாகனார்) (மழகளிறு = இளம் ஆண்யானை; பராரை = பருத்த அடிமரம்) இளைய ஆண்யானை உராய்ந்த பருத்த அடியை உடையது வேங்கை மரம். அங்குள்ளது மணற்பரப்பு என்பது இவ்வடிகளின் பொருள்.

மாரி வறப்ப

வரைஓங்கு அருஞ்சுரத்து

(கலித்தொகை-6 :1-2) (மாரி = மழை; வறப்ப = வறண்டுபோக; வரை = மலை; அருஞ்சுரம் = அரிய காடு) 'மழை வறண்டது; உயர்ந்த மலைப் பகுதி சார்ந்த அரிய அக்காட்டில்' என்பது இதன் பொருள்.

தண்ணீர் பெறாஅத் தடு மாற் றருந்துயரம்

கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு

(கலித்தொகை - 6 : 5-6). தண்ணீர் கிடைக்காமையால் நாவை நனைக்கக் கண்ணீர் சிந்த வைக்கும் கொடுமையான காடு என்று முறையில் திரிந்த முல்லை நிலம் இங்குப், பாலை நிலம் ஆகிறது.

வேரொடு மரம் வெம்ப விரிகதிர் தெறு தலின்

(கலித்தொகை-10 : 4) (வெம் ப = கெடும்படி; விரிகதிர் = சூரியன்; தெறுதல் = சுடுதல்) வேரொடு மரம் கெட்டு அழியும்படி சூரியனின் கதிர்கள் சுடும் என்பது இவ்வடி தரும் கருத்து, சூரியன் சுட்டெரிக்கும் கோடை காலமான பெரும் பொழுதும், மதிய நேரமான நண்பகல் என்ற சிறுபொழுதும் இவ்வடியில் உணர்த்தப்படுகின்றன.

வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து

(ஐங்குறு நூறு - 309 :1) 'வேனிற் கால மாதத்தில் கொடிய பாலை வழியைக் கடந்து' என்பது இத்தொடரின் பொருள். வேனிற் காலமான பெரும்பொழுது இத்தொடரில் வெளிப்படுகின்றது.

கருப்பொருள் வெளிப்பாடு

பாலைத் திணையின் கருப்பொருள்கள் சில பாடல்களில் வெளிப்படுவதை இனி அறியலாம்.

மக்கள்

அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே

(ஐங்குறு நூறு - 310 : 4) விடலையே! இவளது ஆராய்ந்த நெற்றியின் அழகை மீட்டல் அரியது என்பது இதன் பொருள்.

விலங்கு

.....செந்நாய் ஏற் றை

(ஐங் குறு நூறு - 397 :1) (செந்நாய் ஏறு = ஆண் செந்நாய்)

வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன

(குறுந்தொகை- 147:1, கோப் பெருஞ் சோழன்) வேனிற் காலத்தில் மலரும் பாதிரியினுடைய வளைந்த மலர் போன்ற என்பது பொருள்.

ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு

(குறுந்தொகை - 124:2 பாலை பாடிய பெருங்கடுங்கோ) (குடியிருந்த ஊர் பாழ்பட்டது போன்ற தோற்றத்தை உடைய ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடு)

கான இருப்பை வேனல் வெண்பூ

(குறுந்தொகை - 329 : 1, ஓதலாந்தையார்) காட்டிலே உள்ள இருப்பை மரத்தினது வேனிற் காலத்தில் மலர்ந்த வெள்ளை மலர்கள் என்பது பொருள்.

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்

(ஐங்குறுநூறு - 311 : 1) வேங்கைப் பூவைப் பறிப்பவர் பஞ்சுரப் பண்ணைப் பாடினாலும் என்பது பொருள்.

உரிப்பொருள் வெளிப்பாடு

பொருள் ஈட்டத் தலைவன் பிரிவதும், அப்பிரிவு தொடர்பான நிகழ்வுகளும் பாலைத் திணைப் பாடல்களின் உரிப்பொருள் ஆக வெளிப்படும். பாலைத் திணையில் அதிகமான பாடல்களைக் கொண்ட இலக்கியம் அகநானூறு என்பதை முன்பு கண்டோம். அகநானூற்றுப் பாடல் கொண்டு உரிப்பொருள் வெளிப்பாடு காண்போம். தலைவன் பொருள் ஈட்டத் தன்னைப் பிரிவான் என்பதைத் தலைவி பிறர் கூறக் கேட்கிறாள்; வருந்துகிறாள். அவன் உன்னைப் பிரியான்' எனக் காரணம் காட்டித் தோழி கூறுகிறாள்.

"பிரிவுத் துயரால் நம்மை அழவிட்டு, வரிப்புலிகள் உலாவுவதும், மேல் காற்றினால் வலிமையான மூங்கில்கள் வளைவதும் ஆன கொடிய காட்டு வழியில் பொருள் தேடுவதற்காகத் தலைவர் பிரிந்து போவார் என்று ஊரார் சொல்வதாகக் கூறும் தலைவியே! நீ பெரிய அறிவிலி!

