பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்

இப்பகுதி சங்க இலக்கியங்கள் பற்றியும் சங்கம் பற்றியும் கூறுகிறது. முச்சங்கங்களின் வரலாற்றைக் கூறுகிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது.

இப்பகுதி என்ன சொல்கிறது?

இப்பகுதி சங்க இலக்கியங்கள் பற்றிச் சொல்கிறது. சங்கம் பற்றி விளக்கம் கூறுகிறது. முச்சங்கங்களின் வரலாற்றைக் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்கிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது. சங்க இலக்கியத்தின் யாப்புப் பற்றியும், உவமைகள் பற்றியும் கூறுகிறது. சங்கப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள், வாழ்வியல் செய்திகள் ஆகியவற்றைக் கூறுகிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

* சங்கம் என்றால் என்ன என்பதை அறியலாம்.

* முச்சங்கங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

* எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

* சங்க இலக்கியங்களில் அக இலக்கியங்கள் எவை என்பதையும், புற இலக்கியங்கள் எவை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

* சங்ககால வரலாற்றுச் செய்திகளையும், வாழ்வியல் செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.

முன்னுரை

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம் என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறும் நல்லுலகம்

என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம். தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல குறுநில மன்னர்களும் ஆண்டதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. சேர நாட்டிற்கு வஞ்சி மாநகரும், சோழ நாட்டிற்குப் பூம்புகாரும், பாண்டிய நாட்டிற்கு மதுரையும் தலைநகர்களாக இருந்துள்ளன. மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன.

அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம். தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம் கூறுகின்றது. இந்த இனிமையான தமிழ் மொழியைச் சங்கம் மூலம் புலவர்களும் கற்றறிந்தோரும் சிற்றரசர்களும், பேரரசர்களும் பல்வேறு வகைப்பட்ட செய்யுட்களைப் பாடி வளர்த்தனர். புலவர்கள் அரசர்களால் பெரிதும் போற்றப்பட்டனர்.

சங்க காலம் - விளக்கம்

பல்லாயிரம் ஆண்டுக் காலப் பழமையான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட மொழியாகத் தமிழ் மொழி விளங்குகின்றது. அதனால் அம்மொழி நீண்டகால இலக்கிய வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. இதில் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலம் சங்க காலமாகும்.

முச்சங்கங்கள்

பாண்டிய மன்னர்கள் தொடக்கத்தில் கடல் கொண்ட தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அங்கு, தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்டு தமிழ் இலக்கிய ஆய்வும், செய்யுள் இயற்றுதலும் நடைபெற்றன. அதுவே முதற் சங்கம் எனப்பட்டது. தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது.

கபாடபுரமும் கடலால் அழிவுற்ற பிறகு இன்றைய மதுரைக்குப் பாண்டியர் தலைநகரை மாற்றினர். இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்று கி.பி.200 வரை நடைபெற்றது. இது கடைச்சங்கம் என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு மூன்று சங்கங்கள் நடத்தப் பெற்று, புலவர்களும், அரசர்களும் பல்வேறு செய்யுட்களைப் பாடி, தமிழை வளர்த்தனர். இம் முச்சங்கங்களின் காலமே சங்க காலம் என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது. இனி ஒவ்வொரு சங்கம் பற்றியும் விவரமாகக் காணலாம்.

சங்கம் என்ற பெயர்

சங்கம் என்ற பெயரை முதலில் ஆராய்வோம். சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் சங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. கி.பி.400 வாக்கில் வச்சிரநந்தி என்பவர் நான்காம் சங்கம் தொடங்கினார். பிறகு சமணத் துறவிகள் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சமயத் தொண்டு ஆற்றினர். அந்தச் சொல்லைத் தான் பிற்கால இலக்கிய ஆசிரியர்கள் கி.பி.200க்கு முன் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்று அழைத்தனர். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் சங்கம் என்று கூறினர். மதுரையில் சங்கம் போன்ற அமைப்பு ஒன்று இருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் பல்வேறு பெயர்களில் சுட்டுகின்றன. பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை,

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை(அடிகள் 66-67)

என்று கூறுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது மதுரையில் தமிழ் நிலை பெற்றிருந்தது என்பது புலனாகிறது. மதுரைக் காஞ்சி எனும் இலக்கியம்

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன்(அடிகள் 761-763)

என்று கூறுவதைக் காணும்போது நிலந்தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியன் அவையில் புலவர்கள் ஒருங்கிணைந்து செய்யுள் இயற்றினர் எனப் புலனாகிறது.

