பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மருதத் திணைப் பாடல்கள்

மருதத் திணைப் பாடல்களைப் பற்றி அறியலாம். வயல்கள் (நன்செய் நிலம்) நிறைந்த பகுதியில் மக்களின் வாழ்க்கை முறைகளையும், சிறப்புகளையும் அறிய இப்பகுதி துணை புரியும்.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள மருதத் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது. மருதத் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது. மருதத் திணை உரிப்பொருளாகிய ஒழுக்கத்தின் முக்கிய இயல்புகளை எடுத்துரைக்கிறது. மருத நில மக்களின் சிறப்பியல்புகளை இப்பகுதி விளக்குகிறது. கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களையும் இப்பகுதி விளக்குகிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

* மருதத் திணைக்கு உரிய முப்பொருள்களை அறியலாம்.

* மருதத் திணையில் முப்பொருள் வெளிப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம் உணரலாம்.

* மருதத் திணைத் தலைமக்களின் ஒழுக்கங்களான பரத்தமை ஒழுக்கம், வாயில் மறுத்தல், புதுப்புனலாடல், ஊடல் தணிவித்தல், பிள்ளைத்தாலி அணிதல் ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

* மருதத் திணைப் பாடல்களில் காணப்படும் இலக்கிய நயங்களான கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை பற்றி அறியலாம்.

மருதப் புலவர்கள்

மருதத் திணையில் பல புலவர்கள் பாடல்களைப் படைத்துள்ளனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய அகநூல்களில் பல பாடல்கள் மருதத் திணையில் பாடப்பெற்றுள்ளன. மருதன் இளநாகனார், ஓரம்போகியார் ஆகிய இரு புலவர்களும் மருதம் பாடுவதில் வல்லவர்கள். ஐங்குறுநூற்றில் மருதப்பாடல்களை ஓரம்போகியார் பாடியுள்ளார். கலித்தொகையில் மருதக்கலிப் பாடல்களை மருதன் இளநாகனார் பாடியுள்ளார்.

ஐங்குறுநூற்றில் நூறு பாடல்கள், கலித்தொகையில் முப்பத்தைந்து பாடல்கள், அகநானூற்றில் நாற்பது பாடல்கள் மருதத்திணைப் பாடல்களாகும். இப்பகுதியில் ஐங்குறு நூற்றின் மருதப் பாடல்களோ, கருத்துகளோ குறிக்கப்படும் போது பாடியவர் ஒரே புலவர் (ஓரம்போகியார்) என்பதால், பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை. அதைப்போல் மருதக் கலிப்பாடல்களைப் பாடிய மருதன் இளநாகனார் பெயரும் கலித்தொகைப் பாடல்களையோ, கருத்துகளையோ அடுத்துக் குறிப்பிடப்படவில்லை .

மருதத் திணையின் முப்பொருள்கள்

முதற்பொருள் என்பன நிலமும் பொழுதும்; கருப்பொருள், தெய்வம், மக்கள், விலங்கு மற்றும் இயற்கைப் பொருள்கள்; உரிப்பொருள் நிலத்திற்குரிய மக்களின் ஒழுக்கம். இவற்றைச் சென்ற பாடங்களில் அறிந்தீர்கள். மருதத் திணைக்கு உரிய முப்பொருள்களையும் இப்பகுதியில் அறியலாம்.

முதற் பொருள்

மருதத் திணைக்கு உரிய நிலம் வயலும், வயலைச் சார்ந்த பகுதியும் ஆகும். மழைக்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற் காலம் ஆகிய ஆறு காலங்களுமே மருதத் திணைக்கு உரிய பெரும்பொழுது ஆகும். இவ்வாறு ஆண்டு முழுவதுமே மருதத்தின் பெரும்பொழுது ஆகின்றது. அதிகாலை இரண்டு மணி முதல் காலை ஆறு மணிவரை உள்ள நேரத்தை வைகறை என்று கூறுவர். வைகறை நேரம்தான் மருதத்திணைக்கு உரிய சிறுபொழுது ஆகும்.

கருப்பொருள்

மருதத்திணைக்கு உரிய கருப்பொருள்களை இனி அறியலாம்.

தெய்வம் : இந்திரன்

மக்கள் : ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்

பறவை : நாரை, நீர்க்கோழி, அன்னம், குருகு

விலங்கு : எருமை, நீர்நாய்

ஊர் : பேரூர், மூதூர்

நீர் : ஆறு, மனைக்கிணறு, பொய்கை

பூ : தாமரை, குவளை, கழுநீர்ப்பூ

மரம் ; மருதம், காஞ்சி, வஞ்சி

உணவு : செந்நெல், வெண்ணெல்

பறை : மணமுழா, நெல்லரிகிணை

பண் : மருதப்பண்

யாழ் : மருதயாழ்

தொழில் : நெல்லரிதல், கடாவிடுதல், குளத்திலும் ஆற்றிலும் புனலாடல்

உரிப்பொருள்

ஊடலும், ஊடல் தொடர்பான நிகழ்வுகளும் மருதத் திணைக்கு உரிய உரிப்பொருள் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சிறு கோபத்தைத்தான் ஊடல் என்று சொல்கிறோம். ஊடல் என்பதைப் புலவி என்றும் சொல்லலாம். மருதத் தலைவன் பொருட் பெண்டிர் என்று அழைக்கப்படும் பரத்தையரை நாடிச் செல்வான். பின் தன் வீட்டிற்கு அவன் வரும்போது தலைவி அவன்மீது ஊடல் கொள்வாள். இத்தகு ஊடல், ஊடல் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் மருதத்திணைப் பாடல்களில் இடம்பெறும்.

முப்பொருள் வெளிப்பாடு

சென்ற பாடங்களில் அறிந்ததைப் போல், இப்பாடத்தில் மருதத் திணைப் பாடல்களில் முதல், கரு, உரிப் பொருள்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை அறியலாம்.