பாண்டிய மன்னர் அறநெறி நின்று காவல் செய்யும் துறைமுகம் கொற்கை. கொற்கையின் முத்துக்கள் போன்றவை உன் பற்கள். அப்பற்கள் பொருந்திய பவளம் போன்றது நின் வாய். நின் வாய் ஒன்றே அவர் நின்னைப் பிரியாது தடுக்கப் போதுமே.

அதையும் மீறி அவர் செல்ல நினைத்தால் தடுப்பவை எவை தெரியுமா? உன் கண்கள் தாம். போரில் வென்ற வேல் இரத்தம் பட்டுப் புரளுவது போன்றவை மை தீட்டப்பட்ட சிவந்த வரிகள் படர்ந்த நின் கண்கள். அக்கண்களின் மாறுபட்ட பார்வை அவர் உன்னைப் பிரிந்து செல்ல எவ்வாறு விட்டு விடும்? விடாது. ஆதலால் நீ வருந்தாதே". (அகநானூறு 27, மதுரைக் கணக்காயனார்) தலைவியை வருத்தித் தலைவன் பிரிய மாட்டான் என்ற நம்பிக்கையை இங்குத் தோழி வெளிப்படுத்துகிறாள். தலைவன் தலைவியைப் பிரிய இருக்கும் செய்தியைத் தோழியிடம் கூறுகிறான். தோழி "தலைவியும் உடன் வருவாள்” என்கிறாள். தலைவன் காட்டு வழியின் கொடிய இயல்புகளைக் கூறி, “தலைவி வருவது நகைப்பிற்கு உரியது” என்கிறான். வழியில் செல்பவர்க்குத் துன்பத்தைச் செய்வர் மறவர். அவர்களது வண்டியின் சக்கரம் கிழித்து உண்டாக்கிய வழியில் செல்வர் மக்கள்.

சுட்டெரிக்கும் முதுவேனிற் காலம் நீண்டிருக்கும்; மேகங்கள் மழை பெய்யாமல் மேலே உயர்ந்து நீங்கும்; தண்ணீர் அற்ற குளத்தில் தோண்டப்பட்ட குழியில் உண்பதற்கு இயலாத கலங்கிய நீர் கிடக்கும்; ஆண்யானை, அந்த நீரைக் கொண்டு கன்றையுடைய பெண்யானையின் தலையைக் கழுவும்; அதன்பின் எஞ்சி இருக்கும் சேற்றினைத் தன் மீது வீசிக் கொள்ளும்; அதனால் அதன் நிறம் வேறுபடும்; சிவந்த காம்பை உடைய வெண்கடம்ப மலர்க் கொத்துகள் அசைய அம்மரக் கிளையைப் பற்றும் அந்த ஆண் யானை, தன் முதுகை அதில் உராயும்.

அந்த வெண்கடம்பின் வரி நிழலில் மென்மையான தோளை உடைய தலைவி தங்கி, என்னுடன் வருவேன் என்பது சிரிப்ப உண்டாக்குகிறது. (அகநானூறு 121, மதுரை மருதனிளநாகனார்) பிரிவுத் துயரை விட வழிநடைத் துயர் பெரிது எனக் காட்டும் இப்பாடல், பாலைத் திணை உரிப்பொருளின் ஓர் இயல்பைக் காட்டுகிறது. குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பிரிவுத் துயரை விடப் பாலை வழிநடைத் துயரம் பெரிது அன்று எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

ஊர்பாழ்த் தன்ன ஓ மையம் பெருங்காடு

இன்னா என்றர் ஆயின்

இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

(குறுந்தொகை - 124: 2-4, பாலை பாடிய பெருங்கடுங்கோ)

"ஊரே பாழ்பட்டு நிற்பது போன்ற தோற்றத்தைத் தரும் ஓமை மரங்கள் நிறைந்த பெருங்காடு கொடியது என்கிறீர்கள். அவ்வாறாயின் தனித்து இருக்கும் எங்களுக்கு வீடுகள் மட்டும் இனியவை யாகிவிடுமா?" என்று கேட்கிறாள் தோழி. இவ்வாறே நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகைப் பாடல்களிலும் பாலையின் உரிப்பொருள் வெளிப்படுகிறது.

நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ் வாளோ?

(கலித்தொகை - 5 : 15)

என்ற பாடலில் ஒரு வரி மட்டுமே பாலையின் உரிப்பொருளைத் தெளிவாகக் காட்டுவது குறிப்பிடத் தக்கது. நீர் உள்ளவரை மலரும் செழிப்பாக இருக்கும். நீ உள்ளவரை தலைவியும் மகிழ்ச்சியாக இருப்பாள். நீர் இல்லை என்றால் மலர் வாடி வீழ்ந்துவிடும். நீ இவளைப் பிரிந்து விட்டால் இவளும் இறந்து படுவாள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். பாலை பாடிய பெருங்கடுங்கோ பாலைத் திணையின் உரிப்பொருளை இவ்வாறு மிக எளிமையாகச் சொல்லிப் புரிய வைக்கும் திறம் வியந்து போற்றுவதற்கு உரியது.