புறநானூற்றில் 72ஆம் பாடல்,

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைகஎன் நிலவரை

என்று கூறுகிறது. இதில் சங்கத்துத் தலைவராக மாங்குடி மருதன் என்னும் புலவர் இருந்ததும், புலவர்கள் செய்யுள் பாடியதும் கூறப்பட்டுள்ளது. காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரம் “தென்தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரை” என்றும், மணிமேகலை “தென் தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்” என்றும் கூறுகிறது.

கி.பி. 600 வாக்கில் வாழ்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானைச் சங்கத்தோடு இணைத்து போற்றிப் பாடுகிறார். தருமி என்னும் ஏழைப் புலவனுக்குக் கொங்குதேர் வாழ்க்கை' என்ற குறுந்தொகைப் பாடலை எழுதிக் கொடுத்தார் என்பதை,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண் (6.76.3)

என்று கூறுகின்றார்.

திருநாவுக்கரசருக்குப் பின் வந்த பல்வேறு இலக்கிய ஆசிரியர்களும் சங்கம் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். சின்னமனூர்ச் செப்பேடு, சங்கத்தில் இலக்கியம் இயற்றும் பணியோடு, மொழிபெயர்ப்புப் பணியும் நடைபெற்றதாக ஒரு செய்தியைக் கூறுகிறது.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும்

மதுராபுரிச் சங்கம் வைத்தும்

என்று கூறுவதால் மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பணியும் சங்கத்தில் நடந்ததை நாம் அறிகிறோம்.

வடமொழி இலக்கியமாகிய வால்மீகி இராமாயணம் சங்கம் இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றது. அந்த இலக்கியத்தில் சீதையைத் தேடச் சென்ற வானரரை நோக்கிச் சுக்கிரீவன் "பொதிகை மலையில் அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கம் உள்ளது; அதனைக் காண்பீர்” என்று கூறியதாக வருகிறது. பிளினி, தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி உரைக்கின்றனர். இலங்கை வரலாற்று நூல்களான மகாவம்சம், இராஜாவளி, இராஜரத்னாகிரி போன்ற நூல்களும் சங்கம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.

முதற் சங்கம்

கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89 அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது. இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.

இடைச்சங்கம்

தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற 3700 புலவர்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும்.

கடைச் சங்கம்

கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர்.

இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும். முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு. 500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்க முடியும்.

சங்க இலக்கியங்கள்

சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்ததாகப் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தாலும், சங்கத்திலே அமர்ந்து புலவர்கள் பாடிய பாடல்கள் சிலவாகத் தான் இருக்க முடியும். பெரும்பாலான பாடல்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும். அவை கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலத்தில் பாடப்பட்டவையாக இருக்கலாம். சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது. ஏராளமான பாடல்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அழிந்துபோக, எஞ்சியவற்றைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்காலத்து அரசர்கள் புலவர்களின் துணையோடு செயல்பட்டனர்.

அவ்வாறு தொகுக்கப்பட்டவையே எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். இக்காலப்பகுதியில் படைக்கப்பட்ட இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது. எட்டுத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும், பத்துப் பெரிய பாடல்கள் பத்துப் பாட்டு என்றும் பெயர் பெற்றன.

தொல்காப்பியம்

சங்க இலக்கியங்களை நாம் அறிந்து கொள்வதற்கு முன்னால் சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் பற்றி அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும். சங்க இலக்கியங்களை அகம், புறம் எனப் பிரித்துப் பார்ப்பதற்கும், தமிழ் மொழியின் முழுமையான இலக்கணத்தை அறிந்து கொள்வதற்கும் தொல்காப்பியம் துணை நிற்கிறது. சங்க இலக்கியங்களுக்கு முன்னால் பல நூறு ஆண்டுக்காலத் தமிழிலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். கடல் பெருக்கெடுத்து ஊர்களை அழித்ததாலும், ஓலைச் சுவடிகள் பல்வேறு காரணங்களால் அழிந்ததாலும் அவ்விலக்கியங்கள் இன்றைக்குக் கிடைக்கவில்லை.

