பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழர் வீரம் - 11 முதல் 15

தமிழர் வீரம் எனும் நூலின் 11 முதல் 15 வரையுள்ள பகுதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வீர மாதர்

வீரத் தாய்

தமிழ் நாட்டில் பெண்களும் மனத்திண்மை உடைய வராய் விளங்கினார்கள்; தன் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர்.

வாளெடுத்த தாய்

வயது முதிர்ந்து, வற்றி உலர்ந்து, தள்ளாத நிலையில் இருந்தாள் ஒரு தாய். அவள் மகன் போர் புரியச் சென்றான். அவன் வெற்றி பெற்று வருவான் என்று எண்ணி எண்ணி, அவள் உள்ளம் தழைத்திருந்தாள். நாள்தோறும் மாலைப் பொழுதில் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஒளியிழந்த கண்களால் அவன் வரும் வழியை நோக்கியிருந்தாள். ஒரு நாள் அவள் அடிவயிற்றில் இடி விழுந்தாற்போல், "உன் மகன் பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடினான்" என்று சிலர் சொல்லக் கேட்டாள்; உடனே வீராவேசமுற்று எழுந்தாள்; வீட்டினுள்ளே ஓடினாள்; ஓர் அரிவாளை எடுத்தாள்; அதனைக் கையிற் பிடித்துக்கொண்டு போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள்; "என் மகன் பேடியாய்ப் புறங்காட்டி ஓடியது உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய மார்பை இவ்வாளால் அறுத்திடுவேன்" என்று மனங்கொதித்துக் கூறினாள்; போர்க்களத்தில் பிணங் களினூடே செல்லும்பொழுது தலை வேறு, உடல் வேறாய்க் கிடந்த தன் மைந்தனைக் கண்டாள்; அவ்வுருவத்தைச் சேர்த்தெடுத்து அணைத்தாள்; ஆனந்தம் உற்றாள்; மகனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் அப்போது பெரியதோர் இன்பமுற்றாள். [1]

ஆடவரும் ஆண்மையும்

ஆடவர் என்று பெயர் படைத்தார் எல்லாம் ஆண்மை யுடையரா யிருத்தல் வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. 'பிள்ளையைப் பெற்று வளர்த்தல் நற்றாயின் கடமை; சீலனாக்குதல் தந்தையின் கடமை. வாள் எடுத்து வீசி, வலிய யானையைக் கொன்று வருதல் அப் பிள்ளையின் கடமை' என்று பாடினார் பொன்முடியார் என்னும் புலமை சான்ற தமிழ் வீரத்தாய்.[2]

களிறெறிந்த காளை

நால்வகைப் படையும் உருத்துநின்று போர் புரியும் செருக்களத்தில் ஆண் யானைகளை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டது. "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்" என்றார் திருவள்ளுவர்.[3] ஒரு வீரன் வீறிட்ட ஆனையின்மீது தன் வேலை விட்டெறிந்தான். அஃது அடிபட்டு விழுந்தது. அப்பொழுது மற்றொரு யானை அவனைத் தாக்க வந்தது. இன்னொரு வேல் கிடைத்தால் இந்த யானையையும் முடித்திடலாமே என்று அங்குமிங்கும் பார்த்தான். அந் நிலையில் அவன் மார்பில் தைத்திருந்த வேல் ஒட்றைக் கண்டான். அதுவரையும் போர் வெறியில் தன் மேனியிற் பாய்ந்திருந்த வேலையும் அறியாதிருந்த வீரன், அதை ஆர்வத்தோடு பறித்து இழுத்தான்; வேழத்தைக் கொல்ல ஒரு வேல் கிடைத்ததே என்ற மகிழ்ந்தான்.

ஒரு தாய் பெற்ற இன்பம்

போர்க்களத்தில் யானையுடன் பொருது உயிரிழந்த வீரரும் பெரும் புகழ் பெற்றார்கள். நெடுங்காலம் பிள்ளையில்லா ஒரு மாது முதுமைப் பருவத்தில் ஒரு புதல்வனைப் பெற்றாள். மலடி பெற்ற மகன் என்று ஊரார் மறைவாகப் பேசினர். அம் மகன் காளைப்பருவம் எய்தியபோது தாயின் தலை கொக்கிறகு போல் வெளுத்தது. அந் நிலையில் நாட்டிலே ஒரு போர் மூண்டது. போர்க்களம் செல்ல ஆசைப்பட்டான் மைந்தன். தன் முதுமையும் கருதாது, அவன் அருமையும் பாராது உடனே ஆசி கூறி அனுப்பினாள் அத் தாய். அமர்க்களத்தில் ஒரு யானையோடு போர் செய்தான் அவ் வீரன்; அவ் விலங்கைக் குத்திக் கொன்றான்; அந்தக் களத்தில் தானும் விழுந்து மடிந்தான். அச் செய்தியைக் கேட்டாள் தாய்; பிறவிப் பயனைப் பெற்றவள்போல் பேரின்பம் உற்றாள்.

"களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே"

என்று அவ் வீரத் தாயைப் புகழ்ந்தார் ஒரு புலவர்.

வயிற்றை அறுத்த வீரத்தாய்

இத்தகைய இன்பம் கிட்டாதவள் மற்றொரு தாய். அவள் மகனும் போர்க்களம் போந்தான். ஆனால், பகைவரை வென்றானல்லன். ஒரு யானையின் மீது வேற்படையை வீசினான். அவ் யானை விழுந்து படவில்லை; வேலோடு ஓடிவிட்டது. அப்போது வெறுங் கையனாய்த் திரும்பினான் மைந்தன்; வீடு வந்து சேர்ந்தான். போர்க்களத்தில் நிகழ்ந்ததை அறிந்தாள் அவன் தாய்; மிக வருந்தினாள்; 'இதுவரை இவ்வாறு யானையைப் போகவிட்டுப் புறங்காட்டித் திரும்பியவன் என் குடியில் யாருமில்லை. என்றுமில்லாத வசை இன்று உன்னால் வந்தடைந்ததே!'

"எம் இல் செய்யாப் பெரும்பழி செய்த எல்லாக் காளையை ஈன்ற வயிறே" [5]

என்று மனம் நொந்து,"இவனைப் பெற்ற பாழும் வயிற்றைப் பீறி எறிவேன்" என்று சீறி எழுந்தாள். மான வீரம் அவள் பேச்சில் மணக்கின்றதன்றோ?

