பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முல்லைத் திணைப் பாடல்கள்

முல்லைத் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள முல்லைத் திணைப் பாடல்களின் அறிமுகமாக அமைகிறது. முல்லைத் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதி விவரிக்கிறது. முல்லை நில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய சிறப்புகளை இப்பகுதி எடுத்துரைக்கிறது. கற்பனை, உவமை, சொல்லாட்சி முதலியவற்றையும் இப்பகுதி விளக்குகிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

* முல்லைத் திணைக்குரிய முப்பொருள்களை அறியலாம்.

* முல்லைத் திணையில் முதல், கரு, உரிப்பொருள்களின் வெளிப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம் உணரலாம்.

* முல்லைநில மக்களின் வாழ்க்கை முறையில் ஏறு தழுவல், எருமைக் கொம்பை வழிபடல், மூவினம் வளர்த்தல், பால், மோர் விற்றல், விரிச்சி கேட்டல், பாசறையில் மகளிரும் பங்கேற்றல் முதலிய சிறப்பு நிகழ்வுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

* முல்லைப் பாடல்களின் இலக்கியச் சுவை பற்றி அறியலாம்.

முன்னுரை

சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று பகுக்கப்படுகின்றன. அடி வரையறை, பொருள் அமைப்பு, பாவகை ஆகியவற்றைக் கொண்டு இந்நூல்கள் பகுக்கப்பட்டுள்ளன. அடிகளால் நீண்ட பத்துப் பாடல்களைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தனர். பல்வேறு அடி எண்ணிக்கையில் அமைந்த பாடல்களை அடி எண்ணிக்கை, யாப்பு அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும், அகபுறப் பொருள் அடிப்படையிலும் எட்டுத் தொகுப்புகளாகத் தொகுத்தனர். அவை எட்டுத்தொகை எனப்படும். மேற்காணும் சங்க இலக்கியங்களில், முல்லைத் திணையில் அமைந்த பாடல்களை இப்பாடத்தில் காணலாம்.

அகம் - புறம் பாகுபாடு

பண்டைத் தமிழ் மக்கள், வாழ்க்கையை அகம் என்றும், புறம் என்றும் பகுத்தனர். உள்ளம் ஒத்த தலைவனும் தலைவியும் தாம் உற்ற இன்பத்தைப் பிறருக்கு எடுத்துக்காட்ட முடியாது. இத்தகு காட்டலாகாப் பொருளான காதல் பற்றிய பாடல்களை அகம் என்பர். பிறருக்குப் புலப்படுத்தப்படும் கொடை, வீரம், கருணை முதலிய உணர்வுகள் பற்றிய பாடல்களைப் புறம் என்பர்.

அக நூல்கள்

பத்துப்பாட்டு நூல்களுள் முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை ஆகியன அகநூல்கள். எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியன அகநூல்கள்.

ஐந்திணை விளக்கம்

திணை என்பதன் பொருள் ஒழுக்கம். அகத்திணைகள் ஏழு. அவை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்பன. நிலப் பாகுபாட்டையும், தலைவன்-தலைவி ஆகியோர் அக வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளையும் ஒட்டித் திணைப் பாகுபாடு அமைந்துள்ளது. ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் பாகுபாடு உண்டு. எந்தச் சூழலில் யார் பேசுவதாகப் (கூற்று) பாடல் பாடப்படுகிறது என்பதை விளக்கும் துறை என்ற பிரிவு திணைக்கு உண்டு.

முல்லைத் திணையின் முப்பொருள்

சங்க இலக்கியம்-1 என்ற பாடத் தொகுதியில் அக-புறத்திணைகளின் முழுமையான விளக்கங்களை அறிந்திருப்பீர்கள். இங்கு முல்லைத் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்களைச் சுருக்கமாகக் காணலாம்.

முதற் பொருள்

முதற்பொருள் எனச் சொல்லப்படுவது நிலமும், பொழுதும் என்பதை அறிவீர்கள். அக நிகழ்வுகள், பேச்சுகள் நிகழும் இடங்களையும், காலத்தையும் குறிப்பது முதற்பொருள்.பொழுது (காலம்) பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். முல்லைத் திணையின் நிலம், காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். முல்லைக்கு உரிய பெரும்பொழுது கார்காலம் (மழைக்காலம்) ஆகும். சிறுபொழுது மாலை ஆகும்.

கருப்பொருள்

தெய்வம், உயர்ந்தோர், அல்லாதோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் போன்றவை கருப்பொருள் ஆகும். முல்லைத் திணைக்குரிய தெய்வம்-திருமால்; மக்களுள் உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், கிழத்தி; உயர்ந்தோர் அல்லாதோர் - ஆயர், இடையர், ஆய்ச்சியர், இடைச்சியர்; பறவை - கானக்கோழி; விலங்கு - முயல், மான்; ஊர் - பாடி, சேரி; நீர் - காட்டாறு; பூ - முல்லை, தோன்றி; மரம் - கொன்றை, குருந்து, காயா; உணவு - வரகு, சாமை; பறை - ஏறுகோட்பறை; யாழ் - முல்லையாழ்; பண் - சாதாரிப் பண்; தொழில் - சாமை, வரகு விதைத்தல், ஆநிரை மேய்த்தல் போன்றவை.

உரிப்பொருள்

முல்லைத் திணைக்கு உரிய உரிப்பொருள் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் ஆகும். நிமித்தம் என்பதற்குத் தொடர்பானவை என்று பொருள் கொள்ளலாம். போர் அல்லது பொருள் ஈட்டும் வினை முடிக்கச் சென்ற தலைவன் திரும்பி வரும் வரை தலைவி பிரிவைத் தாங்கிக் கொண்டு இருப்பாள். இதனையே இருத்தல் அல்லது ஆற்றியிருத்தல் என்பர். இருத்தல் அல்லது இருத்தல் தொடர்பான செய்திகள் முல்லைத் திணையில் இடம் பெறும்.

