பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உழவு

உழவு எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஒழிபியல்

உழவு

1031 சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் தலை உழவே - ஆதலான் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.

விளக்கம்

(ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

1032. அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிற தொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார்உலகத்தாருக்கு ஆணி - அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்.

விளக்கம்

('காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு'' (பட்டினப் 283-4) என்றார்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை, கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின்' 'ஆணி' என்றார், 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்.) ---

1033. உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு அவரைப் பின் செல்கின்றவர்.

விளக்கம்

('மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது, அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.) ---

1034. அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினையுடையராய தண்ணளியுடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர் - பலவேந்தர் - குடை நிழலதாய மண் முழுதினையும் தம் வேந்தர்குடைக்கீழே காண்பர்.

விளக்கம்

(அலகு - கதிர்; அஃது ஈண்டு ஆகு பெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போன்றலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி; ஒற்றுமை பற்றித் 'தங்குடை என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர்; ''ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே'' [புறநா. 35] என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண் முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம்; ''இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்'' [சிலப். நாடுகாண். 149] என்றார் பிறரும்.) ---

1035. கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர்.

விளக்கம்

('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.) ---

1036. உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேன் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தோம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.

விளக்கம்

(உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும் இல்லறஞ் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய் கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தோம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.) ---

1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின் கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும்.

விளக்கம்

(பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்,' 'சான்று' என்பன திரிந்து நின்றன.) ---

1038. ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர் கால்யாத்தலினும் நன்று.

விளக்கம்

(ஏர் - ஆகுபெயர். காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல், உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர் கால்யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்.) --

1039. கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன் கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் அவனோடு ஊடிவிடும்.

விளக்கம்

(செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி, இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.)

1040. இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும்.

விளக்கம்

(உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அது செய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.)

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.11111111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top