அவ்விலக்கியங்களுக்கு அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அகத்தியரின் மாணவரான தொல்காப்பியர் தொல்காப்பியத்தை எழுதியதாகவும் தமிழ் ஆய்வாளர்கள் இறையனார் களவியல் உரையை அடிப்படையாகக் கொண்டு கூறுகின்றனர். தொல்காப்பியர் கி.மு. 500 அளவில் வாழ்ந்ததாக, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியமே சங்க இலக்கியத்தின் இலக்கணமாகத் திகழ்ந்தது. தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இலக்கண நூலாகும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன அவை. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

எழுத்ததிகாரம்

1. நூல் மரபு

2. மொழி மரபு

3. பிறப்பியல்

4. புணரியல்

5. தொகை மரபு

6. உருபியல்

7. உயிர் மயங்கியல்

8. புள்ளி மயங்கியல்

9. குற்றியலுகரப் புணரியல்

என ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டு எழுத்தின் பிறப்பு, தொகை, வகை, பெயர் மயக்கம், சொற்களின் புணர்ச்சி ஆகியவற்றை விளக்குகின்றது. இதில் 483 நூற்பாக்கள் உண்டு.

சொல்லதிகாரம்

தமிழ்ச் சொற்றொடர்களின் ஆக்கம், வேற்றுமைகள், பெயர், வினை, இடை, உரி என நால்வகைச் சொற்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. இதில் 463 நூற்பாக்கள் உள்ளன. இது

1. கிளவியாக்கம்

2. வேற்றுமையியல்

3. வேற்றுமை மயங்கியல்

4. விளிமரபு

5. பெயரியல்

6. வினையியல்

7. இடையியல்

8. உரியியல்

9. எச்சவியல்

என்று 9 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொருளதிகாரம்

வாழ்க்கைக்கும், இலக்கியத்திற்கும் இலக்கணம் கூறும் பகுதியாகும். உலகில் எல்லா மொழிகளும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கூற, தொல்காப்பியம் தமிழில் வாழும் நெறிக்கு இலக்கணம் கூறுகிறது. பொருளதிகாரத்தில் 665 நூற்பாக்கள் உள்ளன. தொல்காப்பியர் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதற்கான இலக்கணத்தைக் கூறியுள்ளார். பொருளதிகாரத்தில் அவர்,

1. அகத்திணையியல்

2. புறத்திணையியல்

3. களவியல்

4. கற்பியல்

5. பொருளியல்

6. மெய்ப்பாட்டியல்

7. உவமவியல்

8. செய்யுளியல்

9. மரபியல்

என ஒன்பது இயல்களாகப் பிரித்து விவரித்துள்ளார்.

இந்த இலக்கண நூல்தான் தமிழர் நாகரிகத்தை உலகின் தலைசிறந்த நாகரிகமாக எடுத்து விளக்குவதற்குச் சான்றாக நிற்கின்றது. மேலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், கம்பனின் இராமகாதை ஆகிய செவ்வியல் காவியங்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, பெரிய புராணம் முதலிய பிற தமிழ்க் காப்பியங்களைப் பார்ப்பதும் இதன் அடிப்படையில் அதுசரியான காப்பியமே என்றோ காப்பியம் அன்று என்றோ மதிப்பிடுவதும் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகையில் உள்ளவை எட்டு, தொகை நூல்களாகும். இவற்றைக் குறிக்கும் பழம் பாடல் ஒன்று உள்ளது. இப்பாடலை மனப்பாடம் செய்து கொண்டால் இந்நூல்களின் பெயர்களை நாம் நன்கு நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை.

இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகநூல்களாகும். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்களாகும். பரிபாடல் அகமும், புறமும் கலந்த நூலாகும்.

