பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழர் வீரம் - 7 முதல் 10

தமிழர் வீரம் எனும் நூலின் 7 முதல் 10 வரையுள்ள பகுதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக் கோட்டைகள்

அரண்மனை

நாட்டைக் காப்பவன் அரசன்; அவனைக் காப்பது அரண்மனை. அரசன் வாழும் இடம் அரண்மனை எனப்படும். அரண் என்பது கோட்டை. எனவே, அரணுடைய மனையே அரண்மனையாகும்.

தமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்தது மதுரை மாநகரம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகப் பாண்டியர் அத்தலைநகரில் அரசு வீற்றிருந்தனர். அங்கு அமைந்திருந்த ஓர் அரண்மனையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. மாளிகையைச் சூழ்ந்து நின்றது நெடுமதில். பலவகைப் பொறிகள் அம் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றாரை மறித்துத் தள்ளும் இருப்புக் கவை; தானே வளைந்து சரமாரி பொழியும் யந்திர வில்; உருக்கிய செம்பையும் இரும்பையும் மாற்றார் மீது வார்க்கும் உலைப்பொறி; பற்றிய பகைவர் கரங்களைப் பொதிர்க்கும் ஊசிப்பொறி; கழுத்தை முறுக்கும் இரும்புத் தொடர்; இன்னும் புலி, யானை, பன்றி, பாம்பு இவற்றின் வடிவத்தில் அமைந்த பொறிகள்; இவற்றை யெல்லாம் கொண்டு விளங்கிற்று மதுரைக் கோட்டை.

மலை அரண்

செங்குத்தாக எழுந்த மலைகளைச் சிறந்த இயற்கை அரணாகக் கொண்டனர் பண்டைக் குறுநில மன்னர். குன்றுகளிற் கோட்டை கட்டி அவர் ஆட்சி புரிந்தனர். பாண்டி நாட்டிலே பறம்புக் கோட்டை; கொங்கு நாட்டில் கொல்லிக் கோட்டை; சோழ நாட்டில் செஞ்சிக் கோட்டை- இவை முற்காலத்தில் சிறந்து விளங்கின.

பறம்பும் பாரியும்

பாண்டி நாட்டிலே பறம்பு மலையை ஆண்டான் பாரி என்ற சிற்றரசன். அவன் வேளிர் குலதிலகன்; ஆண்மையும் அருளும் வாய்ந்தவன். அங்க நாட்டு அரசனாகிய கர்ணனும் பறம்பு நாட்டுத் தலைவனாகிய பாரியும் கொடைக்கு வரம்பாகத் தமிழ் இலக்கியத்திற் குறிக்கப்படுகின்றனர். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்து எல்லையற்ற புகழெய்திய பாரியைத் தேவாரமும் வியந்து பாடிற்று.

மூவேந்தர் முற்றுகை

பாரியின் புகழை அறிந்து எரிவுற்றனர் பெருநில மன்னர். சேர சோழ பாண்டியராகிய மூவரும் ஒன்று சேர்ந்தனர்; பெரும் படை திரட்டினர்; பறம்பு மலையை முற்றுகையிட்டனர்; சில நாளில் பாரி சரணமடைவான் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மலைக்கோட்டையில் அவன் வாட்டமின்றி இருந்தான். கழைநெல்லும் பலாக்கனியும் கிழங்கும் தேனும் குறைவறத் தந்தது அக்குன்றம்.

கபிலர் பரிகாசம்

பலநாள் முற்றுகையிட்டனர் பகைவேந்தர்; பறம்புக் கோட்டையின் திறங்கண்டு மனந்தளர்ந்தனர். அப்போது பாரியுடன் இருந்த கபிலர் என்ற கவிஞர் ஒரு பாட்டிசைத்தார். "மாநில மன்னரே! இம் மலையடி வாரத்தில் உள்ள மரந்தொறும் உமது மதயானையைக் கட்டினாலும், பரந்த வெளியெங்கும் தேர்ப்படையை நிரப்பினாலும் உம்மால் வெற்றி பெற முடியாது. பறம்பு மலையைப் பெறுதற்குரிய வழியை யான் அறிவேன். உங்கள் வாளைக் கீழே போடுங்கள்; யாழைக் கையில் எடுத்து வாசியுங்கள்; இன்னிசை பாடுங்கள்; பாரியின் கோட்டை வாயில் திறக்கும்; அவன் நாடும் மலையும் உமக்கு நன்கொடையாகக் கிடைக்கும்" என்று ஏளனம் செய்தார் கவிஞர்.

கன்னியர் கண்ணீர்

ஆள்வினையால் வெல்ல முடியாத பாரியைச் சூழ்வினையால் வஞ்சித்துக் கொன்றனர் வெஞ்சின வேந்தர். அப்போது அறம் வாடிட்று; ஆண்மை மாசுற்றது; பாரியின் பெண் மக்கள் இருவரும் தந்தையை இழந்து தமிராயினர்; நாடிழந்து நல்குரவெய்தினர்; தாம் பிறந்து வளர்ந்த பறம்பு மலையைக் கண்ணீர் நிறைந்த கண்களோடு கடைசிமுறை நோக்கி வறியராய் வெளியேறினர். பாரியின் ஆருயிர்த் தோழரான கபிலர் தம் அருந்துயரை அகத்தடக்கி அவர் கண்ணீரைத் துடைத்தார்; ஆறுதல் கூறினார்; அம் மங்கையர் இருவரையும் அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டின் எல்லையைக் கடந்தார்; பெண்ணைநாட்டை வந்தடைந்தார்.

கபிலர் முடிவு

அருளுருவாகிய பாரி இல்லாமையால் தமிழகம் கபிலருக்கு இருளகமாய்த் தோன்றிற்று. முடிவேந்தர் இழைத்த தீமை அவரால் மறக்க முடியவில்லை; பொறுக்க முடியவில்லை. பெண்ணையாற்றங்கரையில் பெருந்தீயை வளர்த்தார்; மும்முறை வலம் வந்து வணங்கினார்; பாரியின் பெண்ணை வாழ்த்தினார்; செந்தீப் பாய்ந்து உயிர் நீத்தார். பறம்புமலை யாண்ட பாரியும், புலனழுக்கற்ற புலவராகிய கபிலரும் நட்பின் நேர்மைக்குப் பெருஞ்சான்றாக விளங்குகின்றனர்.

கொல்லிமலைக் கோட்டை

சேலம் நாட்டிலே கொல்லி என்னும் மலையொன் றுண்டு. அது முன்னாளில் சேரகுல மன்னருக்கு உரியதாயிருந்தது. வளமார்ந்த அம் மலைச் சோலையில், எப்போதும் செந்தேன் துளிக்கும்; செழும்பலாப் பழுக்கும்; ஊசன் அருள் விளங்கும் அறைப்பள்ளியென்னும் திருக் கோயிலும், தீயவரை மருட்டியழிக்கும் தெய்வப் பாவையும் அம்மலையிலே உண்டு.

வில்லாளன் ஓரி

இத்தகைய கொல்லி மலையிலே குறுநில மன்னனாக வாழ்ந்தான் ஓரி என்ற பெயர் பெற்ற வீரன். வில்லாண்மையில் அவன் நிகரற்றவன். முடிவேந்தரும் அவனுதவியை நாடினர். அமர்க்களங்களல் அவன் வில்லால் மடிந்த வீர்ர் எண்ணிறந்தவர். காற்றின் வேகமும், கனலின் வெம்மையும் வாய்ந்த அம்புமாரி பொழிந்த அவ் வில்லை "வல்வில்" என்று எல்லோரும் புகழ்ந்தனர்.

ஓரியின் வேட்டை

போர் ஒழிந்த காலத்தில், அவ்வீரன் வேட்டையாடிப் பொழுது போக்குவான். அவ் வேட்டைகளில் ஒன்று பாட்டில் அமையும் பேறு பெற்றது. ஒரு நாள் வல்வில் லெடுத்துத் தன்னந் தனியனாய்க் கொடிய விலங்குகள் திரியும் கொல்லிமலைக் காட்டினுள்ளே சென்றான் ஓரி. பெரிய யானையொன்று அவன் கண்ணெதிர்ப்பட்டது. உடனே வல்வில் வளைந்த்து; அடுகணை எழுந்தது; வேழத்தின் தலையில் வேகமாய்ப் பாய்ந்து வெளிப்பட்டது; பின்னும் விசை குன்றாமல் சென்று குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றது; அதனையும் கடந்து ஒரு கலைமான் மீது பாய்ந்தது; மேலும் சென்று காட்டுப் பன்றியொன்றை வீட்டியது; அம்மட்டிலும் அமையாது, புற்றிலே இருந்த ஓர் உடும்பின்மேறெ பாய்ந்து சினம் தீர்ந்தது.

பாணர் வியப்பும் திகைப்பும்

அவ் வேட்டையைக் கண்டது ஒரு பாணர் கூட்டம்; வியப்பும் திகைப்பும் உற்றது; "கொல்லிமலையில் இப்படிக் கொலை புரிந்தவன் யாவன்?" என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டது. "இவன் விளையாட்டின் பொருட்டு வேட்டையாடும் வீரனா? அன்றி விலைப்பொருட்டால் விலங்குகளைக் கொலை செய்யும் வேடனா?" என்று ஒருவரையொருவர் வினவி நின்றனர்.