பாலைத் திணையின் இயல்புகள்

பாலை நிலத்து மக்களின் ஒழுக்கம், பண்பு ஆகியவற்றை நோக்கும் போது பாலையின் சிறப்புகளாகக் குறிக்கப்படுவன பின்வருமாறு:

(1) உடன்போக்கு

(2) நற்றாய் வருந்துதல்

(3) செவிலி மகளைத் தேடிச் செல்லல்

(4) செலவு அழுங்குவித்தல்

(5) தலைவியை ஆற்றுவித்தல்

இவை பாலைத் திணைக்கு உரிய சில அகவாழ்க்கை நிகழ்வுகள் ஆகும். கீழ் வருவன பாலைத் திணைக்கு உரிய புறவாழ்க்கை நிகழ்வுகள் ஆகும்.

(1) கொள்ளை அடித்தல்

(2) அறம் பாராட்டல்

உடன்போக்கு

காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறர்க்குச் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுவது உடன்போக்கு எனப்படும். தலைவனுடன் தலைவி போவதால் இது உடன்போக்கு என்று சொல்லப்படுகிறது. உடன்போக்கு என்பதற்குக் களவுக் காதலர் கற்பு வாழ்க்கை மேற்கொள்ள ஊரை விட்டுச் செல்வது என்று பொருள் கொள்ளலாம். தலைவன் பொருள் ஈட்டச் செல்கிறான். தன்னை அவன் பிரிகிறான் என்பதை உணர்ந்த தலைவி வருந்துகிறாள். தோழி தலைவனிடம் போய்த் "தலைவியையும் உடன் அழைத்துச் செல்” என்கிறாள். அவன் அதற்குச் சரி என்கிறான். தோழி தலைவியிடம் இதனைச் சொல்லத் தொடங்குகிறாள்.

"தோழியே கேள்! தலைவன் பொருள் ஈட்டப் பிரிந்து போவான் என்ற நம் மனத்துன்பம் நீங்கித் தொலைவில் செல்லவிருக்கிறது. தலைவன் செல்லும் வழியில் கூர்மையான பல்லை உடைய பெண் செந்நாய் பசியால் வருந்தும். அதன் பசியைப் போக்க நினைக்கும் ஆண் செந்நாய். அப்போது பெண்மான் ஒன்று ஆண் கலைமானைத் தேடிக் கொண்டிருக்கும். ஆண் செந்நாய், ஆண் கலைமானின் தொடையைச் சிதைக்கும் (கிழிக்கும்). இதைக் கண்டு பெண்மான் அலறும். வெப்பம் மிக்க வழியாக அவ்வழி இருக்கும். ஆறலை கள்வர்கள் (ஆறு + அலை + கள்வர் - வழியில் மறித்துத் துன்புறுத்துகின்ற திருடர்) வழிப்போக்கர் மீது கல்லை எடுத்து எறிவர்.

கிழிசல் ஆடையையும், உலர்ந்த குடையையும் உடைய வழிப்போக்கர் அஞ்சி மரத்தில் ஏறுவர். உணவை வேட்டையாட எண்ணி இனத்திலிருந்து பிரிந்து வந்த பருந்து வானத்தில் பறக்கும் பொழுதை எதிர் நோக்கி அம்மரத்தில் இருக்கும். இத்தன்மையான கடுமையும் கொடுமையும் நிறைந்த காட்டு வழியில் பெரிய தோளையும் குவளை மலர் போன்ற கண்களையும் உடைய இவளும் நம்முடன் வருவாள்” என்று தலைவன் கூறியதாகத் தோழி கூறுகிறாள். (அகநானூறு - 285, காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்)

பாலை நிலம் வெப்பமும், காட்டு விலங்குகள், ஆறலை கள்வர்கள் ஆகியோரின் கொடுமைகளும் நிறைந்ததாயினும், தலைவியின் பிரிவுத் துயருக்கு அஞ்சி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தலைவன் துணிகிறான் என்பதை இப்பாடலில் காண்கிறோம்.

நற்றாய் வருந்துதல்

உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிட்டாள் தலைவி. பிரிவைத் தாங்காமல் மகளை நினைத்துப் புலம்புகிறாள் தாய். தாய் என்பது பெரும்பாலும் செவிலித் தாயைக் குறிக்கும். செவிலித் தாய் என்பவள் வளர்ப்புத் தாய். தாய் என்பது நற்றாயைக் குறிப்பதும் உண்டு. நற்றாய் என்பவள் பெற்ற தாய். உடன்போக்கில் சென்ற மகள் விட்டுச் சென்ற அவள் விளையாடிய பொருள்களைப் பார்க்கிறாள் நற்றாய். கண்கள் கலங்குகின்றன. வாய் புலம்புகிறது.

"நீர் வேட்கை (தாகம்) மிகுந்ததால் யானை வங்கியம் என்னும் இசைக்கருவி போல் துதிக்கையை உயர்த்திப் பிளிறும். அக்கொடிய வழியில் என் மகள் சென்றுவிட்டாள். பந்து, பாவை, கழங்கு என்று அவள் விளையாடிய பொருள்களை விட்டுவிட்டுச் சென்று விட்டாளே. அது ஏன்? நான் அவற்றைக் கண்டு அவளை நினைந்து வருந்தத்தானோ?"

