பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தனிப்படர் மிகுதி

தனிப்படர் மிகுதி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பியல்

தனிப்படர் மிகுதி

1191. 'காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர்; நீ அவரோடு பேரின்பம் நுகர்தி,' என்ற தோழிக்குச் சொல்லியது. தாம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர்; பெற்றோரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை.

விளக்கம்

(காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது, முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனியாம் பெற்றிலேன்,' என்பதாயிற்று.) ---

1192. இதுவும் அது. வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி;வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும்.

விளக்கம்

('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது,' என்பதாம்.) ---

1193. இதுவும் அது. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு.

விளக்கம்

(நாம் அவரான் விழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.) ---

1194. 'காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி,' என்ற தோழிக்குச் சொல்லியது. வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.

விளக்கம்

(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை; நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையேற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை,' என்பதாம்.) ---

1195. 'அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்,' என்ற தோழிக்குச் சொல்லியது. நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி.

விளக்கம்

(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே,' என்பதாம்.)

1196. இதுவும் அது. காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக் கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.

விளக்கம்

(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா - ஆகுபெயர். என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும் உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ?' என்பதாம்.) ---

1197. இதுவும் அது. ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான் கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ!

விளக்கம்

('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான்; இனி யான் உய்யுமாற என்னை?' என்பதாம்.) ---

1198. தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.

விளக்கம்

வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)

1199. இதுவும் அது. நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதல் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்துயாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.

விளக்கம்

(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்,' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்' என்பதாம்.) ---

1200. தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது. உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாய; அஃது எளிது.

விளக்கம்

(உரைக்கலுற்றது அளவிறந்த நோயகலானும், கேட்பார் உறவினராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.) --

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.21052631579
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top