অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பிரிவாற்றாமை

பிரிவாற்றாமை

கற்பியல்

பிரிவாற்றாமை

1151 'பிரிந்து கடிதின் வருவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல்.

விளக்கம்

(தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்காலமெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன். இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.) ---

1152. பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்ப முடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புண் கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.

விளக்கம்

('பார்வல்' என்றதனால், புணர்ச்சிபெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப் பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, ''முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந்தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்'' (கலித்.பாலை. 3) பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதற் குறிப்புக் காட்டி அச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.) ---

1153 இதுவும் அது. அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்;

விளக்கம்

ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத் தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. அரோ: அசைநிலை. உம்மை : உயர்வு சிறப்பின்கண் வந்தது. ---

1154. இதுவும் அது. அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, 'நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் ஊண்டோ?

விளக்கம்

('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போற் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும்; அஃது எய்தாவகை அழுங்குவி' என்பது கருத்து.) ---

1155. இதுவும் அது. ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம்.

விளக்கம்

(ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று; வினைமாற்றின்கண் வந்தது.) ---

1156 தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்துசொல்லிய தோழிக்குச் சொல்லியது. அவர் பிரிவு உரைக்கும் வண்கண்ணராயின் - நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்றும் தம் பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.

விளக்கம்

(அருமை: பயன்படுதல் இல்லாமை. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது?' என்பதாம். அழுங்குவித்தல்: பயன்.) ---

1157. இதுவும் அது. துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் உனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ?

விளக்கம்

(முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்கு வித்து வந்து கூறற்பாலை யல்லையாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்;' எனப் புலந்து கூறியவாறு.) ---

1158. மதுவும் அது. இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தன் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.

விளக்கம்

(தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின், 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.) ---

1159. 'காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதலல்லது; காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ? மாட்டாது.

விளக்கம்

(சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப் படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'கடல்' என்றார். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.) ---

1160. 'தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை,'என்ற தோழிக்குச் சொல்லியது. நீ சொல்லுகின்றது ஒக்கும், அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் - பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர் வாழும் மகளிர் உலகத்துப் பலர்.

விளக்கம்

(பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக் கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரிய தொன்றாகலின், 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந்தேயத்து அவர்க்கு யாது நிகழும்?' என்றும், 'வருந்துணையும்யாம் ஆற்றியிருக்குமாறு என்?' என்றும், 'அவ்வளவுதான் எஞ்ஞான்றும் வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காமவேதனையும், புறத்து யாழிசை, மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா 'மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை' என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப் பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணர நின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும் இறந்து படுவல்' என்பது கருத்து.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate