பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அலரறிவுறுத்தல்

அலரறிவுறுத்தல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

களவியல்

அலரறிவுறுத்தல்

1141 அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகளைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவள் சொல்லியது. அலர் எழ ஆர் உயிர் நிற்கும் - மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலாராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானை அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்.

விளக்கம்

(அல்ல குறிப்பிட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும், அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம்; ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான், என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.) ---

1142. இதுவும் அது. மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது.

விளக்கம்

(அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக் கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.) ---

1143. இதுவும் அது. ஊர் அறிந்த கெளவை உறாஅதோ-எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான்.

விளக்கம்

(பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.) --

1144 இதுவும் அது. காமம் கவ்வையாற கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும்.

விளக்கம்

(அலர்தல்: மேன்மேல் மிகுதல்.செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்வு: இன்பம் பயத்தல். 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி; 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப''

விளக்கம்

(நெடுநல். 184-185) என்புழியும் அது.) ---

1145. இதுவும் அது. களித் தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது.

விளக்கம்

('வேட்கப்பட்டற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.) ---

1146. இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது. கண்டது ஒருநாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று - அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது.

விளக்கம்

(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும், என்பதாம்.) ---

1147. வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, 'ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்' எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது. இந்நோய் - இக்காமநோயாகிய பயிர்; ஊரவர் கெளவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது.

விளக்கம்

('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏகதேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.) ---

1148. இதுவும் அது. கெளவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும்.

விளக்கம்

(மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)

1149. வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள், அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றன் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்டஞான்று 'நின்னிற்பிரியேன்; அஞ்சல் ஓம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாண ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது.

விளக்கம்

('நாண்' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையுமாய யாம் நாணுதல் யாண்டையது?' என்பதாம்.) ---

1150 . தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங் கெளவை யெடுக்குமிவ் வூர்.தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச்சொல்லியது. யாம் வேண்டும் கெளவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே வரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர்தாமும்யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர்; அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது.

விளக்கம்

(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.61538461538
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top