முப்பொருள் அமைவு

முல்லைத் திணையில் அமைந்த முல்லைப்பாட்டைப் பாடிய புலவர் காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். கலித்தொகையில் உள்ள முல்லைக் கலிப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் ஆவார். ஐங்குறுநூற்றில் முல்லைத் திணை பற்றிய நூறு பாடல்களைப் பாடியவர் பேயனார் என்னும் புலவர். ஏனைய அகத்திணை நூல்களில் உள்ள முல்லைத்திணைப் பாடல்களைப் பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர். இப்பாடல்களின் துணைகொண்டு முல்லைப் பாடல்களில் முப்பொருள் அமைந்திருக்கும் தன்மையை இப்பகுதி விளக்குகிறது.

முதற் பொருள் அமைவு

முதற்பொருளாகிய நிலமும் பொழுதும் பாடல்களில் அமைந்துள்ள சிறப்பைக் காணலாம். பிரிந்து சென்ற தலைவன் வருவதாகக் கூறிய கார்ப்பருவம் வந்தது. ஆனால் அவன் வரவில்லை. தலைவிக்கு வருத்தம் மிகுந்தது, தோழியிடம் கூறி ஆறுதல் பெற எண்ணுகிறாள்.

இளமை பாரார் வளம் நசை இச் சென்றோர்

இவணும் வாரார்; எவண ரோ?எனப்

பெயல் புறம் தந்த பூங்கொடி முல்லைத்

தொகு முகை இலங்கு எயிறு ஆக

நகுமே தோழி நறுந்தண் காரே (குறுந்தொகை : 126)

(நசைஇ = விரும்பி; இவண் = இங்கு; எவண் = எங்கு; பெயல் = மழை; முகை = மொட்டு; எயிறு = பல்வரிசை; நகுமே = சிரிக்குமே)

"தோழி! இன்பத்திற்கு உரிய இளமையின் அருமையைத் தலைவர் எண்ணிப் பார்க்கவில்லை. பொருள் வளத்தை விரும்பி என்னைப் பிரிந்து சென்றவர் இன்னும் வரவில்லை . நறுமணம் தரும் குளிர்ந்த கார்காலம் "எங்கேடி அவர்?" என்று கேட்பது போல் முல்லை அரும்புகளாகிய பற்களைக் காட்டிச் சிரிக்கின்றதே!"

கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைத் திணைக்கு உரிய பெரும்பொழுதான கார்காலம் நறுந்தண் கார் என இப்பாடலில் வெளிப்படுவதைக் காணுங்கள். ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல் இது.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

(முல் லைப் பாட்டு : அடி 6)

(புன் மாலை = வருத்தம் தரும் மாலைப் பொழுது)

என்னும் அடியில் பிரிந்தோர்க்குத் துன்பம் தரும் மாலை என்று சிறுபொழுது சுட்டப்படுவதைக் காணலாம்.

இனி, முல்லைத் திணைக்கு உரிய காடு என்னும் நிலமும், கார்ப்பொழுதும் பாடலின் ஒரே அடியில் அமைவதைக் காணலாம். 'கார்காலத்தில் வருவேன் என்று கூறிய தலைவன் வரவில்லை. ஆனால் கார்காலம் வந்துவிட்டதைக் காடு கூறிவிட்டது. பொய் கூறாத் தலைவன் ஏன் வரவில்லை?' என மனத்துக்குள் வருந்தும் தோழியைத் தேற்றுவது போலத் தலைவி பேசுகிறாள்.

புதுப் பூங் கொன்றைக்

கானம், கார் எனக் கூறனும்

யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே

(குறுந்தொகை : 21)

"புதிய கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் இக்காடு, 'கார் காலம் வந்துவிட்டது' என்று சொல்கிறது. ஆனாலும் நான் நம்ப மாட்டேன்; அவர் பொய் சொல்ல மாட்டார்" என்கிறாள். இங்குக் கானம் (காடு) என நிலமும் கார் எனப் பொழுதும் குறிக்கப்படுவதைக் காணலாம். ஓதலாந்தையார் பாடிய பாடல் இது.

கருப்பொருள் அமைவு

14 வகைக் கருப்பொருள்களில் சிலவற்றை இங்குக் காணலாம். மாவலி வார்த்த நீர் தன் கைகளில் விழுந்த அளவிலேயே பெரிய உருவமாக வளர்ந்தவன் திருமால். 'அத்திருமாலைப் போன்று மேகம் கடல்நீரைக் குடித்து மலை உச்சியில் தங்கியது. உலகத்தை வளைத்தது. விரைந்து பெரிய மழையைப் பொழிந்தது'. முல்லைப்பாட்டின் இத்தொடக்கம் முல்லை நிலத் தெய்வமான திருமாலை உவமை வழியாகக் குறிப்பிடுகிறது.

இடைச்சிறுவன் பால் விற்றல், ஆடு மேய்த்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் . காட்சியை நற்றிணைப் பாடலில் காணலாம். நுண்ணிய பல மழைத் துளிகள் அவன் உடலின் ஒருபுறத்தை நனைக்கின்றன. கையில் கோலூன்றி அதன்மேல் கால்வைத்து அவன் நடுங்கி, ஒடுங்கி நிற்கிறான். வாயைக் குவித்துச் சீழ்க்கை ஒலி எழுப்புகிறான். அதனைக் கேட்டு ஆட்டுத் தொகுதி வேற்று நிலம் புகாமல் முல்லைக் காட்டிலேயே நிற்கின்றது.