வீரப் புலி

ஒரு சிற்றூரில் குடிசையில் வாழ்ந்தாள் மற்றொரு மாது. அவளைக் காண வந்தாள் ஓர் இள நங்கை. "தாயே! தள்ளாத வயதில் இக்குடிசையில் தன்னந்தனியாக இருக்கின்றாயே. உன் மகன் எங்கே?" என்று கேட்டாள். "அம்மா, என் மகன் எங்கே போனானோ நான் அறியேன். புலியிருந்த குகை போல் அவனைப் பெற்ற வயிறு இது. இங்குக் காணாவிட்டாலும் அவனைப் போர்க்களத்திலே காணலாம்" என்றாள் வீரத் தாய்.[6]

வீர உள்ளம்

ஓர் ஊரிலே கடும்போர் நடந்தது. வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போந்தான். மாதர், விருப்புடன் ஆடவரை வழி அனுப்பினர். ஒரு மாது, முதல் நாள் நடந்த போரில் தமையனை இழந்தாள்; மறுநாள் நடந்த போரில் கணவனை இழந்தாள். பின்னும் போர் நின்ற பாடில்லை. குடும்பத்தில் சிறு பையன் ஒருவனே எஞ்சி நின்றான். காலையில் போர்ப் பறை முழங்கிற்று; வீரரைப் போர்க்களத்திற்கு அழைத்தது; அது கேட்டு எழுந்தாள் அம் மாது. இரு நாளிலும் போர் புரிந்து இறந்து பட்ட தமையனையும் தலைவனையும் நினைந்து அவள் தயங்கவில்லை. அருமைப் பிள்ளையை அன்போடு அழைத்தாள்; வெண்மையான ஆடையை உடுத்தாள்; தலையைச் சீவி முடித்தாள்; வேலை எடுத்துக் கையிலே கொடுத்தாள்; போர்க்களத்தை நோக்கி அவனை விடுத்தாள்.[7]

"என்னே அவள் வீர நெஞ்சம்!" என்று தமிழகம் வியந்து நின்றது.

வீர மாபத்தினி

இல்லறமே நல்லறம் எனக்கொண்ட தமிழ்நாட்டில் எண்ணிறந்த பத்தினிப் பெண்டிர் வாழ்ந்தனர். ஆயினும் கற்பென்னும் திண்மையால் வீரம் விளைத்த மாதர் ஒரு சிலரே. அனைவருள் தலைமை சான்றவள் கண்ணகி.

கண்ணகியின் பெருமை

சோழவள நாட்டிலே பிறந்தாள் அம் மங்கை! பாண்டி நாட்டிலே கற்பின் ஆற்றலைக் காட்டினாள்; சேர நாட்டிலே தெய்வீகமுற்றாள். எனவே, அவள் மூன்று தமிழ் நாட்டிற்கும் உரியவள். அவள் பிறந்தமையால் தமிழகம் பெருமையுற்றது.

மதுரையிற் கொடுமை

மதுரை மாநகரில் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் அரசு வீற்றிருந்தான். கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் அந் நகரை அடைந்தார்கள். மனையாளது மணிச் சிலம்பை விற்றுவரக் கடைத்தெருவிற் சென்றான் கோவலன். அரண்மனைச் சிலம்பைக் களவாடினான் என்று குற்றம் சாற்றிக் காவலாளர் அவனைக் கொன்றுவிட்டார்கள்.

கண்ணகியின் சீற்றம்

அச் செய்தியை அறிந்தாள் கண்ணகி; பொறுக்க லாற்றாது பொங்கி எழுந்தாள்; விழுந்தாள்; பொருமி அழுதாள். அப்போது அவள் உள்ளத்தில் ஓர் ஊக்கம் பிறந்தது; கற்பின் வீரம் கனன்று எழுந்தது; விண்ணிலே விளங்கிய கதிரவனை நோக்கி,"ஏ, காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?" என்று அவள் கதறினாள்; கோவலன் கொலையுண்ட இடத்தை நோக்கி ஓடினாள்; குருதி வெள்ளத்திற் கிடந்த கணவனைக் கண்டாள்; அவன் மேனியில் விழுந்து கல்லும் கரையக் கண்ணீர் சொரிந்து அழுதாள்.

கண்ணகியும் பாண்டியனும்

"கொடுங்கோல் மன்னன் ஆளும் இந் நாட்டில் அறம் உண்டா? முறையுண்டோ? ஆண்டவன் உண்டா?" என்று அவள் அலறினாள்; தன் கணவன் குற்றமற்றவன் என்பதை உலகறியக் காட்ட விரும்பினாள்; மன்னன் மாளிகையை நோக்கி நடந்தாள். அரியாசனத்தில் தன் அரசியோடு அமர்ந்திருந்தான் பாண்டியன். அவன் முன்னே மாசடைந்த மெய்யளாய், மணிச் சிலம்பேந்திய கையளாய் நின்று கண்ணீர் வடித்தாள் கண்ணகி. அக் கோலத்தைக் கண்டு திடுக்கிட்டான் பாண்டியன். அவள் வடித்த கண்ணீர் அவனுள்ளத்தை அறுத்தது.

கலக்கமுற்ற காவலன் முன்னின்று கண்ணகி வழக்குரைத்தாள்; கோவலன் கள்வனல்லன் என்று ஐயந்திரிபற நிறுவினாள். அவள் சொல்லைக் கேட்ட பாண்டியன் சோர்வுற்றான். அவன் வெண்குடை தாழ்ந்தது; செங்கோல் தளர்ந்தது. அவன் அரியணையினின்று மயங்கி விழுந்தான்; உயிர் துறந்தான். இவற்றையெல்லாம் கண்ணுற்ற பாண்டிமாதேவி நடுங்கினாள்; கண்ணகியின் துயரத்தைக் கண்டு துடித்தாள்; அவளடிகளில் விழுந்து தொழுதாள்; ஆவி துறந்தாள்.

வீரக் கற்பு

மன்னனும் மாதேவியும் மடிந்த பின்னரும் கண்ணகியின் சீற்றம் மாறவில்லை. கெட்டவர் நிறைந்த மதுரை மாநகரையும் சுட்டெரிக்கக் கருதினாள் கண்ணகி; அந் நகரின் நடுவே நின்று,

"பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்"

என்று வஞ்சினம் கூறினாள். மதுரையம்பதியிலே தீப்பற்றிக் கொண்டது. தீயவர் உறைந்த இடமெல்லாம் தீப்பட்டு ஒழிந்தது. வருந்திய மனத்தளாய்க் கண்ணகி அவ்விடத்தை விட்டகன்றாள்.

------

[1]. புறநானூறு, 278.

[2]. புறநானூறு, 312.

[3]. திருக்குறள், 774.

[4]. புறநானூறு, 277.

[5]. புறத்திரட்டு, 1460 (சென்னைப் பலகலைக் கழகப் பதிப்பு)

[6]. புறநானூறு, 86.

[7]. புறநானூறு, 279.