ஓரியின் தோற்றம்

அப்போது வில்லாளன் அவர் நின்ற பக்கம் திரும்பினான். அவனுடைய ஏற்றமும் தோற்றமும் அவர் கண்களைக் கவர்ந்தன. வண்ண மேனி; திண்ணிய தோள்; நறுஞ் சாந்தம் பூசிய பரந்த மார்பு; நெடிய கை; கொடிய வில்; கழல் அணிந்த கால்; ஏறு போன்ற நடை - இவற்றைக் கண்டனர் பாணர்; "கொல்லிமலை யாளும் கொற்றவன் இவன்தானோ!" என்று எண்ணினர். 'கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததோ!' என்று வியந்து நின்றார்.

இசையரங்கு

அந்நிலையில் பாணரிடையே ஆர்வம் பெருகிற்று. முழவும் சிறுபறையும் முழங்கின. இசைத்தழும்பேறிய கைகள் தாளமிட்டன. பாணர் தலைபண்ணொடு ஒரு வண்ணம் பாடினான். கொல்லிமலைச் சாரல் ஒரு நல்லிசை அரங்கமாயிற்று. இசைப் பாட்டை ஆர்வத்தோடு கேட்டு மனம் தழைத்தான், வில்லின் செல்வன். 'நல்லிசையாளும் கொல்லிக் கோவே' என்று எடுத்து இசைப்பாட்டைப் பாடி முடித்தான் பாணப் புலவன். தன் பெயரைக் கேட்ட நிலையில் நாணித் தலை கவிழ்ந்தான் வீரன்; பாடிய பாணர் பசி தீர, ஊன் கலந்த சோறும் உயர்ந்த மதுவும் அளித்தான்; நல்ல பொன்னும் மணியும் பரிசாகக் கொடுத்தான்.

ஓரியின் புகழ்

படைத்திறமும் கொடைத்திறமும் வாய்ந்த வல்வில் ஓரியைப் பாராட்டிப் பாடினார், வன்பரணர். அவரது பாட்டின் சுவையறிந்து மகிழ்ந்தது பழந்தமிழ் உலகம். செஞ்சிக் கோட்டை திண்டிவனத்திற்கு மேற்கே உள்ளது செஞ்சிக் கோட்டை. அஃது இயற்கையான மலைக்கோட்டை. ஒன்றோடு ஒன்று இணைந்த மூன்று குன்றுகளால் அரண் செய்யப்பட்டுள்ள அக்கோட்டையின் சுற்றளவு ஏழு மைல் என்பர். அவற்றுள் உயர்ந்தது ராஜகிரி யென்னும் கொடுமுடி. செங்குத்தாக அறுநூறடி எழுந்து அண்ணாந்து நிற்பது அக்குன்றம். அங்குள்ள கோட்டைக்கு வாயில் ஒன்றே; மலையடிவாரத்திலிருந்து பெரும் பாறைகளின் இடையே நெளிந்து வளைந்து செல்லும் நடைபாதை அவ்வாயிலுக்கு எதிரேயுள்ள ஒரு பறம்பின் உச்சியிற் கொண்டு சேர்க்கும். அதற்கும் கோட்டை வாயிலுக்கும் இடையே அறுபதடி ஆழமும், இருபத்தைந்தடி அகலமும் உள்ள விடர் ஒன்று உள்ளது. அவ் விடரைக் கடந்து கோட்டை வாயிலை அடைவதற்கு மரப்பாலம் ஒன்றுண்டு. பகைவர் வரும்பொழுது பாலம் எடுக்கப்படும்; வாயில் அடைக்கப்படும்.

செஞ்சியில் நெல்லும் நீரும்

அருங் கோடையிலும் வற்றாத ஊற்று நீர் உடையது செஞ்சிமலைக் கோட்டை. உணவுப் பொருள்களை நிறைத்து வைத்தற்குக் களஞ்சியங்களும், வழிபாடு செய்வதற்குத் திருக்கோயிலும் அங்கே உண்டு. எனவே, பகைவர் பன்னாள் முற்றுகையிட்டாலும் கோட்டையிலுள்ளார்கு வாட்டமும் கோட்டமும் இல்லை. நெல்லும் நீரும் உடைய கோட்டையை வெல்லும் வகையின்றிச் செல்வர், படை யெடுத்த பகைவர்.

மராட்டியரும் மகமதியரும்

இத்தகைய மலைக்கோட்டைகுச் செஞ்சியென்று பெயரிட்டவர் தமிழர். பழமையான செஞ்சியைப் பதுக்கி அரண் அமைத்தனர் விசயநகரப் பெருவேந்தர். பிற்காலத்தில் அக்கோட்டை மராட்டிய மன்னர்க்குத் தஞ்சம் அளித்தது. அதனைக் கைப்பற்றுதற்கு மகமதியப் பெரும்படை எட்டாண்டுகளாக முற்றுகையிட்டு முயன்றதென்று இந்திய வரலாறு கூறும். செஞ்சியில் அரசாண்ட வீரதேசிங்கின் கதை வீட்டுக் கதையாக இன்றும் தமிழ் நாட்டில் வழங்குகின்றது.

நீர் அரண் நீர் அரண்

நீரும் ஒரு சிறந்த அரணாகும். ஆழமான ஆறும் கடலும் சில கோட்டைகளின் இயற்கை அரணாக இன்றும் விளங்குகின்றன. தமிழ் நாட்டுக்குத் தென்பால் அமைந்த இலங்கை, கடல் சூழ்ந்த நாடு. பாரத நாட்டின்மேற் படை யெடுத்த பகையரசர் பலர் இலங்கையின்மேற் செல்லா தொழிந்ததற்குக் கடலரனும் ஒரு காரணமாகும்.

அகழி

இயற்கையான நீரரண் இல்லாத இடங்களில் செயற்கையான நீர் நிலைகளை அமைத்துக் கொள்ளுதல் வழக்கம். அவை அகழி எனப்படும். அகழியில்லாத நிலக் கோட்டை தமிழகத்திலே இல்லை. சில கோட்டைகளைச் சுற்றி அடுக்கடுக்காகப் பல அகழிகள் அமைத்தலும் உண்டு. ஆறு அகழிகளால் அரண் செய்யப்பட்ட கோட்டை யொன்று ஆறகழூர் என்று பெயர் பெற்றது. அக் கோட்டையை வாண குலத்தரசர் ஆண்டு வந்தார்.

கிடங்கு

கிடங்கு என்ற சொல்லும் அகழியைக் குறிக்கும். கிடங்கு சூழ்ந்த கோட்டையொன்று முன்னாளில் ஆர்க்காட்டு வட்டத்தில் இருந்தது. அது கிடங்கில் என்றே வழங்கிற்று. ஓவியர் குலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் நெடுங்காலம் அக் கோட்டையில் இருந்து அரசாண்டார்கள். அன்னார் ஆட்சியில் அமைந்த நாடு ஓய்மான் நாடு என்று பெயர் பெற்றது. இப்பொழுது தென் ஆர்க்காட்டு வட்டத்திலுள்ள திண்டிவனம் முதலிய ஊர்கள் அக்காலத்தில் ஓய்மானாட்டைச் சேர்ந்திருந்தன.

கிடங்கிற் கோமான்

ஓய்மான் குலத்தைச் சேர்ந்த தலைவர்களில் உயர்ந்த புகழ் வாய்ந்தவன் நல்லியக் கோடன். அவனுடைய படைத்திறமும் கொடைத்திறமும் சிறுபாணாற்றுப்படை என்னும் பழந்தமிழ்ப் பாட்டில் அமையும் பேறு பெற்றன. அப் பாட்டில் நல்லியக்கோடான் 'கிடங்கிற் கோமான்' என்று குறிக்கப்படுதலால் கிடங்கு சூழ்ந்த கோட்டை அவற்குரிய கடிநகராய் விளங்கிற்றென்று கொள்ளலாகும். திண்டிவனத்துக்கு அருகே கிடங்கல் என்ற சிற்றூர் உள்ளது. அதுவே பழைய கிடங்கிற் கோட்டையாகும். சிதைந்து அழிந்த அகழிகள் அதன் பழம் பெருமைக்குச் சான்று பகர்கின்றன.

காட்டரண் காவற்காடு

மரமடர்ந்த அடவியும் கோட்டைக்குரிய அரணாகக் கருதப்பட்டது. அகழியின் புறத்தே நின்று காட்டரண் கோட்டையைப் பாதுகாக்கும். அரணாக நிற்கும் காட்டைக் காவற்காடு என்றும், கடிமிளை என்றும் கூறுவர்.

முள்ளூர்க் கோட்டை

மாற்றாரால் எளிதில் அழிக்க முடியாத காடே சிறந்த அரணாகும். முள்ளும் முரணும் உடைய காடு முன்னாளில் மிகச் சிறந்த அரணாகக் கொள்ளப்பட்டது. முள்மரக் காடு சூழ்ந்த மலையொன்று பழங்காலத்தில் ஒரு கோட்டையாக விளங்கிற்று. மழைவளமுடைய அம்மலையை "மையணி நெடுவரை" என்று பாடினார் ஒரு கவிஞர்.(7) முள்ளூர்மலை என வழங்கிய அக் குன்றில் மலையமான் கோட்டை கட்டி அரசாண்டான். முடிமன்னனாகிய பெருநற்கிள்ளியும் நாடிழந்த நிலையில் முள்ளூர்க் கோட்டையை நாடியடைந்தான் என்றால் அதன் பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமா?

