பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கொடுங்கோன்மை

கொடுங்கோன்மை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

கொடுங்கோன்மை

551 கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல் தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன்; அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து - பொருள் வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறை அல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன்.

விளக்கம்

(அவர் செய்வது ஒரு பொழுதைத் துன்பம்; இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால் மயக்கு உறழ்ச்சி. 'வேந்து' என்பது உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறினைச் சொல். 'அலை கொலையினும் கொடிது' என்பதாயிற்று.) ---

552 வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்-ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.

விளக்கம்

('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம். 'தாராக்கால் ஒறுப்பல்' என்னும் குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும் கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.) ---

553 நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும்.

விளக்கம்

(அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்', என்று உரைப்பாரும் உளர்.) ---

554 சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன்; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.

விளக்கம்

('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.) ---

555 அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே; செல்வத்தைத் தேய்க்கும் படை-அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.

விளக்கம்

(அழுத கண்ணீர்; அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.) ---

556 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப் புகழ்கள்தாம் உளவாகா.

விளக்கம்

(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் "இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக" (நாண்மணி 17) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம்: ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று. வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.) --

557 துளி இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும்; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.

விளக்கம்

(சிறப்புப்பற்றி, 'துளி' என்பது மழைமேல் நின்றது: "உயிர்" என்பது குடிகள்மேல் நின்றது. மேல் "வான் நோக்கி வாழும்" என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.) ---

558. முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்; இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.

விளக்கம்

(தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.) ---

559. மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; உறை கோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.

விளக்கம்

(இரண்டிடத்தும் 'கோடல்' என்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.) ---

560. காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின்; ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.

விளக்கம்

(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஒதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.88888888889
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top