பால் நொடை இடையன்

நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்

தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடிவிளி

சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்

புறவினதுவே... (நற்றிணை : 142)

(நொடை = விலை; துவலை = மழைத்துளி; ம டிவிளி = சீழ்க்கை ; சிறுதலை = ஆடு; தொழுதி = தொகுதி; ஏமார்த்து = மயங்கி; அல் கும் = தங்கும்)

நற்றிணையின் இப்பாடல் ஆயச்சிறுவனை நம் கண்முன் காட்டுகிறது. ஆடு மேய்த்தல், பால் விற்றல் முதலிய முல்லை நில மக்களின் தொழிலையும் நமக்குக் காட்டுகிறது. இடைக்காடனார் என்னும் புலவர் பாடிய பாடல் இது. மழையில் நனைந்து குளிரால், நடுங்கும் ஆயச்சிறுமி தன் கைகளால் தோளை இறுக அணைத்துக் கொண்டு, தாய்ப் பசுக்களின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கன்றுகளிடம் "தாயர் இப்போதே வந்திடுவர்" என்று ஆறுதல் கூறுகிறாள். இது முல்லைப்பாட்டு காட்டும் காட்சி.

பசலைக் கன்றின்

உறு துயர் அலமரல் நோக்கி, ஆய் மகள்

நடுங்குசுவல சைத்த கையள்

இன்னே வருகுவர் தாயர் என்போள்

(அல மரல் = வருத்தம்; சுவல் = தோள்; அசைத்தல் = கட்டிக் கொள்ளுதல்)

மழை தொடங்கியது; தலைவன் வரவில்லை, தலைவி வருந்துகிறாள். ஆறுதல் கூறும் தோழி, "காரணம் இல்லாது மழையைப் பெய்யும் மேகத்தைக் கண்டு கார்ப்பருவ மேகம் எனத் தவறாக எண்ணுகிறது, கொன்றைமரம். அறியாமையால் மலர்கின்றன கொன்றை மலர்கள். இதைக் கண்டு நீ இது கார்ப்பருவம் என்று வருந்தாதே” என்று தேற்றுகிறாள்.

பேதையங் கொன்றைக் கோதை நிலை நோக்கி

எவன் இனி மடந்தைநின் கலிழ்வே ?

(ஐங்குறு நூறு : 462)

(பேதையங் கொன்றை = அறியாமையால் மலர்ந்த கொன்றை; கோதை = மாலை; கலுழ்தல் = கலங்குதல்)

இப்பாடலில் கொன்றை மரம், கொன்றைப் பூக்கள் ஆகிய கருப்பொருள்கள் இடம் பெறுகின்றன.

தண்நறும் பிடவமும் தவழ் பொடித் தளவமும்

வண்ணவண் தோன்றியும் வயங்கு இணர்க் கொன்றையும்

(கலித்தொகை-102 : 2-3)

என்ற முல்லைக்கலிப் பாடல் அடிகள், பிடவம், முல்லை, தோன்றி, கொன்றை முதலிய முல்லை நிலத்துக்கு உரிய மலர்களைச் சுட்டுகின்றன.

உரிப்பொருள் அமைவு

அரசன் பணிப்பதால் தலைவன் போர்வினை முடிக்கச் செல்வான்; அல்லது இல்லற வாழ்வுக்குத் தேவையான பொருள் தேடச் செல்வான். அவன் வரும் காலத்தை எதிர்நோக்கி ஆற்றி இருப்பாள் (பொறுமையுடன் காத்திருப்பாள்) தலைவி. இதுவே முல்லைத் திணை உரிப்பொருள்.

பாடல்களில் தலைவி பொறுமையுடன் காத்திருத்தல், பருவம் கண்டு வருந்துதல், தோழி தலைவியைத் தேற்றுதல், தலைவன் வினை முடிந்து திரும்பி வருதல் போன்ற நிகழ்வுகளாக இவ்வுரிப்பொருள் அமைக்கப்பட்டிருக்கும்.

தலைவி துயருடன் ஆற்றியிருத்தல்

கார்காலத்துப் பெருமழை மாலைக் காலத்தில் வந்தது. ஆண் மான்கள் பெண் மான்களைத் தழுவியவாறு மயக்கம் மிகுந்து காட்டில் மறைந்து ஒடுங்குகின்றன. ஆண் யானைகள் தத்தம் பெண் யானைகளோடு சேர்ந்து அழகிய மலைப் பக்கங்களை அடைந்தன. பொன்னைப் போன்ற என் மேனியின் அழகு, பிரிவினால் சிதையும்படி செய்த தலைவன் இன்னும் வரவில்லையே, இன்னமும் வராவிடில் என் இனிய உயிர் என்னாகும்? எனத் தலைவி வருந்தி இருக்கிறாள்.

தோழி தேற்றல்

வருந்தும் தலைவியைத் தோழி, "உன்னைப் பிரிந்து நீடித்து அங்கிருக்க மாட்டார் தலைவர். விரைவில் வருவார்" எனத் தேற்றுகிறாள்.

இனையல் வாழி தோழி எனையதூஉம்

நிற்றுறந்து அமை குவர் அல்லர்

(ஐங்குறு நூறு : 461)

(இனையல் = வருந்தாதே; எனையதூ உம் = சிறிதளவும்; நிற்றுறந்து = உன்னைப் பிரிந்து)

தலைவன் தலைவியை எண்ணி இருத்தல்

பாசறையில் இருக்கும் தலைவன் தலைவியின் நிலையை எண்ணிப் பார்க்கிறான். 'நம்மைப் பிரிந்து போன நம் தலைவனின் நிலை எப்படி இருக்கிறதோ என மயக்கம் அடைந்திருப்பாள் தலைவி. கண்ணீர் சிந்தி அழுது துன்பத்துடன் ஆற்றி இருப்பாள் அவள்' என்று தன் நெஞ்சிற்குக் கூறுகிறான் தலைவன். இப்பாடலைப் பாடிய புலவர் மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன் தேவனார்.

எவன்கொல் மற்று அவர் நிலை ?என மயங்கி

இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு

இன்னாது உறைவி

(அக நானூறு -164 : 8-10)

(இகு பனி உறைக்கும் = கண்ணீர் சிந்தும்; இனைபு = அழுது உறைவி = தங்கியிருப்பவள்)

தலைவன் வினை முடிந்து திரும்புதல்

வினைமுடிந்து தலைவியைக் காணப் பேராவலுடன் திரும்பும் தலைவன் பாகனை நோக்கி, "தலைவியின் துயரம் தீரவும், அவள் அழகு மீளுமாறு நான் தழுவவும் விரைந்து செல்லவேண்டும். விரைந்து தேரைச் செலுத்து" என்கிறான்.

