பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தகையணங்குறுத்தல்

தகையணங்குறுத்தல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

களவியல்

தகையணங்குறுத்தல்

1081. தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது. கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர் கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது.

விளக்கம்

(ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற்சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். கனங்குழை: ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும் தன் வருத்தமும் பற்றி, 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும்பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினான்.) ---

1082. மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என்நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற்போலும் தன்மையை உடைத்து.

விளக்கம்

(மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல் என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.) ---

1083. இதுவும் அது. கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து.

விளக்கம்

(பெண்தகை: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டெனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.)

1084. இதுவும் அது. பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்ந்திருந்தன.

விளக்கம்

(அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.) ---

1085. இதுவும் அது. கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமை யான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ; அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.

விளக்கம்

(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில் பற்றி வந்த ஐயநிலை உவமம்.)

1086. இதுவும் அது கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடைய வாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - துயரைச் செய்யமாட்டா.

விளக்கம்

(நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினார். நடுங்கு அஞர் - நடுங்கற்க ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.) ---

1087. அவள் முலைகளினாய வருத்தம் கூறியது. மாதர் படா முலைமேல் துகில் - இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின், கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்.

விளக்கம்

(கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றார். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றுஞ் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். 'உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.) ---

1088. நுதலினாய வருத்தம் கூறியது. ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; ஒள் நுதற்குஓ உடைந்தது - இம்மாதரது ஒள்ளிய நுதலொன்றற்குமே அழிந்துவிட்டது.

விளக்கம்

('மாதர்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதனால், பகைவராதல் பெற்றாம். 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும் காய வலியும் கொள்க. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று.)

1089. அணிகலத்தானாய வருத்தம் கூறியது. பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான்பிணைஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து ?

விளக்கம்

(மடநோக்கு - வெருவுதல் உடைய நோக்கு. 'இவட்குப் - பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.) -

1090 தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது. அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று.

விளக்கம்

(அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அது பெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. ''அரிமயிர் திரள் முன்கை'' (புறநா. 11) என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top