-------------

வீரக்கல்

 

வீரரை வியந்து போற்றிய நாடு தமிழ்நாடு. போர் முனையில் விழுப்புண் பட்டு விழுந்தவர்க்கும், கடும்புலியைத் தாக்கி வென்ற காளையர்க்கும், இன்னோரன்ன வீரம் விளைத்தவர்க்கும் வீரக்கல் நாட்டிச் சிறப்பைச் செய்தனர் தமிழ்நாட்டார்.

நடுகல்

வீரருக்கு நாட்டுதற்கேற்ற கல்லை முதலில் தேர்ந்தெடுப்பர்; எடுத்த கல்லைப் புனித நீராட்டுவர்; வீரனுடைய பீடும் பேரும் அதில் எழுதுவர்; உரிய இடத்தில் அதனை நாட்டுவர்; மாலையும் மயிற் பீலியும் சூட்டுவர். இவ்வாறு நட்ட கல்லைத் தெய்வமாகக் கொண்டு வணங்குதலும் உண்டு.[1]

பத்தினிக் கோயில்

மதுரை மாநகரில் கற்பென்னும் திண்மையால் வீரம் விளைத்தாள் கண்ணகி. அப்பெருமாட்டியை "மாபெரும் பத்தினி" என்றும், "வீர பத்தினி" என்றும் வியந்து புகழ்ந்தது தமிழுலகம்.[2] சேர நாட்டை யாண்ட செங்குட்டுவன் என்னும் வீர மன்னன் அதையறிந்து விம்மிதமுற்றான்; வீரருக்குரிய சிறப்புகளை அக் கற்பரசிக்குச் செய்ய முற்பட்டான்;[3] மலைகளில் உயர்ந்த இமய மலையிற் சிலையெடுத்தான்; நதிகளிற் சிறந்த கங்கையில் நீராட்டினான்; பத்தினியின் வடிவத்தை அச்சிலையில் வடித்தான்; வஞ்சி மாநகரில் கட்டிய கோட்டத்தில் அப் படிமத்தை நிறுவினான். பத்தினிக் கோட்டம் என்று பெயர் பெற்ற அந் நிலையம் கற்புக் கோயிலாகக் காட்சியளித்தது.

உறந்தைச் சோழன்

உள்ளத்தில் உறைத்தெழுந்த உயரிய கொள்கையால் உண்ணாவிரதம் பூண்டு உயிர் துறந்த உரவோரும் ஆன்ம வீரராகத் தமிழ்நாட்டிற் போற்றப்பட்டார்கள். அன்னவருள் ஒருவன் கோப்பெருஞ் சோழன். உறந்தை என்னும் தலைநகரில் சிறந்து விளங்கினான் அம் மன்னன். சான்றோர் பலர் அவன் நண்பராக அமைந்தனர்.[4]

உண்ணா நோன்பு

செல்வமும் வீரமும் சீலமும் உடையவனாயினும் தன் மக்களின் தொல்லையால் அவன் மனம் மிக்க துன்பம் அடைந்தது. தன் கருத்துக்கு மாறாக நடந்த மக்களை ஒறுத்துத் திருத்தலாம் என்றெண்ணினான் அவன்; ஆனால்

"ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்"

என்ற பொய்யா மொழியை நினைத்து சீற்றம் தீர்ந்தான்; உலக வாழ்வை வெறுத்தான். உறந்தையை விட்டு அகன்றான்; வடக்கு நோக்கி நடந்தான்; ஓர் ஆற்றின் இடைக் குறையில் அமர்ந்தான்; உண்ணா நோன்பிருந்தான்.

அவன் வீரத்தோள் மெலிந்தது; பொன்னிற மேனி பொலிவிழந்தது. பசிப்பிணியைப் பொறுத்துப் புன்னகை பூத்த முகத்தினனாய் விளங்கிய புரவலன் நிலை கண்டு மனம் உருகினர் சான்றோர். சில நாளில் அவன் நல்லுயிர் உடலை விட்டுப் பிரிந்தது.[5] அப்போது உடனிருந்த அன்பர்கள் அந்த ஆன்ம வீரனுக்குக் கல் நாட்டினர்; கண்ணீர் வடித்தனர்; கல்லிலே நின்ற காவலனைத் தமிழ்ச் சொல்மாலை அணிந்து போற்றினர். அந் நடுகல்லைக் கண்டார் ஒரு கவிஞர்; அடக்க முடியாத துயரத்தால் வாய்விட்டு அரற்றினார். "ஐயோ, நடுகல் ஆயினான் நல்லரசன்! கவிஞரை ஆதரித்த காவலன்! கூத்தரைக் கொண்டாடிய கொற்றவன்! அறநெறி வழுவாத புரவலன்! ஆன்றோரிடம் அன்பு வாய்ந்தவன்! மெல்லிய லாரிடம் மென்மையுடையவன்! வல்லியலாரிடம் வன்மை யுடையவன்! அறவோர்க்குப் புகலிடம்! இத்தகைய மேதையின் உயிரைக் கவர்ந்தானே கண்ணற்ற கூற்றுவன்! மாசற்ற புலவீர்! அவனை ஏசுவோம், வாரீர்!" என்று தம் ஆற்றாமையை அறிவித்தார் கவிஞர்.[6]

வேங்கையைக் கொன்ற வீரன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பாலாற்றங்கரையில் ஒரு பெரும்புலியைக் கொன்ற வீரன் இன்றும் கல்லிலே நின்று காட்சி தருகின்றான். தலையிற் குட்டையும் இடையில் ஆடையும் கட்டிய ஆண் மகன் புலியோடு போர் செய்யும் பான்மையில் அமைந்துள்ளது அவ்வடிவம். புலி, முன்னங் கால்களைத் தூக்கி அவனைத் தாக்குகின்றது; இடக் கையைப் பற்றிக் கடிக்கின்றது; அந்த நிலையில் அவனது வலக்கையில் அமைந்த வாள் அதன் வயிற்றினூடே பாய்கின்றது. இவ்வாறு வாளாண்மையால் வேங்கையைக் கொன்ற வீரனுக்கு வீரக்கல் நாட்டினர் தமிழர்.[7]

ஆநிரை மீட்ட வீரர்

இன்னும், வட ஆர்க்காட்டில் உள்ள ஆம்பூரில் அகளங்கன் என்பவன் ஒரு தலைவனாக விளங்கினான். ஒரு நாள் நுளம்பைப் பல்லவர் படை ஆம்பூரிற் புகுந்தது; பசு நிரைகளைக் கவர்ந்தது. அதைக் கண்டனர் இருவர். ஒருவன் அகளங்கன் மைந்தன்; இன்னொருவன் அவன் மருகன். இருவரும் போந்து மாற்றாரைத் தடுத்தனர்; வெம்போர் தொடுத்தனர்; பசுக்களை மீட்டனர்; ஆயினும் போர் முனையில் விழுந்து பட்டனர். உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட இருவரும் வீரக்கல்லில் இன்றும் விளங்குகின்றார் கள். வலக்கையில் வாளும், இடக்கையில் வில்லும் கொண்டு போர் புரியும்போது, மாற்றார் விடுத்த அம்புகள் அவர மார்பில் பாயும் பான்மையைக் காட்டுகிறது அக் கல். [8] இத்தகைய நடுகல் நூற்றுக்கணக்காகத் தமிழகத்தில் உண்டு.