சென்றனள் மன்ற என் மகளே

பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே

(ஐங்குறு நூறு - 377)

(பாவை = பதுமை, பொம்மை; கழங்கு = பெண்கள் விளையாடும் கருவி)

செவிலி மகளைத் தேடிச் செல்லல்

களவு ஒழுக்கத்தில் இடையூறு ஏற்பட்டதால் தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டுச் செல்கிறான். இச்செய்தியைக் கேள்விப்படுகிறாள் செவிலி. அழுது புலம்பியபடி தன் மகளைத் தேடிக் காட்டுவழியில் செல்கிறாள் அவள். மகளைத் தேடிவரும் செவிலி ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர் சிலரை வழியில் காண்கிறாள். அவர்களிடம்,

இவ் இடை

என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்

தம் முளே புணர்ந்த தாம் அற புணர்ச்சியர்

அன்னார் இரு வரைக் காணிரோ? பெரும !

(கலித்தொகை- 9 : 5-8)

என்று கேட்கிறாள்.

"அந்தணர்களே ! என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகனும் மற்றவர் அறியாது தமக்குள் கூடியவர்; இன்று மற்றவர் அறியுமாறு கூடி அவர்கள் சென்றுவிட்டனர். அவர்கள் இருவரையும் இந்தக் காட்டில் கண்டீர்களா?" என்பது இப்பாடல் அடிகளின் பொருள். இவ்வாறு வளர்த்த பாசம் தாளாமல் உடன்போக்கில் சென்ற தன் மகளைத் தேடிச் செல்லும் செவிலித் தாயைப் பாலைத் திணைப் பாடல்களில் காண முடிகிறது.

செலவு அழுங்குவித்தல்

தலைவன் பிரிந்து செல்வதைத் தோழி தன் நாவன்மையால் தடுத்து விடுவதும் உண்டு. செலவு என்றால் பயணம், அழுங்குவித்தல் என்றால் தவிர்த்துவிடல் அல்லது நிறுத்தச் செய்தல் ஆகும். 'பயணம் தவிர்த்து விடல்' என்பதே 'செலவு அழுங்குவித்தல்' என்பதற்குச் சரியான பொருள் ஆகும். தோழி தலைவியின் இளமை தொலைதல் பற்றித் தலைவனிடம் கூறுகிறாள். அவன் பிரிந்து செல்வதைக் கைவிடுகிறான். மலை கடந்து தேடும் பொருள், காடு கடந்து தேடும் பொருள் பொருள் ஆகாது. அருந்ததி போன்ற கற்பினை உடைய தலைவியைப் பிரியாது இருத்தல்தான் உண்மையான பொருள் என்று தலைவனுக்கு உணர்த்துகிறாள் தோழி.

மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ?...

கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ? வடமீன் போல் தொழுது ஏத்த வயங் கிய கற்பினாள்

தடமென் தோள் பிரியாமை பொருள்

(கலித் தொகை 2 : அடிகள் 12, 20, 21, 22)

(கடன் = சுரம்; இறந்து = கடந்து; வடமீன் = அருந்ததி; தொழுது ஏத்த = வணங்கி வாழ்த்தும்படி; வயங்கிய = விளங்கிய; தடமென்தோள் = பெருமையுடைய மென்மையான தோள்கள்)

பாகனின் அங்குசத்தால் குத்தப்பட்டும் அடங்காமல் வேகமாகச் செல்லும் ஆண்யானை யாழ் ஓசை கேட்டு மயங்கி நின்றது. அதைப்போல் தோழியின் மென்மையான பேச்சைக் கேட்டுத் தலைவன் மனம் மாறிப் பயணத்தைத் தவிர்த்து விடுகிறான் என்று வரும் இப்பாடல் கருத்து நினைத்துச் சுவைக்கக் கூடியது.

தலைவியை ஆற்றுவித்தல்

தலைவனின் பிரிவை எண்ணி வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறி அப்பிரிவைத் தாங்கச் செய்வாள் தோழி. இதனை ஆற்றுவித்தல் என்று சொல்வர். குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தோழி தலைவியிடம், 'தலைவர் உன் மீது மிகுந்த அன்புடையவர். ஆகவே விரைந்து வந்து விடுவார்' என்று கூறித் தேற்றுகிறாள்.

நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்

பிடிபசி களை இய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி அவர் சென்ற ஆறே

(குறுந்தொகை -37, பாலை பாடிய பெருங் கடுங்கோ )

(நசை = விருப்பம்; நல் குவர் = அருள் செய்வார்; பிடி = பெண்யானை; களைஇய = நீக்குவதற்காக; வேழம் = ஆண் யானை; யா அம் = யாமரம்; பொளிக்கும் = பட்டையை உரிக்கும்)

"தோழி! தலைவர் உன்மீது மிகுந்த விருப்பம் உடையவர்; அவர் சென்ற வழியில் பெண்யானையின் பசியைப் போக்க ஆண்யானை யாமரத்தின் பட்டையை உரித்துக் கொண்டிருக்கும் அன்பான காட்சியைப் பார்ப்பார்; அதனைப் பார்த்ததும் உன்னை நினைத்து உடனே திரும்புவார்" என்பது தோழியின் ஆறுதல் கூற்று.