வேலங்காடு

முள்மரங்களில் வன்மை சான்றது கருவேல். வட ஆர்க்காட்டில் கருவேலங்காட்டை அரணாகக் கொண் டிருந்தது ஒரு கோட்டை. அக் கோட்டையூர் வேலூர் என்று பேர் பெற்றது. அந்நாளில் வேலூரை அரண் செய்த காடு இப்போது அழிந்து நாடாய்விட்டது.

வட்டக்கோட்டை

ஆயினும் கருவேலங்காட்டை அரணாகவுடைய கோட்டை யொன்று இன்றும் கன்னியாகுமரியின் அருகே காணப்படுகிறது. வட்டக்கோட்டை யென்பது அதன் பெயர். குமரிக்கடல் அதன் ஒரு சார் அமைந்த அரண். கருவேலங்காடு மற்றொரு பால் உள்ளது. காட்டரணாகிய கருவேலங்காடு இன்றும் அழிவுறாமல அங்கு நின்று காட்சி தருகின்றது.

புளியங்காடு

வேலங்காட்டைப் போலவே புளியங்காடும் ஒரு வல்லரணாகப் போற்றப்பட்டது. தென் ஆர்க்காட்டுக் கிடங்கிற் கோட்டையின் அரணாக நின்றது ஒரு புளியங்காடு; அது திண்டிவனம் என்னும் வட மொழிப் பெயர் பெற்றது. காலகதியில் கிடங்கிற் கோட்டை பாழடைந்தது. காவற்காடு நாடாயிற்று. இப்பொழுது திண்டிவனம் தென் ஆர்க்காட்டில் பெரியதோர் ஊராக விளங்குகின்றது.

கோட்டை மதில்

கோட்டைக்குரிய அங்கங்களிற் சிறந்தது மதில். இஞ்சி, எயில், ஆரை, புரிசை, நொச்சி முதலிய பழஞ்சொற்கள் கோட்டையின் மதிலைக் குறிப்பனவாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, தஞ்சாவூர் சோழ நாட்டின் தலைநகரமாயிற்று. அங்கு இயற்கையான மலையரண் இல்லாமையால் உயர்ந்த மதில்களை உண்டாக்கினர் சோழ மன்னர். அந் நகரை "இஞ்சி சூழ் தஞ்சை" என்று திருவிசைப்பா பாடிற்று.

எயில் என்பது மதிலின் பெயர். ஏழெயில் என்ற கோட்டை யொன்று அக் காலத்தில் இருந்தது. அதன் தலைவன் ஒரு குறுநில மன்னன். நலங்கிள்ளி என்னும் சோழன் அக் கோட்டையை முற்றுகையிட்டுக் கவர்ந்தான். ஏழு மதில்களால் அரண் செய்யப்பட்ட வலிய கோட்டையை எளிதாகப் பிடித்த நலங்கிள்ளியின் வீரத்தை வியந்து பாடினார் கோவூர் கிழார். இக் காலத்தில் ஏழு பொன் கோட்டையென வழங்கும் ஊரே பழைய *ஏழொயில் என்பர்.

பேரெயில்

எயில் என்னும் பெயருடைய ஊர்களும் தமிழகத்தில் சில உண்டு. திருவாரூருக்கு அருகே பேரெயில் என்ற பெயருடைய ஊர் இருந்தது. அது பிற்காலத்தில் பேரெயிலூர் ஆயிற்று; இப்பொழுது பேரையூர் என வழங்குகின்றது. அவ்வூரைச் சார்ந்த பழம் புலவர் ஒருவர் 'பேரெயில் முருவலார்' என்று பெயர் பெற்றார்.

கானப் பேரெயில்

பண்டியநாட்டுக் கோட்டைகளில் மிகப் பழமை வாய்ந்தது கானப்பேரெயில். உயர்ந்த மதிலும், ஆழ்ந்த அகழியும், அடர்ந்த காடும் அதற்கு அரணாக அமைந்தன. வேங்கைமார்பன் என்ற வீரப் பெயருடைய குறுநில மன்னன பழங்காலத்தில் அங்கு ஆட்சி புரிந்தான்.

உக்கிர பாண்டியன்

வேங்கை மார்பன் மறப்படை வீரன்; படைச் செருக்கால் பாண்டிய மன்னனையும் மதியாது இருமாந்திருந்தான். அந்நாளில் மதுரையில் அரசு வீற்றிருந்த பாண்டியன் ஒரு பெரு வீரன். சோழ மன்னனும் சேரமானும் அவனுடைய சிறந்த நண்பர்கள். தமிழறிஞர்கள் அவனைச் சுற்றமெனச் சூழ்ந்திருந்தாரக்ள். இவ்விதம் பல்லாற்றானும் புகழ்பெற்று விளங்கிய பாண்டியன் பகைவர்க்கு மிகக் கொடியவன். அவரைக் கண்ணின்றி ஒறுப்பவன்; ஆதலால் உக்கிரப் பெருவழுதி என்று பெயர் பெற்றான்.

உக்கிரனும் வேங்கையும்

வழுதிக்கும் வேங்கைக்கும் பகை மூண்டது. பாண்டிப் பெரும்படை எழுந்து கானக்கோட்டையை வளைத்தது; காவற்காட்டை அழித்தது; அகழியைத் தூர்த்தது; எயிலைத் தகர்த்தது. வேங்கைமார்பன் அஞ்சாது வீரப்போர் புரிந்தான். அந்திமாலை வந்தது. காரிருள் எங்கும் பரந்தது. கடல் மடை திறந்தாற் போன்று பாண்டியன் படை கானக் கோட்டையினுள்ளே பாய்ந்தது. வேங்கை மார்பன் மாறுகோலம் புனைந்து காட்டிற் புகுந்து மறைந்தான். பொழுது விடிந்ததும் பாண்டியன் கானக்கோட்டையைக் கைப்பற்றினான்; மீனக் கொடியை அதன்மீது நாட்டினான்; பெரும்புகழ் பெற்றான். 'கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்று தமிழுலகம் அவனைப் பாராட்டியது.

கானப்பேர் - காளையார் கோயில்

கானப்பேர் என்ற மூதூர் இப்பொழுது காளையார் கோயில் என வழங்குகின்றது. ஊரின் பெயர் மாறினாலும் மண்ணின் வாசி மாறவில்லை. உக்கிர பாண்டியனை வேங்கை மார்பன் எதிர்த்தாற்போன்று, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே ஆங்கிலப் படையைக் காளையார் கோயிலில் எதிர்த்தான் மருது பாண்டியன்.

மருது பாண்டியன்

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரனோடு ஆங்கிலப் படை போராடிக்கொண்டிருந்த காலத்தில் காளையார் கோயில் வட்டத்தில் மருதப்பன் என்ற பெயருடைய தலைவர் இருவர் தோன்றினர். அப்பெயர் மருது எனக் குறுகி வழங்கிற்று. தமையன், பெரிய மருது; தம்பி, சின்ன மருது. முன்னவன், வேட்டையில் வல்லவன்; கானக வேட்டையே அவன் கருத்தை முற்றும் கவர்ந்தது. ஆதலால் நாடாளும் உரிமையைச் சின்ன மருது மேற்கொண்டான். காளையார் கோயிலுக்கு அருகேயுள்ள சிறுவயல் என்ற ஊரைத் தன் இருப்பிடமாகக் கொண்டான் மருது. அவ்வூரில் அரண்மனை எழுந்தது; குடிபடை குழுமின. சில ஆண்டுகளில் சிறுவயல் பல்லாற்றானும் சிறந்த ஊராயிற்று. தமிழ்ப் பாவலர் அவ்வூரை நாடிவந்தனர்; மருதப்பனைப் பாடிப் பரிசு பெற்றனர்; அவன் ஆட்சியில் அமைந்த காட்டின் வழியாக நள்ளிரவில் சென்றாலும் கள்ளர் பயம் இல்லை என்ற பேச்சு எங்கும் பரவியிருந்தது. இத்தகைய கட்டும் காவலும் உடைய தலைவனை மருது பாண்டியன் என்று நாட்டார் பாராட்டினார்கள்.

அவன் ஆட்சித் திறன்

மருதுபாண்டியன் மாளிகையில் விருந்தாளியாக இருந்த ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் அங்குக் கண்ட காட்சியை எழுதியுள்ளான். " சின்ன மருது காட்சிக்கு எளியவன்; கருணை வாய்ந்தவன். இந்நாட்டில் அவன் இட்டது சட்டம். ஆயினும், அவன் மாளிகையில் எவரும் தங்கு தடையின்றிச் செல்லலாம்; அவனைக் காணலாம் வந்தவர் எல்லாம் அவனை வாயார வாழ்த்தினர்" என்பது அப்படைத் தலைவன் வாய்மொழி. இவ்வாறு மருது பாண்டியனோடு உறவாடிய படைத்தலைவனே பின்பு அவன் பகைவனாயினான்.

பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலப் படையை எதிர்த்த பாளையக்காரனோடு மருது பாண்டியன் உறவு பூண்டிருந்தான். அவ்விருவரும் வீரசுதந்தரம் வேண்டி நின்றார். பிறர் அடிபணிந்து வாழ்வதினும் அடியோடு மடிந்தொழிதல் நன்று என்று கருதிய மானவீரர் அவர்; ஆதலால், ஆங்கிலேயரது சீற்றத்திற்கு ஆளாயினர். ஆயினும் மருது பாண்டியனது வல்லரணாகிய காளையார் கோயிலை மாற்றார் எளிதில் கைப்பற்ற முடியவில்லை.