முதற் பொருள் வெளிப்பாடு

வாழி ஆதன் வாழி யவினி

விளைக வயலே (ஐங் குறு நூறு - 2: 1-2)

(ஆதன் அவினி = சேரமன்னருள் ஒருவன்)

தோழி தலைவனிடம் கூறும் கூற்று இது. தலைவனின் நட்பு நாள்தோறும் பெருக வேண்டும் என்று கூறவரும் தோழி, ஆதன் அவினியை முதலில் வாழ்த்துகிறாள். பின்னர் 'விளைக வயலே' என வாழ்த்துகிறாள். இவ்வாழ்த்தில் மருதத்தின் முதற்பொருளாகிய நிலம் வெளிப்படுகின்றது. மருதநிலப் பகுதி வயல், கழனி என்று அழைக்கப்படுகின்றது. இப்பாடலில் வயல் என்ற சொல் மருத நிலப்பகுதியைக் குறிக்கிறது.

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்

கழனி ஊரன்

(ஐங்குறு நூறு - 4 : 4-5)

(கழனி = வயல்)

பூத்துப் பயன்படாத கரும்பையும், காய்த்துப் பயன்படும் நெல்லையும் உடைய வயல்வளம் மிகுந்த ஊரினை உடையவன் என்பது இதன் பொருள். மருதத் திணையின் பெரும்பொழுது ஆறு பருவங்களும் என்பதால் ஆண்டின் பன்னிரு மாதங்களும் மருதத்திற்கு உரியனவாகக் கருதப்படுகின்றன. ஆதலால் பெரும்பொழுதை மருதப் பாடல்களில் தேட வேண்டியதில்லை. பல பாடல்களில் புதுவெள்ளம் பெருகிவரும் மழைக்காலம் குறிக்கப்படுகின்றது.

நல மிகு புதுப் புனல் ஆடக் கண்டோர்

(ஐங் குறு நூறு - பாடல் 64 : அடி -2)

பெரும் புனல் வந்த இருந்துறை விரும்பி

(குறுந்தொகை - 80 : 2, ஒளவையார்)

(இரும் துறை = பெரும் நீர்த்துறை)

மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது வைகறை. அதிகாலை அல்லது விடியல் நேரத்தைத்தான் வைகறை என்று சொல்வர். ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் விடியற்பொழுது குறிக்கப்படுவதைக் காணலாம்.

பரத்தை தலைவியைப் புறம் கூறினாள். ஆனால் தலைவிதான் தன்னைப் புறம் கூறியதாக அவள் பிறர்க்குக் கூறினாள். அதனைக் கேட்ட தலைவி, தான் அடங்கியது போல் பரத்தை அடக்கத்தைக் கொள்ளவில்லை என்று தலைவனிடம் கூறுகிறாள் 'இருள் சரியாகப் புலராத வைகறை (அதிகாலைப் பொழுதில் ஆம்பல், தாமரை போலத் தோற்றம் தரும் ஊரையுடைய தலைவனே' என அவனை அழைக்கிறாள்.

கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல்

தாமரை போல மலரும் ஊர !

(ஐங்குறு நூறு - 68 : 1-2) (கணைக்கால் = திரண்ட தண்டு; கன்னி விடியல் = மிக்க இளமையான, சரியாகப் புலராத காலைப் பொழுது)

சிறப்பற்ற ஆம்பல் தாமரை போலத் தோன்றுகிறது என்பதில் பரத்தை, தலைவியைப் போலத் தோன்றுகிறாள் என்ற உட்பொருளை உணர முடிகிறது.

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே

(குறுந் தொகை - 157 : 4, அள்ளூர் நன்முல் லை யார்)

என்பதில் வைகறை, தலைவனைத் தன்னிடமிருந்து பிரிக்க வந்துவிட்டது எனத்தலைவி வருந்துவதைத் தெரிவிக்கிறது.

கருப்பொருள் வெளிப்பாடு

மருதத் திணைக்கு உரிய கருப்பொருள்கள் பாடல்களில் வெளிப்படும் முறையைச் சில சான்றுகள் கொண்டு அறியலாம்.

தெய்வம் - இந்திரன்

இந்திர விழ வில் பூவின் அன்ன

(ஐங்குறு நூறு - 62 :1) (இந்திர விழவில் = இந்திரனுக்குச் செய்யப்படும் விழாவில், பூவின் அன்ன = பூவைப் போன்ற)

மக்கள் - மகிழ்நன், ஊரன், உழவர்

எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின்தேரே!

(ஐங்குறு நூறு - 62 : 4) (நின்றன்று = நின்றது)

கலிமகிழ் ஊரன்

(அகநானூறு - 146 :5, உவர்க்கண்ணூர்ப் புல்லங் கீரனார்) (கலி = ஆரவாரம்)

வித்திய உழவர் நெல்லொடு பெயரும்

(ஐங்குறு நூறு - 3:4) (வித்திய = விதைத்த)

பறவை - நாரை, நீர்க்கோழி

கயலார் நாரை போர்வில் சேக்கும்

(ஐங்குறு நூறு - 9:4) (கயலார் = மீனை உண்ணும்; போர்வு = நெற்போர்; சேக்கும் = தங்கும்)

நீருறை கோழி நீலச் சேவல்

(ஐங்குறு நூறு - 51 : 1) (உறை = தங்கும்)

விலங்கு - எருமை

மருதத் திணைக்கு உரிய விலங்கான எருமையை மையமாக்கி எருமைப் பத்து என்ற தலைப்பில் ஐங்குறுநூற்றில் பத்துப்பாடல்கள் உள்ளன.

கருங் கோட்டு எருமை

(ஐங்குறு நூறு - 92 :1) (கோடு = கொம்பு)

ஊர் - மூதூர்

ஆதி அரு மன் மூதூர் அன்ன

(குறுந்தொகை - 293 ; 4, கள்ளில் ஆத்திரையன்) (ஆதி = பழைமையான; அருமன் = அருமன் என்பவனுடைய)

நீர் - பொய்கை

ஊர்க்கும் அணித்தே பொய்கை

(குறுந்தொகை - 113 :1, மாதிரத்தன்) (அணித்து = அருகில்)

பூ - தாமரை, ஆம்பல்

ஆம்பல்

தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை ஊரன்

(நற்றிணை - 300 : 3-4, பரணர்) (இறைஞ்சும் = எதிரில் சாயும்; தண்துறை = குளிர்ச்சி பொருந்திய நீர்த்துறை)

மரம் - காஞ்சி, மருதம்

காஞ்சி நீழல், தமர்வளம் பாடி

(அகநானூறு - 286 : 4, ஓரம்போகியார்) (நீழல் = நிழல்; தமர் = தம் சுற்றத்தார்)

மருது உயர்ந்து ஓங் கிய விரிபூம் பெருந்துறை

(ஐங்குறு நூறு - 33 : 2) (மருது = மருதமரம்; விரி = பரந்த; பூம் = அழகான)

உணவு - நெல்

செந்நெல் அம் செறு விற் கதிர்கொண்டு

(ஐங்குறு நூறு - 27 : 1) (அஞ்செறு = அழகிய வயல்)

இவை போன்றே பிற கருப்பொருள்களும் மருதத் திணைப் பாடல்களில் வெளிப்படுகின்றன.