கொள்ளை அடித்தல்

பாலைத் திணை பிரிவைக் குறிக்கும் திணை. பிரிவு தலைவி - தலைவன் இருவர்க்குமே வருத்தம் தருவது. அவ்வருத்தத்திற்கு ஏற்ற பின்னணி யாகவே வறண்ட காடு, மழையின்மை, வெயில் கொடுமை, விலங்குகளால் வரும் கொடுமை, ஆறலை கள்வர்களால் வரும் துன்பம் ஆகியன காட்டப்படுகின்றன. வழிப்பறி, கொள்ளை எல்லா இடத்தும், எல்லாக் காலத்தும் உள்ளனவே.

ஆயினும் பிரிவுத் துயருக்குப் பின்னணியாகக் காட்டவே இவை பாலைத் திணைப் பாடல்களில் பேசப்படுகின்றன. கொடிய காட்டு வழியில் அலைந்து அங்கு வரும் பிறரது உடைமைகளைக் கொள்ளை அடித்து வாழ்வர் ஆறலை கள்வர்கள். ஆறலை கள்வர் அல்லது கள்வரைப் பற்றிப் பல பாலைப் பாடல்கள் கூறுகின்றன.

ஆறலை கள்வர் வழியில் செல்பவரை வருத்துபவர்கள்; அவர்தம் பொருளைக் கவர்பவர்கள்; அப்பொருள் கொண்டு உண்பவர்கள்; பயிர்த் தொழில் முதலியவற்றைச் செய்து உண்ண விரும்ப மாட்டார்கள்; மழையை விரும்ப மாட்டார்கள்; கொள்ளை அடித்திடக் காட்டு வழிகளை விரும்புபவர்கள், வில்லாகிய ஏரால் பிறர் உடலில் உழுபவர்கள்.

கான் உயர் மருங்கில் கவலை அல்லது.

வானம் வேண்டா வில் ஏர் உழவர்

பெருநாள் வேட்டம் கிளை எழ வாய்த்த

பொரு களத்து ஒழிந்த குருதி

(அகநானூறு - 193: 14, மதுரை மருதனிள நாகனார்)

(கான் = காடு; மருங்கில் = பக்கத்தில்; கவலை = வழி; வானம் வேண்டா = மழையை விரும்பாத; வேட்டம் = வேட்டை; பொருகளம் = போரிடும் இடம்; கிளை = சுற்றம்)

"உயரமான காட்டில் உள்ள கிளை பிரிந்த வழிகளைத் தவிர மழையை விரும்பாத, வில்லாகிய ஏரால் உழும் ஆறலை கள்வர் சுற்றத்துடன் புறப்பட்டுச் சென்றபோது கிடைத்தது நல்ல வேட்டை. அவ்வேட்டையில் வழிச் செல்பவரோடு போரிடுகிறார்கள். அப்போது வழிச்செல்பவரின் உடலில் இருந்து இரத்தம் சிந்துகின்றது" என்று ஆறலை கள்வரின் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை பற்றி இப்பாடல் அடிகள் கூறுகின்றன.

அறம் பாராட்டல்

தலைவன் பொருள் தேடிப் பிரிவதைச் சொல்வது பாலைத் திணை. பொருள் எதற்கு? இல்லாதவர்க்குக் கொடுப்பதாகிய அறம் செய்வதற்கு. ஆகவே பாலைத் திணைப் பாடல்களில் தலைவனின் பொருள் தேடும் முயற்சியைச் சொல்லும் போது, பொருளால் செய்ய வேண்டிய அறம் பற்றிப் புலவர்கள் எடுத்துரைப்பதைக் காணலாம். பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடல்கள் பலவற்றில் உலக வாழ்க்கையின் நல்லறங்களை எடுத்துரைக்கும் இயல்பினைக் காண முடிகிறது.

• வினையே உயிர்

தொழிலை உயிராகக் கருதுபவர் ஆண்கள். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு உயிர் அவர்தம் காதலரே. பாலை பாடிய பெருங்கடுங்கோவின் குறுந்தொகைப் பாடலில் இக்கருத்தைக் காணலாம்.

வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்

மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

(குறுந்தொகை - 135 :1-2)

(வாள் நுதல் = ஒளி பொருந்திய நெற்றி; மனைஉறை = இல்லத்தில் வாழும்)

* ஈயாமை

சேர்த்து வைத்த பொருளைத் தன்னை நாடி வந்து இரப்பவர்க்குக் கொடுத்து வாழ்வதுதான் சிறந்தது. இரப்பவர்க்குக் கொடுக்காது (ஈயாது) வாழ்வது இழிவு ஆகும். இக்கருத்தைக் குறுந்தொகைப் பாடலில் பாலைபாடிய பெருங்கடுங்கோ சுவையாக வெளிப்படுத்துகிறார். தலைவன் பிரியப்போகின்றான் என நினைக்கிறாள் தலைவி. அவள் அச்சம் நீக்குகின்றான் தலைவன். "உன்னைப் பிரிந்து சென்று நான் நீண்ட நாள் தங்கி விட்டால், இரப்போர் என்னிடம் வாராத நாள்கள் பல ஆகட்டும்" என்று கூறுகிறான் அவன்.

