பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒப்புரவறிதல்

ஒப்புரவறிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இல்லறவியல்

ஒப்புரவறிதல்

211 மாரிமாட்டு உலகு என் ஆற்றும்-தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன; கடப்பாடு கைம்மாறு வேண்டா-ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல.

விளக்கம்

('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)

212 தக்கார்க்கு தகுதி உடையார்க்கு ஆயின்; தான் ஆற்றித் தந்த பொருள் எல்‘ம்-முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும்; வேளாண்மை செய்தற் பொருட்டு-ஒப்புரவு செய்தற் பயத்தவாம்.

விளக்கம்

(பிறர்க்கு உதவதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.) ---

213. புத்தேள் உலகத்தும் ஈண்டும்-தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்; ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது-ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.

விளக்கம்

(ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராதலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

214. உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான்-உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்-அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.

விளக்கம்

(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேதநடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.) ---

215. உலகு அவாம் பேர் அறிவாளன் திரு-உலகநடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினை யுடையவனது செல்வம்; ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற்போலும்.

விளக்கம்

(நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.) ---

216 செல்வம் நயன் உடையான்கண் படின்-செல்வம் ஒப்புரவு செய்வான்கண்ணே படுமாயின்; பயன் மரம் உள்ளூர் பழுத்தற்று-அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.

விளக்கம்

(உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார். எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.) ---

217. செல்வம் பெருந்தகையான்கண் படின்-செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று-அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும்.

விளக்கம்

(தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதல், காலத்தான் வேறுபட்டதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டானனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.) ---

218. இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்-செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்; கடன் அறி காட்சியவர்-தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார்.

விளக்கம்

(பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)---

219 நயன் உடையான் நல்கூர்ந்தான்ஆதல்-ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது; செயும் நீர செய்யாது அமைகலா ஆறு-தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம்.

விளக்கம்

(தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.) ---

220. ஒப்புரவினால் கேடு வரும் எனின்-ஒப்பரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து-அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து.

விளக்கம்

(தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது. புகழ் பயத்தல் நோக்கி, இதனான் ஒப்புரவினா கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top