காளையார் கோட்டை

"நாற்பது மைல் சுற்றளவுள்ள நாட்டின் நடுவே அமைந்துள்ளது காளையார் கோட்டை. ஆடு மாடுகளைச் செல்வமாகவுடைய குடிகள் பல்லாயிரவர் அவ்வட்டத்தில் வாழ்கின்றனர். மாற்றார் படையெடுத்தால் அன்னவரிற் பன்னீராயிரவர் வேலும் வாளும், குத்துக்கோலும் துப்பாக்கியும் கொண்டு போர் செய்யப் புறப்படுவர்" என்று ஆங்கிலச் சேனாதிபதி கூறுகின்றான்.

பட்டாளமும் காவற்காடும்

சின்ன மருது வாழ்ந்த சிறுவயல்மீது ஆங்கிலப் பட்டாளம் சாடிற்று. அத் தலைவன் அப்பொழுது அங்கில்லை; மாற்றார் வந்து சேர்வதற்கு முன்னே குடிகள் தம் தம் வீட்டில் நெருப்பை வைத்தனர்; அடுத்திருந்த காட்டிற் புகுந்து மறைந்தனர். அப்பொழுது வீசிய நெடுங்காற்று அவர் இட்ட தீயை எங்கும் பரப்பிற்று. அந்தி மாலையில் அங்கு வந்து சேர்ந்த ஆங்கிலப் படையின் கண்ணெதிரே கரிந்த சுவரும், பொரிந்த கல்லும் காட்சி யளித்தன.

மருது பாண்டியர் முடிவு

அதைக் கடந்து காளையார் கோயிலைக் கைப்பற்றக் கருதியது ஆங்கிலப் படை. வழியிலே தடையாக நின்ற காட்டையழித்துப் படை செல்வதற்கு ஏற்ற பாதையமைக்க முற்பட்டார் பட்டாளத்தார். ஆறு மைல் தூரம் காட்டை வெட்டி விட்டால் காளையார் கோட்டையைக் காணலாம். ஆயினும், அக்காடு பட்டாளத்தின் வலிமையைப் பழித்து நின்றது. காட்டுப் போரில் நன்கு பழகிய மருதுபாண்டியன் படை பகைவர்க்கு எல்லையற்ற தொல்லை விளைத்தது. காட்டின் கடுமையும், மாற்றார் கொடுமையும் கண்டு ஆங்கிலப் படைவீரர் ஊக்கமிழந்தனர்; முப்பது நாள் முயன்றும் முன்னேற முடியாத நிலை கண்டு முணுமுணுத்தனர்; அம் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பினர்; பின்பு மறவர் குலத் தலைவன் ஒருவனை அவ் வட்டத்திற்குரியவன் என்று பட்டங் கட்டி அவனுதவியால் மருதுபாண்டியர் இருவரையும் பிடித்துத் தூக்கு மரத்திலிட்டுக் கொன்றனர். ஆகவே, முன்னாளில் 'கானப்பேர்' எனப் பெயர் பெற்றிருந்த பாண்டி நாட்டுக் கோட்டை காளையார் கோட்டையாகச் சென்ற நூற்றாண்டு வரை நின்று நிலவிற்றென்பது நன்கு விளங்கும்.

படை வீடு

படையெடுத்துச் செல்லும் தலைவன் தங்கி யிருக்குமிடம் படைவீடு எனப்படும். அது, கட்டும் காவலும் உடையது. கங்கைக் கரையிலே சேரன் செங்குட்டுவன் தங்கியிருந்த படை வீடு அவன் பெருமைக்கேற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தது என்பது சிலப்பதிகாரத்தால் விளங்குவதாகும்.

மணப் படை வீடு

இத்தகைய படை வீடுகளில் நெடுங்காலம் தலைவர்கள் சேனையோடு தங்கும்படி நேர்ந்தால் அவ்விடத்தில் அங்காடி முதலிய வசதிகள் உண்டாகும். நாளடைவில் அஃது ஓர் ஊராக நிலைபெறுதலும் உண்டு. பாண்டி நாட்டில் பொருனை யாற்றங் கரையில் படைவீடாகத் தோன்றிய இடம் இப்பொழுது மணப் படைவீடு என்ற ஊராயிருக்கின்றது.

படை வீடு நகரம்

ஆர்க்காட்டு வட்டத்தில் முன்னாளில் ஒரு படை வீடு எழுந்தது. குறும்பர் கோமான் குலத்தாருடையது அவ் வீடு. குறும்பர் கோமான் சிறந்த வீரன். அவன் நிறுவிய படை வீட்டைச் சார்ந்து குடிபடை மிகுந்தது. நாளடைவில் அது விரிந்து பெருகி ஊராயிற்று. குறும்பர்கோன் ஆண்ட நாட்டிற்கு இதுவே தலைநகரமாகவும் அமைந்தது.

அந் நாளில் அந் நகரம் பதினாறு மைல் சுற்றள வுடையதாய், மாடகூடங்கள் நிறைந்ததாய்ப் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கிற்று. அவ்விடம் இப்பொழுது பாழடைந்த காடாய்க் கிடக்கின்றது. அழிந்த கோட்டையின் அடிப்படை அதன் பழம் பெருமைக்குச் சான்றாக நிற்கின்றது.

நாசமுற்ற நகரம்

அந் நகரம் அழிவுற்றதைக் குறித்து வழங்கும் கதைகள் பலவாகும். குறும்பர் நாட்டைக் கொடுங்கோல் மன்னன் ஒருவன் அரசாண்டபோது மண்மாரி பெய்து படைவீட்டை அழித்த தென்பர் சிலர். கரிகால் வளவன் குறும்பர் நாட்டின்மேற் படையெடுத்து, படை வீட்டைத் தகர்த்தெறிந்து, குறும்பர் குலத்தை வேரறுத்தான் என்பர் வேறு சிலர். எவ்வாறாயினும் படைவீடு என்ற பெயர் அவ்வூருக்கு இன்றும் வழங்குகின்றது.

பெண்ணை நாட்டுப் பெருவீரர்

மலையமான் நாடு

தமிழ் நாட்டில் பெண்ணையாறு பாயும் நன்னாடு முன்னாளில் வண்மைக்கும் திண்மைக்கும் உறைவிடமாக விளங்கிற்று; அந் நாட்டின் ஒரு பாகத்தை நெடுங்காலம் மலையமான் என்னும் பட்டப் பெயருடைய சிற்றரசர் ஆண்டு வந்தனர். அதனால் அது மலையமான் நாடு என்றும், மலாடு என்றும் பெயர் பெற்றது. பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள திருக்கோவலூர் அதன் தலைநகரம். வலிமை சான்ற முள்ளூர்க் கானம் அதன் கோட்டை.

காரியும் குதிரையும்

மலையமான் குலத்தில் தோன்றினான் காரி. அவன் நிகரற்ற குதிரை வீரன். அவன் குதிரைக்கும் காரி என்பது பெயர். அக் குதிரையின் திறமையால் பெரும் போர்களில் வெற்றி பெற்றான் காரி வீரன். அவன் உதவியை நாடினர் முடிமன்னர் மூவரும். போர்க்களத்தை நோக்கி அவன் குதிரையின்மேற் செல்லும்போது மண் நடுங்கும்; மாற்றார் மனம் ஒடுங்கும்.

ஓரியும் காரியும்

கொல்லிமலை வீரனாகிய ஓரிக்கும், மலையமான் காரிக்கும் இடையே நாளடைவில் கடும்பகை மூண்டது; இறுதியில் போர் நிகழ்ந்தது. போர்க்களத்தில் ஓரியைக் கொன்றான் காரி; கொல்லிமலையைக் கைக் கொண்டான்; அதற்கு உரிமையுடைய சேரமானிடம் ஒப்புவித்தான். அன்று முதல் சேரமானும் மலையமானும் சிறந்த நண்பராயினர்.

உரிமை வேட்கை

வில்லாளருள் வல்லாளனாகிய ஓரியை முடித்த வீரன் என்று எல்லோரும் காரியைப் பாராட்டினார்கள். அப் புகழுரை கேட்டு மகிழ்ந்த காரி தன் நாட்டில் சுதந்திரத்தை நிலை நாட்ட விரும்பினான். அவன் முன்னோர் சோழ குல மன்னர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசராக வாழ்ந்திருந்தனர். முடிசூடி அரசாளும் உரிமை அவர்க்கு இருந்ததில்லை. அந்த நிலையை மாற்ற ஆசைப்பட்டான் காரி. மலையமான் நாடு தன்னரசு பெற்ற தனி நாடாதல் வேண்டும் என்பது அவன் வேட்கை. சிற்றரசர்களில் சிலர் அவன் கருத்தை ஆதரித்தனர். திருக்கோவலோரில் முடிசூடி அரசாளத் துணிந்தான் அவ்வீரன்.