உரிப்பொருள் வெளிப்பாடு

மருதத்திணையின் உரிப்பொருள் ஊடலும், ஊடல் தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். பரத்தையை நாடித் தலைவன் செல்வதே தலைவி தலைவனிடம் கொள்ளும் ஊடலுக்குக் காரணமாகும்.

தலைவி வாயில் மறுத்தல்

பரத்தை உறவால் தலைவியைப் பிரிந்து சென்றான் தலைவன். மீண்டும் வந்தவன் தோழியிடம் தலைவியை அமைதிப்படுத்தச் சொல்கிறான். தன்னிடம் வாயிலாக வந்த (தூது வந்த) தோழிக்குத் தலைவி மறுப்பு உரையாகச் சொல்கிறாள்.

நோம் என் நெஞ்சே ! நோம் என் நெஞ்சே!

புன்புலத்து அமன்ற சிறயிலை நெருஞ் சிக்

கட்கு இன் புது மலர் முட்ப யந் தாங்கு

இனிய செய்த நம் காதலர்

இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே!

(குறுந்தொகை - 202 : அள் ளூர் நன்முல் லை) (நோம் = நோகும் (வருந்தும்); புன்புலம் = சிறியநிலம்; அமன்ற = நெருங்கி முளைத்த; கட்குஇன் = கண்ணுக்கு இனிய, பயந்தாங்கு = தந்தது போல)

"தோழி ! என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது. சிறிய நிலத்தில் நெருங்கி முளைத்த சிறிய இலைகளை உடைய நெருஞ்சியின் புதுமலர், முதலில் பார்வைக்கு இனியதாகத் தோன்றும்; பின்னர் முட்களைத் தந்து துன்பம் விளைவிக்கும். அதுபோல் தலைவர் முன்பு நமக்கு இனியன செய்தார். இப்போது பரத்தையிடம் சென்று நமக்குத் துன்பம் விளைவிக்கிறார். அதனை நினைத்து என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது." - என்பது இப்பாடலின் பொருள் ஆகும். இனிய, இன்னார் என்ற முரண்பட்ட சொற்களால் தலைவன் உள்ளம் காலப் போக்கில் மாறுபட்டு விட்டதைச் சொல்கிறாள் தலைவி. இச்சொற்கள் அவளது வருத்தத்தை மட்டும் காட்டாமல் அவள் கொண்ட ஊடலைக் காட்டவும் பயன்படுகின்றன. தலைவனுக்கு வாயிலாக (தூதாக) வந்த தோழியிடம் தலைவி வாயில் மறுத்துக் கூறிய உரிப்பொருள் இப்பாடலில் அமைந்துள்ளது.

ஊடலுக்கு மற்றுமொரு காரணம்

பரத்தையிடம் சென்ற தலைவன் தன் வீட்டிற்குத் திரும்ப நினைக்கிறான். தலைவியின் ஊடலுக்கு அஞ்சிப் பாணனைத் தூது விடுகின்றான். தூதினால் பயனில்லை. தோழி தலைவியிடம் 'இனி அவன் வந்தால் ஊடல் கொள்ளாதே' எனச் சொல்கிறாள். தான் ஊடல் கொண்டதற்கான காரணத்தைத் தலைவி கூறத் தொடங்குகிறாள்.

தண்துறை ஊரன் தண்டாப் பரத்தைமை

புலவாய் என்ற தோழி ! புலக்கு வென்...

என்

நளிமனை நல் விருந்து அயரும்

கைதூ இன்மை யான் எய்தா மாறே

(நற்றிணை - 280 : 4-5; 8-10, பரணர்)

(தண்டா = நீங்காத; புலவாய் = ஊடாதே; என்றி = என்றாய்; புலக்குவென் = ஊடுவேன்; நளி மனை = பெரிய வீடு; விருந்தயரும் = விருந்தினரைப் போற்றும்; கைதூ இன்மை = கையொழியாது வேலை செய்தல்)

"என் பெரிய வீட்டுக்கு வரும் நல்ல விருந்தினரை வரவேற்றுப் போற்றும் விருந்தோம்பல் என்னும் மனையறம் குன்றுவதால் அவனிடம் நான் ஊடல் கொள்கிறேன். இடைவிடாது கைகள் வேலை செய்யும் விருந்தோம்பலை நான் செய்ய முடியாததால் ஊடல் கொள்கிறேன்" என்பது தலைவி கூறும் காரணம். தலைவனின் பரத்தமை ஒழுக்கமும், அதன் காரணமாகத் தலைவி விருந்தோம்ப முடியாத நிலை ஏற்படுவதும் தலைவியின் ஊடலுக்குக் காரணங்கள் ஆகின்றன. இவ்வாறு மருதத் திணையின் பாடல்களில் உரிப்பொருளாக ஊடல் பல்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது.

மருதத் திணையின் இயல்புகள்

பரத்தை ஒழுக்கம், அது தொடர்பான வாயில் மறுத்தல், புதுப்புனல் ஆடல், ஊடல் தணிவித்தல் போன்றவையும் பிள்ளைத்தாலி அணிதல் போன்ற சமூக நிகழ்ச்சிகளும் மருதத் திணைப் பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

பரத்தைமை ஒழுக்கம்

மருதத் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்துப் பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்வான். இத்தகு பரத்தைமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்வாள் தலைவி. மருதத் திணைப் பாடல்களில் பரத்தைமை ஒழுக்கம் பெரிதும் குறிக்கப்படுகிறது. மருதத் திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதை அறிவீர்கள். தலைவியின் ஊடலுக்குத் தலைவனின் பரத்தைமை ஒழுக்கமே காரணமாகச் சொல்லப்படுவதால், மிகப் பெரும்பாலான மருதத் திணைப் பாடல்களில் தலைவனின் பரத்தைமை ஒழுக்கமே உள்ளடக்கம் ஆகிறது.