இரவலர்க்கு வழங்க வேண்டும் என்றால் அவர்கள் வழங்குபவரை நாடி வரவேண்டும். அவர்கள் வராமல் பொருள் வழங்கும் ஒருவனை ஒதுக்கிவிட்டால் அது கொடுமையானது. தலைவியைப் பிரிந்தால் இரப்போர்க்கு வழங்கும் அறநெறி தனக்கு இல்லாமல் போகட்டும் என்பது தலைவனின் கருத்து. (குறுந்தொகை - 137)

இல்என இரந்தார்க்கு ஒன்று ஈயாமை இழிவு

(கலித்தொகை-2 : 15)

எனக் கலித்தொகையில் இவர் காட்டுவதும் இங்குக் கருதத்தக்கது.

• பொருள் தேடல்

பொருள் தேடும் நேர்மையான முறையில் இருந்து நீங்கிப் பொருள் தேடக்கூடாது. அப்படித் தேடிய பொருள் அவரை விட்டு நீங்கும். இப்பிறவி மட்டுமின்றி, மறுபிறவியிலும் அப்பொருள் அவர்க்குப் பகையாகும் என்கிறது கலித்தொகைப் பாடல் ஒன்று

செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு

அப்பொருள்

இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ

(கலித்தொகை-14 :14-15)

(செம்மை யின் இகந்து ஒரீஇ = நேர்வழியில் இருந்து நீங்கி)

எனவே நேர்மையாகப் பொருள் தேடவேண்டும் என்ற அறம் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

• வாழ்க்கை நடத்தல்

குறிப்பிட்ட பருவம் வரை பெற்றோர்க்கு உரியவள் பெண். உரிய பருவம் வந்தபோது நல்ல ஆணைத் துணையாகக் கொண்டு அவனோடு சென்று இல்லறம் நடத்துவது நல்லறமே ஆகும். இக்கருத்தை,

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன் மின்

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே

(கலித்தொகை - 9 : 23-24)

(இறந்த = மிகுந்த; எவ்வம் - வருத்தம்; படரன் மின் = செய்யாதீர்கள்; வழிபடீ இ = வழிபட்டு; அறம் தலைபிரியா = அறத்தினின்று தவறாத; ஆறு = வழி; மற்று = பொருள் அற்ற அசைச்சொல்)

உடன்போக்கில் சென்று விட்ட தலைவியைத் துன்புறுத்தாதீர் எனச் செவிலியிடம் அறவோர் கூறும்போது இல்லறமே சிறந்த அறம் என இவ்வாறு எடுத்துரைக்கின்றனர்.

இலக்கிய நயங்கள்

பாலைத் திணைப் பாடல்களில் அமைந்துள்ள கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களை இப்பகுதியில் அறியலாம்.

கற்பனை

இல்வாழ்க்கை எத்தகையது என்பதைக் கற்பனைச் சித்திரம் வரைந்து தெளிவுபடுத்துகிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ. செல்வத்தைத் தேடிப் பிரிவதை விட வறுமையிலும், இளமையும் காதலும் ஒரு சேர வாழ்வதே வாழ்க்கை என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். வாழும் நாளெல்லாம் இல்லத்தே இருந்து இருவரும் தத்தம் ஒரு கை கொண்டு தழுவி, ஒரே ஆடையைக் கிழித்து இருவரும் உடுத்துக் கொள்ளும் வறுமை மிக்க வாழ்க்கையாய் இருந்தாலும், பிரியாது உள்ளம் ஒன்றி வாழ்வதே வாழ்க்கை. பொருளைத் தேடிக் கொண்டு வரலாம்; சென்று போன இளமையைத் தேடிக் கொண்டுவர முடியுமா?

உள் நாள்

ஒரோஒகை தம் முள் தழீஇ, ஒரோஒகை

ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ

சென்ற இளமை தரற்கு

(கலித்தொகை -18 : 8-12)

(ஒரோ ஒகை = ஒரு கை; தழீஇ = தழுவி; ஒன்றினார் = இணைந்தவர்; தரற் கு . = கொண்டு வருவதற்கு)

உடன்போக்காய்த் தலைவனுடன் சென்ற தன் மகளைத் தேடி வருகிறாள் செவிலி. 'அவர்கள் இருவரையும் கண்டீர்களா? எனக் கேட்கும் அவளுக்கு அந்தணர்கள் 'கண்டோம்' எனப் பதில் தருகின்றனர்; தலைவி சிறந்த ஓர் ஆண்மகனைக் கணவனாக வழிபட்டு அவனுடன் சென்றது நியாயமே எனக் கூறுகின்றனர். பெற்றோர்க்கும் மகளுக்கும் உண்டான சொந்தம் எத்தகையது என்பதை அருமையான கற்பனை கொண்டு தெளிவு படுத்துகின்றனர்.

பல உறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?

நினையுங் கால் நும் மகள் நுமக்கும் ஆங் கு அனையளே;

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும் ?