முடிசூட்டு விழா

முடிசூட்டு விழாவிற்குரிய வேலைகள் முறையாக நடந்தன. திருக்கோவலூர் புத்துயிர் பெற்றாற்போல் பொலிவுற்றது. வீடுதோறும் சுதையின் விளக்கம்; வீடுதோறும் மங்கல முழக்கம்; மாடம் எங்கும் மணிக் கொடிகள்; மேடை எங்கும் ஆடல் பாடல். பெண்ணை யாற்றங்கரையில் அழகுற அமைந்த அரண்மனை கண்ணுக்கு இனிய காட்சியளித்தது. இன்னிசையாளர் ஒரு பால்; நல்லிசை வீரர் ஒருபால்; குறுநில மன்னர் ஒருபால்; பெருநிலத் தலைவர் ஒருபால்; மயிலினம் போன்ற மங்கையர் ஒருபால். இவ்வாறு நல்லாரும் வல்லாரும் அணியணியாக அமர்ந்திருந்த மன்றத்தின் நடுவே நின்றது ஓர் அரியாசனம். அதன்மீது வீர சிங்கம்போல் வீற்றிருந்தான் மலையமான் காரி. மங்கல வாத்தியம் முழங்க, குலமாதர் குரவையிட, பாவலர் பல்லாண்டு பாட, குடிகளின் சார்பாகப் பெண்ணை நாட்டுப் பெரியார் ஒருவர் மலையமானுக்கு மணிமுடி சூட்டினார். அன்றுதொட்டு 'மலையமான் திருமுடிக்காரி என்னும் சிறப்புப் பெயர் தாங்கி அவன் அரசு வீற்றிருந்தான்.

திருமுடிக்காரி

என்றும் வாடாத தமிழ்மாலை பெற்ற வள்ளல்களில் ஒருவன் திருமுடிக்காரி. பொய்யறியாக் கபிலர் அப்பெருந்தகையைப் புகழ்ந்து பாடினார். "கபிலர் பாடிய காரியை நாம் பாடுதல் எளிதோ" என்று கருத்தழிந்து நின்ற கவிஞர் பலர். அன்னவருள் ஒருவர் நப்பசலையார் என்னும் மெல்லியலார்.

எனவே புலவர் பாடும் புகழுடையவன் திருமுடிக்காரி. பெண்ணை நாட்டுக்குப் பெருமையளித்தவன் திருமுடிக்காரி. வீர சுதந்திர வேட்கையின் சின்னமாக விளங்கியவன் திருமுடிக்காரி.

வாணர்குல வீரம்

மகத நாடு

தமிழ் நாட்டில் வாணர் என்னும் பெயர்பெற்ற குறுநில மன்னர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள். பெண்ணையாறு பாயும் நடு நாட்டின் ஒரு பகுதி அவர் ஆட்சியில் அமைந்த நாடு. அதற்கு மகத நாடு என்று மறு பெயரும் உண்டு. அதனால் வாணர்குல மன்னனை மாகதர்கோன் என்றும், மகதேசன் என்றும் தமிழ்ப் பாவலர் புகழ்ந்துரைப்பாராயினர்.

வாணர்குலப் பெருமை

தமிழ் நாட்டு முடிவேந்தரும் பெண்கொள்ளும் பெருமை சான்றது வாணர் குலம். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் ஒரு வாணர்குல மங்கையை மணந்தான். 'சீர்த்தி' யென்னும் பெயருடைய அந் நல்லாள் "மாவலி மருமான் சீர்கெழு திருமகள்" என்று மணிமேகலைக் காவியத்திலே போற்றப்படுகின்றாள்.

ஆறைக் கோட்டை

வாணர்குல மன்னர் கோட்டை கட்டி அரசாண்ட இடம் ஆறகழூர் என வழங்கிற்று. ஆறை என்பது அதன் குறுக்கம். எனவே, ஆறைக்கோன் என்ற பெயரும் வாணர்குல மன்னனைக் குறிப்பதாயிற்று.

பஞ்சநதி வாணன்

தமிழரின் ஆண்மைக்கு ஒரு சான்றாக விளங்கும் கலிங்கப் போரிலே கலந்துகொண்ட குறுநில மன்னருள் ஒருவன் வாணர் குலப் பெருமகன். அவன் தஞ்சைத் தலைவன்; பஞ்சநதி வாணன் என்னும் பெயரினன். காஞ்சி மாநகரினின்றும் கலிங்கத்தை நோக்கித் தமிழ்ச் சேனை எழுந்தபோது புலிக்கொடி தாங்கிய போர்க்களிற்றின்மீது படைத்தலைவன் - தொண்டைமான் - பெருமிதமாகச் சென்றான். அவனுக்குப் பின்னே பல்லவர் கோமான்; அவனுக்குப் பின்னே வாணர் கோமான். இவ்வாறாக நடந்தது தமிழ்ச் சேனை. எனவே, கலிங்க நாட்டில் தமிழர் பெற்ற வெற்றியில் பஞ்சநதி வாணனுக்கும் பங்குண்டு என்பது சொல்லாமலே விளங்குமன்றோ?

பாண்டிப் போர்

வாணர்குல வீரர் பெரும்பாலும் சோழ மன்னர் சார்பாகவே போர் புரிந்தார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பாண்டியிலே போர் மூண்டது. வீரபாண்டியன் சீறியெழுந்தான்; சிதறிக் கிடந்த மறப்படையைத் திரட்டினான்; சோழர் ஆதிக்கத்தை உதறி எறிந்தான்; வீர சுதந்திரம் பெறுவதற்கு வெம்போர் புரியத் துணிந்தான். குடமலை நாட்டுச் சேரன் ஒரு படையனுப்பிப் பாண்டியனை ஆதரித்தான். இவற்றையெல்லாம் ஒற்றர் வாயிலாக அறிந்தான் குலோத்துங்கன்; உடனே பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். கீழ்பால் உள்ள நெட்டூரில் இரு திறத்தாரும் எதிர்த்து நின்றார்கள். செருக்களம் செங்களமாயிற்று. பாண்டியன், முன்னணியில் நின்று கடும்போர் புரிந்தான்; வீரமொழியால் மறப்படையை ஊக்கினான். ஆயினும் அவன் சிறுபடை சலிப்புற்றுத் தளர்ந்தது. புலிக்கொடியின் முன்னே மீன் கொடி தாழ்ந்தது. பாண்டியன் மணிமுடி இழந்தான்; பட்டத்தரசியையும், படைகளையும் கைவிட்டு ஓட்டம் பிடித்தான். வீரமும் மானமும் விட்டு ஓடிய மன்னவன் தேவியைச் சோழன் சிறைப்பிடித்தான்; தன் வேளத்தில் வைத்தான்.

பாணனுக்குப் பாண்டிநாடு

நெட்டூர்களத்தில் சோழன் பெற்ற வெற்றியின் புகழ் எட்டுத் திசையும் பரந்தது. வாகைமாலை சூடிய வேந்தனையும் வீரரையும் இசைப்பாட்டில் ஏற்றினான் ஒரு பாணப் புலவன். அப்பாட்டைக் கேட்டான் குலோத்துங்கன்; ஆனந்தமுற்றான்; செவிக்குத் தேனெனப் பாணன் வார்த்த தெள்ளிய கவிதையை, "அருந் தமிழ் விருந்து" என்று புகழ்ந்தான். அருகே நின்ற அப் புலவனை நோக்கி, "உன் பாட்டுக்கு ஒரு நாட்டைப் பரிசளிக்க ஆசைப்படுகிறேன்; இப் பாண்டிநாடு இனி உனக்கே உரியது; தந்தேன்" என்றான். கவிக்குலம் களிப்புற்றுக் கூத்தாடிற்று. "நல்ல பாட்டுக்கு நாட்டைப் பரிசளித்தான் தமிழ் வேந்தன்" என்று பாராட்டினர் ஊரார் எல்லாம்.

பாணனது நாணம்

சோழன் பேசிய புகழுரை கேட்டு நாணினான் பாணப் புலவன். பாண்டி நாட்டின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இசையவில்லை. தமிழ்ப் பாட்டின் சுவையறிந்த சோழனைப் பணிந்து போற்றி, "அரசே, பண்ணோடு பழகும் இப் பாணனுக்கு மண்ணாளும் பதவி தகுமா? பைந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டை நீயே பாதுகாத்துப் பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்தி நின்றான்.

பாண்டிப் போரில் வாணகோவரசன்

பாண்டிநாட்டில் நிகழ்ந்த இப் போரில் சோழ மன்னர்க்குப் பேருதவி புரிந்தவன் ஒரு வாணகோவரசன். பாண்டியன் சேனையை முறியடித்த பெருமை அவனுக்கே சிறப்பாக உரியதாகும். போர்க்களம் பாடிப் புகழ் பெற்ற பாணப் புலவனை வாணகோவரசன் தன் தோழனாகக் கொண்டான்; போர் ஒழிந்த காலத்தில் அவனோடு ஆனந்தமாகப் பேசிப் பொழுது போக்கினான்.

வாணனும் பாணனும்

ஒரு நாள் இரவில் வாணன் மாறுகோலம் பூண்டு யாருமறியாது வெளிப்பட்டான்; பாணப் புலவனது வீட்டின் அருகே சென்றான். கதவு அடைத்திருந்தது. அதைத் தட்டினான் வாணன். உள்ளே இருந்த பாணன் கதவைத் திறவாமல், 'யார்?' என்று கேட்டான். அதற்கு வேறொரு பெயரைச் சொன்னான் வாணன். பெயர் மாறி இருந்தாலும் பேசிய குரல் மாறவில்லை. பாணன் சட்டென்றெழுந்து கதவைத் திறந்தான்; வெளியே நின்ற வாணனைக் கட்டித் தழுவிக் கொண்டு,"ஐயனே! அருந்தமிழ் வாணனே! அன்று படைத்திறத்தால் பாண்டியன் பேரை மாற்றினாய். என்றும் கொடைத் திறத்தால் கார்மேகத்தின் பேரை மாற்றினாய். இவ்வாறு பழகிய உனக்கு உன் பெயரை மாற்றுதல் அரிதோ?" என்று நயமுறப் பாடினான் பாணன்.