அரும் படர் அவலம் அவளு ம் தீரப்

பெருந்தோள் நலம் வர யாமும் முயங்க

ஏமதி வலவ தேரே

(ஐங்குறு நூறு : 485)

(அரும் படர் = பெருந்துன்பம்; நலம் = அழகு; முயங்க = தழுவ; ஏமதி = செலுத்து; வலவ = பாகனே)

முல்லையின் சிறப்புகள்

முல்லை நில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய சிறப்புகளில் சிலவற்றை இப்பகுதியில் அறியலாம்.

ஏறு தழுவல்

ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே, ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக விளங்க வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம் மகளை மணக்க வரும் ஆடவர் வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என எண்ணினர். அதன் காரணமாக ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.

ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும். ஆயர் ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விடுவர். இளைஞர் போட்டி போட்டு ஏறு தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவர் ஆயர். ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம்.

ஓஒ! இவள்,பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்

திரு மாமெய் தீண்டலர்

(கலித்தொகை-102 : 9-10)

(பொருபுகல் = போர் செய்வதில் விருப்பம் உடைய; ஏறு = காளை)

போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது இதன் பொருள். ஆயர்குலப் பெண் ஏறு தழுவும் ஆடவனையே விரும்பி மணப்பாள் என்பதை இது உணர்த்துகிறது.

ஆடு, மாடுகள் வதியும் இடத்தையும், ஏறு தழுவும் இடத்தையும் தொழு' என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. வீரம் அற்றவனை ஆயர்குலப் பெண்டிர் விரும்ப மாட்டார். காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள்அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை

கொல் லேற்றுக் கோடு அஞ்சு வானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்

(கலித்தொகை - 103 : 63-64)

(கோடு = கொம்பு; புல்லாள் = தழுவ மாட்டாள்)

என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.

இளைஞர்கள் ஏறு தழுவும் காட்சியைக் காணும் தோழியும் தலைவியும் பேசிக் கொள்ளும் உரையாடலில் அக்காட்சி அழகாக விரிகிறது. ஆயர் காளைகளைத் தொழுவில் விடுகின்ற போது வாத்தியங்கள் முழங்குகின்றன. மகளிர் வரிசையாக நிற்கின்றனர்.

தொழுவில் ஆயர் பாய்ந்தபோது தூசி கிளம்புகிறது; தொழுவில் பாய்ந்த ஆயர் காளைகளின் கொம்பினைப் பிடித்தனர்; தம் மார்பில் பொருந்தும்படி தழுவினர். அவற்றின் கழுத்தில் அடங்கினர்; கொண்டை (இமில்) முறியும்படி தழுவினர்; தோளுக்கு நடுவே காளையின் கழுத்தைப் புகும்படி விட்டனர்; காளைகள் ஆயர்களைக் கீழே வீழ்த்தின; நீண்ட கொம்புகளால் சாகும்படி குத்தின; மொத்தத்தில் கோபமுற்ற காளை எமனைப் போல் விளங்கியது.

இக்காட்சிகளைக் கலித்தொகை 105 ஆம் பாடல் விரிவாகக் காட்டுகிறது. ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

எருமைக் கொம்பை வழிபடல்

ஆயர் தம் வீட்டில் திருமணம் முதலிய நிகழ்வு நிகழும்போது செம்மண் பூசுவர். இளமணலை வீட்டின் முன்பக்கம் பரப்புவர். பெண் எருமைக் கொம்பை வீட்டில் வைத்து அதைத் தெய்வமாக வழிபடுவர்.

தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி

எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்

பெருமணம்

(கலித்தொகை-114 : 12-14)

(தருமணல் = கொண்டு வந்து குவித்த மணல்; பூவல் ஊட்டி = செம்மண் பூசி; பெடை = கொம்பு)

கொணர்ந்து குவித்த மணலைப் பரப்புகின்றனர்; வீட்டில் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த பெண் எருமையின் கொம்பை வழிபட்டு உறவினர் திருமணம் நிகழ்த்துகின்றனர் என்பது இப்பாடல் வரிகளின் பொருள் ஆகும்.

மூவினம் வளர்த்தல்

எருமை, பசு, ஆடு ஆகிய மூவினத்தை வளர்த்து அவற்றின் பயன்களால் வாழ்க்கை நடத்தும் ஆயர் மூவகைப் படுவர்.

(1) கோட்டினத்து ஆயர் - எருமைக் கூட்டத்தை உடையவர்.

(2) கோவினத்து ஆயர் - பசுக் கூட்டத்தை உடையவர்.

(3) புல்லினத்து ஆயர் - ஆடுகளை உடையவர்.

மறப்பண்பில் பசுவின ஆயரை விட எருமை இன ஆயரே சிறந்தவர் என்ற கொள்கை ஆயருக்கு உண்டு.

இஃது ஒத்தன்

கோட்டினத்து ஆயர்மகன் அன்றே மீட்டு ஒரான்

போர்பு கல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு

தார்போல் தழீஇ யவன்.

(கலித்தொகை- 103 : 32-35)

(கோட்டினத்து = எருமை இனம்; ஒத்தன் = ஒருவன்; பிணர் எருத்து = சொரசொரப்பு உடைய கழுத்து; தார் = மாலை)

போரிடும் காளையின் கழுத்தில் பாய்ந்து மாலையாய் அதனைத் தழுவியவன் எருமைக் கூட்டத்தை உடைய ஆயர் மகன் அல்லவா? காளையின் வலிமையை அடக்காமல் அவன் மீளான் என்பது இதன் பொருள்.

