பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊக்கமுடைமை

ஊக்கமுடைமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

ஊக்கமுடைமை

591. உடையர் எனப்படுவது ஊக்கம்-ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ- அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.

விளக்கம்

('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்'மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.) ---

592. உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலை நில்லாது நீங்கிப் போம்.

விளக்கம்

('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.) ---

593. ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்-இழந்தவராயினும் யாம் கைப்பொருளை இழந்தோம் என்று அலமரார்; ஒரு வந்தம் ஊக்கம் கைத்து உடையார்-நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.

விளக்கம்

('ஆக்கம்' ஆகுபெயர். ஒரு வந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: "கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி 19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.) ---

594. அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்-பொருள் தானே வழி வினவிக்கொண்டு செல்லும்.

விளக்கம்

(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத் தானே சென்று சாரும் என்பார், 'அதர் வினாய்ச் செல்லும்' என்றார். எய்தி நின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.) ---

595. வெள்ளத்து அனைய மலர் நீட்டம்-நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு-அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.

விளக்கம்

('மலர்' ஆகுபெயர். நீர் மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.) ---

596. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்-அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து-அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து.

விளக்கம்

(உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.) ---

597. களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும்-களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார்-அது போல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.

விளக்கம்

(புதை - அம்புக்கட்டு; பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.) ---

598. உள்ளம் இல்லாதவர்-ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்-இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெற்றார்.

விளக்கம்

(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.) ---

599. பரியத கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.

விளக்கம்

(பேருடம் பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும், யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.) ---

600. ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை-ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி; அஃது இல்லார் மரம்-அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு - சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை.

விளக்கம்

('உரம்' என்பது அறிவாதல், "உரனென்னுந் தோட்டியான்" (குறள். 24) என்பதனானும் அறிக. மரம் என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும், மரத்திற்குள்ள பயன்பாடின்மைபற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும்; தேவர் கோட்டம், இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும், ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.11764705882
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top