வாணன் குறும்பு

பின்னொரு நாள் பாணன் வீட்டில் உலையேற வில்லை; அமுதுபடி இல்லையென்று அன்புள்ள மனையாள் அறிவித்தாள். வாணகோவரசனைக் கண்டாற் கலிதீரும் என்று சொல்லிப் புறப்பட்டான் பாணன்! வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; "உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை. வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் "கிருது" உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, "அண்ணலே! கலை வள்ளலே! உலைக்குரிய பண்டம் நாடி உன்னிடம் வந்தேன். குறிப்பறியும் கொற்றவனாகிய நீ, கொலைக்குரிய இவ்விலங்கைக் கொடுத்தாயே! வாணர் கோமானாகிய உனக்கு இந்தப் பாணனோடு என்ன பகை?" என்று வினயமாகப் பாடினான். அது கேட்டு இன்புற்ற வாணன் இனிய பரிசளித்துப் பாணன் கவலையைப் போக்கினான்.

ஏகம்பவாணன்

இத்தகைய வாணர்குலம் பல வீரரைத் தமிழகத்திற்குத் தந்தது. அவர்களுள் ஒருவன் ஏகம்பவாணன். தமிழ் மணங்கமழும் பாமாலையை அவர்க்குச் சூட்டி மகிழ்ந்தனர் செஞ்சொற் கவிஞர். "வாணன் புகழுரையாத வாய் உண்டோ? அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ?" என்று வாயாரப் போற்றினார் ஒரு கவிஞர். வாழையடி வாழையென வளர்ந்தது அவ்வாணர் குலம்; வீரம் விளைந்தது; தமிழை வளர்த்தது; அழியாப் புகழ் பெற்றது.

தியாக வீரம்

தியாகத்தின் சிறப்பு

பிறர்பொருட்டு ஒருவன் தன்னலம் இழக்கும் தகைமையே தியாகம் ஆகும். தமிழகத்தில் என்றும் தியாகத்துக்குத் தனிப் பெருமையுண்டு. "தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்" என்று அத்தகையாரைத் தமிழ்நாடு போற்றுகின்றது. அன்னார் இருத்தலாலே இவ் வுலகம் உள்ளது என்று பாடினான் ஒரு பாண்டியன்.

குமணனும் இளங்குமணனும்

கொங்குநாட்டின் பெருமையெல்லாம் தன் பெருமை யாக்கிக்கொண்டான் ஒரு கொடைவீரன். அவன் முதிரம் என்னும் மலையை ஆண்ட குறுநில மன்னன். குமணன் என்னும் பெயருடைய அக் கோமகன், இரப்போர்க்கு இல்லை யென்று உரைக்கலாற்றாத இதயம் வாய்ந்தவன். அவ்னைத் தமிழகம் பாட்டாலும் உரையாலும் பாராட்டி மகிழ்ந்தது. அதனை அறிந்தான் அவன் தம்பியாகிய இளங்குமணன். அழுக்காறு அவன் மனத்தை அறுத்தது; 'முன்னையோர் ஈட்டி வைத்த பணமும், முதிரமலையின் வளமும் கொள்ளை போகின்றனவே" என்று அவன் குமுறினான்; தமையனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்யத் தொடங்கினான்.

அரசு துறந்த குமணன்

தம்பியின் வஞ்ச மனத்தை அறிந்தான் குமணன். தன்னுயிரை அவன் பெரிதாகக் கருதவில்லை; தம்பி நினைப்பதை முடிப்பானாயின் பாவமும் பழியும் வந்து அவனைப் பற்றுமே என்று பரிவுற்றான்; அதற்கு இடங்கொடாது ஒரு நள்ளிரவில் எவரும் அறியாமல் மாளிகையை விட்டகன்றான்.

கொங்கு நாட்டில் பொங்கிய துயரம்

இரக்கமற்ற இளங்குமணன் அரசாளத் தலைப் பட்டான். குமணனை இழந்த முதிரமலைக் குடிகள் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தார்கள்; தம்பியின் கொடுமையாலேயே தமையன் அரசு துறந்தான் என்று அறிந்து குமுறினார்கள். குடிகளின் மனப்பான்மையை இளங்குமணன் நன்கறிந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. தமையன் உயிரோடிருக்கு மளவும் தன்னாட்சி நிலைபெறாது என்பதை அவன் உணர்ந்தான்; கடுமையான ஆணையொன்று பிறப்பித்தான்; "குமணன் தலையைக் கொய்து வருவார்க்குத் தக்க பரிசு கிடைக்கும்" என்று நாடெங்கும் பறையறிவித்தான்; அச் சொல் குடிகளின் செவியைச் சுட்டது. அவர் மனத்தை அறுத்தது. "குமணன் குலத்தில் இக் கொடும்பாவி பிறந்தானே" என்று அவர்கள் கண்ணீர் சொரிந்தார்கள். பிறந்த குடியின் பெருமையை அழித்து அதன் மணத்தை மாற்றிய பேதையை அமணன் என்று அழைத்தார்கள். முதிரமலையைப் புலிகிடந்த புதர் எனக் கருதி விலகினர் புலவர் எல்லாம்.

காடும் குமணனும்

நாடு துறந்த குமணன் தன்னந் தனியனாய்க் காட்டினுள்ளே புகுந்தான்; காயும் கனியும் அயின்றான்; கானகப் புல்லிலே துயின்றான்; வெம்மை நீத்த விலங்குகளோடு உறவு கொண்டு இன்புற்று வாழ்ந்தான்.

குமணனும் கவிஞரும்

அந்நிலையில் அவனைத் தேடிக் கண்டு கொண்டார் ஒரு புலவர்; 'கலி தீர்ந்தது' என்றெண்ணிக் கவி பாடத் தொடங்கினார்; "ஐயனே! வறுமை நோய் என்னை வாட்டுகின்றது; பாடுபார்க்கும் மனையாள் உண்ண ஒரு பிடி சோறும் இன்றி வாடுகின்றாள். தாய்ப் பால் காணாத தனி இளம் பாலன் அழுது சோர்கின்றான். குழந்தை தாய் முகம் நோக்கினான்; தாய் என் முகம் நோக்கினாள்; யான் உன் முகம் நோக்கி வந்தடைந்தேன் ஐயா" என்று உருக்கமாக எடுத்துரைத்தார்.

தலைக் கொடை

அவர் பாட்டைக் கேட்டபோது குமணனது உள்ளம் அனலிடைப்பட்ட மெழுகுபோல் உருகிற்று. அவன் கண்களில் கண்ணீர் பொங்கிற்று. வாடி நின்ற வறிஞனை நோக்கி,

"அந்தநாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய் இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்."

"உனது வறுமையை ஏழையேன் எவ்வாறு தீர்ப்பேன்" என்று தயங்கி நின்றான். அப்போது மின்னொளி போன்று அவனுள்ளத்தில் ஓர் எண்ணம் பிறந்தது; முகம் மலர்ந்தது. தன் உடைவாளை அவன் எடுத்தான்; புலவர் கையிலே கொடுத்தான். திகைத்து நின்ற அவ்வறிஞரை நோக்கி, "ஐயா! இவ்வாளால் என் தலையை அரிந்து, என் தம்பியிடம் கொண்டு செல்க. இத் தலைக்கு அங்கே விலையுண்டு. தம்பி தரும் பொருளால் உமது வறுமை நோய் தீரும்" என்று பரிவுடன் கூறினான்.

தியாகத்தின் திறம்

அவ்வுரை கேட்ட புலவர் திடுக்கிட்டார்; நடுக்க முற்றார்; வெறி பிடித்தவர்போல் வாளும் கையுமாய் விரைந்து ஓடினார்; முதிரமலையில் இளங்குமணனைக் கண்டார்; கல்லும் புல்லும் கரைந்துருகக் கதறினார்; "இளங்குமணா! உன் தமையனைக் காட்டிலே கண்டேன்; என் பாட்டைச் சொன்னேன். அவன் முகம் வாடிற்று; பின்பு மலர்ந்தது; இந்த வாளை எடுத்தான்; என் கையில் கொடுத்தான்; 'தலையை அறுத்து என் தம்பியிடம் கொண்டு செல்க' என்றான். ஐயோ! தன் தலையையும் கொடுத்துத் தமிழறிந்த இவ்வேழையை ஆதரிக்க இசைந்த வள்ளலை என்ன சொல்லி வாழ்த்துவேன்!" என்று குமணன் இருந்த திசை நோக்கித் தொழுதார்.

தியாகத்தின் வெற்றி

அவர் பேசிய ஆர்வமொழியில், கையில் அமைந்த உடைவாளும் இளங்குமணனது உள்ளத்தை உருக்கி விட்டன. உடன்பிறப்பென்னும் பாசம், பகைமையை வென்றது. நேசத்தால் எழுந்த சோகம் நெஞ்சை அடைத்தது. உடனே அவன் அரியாசனத்தை விட்டெழுந்தான்; புலவரைத் துணைக்கொண்டு கானகம் புகுந்தான்; குமணனைக் கண்டு அடிபணிந்தான். பிழை பொறுக்குமாறு வேண்டினான்; முதிர மலைக்கு அழைத்துவந்து முன்போல அரசாள வைத்தான். குமணன் அளித்த தலைக்கொடை 'விழுமிய கொடை' என்று தமிழகம் இன்றளவும் கொண்டாடுகின்றது.