தலைவன் தன் இல்லத்துக்குச் செல்ல மறந்து பரத்தையோடு தங்குகிறான். ஒருநாள் பரத்தை "நின் இல்லத்திற்குச் சென்று வா" என்று கூறுகிறாள். தன் இல்லம் நாடி வருகிறான் தலைவன், "பரத்தை விரும்பிச் சொன்னதால் நீ இங்கு வர வேண்டாம் அவளது வீட்டிலேயே தங்கிவிடு. அது எமக்கும் நல்லது” என்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி.

நினக்கே அன்று அஃது எமக்குமார் இனிதே

நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை

வேண்டிய குறிப்பினை ஆகி

ஈண்டு நீ அருளாது ஆண்டு உறை தல்லே

(ஐங் குறு நூறு - 46)

(நயந்த = விரும்பிய; நுதல் = நெற்றி; அரிவை = பெண் (பரத்தை); உறைதல் = தங்குதல்; ஆண்டு = அங்கு)

தோழி கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல் ஒன்றில் (பாடல் எண் : 45, ஆலங்குடி வங்கனார்) தலைவன் காலையில் புறப்பட்டு, விரைவாகச் செல்லும் தேரின் மீது ஏறித் தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரை நாடிப் போகிறான் என்னும் செய்தி இடம் பெறுகிறது. பரத்தையரை நாடிப் போகும் போதே தலைவியும் தோழியும் அதனை அறிந்திருக்கின்றனர் என்பதை இங்குக் காண்கிறோம்.

வாயில் மறுத்தல்

பரத்தையிடம் சென்று வந்த தலைவன், தலைவியின் ஊடலுக்கு அஞ்சுவான். தான் தன் இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன் பாணனை அனுப்பித் தோழி மூலமாகத் தன் கருத்தைத் தலைவிக்குத் தெரிவிப்பான். தலைவனின் வருகைக்காகத் தூது வரும் பாணன் வாயில் எனப்படுவான். பாணனின் வேண்டுகோளைத் தோழி மறுத்தலே வாயில் மறுத்தல் எனப்படும். பாணன் முதலியோர் மட்டுமன்றித் தோழியும் தலைவியிடம் வாயிலாக இருப்பதுண்டு. வாயில் மறுப்பதும், வாயில் நேர்வதும் (நேர்தல் = ஏற்றல்) தலைவியின் மனநிலைக்கு ஏற்ப அமையும். தலைவன் அனுப்பிய தூதர் தலைவியிடம் வந்தனர். அப்போது தலைவி இவ்வாறு கூறி வாயில் மறுக்கிறாள் :

அம்ம வாழி தோழி மகிழ்நன்

ஒரு நாள் நம் மில் வந்ததற்கு எழுநாள்

அழும் என்ப அவன் பெண்டிர்

தீ உறு மெழுகின் ஞெகிழ் வனர் விரைந்தே

(ஐங்குறு நூறு - 32)

"தோழியே, கேள்! நம் இல்லத்தை நோக்கி மகிழ்நன் (தலைவன்) ஒருநாள் வந்தான். அவன் பெண்டிர் அதனைப் பொறுக்காமல் தீயில் பட்ட மெழுகைப் போன்று உடனே மனம் கலங்கினர்; ஏழுநாள் வரை அழுது தீர்த்தனர் என்று பலரும் கூறுவர்” என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். ஒருநாள் தலைவன் பிரிந்தால் ஏழுநாள் பரத்தையர் துன்புறுவர் - அதனால் அவன் இங்கு வரவேண்டாம் என்ற குறிப்பில் தலைவி வாயில் மறுக்கின்றாள்.

தலைவியின் ஊடலைத் தீர்க்க வந்த பாணன், தலைவன் தவறு இல்லாதவன் எனக் கூறி அவளிடம் வாயில் வேண்டுகிறான்; தலைவனின் தேர் பரத்தையர் சேரிக்குச் சென்றதில்லை என்கிறான். அவனிடம் தலைவி, "மாயத் தலைவனின் வாய்மொழியை நம்பித் தன் நலம் துறக்கத் துணிந்த மற்றோர் பரத்தையும் இருப்பாள். அங்கு நீ போ. அவள் ஊடலை நீ தீர்ப்பாயாக” என்று சொல்கிறாள். இவ்வாறு தன் ஊடலை மிகுதியாக்கி வாயில் மறுக்கின்றாள் அகநானூற்றுத் தலைவி. (அகநானூறு : 146 : உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார்)

புதுப்புனல் ஆடல்

ஆற்றில் பெருகி வரும் புது வெள்ளம் கண்டு மகிழ்ந்து நீராடி மகிழும் வழக்கம் மருத நிலத்து மக்களிடம் உண்டு. தோழியும் தலைவியும் இணைந்து புதுப்புனலில் நீராடியதைக் கலித்தொகைத் தலைவி இவ்வாறு கூறுகிறாள் :

புனை இழை நோக்கியும் , புனல் ஆடப் புறம் சூழ்ந்தும் (கலித்தொகை - 76 : 1)

(இழை = அணி; புறம் = வெளியில்)

"நன்கு செய்யப்பட்ட என் அணிகளைத் திருத்தினான் தலைவன். நாம் நீரில் ஆடும்போது நமக்கு ஒரு துன்பம் வாராமல் வெளியில் காவல் காத்தான் அவன்" - என்பது இப்பாடல் வரியின் பொருள். முன் ஒருநாள் தலைவியுடன் புதுப்புனல் ஆடிய தலைவன், "இனி நான் பரத்தைமை ஒழுக்கத்தை மேற்கொள்ள மாட்டேன்" என்று உறுதி கூறினான். அவன் இன்று பரத்தையரோடு புனல் ஆடுகிறான் என்பதைத் தலைவி கேள்விப்படுகிறாள். அவனுக்கு நெருக்கமானோர் கேட்கும்படி அவள் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள் :

"தோழியே ! கேள். வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்து இருக்கின்ற இடம் பெருந்துறை. அத்துறையில் நீராடும்போது, உடன் நீராடுவோர் அறியும்படி, 'இனிப் பரத்தைமையை விரும்பேன்' என்று சூள் (உறுதி, சபதம்) உரைத்தான் தலைவன். அதை மறவாமல் கடைப்பிடித்தல் தனக்குக் கடமை அன்று என அவன் கூறுவானோ?" (ஐங்குறுநூறு - 31) தலைவன் தலைவியோடும் புனல் ஆடுகிறான்; பரத்தையிடம் செல்லும்போது பரத்தையோடும் புனல் ஆடுகிறான் என்ற உண்மையை இங்குக் காண்கிறோம்.