பத்துப்பாட்டு

சிறிய பாடல்கள் எல்லாம் எட்டுத்தொகையுள் அடங்கிவிட, பத்துப் பெரிய பாடல்களின் தொகுதி பத்துப்பாட்டு எனப் பெயரிடப்பட்டது

இப்பத்துப் பாடல்களையும் குறிக்கும் பழம்பாடல் ஒன்று உள்ளது.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

இவ்வெண்பாவில் உள்ள முருகு என்று கூறப்படுகின்ற திருமுருகாற்றுப்படை, பொருநாறு என்று சொல்லப்படுகின்ற பொருநர் ஆற்றுப்படை, பாணிரண்டு என்று கூறப்படுகின்ற சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கடாம் என்று அழைக்கப்படுகின்ற மலைபடுகடாம் ஆகியவை ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இவை புறப்பாடல்கள் ஆகும். இவை தவிர மதுரைக்காஞ்சியும் புறப்பாடல் ஆகும். முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவை அகப்பாடல்களாகும். நெடுநல்வாடை அக இலக்கியமா, புற இலக்கியமா என்ற ஆய்வு இன்னும் நிகழ்ந்து வருகின்றது. இவற்றுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும். மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும். இப்பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இணைந்து பதினெண்மேற்கணக்கு எனவும் பெயர் பெறும்.

சங்க இலக்கியத்தின் சிறப்புப் பிரிவுகள்

சங்க இலக்கியங்களை அகம், புறம் என்று பிரிப்பர். காதலைப் பற்றிப் பாடும் பாடல்களை அகம் என்றும், காதல் தவிர, பிற செய்திகளைப் பாடும் பாடல்களைப் புறம் என்றும் கூறுவர். இதற்கான இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறுகிறது. அகப்பாடல்கள் கற்பனையான தலைவன், தலைவியின் காதலைப்பற்றி விளக்கியுரைக்கின்றன. புறப்பாடல்கள் நாட்டை ஆளும் அரசனின் வீரம், கொடை, சமூகத்திற்கு அரசன் ஆற்ற வேண்டிய கடமைகள், கல்வியின் சிறப்பு போன்றவற்றைக் கூறுகின்றன. பெரும்பாலான புறப்பாடல்கள் அரசனின் புகழைப் பாடுவனவாகவே உள்ளன. பூம்புகார், உறையூர், மதுரை, வஞ்சி போன்ற நகரங்களைத் தவிர, பெரும்பாலும் சிற்றூர்களே அக்காலத்தில் இருந்தமையால் மக்கள் இயற்கையோடு இயைந்த சீரிய வாழ்க்கையை வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

அகப்பாடல்கள்

ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதலிப்பது, காதலைத் தோழி மூலம் செவிலித்தாய், நற்றாய் ஆகியோருக்கு மெல்லத் தெரியப்படுத்துவதும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளன. இவ்வாறு காதலைத் தெரியப்படுத்துவதற்கு அறத்தொடு நிற்றல் என்ற பெயரும் உண்டு. பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத சூழலில் காதலனும் காதலியும் ஊரை விட்டு வெளியூர் சென்று விடுதல் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர். அக்காலத்தில் காதலித்த பெண்ணை மணந்து அவளோடு இன்பத்துடன் வாழ்ந்து வரும் தலைமகன் வேறு பெண்களை நாடிச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. இதற்குப் பரத்தையிற் பிரிவு என்று பெயர். அதனால் தலைவி அவனிடம் சினம் கொண்டு ஊடல் கொள்ளுதலும் பழக்கமாக இருந்துள்ளது. அகப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனைப் பாடல்களாக இருந்தாலும், அக்கால மக்களின் காதல் வாழ்க்கையை முழுமையாகவே வெளிப்படுத்துகின்றன.

புறப்பாடல்கள்

புறப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனையாகப் பாடப்படவில்லை. இரு அரசர்களுக்கிடையே போர் ஏற்படும் போது புலவர்கள் தலையிட்டுப் போரைத் தடுத்துள்ளனர். அரசன் மக்களிடம் அளவுக்கதிகமாக வரி வாங்கும் நேரத்தில் புலவர்கள் தலையிட்டு அரசனுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிகழ்வுகள் புறப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. புறப்பாடல்களில் இயற்கைக்கு மீறிய செய்திகள் கூறப்படவில்லை. சங்க கால வரலாற்றைத் தொகுப்பதற்கு, சங்கப் புறப்பாடல்கள் ஓரளவுக்குத் துணை நிற்கின்றன. அரசர்கள் தமக்குள் போரிட்டுக் கொண்டாலும் புலவர்களைப் பெரிதும் மதித்துள்ளனர். யாருமே தொட அஞ்சும் முரசு கட்டிலில் ஏறிப்படுத்து உறங்கிய மோசிகீரனார் என்னும் புலவரைத் தண்டிக்காது, அவர் தூங்கி எழுகின்றவரை கவரி கொண்டு அவருக்கு விசிறினான் சேரமன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று புறநானூறு கூறுகிறது.

