பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அறிவுடைமை

அறிவுடைமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

அறிவுடைமை

421. அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம்; செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.

விளக்கம்

(காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல். உள்ளரண் - உள்ளாய அரண்; உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

422. சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது; தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின்நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.

விளக்கம்

(வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும், ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது சொல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக் குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.) ---

423. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.

விளக்கம்

(குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்தி நின்றது. மெய்யாதல்: நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது; அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.) ---

424. தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி; பிறர்வாய் நுண் பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு.

விளக்கம்

(உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார். சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.) ---

425. உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையினாவது அறிவாம்.

விளக்கம்

('தழிஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. 'உலகம்' என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப் போல வேறுபடாது, கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான். எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும் இல்லது என்று உரைப்பாரும் உளர்.) ---

426. உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.

விளக்கம்

('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான், அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.) ---

427. அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறிய வல்லார்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார்.

விளக்கம்

(முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார்' என்பதற்குத் 'தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.) ---

428. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.

விளக்கம்

(பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை: எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார், 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.) ---

429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு; அதிர வருவது ஓர் நோய் இல்லை . அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.

விளக்கம்

('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம் இன்மை இதனான் கூறப்பட்டது.) ---

430. அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும், எல்லாம் உடையராவர்; அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.

விளக்கம்

(செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடையரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.68421052632
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top