மகிழ் நன்

மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்

பெண்டிரொடு ஆடும் என்ப

(ஐங்குறு நூறு - 33 : 1-3)

இப்பாடலில் தலைவன் பரத்தையரோடு புதுப்புனல் ஆடுவது குறிக்கப்படுகிறது. மகிழ்நன், மருத மரங்கள் நீண்டு உயர்ந்து பூக்கள் விரிந்து கிடக்கும் நீர்த்துறையில் "பரத்தையரோடு நீராடுகின்றான் எனச் சொல்வர்" என்பது இதன் பொருள்.

ஊடல் தணிதல்

ஊடல் கொள்வதை மட்டுமின்றி ஊடல் தீர்ப்பதையும் ஊடல் தீர்வதையும் மருதத் திணைப் பாடல்களில் காணலாம். ஊடல் தீர்வதற்குத் தலைவியின் மனநிலை, பெற்ற புதல்வனிடத்துக் கொண்ட பாசம் ஆகியன காரணங்கள் ஆகின்றன.

பரத்தையிடம் சென்று திரும்பிய தலைவன் தலைவியை நெருங்க முயற்சி செய்தான். அப்போது தலைவி ஊடல் கொண்டு, "இனி எம்மனைக்கு வராதே. வந்ததைப்போல் போ!” என்று கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவன், "நீ இவ்வாறு பேசினால் என் உயிர் எங்ஙனம் நிற்கும்? வழி சொல்வாய்” என்கிறான். "உன் பொய்களை எல்லாம் எனக்குச் சொல்லி வருந்தாதே. முன்பே உன் வஞ்சனைகளை நான் அறிந்துள்ளேன்” என்கிறாள் தலைவி. அதற்குத் தலைவன், "என்னை வெறுக்காதே, இனிய சிரிப்பை உடையவளே, நீ என் மீது கூற விரும்பும் தீதை நான் உடையவன் அல்லன்” என்கிறான். அதைக் கேட்ட தலைவி, "நெஞ்சே! இனியும் இவனிடம் சினம் கொண்டால், தவறு செய்து விட்டேன் என்று என் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாலும் வணங்குவான். ஆதலால் இந்த ஊடல் போரில் தோற்று அதன் பயனைக் காண்போம்” என்று தன் நெஞ்சிற்குக் கூறி ஊடல் நீங்கப் பெறுகிறாள். (கலித்தொகை - 89)

தலைவியின் மனநிலை இப்பாடலில் ஊடலைத் தீர்த்து வைக்கக் காண்கிறோம். தலைவன் பரத்தையிடம் போய்த் திரும்பி வந்தான். அப்போது தலைவி தன் மகனைத் தழுவி விளையாடிக் கொண்டிருந்தாள். தலைவன் அவள் அறியாதபடி வீட்டினுள் சென்றான். அவள் அவனுடன் ஊடல் கொண்டு சினந்து உரையாடினாள். முடிவில் தலைவன், "ஏடி ! நான் தீங்கற்றவன் என்று சொன்னேன். நீ சினம் தணியாது இருக்கின்றாய். கன்றைக் கட்டின இடம் தேடிச் செல்லும் பசுவைப் போல நான் என் தந்தையின் பெயர் கொண்ட மகனை எடுத்துக் கொள்வேன்” என்கிறான். மகன் மீது அவன் கொண்ட பாசத்தால் தலைவியின் ஊடல் தீர்கின்றது.

மேதக்க எந்தை பெயரனை யாம் கொள் வோம்

தாவா விருப்பொடு கன்றுயாத் துழிச்செல்லும்

ஆபோல் படர்தக நாம்

(கலித்தொகை - 81 : 35-37) (மேதக்க = மேன்மை உடைய; எந்தை பெயரன் = என் தந்தையின் பெயர் கொண்ட மகன்; தாவா = கெடாத; யாத்து உழி = கட்டப்பட்ட இடத்தில்; ஆ = பசு; படர்தக = வரும்படி)

ஊடல் நீளாமல் தீர்க்கப் பெறுவது மருதத் திணைப் பாடல்களுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.

பிள்ளைத்தாலி அணிதல்

கலித்தொகைப் பாடல்களால் (பாடல் எண் 82, 85, 86) இளம் பிள்ளைகளுக்கு வைணவ முறையில் அமைந்த ஐம்படைத் தாலி அல்லது சைவ மயமான தாலி ஒன்று மார்பில் அணிவதுண்டு எனத் தெரிகிறது. அத்தாலி காளை (நந்தி) முத்திரை கொண்டது. அதில் பவளத்தால் செய்த காளை உருவும், பொன்னால் ஆன மழு, வாள்களின் உருவும் விளங்கும் என்றும் தெரிகிறது. இச்செய்தி வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை. பரத்தை ஒருத்தி தலைவனின் மகனுக்குக் காளை முத்திரையைக் கைக் காணிக்கையாக இடுகிறாள்.

அவளும்

மருப்புப் பூண் கையுறை யாக அணிந்து

(கலித்தொகை - 82 : 11-12)

கலித்தொகைத் தலைவி ஒருத்தி தன் மகனுக்கு அணிவித்திருக்கும் அணிகளைப் பற்றிச் சொல்லும்போது, 'மகனே! நீ அணிந்தவை வெட்டாத வாள், வெட்டாத மழு ஆகியவை நெருங்கக் கட்டிய அணி, மழைக்காலத்துத் தம்பலப் பூச்சியின் நிறத்தை உடைய பவளத்தால் செய்த காளை வடிவுடைய அணி ஆகியன' என்று கூறுவது (பாடல்- 85 : 8-11) இங்குக் குறிப்பிடத்தக்கது.