பால், மோர் - விற்றல்

ஆவினத்தை வளர்த்து ஆவின் பயனான பால், மோர், வெண்ணெய் விற்று வருகிறாள் ஆயர் குலப் பெண் ஒருத்தி. தலையில் மோர்ப் பானை ஏந்திப் பெரிய ஊர்களையும், சிறிய ஊர்களையும் கடந்து செல்கிறாள் அவள். அழகும் இளமையும் நிறைய, மோருடன் வந்தவளைக் கண்டபோது ஊர் முழுவதும் ஆரவாரம் உண்டாகிறது. காமக் கடவுள் பாலுடன் செல்லும் அழகிய ஆயர் குலப் பெண்ணைக் கண்டால் அம்புகள் பயனற்றன என்று அவற்றைக் கீழே இட்டு விடுவான் என்கின்றனர். இவ்வாறு பிறர் ஏவப் பால், மோர், வெண்ணெய் விற்போர் 'வினைவல பாங்கர்' எனக் குறிக்கப்படுகின்றனர்.

விரிச்சி கேட்டல்

தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டு நிற்றலை விரிச்சி கேட்டல் என்பர். முல்லை நிலப் பெண்டிரிடம் விரிச்சி கேட்கும் பழக்கம் இருந்ததை முல்லைப்பாட்டு உணர்த்துகிறது. மழைக்கால மாலைப் பொழுதில் தலைவனது பிரிவால் வருந்துகிறாள் தலைவி. அவள் அரசி. போருக்குச் சென்ற அரசன் வரவில்லையே என்ற ஏக்கம் அரசிக்குத் துன்பம் செய்கிறது. பெருமுது பெண்டிர் என்று அழைக்கப்படும் வயது முதிர்ந்த பெண்கள் சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர். அக்கோவிலில் நிறை நாழி நெல்லும், முல்லை மலர்களும் தூவி வணங்கி நற்சொல் கேட்டு நிற்கின்றனர். அப்போது ஆயச்சிறுமி ஒருத்தி கூறும் சொற்கள் அவர்களது செவிகளில் நற்சொல்லாக விழுகின்றன. சிறிய கயிற்றினால் கட்டப் பட்டிருந்த பச்சிளங் கன்றுகள் பசியுடன் தாய்ப் பசுக்களின் வருகையை எதிர்பார்த்துக் குரல் கொடுக்கின்றன. குளிரில் நடுங்கும் ஆயச் சிறுமி அக்கன்றுகளை நோக்கி,

இன்னே வருகு வர் தாயர் (முல்லைப் பாட்டு : 16)

(இன்னே = இப்பொழுதே; தாயர் = தாய்ப் பசுக்கள்) என்கிறாள்.

தாய்ப் பசுக்கள் இப்போதே வரும் என்று பொருள் தரும் இக்கூற்றைத் 'தலைவன் விரைவில் வந்துவிடுவான்' எனப் பொருள்படும் நல்ல விரிச்சியாக ஏற்கின்றனர் பெருமுது பெண்டிர். இதைச் சொல்லி அரசியைத் தேற்ற ஆரம்பிக்கின்றனர்.

மகளிர் பங்கேற்றல்

முல்லைக் காட்டில் பாசறை அமைத்தான் அரசன். அப்பாசறையில் ஏவல் மங்கையர், இரவைப் பகலாக்குவது போல ஒளிவீசும் வாளைக் கச்சில் வரிந்து கட்டி, நெய்யை ஊற்றும் திரிக்குழாயைக் கையில் ஏந்தி, இடப்பட்ட பாவை விளக்கு அவியும் நேரமெல்லாம் மீண்டும் நெய் ஊற்றி விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தனர். (முல்லைப்பாட்டு : 46-49)

போர்க்களம் செல்லும் ஆடவர்களின் வீரத்திற்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்ற கருத்தை இப்பெண்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.

அரசனை வாழ்த்தல்

முல்லை நிலப் பெண்கள் அரசனை வாழ்த்திக் குரவையிட்டுக் கூத்தாடுவது உண்டு. ஏறு தழுவிய பின் குரவையிடும் வழக்கமும் உண்டு. மன்னன் பாண்டியனை வாழ்த்துவதைச் சில முல்லைக் கலிப் பாடல்கள் காட்டுகின்றன.

சான்று : கலித்தொகை 103 ஆம் பாடல்.

இலக்கியச் சுவை

படிக்கப் படிக்க இன்பம் தருவது சிறந்த இலக்கியம் ஆகும். கற்பனை, சொல்லாட்சி, உவமை ஆகியன இலக்கியத்திற்குச் சுவை ஊட்டுவன. முல்லைத் திணைப் பாடல்களில் இலக்கியச் சுவை தரும் கற்பனை, சொல்லாட்சி, உவமைகளை இனி அறியலாம்.

கற்பனை

கார் காலத் தொடக்கத்தை வருணிக்கும் கற்பனைச் சிறப்புமிக்கது குறுங்குடி மருதனார் பாடல் (அகநானூறு 4). முல்லைக் கொடிகளில் கூர்மையான முனையை உடைய அரும்புகள் தோன்றின ; தேற்றா மரத்திலும் கொன்றை மரத்திலும் மெல்லிய அரும்புகள் கட்டு அவிழ்ந்து விரிந்தன. இரும்பை முறுக்கி விட்டது போன்ற கரிய பெரிய கொம்பை உடைய ஆண் மான்கள் பால் கற்களை உடைய பள்ளங்களில் துள்ளிக் குதித்தன. அகன்ற இவ்வுலகம் நீர் இன்மையால் வருந்திய வருத்தம் நீங்கும்படி, மேகம் விரைந்து எழுந்து மழைத்துளிகளை வீழ்த்திக் கார் காலத்தைத் தோற்றுவித்தது. பூத்த சோலையில் வண்டுகள் பெடையுடன் சேர்ந்து யாழ் நரம்பு போல இன்னிசை எழுப்பின.