பாஞ்சால வீரர்

பாஞ்சாலங்குறிச்சி பாண்டி நாட்டுப் பாளையங் களுள் ஒன்று. அங்குப் பாளையக்காரனாய் விளங்கிய வீரன் கட்டப்பொம்மன். அவன் தம்பியும் ஒரு சிறந்த வீரன். அவன் மூங்கையனாதலால் ஊமைத் துரை யென்று பெயர் பெற்றான். பாஞ்சாலப் படைவீரருக்கு அவன் கண்கண்ட தெய்வம்; வெள்ளையரிடம் அவன் கொண்டிருந்த வெறுப்புக்கு ஓர் எல்லையில்லை.

ஊமைத்துரை

ஆங்கிலப் படையைத் துச்சமாகக் கருதினான் ஊமைத்துரை. அவன் ஐந்தாறு துரும்புகளை இடக்கையில் எடுத்து வைத்து அவற்றை வலக்கையால் அடித்து வாயால் ஊதிவிடுவானாம். அதன் கருத்து, 'ஆங்கிலத் துருப்புகளை தாக்கிப் பறக்க அடிக்கவேண்டும்' என்பது. அவ் வாணையை உடனே பாஞ்சாலச் சேனை நிறைவேற்றப் புறப்படும்; எதிர்நின்ற ஆங்கிலப் பகைவரை அறைந்து நொறுக்கும்.

ஒரு போர்

ஒரு நாள் பாஞ்சாலப் படைக்கும் ஆங்கிலப் படைக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. ஊமைத்துரை முன்னணியில் நின்று ஊக்கமாகப் பொருதான். அந்திமாலை வந்துற்றது. பாஞ்சாலப் படை பின்னிட்டது. அப்போது கதிரவன் மறைந்தான். வெற்றி பெற்ற வெள்ளையர் சேனை பாசறைக்குத் திரும்பியது.

ஒரு வீரத் தியாகம்

போர்க்களத்தின் அருகே ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூர் மறவர் சிலர் பாஞ்சாலப் படையிற் சேர்ந்திருந் தார்கள். அவர் திரும்பி வரக் காணாமையால் கவலையுற்ற தாய்மார்கள் கைவிளக்கெடுத்துக் களத்தை நாடினர். நெடுநேரம் தெடிக் குற்றுயிராய்க் கிடந்த தன் மகனைக் கண்டாள் ஒரு தாய்; அவனை எடுத்து மடியிலே சாய்த்துத் தண்ணீர் தெளித்தாள். மைந்தன் கண் விழித்து நோக்கினான். அவனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயன்றாள் தாய்; அப்போது அவ்வீரன், "தாயே! என்னை இங்கேயே விட்டு விடு! அதோ, நம் துரை அடிபட்டுக் கிடக்கின்றார்; அவரை எடுத்துச் சென்று காப்பாற்று. நம்மெல்லோருக்கும் நலம் உண்டு" என்று கைகூப்பித் தொழுதான்.

தியாகத் தாயும் சேயும்

அது கேட்ட வீரத்தாய் முகமலர்ந்தாள்; ஊக்கமுற்று எழுந்தாள்; சிறிது தூரத்தில் ஊமைத்துரை குருதியாடிக் கிடக்கக் கண்டாள். தாய்மார் எல்லோரும் சேர்ந்து அவனைத் தூக்கியெடுத்து ஒரு குடிசையிற் கொண்டு சேர்த்தார்கள். இரவு முற்றும் கண்விழித்து மருந்து கொடுத்துப் பிழைக்க வைத்தார்கள். பொழுது விடிந்தது. "வீரத்தாய் போர்க்களம் சென்றாள்; தன் மைந்தன் - தியாக வீரன் - மடிந்து கிடக்கக் கண்டாள்; பெருமிதம் கொண்டாள். தன்னுயிரின் மேல் வைத்த பாசம் துறந்து, தலைவனுயிரைக் காப்பாற்ற விரும்பி, பெற்ற தாயை அன்பால் அனுப்பிய மைந்தனது தியாகம் பெரிதோ? அன்றிப் பிள்ளையினும் தள்ளரிய பாசம் தவிர்த்து, அவனைப் போர்க்களத்தில் இறக்கவிட்டுத் தலைவனுயிரைக் காப்பாற்றிய தாயின் தியாகம் பெரிதோ? என்று வியந்து வினவினர் வீரரெல்லாம்.

ஆன்ம வீரம்

செம்மனம் உடையாரிடம் சிறந்ததோர் ஆற்றல் உண்டு. அது கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆயினும் அதற்கு மாறாக மன்னனது மறப்படையும் நிற்கமாட்டாது. ஆன்ம வீரம் என்பது அதுவே அத்தகைய திறம் வாய்ந்தோர் பழந்தமிழ் நாட்டில் பலர் இருந்தனர். அவருள் ஒருவர் திருநாவுக்கரசர். மகேந்திரன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் வாழ்ந்த ஆன்ம வீரர் அவர். மத வேற்றுமை காரணமாக அவரை ஒறுக்கக் கருதினான், அம்மன்னன்; அவரைக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அப் பணி தலைமேற் கொண்ட அமைச்சன் படைத்துணையோடு எழுந்தான்; திருநாவுக்கரசரிடம் போந்தான்; மன்னன் ஆணையைத் தெரிவித்தான். அப்போது அவரது ஆன்ம வீரம் பொங்கி எழுந்தது. "நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்ற வீரமொழி பிறந்தது.

வெம்மையை வென்ற செம்மை

அவர் அறைந்த மாற்றம் கேட்ட மன்னன் சீற்ற முற்றான்; வெம்மை சான்ற ஓர் யானையை ஏவி அவரைக் கொல்லப் பணிந்தான். அந்த யானை கூடத்தைக் குத்தி ஒரு குன்றமெனப் புறப்பட்டது. கொம்பன் தம்மை நோக்கி வரக் கண்டார் நாவரசர், சிறிதும் அஞ்சினாரல்லர்; அயர்ந்தாரல்லர்; வெஞ்சின வேழத்தை நோக்கி, "அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை" என்று செஞ்சொற் பாமாலை பாடி நின்றார். வீறுடன் வந்த யானை அடங்கிற்று. ஆன்ம வீரரை வலம் வந்து வணங்கிற்று. வந்த வழியே திரும்பிப் போயிற்று. யானையின் வெம்மையைத் தமது மனச் செம்மையால் வென்றார் திருநாவுக்கரசர் என்று தமிழகம் வியந்து புகழ்ந்தது. அவர் பாடிய வீரப்பாட்டு எங்கும் விரைந்து பரவிற்று. தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளித்தது. மறப்படையை அறப்படையால் வெல்லலாகும் என்னும் கொள்கையைத் திருநாவுக்கரசர் தம் செய்கையால் மெய்ப்பித்தார்.

வீர விளையாட்டு

வீர விளையாட்டில் என்றும் விருப்பமுடையவர் தமிழர். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டங்கள் மிகப் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும், வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மற்றும் வில்லாளராகிய பெருநில மன்னரும், குறுநில மன்னரும் பொழுதுபோக்காக வேட்டையாடினர். காவிரிக் கரையிலும், பாலாற்றங் கரையிலும் பரந்து நின்ற காடுகளில் வேட்டையாடப் புறப்பட்ட சோழமன்னன் கோலத்தைக் கலிங்கத்துப் பரணியிலே காணலாம். மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர் எனப்படுவர். அன்னார் முற்காலத்து மன்னரால் மதிக்கப்பெற்றனர். முல்லைநில மாந்தராகிய ஆயர், ஏறு தழுவும் விளையாட்டிற் சிறந்து விளங்கினர். இன்றும் தமிழ் நாட்டிற் சில பாகங்களில் சல்லிக்கட்டு என்னும் பெயரால் இவ் விளையாட்டு நடைபெறுகின்றது.

வேட்டையாடல்

தமிழ் நாட்டு மலைகளிலும் காடுகளிலும் பல வகையான விலங்குகள் உண்டு. அவற்றுள் உருவிலும் திருவிலும் உயர்ந்தது யானை. வீரம் உடையது வேங்கை. கடுமை வாய்ந்தது கரடி. கொழுமை சான்றது பன்றி. இவை பகற் பொழுதில் மரமடர்ந்த தூறுகளிலும் மலைக்குகை களிலும் மறைந்து வாழும்.

வேட்டை நெறி

வேட்டையாடச் செல்பவர் வாய்ப்பான இடங்களில் திண்ணிய கயிறு வலைகளைக் கட்டுவர்; மோப்பம் பிடிக்கும் வேட்டை நாய்களைக் கட்டவிழ்த்து விடுவர்; பறையறைந்து காட்டைக் கலைப்பர். அப்போது விலங்குகள் விழுந்தடித்து ஓடும். அவ்விதம் கலைந்தோடும் உயிர்களைக் கண்டபடி கொல்வதில்லை பண்டை வேடர். வேட்டை வெறியிலும் ஒரு நெறியுண்டு.[1] அவர் குட்டி விலங்குகளைக் கொல்ல மாட்டார்கள்; கருவுற்று வயிறலைத்து ஓடும் பெட்டை விலங்குகளை வதைக்க மாட்டார்கள்; இவற்றை விடுத்து வலிய விலங்குகளை வில்லால் எய்தும், வாளால் எறிந்தும் வீழ்த்துவர்.