இலக்கிய நயங்கள்

ஓர் இலக்கியத்தைப் படிக்கும் போது சுவையூட்டிச் சிந்தை மகிழச் செய்வன கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை போன்ற இலக்கிய நயங்கள் ஆகும். இப்பகுதியில் மருதத் திணைப் பாடல்களில் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை போன்ற இலக்கிய நயங்கள் அமைந்து சுவையூட்டுவதைக் காணலாம்.

கற்பனை

தலைவனின் பரத்தமையால் ஊடல் கொண்டாள் தலைவி. தோழியிடம் வாயில் வேண்டுகிறான் தலைவன். அவனுக்குத் தோழி,

வேம்பின் பைங் காய் என் தோழி தானே,

தேம் பூங் கட்டி என்றனர் ; இனியே,

பாரி பறம் பின் பனிச் சுனைத் தெண்ணீர்

தை இத் திங்கள் தண்ணிய தரினும்

வெய்ய உவர்க்கும் என்றனர்

ஐய ! அற்றால் அன்பின் பாலே !

(குறுந்தொகை - 196 : மிளைக்கந்தன்) (தேம் பூங்கட்டி = இனிய அழகிய கரும்புக்கட்டி, தண்ணிய = குளிர்ந்த; அற்று = அத்தன்மைத்து; பால் = பகுதி)

"தலைவனே! முன்பு (திருமணத்துக்கு முந்திய களவுக் காதலின் போது) என் தலைவி வேம்பின் காயை உனக்குத் தந்தாள். அதனை அழகிய இனிக்கும் வெல்லக் கட்டி என்று சொன்னாய். இப்போதோ தை மாதத்தில் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச் சுனையின் நீரை அவள் தருகிறாள். 'அது வெம்மையாய் உள்ளது - உவர்ப்பாய் உள்ளது' என்று கூறுகிறாய். நின் அன்பின் தன்மை இப்படிப்பட்டதாகி விட்டதே !".

காதல் தளராத நிலையில் தலைவி விளையாட்டாக வாயில் இட்ட வேப்பங் காயும் தலைவனுக்கு வெல்லக் கட்டியாக இனித்தது. தலைவியிடம் சலிப்பு ஏற்பட்டுப் பரத்தையிடத்து மோகம் கொண்ட இந்நாளில் தலைவி தரும் குளிர்ந்த நீரும் வெப்பம் மிக்கதாக, உவர்ப்பாக இருக்கிறது. சுனைநீர் குளிர்ச்சியானது. பாரியின் பறம்பு மலைச்

சுனைநீர் மிக மிகக் குளிர்ச்சியானது. பனிக்காலமாகிய தை மாதத்தில் அந்நீர் அதிகக் குளிர்ச்சி பெற்றிருக்கும். இதனையே தலைவன் வெப்பம் மிக்கது என்று கூறினால், தலைவியிடம் அவன் கொண்ட காதல் கசக்க ஆரம்பித்து விட்டது என்பதுதான் பொருள். வேம்பின் பழத்தில் கூடச் சிறிது இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் வேம்பின் பசிய காய் மிகவும் கசக்கும். அந்தக் காய் கூட ஒருநாள் அவனுக்கு இனித்தது. காரணம் தலைவியிடம் கொண்ட காதலின் இனிப்பு. இன்று அவன் மனநிலை மாறிடக் காரணம் பரத்தையிடம் அவன் கொண்ட காதல் அல்லவா?

அருமையான கற்பனைக்குச் சான்று குறுந்தொகையின் இப்பாடல். கலித்தொகைப் பாடலொன்று (எண்:92) தலைவன் கண்ட அழகுக் கனவைக் கற்பனையுடன் எடுத்துரைக்கிறது. தலைவன் - தலைவியின் உரையாடலாக அமையும் நயத்தையும் இப்பாடலில் காண முடிகிறது.

தலைவன் : "ஆரவாரம் மிகுந்த மதுரையில் வையைக் கரைச் சோலையில் இருப்பதாகக் கனவு கண்டேன்".

தலைவி : "அதைச் சொல்"

தலைவன் : "இமயமலையின் ஒரு பக்கத்தில் மாலையில் அன்னங்கள் தங்கியது போல், வைகைக் கரை மணல்மேட்டில் அழகிய பெண்கள் தம் தோழியருடன் இருந்தனர்".

தலைவி : "பறை ஓசை நாம் விரும்பிய சொற்களாகவே ஒலிக்கும். அதுபோல் நீ விரும்பிய இன்பத்தையே கனாவாகக் கண்டாய். மேலே சொல்”.

தலைவன் : "கொடிபோன்ற அழகுப் பெண்கள் ஒரு பூங்கொடியை வளைத்துக் கொத்துகளைப் பறித்தனர். கொத்துகள் உடைந்தன. கொத்துகளில் இருந்த வண்டுகள் அழகுப் பெண்களை மொய்த்துப் போரிட்டன. இந்தப் போரில் ஒருத்தியின் முத்து மாலையும் மலர் மாலையும் இன்னொருத்தியின் வளையலில் சிக்கின. ஒருத்தியின் நெற்றிமுத்து வடம் இன்னொருத்தியின் காதணியில் சிக்கியது. ஒருத்தியின் ஆடை வேறொருத்தியின் சிலம்பில் சிக்கியது. ஊடல் கொண்டு கணவனைத் தழுவாது இருந்த ஒருத்தி வண்டின் ஆரவாரத்திற்கு அஞ்சினாள்; கணவன் வணங்க அவன் மார்பில் பொருந்தினாள். மொய்க்கும் வண்டுக் கூட்டத்திற்குப் பயந்து ஒருத்தி குளத்தில் பாய்ந்தாள். ஒருத்தி ஓடத்தில் பாய்ந்தாள். விளையாட்டு மங்கையர் அவ்வண்டுகளுக்குத் தோற்றனர்",

தலைவி : “உன் பெண்டிர் உன்னிடம் ஊடல் கொண்டதையும், அவர் முன் நீ வணங்கியதையும் கனவின் மேல் இட்டுக் கூறுகின்றாய்”.

தலைவன் : "நான் பொய் சொல்லவில்லை; ஊடலால் பிரிந்தோரே, கூடுங்கள் என்பதுபோல் குயில்கள் கூவின. நான் கண்ட கனவு உண்மைதான் என்பதை உணர்வாயாக”, இங்கே தலைவியுடன் பேசும் தலைவன் பரத்தையிற் பிரிந்து திரும்பி வந்திருப்பவன்; தலைவியிடம் தூது அனுப்ப ஆள் இல்லாதவன்; தன் காதல் ஏக்கத்தையே தூது ஆகக் கொண்டு அவளுடைய ஊடல் நீக்க முயல்கிறான். இந்த முயற்சிதான் ஒரு கற்பனைக் கனவாக விரிந்துள்ளது.