தேருங் கால் நும் மகள் நு மக்கும் ஆங் கு அனையளே;

ஏழ்புணர் இன்னிசை முரல் பவர்க்கு அல்லதை

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?

சூழுங் கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

(கலித்தொகை -9 :12-20)

(பலவுறு = பல நறுமணப் பொருள்களும் கலந்த; படுப்பவர்க்கு = அணிபவர்க்கு; சாந்தம் - சந்தனம்; முத்தம் = முத்து; நீர் = கடல்; ஏழ் புணர் இன்னிசை = ஏழு நரம்பால் எழுப்பப்படும் இன்னிசை; முரல் பவர் = மீட்டுபவர்)

குறிப்பிட்ட காலம் வரை மலைக்கும், கடலுக்கும், யாழுக்கும் (வீணைக்கும்) சொந்தமானவை சந்தனம், முத்து, இசை ஆகியன. பின்னர் அவை பூசுபவர்க்கும், அணிபவர்க்கும், மீட்டுபவர்க்கும் அல்லவா சொந்தமாகின்றன? அதுபோல் ஆராய்ந்து பார்த்தால் உன் மகள் குறிப்பிட்ட பருவம் வரைதான் உனக்கு உரியவள்; அதன்பின் அவள் காதலுக்குரிய காதலனுக்குத்தான் உரியவள் என்பதைப் பக்குவமாகச் சொல்ல இக்கற்பனை பயன்படுகிறது.

சொல்லாட்சி

வேற்று நாட்டுக்குச் சென்று பொருள் தேட நினைக்கிறது தலைவனின் நெஞ்சம். அந்நெஞ்சத்திற்குப் பிரிவுத் துயரைக் கூறுகிறான் அவன். அப்போது இலம், மணத்தல், தணத்தல் என்ற சொற்களைக் கொண்டு ஒரு சொல்லோவியம் தீட்டுகிறான்.

பணைத்தோள்

மணத்தலும் தணத்தலும் இலமே

பிரியின் வாழ்தல் அதனினும் இலமே

(குறுந்தொகை-168 : 5-7,சிறைக்குடி ஆந்தை யார்)

(பணை = பருத்த; மணத்தல் = பொருந்துதல் ; தணத்தல் = பிரிதல்)

"என்றும் ஒன்றுபட்டு இருப்பதால் பருத்த தோள்களை உடைய தலைவியைப் பொருந்துதலும், பிரிதலும் இல்லை. இன்று அவளை விட்டுப் பிரிந்து சென்றால் பிரிவுத்துயர் என்னைக் கொன்று விடும். அதனால் உயிர் வாழ்தல் என்பது உறுதியாக இல்லை” என்பது தலைவனின் உள்ளக் கருத்தாகிறது. ஒன்றியிருக்கும் நிலையை 'மணத்தலும் தணத்தலும் இல்லை' எனக் குறிப்பிடும் அழகிய சொல்லாட்சி போற்றத் தக்கது.

தலைவன் பிரிந்து செல்லும் வழியில் ஆறு அலை கள்வர் விடுத்த கூர்மையான அம்புகள் வழிச்செல்வோர் உடலில் தைக்கும். அதனால் துன்புறும் அவர்கள் நா உலர்ந்து வாடுவர். தண்ணீர் கிடைப்பதில்லை. அவர் விடும் கண்ணீர்தான் அவர்தம் நீர்த் தாகத்தைத் தணிக்கும். இதைக் கூறும் கலித்தொகைப் பாடலில் தண்ணீர், கண்ணீர் என்ற சொற்கள் நயம் சேர்க்கின்றன.

தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்

கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு

(கலித் தொகை 6 : 5-6)

உவமை

பிற அகத்திணைப் பாடல்களில் உள்ளது போல் பாலைத் திணைப் பாடல்களிலும் உவமைகள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. வெள்ளை ஆடை விரித்தது போன்ற வெயில் என்று வெயிலின் வெள்ளை ஒளிக்கு வெண்ணிற ஆடையை உவமை ஆக்குகிறது நற்றிணைப் பாடல்.

துகில் விரித் தன்ன வெயில்

(நற்றிணை -43 :1, எயினந்தை யார்)

இதே பாடலில் 'நீ பிரிந்தால் பசலை நோய் தலைவியின் அழகைத் தின்னும்' என்று தலைவனிடம் சொல்ல வரும் தோழி கையாளும் உவமை நயம் தருகின்றது.

பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்

களையு நர்க் காணாது கலங் கிய உடைம்தில்

ஓர்எயில் மன்னன் போல

அழிவுவந் தன்று (9-12)

யானைப் படையை உடைய பகைமன்னன் மதில் புறத்து வந்து தங்குகிறான். உடைந்த ஒரே மதிலை உடைய அரசன் தனக்கு வந்த துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் கலக்கம் கொள்கிறான். அது போலத் தலைவியின் அழகுக்கு அழிவு வந்துவிட்டது. அதைப் போக்க யாரும் இல்லை என்பது இப்பாடல் அடிகள் தரும் பொருள் ஆகும். பாலை நிலத்தில் மரம் வெம்பியதைச் சொல்லும் போது ஆளப்படும் உவமை அழகுணர்ச்சியுடன் அறம் உணர்த்துகிறது.

