பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புலவி நுணுக்கம்

புலவி நுணுக்கம் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பியல்

புலவி நுணுக்கம்

1311. உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது. பரத்த- பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்-நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்.

விளக்கம்

(கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணக்கமாயிற்று.) ---

1312. தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்த காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி;

விளக்கம்

(தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.) ---

1313. தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, 'நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது?' என்ற தோழிக்கு தலைமகன் சொல்லியது. கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியை காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப் பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ?

விளக்கம்

('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர்; வளையமாகச் சூடினும் என்பதாம்; ''கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்'' (புறநா. 275) என்றார் பிறரும். இனி, 'அம் மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், 'பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்,' எனினும் அமையும்.) --

1314. இதுவும் அது. யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, 'அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர்' என்று சொல்லிப் புலந்தாள்.

விளக்கம்

(தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்பை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை,' என்பதாம்.)

1315 இதுவும் அது. இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேன் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள். அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள்.

விளக்கம்

('வௌ¢ப்படு சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை,' என்பதாம்.) ---

1316. இதுவும் அது. உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால்,

விளக்கம்

'யான் உள்ளினேன்' என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள்-என, அதனை ஒருகால் மறந்துபின் நினைந்தேன் என்றதாகக் கருதி, 'என்னை யிடையே மறந்தீர்' என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள். மற்று - வினை மாற்றிக்கண் வந்தது. அருத்தாபத்தி வகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம். ---

1317. இதுவும் அது. தும்மினேனாக வழுத்தினாள் - கூறியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, 'நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்?' என்று சொல்லிப் புலந்தழுதாள்.

விளக்கம்

(வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான் அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இவ்வழக்கை உள் வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.) ---

1318. இதுவும் அது தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, 'யார் உள்ளித் தும்மினீர்?' என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன்; அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள்.

விளக்கம்

('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது?' என்பதாம்.) ---

1319. இதுவும் அது. தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர்,' என்று சொல்லி.

விளக்கம்

('இவள் தௌ¢வித்தவழியும் தௌ¢யாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அதுதானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது?' என்பதாம்.) ---

1320. இதுவும் அது. நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயவங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும், என்னை வெகுளாநிற்கும்; அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - 'நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர், அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து?'' என்று சொல்லி.

விளக்கம்

('யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்க வேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின், 'என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி?' என்றாள்.'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top