பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒற்றாடல்

ஒற்றாடல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

ஒற்றாடல்

581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்-ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க-அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.

விளக்கம்

(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்து கொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றார்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

582. எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல்- எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில்-அரசனுக்கு உரிய தொழில்.

விளக்கம்

('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆகலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.) ---

583. ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்-ஒற்றினானே எல்லார் கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல்-வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.

விளக்கம்

(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின், 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான், அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.) ---

584. தம்வினை செய்வார், சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது-தம் காரியம் செய்வார், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே. ஒற்று-ஒற்றனாவான்.

விளக்கம்

('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி அவனுக்குக் காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்து நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும் அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும் எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும் ஆராய்வது ஒற்று' என்றார்.) ---

585. கடாஅ உருவொடு-ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது-அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.

விளக்கம்

('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.) ---

586. துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து-முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்யுகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று -ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.

விளக்கம்

(விரத ஒழுக்கம்-தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்கை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக் கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.)

587. மறைந்தவை கேட்க வற்று ஆகி-ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று-கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.

விளக்கம்

(மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து, அத் தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்க வேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும், கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின்,'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.) ---

588. ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியத்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.

விளக்கம்

(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.) ---

589. ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.

விளக்கம்

('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக் கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப்படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம் பெற்றாம்.) ---

590. ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க-மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும்-செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம்.

விளக்கம்

(மறையாவது அவன் ஒற்றனாய தூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top