பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊடலுவகை

ஊடலுவகை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பியல்

ஊடலுவகை

1321. தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, 'அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர் மாட்டுத்தவறில்லை ஆயினும்; அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்க வற்றாகின்றது.

விளக்கம்

('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். ''அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற் பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக்கருதி, அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது'' என்பதாம்.) ---

1322. புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, 'அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளிவாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும்.

விளக்கம்

('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும் 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.) ---

1323. இதுவும் அது. 'நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.

விளக்கம்

(நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின், அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள். 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி வந்தது.) ---

1324. 'அப்புலவி இனி யாதான் நீங்கும்?' என்றாட்குச் சொல்லியது. புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை. - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.

விளக்கம்

('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் 'படைக்கலம்' என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும். 'படைக்கலம்' என்றாள். அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.) ---

1325. தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது. தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து.

விளக்கம்

('உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை' என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். 'ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.) ---

1326. இதுவும் அது. உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.

விளக்கம்

('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல, அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம்பற்றிக் கூறியவாறு.) ---

1327. இதுவும் அது. ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும்.

விளக்கம்

(தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.) ---

1328. இதுவும் அது. நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் சொல்லோ - இன்னும் ஒருகால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ?

விளக்கம்

(கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றாள். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப்பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.) --

1329. இதுவும் அது. ஔ¢ இழை ஊடுக மன் - ஔ¢யிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.

விளக்கம்

('ஊடுக, நீடுக' என்பன வேண்டிக் கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன.)

1330. இதுவும் அது. காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமை பற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம்.

விளக்கம்

(கூடுதல் - ஒத்த அளவினராதல், முதிர்ந்த துனியாய வழித்துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப் பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.)

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.15789473684
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top