பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நிறையழிதல்

நிறையழிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பியல்

நிறையழிதல்

1251 நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது; இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை.

விளக்கம்

(கணிச்சி - குந்தாலி. நானுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.) ---

1252. நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும்' என்றாட்குச் சொல்லியது. யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடையாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது.

விளக்கம்

('ஓ' என்பது இரக்கக் கூறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் ?- தலைமகன்பாற் செலவிடுத்தல் தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும், அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.) ---

1253. 'மகளிர் காமம் மறைக்கப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல்போல வௌ¢ப்பட்டே விடா நின்றது.

விளக்கம்

('மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் - இரங்கற்கண் வந்தது. தும்மல் அடங்காதாற்போல அடங்குகின்றதில்லை" என்பதாம்.) ---

1254. இதுவும் அது. யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வௌ¢ப்படா நின்றது.

விளக்கம்

(மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன. மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.) ---

1255. 'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம்,' என்றாட்குச் சொல்லியது. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை. தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காம நோயினை உறாதார் அறிவதொன்று அன்றி, உற்றார் அறிவதொன்று அன்று.

விளக்கம்

(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காமநோய் உறாதார் . மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று,' என்பதாம்.) ---

1256. இதுவும் அது. செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது?

விளக்கம்

சால நன்று. 'செற்றவர்' என்றது ஈண்டும் அப்பொருட்டு 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது, இகழ்ச்சிக் குறிப்பு. 'இக் காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது,' என்பதாம்.) ---

1257. பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணியார் காமத்தாற் பெட்ப செயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்.

விளக்கம்

('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.) ---

1258. இதுவும் அது. நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணி மொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?

விளக்கம்

(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக் கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக் கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பல் மாயக் கள்வன்' என்றாள். பணிமொழி தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாது ஒழியுமோ?' என்பதாம்.) ---

1259. இதுவும் அது புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன்.

விளக்கம்

(வாயாமை புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)

1260. இதுவும் அது. நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ?ஆகாது.

விளக்கம்

(புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று,' என்பதாம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top