சொல்லாட்சி

பரத்தை காரணமாகப் பிரிந்த தலைவன் வாயில் வேண்டுகிறான். தோழி மறுக்கின்றாள். "நீண்ட நேரம் நீராடினால் கண்கள் சிவக்கும். இனிப்பான தேனும் மிகுதியாக உண்டால் புளிப்பை உண்டாக்கும். நினக்கு முன்பு இனிப்பாயிருந்த தலைவி இன்று புளிப்பாகிப் போனாள்” என்று தோழி கூறுவதாக அமைகிறது குறுந்தொகைப் பாடல் ஒன்று.

நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்

(குறுந்தொகை - 354 : 1-2, கயத்தூர் கிழான்)

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நினைவூட்டுவதுபோல் தேனும் புளிக்கும் என்ற தொடர் அமைகிறது. இனிய தேன் புளிக்கக் காரணம் என்ன? அளவை மீறி உண்பதால் அது புளிக்கிறது. நெடுநாள் பழகியதால் இனித்த தலைவி இன்று புளிக்கின்றாளோ? தலைவியிடம் உன் அன்பு என்ற இனிமை ஏன் குறைந்தது? என்று கேட்க நினைக்கும் தோழி பரத்தமை ஒழுக்கமே காரணம் என்பதையும் அவனுக்கு உணர்த்த விரும்புகிறாள். "எம் தந்தையின் ஊரில் எங்களை விட்டுவிட்டு நீ செல்” என்று தொடர்ந்து தோழி தலைவனை வலியுறுத்துகிறாள்.

எம் இல் உய்த்துக் கொடு மோ (அடி -3)

என்று அவள் கூறுவது உறுதியாகத் தலைவனின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். தலைவியின் தந்தை வீட்டில் அவளை மட்டும் விட்டுச் சென்றால் ஊர் மக்கள் பழிச் சொற்களை நஞ்சு போல் அள்ளி வீசுவர். களவுக் காலத்தில் நஞ்சைக் கக்கும் பாம்புகள் திரியும் தெருவில் அன்று உன் மிகுதியான துன்பத்தைப் போக்கியவள் தலைவி. இன்று பழியைக் கூறும் மக்களின் சொற்கள் தரும் துன்பத்திலிருந்து அவளை நீ காப்பது உன் கடமை அல்லவா? என்று இடித்து உரைப்பது போல் சொற்களைக் கொட்டுகிறாள் தோழி. சொல்லாட்சியில் இப்பாடல் சிறக்கிறது.

'பரத்தையரை நான் அறியேன். வீணாக ஊடல் கொள்ளாதே' என்றான் தலைவன். அவன் அன்பு கொண்டுள்ள பரத்தையைத் தான் கண்டதைச் சொல்லி ஊடுகின்றாள் அகநானூற்றுத் தலைவி ஒருத்தி. தலைவனின் மகனது முகம் பார்த்து அவனைப் பாசத்தால் தழுவுகிறாள் பரத்தை. 'வருக என் உயிரே!' என்கிறாள். இதைக் கண்ணுற்ற தலைவி பரத்தையிடம்,

மாசு இல் குறு மகள் ! எவன்போது உற்றனை

நீயும் தாயை இவற்கு

(அகநானூறு -16 : 12-13,சாகலாசனார்)

என்கிறாள். "குற்றமற்ற இளம் பெண்ணே ! நீ எதற்கு மயங்கினாய்? நீயும் இச்சிறுவனுக்குத் தாய் ஆவாய்" என்பது இதன் பொருள். இப்பாடலில் பரத்தையிடம், "நீயும் என் மகனின் தாயே!" என்பதில் தாய்' என்ற சொல், உண்மையான பொருளிலா வருகிறது? பரத்தையை எள்ளுவதாகவும், தலைவனைக் கடிவதாகவும் அமைகிறது.

உவமை

முல்லைத் திணை, குறிஞ்சித் திணைப் பாடல்களில் அமைந்துள்ளது போல் மருதத் திணையிலும் பல பாடல்களில் உவமை சிறப்பாக அமைகின்றது. பரத்தையுடன் நீராடிய தலைவன் திரும்புகிறான்; தலைவியைப் பாராட்டுகிறான், ஊடல் கொண்ட அவள் தன் இளமை தொலைந்ததை அவனுக்கு நினைவூட்டுகிறாள்.

பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்

இளைமை சென்று தவத்தொல் லஃதே

(அகநானூறு - 6 : 20-21, பரணர்)

(தவ = மிகு தியாக; தொல் ல ஃதே = ப ழை யதாயிற் றே)

"பலவாகிய வேற்படையை உடையவன் மத்தி. அவனது கழாஅர் என்ற ஊரைப் போன்று என் இளமை கழிந்து மிகப் பழையதாயிற்று" என்கிறாள். ஊர் பழைமை அடைய அடையப் பெருமை பெறும். அதுபோலத் தன் இளமை கழிந்தாலும் பெருமைக்கு உரியவளே என்பதை இந்த உவமை மூலம் புலப்படுத்துகிறாள் தலைவி. நண்டின் கண்களை அழகான உவமை கொண்டு மருதப் பாடல் வருணிக்கின்றது.

வேப்பு நனை அன்ன நெடுங் கண் கள்வன்

(ஐங்குறு நூறு - 30 : 1) (வேப்பு நனை = வேப்பம் பூவின் அரும்பு; அன்ன = போன்ற; கள்வன் = நண்டு)

வேப்பம் பூவின் அரும்பு போன்ற நீண்ட கண்களையுடைய நண்டு என்பது இதன் பொருள். தலைவனையும் தலைவியையும் பழித்து உரைக்கின்றாள் பரத்தை.

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல

(குறுந்தொகை - 8 : 4-5, ஆலங்குடிவங்கனார்)

கண்ணாடியில் தோன்றும் உருவம் எதிரில் நிற்பவர் கையை, காலைத் தூக்கும் ) போது தானும் தூக்கும். அதைப்போலத் தலைவி சொன்னபடி எல்லாம் ஆடுகிறான் தலைவன் என்பதை இவ்வுவமை மூலம் பரத்தை உணர்த்துகிறாள்.

