பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குறிப்பறிதல்

குறிப்பறிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

களவியல்

குறிப்பறிதல்

1091. தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது. இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்ததாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என் கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.

விளக்கம்

(உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தனாய காமக்குறிப்பினை வெளிப்படுத்துகின்ற நோக்கு. மருந்தாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்; அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக. அவ்வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.) ---

1092.  இதுவும் அது. கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும்.

விளக்கம்

(தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும், நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவு கொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், 'இனிப் புணர்த்ல் ஒருதலை' என்பான் 'செம்பாகம் அன்று; பெரிது' என்றும் கூறினான்.) ---

1093.  நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது. நோக்கினாள் - யான் நோக்கா அளவில்தான் என்னை அன்போடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் - நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றி அன்புப் பயிர் வளர அதற்கண் அவள் வார்த்த நீராயிற்று.

விளக்கம்

(அஃது என்னும் சுட்டுப் பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.) ---

1094.  நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது. யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்கா நிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும்.

விளக்கம்

(மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.) ---

1095.  இதுவும் அது. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத துணையல்லது; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணை சிரங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.

விளக்கம்

(சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம். சிறக்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல' என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். 'இனி இவளை எய்துதல் ஒருதலை' என்பது குறிப்பெச்சம்.) ---

1096. தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர்போலக் கடுஞ்சொற் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தால் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும்.

விளக்கம்

(கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து; வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றவை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)

1097.  இதுவும் அது. செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவன.

விளக்கம்

(குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.) ---

1098.  தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது. யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கிய இயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு.

விளக்கம்

(ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.) --

1099. தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையார் கண்ணே உளவாகாநின்றன.

விளக்கம்

(பொது நோக்கு; யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர் கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண் தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சி போல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார் 8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.) ---

1100. இதுவும் அது. கண்ணோடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச் சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.

விளக்கம்

(நோக்கால் ஒத்தல்; காதல் நோக்கினவாதல். வாய்ச்சொற்கள்; மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.92857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top