பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொறையுடைமை

பொறையுடைமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இல்லறவியல்

பொறையுடைமை

151 அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம்போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்.

விளக்கம்

(இகழ்தல்: மிகையாயின செய்தலும் சொல்லுதலும்) ---

.152 என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று.

விளக்கம்

('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும். பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறுத்தலை 'அதனினும் நன்று' என்றார்.) ---

153 இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல் வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.

விளக்கம்

(இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.) ---

154. நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுகப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும்.

விளக்கம்

(பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.) ---

155 ஒறுத்தாரை, ஒன்றாக வையார்-பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர்-அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.

விளக்கம்

(ஒறுத்தவர் தாமும் அத்தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாக வையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல். --

156 ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்-தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்னும் துணையும் புகழ்-அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.

விளக்கம்

(ஒருநாளை இன்பம், அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின், ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது.) ---

157 திறன் அல்ல தன் பிறர் செய்யினும்-செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று-அவர்க்கு அதனால் வரும் துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று.

விளக்கம்

(உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை-எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி.58) என்று பரிதல்.) ---

158 மிகுதியான் மிக்கவை செய்தாரை-மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் பொறையான் வென்று விடுக.

விளக்கம்

(தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.) ---

159 துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்சிற்பவர்-நெறியைக் கடந்தார வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.

விளக்கம்

(தூய்மை: மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டிய தன் இழிபு முடித்தற்கு.) ---

160 உண்ணாது நோற்பார் பெரியர்-விரதங்களான் ஊனைத் தவிர்த்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின்-அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்.

விளக்கம்

(பிறர்-அறிவிலாதார். நோலாமைக்கு ஏதுஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top