வறியவன் இளமை போல் வாடிய சினைய வாய்ச்

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி

(கலித்தொகை-10 : 1-2)

வறுமை உடையவனுடைய இளமைபோலத் தளிர்கள் வாடிய கொம்பை உடையன அந்த மரங்கள். பிறர்க்குக் கொடுக்க மனம் இல்லாதவனின் செல்வம் தன்னைச் சேர்ந்தவர்க்குப் பயன் தராதது போல ஞாயிற்றின் கதிர்கள் சுட நிழல் தராமல் வேரோடு கெடுகின்றன அம் மரங்கள். இவ்வாறு பல்வேறு உவமைகள் பாலைத் திணைப் பாடல்களுக்குச் சுவை ஊட்டுகின்றன.

உள்ளுறை

ஆலம்பேரி சாத்தனாரின் அகநானூற்றுப் பாடலில் தலைவியின் ஆற்றாமையை எடுத்துச் சொல்கிறாள் தோழி தலைவனிடம். "கதிரவன் காய்வதால் வாடிய தேக்கு இலையைக் கோடைக் காற்று உதிர்க்கும்” என்று அவள் கூறுகிறாள். "முன்பே உன் சொல்லால் வாட்டம் அடைந்திருக்கும் தலைவி, நீ பிரிந்து போய்விட்டால் இறந்து விடுவாள்” என்பதை இது உள்ளுறையாக உணர்த்துகிறது. (அகநானூறு -143:2-5) இவ்வாறு பாலைத் திணைப் பாடல்களில் அவ்வப்போது உள்ளுறை அமைந்து நயம் தருகின்றது.

தொகுப்புரை

பாலைத் திணையின் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது. இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படும் முறை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

உடன்போக்கு, செலவு அழுங்குவித்தல், நற்றாய் வருந்துதல், செவிலி மகளைத் தேடிச் செல்லல், தலைவியை ஆற்றுவித்தல் போன்ற அக நிகழ்வுகளையும், கொள்ளை அடித்தல், அறம் பாராட்டல் போன்ற பிற இயல்புகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.

பாலைத்திணைப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து சுவைக்க முடிந்தது.

கேள்வி பதில்கள்

1) ஐங்குறுநூற்றில் பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?

விடை : ஓதலாந்தையார்

2) அகநானூற்றில் உள்ள பாலைத் திணைப் பாடல்களின் எண்ணிக்கையைக் கூறுக.

விடை : இருநூறு பாடல்கள்.

3) பாலைக் கலி பாடியவர் யார்?

விடை : பாலை பாடிய பெருங்கடுங்கோ.

4) எந்த நிலங்கள் பாலை நிலமாக மாறும்?

விடை : முல்லை, குறிஞ்சி நிலங்கள்.

5) பாலைத் திணைக்கு உரிய சிறுபொழுது யாது?

விடை : நண்பகல்.

6) பாலைத் திணைக்கு உரிய பறவைகள் எவை?

விடை : கழுகு, பருந்து.

7) பாலைத் திணையின் உரிப்பொருள் யாது?

விடை : பிரிதலும் பிரிதல் தொடர்பான நிகழ்வுகளும்.

8) பாலை நிலப்பூவான பாதிரி, பாடலில் வெளிப்படுவதற்கு ஒரு சான்று தருக.

விடை : 'வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன' (குறுந்தொகை - 147).

9) எவை தலைவனின் பிரிவு எண்ணத்தைத் தடுக்கும் என்று தோழி கூறுகிறாள்?

விடை : தலைவியின் வாயும் கண்களும்.

10) "நகைப்பிற்கு உரியது" என்று தலைவன் எதைக் கூறுகிறான்?

விடை : தலைவி தன்னுடன் கொடிய பாலை வழியில் வர விரும்புவதை.

11) "நீர் நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ?" - யார் யாரைப் பற்றி யாரிடம் கூறியது?

விடை : தோழி தலைவியைப் பற்றித் தலைவனிடம் கூறியது.

12) உடன்போக்கு என்றால் என்ன?

விடை : காதல் கொண்ட தலைவனுடன் தலைவி பிறருக்குத் தெரியாமல் சென்று விடுவது.

13) வழிப்போக்கர் மீது கல்லை எறிபவர் யார்?

விடை : ஆறலை கள்வர்.

14) 'செலவு அழுங்குவித்தல்' என்பதன் பொருள் யாது?

விடை : பயணம் தவிர்க்கச் செய்தல்.

15) உண்மையான பொருள் எனத் தோழி கூறுவது யாது?

விடை : தலைவியைப் பிரியாது இருத்தல்.

16) "தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்" என்று செவிலி யாரைக் குறிப்பிடுகின்றாள்?

விடை : தன் மகளையும், பிறள் மகன் ஒருவனையும். (தலைவியையும் - தலைவனையும்)

17) ஆடவர்க்கு உயிர் எது?

விடை : வினை (தொழில்)

18) இழிவு என்பது எது?

விடை : இரந்தவர்க்கு ஈயாமை.

ஆசிரியர் : முனைவர். நா. இளங்கோவன்

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

3.02702702703
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top