காளத்தி வேடன்

தொண்டை நாட்டுக் காளத்தி மலைச்சாரலில் வேட்டையாடப் போந்தான் ஒரு வேடன். அவன் திண்ணிய மேனி வாய்ந்தவன்; திண்ணன் என்னும் பெயருடையவன்; இளமையிலேயே முறையாக விற்கலை பயின்றவன். வேடர் குலக் கொழுந்தாய் விளங்கிய திண்ணன், முதல் வேட்டைக்கு எழுந்தான். காட்டைக் கலைக்க முன்னே போந்த வேட்டுவர் பறையடித்தனர்; பம்பை முழங்கினர்; கை கொட்டினர்; வலை விரித்தனர்; விலங்கினம் வெருவி எழுந்தது; நாற்றிசையும் ஓடிற்று. களிறும் கலையும், வேங்கையும் கரடியும் வேடர் அம்பால் அடிபட்டு விழுந்தன. அப்பொழுது கொழுத்த பன்றியொன்று கதித்தெழுந்தது; கட்டிய வலையைக் கிழித்தது; காட்டிலும் மேட்டிலும் கடிது சென்றது.

கண்ணப்பன்

அப் பன்றியைத் தொடர்ந்து ஓடினான் திண்ணன். அவன் தோழர்களான காடனும் நாணனும் பின் தொடர்ந்தார்கள். வெகுண்டு எழுந்த வேட்டை நாய்களைத் திமிறி வேகமாகச் சென்றது அப்பன்றி. அது சென்ற இடமெல்லாம் தொடர்ந்து சென்றான் திண்ணன் நெடுந்தூரம் போந்து இளைத்துக் களைத்து ஒரு சோலையிலே நின்றது அவ் விலங்கு. திண்ணன் அதை வில்லால் எய்து கொல்ல விரும்பினானில்லை. அஞ்சாது அதன் அருகே போந்தான்; உடைவாளால் வெட்டினான். பன்றியின் உடல் இரு துண்டாகித் தரையில் விழுந்தது. திண்ணனுக்குப் பின்னே எய்த்து இளைத்து ஓடிவந்த காடனும் நாணனும் அக் காட்சியைக் கண்டு வியந்து, "ஆடவன் கொன்றான் அச்சோ" என்று அகமகிழ்ந்து ஆரவாரித்தனர். இவ்வாறு கன்னி வேட்டையாடிய திண்ணனே காளத்தியப்பனைக் கண்டு, உளங்கசிந்துருகி, அன்பு செய்து கண்ணப்பன் ஆயினான். வேடர் பெருமானாகிய திண்ணன் செம்மையைத் தேவாரம் புகழ்ந்து பாடிற்று.

மல்லாடல்

உறந்தை மல்லன்

காவிரிக் கரையிலுள்ள உறையூர் ஒரு காலத்தில் சோழ நாட்டின் தலைநகரமாகச் சிறந்திருந்தது. உறந்தை என்று அவ்வூரைப் புகழ்ந்து பாடினர் கவிஞர். உறந்தையில் அரசாண்ட சோழர் குலத்தின் பெருமைக்கு அடிப்படை கோலியவன் தித்தன் என்ற வேளிர் தலைவன். அவன் சிற்றரசன் ஒருவனை வென்று உறந்தையைக் கைப் பற்றினான்; கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்தினான். அவன் வழியில் வந்தவர் உறையூர்ச் சோழன் என்று பெயர் பெற்றனர். தித்தன் மகன் நற்கிள்ளி என்னும் பெயரினன். அவன் அழகமைந்த மேனியன்; மல்லாடலில் வல்லவன். அவன் வீரத் தோள்களைக் கண்டு வியந்து மகிழ்ந்தாள் நக்கண்ணை என்ற நங்கை; அவன் ஆண்மையைப் புகழ்ந்து அழகிய கவியும் பாடினாள்.

ஆமூர் மல்லன்

தித்தனுக்கும் அவன் மகனுக்கும் இடையே மனக் கசப்பு உண்டாயிற்று. தலைநகரை விட்டு மைந்தனை வெளியேற்றினான் தந்தை. அரசாளப் பிறந்த நற்கிள்ளி ஆண்டிபோல ஊர் ஊராக அலைந்தான். ஆயினும் அவன் மனத்திண்மை உலைந்ததில்லை; ஆண்மை குன்றியதில்லை. அப்போது ஆமூர் என்ற ஊரில் ஒரு மல்லன் இருந்தான். அவன் வலிமை சான்றவன். பலருடன் மல்லாடி வென்று செருக்கும் தருக்கும் உள்ளவன்; அவன் நாடிழந்த நற்கிள்ளியை வென்று பீடு பெறக் கருதினான்; மல்லாட அறைகூவி அழைத்தான்.

மல்லாடிய மாட்சி

மல்லர் இருவரும் குறியிடம் புகுந்தனர். பல்லாயிரவர் ஆண்களும் பெண்களும் அக்களத்தைச் சூழ்ந்து நின்றார். மற்போர் தொடங்கிற்று. கண்ணிமையாமல் அக்காட்சியைக் கண்டு நின்றவர் அவர் பிடியும் அடியும் கண்டு பெருவியப் புற்றார். அப்போது இடியுண்ட மரம்போல் தரையிடை விழுந்தான் ஒருவன். மற்றவன் அவன் மார்பின்மீது மண்டியாக ஒரு காலை வைத்து அழுத்தினான்; தலையும் காலும் நெளிய வளைத்தான்; உயிரை உடலினின்றும் பிரித்தான்; ஏறுபோல் நடந்து செருக்களத்தினின்று வெளியேறினான். அவன்தான் அரசிளங்குமரன் நற்கிள்ளி. சுற்றி நின்றவர் ஆரவாரித்தார்; 'ஊரிழந்தானாயினும் கிள்ளி வீறிழந்தான் அல்லன்' என்று வியந்து புகழ்ந்தார். 'இக்காட்சியைத் தித்தன் காணும் பேறு பெற்றானில்லையே; என்று பரிவுற்றார்.

ஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீரிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.

காளையும் காளையும்

மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.

ஏறுகோள்

காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.

ஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.

விலங்கு விளையாட்டு

யானைப் போர்

வீர விளையாட்டில் விருப்புற்ற தமிழர் உள்ளம் விலங்குப் போர்களிலும் வேட்கையுற்றது. மதயானைகள் ஒன்றோடு ஒன்று போரிடக் கண்டு மகிழ்ந்தனர் தமிழ் மன்னரும் செல்வரும். கருமலை போன்ற களிறுகள் பெருமிதமாகக் குறியிடம் போந்து பிளிறும்; வீர வெறி கொண்டு ஓடும்; சாடும்; நெடுங்கரத்தால் அடிக்கும்; கொம்புகளால் இடிக்கும். இக் காட்சியை மாளிகை மேடையில் இருந்து கண்டு இன்புறுவர் காவலர். குன்றேறி நின்று யானைப்போர் காணும் செய்கையைக் குறித்துள்ளார் திருவள்ளுவர். அரசர் வாழும் தலைநகரங்களில் ஆனைப்போர் காண்பதற்கென தனி மாடங்கள் அமைத்தலும் உண்டு. அத்தகைய மாளிகையில் ஒன்று மதுரை மாநகரில் வைகையாற்றின் வட கரையில் இன்றும் காணப்படும். அந் நகரில் அரசாண்ட நாயக்கமன்னர் யானைப்போர் விளையாட்டுக் காண்பதற்காக அமைத்தது அவ் வசந்த மாளிகை. தமக்கம் என்னும் பெயர் வாய்ந்த அம்மாடம் இப்பொழுது மதுரை மாவட்டக் கலெக்டரின் குடியிருப்பாக விளங்குகின்றது.

ஆட்டுப் போர்

இந் நாளிலும் நாட்டு மாந்தர் விருப்புடன் கண்டு களிப்பது ஆட்டுப் போர். ஆட்டுக் கடாக்களைப் போட்டிக்காகவே வளர்ப்பர் சிலர். அவற்றைப் பொருதகர் என்பர் திருவள்ளுவர்.

"ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து"

என்பது அவர் அருளிய திருக்குறள். போரிடும் ஆடுகள் ஒன்றையொன்று உருத்து நோக்கும்; எழுந்து தாக்கும்; பின் வாங்கும்; முன்னேறும்; கதித்துப் பாயும்; குதித்து முட்டும்; விலக்கினாலும் விடாது வெம்போர் விளைக்கும்.

சேவற் போர்

பறவையினத்திலும் போர் உண்டு. கொழுமையான கோழிகள் செய்யும் போரும், கடுமையான காடைகள் புரியும் போரும் கண்டு மகிழ்ந்தனர் பண்டைத் தமிழர்.

இன்றும் தமிழ் நாட்டில் பல விடங்களில் சேவற்போர் நிகழ்ந்துவருகின்றது. "கறுப்புறு மனமும், கண்ணிற் சிவப்புறு சூட்டும் காட்டிச்" சேவல்கள் செய்யும் சண்டையைப் புகழ்ந்து பாடினார் கம்பர். கத்தியும் முள்ளும் காலிற் கட்டிச் சேவல்களைப் போரிடச் செய்தலும் உண்டு. பாய்ந்தும் படிந்தும் அவை ஒன்றையொன்று அடிக்கும் பான்மையைக் கண்டு மாந்தர் ஊக்க முறுவர். சோழ நாட்டின் பழைய தலைநகராகிய உறந்தையில் வீரக் கோழிகள் சிறந்திருந்தமையால் கோழியூர் என்ற பெயர் அதற்கு அமைந்தது என்பர்.

ஆசிரியர் - ரா.பி. சேதுபிள்ளை

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top