பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இடனறிதல்

இடனறிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

அரசியல்

இடனறிதல்

491 முற்றும் இடம் கண்ட பின் அல்லது - பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது; எவ்வினையும் தொடங்கற்க - அவர் மாட்டு யாதொரு வினையையும் தொடங்கா தொழிக; எள்ளற்க - அவரைச் சிறியர் என்று இகழா தொழிக.

விளக்கம்

[முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலோடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து, ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.] ---

492 முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும்; அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.

விளக்கம்

[மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும், இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின், ஈண்டு ஆக்கம் விசேடிக்கப் பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய் முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.] ---

493 இற்றாரும் ஆற்றி அடுப -வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர்; இடம் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்.

விளக்கம்

['வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல், இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.] ---

494 இடன் அறிந்து துன்னியார் - தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர்; துன்னிச் செயின் - அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் - அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.

விளக்கம்

['அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின், இதனான் அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று, இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.] ---

495 முதலை நெடும்புனலுள் (பிற) வெல்லும் - முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும்; புனலின் நீங்கின் அதனைப் பிற அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.

விளக்கம்

[எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம்; அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்,' என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடம் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.] ---

496 கால் வல் நெடுந்தேர் கடல் ஓடா - நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா; கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா - இனி அக்கடலின் கண் ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின் கண் ஓடமாட்டா.

விளக்கம்

['கடல் ஓடா' என்ற மறுதலை அடையான் 'நிலத்து ஓடும்' என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பது ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது. 'மேற் சென்றார் பகைவர் இடங்களை அறிந்து, அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க,' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.] ---

497 எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி, அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின்; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம் திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.

விளக்கம்

['திண்ணியராய் நின்று செய்து முடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ்வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.] ---

498 உறுபடையான் - பெரும்படையுடைய அரசன்; சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின்; ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும்.

விளக்கம்

['செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்து விடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல். ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப் பெருமை நோக்கி, இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக, அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.] ---

499 சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும்; மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது.

விளக்கம்

['நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண் சென்று தாக்கின், அவர் அது விட்டுப் போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர்; ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.] ---

500 கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கொத்த கோட்டவுமாய களிறுகளை; கால் ஆழ் களரின் நரி அடும்-அவை கால் ஆழும் இயல் பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும்

விளக்கம்

['முகம்' ஆகுபெயர். 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்; வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.] ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.05555555556
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top