தலைவியைக் காணப் பெரும் ஆவலுடன் திரும்புகிறான் வினை முடித்த தலைவன். புறப்படுமுன் தேர் மணியினது நாக்கு ஒலிக்காதபடி அதைக் கட்டுகிறான்.காரணம் என்ன? வண்டுகள் தம் துணையுடன் கூடி மகிழும் போது, தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப் பிரித்து விடக் கூடாது என்பதே நோக்கம். காதல் தொடர்பான இத்தகைய மென்மையான உணர்வைத் தலைவனின் ஒரு சிறு செயல் மூலம் காட்டிய புலவரின் கற்பனைத் திறன் பாராட்டத் தக்கது. வண்டின் காதலுக்கு இடையூறு செய்ய நினையாத தலைவன் தலைவிக்குத் துன்பம் ஏற்பட அனுமதியான். அதனால் விரைவில் வருவான் என்ற குறிப்பைத் தலைவிக்குத் தோழி உணர்த்தும் சிறப்பையும் இப்பாடலில் காண்கிறோம்.

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாது உண் பறவை பேதுறல் அஞ்சி

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

(அகநானூறு - 4 : 10-12)

(பொங்கர் = சோலை; தாது உண் பறவை = மலரின் தேனை உண்ணும்

வண்டு; ஆர்த்த = ஒலிக்காதபடி கட்டிய, பேதுறல் மயங்குதல்)

இவ்வரிகள் கற்பனைச் சிறப்பு வாய்ந்த தோழியின் சொல்லாற்றலை வெளிப்படுத்துகின்றன.

சொல்லாட்சி

புலவன் எடுத்தாளும் சொற்களே ஒரு பாடலை என்றும் நெஞ்சில் நிலை நிறுத்துவன. கார்ப்பருவம் வந்தது; தலைவன் வரவில்லை ; வருந்துகிறாள் தலைவி. தோழி, தலைவியைத் தேற்றுகிறாள். 'இது கார்ப் பருவம் அன்று மயங்காதே' என்கிறாள்.

தோழி கூறுவதைப் பாருங்கள் :

தோழியே! வினைமுடிக்கச் சென்ற தலைவன் வருவதாகச் சொன்ன பருவம் இதுதானே என்று என்னை வினவுகின்றாய்! இது அன்று! அறிவில்லாமல், பருவ காலத்தை மறந்து கடல் நீரை உண்டது மேகம். நீரை உண்டதால் சுமை தாங்க மாட்டாமல் அது மழையைப் பெய்தது. பிடவும், கொன்றையும், காந்தளும் இன்னும் பலவும் மலர்ந்து விட்டன. காரணம் அவற்றின் அறிவின்மை! இவ்வாறு தலைவியைத் தேற்றும் தோழி, 'நீயும் அறிவற்றுக் கார்காலம் என மயங்காதே' என்ற குறிப்புரையைத் தருகிறாள்.

மதியின்று

மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மாமழை,

பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்

காரென்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில்

பிடவமும் கொன்றையும் கோடலும்

மடவ வாகலின், மலர்ந்தன பலவே.

(நற்றிணை : 99)

(மதி இன்று = அறிவில்லாது; கமம் = நிறைந்த; மாமழை = மேகம்; இறுத்த = பெய்தொழித்தல்; அயர்ந்த = மறதி உற்ற; தேர்வில் = அறியாதன; மடவ = அறிவில்லாதவை)

தலைவியைத் தேற்றக் கார்கால அறிகுறிகளாகிய மழையையும் மலர்களையும் குறைசொல்லும் தோழி, மதிஇன்று, மடவ என்ற கடும் சொற்களால் அவற்றைக் கடிந்து கொள்கிறாள். இளந்திரையனார் என்னும் புலவரின் இச்சொல்லாட்சிகள் கவிதையின் உணர்ச்சிக்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம். தலைவியை, அவள் காதலிக்கும் தலைவனுக்கு அல்லாமல், வேறொருவனுக்கு மணம் பேசுகின்றனர் பெற்றோர். இது வேற்று வரைவு எனப்படும். இந்நிலையில் தலைவி தலைவனுக்குச் செய்தி தெரிவிக்கக் கூறும் கலித்தொகைப் பாடலில் சொல்லாட்சி சிறந்திருப்பதைக் காணலாம்.

தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி

எருமைப் பெடையோடு எமர்ஈங்கு அயரும்

பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய

வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த

திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த

ஒரு மணம் தான் அறியும் ; ஆயின் எனைத்தும்

தெரு மரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த

விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்

அரு நெறி ஆயர் மகளிர்க்கு

இரு மணம் கூடுதல் இல் இயல் பு அன்றே

(கலித்தொகை - 114 : 12-21)

(பூவல் = செம்மண்; பெடை = கொம்பு; புணர்ந்த = கலந்த; தெருமரல் = கலக்கம்)

"தோழியே! மணலை உடைய துறையில் தோழியரொடு சிறி வீட்டைக் கட்டி விளையாடினேன் அல்லவா? பின்பு தோழியர் கூட்டத்தில் இருந்து நான் தனியே நீங்கினேன். தலைவன் என்னைச் சேர்ந்தான். அந்த ஒரு மணத்தை என் மனம் மட்டும் அறியும். என் உறவினர், வீட்டில் மணலைப் பரப்பிச் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த எருமையின் கொம்பை வழிபடுகின்றனர். உறவினர் நடத்த எண்ணும் திருமணம் (பெருமணம்) வேறு ஒருவனுக்கு என்னை மணம் முடிப்பதற்காக என்பதால், இரண்டு மணம் உண்டாகின்றது. விரிந்த கடலை ஆடையாக உடுத்திய உலகத்தைப் பெற்றாலும் ஆயர் மகளுக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை ". இதுவே இப்பாடலின் பொருள் ஆகும். தலைவியின் பேச்சில் ஒருமணம், பெருமணம், இருமணம் என வரும் சொற்களின் ஆட்சி காதலின் உண்மை இயல்பை வாதிட்டு எடுத்துக் காட்டும் கருவியாகப் பயன்படுவது காணலாம். தலைவி, ஆயர் மகளிரோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது குருந்தம் பூவால் ஆன மாலை சூடிய ஆயன் வருகிறான். அவன் தலைவியை நோக்கி,

முற்று இழை ஏஎர் மடநல்லாய் ! நீ ஆடும்

சிற்றில் புனைகோ, சிறது ?