வள்ளுவர் காட்டும் வீரக்கல் வீரக்கல்லின் மாட்சியை ஒரு நாடகக் காட்சியாகக் காட்டினார் திருவள்ளுவர். ஒரு போர்க்களம், இரு திறத்தார் படையும் அணிவகுத்து நிற்கின்றது. அப்பொழுது முன்னணியில் உள்ள ஒரு வீரன் தற்று முன்னே வந்து, "மாற்றாரே!" என்று இடிபோல் முழங்குகின்றான். எல்லாக் கண்களும் அவனையே நோக்குகின்றன; எல்லாச் செவிகளும் அவன்பால் திரும்புகின்றன. அப்போது அவன் பேசுகின்றான்; "போர் புரியப் போந்த வீரரே! உமக்குக் காலில் நிற்க விருப்பமா? கல்லில் நிற்க விருப்பமா? காலில் நிற்க விரும்பினால் என் தலைவன் முன்னே நில்லாதீர்! இதற்கு முன் அவன் எதிர் நின்றோர் எல்லாம் இன்று கல்லிலே நிற்கின்றார்கள். ஆதலால் போர்க்களத்தை விட்டு ஓடுங்கள்" என்று உறுதியாகப் பேசுகின்றான். அவன் பேச்சின் பொருள் என்ன? "உயிரோடிருக்க ஆசைப் பட்டால் என் தலைவனை எதிர்க்க வேண்டாம். போரில் அடிபட்டு, உயிர் விட்டு, வீரக் கல்லில் நிற்க ஆசைப்பட்டால் படிக்கலாம் எடுக்கலாம்; போர் தொடுக்கலாம்" என்பது அவன் கருத்து.(9) எனவே, புகழே உயிரினும் பெரிதெனக் கருதிய தமிழ் வீரர் எந்நாளும் படைக்குப் பிந்தியவரல்லர் என்பதும், அன்னாரைத் தமிழகம் போற்றிப் புகழ்ந்து வழிபட்டது என்பது நடுக்கல்லால் நன்கு விளங்கும்.

------

[1]. "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல்" - தொல்காப்பியம்: புறத்திணை 5.

[2]. "ஆரஞர் உற்ற வீரபத்தினி" - சிலப்பதிகாரம்: பதிகம், 24.

[3]. தொல்காப்பியம் கூறுமாறே காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து என்பன சிலப்பதிகாரத்தில் ஐந்து காதைகளாக அமைந்துள்ளன. - வஞ்சிக்காண்டம், காதை 25-29

[4]. புறநானூறு, 218.

[5]. ".................இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" - கோப்பெருஞ்சோழன் பாட்டு - புறநானூறு, 214.

[6]. "வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை உலகம் அரந்தை தூங்கக் கெடுவில் நல்லிசை சூடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே."

- பொத்தியார் பாட்டு: புறநானூறு, 221.

[7]. EP. Ind, Vol, IV., P. 179.

[8]. EP. Ind. Vol, IV., P. 180.

(9) "என்ஐமுன் நில்லன்மின் தெய்விர்; பலர்என்ஐ முன்நின்று கல்நின றவர்" - திருக்குறள், 771.

-----------------------------------------------------------

வீர விருதுகள் வீரம் - மனத்திண்மை

போர்க்களத்தில் வெற்றி பெருதற்குப் புயத்திண்மை மட்டும் போதாது; மனத்திண்மையும் வேண்டும். "வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்" என்பது வள்ளுவர் வாய்மொழி. மனத்திட்பமற்றவர் கோழைகள்; பேடிகள். 'புளியடிக்கு முன்னே பேடியைக் கிலியடிக்கும்' என்பது இந் நாட்டுப் பழமொழி.

ஏனாதிப் பட்டம்

மனத்திட்பமுடைய படைத் தலைவரைத் தமிழ் மன்னர் சிறப்பித்தனர்; ஏனாதிப் பட்டமளித்துப் பாராட்டினர். அப் பட்டத்தின் சின்னம் ஓர் அழகிய மோதிரம். அதனை அரசன் கையால் அணியப்பெற்ற படைத்தலைவர் பெருமதிப்புக்கு உரியவராயினர்;

"...........போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன்

மோதிரம்சேர் ஏனாதிப் பட்டத் திவன்" [1]

என்று நாட்டார் ஏத்தும் நலம் பெற்றனர். சோழ மன்னரால் ஏனாதிப் பட்டம் வழங்கப் பெற்றவர் சோழிய ஏனாதி என்று சிறப்பிக்கப்பட்டார்கள். அன்னவருள் சிலர் பெருமையைப் பழங் கவிதையிற் காணலாம்.

திருக்கிள்ளி

திருக்கிள்ளி என்பவன் சோழிய ஏனாதிகளில் ஒருவன். அவன் சிறந்த போர்வீரன்; எப்பொழுதும் முன்னணியில் நின்று மாற்றாரைத் தாக்கும் மதுகையாளன். அவன் முகத்திலும் மெய்யிலும் கரடுமுரடான தழும்பு நிறைந்திருந்தது. அதனைப் பார்த்துப் பார்த்து அவ்வீரன் பெருமிதமுற்றான்; வீரப் புகழின் சின்னமாகக் கருதி விம்மிதமுற்றான்.

மாடலன் புகழுரை

திருக்கிள்ளியைக் கண்டு பரிசு பெறச் சென்றான் மாடலன் என்ற கவிஞன்; விழுப்புண்பட்ட திருமேனியை வியந்து நோக்கினான். ஒவ்வொரு தழும்பின் வரலாற்றையும் அக் கவிஞனிடம் எடுத்துரைத்தான் வீரன். அது கேட்ட மாடலன் திருக்கிள்ளியின் பெருமையைத் தெள்ளிதின் உணர்ந்தான்; 'ஏனாதி நாதனே! உன் மேனி கண்ணுக்கினிய தன்று; ஆயினும் உன் புகழ் செவிக்கு இனிது. உன் முன்னே புறங்காட்டி ஓடிய பகைவரோ காட்சிக்கு இனியர்; ஆனால், மாட்சியற்றவர்" என்று மகிழ்ந்து பாடினான்.(2)