உள்ளுறை

மருதத்திணைப் பாடல்களில் அமைந்துள்ள உள்ளுறை படித்துச் சுவைத்தற்கு

உரியது.

தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு

பிள்ளை தின்னும் முதலை த்து அவனூர்

எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ் நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்

நலங் கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய் !

(ஐங்குறு நூறு - 24)

(சாப்பிறக்கும் = சாகப் பிறக்கும்; புள்ளிக் கள்வன் = புள்ளிகளையுடைய நண்டு; பிள்ளை = குஞ்சு; முதலைத்து = முதலையை உடையது; ஆகின்று கொல் = ஆகின்றமைதானோ; பொலந்தொடி = பொன்வளையல்; தெளிர் ப்ப = ஒலிக்க; முயங்கியவர் = புணர்ந்தவர்; துறப்பது = நீங்குதல்) பரத்தை ஒழுக்கத்திலும் கூட, தலைவன் ஒரு பரத்தையை விட்டு வேறொரு பரத்தையிடம் கூடி இன்புற்றான். அதனை அறிந்தாள் தோழி. வாயிலாக வந்தவர் கேட்கும்படி தலைவியிடம் கூறுவதாக வரும் பாடல் இது.

"தலைவியே! மகிழ்நனுடைய ஊர் தாய் சாவப் பிறக்கும் புள்ளி பொருந்திய நண்டுகளை உடையது; தன் குட்டியையே உண்ணும் முதலையையும் உடையது. சேரியில் உள்ளவர் கூறுவதனால்தான் இங்கு வந்தானோ? அங்ஙனம் வந்தவன் பொன் வளையல்களை அணிந்த மகளிரின் அழகை அனுபவித்தும், அவர் நலம் கெடும்படி துறப்பது ஏன்? சொல்" - என்கிறாள்.

இப்பாடலில் அமைந்துள்ள உள்ளுறையை இனி அறியலாம். தாய் சாகப் பிறக்கும் நண்டை உடைய ஊரினன் என்பது, கலந்த மகளிரின் நலத்தைக் கெடுக்கும் அன்பு இல்லாதவன் என்ற உள்ளுறையைத் தருகிறது. பிள்ளை தின்னும் முதலையை உடைய ஊரினன் என்பது இனித் தழுவ இருக்கும் மகளிர் நலத்தை அனுபவித்துப் பிரியும் அருள் இல்லாதவன் என்ற உள்ளுறையைத் தருகின்றது. ஆலங்குடி வங்கனாரின் அகநானூற்றுப் பாடலொன்று (106) சுட்டும் உள்ளுறையைக் காண்போம். முதுமையால் பறக்க முடியாத சிரல் பறவை, மீனுக்கு அருகில் இலையில் அமர்ந்துள்ளது. மீனை அதனால் கவர முடியவில்லை . பிற சிரல் பறவைகள் மீனைக் கவர்வதைப் பொறுக்க முடியவில்லை - இச்செய்தி பாடலில் காணப்படுகிறது.

முதுமையால் எழுச்சி குன்றித் தன் இல்லத்தில் இருக்கின்றாள் தலைவி. தலைவன் அருகில் இருந்தும் அவனை வளைத்துக் கொள்ள முடியவில்லை. இளம் பருவமுடைய பெண்டிர் அவனைத் தழுவுவதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பரத்தை குறிப்பாக எள்ளுவதை உள்ளுறையாக இப்பாடல் செய்தி உணர்த்துகிறது. இவ்வாறு இன்னும் பல பாடல்களில் உள்ளுறை அமைகின்றது.

கேள்வி பதில்கள்

1) மருதக் கலிப் பாடல்களைப் பாடியவர் யார்?

விடை : மருதன் இளநாகனார்.

2) மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது யாது?

விடை : வைகறை.

3) மருதத் திணைக்கு உரிய தெய்வம் எது?

விடை : இந்திரன்.

4) மருதத் திணையின் உரிப்பொருள் யாது?

விடை : ஊடலும், ஊடல் தொடர்பானவையும்.

5) கன்னிவிடியல் என்பதன் பொருள் யாது?

விடை : மிக்க இளமையான இருள் சரியாகப் புலராத காலைப் பொழுது.

6) மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை - என்ற பாடலடியில் வெளிப்படும் மருதத்திணைக்கு உரிய கருப்பொருள் யாது?

விடை : மருதமரம்.

7) நோம் என் நெஞ்சே - என்ற பாடலைப் பாடியவர் யார்?

விடை : அள்ளூர் நன்முல்லையார்.

8) தலைவியின் ஊடலுக்குப் பயந்து தலைவன் முதலில் யாரைத் தூது விடுகின்றான்?

விடை : பாணனை.

9) நளிமனை என்பதன் பொருள் யாது?

விடை : பெரிய வீடு.

10) மருதத் தலைவி ஊடல் கொள்ளக் காரணம் என்ன?

விடை : தலைவனின் பரத்தைமை ஒழுக்கம்.

11) நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை - இத்தொடரில் அரிவை யாரைக் குறிக்கிறது?

விடை : பரத்தையை.

12) எழுநாள் அழும் பெண்டிர் யார்?

விடை : பரத்தையர்.

13) ஊடல் தீர யாருடைய மனநிலை காரணம் ஆகிறது?

விடை : தலைவியின் மனநிலை.

14) தலைவனது தந்தையின் பெயர் கொண்டவன் யார்?

விடை : தலைவனின் மகன்.

15) பரத்தை ஒருத்தி தலைவனின் மகனுக்கு எதனைக் கைக் காணிக்கை ஆக்குகிறாள்?

விடை : காளை முத்திரையை.

16) தலைவன் எதனை வெய்ய உவர்க்கும் என்றான்?

விடை : பாரியின் பறம்பு மலையின் குளிர்ந்த சுனையின் தெளிந்த நீரை.

17) சிரல் பறவையைத் தலைவிக்கு உள்ளுறை உவமையாக்கிய புலவர் யார்?

விடை : ஆலங்குடி வங்கனார்.

ஆசிரியர் : முனைவர். நா. இளங்கோவன்

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

2.72727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top