பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புலவி

புலவி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பியல்

புலவி

1301. வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற் பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது. அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக் கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்துசென்று புல்லாதே; இத் தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக.

விளக்கம்

(அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள். புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி? ஐகாரம் ''கடம்பூண்டொருகால் நீ வந்தை'' (கலித். குறிஞ்சி. 27) என்புழிப்போல முன்னிலை வினைவிகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக் குறிப்புக் கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.) ---

1302. புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவர் சொல்லியது. புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும்.

விளக்கம்

(நீள விடல் - அளவறிந்துணராது. கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல்; 'சிறிது நீள விடலாகாது' என்றாள். நேர்விக்கின்றாளாகலின், 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கல்வி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.) ---

1303. பரத்தையர் இடத்து நின்றும் வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.

விளக்கம்

('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.) ---

1304. இதுவும் அது. ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்.

விளக்கம்

('நீர் பரத்தையரிடத்தல் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற் பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்,' என்பதாம்.) ---

1305. தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே

விளக்கம்

(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான். 'நலத்தகை நல்லார்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல். தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.) ---

1306. இதுவும் அது. துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்.

விளக்கம்

(மிக முதிர்ந்திறும் 'எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் 'துனியில்லையாயின், கனியற்று' என்றும்; கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின், 'புலவியில்லையாயின் கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.) -

1307. இதுவும் அது. புணர்வது நீடுவது

விளக்கம்

(கொல்) அன்று கொல் என்று- இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக்'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.)

1308. உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது. நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினையறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்?

விளக்கம்

('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. 'இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை,' எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.) ---

1309. இதுவும் அது. நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது; ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அதுபோலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது.

விளக்கம்

(நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையுடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது,' என்பதாம்.

1310. இதுவும் அது. ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும், விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை.

விளக்கம்

(அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக் கூட்டம் முடியாது' என்பதாம்.)

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.26315789474
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top