குட்டுவன் குட்டுவன் என்பவன் மற்றொரு சோழிய ஏனாதி. அவனையும் புகழ்ந்து பாடினான் மாடலன். அப்போது குட்டுவன் முக மலர்ந்தான்; ஒரு யானையைத் தருவித்துப் பரிசளித்தான்; அவ்விலங்கைக் கண்டு அஞ்சிய மாடலன் மெல்லப் பின்வாங்கினான் "கொடுத்த பரிசு போதாது போலும்!" என்று எண்ணி அதனினும் பெரியதோர் யானையை வருவித்துக் கொடுத்தான் குட்டுவன். அந் நிலையில் அவன் கொடைத் திறத்தினை இகழ்வது போலப் புகழ்ந்து பாடினான் மாடலன்; "வயிறு காயும் புலவருக்கு இவன் களிறு தருவான். பசித்து வரும் கவிஞர்க்குப் பகடளிப்பான். ஆதலால் அறிஞரே! இவன் நாட்டை அணுகாதீர்" என்று நயம்பட உரைத்து நல்ல பரிசு பெற்றுச் சென்றான்.(3)

பாண்டிய ஏனாதி

மதுரை மாநகரில் மாறன் சடையன் என்ற பாண்டியன் அரசாண்டபோது எட்டி என்னும் வீரன் ஏனாதிப்பட்டம் பெற்று விளங்கினான். மாறனுக்கும் சேரனுக்கும் இடையே பகை மூண்டது. மலை நாட்டின்மீது படையெடுத்தான் மாறன். பாண்டிய ஏனாதி படைத் தலைமை பூண்டான்; மலைநாட்டு மன்னனது அருவியூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். பாண்டிப் பெரும்படை கோட்டையின் அகழியைத் தூர்த்தது; மதிலை இடித்துத் தகர்த்தது. அவ்வழியாக மண்டிற்று ஏனாதியின் சேனை. அதை மறித்துத் தடுத்து மானப் போர் புரிந்தனர் மலைநாட்டு வீரர். இரு திறத்தார் படையிலும் பொருது வீழ்ந்தவர் பலர். ஆயினும் ஏனாதியின் சேனை நெரித்தேறி வெற்றி பெற்றது; கோட்டையைக் கைப்பற்றியது. அன்று முன்னணியில் நின்று அரும்போர் புரிந்த வீரர் இருவர். அவர் எனாதியின் மாளிகைச் சேவகர்; ஒருவன் பெயர் சாத்தன்; மற்றவன் பெயர் சூரன். அவ் விருவரும் போர்க் களத்தில் விழுப்புண் பட்டு வீழ்ந்து மடிந்தனர். அவர் "கோட்டையை அழித்து நன்றுசெய்து பட்டார்" என்று பாராட்டினான் ஏனாதி நாதன்; உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட இருவர்க்கும் வீரக்கல் நாட்டிப் போற்றினான்.[4]

மாராயப் பட்டம்

மன்னர் வழங்கிய மற்றொரு பட்டம் மாராயம் என்பது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இப் பட்டம் தமிழ்நாட்டில் வழங்கிற்று.[5] இராஜராஜசோழன் தஞ்சையில் அரசாண்டபோது மாராயப் பட்டம் பெற்ற சேனாதிபதி ஒருவன் சிறந்து விளங்கினான்; அவன் மலைநாட்டின்மேற் படையெடுத்தான்; சேர பாண்டியரைச் செருக்களத்தில் வென்றான்; விழிஞம் என்னும் துறைமுகத்தைக் கைக் கொண்டான். [6] கீர்த்தி வாய்ந்த அச் சேனாதிபதிக்குப் பஞ்சவன் மாராயன் என்ற பட்டம் வழங்கினான், வீர மன்னனாகிய இராஜராஜன்; அவனை வேங்கை நாட்டுக்கும் கங்க நாட்டுக்கும் மகா தண்ட நாயகனாக நியமித்தான். மாராயம் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழகத்தில் உண்டு. [7]

தளவாய் அரியநாதர்

அரியநாதர்

பேராண்மை வாய்ந்த படைத் தலைவருக்குத் தளவாய் என்ற பட்டமும் அளித்தனர் பெருவேந்தர். தமிழ் நாட்டில் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே அப் பட்டம் பெற்று விளங்கியவர் அரியநாதர். காஞ்சி மாநகர்க்கு அருகேயுள்ள மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் ஓர் எளிய வேளாண் குடியிற் பிறந்தவர் அவர்; வாழ்தல் வேண்டி வடக்கே சென்றார்.

தளவாய்ப் பட்டம்

அந் நாளில் துங்கபத்திரை யாற்றங்கரையில் விஜயநகரப் பேரரசு தலைசிறந்து விளங்கிற்று. அத் திருநகரில் கிருஷ்ண தேவராயர் அரசு வீற்றிருந்தார். மதிநலம் வாய்ந்த அரியநாதர் அவர் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியராயினார்; படைக்கலப் பயிற்சி பெற்றார்; வட நாட்டினின்றும் போந்த பேர் பெற்ற மல்லன் ஒருவனை மற்போரில் வென்று மன்னன் மனத்தை மகிழ்வித்தார்; கணிதப் புலமையால் அவன் உள்ளம் கவர்ந்தார்; போர்க் களங்களில் கண்ணுங் கருத்துமாய் நின்று வெற்றி மேல் வெற்றி பெற்றார்; மன்னன் மனம் உவந்து அவர்க்குத் தளவாய்ப் பட்டமும் வரிசையும் அளித்தான்.

அரியநாதர் சேவை

விஜயநகரப் பெருவேந்தரின் கர்த்தாக்களாக நாயக்கர் தமிழ்நாட்டை ஆளத் தலைப்பட்டார்கள். அவர் ஆட்சிக்கு அடிப்படை கோலியவர் விஸ்வநாதர் என்னும் நாயக்கர். அவரும் அரியநாதரும் ஆருயிர் நண்பர்கள். இருவரும் தமிழ்நாட்டில் அரும்பணி ஆற்றினர்; குழப்பத்தை ஒழித்தனர்; வளப்பத்தைப் பெருக்கினர்; பாளையங்களை வகுத்தனர்; பயிர்த்தொழிலை வளர்த்தனர். அவர் முயற்சியால் அமைதியும் ஆக்கமும் பெற்றது தமிழகம்.

அரிய நாயகபுரம்

இத்தகைய நலம் புரிந்த அரியநாதருடைய கைவண்ணமும், மெய்வண்ணமும் இன்றும் தென்னாட்டில் விளங்கக் காணலாம். திருநெல்வேலிக்கு அருகே பொருனை யாற்றங்கரையில் அமைந்துள்ள அரிய நாயகபுரம் என்ற வளமார்ந்த சிற்றூர் அவர் பெயர் தாங்கி நிலவுகின்றது. மதுரையம்பதியில் குதிரையின்மீது அமர்ந்த கோலத்தில் அவர் உருவச்சிலை இன்றும் காட்சியளிக்கின்றது.

-------

[1]. பெருந்தொகை, 455.

[2]. புறநானூறு, 167.

[3]. புறநானூறு, 394.

[4]. பாண்டியர் வரலாறு (நீலகண்ட சாஸ்திரியார்), ப.86.

[5]. தொல்காப்பியம், பொருள், 63.

[6]. முதல் இராஜராஜசோழன் (உலகநாத பிள்ளை). ப. 30.

[7]. கீழ்மாராயம் என்னும் ஊர் தஞ்சை நாட்டுக் கும்பகோண வட்டத்தில் உள்ளது.

பேர் தெரியாப் பெருவீரர்

தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்களில் வீரம் விளைத்தவர் எண்ணிறந்தவர். அன்னார் பீடும் பெயரும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் ஆண்மைக்குச் சில ஊர்களே சான்றாக நிற்கின்றன.

பாலாற்று வென்றான்

பாலாற்றங் கரையில் நிகழ்ந்த போர்கள் பலவாகும். அப் போர்களங்களில் பெருகிய செந்நீர் பாலாற்றில் சுரந்த தண்ணீரோடு கலந்து ஓடிற்று. அவ்வாற்றங்கரையில் வெம் போர் புரிந்து வெற்றி பெற்றான் ஒரு வீரன். அவனைப் "பாலாற்று வென்றான்" என்று தமிழ் நாட்டார் பாராட்டினர். அப்படிப்பட்ட பெயர் கொண்ட பல ஊர்கள் இன்றும் ஆர்க்காட்டு வட்டத்தில் உண்டு.[1]

செய்யாற்று வென்றான்

அவ்வாறே செய்யாற்றங்கரையில் நடந்த போரில் மாற்றாரை வென்று மேம்பட்டான் ஒரு தலைவன். அவனைச் "செய்யாற்று வென்றான்" என்று சீராட்டினர் தமிழ் மக்கள். அவ் விருதுப் பெயரும் ஊர்ப்பெயராயிற்று.[2]

தமிழ்நாட்டார் சீர்குலைந்து சிறுமையுற்றமையால் அவ்வூர்ப் பெயர்களும் சிதைவுற்றன. பாலாற்று வென்றான், செய்யாற்று வென்றான் என்ற பெயர்கள் முறையே பாலாத்து வண்ணான் எனவும், செய்யாத்து வண்ணான் எனவும் இப்பொழுது மருவி வழங்குகின்றன. மாறுபட்ட பகைவரை முடுக்கியடித்த வீரத்தலைவரை, ஆற்றங்கரையில் ஆடையை மடித்துத் துவைக்கும் வண்ணாராகக் காண்கிறது இக்காலத் தமிழகம் !

சரந்தாங்கி

இன்னும் சரமாரி பொழியும் போர்க்களத்தில் சஞ்சலமின்றி நின்று போர் புரிந்தனர் தமிழ் நாட்டு மெய்வீரர். மாற்றார் வில்லினின்று எழுந்து வந்த அம்புகளை மலைபோன்ற தன் மார்பிலே தாங்கி நிலைகுலையாமல் நின்றான் ஒரு வீரன். அவ்வீரத்தைக் கண்டு வியந்தனர் இரு திறத்தாரும்; 'சரந்தாங்கி' என்றும் சிறப்புப் பெயர் அளித்துச் சீராட்டினர். அறந்தாங்கிய சீலன் பெயர் தஞ்சை நாட்டிலே ஓர் ஊருக்கு அமைந்தாற் போன்று சரந்தாங்கிய வீரன் பெயர், பாண்டி நாட்டு நிலக்கோட்டை வட்டத்தில் ஓர் ஊரின் பெயராக நின்று நிலவுகின்றது.

கணை முறித்தான்

வில்லாண்மையுடைய மற்றொரு வீரன் மாற்றார் விடுத்த கொடுங்கணைகளைத் தன் நெடுங் கரத்தாற் பற்றினான்; முறித்தெறிந்தான்; அவ் வருஞ்செயலைக் கண்டு வியந்தது வீரர் உலகம். 'கணை முறித்தான்' என்பது அவனுக்குரிய சிறப்புப் பெயராயிற்று. அப் பெயர் பெற்ற ஊர் தென்னாட்டு அறுப்புக்கோட்டை வட்டத்தில் உள்ளது.

பயமறியான்

"அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே" என்று பாடினார் பாரதியார். அதற்கு எடுத்துக் காட்டாக முன்னாளில் விளங்கினான் ஒரு வீரன். அவனைப் 'பயமறியான்' என்று தமிழகம் பாராட்டியது. தஞ்சை நாட்டிலே அறந்தாங்கி வட்டத்தில் உள்ள 'பயமறியான்' என்ற ஊர் அவன் பெயர் தாங்கி நிற்கின்றது.

அழியாத நினைவுச் சின்னம்

இன்னும் மறம் அடக்கி, அமர் அடக்கி, எப்போதும் வென்றான் முதலிய பட்டப் பெயர்கள் இப்போதும் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. இத்தகைய வீரம் விளைத்தவர் இன்னார் என்பது விளங்கவில்லை; அவர் ஊரும் பேரும் தெரியவில்லை; குலமும் குடியும் துலங்கவில்லை. ஆயினும், அவர் காட்டிய வீரம் நம்நாட்டு ஊர்ப் பெயர்களில் நின்று ஒளிர்கின்றது. வீரற்கு நாட்டும் நடுகல் ஒருகால் அழியலாம்; உருவச் சிலை ஒடிந்து விழலாம்; ஆனால், ஊர்ப் பெயர்களில் வாழும் இவ் வீரர் புகழுக்கு எந்நாளும் இறுதியில்லை.

-----------

[1]. வட ஆர்க்காட்டு ஆரணி வட்டத்தில் பாலாற்று வென்றான் என்ற ஊர் உள்ளது; வேலூர் வட்டத்தில் அப் பெயருடைய மற்றோர் ஊர் உள்ளது.

[2]. வட ஆர்க்காட்டுச் செய்யாற்று வட்டத்தில் செய்யாற்று வென்றான் என்னும் ஊர் உண்டு; தென் ஆர்க்காட்டு விழுப்புர வட்டத்தில் செய்யாற்று வென்றான் என்ற மற்றோர் ஊர் உள்ளது.

---------

வீரப் புகழ்மாலை

வீரமும் ஈரமும்

தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தை யும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். "பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு; நாவிற்கு அழுக்கு" என்பது அவர் கொள்கை.

ஔவையாரும் செல்வரும்

புலமையுலகத்தில் ஔவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. "ஔவை வாக்குத் தெய்வ வாக்கு" என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர் வாயால் வாழ்த்துப் பெற ஆசைப்பட்டார்கள்; ஒருநாள் ஔவையார் ஒரு சிற்றூரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவ்வூர்ச் செல்வர் இருவர் அவரிடம் போந்து, "அம்மையே உமது வாக்கால் எம்மையும் பாடுக" என்று வேண்டி நின்றார்.