(இழை = அணிகலன்; ஏஎர = அழகு; மடநல்லாய் = இளம் பெண்ணே ; புனைகோ = கட்டவா) என்று கேட்கிறான்.

'நிறைந்த அணிகலன்களை அணிந்த அழகிய இளம் பெண்ணே ! நீ கட்டி விளையாடும் மணல் வீட்டை நானும் சிறிது கட்டவோ?' என்பது பொருள்.

நீ

பெற்றேம் யாம் என்று, பிறர் செய்த இல் இருப்பாய்

கற்றது இலை மன்ற காண்

(கலித்தொகை : 111)

என்று தலைவி பதில் சொல்கிறாள்.

"நீ மணந்து கொண்டு எனக்கு ஒர் இல்லத்தை அமைத்துக் கொடுக்க அறியாதவன். பெற்றோர் கட்டிய வீட்டில் இருக்கவே எண்ணுபவன். ஆதலால் நீ உலகில் எதையும் கற்றவன் இல்லை" என்று சொல்கிறாள் தலைவி. இப்பாடலில் சிற்றில் என்ற சொல், வாழும் இல்லத்தைக் குறிக்கும் இல் என்ற சொல் பிறக்கக் காரணமாகி விடுகிறது. 'விளையாட்டு வினை' ஆகிறது. திருமணத்தை நிகழ்த்தத் தலைவனைக் குறிப்பினால் தூண்டுகிறாள் தலைவி.

உவமை

ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுச் சொல்லும் உவமை நயத்தை முல்லைத் திணைப் பாடல்களில் மிகுதியாகக் காணலாம். இயற்கையோடு ஒட்டிய உவமை, தெய்வத்தோடு ஒட்டிய உவமை, வாழ்க்கையோடு ஒட்டிய உவமை எனப் பல வகைகளில் உவமைகள் முல்லைப் பாடல்களில் காணப்படுகின்றன.

இயற்கையோடு ஒட்டிய உவமை

ஏறு தழுவும் இடத்து ஓசைக்கு இடி முழக்கம் உவமை ஆகிறது. ஒரு காளையின் நிறத்திற்குப் பட்டுப்பூச்சியின் நிறம் உவமையாகிறது. மணிகளையுடைய மலைகளிலிருந்து விழும் அருவிகள் அழகின் எல்லையைத் தாண்டிய வெண்மையான கால்களை உடைய காளைக்கு உவமையாகின்றன. விண்மீன்களைக் கொண்ட அந்திக் காலத்துச் சிவந்த வானம் சிவந்த காளைக்கு உவமையாகிறது. இவ்வாறு இயற்கையோடு ஒட்டிய பற்பல உவமைகள் முல்லைக்கலியில் நிறைந்து கிடக்கின்றன.

தெய்வத்தோடு ஒட்டிய உவமை

கொல்லும் தொழிலை உடைய சிவபெருமான் சூடிய இளம்பிறை, சிவந்த காளையின் வளைந்த நீண்ட கொம்புக்கு உவமையாகிறது.

கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்

வளையுபு மலிந்த கோடு அணி சேயும்

கம்சன் முதலியவர் தன்மீதுவரவிட்ட குதிரையின் வாயைப் பிளந்து அடித்தான் கண்ணன். அவனைப் போல் தன்மேல் பாய்ந்த சிவந்த காளையின் கொம்பைப் பிடித்துக் கொண்டு, அதன் வலிமையை அடக்குகிறான் ஓர் ஆயன். (கலித்தொகை, 103-15-16; 50-55)

மாவலி வார்த்த நீர் தன் கைகளில் விழுந்த அளவில் பெரிய உருவமாக வளர்ந்தவன் திருமால். அத்திருமாலைப் போன்று மேகம் கடல்நீரைக் குடித்து உலகத்தை வளைத்து, பெரிய மழையைக் கொட்டியது. இந்த உவமையை முல்லைப்பாட்டு,

நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

பாடிமிழ் பனிக்கடல் பருகி வல னேர்பு

கோடு கொண்டெழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும் பெயல் பொழிந்த

(முல் லைப் பாட்டு :3-6)

(பாடு இமிழ் = ஒலி முழங்கும்; பனிக்கடல் = குளிர்ச்சியான கடல்; பருகி = குடித்து; வலனேர்பு = வலப்புறமாக எழுந்து; கொடுஞ்செலவு = விரைந்து செல்லும்; எழிலி = மேகம்; பெரும்பெயல் = மழை) என்று கூறுகிறது.

வாழ்க்கையோடு ஒட்டிய உவமை

ஆயர்தம் வாழ்க்கை முறைகள் உவமை ஆவதும் உண்டு. ஆயர் குலப் பெண்டிர், திரிகையில் அரிசியை இட்டுச் சுழற்றுவார்கள். சுழற்றும் போது ஏற்படும் ஒலி, விரைந்து வரும் தேரின் சக்கரம் மணலை அறுத்துக் கொண்டு வரும் ஒலிக்கு உவமையாகிறது, பெருந்தலைச் சாத்தனாரது அகநானூற்றுப் பாடலில்.

மனையோள்

ஐதுஉணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த

திரிமரக் குரல் இசை கடுப்ப, வரிமணல்

அலங் குகதிர்த் திகிரி ஆழி போழ

வரும் கொல் தோழி !