அரசன் கோப்பெருஞ்சோழன் மேல் நட்புக் கொண்டிருந்த காரணத்தால், அவன் வடக்கிருந்து உயிர் துறக்கும் நேரத்தில் புலவர் பிசிராந்தையாரும் அவனுடன் உயிர் துறந்தார் எனவும் செய்தி உண்டு. பேகன் என்னும் அரசன் தன் மனைவி கண்ணகியை விட்டு நீங்கி இன்னொருத்தியுடன் வாழ்ந்ததை மாற்றி, கண்ணகியுடன் சேர்த்து வைத்தனர் கபிலரும் பரணரும் என்ற செய்தி கூறப்படுகிறது. இவ்வாறு அரச குடும்பங்களின் துன்ப நிகழ்வுகளிலும் புலவர்கள் பங்கு கொண்டு செயல்பட்டமை குறித்த செய்திகள் புறநானூற்றில் உண்டு. மேலும் மலையமான் திருமுடிக்காரியின் சிறு குழந்தைகளைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலில் இட்டு மிதிக்கச் செய்ய முற்பட்டபோது கோவூர்கிழார் கூறியதால் அக்குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர் என்ற செய்தியும் புறநானூற்றில் இருக்கிறது.

சங்க இலக்கியத்தின் யாப்பு

சங்க இலக்கியப் பாடல்கள் தனிப்பாடல்களாக அமைந்துள்ளவை இவற்றைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்று கூறுவர். எட்டுத் தொகை பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் இப்பதினெண்மேற்கணக்கு நூல்களும் மூவகைப் பா வகைகளில் அமைந்துள்ளன. அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்னும் பாவகைகளில், பெரும்பாலான சங்கப்பாடல்கள் ஆசிரியப்பா வடிவிலேயே பாடப்பட்டுள்ளன. ஆசிரியப்பா என்றாலும் அகவற்பா என்றாலும் ஒன்றே ஆகும். இப்பாட்டு வகை இசையுடன் பாடவும் ஏற்ற வகையாகும். ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லும் சிறப்புப் பெற்றதால் இது ஆசிரியப்பா ஆயிற்று எனவும் கூறுவர்.

ஆசிரியப்பாவை அடுத்து வஞ்சிப்பா இசையோடு பாடுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. பட்டினப்பாலை ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் இணைந்து பாடப்பெற்ற பாடலாகும். 301 அடிகளை உடைய இப்பாவில் 163 அடிகள் வஞ்சிப்பா அடிகளாகவும் 138 அடிகள் ஆசிரியப்பா அடிகளாகவும் உள்ளன. புறநானூற்றில் 2 ஆம் பாடலில் உள்ள

மண்டிணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும்...

என்னும் அடிகள் வஞ்சிப்பா வகையைச் சார்ந்தவை.

கலிப்பாவில் அமைந்த சங்க இலக்கியம் கலித்தொகையாகும். கலித்தொகையில் உள்ள 150 பாடல்களும் கலிப்பாவாலேயே ஆகியவை. நாடக முறையில் அகப்பொருளைப் பாடுவதற்கு இப்பாடல் வகை பயன்பட்டது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் வெண்பா யாப்பிலும், ஆசிரியப்பா யாப்பிலும் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் வெண்பா தனிச் சிறப்புப் பெற்ற யாப்பாக விளங்கவில்லை. சங்க காலத்திற்குப் பிறகே வெண்பா யாப்பில் பாடும் பாடல்கள் நிறையப் பாடப்பட்டன.