வசைப் பாட்டு

அவ்விருவரையும் நன்றாகத் தெரிந்தவர் ஔவையார். வீரத்திற்கும் அவருக்கும் வெகு தூரம். போர்க்களத்தின் அருகே அவர் போனதில்லை. ஈரமும் இரக்கமும் அவர் மனத்தை எட்டிப் பார்த்ததில்லை. இத்தகைய பதடிகள் பாட்டுப் பெற ஆசைப்பட்டது கண்டு ஔவையார் உள்ளத்துள்ளே நகைத்தார்; அருகே நின்ற இருவரையும் குறுநகையுடன் நோக்கி, "செல்வச் சேய்களே! என் பாட்டு வேண்டும் என்று கேட்கின்றீர்களே! உம்மை நான் எப்படிப் பாடுவேன்? போர்க்களத்தை நீங்கள் கண்ணால் கண்டதுண்டா? வறுமை வாய்ப்பட்ட அறிஞர் வாய் விட்டுரைப்பதைச் செவியால் கேட்டதுண்டா? எவரேனும் உம்மால் எள்ளளவு நன்மையேனும் இதுவரையில் பெற்ற துண்டா? எட்டாத மரத்தில் எட்டிக்காய் பழுத்தாற் போன்றது உம்மிடம் உள்ள செல்வம்" என்று வசைபாடி அவ்விடம் விட்டு அகன்றார். செல்வர் இருவரும் தருக்கிழந்து தாழ்வுற்றனர்.

ஔவையாரும் அதிகமானும்

இத்தன்மை வாய்ந்த ஔவையார் ஆண்மையாளரை வாயார வியந்து பாடியுள்ளார். அதிகமான் என்ற தலைவன் அப்பேறு பெற்றவன். அவ் வீரனுக்காகத் தொண்டை மானிடம் தூது செல்லவும் இசைந்தார் ஔவையார்.

தகடூர் யாத்திரை

அதிகமானும் சேரமானும்

அதிகமானும் சேரமானும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சேரமான் மலைநாட்டை யாண்டான். அதிகமான் கொங்கு நாட்டில் அரசு புரிந்தான். இருவரும் படைத்திறம் வாய்ந்தவர்; வீரப்புகழை விரும்பியவர்; ஆதலால் போர் தொடுத்தனர்.

 

தகடூர்ப் போர்

அதிகமானுக்குரிய நாட்டின்மேற் படையெடுத்தான் சேரன்; வலிமைசான்ற தகடூர்க் கோட்டையை முற்றுகை யிட்டான்; தாக்கித் தகர்த்தான்; வெற்றி பெற்றான். பொன் முடியார் என்பவர் அக்காலத்திலிருந்த கவிஞர்; நிகழ்ந்த போரை நேரில் கண்டவர். தகடூர்க் கோட்டையின் திண்மையும், அதிலமைந்த பலவகைப் பொறிகளும், படையின் பெருக்கமும் அவர் பாட்டால் அறியலாகும். போர்க்களத்தில் வீரம் விளைத்த பெரும் பாக்கன் என்ற படைத் தலைவனும் அவரது பாட்டில் அமையும் பேறு பெற்றான்.

தகடூர் யாத்திரை

தகடூர் யாத்திரை என்னும் தமிழ் நூல் அப்படை யெடுப்பின் தன்மையையும், போரின் வெம்மையையும் எடுத்துரைக்கின்றது. பெரும்பான்மை உரை நடையாகவும், சிறுபான்மை செய்யுளாகவும் அமைந்தது அந் நூல்.

அதிகமான் பெருமை

தகடூர் என்னும் மூதூர் இக்காலத்தில் தருமபுரி என்ற பெயர் கொண்டு வழங்குகின்றது. அதனருகே அதமன் கோட்டை என்ற சிற்றூர் உண்டு. அதிகமான் பெயரால் அமைந்தது அக்கோட்டை; அதிகமான் கோட்டை என்பது அதமன் கோட்டை என மருவிற்று. அக் கோட்டை இடிந்தது; கொற்றவன் மடிந்தான். ஆயினும் அதிகமான் பெயர் இன்னும் அழியாது நின்று நிலவுகின்றது.

செங்கோன் தரைச் செலவு

செங்கோன் படையெடுப்பு

செங்கோன் என்பவன் பழங்காலத் தமிழரசருள் ஒருவன். அவன் ஆண்ட நாடு பெருவளநாடு. அந்நாட்டில் மணிமலையும், பேராறும், முத்தூரும் இருந்தன என்பர். அம் மன்னவன் அயல் நாட்டின்மீது படையெடுத்தான்; போர் புரிந்தான்; வெற்றி பெற்றான். அப்போரைப் பாடினார் சேந்தன் என்ற செந்தமிழ்க் கவிஞர். "செங்கோன் தரைச் செலவு" என்பது அப்பாட்டின் பெயர். யாத்திரை என்ற வடசொல்லைப் போலவே செலவு என்ற தமிழ்ச் சொல்லும் படையெடுப்பைக் குறிப்பதாகும். எனவே, தரைவழியாகச் செங்கோன் படையெடுத்து மாற்றாரை வென்ற செய்தி அப்பாட்டிலே குறிக்கப்பட்டதென்று கருதலாம்.

களவழி நாற்பது

செங்கண்ணனும் சேரமானும்

சோழ மன்னனாகிய கோச் செங்கண்ணனும், சேரமானும் மாறுபட்டனர். கழுமலம் என்னும் இடத்தில் இருவர் சேனைக்கும் பெரும்போர் நிகழ்ந்தது. சேரமான் தோற்று ஓடினான். அவனைப் பிடித்துச் சிறைக் கோட்டத்தில் அடைத்தான் செங்கட் சோழன்.

களவழிப் பாட்டு

போர் நிகழ்ந்த களத்தைப் புகழ்ந்து பாடினார் பொய்கையார். நாற்பது பாட்டுடைய அந் நூல் "களவழி நாற்பது" என்னும் பெயர் பெற்றது. செருக்களத்தில் உருத்து நின்ற வீரரின் ஏற்றமும், குருதி சொரிந்த யானைகளின் தோற்றமும் சொல்லோவியமாக அக் களவழியிலே எழுதிக் காட்டப்படுகின்றன. கருங்குன்று போன்ற யானைகள் குருதியிலே மூழ்கிச் செங்குன்றுபோலக் காட்சியளித்தன என்றும், கையறுபட்ட யானைகள் பவளம் சொரியும் பைபோல் செந்நீர் உகுத்தன என்றும், துணிபட்ட துதிக்கையைத் தூக்கிச் செல்லும் பறவைகள் கருநாகத்தைக் கவ்வி எழுகின்ற கருடனை ஒத்தன என்றும் போர்க் களத்தைப் புனைந்துரைத்தார் பொய்கையார்.

