பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அமைச்சு

அமைச்சு எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கவியல்

அமைச்சு

631. கருவியும்-வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும்-அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும்-அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு- வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான்.

விளக்கம்

(கருவிகள்-தானையும் பொருளும். காலம்-அது தொடங்கும் காலம். 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தனையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.) ---

632. வண்கண்-வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடி காத்தல்-குடிகளைக் காத்தலும்; கற்று அறிதல்-நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு-முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு-மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்.

விளக்கம்

(எண்ணோடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது, அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும், அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும், 'கற்று அறிதல்' என்பதனைக் கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும், 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப..) ---

633. பிரித்தலும்-வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும்- தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக் கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும்-முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு-வல்லவனே அமைச்சனாவான்.

விளக்கம்

(இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும், பிரித்தலை 'விக்கிரகம்' என்றும்கூறுப.) ---

634. தெரிதலும்-ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும்-அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும், ஒரு தலையாச் சொல்லலும்-சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும், வல்லது அமைச்சு வல்லவனே அமைச்சனாவான்.

விளக்கம்

(தெரிதல், செயன் மேலதாயிற்று, வருகின்றது அதுவாகலின்.) ---

635. அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான்-அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான்-எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை-அவற்குச் சூழ்ச்சித் துணையாம்.

விளக்கம்

('தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார். 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒரு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும்உ ளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.) ---

636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு-இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யா உள-மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?

விளக்கம்

('மதி நுட்பம்' என்பது பின் மொழி நிலையல். அது தெய்வம் தர வேண்டுதலின் முன் கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதி நுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது உட சொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல்; அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம்யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப் பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.) ---

637. செயற்கை அறிந்தக் கடைத்தும்-நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க.

விளக்கம்

('கடைத்தும்' என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க; செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.) ---

638. அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை.

விளக்கம்

('அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல். 'உழையிருந்தான்' எனப் பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.) ---

639. பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின்-பக்கத்திருந்து பிழைப்பு எண்ணும்அமைச்சன் ஒருவனில்; ஓரேழுபதுகோடி தெவ் உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரேழுபதுகோடி பகைவர் உறுவர்.

விளக்கம்

('எழுபது கோடி' என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலாம் காக்கப்படான என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதல்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---

640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யா நிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்றகூறுபாடு இல்லாதார்.

விளக்கம்

(அக்கூறுபாடாவன; வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்தும் முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.89473684211
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top