சங்க இலக்கிய உவமைகள்

சங்க இலக்கியங்கள் உவமைகளால் சிறப்புற்ற இலக்கியங்களாகும். சங்க காலத்தில் தோன்றிய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் உவமைக்காகவே ஓர் இயல் உண்டு. அது உவம இயல் எனப்படும். சங்க அக இலக்கியங்களிலும், புற இலக்கியங்களிலும் பெரும்பாலான பாடல்கள் உவமைகளோடு மட்டுமே விளங்குகின்றன. எளிய உவமைகளால் மிகச் சிறந்த பொருளை விளங்க வைப்பது சங்க இலக்கியங்களின் சிறப்பியல்புகளுள் ஒன்று. சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி போர்க்களத்தில் விரைவாக வாளைச் சுழற்றிப் போரிடுகிறான். அவன் போர்க்களத்தில் எவ்வாறு வாளைச் சுழற்றுவான் என்பதற்குச் சாத்தந்தையார் என்ற புலவர்,

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றெனப்

பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ

- (புறம், 82)

என்று உவமை கூறுகிறார். அதாவது ஊரிலே விழா நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கு உதவப் போக வேண்டும்; மனைவிக்குப் பிள்ளைப்பேறு மழை பெய்து கொண்டிருக்கிறது. பிறக்கும் குழந்தையைத் தரையில் போடமுடியாது. அதற்காகக் கட்டில் பின்னுகின்றான் ஓர் ஏழைத் தொழிலாளி. இவ்வளவு செயல்களையும் ஒருசேரச் செய்ய மனம் விழையும் நேரத்தில் கை எவ்வளவு வேகமாகக் கட்டில் பிணிக்குமோ அதே வேகத்தில் சோழன் வாள் சுழற்றுகின்றான் என்கிறார் புலவர்.

கலித்தொகையில் ஓர் உவமை. பாலை நிலத்தின் கொடுமையைக் கூற வந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர்,

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழல்இன்றி

யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல்

வேரொடு மரம்வெம்ப, விரிகதிர் தெறுதலின்

(பாடல் - 10)

எனப் பாடியுள்ளார். இளமையிலேயே வறுமையுற்றவன் போலத் தளிர்கள் வாடிய கொம்புகளை உடையனவாக மரங்கள் நின்றன. கொடுத்தற்கு மனம் இல்லாதவனுடைய (சிறுமனம் கொண்ட கருமி) செல்வம், தன்னைச் சேர்ந்தார்க்குப் பயன்படாதவாறு போலத்தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நிழலின்றி இருந்தன. யாவரிடத்தும் ஒழுக்கத்தைக் கடந்து தீங்கு செய்பவனின் புகழ்கெட்டு, இறுதிக் காலத்தே அவன் சுற்றத்தார் மட்டுமன்றி அவனும் கெடுவான். அதுபோல் கதிரவனின் கதிர்கள் சுடுதலினால் கிளைகள் மட்டுமன்றி, மரங்கள் வேரொடே வெம்பி நின்றன என்று மிகச் சிறப்பான உவமையால் விளக்குகிறார். இவ்வாறு சங்க இலக்கியம் முழுமையும் பல்வேறு சிறந்த உவமைகளோடு பாடல்கள் இயற்றப்பட்டிருப்பதை அறியலாம்.

தொகுப்புரை

  • உலக மொழிகளில் முதன்மை மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்மொழி 2500 ஆண்டு காலப் பழைய இலக்கியங்களைக் கொண்டது என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
  • தமிழ் வளர்ப்பதற்குப் பாண்டிய மன்னர்கள் ஓர் அமைப்பினை ஏற்படுத்தி வைத்திருந்தனர் என்பதையும், அவ் அமைப்பிற்குப் பிற்காலத்தில் சங்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டோம்.
  • அக்காலத்தில் புலவர்கள் பாடிய பாடல்கள் அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என்று பிரித்து அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொண்டோம்.
  • சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டமையை நாம் அறிந்து கொண்டோம்.
  • சங்ககால வாழ்வியலையும், சங்க இலக்கிய யாப்பு, சங்க இலக்கியத்தில் உவமைகள் ஆகியவை பற்றியும் தெரிந்து கொண்டோம்.

கேள்வி பதில்கள்

1. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே... மூத்தகுடி' என்று கூறிய நூல் எது?