அக் களப்பாட்டைக் கேட்டான் வளவர் கோமான்; செந்தமிழ்க் கவிதையின் சுவையை நுகர்ந்தான்; செவ்விய இன்பமுற்றான்.

பாவலர் விண்ணப்பம்

அந் நிலையில் ஒரு விண்ணப்பம் செய்தார் கவிஞர்; "அரசே, உன் படைத்திறத்தால் பகைவரை யெல்லாம் அடக்கினாய்; போரை ஒடுக்கினாய்; மாற்றார் தந்த மட்டற்ற திறைப் பொருளால் மாடக் கோயில்கள் கட்டினாய். 'ஈசன் கழலோத்தும் செல்வமே செல்வம்' என்பதைச் செய்கையிலே காட்டினாய். நீ ஆளும் தமிழ் நாடு தெய்வத் திருநாடு. இந் நாட்டில் எவரும் கவலையுற்றுக் கண்ணீர் வடித்தல் ஆகாது. உன்னோடு போர் செய்து தோற்ற சேரமான் சிறையிடைத் தேம்புகின்றான். அம் மன்னனைச் சிறையினின்றும் விடுவித்தருளல் வேண்டும். உன் சிறைக் கோட்டம் அறக்கோட்டமாதல் வேண்டும்" என்று மன்னன் சேவடி தொழுது நின்றார்.

சேரமான் விடுதலை

அம் மொழி கேட்ட வளவன் முகம் மலர்ந்தது. பொய்கையார் விரும்பிய வண்ணமே ஆணை பிறந்தது. சிறைக் கதவும் திறந்தது. சேரமான் வந்து சோழனடி பணிந்தான். செங்கண்ணன் அவனை அமர்ந்து நோக்கினான்; ஆரவமுற எடுத்தணைத்தான்; முடி மன்னர்க்குரிய சிறப்பெல்லாம் அளித்தான்; மலை நாட்டுக்கு அனுப்பினான். 'காவலன் கண்ணீரைக் களவழி மாற்றியது' என்று எல்லோரும் களிகூர்ந்தார்.[1]

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி

கலிங்க நாட்டின்மீது படையெடுத்து வெற்றி பெற்ற குலோத்துங்க சோழன் ஒரு பரணிப் பாட்டின் தலைவனாயினான். கலிங்கத்துப் பரணி என்று வழங்கும் அக் கவிதை தமிழ் நாட்டாரது வெற்றியை முழக்கும் வீர முரசம்.

பரணித் தலைவன்

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்றுயர்ந்த வீரனே பரணிப் பாட்டின் தலைவனாக அமையத் தக்கவன் என்பது தமிழர் கொள்கை. கலிங்கப் போரில் மாற்றாரது பல்லாயிரக்கணக்கான யானைப் படையை அழித் தொழித்தது குலோத்துங்கன் சேனை. வெற்றி பெற்ற அரசனைப் புகழும் வாயிலாகச் சோழர் குலத்தின் நலத்தையும், நாட்டின் வளத்தையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது பரணிப் பாட்டு.

புகழ் புரிந்த சோழர்

அப்பாட்டிலே தவறு செய்த தன் மகனை முறை செய்து அழியாப் பெருமையுற்ற மனுவேந்தனைக் காணலாம். அடைக்கலமாக வந்தடைந்த புறாவின் உயிரைக் காக்குமாறு தன் பொன்மேனியை அரிந்திட்ட புரவலனைக் காணலாம்; மாற்றாருடைய வானக் கோட்டைகளைத் தகர்த்தெறிந்த தனிப்பெரு வேந்தனைக் காணலாம். செஞ்சொற் கவிதையால் வெஞ்சினம் தீர்ந்து சிறைபிடித்த சேரனை விடுவித்தருளிய செங்கண்ணனையும் காணலாம்.

பரணிக்கோர் சயங்கொண்டான்

இத்தகைய சீர்மை வாய்ந்த கலிங்கத்துப்பரணி பாடிய கவிஞர் நன்னிலம் என்ற ஊருக்கு அருகேயுள்ள தீபங்குடியிற் பிறந்தவர்; 'செயங்கொண்டார்' என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்தவர்; 'கவிச் சக்கரவர்த்தி'ப் பட்டம் பெற்றவர்; அவர் பாடிய கலிங்கத்துப் பரணியைப் பின்பற்றி ஒட்டக்கூத்தர் முதலாய கவிஞர் பரணிப்பாட்டு இசைத்தார்கள். ஆயினும், இன்றளவும் கலிங்கத்துப் பரணியே தலை சிறந்த பரணியாகக் கற்றோரால் மதிக்கப்படுகின்றது. "பரணிக்கோர் சயங்கொண்டான்" என்று பாராட்டப் பெற்றார் அக் கவியரசர்.

--------

[1]. இதனை வேறு வகையாகக் கூறுதலும் உண்டு. சூரிய நாராயண சாஸ்திரியார் எழுதிய 'மானவிஜயம்' முதலிய நூல்களிற் காண்க.

முடிவுரை

விழுமிய வீரம்

"தோன்றிற் புகழொடு தோன்றுக" என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு.

மறவர் நிலை

அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது முறுக்கு மீசை உருக் குலைந்தது. பணைத்த தோள் பதங்குலைந்தது; மாற்றார் தலை பறித்த மறவரது நெடுங்கரம் இன்று கழனியிலே களை பறிக்கின்றது.

அணுகுண்டு

ஆயினும் தமிழர் வீரம் அறவே அழிந்துவிட வில்லை. வீறுபெற்றுத் தமிழர் தலையெடுக்கும் காலம் விரைந்து வருகின்றது. அக்காலத்தில் தமிழ் நாடு புத்துயிர் பெறும். வருங்காலம் அணுகுண்டுக் காலம் என்பர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அணுவையும் துளைத்து ஆராய்ந்தனர் தமிழர். நுண்மையான அணுவை நூறு கூறாக்கலாம் என்று கண்டனர் தமிழர்; அணுவின் நூறிலொரு கூறுக்குக் கோண் என்ற பெயரும் கொடுத்தனர். ஆதலால் அணுகுண்டைக் கண்டு துணுக்கமுறுபவர் தமிழர் அல்லர்; அதனை வெல்லுமாறறிந்து மேலே செல்லுவர். பழமையும் பெருமையும், ஆண்மையும் அறிவும் வாய்ந்த தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்; வருங்காலத்தில் பாரத நாட்டின் மணிமுடியாகத் திகழும்; ஆசிய கண்டத்தின் அவிரொளியாக விளங்கும். ஒன்றுபட்டால் தமிழர்க்கு உண்டு வாழ்வு.

"வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்."

ஆசிரியர் - ரா.பி. சேதுபிள்ளை

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

3.08
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top