(அகநானூறு - 224 : 12-15)

(ஐது உணங்கு = பதமாகக் காய்ந்த; வல்சி = அரிசி; முறுக்கு உறுத்த = சுழற்ற; திரிமரம் = திரிகை; கடுப்ப = போல; திகிரி = சக்கரம்; போழ = பிளந்து கொண்டு)

மனைவி பதமாகக் காய்ந்த அரிசியை எடுத்துத் திரிகையில் இட்டுச் சுழற்றுவாள். அதன் ஒலி போல் வரி மணலில் வட்டச் சக்கரம் அறுத்துக் கொண்டு செல்லும் ஓசை தலைவனுக்கு ஒலிக்கிறது.

உள்ளுறை உவமம்

கருப்பொருள்களின் அடிப்படையில் மறைமுகமாக (குறிப்பாக) அமைக்கும் உவமம் உள்ளுறை உவமம் எனப்படும். பொருளைக் கூறாமல் உவமையை மட்டும்வருணனையாகக் கூறும் தன்மையை உள்ளுறை உவமத்தில் காணலாம். தலைவியைக் காணும் ஆசையால் தேரை விரைந்து செலுத்துமாறு தேர்ப்பாகனை வேண்டுகிறான் தலைவன். வாயைக் குவித்துச் சீழ்க்கை ஒலி எழுப்புகிறான் ஓர் இடையன். சிறிய தலையை உடைய ஆட்டுக் கூட்டம் அந்த ஒலியைக் கேட்கிறது.

வேற்றிடத்திற்குச் செல்லாது மயங்கி அந்தக் கூட்டம் அங்கேயே தங்கிவிடுகிறது என்று நற்றிணைப் பாடலில் (142) வரும் கருத்து உள்ளுறை ஆகிறது. வேற்றிடம் புக நினைக்கும் ஆட்டுக் கூட்டம் இடையன் விளித்ததால் இருந்த இடத்திலேயே தங்கி விடுகிறது என்னும் கூற்றில், சோர்வடைந்த தலைவனின் உள்ளம் பாகன் விரைந்து செலுத்தும் தேர் ஒலியால் சோராது தங்குகிறது என்னும் குறிப்புப் பொருள் அமைந்துள்ளது. ஆகவே இது உள்ளுறை உவமம் ஆகும்.

ஒடுங்குநிலை மடிவிளி

சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்

புறவினதுவே (நற்றிணை -142 : 6-8)

(மடிவிளி = சீழ்க்கை ஒலி; தொழுதி = தொகுதி; ஏமார்த்து = மயங்கி; அல்கும் = தங்கும்; புறவு = காடு)

தொகுப்புரை

ஏறு தழுவல், எருமைக் கொம்பை வழிபடல், மூவினம் வளர்த்தல், பால், மோர் விற்றல், விரிச்சி கேட்டல், பாசறையில் மகளிரும் பங்கேற்றல், குரவைக் கூத்திட்டு அரசனை வாழ்த்தல் முதலிய முல்லைத்திணையின் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது. முல்லைப் பாடல்களில் காணப்படும் உள்ளுறை போன்ற இலக்கியச் சுவையைப் புரிந்து சுவைக்க முடிந்தது.

கேள்வி பதில்கள்

1) திணை என்பதன் பொருள் யாது?

விடை : ஒழுக்கம்

2) முல்லைத் திணைக்குரிய முதற்பொருள்கள் யாவை?

விடை : நிலம் - காடும் காடு சார்ந்த இடமும்

பெரும்பொழுது - கார்காலம், சிறுபொழுது - மாலை

3) முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் யாது?

விடை : இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

4) முல்லை அரும்பாகிய பற்களைக் காட்டித் தலைவியைப் பார்த்துச் சிரித்தது எது?

விடை : கார்காலம்

5) முல்லைக்கலி காட்டும் முல்லைத் திணைக்குரிய மலர்கள் யாவை?

விடை : பிடவம், தளவம், தோன்றி, கொன்றை போன்றவை.

6) ஏறு தழுவல் என்றால் என்ன?

விடை : காளைகளைத் தழுவி அடக்குதல்

7) ஏறு தழுவலைக் குறிக்கும் அகநூல் எது?

விடை : கலித்தொகை

8) ஆயர் வளர்க்கும் மூவினம் யாவை?

விடை : எருமை, பசு, ஆடு.

9) விரிச்சி கேட்டல் என்றால் என்ன?

விடை : தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டு நிற்றலை விரிச்சி கேட்டல் என்பர்.

10) 'இன்னே வருகுவர் தாயர்'- என்பதன் பொருள் யாது?

விடை : இப்பொழுதே தாய்ப் பசுக்கள் வரும் என்பது அதன் பொருள்.

11) தேர் மணியின் நாக்கைத் தலைவன் இழுத்துக் கட்டுவது ஏன்? இதனைக் கூறும் இலக்கியம் எது?

விடை : துணையுடன் கூடி இன்பம் துய்க்கும் வண்டுகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப் பிரித்து விடக் கூடாது என்பதற்காகத் தேர் மணியின் நாக்கை இழுத்துக் கட்டுகிறான் தலைவன். இதனைக் கூறும் இலக்கியம் அகநானூறு.

12) முல்லைத் திணையில் எவ்வகையான உவமைகள் இடம் பெறுகின்றன?

விடை :

1. இயற்கையோடு ஒட்டிய உவமை

2. தொழிலோடு ஒட்டிய உவமை

3. வாழ்க்கையோடு ஒட்டிய உவமை

ஆசிரியர் : முனைவர். நா. இளங்கோவன்

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

2.95454545455
ஸரோஜாசகாதேவன் Jul 10, 2020 01:43 PM

நான் தேடிய விளக்கம் கிடைத்தது.பயனடைந்தேன்

வே அரவிந்தன் Sep 23, 2019 12:20 PM

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடைகளும் எனக்கு சாதகமாக இருந்தது மிக்க நன்றி

இளையராஜா Jun 21, 2019 11:23 PM

அருமை

Selva Apr 30, 2019 09:49 PM

அருமை மிக அருமை.......

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top