விடை : புறப்பொருள் வெண்பாமாலை

2. முச்சங்கங்கள் பற்றி விரிவாகக் கூறிய நூல் எது?

விடை : இறையனார் களவியல் உரை

3. முதற் சங்கம் பற்றிக் கூறுக.

விடை : முதற்சங்கம் கடல்கொண்ட தென்மதுரையில் நிலவியது. இச்சங்கம் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக 89 அரசர்களால் 4440 ஆண்டுகள் நடத்தப்பெற்றது. 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்தனர். பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்கள் பாடப்பெற்றன. இச்சங்கத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், முருகவேள், அகத்தியர் முதலிய புலவர்கள் இருந்தனர்.

4. இடைச்சங்கம் பற்றி விளக்குக.

விடை : இடைச்சங்கம் கபாடபுரத்தில் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப்பெற்று முடத்திருமாறன் என்பவன் காலத்தில் முடிவுற்றது. 59 மன்னர்களால் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர் போன்ற 3700 புலவர்கள் இருந்தனர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் போன்றவை.

5. இன்றைய சங்க இலக்கியங்கள் எந்தச் சங்ககாலத்தைச் சேர்ந்தவை?

விடை : இன்று கிடைக்கக் கூடிய சங்க இலக்கியங்கள் கடைச் சங்க காலத்தைச் சார்ந்தவை.

6. மாங்குடி மருதன் யார்?

விடை : மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சங்கத்தில் இருந்த தலைமைப் புலவர்.

7. சின்னமனூர்ச் செப்பேடு சங்கம் பற்றி என்ன கூறுகிறது?

விடை : மகாபாரதம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மொழிபெயர்க்கப் பெற்றதாகக் கூறுகிறது.

8. சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாக விளங்கிய நூல் எது?

விடை : சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாக விளங்கிய நூல் தொல்காப்பியம்

9. தொல்காப்பியம் எதற்குப் பயன்படுகிறது?

விடை : தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றிற்கு இலக்கணம் கூறுகிறது. இலக்கியங்களை அகம், புறம் எனப் பிரித்து வகைப்படுத்துவதற்குப் பயன்படுகின்றது.

10. எட்டுத்தொகையில் அகப்பாடல்கள் யாவை?

விடை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை எட்டுத்தொகையில் உள்ள அகநூல்களாகும்.

11. பத்துப்பாட்டில் ஆற்றுப்படைப் பாடல்களைக் கூறுக.

விடை : திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என 5 நூல்கள்.

12. அறத்தொடு நிற்றல் என்றால் என்ன?

விடை : தலைவியின் காதலைத் தோழி, செவிலித் தாய் மூலம் தாய்க்குத் தெரியப்படுத்துதல் அறத்தொடு நிற்றல் எனப்படும்.

13. கலிப்பா யாப்பில் அமைந்துள்ள எட்டுத்தொகை நூல் எது?

விடை : கலிப்பாவில் அமைந்துள்ள எட்டுத்தொகை நூல் கலித்தொகை ஆகும்.

ஆசிரியர்கள் :முனைவர். ச. மணி & முனைவர். நை.மு. இக்பால்

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு

3.0
T. Soundarya Feb 12, 2020 09:13 PM

Nanraka irunthathu..... Ithan mulam naan palavatrai therinthu konten..... Nantikal pala

ஷன்மதி Nov 26, 2019 06:19 PM

இது மிகவும் அருமையான பதிவு அனைவருக்கும் பயன்படும் வண்ணம் மிக எளிய முறையில் இருக்கிறது..... இப்பதிவினை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி........

காமராஜ் Nov 25, 2019 08:59 PM

மிக்க நன்றி

சிலம்பரசன் Oct 03, 2019 08:21 AM

தயவு செய்து போட்டி தேர்வுக்கு தேவையான பதிவுகளை வழங்கவும். நன்றி!!

தனக்கொடி.ஸ் Jun 27, 2019 02:10 PM

சூப்பர் இந்த பொக்கிஷ பதிவை இன்னும் எளிமையாக்கி மாத நூல் மற்றும் youtube போன்ற இணையங்களில் பதிவேற்றினால் மேலும் பல பயனடைவர் . நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top